Sunday, September 16, 2012

ஏழைகளை அழிக்கும் இனவாதிகளின் மரபணுக் கோட்பாடு

1 . மரபணுவில் ஏற்பட்ட  கோளாறு  காரணமாகவே ஒருவர் ஏழையாக இருக்கிறார், என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஏழைகளை அழித்தொழிக்கும் திட்டம் எந்த நாட்டில் நடைமுறைப் படுத்தப் பட்டது? 
2 . சொந்த நாட்டு பிரஜைகள் மீது, இனவாத நோக்கில் மரபணு சோதனை நடத்தி, "பலவீனமான மனிதர்களை" அழித்தொழிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தது யார்? 
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலாக, நாங்கள் ஹிட்லரையும், நாஜி ஜெர்மனியையும் தான் நினைத்துக் கொள்வோம். அது தவறு! அமெரிக்கா என்பது தான் சரியான விடை!
20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப் பட்ட, "ஏழைகளை இனவழிப்பு செய்யும் நடவடிக்கை", அன்று பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மரணமடைந்த பின்னரும், அடுத்து வந்த மூன்று தசாப்தங்களுக்கு அந்த சட்டம் நீடித்தது. அமெரிக்க கோடீஸ்வரர் ரொக்கபெல்லர் அந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்.  அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப் பட்ட  இனவாத கோட்பாட்டைத் தான், ஹிட்லர் தனது "மைன் கம்ப்" (எனது போராட்டம்) நூலில் மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். அன்றைய உலகில், சோவியத் ஒன்றியத்தில் மட்டுமே, இனவாத மரபணு சோதனை தடை செய்யப் பட்டிருந்தது. 

அமெரிக்காவில் வெர்ஜீனியா மாநிலத்தில், ஏழை வெள்ளையர்கள், கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் கருத்தடை செய்யப் பட்டனர். அமெரிக்கா முழுவதும், கட்டாய கருத்தடை நடைமுறைப் படுத்தப் பட்டாலும், வெர்ஜீனியா மாநிலத்தில் மட்டுமே பல ஆயிரங்களை தொட்டு சாதனை படைத்திருந்தது. செவ்விந்தியர்கள், கறுப்பின மக்களை இனவழிப்பு செய்யும் நோக்கம் அமெரிக்க அரசுக்கிருந்தது. ஆனால், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்து குடியேறிய வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகளும், அந்த இனவழிப்புத் திட்டத்திற்கு தப்பவில்லை. செவ்விந்தியர்கள், கறுப்பினத்தவர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் தரம் தாழ்ந்த மரபணுவால் உருவாக்கப் பட்டவர்கள் என்பது அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. மதுவுக்கு அடிமையாதல், குற்றச் செயலில் ஈடுபடுதல் என்பன கூட, மனிதர்களின் மரபணுவில் தங்கியுள்ளது என்று நம்பினார்கள். இவ்வாறு தரம் தாழ்ந்த மரபணுக் கொண்ட மனிதர்களை பெருக விடாமல் தடுப்பதற்கு ஒரே வழி, அவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்வது. 

தாவர மரபணு நிபுணர் Harry Hamilton Laughlin என்ற அமெரிக்கர் தான், இந்த இனவாத விஞ்ஞானத்தின் தந்தை. அவருக்கு முன்னரே, 19 ம் நூற்றாண்டில், பிரிட்டனை சேர்ந்த Francis Galton இந்த ஆலோசனையை முன்வைத்திருந்தார். ஆனால், Laughlin தான் அதனை நடைமுறைப் படுத்த அரச அங்கீகாரம் பெற்றிருந்தார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் அதிக விளைச்சலைத் தருவதைப் போன்று, மனிதர்களிலும் மேன் மக்களை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பினார். அரச நிதியுதவி கிடைத்ததும், தனது ஆராய்ச்சியாளர்களை சிறைச்சாலைகளுக்கும், மனநோயாளர் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார். அங்கிருந்த கைதிகளையும், நோயாளிகளையும் ஆராய்ந்து,  "குற்றப் பரம்பரையை விஞ்ஞான பூர்வமாக" நிறுவ முயன்றார். இந்த இனவாத விஞ்ஞானம், செவ்வியந்தியரையும், கருப்பரையும் மட்டும் தாழ்ந்த இனங்களாகவும், குற்றப் பரம்பரையினராகவும் வரையறுக்கவில்லை. ஸ்கண்டிநேவிய ஐரோப்பியரை மேன்மையான இனமாகவும், இத்தாலியர்கள் போன்ற தென் ஐரோப்பிய மக்களை தாழ்வான இனமாகவும் கருத வைத்தது. 1911 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையானது, "தாழ்ந்த இனங்களை அழித்தொழிக்க வேண்டிய அவசியத்தை" எடுத்துரைத்தது. அதாவது, அவர்களது சந்ததி பெருகா வண்ணம், கட்டாய கருத்தடை செய்யப் பட வேண்டும். அறுபதுகளில் இந்த இனவாத சட்டம் விலக்கிக் கொள்ளப் படும் வரையில், குறைந்தது அறுபதாயிரம் பேர் பலவந்தமாக கருத்தடை செய்யப் பட்டனர். 

