Saturday, August 13, 2011

இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லை

"இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்கள் எழுச்சி கொள்கின்றனர். எல்லோரும் பொறுமை இழந்து விட்டார்கள். யாரிடமும் இழப்பதற்கு எதுவும் இல்லை." - லண்டன் கலவரத்தை நேரில் பார்த்த சிலரின் கருத்துக்கள்.

லண்டன் நகருக்கு வெளியே டோட்டன்ஹம் பகுதியில், பொலிஸ் ஒரு இளைஞனை சந்தேகித்திற்கிடமான வகையில் சுட்டுக் கொன்றது. வழக்கம் போலவே, "போலிசை தாக்குவதற்கு எத்தனித்த நபரை, தற்பாதுகாப்புக்காக சுட்டதாக" பிரிட்டிஷ் பொலிஸ் தெரிவித்ததை யாரும் நம்பவில்லை. பொலிஸ் அராஜகத்திற்கு எதிர்வினையாக, அடித்தட்டு மக்களின் அராஜகம் வெடித்துக் கிளம்பியது. கும்பல் கும்பலாக கிளம்பிய இளைஞர்கள், வர்த்தக ஸ்தாபனங்களை அடித்து நொறுக்கினார்கள். கடைகளை சூறையாடினார்கள். லண்டன் நகரில் மட்டும் நின்று விடாது, பேர்மிங்ஹாம் போன்ற பல நகரங்களுக்கு கலவரத்தீ பரவியது. கலவரத்தில் வெள்ளையினத்தவர், கறுப்பினத்தவர் எல்லோரும் ஈடுபட்டனர். ஏழ்மை மட்டுமே இனவேற்றுமை கடந்து அவர்களை ஒன்று சேர்த்தது. "லண்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள், போலீசுடன் மோதுவதை விட, கொள்ளையடிப்பது இலகுவானது என்று கருதுகிறார்கள் ...." இவ்வாறு தெரிவித்தார் ஒரு ஊடகவியலாளர். அவர் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் கலவரம் பற்றி தமக்குத் தெரிந்த காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசும், வலதுசாரி ஊடகங்களும் கலவரத்தில் ஈடுபடுவோர் குறித்து ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. "சமூகவிரோதிகள்!". "கொள்ளையடிப்பது, திருடுவது சமூகவிரோதிகளின் செயல். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்." என்று அரசு கூறி வருகின்றது. பொதுமக்களில் ஒரு பகுதி இதனை ஆதரிக்கின்றது.

அரசியல் மயப்படுத்தப் படாத மக்கள் எழுச்சி எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு லண்டன் கலவரம் ஒரு உதாரணம். கலகக்காரரின் அறியாமையை பூர்ஷுவா வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. கலவரத்தில் ஈடுபட்டோர், காப்பரேட் நிறுவனங்களின் சூப்பர் மார்க்கெட்டுகள், ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள், போன்றவற்றை உடைத்து சூறையாடினார்கள். பெரும் முதலாளிகளை பாதித்த கலவரம் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. பெரும் வணிக நிறுவனங்களின் காட்சியறைகள் நிறைந்திருக்கும் லண்டன் மத்தி, விரைவிலேயே பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆரம்பத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரின் தார்மீகக் கோபம், பெரும் வணிக நிறுவனங்கள் மேல் தான் குவிந்திருந்தது. நாள் தோறும் கண்கவர் விளம்பரங்கள் மூலம், பாவனையாளர்களை சுண்டி இழுக்கும் நிறுவனங்கள், தமது பொருட்களை வாங்குவதற்கு வசதியற்ற மக்கள் இருப்பதை மறந்து விடுகின்றனர். "பணமிருப்பவனுக்கு விற்கிறோம். இல்லாதவன் மூடிக் கொண்டு படுக்க வேண்டியது தானே..." என்று திமிராக பதிலளிப்பார்கள்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை, ஒரு ஊடகவியலாளர் எகத்தாளமாக குறிப்பிட்டார்: "முன்பு மக்களிடம் பணம் இருந்தது. கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. தற்போது கடைகளில் பொருட்கள் நிறைந்துள்ளன. ஆனால் மக்களிடம் வாங்குவதற்கு பணமில்லை." ஆனால்.... இங்கிலாந்து, "பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத கிழக்கு ஐரோப்பிய நாடு அல்லவே?" பணக்கார மேற்குலகை சேர்ந்த இங்கிலாந்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்? இந்தியா போன்ற வறிய நாடுகளில் இருந்தெல்லாம், கையிலே பணமில்லாமல் வந்து குடியேறும் தற்குறியைக் கூட பணக்காரனாக்கும் நாடல்லவா? அத்தகைய சொர்க்கபுரியில் கலவரமென்றால் நம்பக் கூடியதாகவா இருக்கின்றது? இங்கிலாந்தில் கணிசமான ஏழை மக்கள், சேரிகள் போன்ற குடியிருப்புகளில் விளிம்புநிலையில் வாழ்வதாக கூறினால், நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். நான் முன்னர் கூறிய படி, ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த அரசியலைப் பேசுவார்கள். உங்களுக்குத் தெரிந்த, இங்கிலாந்தில் வாழும் தமிழ் நண்பரைக் கேட்டுப் பாருங்கள். வெள்ளையின வறிய மக்கள் குறித்த பொதுவான கருத்து இவ்வாறு இருக்கும். "இங்கிலாந்தின் வெள்ளையின குடிமக்கள் பலர் உழைத்து வாழ விரும்பாத சோம்பேறிகள். அரசு வழங்கும் உபகாரச் சம்பளத்தில், இலவச சலுகைகளை பெற்றுக் கொண்டு சொகுசாக வாழ்கின்றவர்கள்."

