Monday, September 17, 2012

தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

"வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத ஓரினம், அதே வரலாற்றை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளது." 

தமிழகத்திற்கு செல்லும் சிங்களவர்கள் தாக்கப்படுவது, கடந்த மூன்று வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழ் நாட்டில் தோற்றுவித்த எதிர்வினைகளின் பலனாக, தமிழ் தேசிய எழுச்சி அலை உருவாகி இருந்தது. வழமையான தமிழ் தேசியவாத கட்சிகள், குழுக்கள் மட்டுமல்லாது, இடதுசாரிக் கட்சிகளும் அந்த எழுச்சிக்கு ஆதரவளித்தன.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை ஆரம்பித்த அமைப்பில் இருந்தது. மார்க்சிச - லெனினிச இயக்கங்களும் முன்னிலையில் கலந்து கொண்டன.  இடது, வலது பேதமற்று அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு, சிறிலங்கா அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர்,  மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய ஆளும் கட்சியான திமுக கூட போராட்டத்தில் குதிக்க வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் புலி எதிர்ப்பாளராக இருந்த ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தார். 

 ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர், தமிழகத்தில் குறைந்திருந்த புலி ஆதரவும் அப்போது சூடு பிடித்தது. பொதுவாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்தில் பிறந்திருக்காத புதிய தலைமுறை காலத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகளை, தமது ஆதர்ச நாயகர்களாக வரித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. தமிழ் இன உணர்வு, தமிழகத்திற்குப் புதிதல்ல. ஐம்பதுகளில், அறுபதுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் உருவேற்றப் பட்ட அரசியல் அது. அன்றைய தமிழ் தேசியத் தலைவர் இன்று, இன்று தமிழ் தேசியத்தின் துரோகியாகியது தனிக் கதை. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது மாதிரி, திமுக தமிழ் உணர்வு ஊட்டி வளர்த்த குழந்தைகள், இன்று வளர்த்தவர்களையே எதிர்த்துக் கொண்டிருக்கிறனர். இது தமிழ் தேசிய சித்தாந்தத்தின் நச்சுச் சுழற்சியா என்பது தெரியவில்லை. 

ஏற்கனவே, ஈழத்திலும்  இதே மாதிரியான வரலாறு நிகழ்ந்துள்ளது. திமுக வின் சகோதரக் கட்சி என்று கருதப் படக் கூடிய, தமிழர் விடுதலைக் கூட்டணி ஊட்டி வளர்த்த குழந்தைகளான புலிகள், ஆயுத பலத்தில் வளர்ந்த பின்னர், கூட்டணிக்  கட்சியை தடை செய்து, அதன்  தலைவர்களையும் அழித்திருந்தார்கள். தீவிரவாதிகளான புதிய தலைமுறையினர், பழைய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப் படுத்தி வருகின்றனர். இது ஈழத்திலும், தமிழகத்திலும் பொதுவான வரலாறாக இருக்கிறது. எதிர்காலத்தில் மூன்றாந் தலைமுறை தமிழ் தேசியவாத இளைஞர்கள், இப்போதுள்ள வைகோ, சீமான், நெடுமாறன்  போன்றோரை இனத் துரோகிகளாக முத்திரை குத்தினால், அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை. 

வன்னியில் நடந்து கொண்டிருந்த படுகொலைகள் பற்றிய செய்திகளும், அவை ஏற்படுத்திய அதிர்வலைகளும் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது. 83 கலவரத்தின் போதும் இதே மாதிரியான எழுச்சி காணப்பட்டது. ஆனால், அன்றிருந்த உலகம் வேறு, இன்றுள்ள உலகம் வேறு. 83 கலவரச் செய்திகள் , வாய் வழித் தகவல்களாக மட்டுமே பத்திரிகைகள், வானொலிகளில் அறிவிக்கப் பட்டது. ஆனால், இன்று ஒரு தனிநபர் கூட காட்சிகளை பதிவு செய்து அனுப்பி, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றில் காண்பிக்க முடியும். இது பல இலட்சம் மக்களை நேரடியாக சென்றடைகின்றது. உலக தகவல் தொடர்பு புரட்சியினால் விளைந்த பயன் அது.