மரபணுவை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ விஞ்ஞானம், "Eugenics" என்று அழைக்கப் படுகின்றது.  கிரேக்க மொழியில், eu என்றால் நல்லது, genes என்றால் பிறப்பு என்று அர்த்தம். அதாவது தமிழில் "நற்பிறப்பு" என்று மொழிபெயர்க்கலாம். பண்டைய கிரேக்க நாடான ஸ்பார்ட்டாவில், இராணுவ பயிற்சிக்கு தகுதியற்ற பலவீனமானவை என்று கருதப்படும் குழந்தைகளை ஆற்றிலே வீசியெறிந்து கொல்வார்கள். அல்லது சாகும் வரை அனலாக தகிக்கும் வெயிலில் கிடத்தி விடுவார்கள். இந்தியாவிலும், "நற்குடிப் பிறப்பாளர்கள்" பற்றி மனு எழுதிய கோட்பாடுகள், சாதி ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்த உதவியது. இன்றைக்கும் உயர்சாதியை சேர்ந்த, மேட்டுக்குடியை சேர்ந்த தமிழர்கள் "நற்குடிப் பிறப்பு" பற்றி உபதேசிப்பதைக் காணலாம்.  இந்தியாவின் சாதி அமைப்பும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு, இந்த உதாரணம் போதும். அமெரிக்காவில் இனத் தூய்மை பேணும் வெள்ளையின தம்பதியினர் புத்திசாலிப் பிள்ளைகளைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப் பட்டனர்.  சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் இனத் தூய்மை பேணுவது பற்றிய பிரச்சாரம் நடைபெற்றது. 

இன்று அமெரிக்காவுக்கோ, அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கோ சென்று குடியேற விரும்புவோர், அந்தந்த நாட்டு மொழிப் பரீட்சைகளில் தேற வேண்டும் என்ற நிபந்தனை வந்து விட்டது. இது கூட இனவாதம் என்பதை பலர் உணர்வதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவும், கனடாவும் புதிய குடியேறிகளை தேர்ந்தெடுப்பதற்காக மொழிப் பரீட்சை வைத்தன. ஆனால், அன்றைய மொழிப் பரீட்சை, "குடியேறிகள் தமது  தாய் மொழியில் ஒரு பந்தியை வாசித்துக் காட்ட வேண்டும்" என்றிருந்தது. "இதென்ன பிரமாதம், மிக இலகு." என்று நீங்கள் நினைக்கலாம். பெரும்பான்மையான ஐரோப்பிய ஏழை மக்கள், எழுதப் படிக்க தெரியாமலிருந்த காலத்தில், அந்தப் பரீட்சை பலருக்கு கஷ்டமாக இருந்திருக்கும். அன்றும் இன்றும், மொழிப் பரீட்சை நடத்துவதன் நோக்கம் ஒன்று தான். "எமது நாடுகளுக்கு புத்திசாலியான, வசதி படைத்த மக்கள் மட்டுமே தேவை. கல்வியறிவற்ற, ஏழை மக்கள் எமது நாடுகளுக்குள் நுழைய முடியாது."  