பூர்வீக ஆங்கிலேயர்களையும், பன்னாட்டுக் குடிவரவாளர்களையும் பிரித்து வைப்பதில், அரசு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. பெரிய வர்த்தக நிறுவனங்களை நெருங்க முடியாத கலவரக்காரர்கள், தமது பிரதேசத்தில் உள்ள சிறு வணிகர்களின் வியாபார நிலையங்களை தாக்குகின்றனர். அநேகமாக, இங்கிலாந்தின் சிறுவணிகர் குழாம் பன்னாட்டுக் குடியேறிகளைக் கொண்டது. அவர்கள், தமது சமூகத்தினருக்கான பலசரக்குக் கடைகள், உணவுச்சாலைகள் மட்டுமல்லாது, நடைபாதையோர பெட்டிக்கடைகள் கூட வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்தியர்கள், இலங்கையர்கள் சிறு வணிகத் துறையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். பேர்மிங்ஹாம் பகுதியில் சீக்கியர்கள் தமது வியாபார நிறுவனங்களையும், குருத்வாராக்களையும் தாமே பாதுகாக்கின்றனர். ஹாக்கி, கிரிக்கெட் பேட், வாள்கள் சகிதம் சீக்கிய தொண்டர் படைகள் காவலுக்கு நிற்கின்றன. இந்த தொண்டர் படை, கலவரக்காரர்களை அண்ட விடாமல் விரட்டி அடிப்பதை, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. "பிரிட்டன் எமது தாயகம். நாங்கள் எங்கள் ஏரியாக்களை பாதுகாக்கிறோம்..." என்று கூறும் சீக்கியரின் "நாட்டுப் பற்றை" ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன.

துருக்கியரும் தமது வியாபார நிறுவனங்களை தாமே பாதுகாக்கின்றனர். "நாங்கள் துருக்கியர்கள். எங்களிடம் வாலாட்ட முடியாது..." என்று தேசியவாதப் பெருமிதத்துடன் கூறுகின்றனர். போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தோரும், கொள்ளையடிக்க வருவோரை தாமே அடித்து விரட்டுகின்றனர். "எங்களுக்கு அடைக்கலமளித்து முன்னேற வைத்த பிரிட்டனுக்கு விசுவாசமாக இருப்போம்" என்கின்றனர். தமிழ் சமூகத்தை சேர்ந்த வணிகர்கள் மட்டும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். நகைக்கடை உட்பட பல தமிழ்க்கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. "மத்திய லண்டனையும், பெரிய வணிக நிறுவனங்களையும் பாதுகாக்கும் பொலிஸ், இந்தப்பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை..." என்று குறைப்படுகின்றனர். சீக்கியரைப் போல, துருக்கியரைப் போல, அடியாட்களை வைத்து வர்த்தகத்தை பாதுகாக்க முடியாத கையறு நிலையில் தமிழ் சமூகம் உள்ளது. "ரோம் நகரம் பற்றியெரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக..." வரலாறு கூறுகின்றது. லண்டன் நகரம் பற்றியெரியும் பொழுது, தமிழர்கள் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதை, லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