தமிழ் ஊடகத் துறை, முழுக்க முழுக்க புலிகளின் தகவல் தொடர்பில் தங்கியிருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் செயற்பட்ட தமிழ் ஊடகங்கள், போரில் பலியாகும், காயமடையும் ஈழத் தமிழரின் அவலங்களை காட்சிப் படுத்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இன்றைய தகலவல் தொடர்பு சமுதாயத்தில் வாழும் தமிழர்களும், ஊடகங்களால் வழிநடத்தப் பட்டனர். ஊடகங்கள், மக்களை உணர்ச்சிவசப் படுத்திய அளவுக்கு, ஈழப் பிரச்சினை பற்றிய அறிவூட்டவில்லை. இதனால் யுத்தம் முடிந்த பின்னர், இனப்படுகொலைக்கு பழிவாங்கும் அரசியலாக பரிணமித்தது. 

முத்துக்குமார் தீக்குளித்த சம்பவம், தமிழக அரசியல்வாதிகளின் கையாலாகத் தனத்தை தோலுரித்துக் காட்டியது. மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பங்கு பற்றிய எழுச்சியானது, வெகு விரைவில் தமிழக, இந்திய அரசியல் நிறுவனங்களுக்கு எதிராக திரும்பும் சூழல் தோன்றியது. சில வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தம், உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருந்தது. சில தீவிரவாத இளைஞர்கள், மேற்கத்திய நாடுகளில் குண்டுகள்  வைக்குமளவிற்கு சென்றமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் அப்படி எல்லாம் நடக்காது என்று, யார் உறுதிமொழி கொடுத்திருந்தாலும், மத்திய அரசு நம்பியிருக்கப் போவதில்லை.

புலிகளை அழிப்பதற்கும், ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்கும், சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவி வருகிறது என்ற தகவலும் தமிழகத்தில் இந்திய அரசுக்கு எதிரான எதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. ஒரு எல்லை தாண்டியிருந்தால், ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம், இந்திய அரச நிறுவனங்களை அடித்து நொறுக்கி இருக்கும். மக்கள் எழுச்சி அடக்கப் பட்டால்,  இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலும் குதித்திருப்பார்கள். அது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்துள்ளன.

உதாரணத்திற்கு, கொசோவோ அல்பேனியர்களுக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், மாசிடோனியா அல்பேனியர்கள் எழுச்சி அடைந்தனர். விரைவில் அங்கேயும் ஒரு ஆயுதப்போராட்டம் வெடித்தது. ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இன உணர்வு காரணமாக நெருக்கமானவர்கள். இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் தமிழர்கள், இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ மாட்டார்களா? நாங்கள் நினைக்கிறோமோ இல்லையோ, இந்திய மத்திய அரசில் உள்ளவர்கள் அப்படித் தான் சிந்தித்து இருப்பார்கள். ஆனால், நிலைமை அந்தளவு தூரம் தீவிரமடைய விடாமல் தடுத்த சக்தி எது? 

இந்த தருணத்தில் தான், இந்திய மத்திய அரசு, தமிழக  மாநில அரசு, RAW  என்பன விழித்துக் கொண்டன. தமிழ் தேசிய எழுச்சிக்குள் உளவாளிகளை ஊடுருவ வைத்து, போராட்டத்தை திசை திருப்பி, நீர்த்துப் போக வைக்க திட்டம் தீட்டின.  யாராலும் ஊடுருவ முடியாத, மிகவும் இரகசியமான, கட்டுக்கோப்பான இயக்கம்  என்று பெயரெடுத்த புலிகள் அமைப்புக்குள்ளேயே அரச உளவாளிகள் ஊடுருவி இருந்தனர். தமிழ்ச்செல்வனின் மரணத்திற்குப் பின்னர், ஊடகத் தொடர்பாளராக இருந்த இளந்திரையன் ஒரு அரச உளவாளி என்ற உண்மை, கிளிநொச்சி வீழ்ந்த பின்னர் தான் தெரிய வந்தது. அப்படியாயின், அரசாங்கம்  ஒரு வெகுஜன அமைப்பிற்குள் உளவாளிகளை அனுப்புவது மிகவும்  இலகுவான விடயம். அதற்காக, நாங்கள்  ஆதாரமின்றி யாரையும் கை காட்ட முடியாது. அதே நேரம், அப்படி நடக்காது  என்று மறுக்கவும் முடியாது.