இன்று நாங்கள் I .Q. பரீட்சையில் சித்தி பெற்றவுடன் மார் தட்டிக் கொண்டு திரிகிறோம். அன்றைய அமெரிக்காவில் ஐ.கியூ. பரீட்சை கூட, இன, வர்க்க ஒடுக்குமுறையைக் கொண்டிருந்தது. முதலாம் உலகப்போருக்கு புதிய இராணுவ வீரர்களை சேர்ப்பதற்காக, ஐ.கியூ. பரீட்சை நடத்தப் பட்டது. ஆங்கிலம் எழுத வாசிக்க தெரியாதவர்கள், வரைபடங்களை பார்த்து, தவறைக் கண்டு பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு, டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வலை இருக்காது. அந்தப் படத்தில் என்ன குறை, என்ற கேள்வி கேட்கப் பட்டிருக்கும். கிராமங்களில் வாழ்ந்த வெள்ளையின ஏழைகளும், புறநகர் சேரிகளில் வாழ்ந்த கறுப்பின மக்களும், ஒரு டென்னிஸ் மைதானத்தை வாழ்க்கையில் கண்டறியாதவர்கள். அதனால் அவர்கள் பரீட்சையில் தோற்பது நிச்சயம். இந்த ஐ.கியூ. கேள்விகள் எல்லாம், நகர்ப்புறங்களை சேர்ந்த மத்தியதர வர்க்க இளைஞர்களை தெரிவு செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது. தேர்வின் இறுதியில், 47 % வெள்ளையினத்தவரும், 89 % கருப்பினத்தவரும் சித்தியடையவில்லை என்று அறிவிக்கப் பட்டது. "கறுப்பர்களின் மூளை வளர்ச்சி அடையவில்லை" என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்கு சான்றாக அந்த தரவுகளை பயன்படுத்தினார்கள். முதலாம் உலகப்போரில், பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் மடிந்த பின்னர் தான், அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது. 

மரபணு கோளாறு காரணமாக கட்டாய கருத்தடை செய்யும் சட்டம், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமுல் படுத்தப் பட்டது. ஜெர்மனியில் ஹட்லர் ஆட்சிக்கு வர முன்னரே, 1923 ம் ஆண்டில் இருந்து கட்டாயக் கருத்தடை நாள்தோறும் நடந்து கொண்டிருந்தது.  சுவீடனில் மன நிலை பிறழ்வான நபர்கள் கருத்தடை செய்யப் பட்டனர். டென்மார்க்கில் "சமூகத்தில் பலவீனமான மனிதர்களை" கருத்தடை செய்யும் சட்டம், 1912 ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. அந்த நாட்டில் ஏழைகளை இனவழிப்பு செய்யும் திட்டத்திற்கு, அமெரிக்க கோடீஸ்வரர் ரொக்கபெல்லர் பவுண்டேஷன் நிதியுதவி வழங்கியது. 1967 ம் ஆண்டு சட்டம் விலக்கிக் கொள்ளப் படும் வரையில், 6000 டேனிஷ் மக்கள் கட்டாயக் கருத்தடை செய்யப் பட்டனர். சுவிட்சர்லாந்தில், அளவுக்கு மிஞ்சிய பாலியல் நாட்டம் கொண்ட பெண்கள் கருத்தடை செய்யப் பட்டனர். அன்று வாழ்ந்த சுவிஸ்காரரைப் பொறுத்த வரையில், பெண்கள் அளவுக்கதிகமாக பாலியலில் ஈடுபடுவதும் மரபணுக் கோளாறு காரணமாகத் தான். ஜெர்மனியில் Alfred Ploetz என்ற மருத்துவர், "சமூகத்தில் ஒரு தொகுதி மக்கள் மரணத்திற்கு தகுதியானவர்கள்" என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். Euthanasie குறித்த அவரது கருத்துக்கள், பிற்காலத்தில் ஹிட்லரால் உள்வாங்கப் பட்டன. ஹிட்லரின் மைன் கம்ப் நூல், 1925 ம் ஆண்டு வெளியானது. அந்த நூலில், Laughlin மற்றும் பல அமெரிக்க மரபணு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளை புகழ்ந்து எழுதியுள்ளார்.  