லண்டனில் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் பிற நகரங்களிலும் வேலையற்ற ஏழை மக்கள் பெருகி வருகின்றனர். வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகள் பெரும்பான்மையாக இருப்பதாக தோன்றினாலும், வெளிநாட்டுக் குடிவரவாளர்கள் மத்தியிலும் ஏழைகள் பெருகி வருகின்றனர். என்ன வித்தியாசம் என்றால், வெள்ளையின ஏழைகள், வேலை கிடைக்காத பட்சத்தில், சமூகநலக் கொடுப்பனவுகளில் வாழ்வதை தமது உரிமையாக கருதுகின்றனர். மாறாக, குடிவரவாளர்கள் சூழ்நிலை காரணமாக கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை சம்பளத்தை விட குறைவாக கொடுத்தாலும், தினசரி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டாலும், சலிக்காமல் சம்மதிக்கின்றனர். அநேகமாக அவர்களின் சொந்த இனத்தை சேர்ந்த முதலாளிகள் தான் அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். வெள்ளயினத்தவர்களை அவ்வாறு சுரண்டுவதற்கு வாய்ப்பில்லை. அரசும், தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இயலாவிட்டால், சமூகநலக் கொடுப்பனவுகளை வழங்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். முன்பெல்லாம் இது அரசின் கடமையாக கருதப்பட்டது.

சோஷலிச நாடுகளின் மறைவுக்குப் பின்னர், உலகம் மாறிவிட்டது. மித மிஞ்சிய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதும், வேலையற்றோரின் அடிப்படை தேவைகளை புறக்கணிப்பதும் வாடிக்கையாகி விட்டது. இரு வருடங்களுக்கு முந்திய பொருளாதார நெருக்கடி, பிரிட்டனை வெகுவாக பாதித்துள்ளது. அரசும், பெரும் முதலாளிகளும் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தாலும், நாட்டில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அரசின் திட்டங்கள், பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப் படாமையை சுட்டிக் காட்டுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் தான், உயர்கல்விக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இனி பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே உயர்கல்வி கற்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள், அரசின் கொள்கையை எதிர்த்து கலகம் செய்தனர். அதிகார மையத்திற்கு எதிரான மாணவர்களின் கலகக்குரல்கள், வெளி உலகத்தை எட்டவில்லை. அவர்களும் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி, நாசம் விளைவித்திருந்தால், சர்வதேச ஊடகங்களின் கவனம் அங்கே குவிந்திருக்கும்.

பிரிட்டிஷ் அரசின் உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதல் அண்மைய கலவரத்தை தூண்டி விட்டது. இது வரை காலமும், விளிம்பு நிலை மக்களை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சமூகநலக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. "சும்மா இருக்க பணம் கிடைப்பதால், மக்கள் வேலைக்கு போக மறுக்கிறார்கள்..." என்று தீவிர வலதுசாரிகள் செய்து வந்த பிரச்சாரத்தை அரசு கொள்கையாக வரித்துக் கொண்டது. முந்தைய சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும் அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. (கவனிக்கவும்: சோஷலிச நாடுகளில் மக்களுக்கு சிறந்த வசதிகள் செய்யப்பட்டிருந்ததை முதலாளித்துவவாதிகள் இந்த இடத்தில் ஒத்துக் கொள்கின்றனர்.) ஆனால், சோஷலிச நாடுகளில் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில், வேலை வாய்ப்பை உருவாக்குவது தனியார் நிறுவனங்களின் கடமை. முதலாளிகள் தமக்குத் தேவையான அளவு தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். எஞ்சியவர்களை "வேலையற்றோர் படையில்" சேர்த்து விடுகின்றனர். வேலையற்றோர் படைக்கு வேதனம் வழங்குவது மட்டுமே அரசின் கடமையாகின்றது.