உளவாளிகளை வெளியில் இருந்து அனுப்பத் தேவையில்லை. உள்ளிருப்பவர்களை விலைக்கு வாங்கலாம். பேச்சுவார்த்தைக் காலங்களில், புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. அப்பொழுது விடுவிக்கப் பட்டு, வன்னிக்கு அனுப்பப் பட்ட புலி உறுப்பினர்கள் பலர், அரச உளவாளிகளாக மாறியிருந்ததை யாரும் சந்தேகிக்கவில்லை. இது எல்லா நாட்டுப் போர்களிலும் நடக்க முடியும். எதிரிகளினால் சிறையில் அடைக்கப் பட்டவர்கள், அங்கு வைத்து மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பார்கள். அதனால் தான், ஸ்டாலின் காலத்தில், நாஜிகளின் சிறைகளில் இருந்து விடுவிக்கப் பட்ட முன்னாள் செம்படை வீரர்களை புதிய சிறைகளில் அடைத்து வைத்தனர். 

வைகோ சட்டவிரோதமாக இலங்கை சென்று, பிரபாகரனை சந்தித்து விட்டு திரும்பி வந்தவர். (இந்தியாவில் தடை செய்யப்பட்ட) புலிகளோடு தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலேயே, தடா சட்டத்தில் கைது செய்யப் பட்டவர். அப்படிப் பட்ட ஒருவர், "ஐந்தாம் கட்ட ஈழப் போர்" அறிவித்த பின்னரும், எந்தப் பிரச்சினையுமின்றி சுதந்திரமாக உலாவ முடிகின்றது. இந்த குறுகிய காலத்திற்குள், இந்திய அரசு திருந்தி விடவில்லை. மாவோயிஸ்ட், ஜிகாத் போராட்டங்களுடன் தொடர்பான நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களில் பலருக்கு மீள முடியாத சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. விடுதலை செய்யப் பட்டாலும் பழைய அரசியலை தொடர முடியாது. அந்தளவு தூரம் போகத் தேவையில்லை. இறுதிப்போரில் தப்பி, தமிழ்நாட்டில் அகதியாக அடைக்கலம் கோரிய புலிகளையும், அவர்களது உறவினர்களையும் தனிமைச் சிறையில் போட்டு வருத்துகின்றது.

வைகோ மட்டும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" அறிவித்து விட்டு தைரியமாக உலாவ முடிகின்றது.  பாஜக, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் போன்ற, இந்து மதவெறி பாசிச  சக்திகளுடன் வைகோ கை கோர்த்துள்ள விடயம், ஒன்றும் இரகசியமானதல்ல.  குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த, நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இதை எல்லாம், அவரே பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இந்துத்துவ வாதிகளுடன் கூட்டுச் சேர்வதென்றால், அவர்களது அகண்ட பாரதக் கனவுக்கும் ஒத்துழைக்க வேண்டும். இந்து பாசிஸ்டுகளின் அகண்ட இந்து பாரதம், "சீதையை சிறை வைத்திருந்த சிங்களவர்களின் சிறிலங்காவையும்" உள்ளடக்கியது.

வைகோ நடத்தப் போகும் ஈழப் போர், தமிழர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால், அவரது இந்துக் கூட்டாளிகளை நோக்கத்திற்கு முரணானது ? அண்மையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநில அரசு, யாத்திரீகர்களுக்கு சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடம், மற்றும் பல இராமாயண ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் பயணக் கட்டணத்தில் அரைவாசியை அரசு கொடுக்கிறது. ('Hindutva behind subsidy to visit Hindu temples', http://zeenews.india.com/news/madhya-pradesh/hindutva-behind-subsidy-to-visit-hindu-temples_768557.html) ஏற்கனவே, இந்து மதம் புத்தரையும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறுகின்றது.  ஆகவே, "இந்துக்கள்" என்ற ஒரே குடையின் கீழ் சிங்களவர்களையும்  இணைத்துக் கொள்வதில், இந்து பாசிஸ்டுகளுக்கு தடையேதும் கிடையாது. இந்து பேரினவாதிகளின் எதிர்காலத் திட்டங்கள் எமக்குத் தெரிந்தளவுக்கு, வைகோ, சீமானுக்குத் தெரியுமா? எல்லாம் தெரிந்து கொண்டு தான் ஒத்துழைகிறார்களா? 