ஹிட்லரினால் மதிக்கப் பட்டாலும், அல்பிரெட் யூதர்கள் தொடர்பான ஹிட்லரின் கொள்கையுடன் முரண்பட்டார். அவரைப் பொறுத்த வரையில், (ஜெர்மன்) யூதர்களும் தூய ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அந்தக் காலத்தில், ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் சென்று குடியேறிய யூத விஞ்ஞானிகள் சிலர் கூட, "மரபணு இனவாதக் கோட்பாட்டில்" நம்பிக்கை வைத்திருந்தனர். அன்றைய உலகில், ஒரேயொரு நாட்டில் மட்டுமே மரபணு அடிப்படையில் இனங்களை பிரிக்கும் கோட்பாடு தடை செய்யப் பட்டிருந்தது. "பிறப்பால் ஏற்றத் தாழ்வு வருவதில்லை. மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள்." என்ற கொள்கையை பின்பற்றிய சோவியத் ஒன்றியத்தின் பல்கலைக்கழகங்களில் மரபணு ஆராய்ச்சிக்கு வரவேற்பு இருக்கவில்லை. 1941 ம் ஆண்டிலிருந்து, 1945 வரையில், ஹிட்லர் கோடிக்கணக்கான மக்களை நச்சுவாயு செலுத்தி இனப்படுகொலை செய்த பின்னர் தான் உலகம் விழித்துக் கொண்டது. அந்த இனப்படுகொலையில், யூதர்கள் மட்டும் பலியாகவில்லை. ஓரினச் சேர்க்கையாளர்கள், ஜிப்சிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரும், ஹிட்லரின் பார்வையில் மரபணுக் கோளாறு கொண்ட மக்களாக கருதப் பட்டு, அழித்தொழிக்கப் பட்டனர். 

மேலதிக தகவல்களுக்கு: 
1.War against the Weak, Eugenics and America's Campaign to Create a Master Race, by Edwin Black
2.The Unfit, A History of a Bad Idea, by Elof Axel Carlson
3.www.eugenicsarchive.org

4 comments:

சிவக்குமார் said...

ஐரோப்பிய அமெரிக்கர்களில் நிறவெறி பிடித்தவர்கள் மட்டுமல்ல, சராசரி வெள்ளையர்களும் கூட கருப்பர்களை வெறுப்பதில் அல்லது அவர்களை மனிதர்களாகக் கருதாமல் இருந்தது இயல்பாக இருந்தது. அதாவது ஒரு மதத்தவர் மற்றவரை வெறுப்பது போல, மேல் ஜாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரரை வெறுப்பது போல அல்லது அதையும் விடக் கேவலமாக. ஆய்வாளர்கள் கருப்பர்களின் மண்டையோடு, சிம்பன்ஸி குரங்கின் மண்டையோட்டின் வடிவத்தை ஒத்ததாக இருந்ததைக் கொண்டு ஆய்வுகள் எழுதினர். டார்வினியத்தையும் அவ்வப்போது தொட்டுக் கொண்டனர். அவர்களை மனிதர்க்கும் குரங்கிற்கும் இடையினமாகவே கருதினர். அவர்களுக்கு விசாரணையின்றி தூக்குதண்டனை நிறைவேற்றவும் துணிந்தனர். இதன்மூலம் கருப்பர்களை அடிமையாக வைத்து வேலை வாங்குவது, துன்புறுத்துவது கொல்வது இது போன்ற செயல்களுக்காக வெள்ளையர்கள் குற்ற உணர்ச்சி கொள்ளாமல் தொடர இக்கருத்துக்கள் உதவின. பார்ப்பனியம் வெவ்வேறு பெயர்களில் உலகெங்கும் இருந்தது, இருக்கிறது.

இதே போன்றதொரு கட்டுரை

பாலினப்படுகொலை: பிறக்காமல் போன 160 மில்லியன் பெண்கள்

abdul hakkim said...

சகோ கலையரசன்
நீங்கள் சொல்லியிருப்பதுபோல் ஊடகங்களால் மறைக்கப்பட்ட ஆனால் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய பல தகவல்களைச் சேகரித்துத் தருவது உண்மையிலேயே நல்ல ஒரு சேவை தொடருங்கள்

A.Jay Kanthan said...

கலையரசன்
அப்படியே சோவித் யூனியனால் பட்டினி போட்டு கொல்லப்பட்ட 70 லட்சம் உக்ரைநியர்கள் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினால் உங்கள் நடுநிலைமை பாதுகாக்கப்படும்.

Nalliah said...

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் .
அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டதாகக் கூறிய விசுவானந்ததேவன், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது என்றார்.
வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.
- - நல்லையா தயாபரன்