அரசோ பட்ஜெட்டில் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், சலுகைகளை குறைத்து வருகின்றது. வேலையில்லாமல் உதவித்தொகை பெறுவோர், கிடைக்கும் வேலையை செய்யுமாறு கட்டாயப்படுத்தப் படலாம். ஒருவர் முன்பு பொறியியலாளராக வேலை செய்திருந்தாலும், இப்போது தெருக்கூட்டும் வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும். "விபச்சாரத்தை தவிர எல்லாவிதமான தொழிலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் படலாம்..." என்று சட்டம் கூறுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ளா விட்டால், உதவித் தொகை நிறுத்தப்படும். இவ்வாறு எத்தனையோ காரணங்களை காட்டி, உதவித் தொகை நிறுத்தப் படுகின்றது. அரசு பணம் கொடுக்கா விட்டால், மக்கள் எவ்வாறு வாழுவது? அது அரசின் கவலை அல்ல. இதனால் அரசு மறைமுகமாக தெரிவிப்பது: "வேலயில்லா விட்டால், பிச்சை எடுத்தோ அல்லது திருடியோ வாழப் பழகிக் கொள்ளுங்கள்." இங்கிலாந்தில் கலவரத்தில் ஈடுபட்டோரும் அதைத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமேயில்லை. தாங்கள் வறுமையில் வாழ்கையில், இன்னொரு கூட்டம் வசதியாக வாழ்வதை கண்கூடாகக் காண்கின்றனர்.

இல்லாதவன் இருக்கிறவனிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுக்கிறான். இதிலே வேதனை என்னவென்றால், தமது எதிரி யாரென்று தெளிவற்ற கலகக்காரர்கள், தம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் சொத்துகளையும் கொள்ளையடிக்கின்றனர். சிறு வணிகர்கள் தாக்கப்படுவதும் இவ்வாறு தான். சில இடங்களில் சாதாரண உழைக்கும் மக்களின் வீடுகளில் கூட திருடி இருக்கிறார்கள். அவர்களின் கார்களை கொளுத்தி இருக்கிறார்கள். பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் கூட எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். அரசியல் உணர்வு பெற்றோர், சரியான இலக்குகளை காண்பிப்பது அவசியம். அரசியலற்ற உதிரிப் பாட்டாளிகளின், தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் எதிரிக்கே சாதகமாக அமைந்து விடுகின்றது. உழைக்கும் மக்களை கூறு போட வழி வகுத்து விடுகின்றது. சில நேரம், உழைக்கும் வர்க்கத்தை இனரீதியாக பிரித்து வைக்கவும், அரசியலற்ற அராஜக செயல்கள் உதவுகின்றன.

பிரித்தானியாவின் இடதுசாரிகள் இங்கிலாந்தின் கலவரங்களை ஆதரித்தாலும், அவர்களது நிலைப்பாடு சிலநேரம் அவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களிடம், இந்த செய்தியை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்? தனது வீட்டின், கடையின் உடமைகளை பறிகொடுத்த சாமானியர்கள் கூட, அரசு கலவரத்தை அடக்க வேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள். இடதுசாரிகள் தமது எதிர்ப்பியக்கத்தை வளர்க்காமல், பிற சக்திகளின் போராட்டங்களின் நிழலில் தங்கியிருந்த தவறை உணர்கின்றனர். உதாரணத்திற்கு, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக, மத அடிப்படைவாத ஹிஸ்புல்லாவையும், தேசியவாத புலிகளையும் ஆதரித்து வந்துள்ளனர். வர்க்கப்போராட்டத்திற்கு முற்றிலும் மாறான கொள்கைகளைக் கொண்ட இது போன்ற சக்திகளின் போராட்டம், எந்தளவு இடதுசாரிகளுக்கு உதவியுள்ளது? ஏகாதிபத்தியத்தின் பலமும் குறையவில்லை. இடதுசாரிகளுக்கான ஆதரவும் அதிகரிக்கவில்லை.

இங்கிலாந்தில் வெடித்துள்ள கலவரம், பிற நாடுகளிலும் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது முழுவதும் பாட்டாளி மக்களின் எழுச்சியாக கருத முடியாது. சில சமூகவிரோத சக்திகளும் கலவரத்தின் பின்னணியில் இருப்பதை மறுக்க முடியாது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் மக்கள் புரட்சிக்கு தயாராகத் தான் இருக்கிறார்கள். அதனை சரியாக இனங் கண்டு வளர்த்தெடுப்பதில் இடதுசாரிகள் காட்டும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்த வெற்றிடத்தை வலதுசாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்திய சிறுவணிகர்களின் வியாபாரங்களை பொலிஸ் பாதுகாக்க தவறியதும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம். வெளிநாட்டு குடிவரவாளர்களின் நிறுவனங்களை தானே கொள்ளையடிக்கிறார்கள், என்று அலட்சிய மனப்பான்மை ஒரு காரணம். அவர்கள் தமது வியாபாரத்தை பாதுகாப்பது என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தால், சூறையாட வருவோர் அவர்களையும் தாக்குவார்கள். (அவ்வாறான சம்பவம் ஒன்றில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.) பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்திற்கு எதிரான வெள்ளையின ஏழைகளின் கோபம், வெளிநாட்டவர் மீதும் திரும்பலாம். இது ஏற்கனவே வெள்ளையின உதிரிப்பாட்டாளிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தீவிர வலதுசாரிகளின் கரத்தை பலப்படுத்தும். அதைத் தான் அரசும் எதிர்பார்க்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதும், பல்வேறு இனங்களை சேர்ந்த உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றிணைப்பதும், இடதுசாரிகள் முன்னால் உள்ள இமாலயப் பணியாகும்.