இலங்கைக்கு, இந்திய சுற்றுலாப்பயணிகள் செல்வதை ஊக்குவிக்கும் பாஜக, சிங்கள யாத்திரீகள் இந்தியா வருவதையும் ஊக்குவித்திருக்காதா? மகிந்த ராஜபக்ச பயணம் செய்யவிருக்கும் சாஞ்சியும், மத்திய பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது. வைகோ இது தொடர்பாக, பாஜக விடம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். உண்மை தான். ஆனால், அதையும் மீறி ராஜபக்ச வந்தால், வைகோ, பாஜக வுடனான உறவை துண்டித்துக் கொள்வாரா? வைகோவின் பாஜகவுடனான உறவு, வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஈழத் தமிழருக்கு கொடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளை, சிங்கள இராணுவம் சுற்றி வளைத்திருந்தது. தமிழ் மக்களின் போராட்டம், சர்வதேச மட்டத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக, இந்திய அரசு இறங்கி வந்தது. யுத்த நிறுத்தம் ஒன்றிற்காக, சிறிலங்கா அரசுடனும் புலிகளுடனும் பேசியது.

யுத்தத்தை முடித்து விட்டு சரணடைய புலிகள் தயாராக இருந்தனர். அந்த நேரத்தில், தமது நம்பிக்கைக்கு உரிய வைகோவை தொடர்பு கொண்டார்கள். ஆனால், அன்று வைகோ கூறிய பதில், புலிகளின் அழிவுக்கு தேதி குறித்தது. "சரணடையும் முடிவெதையும் இப்போது எடுக்க வேண்டாம். இதெல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தந்திரம். தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். அடுத்த நாளே நிலைமை தலைகீழாக மாறிவிடும். பாஜகவினர் புலிகளை மீட்டெடுப்பார்கள்."   நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹைம் தெரிவித்த தகவல்.
“Indian Home Minister Chidambaram contacts Prabhakaran and suggests the LTTE agrees to a pre-drafted statement that they will lay down their weapons,” the report says, but without giving citations the report continues, “The document leaks to Vaiko, a radical but marginal Eelamist politician in Tamil Nadu, who rejects it as a Congress trick and assures the LTTE that BJP will win the ongoing Indian elections and come to the Tigers’ rescue.”...  I observed the change in Indian intelligence - Erik Solheim, (http://www.norwaynews.com/en/~view.php?72U7b54XOb4826z285Klk844SP3889S976HDp353P4d8)
வைகோவின் இன்றைய ஈழ ஆதரவு வாய்ச் சவடால்கள் எல்லாம், கடந்த கால துரோகத்தை மறைப்பதற்காகவே முன்னெடுக்கப் படுகின்றது. இதனை அவரது தொண்டர்களும், ஈழ ஆதரவாளர்களும் புரிந்து கொள்ளாத வரையில், வைகோவின் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கும். 

புலிகள் அழிவதற்கு காரணமான நாடுகளில் இந்தியா முக்கியமானது. உண்மை தான். அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் பதவியில் இருந்த, காங்கிரஸ் கட்சியும், திமுக வும் மட்டுமே அதற்கு பொறுப்பு என்று, உண்மையை திரித்து திசை திருப்புகின்றனர். புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம், 2000 ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக் காலத்தில், காங்கிரசின் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தீவிர புலி ஆதரவுக் கட்சிகளான, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் அந்த அரசாங்கத்தில் இருந்தன. இலங்கையில் நடக்கும் இனப்போருக்கு தீர்வு காணும் விடயத்தில், தான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.  

Jaswant Singh indicated to the all-party meeting on Monday that the Clinton administration had informed New Delhi that the US would support “whatever India does”. The Hindu newspaper quoted the US official sources as saying: “Washington takes India's views on Sri Lanka very seriously and would not want to do anything that might go against India's interests.” (New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

2000 ம் ஆண்டளவில், விடுதலைப் புலிகளின் பலம் உச்சத்தில் இருந்த காலத்தில், யாழ் குடாநாடு முற்றுகையிடப் பட்டிருந்தது. போரில் தோல்வியடைந்து கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இந்தியாவிடம் அவசர உதவி கோரியது. யாழ் குடாநாடும், அங்கிருந்த நாற்பதாயிரம் படையினரும் புலிகளின் கையில் வீழ்ந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். வட மாகாணம் முழுவதும், புலிகள் உரிமை கோரிய தமிழீழப் பிரதேசமாக இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்கும். ஆனால், இந்திய மத்திய அரசு அதனை அனுமதிக்க தயாராக இருக்கவில்லை. கேரளாவில், குறிப்பாக திருவனந்தபுரத்தை நோக்கி இந்தியப் படைகள் நகர்த்தப் பட்டன. யாழ் குடா நாடு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தால், படையெடுப்பதற்கு தயாரான நிலையில் இந்திய இராணும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தது. புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்ட, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் உத்தரவின் பேரில் தான், இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இதிலிருந்து, தமிழீழம் என்ற  தனிநாட்டின் சாத்தியம் குறித்து,  ஓர் உண்மை தெளிவாகின்றது. ஒருவேளை, புலிகள் தமது ஆயுத பலத்தினால், முழு தமிழீழ பிரதேசத்தையும் விடுதலை செய்திருந்தாலும், இந்தியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். சர்வதேச சமூகமும் அந்த படையெடுப்பை ஆதரித்திருக்கும். சில நேரம், அது ஐ.நா. தலைமையின் கீழும் நடந்திருக்கும். 

The BJP government has committed itself only to “humanitarian assistance”. But according to Indian Defence Minister Fernandes, the country's armed forces have been prepared to meet any eventuality. Media reports indicate that substantial supplies have been moved to the Trivandrum in the southern state of Kerala. The Indian Air Force's Southern Air Command has been put on the alert to provide aid to Jaffna. Air Force helicopters and heavy transport aircraft have also been moved south. Communication links have been established with hot-line facilities to the Indian High Commission in Colombo, military headquarters in New Delhi and the air command in Trivandrum. (New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

அதே நேரம், டெல்லியில் அவசரமான கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வைகோ, ராமதாஸ் ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்கள் என்பதும், அவர்களது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தனர் என்பதும் இங்கே நினைவுகூரத் தக்கது. அந்தக் கூட்டத்தில், இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய பற்றி கலந்துரையாடப் பட்டது. பல சமரசங்களுக்குப் பின்னர், அதாவது வைகோவினதும் ஒப்புதலோடு தான், இராணுவ உதவி தவிர்ந்த, அனைத்து வகை உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்வதென்ற முடிவு எடுக்கப் பட்டது.

Last Saturday Karunanidhi moderated his stance after a 90-minute meeting with Vajpayee. “Seri (OK),” he said to the national government's request to keep out of the conflict in Sri Lanka. “Our party will not tie the hands of the central government... It is the centre's prerogative to take any approach in the interest of the nation... we do not want to interfere with that”.....
The MDMK leader Kopalaswamy also toned down his position after a meeting with NDA leaders. “I am happy about the government sending humanitarian aid to Jaffna,” he said. Significantly he appeared to have gained some assurances that India would do nothing to assist the Sri Lankan military....
(New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

 ஒரு வேளை, தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், இராணுவ உதவி தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பை, இந்தியாவின் எதிரி நாடுகளான, பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஒப்படைப்பதற்கு, அரை மனதுடன் சம்மதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஈழ ஆதரவுப் பேச்சுக்காக கைதான வைகோ, வேலூர் சிறையில் சிறை வைக்கப் பட்டிருந்தார். அப்போது, "புலிகளை அழிக்கும்  நோக்குடன்  இராணுவத்தை அனுப்பத் துடித்த" பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்த வைகோவை சந்தித்துப் பேசினார். (Opposition blasts govt over Fernandes, Vaiko meet, http://articles.economictimes.indiatimes.com/2002-07-31/news/27364861_1_mdmk-leader-vaiko-pota)

இதுவரை குறிப்பிடப் பட்ட எதுவும் இரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாக தன்னை அரச கைக் கூலிகளாக காட்டிக் கொள்ளும், வைகோ போன்றவர்களை, தமிழ் உணர்வாளர்கள் நம்ப முடியுமா? இந்திய தேசியக் கட்டமைப்புக்கு பல முகங்கள் உண்டு. சோனியா மாதிரி, கருணாநிதி மாதிரி, வைகோ மாதிரி, சீமான் மாதிரி, என்று பல வகையான முகங்கள். இந்த நால்வரும், இந்திய தேசியப் பிரம்மாவின் நான்கு முகங்கள். அந்த நான்கு முகங்களும் ஒன்று சேர்ந்து தான், ஈழத் தமிழரின் தலைவிதியை எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதை, நாம் இன்றைக்கும் புரிந்து கொள்ளவில்லை. 

(இன்னும் வரும்)


1 comment:

சிவக்குமார் said...

ராசய்யா இளந்திரையனா ? அவர் போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டதாகத்தான் படித்த நினைவிருக்கிறது. அடுத்து தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தவர்கள், கருணாநிதி, திருமாவளவன், வைகோ, ராமதாஸ் என அனைவருமேதான். சொல்லப்போனால் புலிகள் ஈழத்தைக் கிட்டத்தட்ட வென்றே விட்டனர். 2009 போரில் பிரபாகரன் அழிக்கப்பட்டதை கடாஃபி, சதாம், ஆசாத் ஆகியோர் எதிர்கொண்ட போரைப்போலத்தான் பார்க்கிறேன். இரண்டரை டஜன் தேசிய இனங்களின் விடுதலையை ஏப்பம் விட்டுத்தான் இந்தியா என்ற இல்லாத தேசியமே உருவாக்கப்பட்டுக் கட்டிக் காக்கப்படுகிறது. இதில் காஷ்மீர் என்ற தனக்கு சொந்தமே இல்லாத பகுதியை பல ஆயிரம் கோடிகள் செலவுகளில் இராணுவத்தை வைத்து கட்டிக் காத்து வருகிறது. இந்தியாவின் காலுக்குக் கீழே ஒரு இயக்கம் விமானப்படையை வைத்துக் கொண்டு இலங்கை ராணுவத்தை நசுக்கி ஒரு ஈழம் உருவாகி விட்டால், அதை இந்தியாவும் அங்கீகரித்தால் தலையில் இருக்கும் காஷ்மீரும், கையில் அணைத்து வைத்திருக்கும் வட கிழக்கு மாநிலங்களும் கொந்தளிக்கும். இது பாரதமாதா தனது முந்தானையில் தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது. தனக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழும் தமிழ்தேசிய மூளைகளுக்கு இது உறைக்காது. இவர்களுக்கு காங்கிரஸ் வேறு, யாழ்குடா முற்றுகையின்போது இராணுவத்தை அனுப்பப்போவதாக மிரட்டிய பாஜக வேறு. இந்திராவும், மகோ ராமச்சந்திரனும் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என பிதற்றித் திரியும். உலகின் தலை சிறந்த கொரில்லா இயக்கம் என்று அறியப்பட்ட புலிகள் தம்மை அழிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும், காலம் இருந்தும் கடைசி வரை கொரில்லாப் போர் நடத்தாது, தந்திரோபாயப் பின்வாங்கல் என்றும், தற்காப்புத் தாக்குதல் என்றும் வேண்டுமென்றே எதிரிகளுக்குத் தோதாக போரை நடத்தினார்கள். தேர்தலில் காங்கிரஸ் தோற்று பாஜக வென்றால், சிங்கள ராணுவம் பீரங்கிகளை ரிவர்ஸ் கியர் போட்டு திரும்பிப் போயிரும் என்று வைக்கோ சொன்னதை நம்பியும், இத்தனை மில்லியன் செலவு செய்து போரை நடத்தி தோற்கடித்த பின்பும், தமது உயிருக்கு உத்தரவாதம் இருக்கும் என்று சரணடைந்த புலிகளின் ராஜதந்திரமும் புல்லரிக்கிறது. அவர்கள் கொரில்லாப் போர் நடத்தாதது ஏனென்பது, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று திருவாய் மலர்பவர்களுக்கு மட்டுமே தெரியும். நெடுமாறன் என்பவரையும் இதில் சேர்க்கலாம்.