மேலதிக தகவல்களுக்கு:

இங்கிலாந்து கலவரம் தொடர்பாக சின்னக்குட்டியின் பதிவு:
இங்கிலாந்து ;கலவரமா ? கிளர்ச்சியா?

8 comments:

saarvaakan said...

நல்ல அலசல் நண்பரே,
1.கொல்லப்பட்ட மார்க் துக்கன் பற்றி அதிகம் சொல்லவில்லை எனினும் அந்த மரணத்தின் காரணமக எழுந்த வன்முறைகள் பற்றி நடுநிலையோடு விமர்சித்து உள்ளீர்கள்.
2.பிரிட்டன் அரசு இம்மாதிரி கலவரத்தை தடுக்க முடியாது தடுமாறுவது போல் பல செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வன்முறையில் ஈடுபவர்கள் கருப்பின மக்கள் மட்டும் போல் தெரியவில்லை. குறிப்பாக பிற நாட்டவரின் சொத்துகளே சூறையாடப் படுகிறது.

3.சில பிற நாட்டு, மத அமைப்புகள் தங்கள் பிரிட்டிஷ் விசுவாசத்தை காட்டுவதற்கான் சந்தர்ப்பமாக் காட்டுகின்றனர். இது அவர்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது.முன்பு மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டு இந்தியா அனுப்ப பட்ட போது மௌனம் சாதித்த தமிழ் அரசியல்வாதிகளின் செயல் போன்றது.

4.ஐரோப்பாவில் குடியேறியுள்ள இப்போது தேவையற்ற‌ பிற நாட்டவரை வெளியே துரத்தும் சதி போலவே நார்வே,பிரிட்டன் வன்முறைகள், ஃபர்தாவிற்கு தடை போன்றவை தெரிகிறது.பொருளாதார மந்த நிலை நீடித்தால் இன்னும் இம்மாதிரி சம்பவங்கள் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

5.இடதுசாரி இயக்கங்கள் மீண்டெழுந்து இன மத பேதமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை போய் பல் நாளாயிற்று.இடது சாரி பொருளாதாரம் இப்போதைய பொது உடமை நாடுகளாலேயே ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.சைனாவில் கூட சிறுபான்மை உய்கு முஸ்லிம்,திபெத்தியரின் உரிமைகள் ஒடுக்கப் படுகின்றன்.பல மத இன மக்கள் வாழும் சமுதாயம், அதில் வாழும் மக்களின் உரிமைகள் வரையறுக்கப் படவேண்டிய கால கட்டம் என்பது மட்டும் புரிகிறது.
நன்றி

Mohamed Faaique said...

பகிர்வுக்கு நன்றி...

செங்கொடி said...

விரிவாக அலசப்பட்டிருக்கும் மிக அருமையான கட்டுரை என்னுடைய தளத்தில் பகிர்ந்து கொள்ளலாமா?

செங்கொடி

Kalaiyarasan said...

தாராளமாக செங்கொடி

Tsri1 said...

சரியான கட்டுரை.
//அவர்களது நிலைப்பாடு சிலநேரம் அவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது.கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களிடம் இந்த செய்தியை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?
மத அடிப்படைவாத ஹிஸ்புல்லாவையும் தேசியவாத புலிகளையும் ஆதரித்து வந்துள்ளனர்.//
இங்கு தான் உங்கள் நேர்மை வெளிபடுகிறது.

//பர்தாவிற்கு தடை போன்றவை தெரிகிறது. -சார்வாகன்//
பர்தாவிற்கு தடை நல்ல விடயம் தானே!
இப்போது என்ன நடக்கிறது அவர்களில் பலர் பர்தா அணிவதில்லை. அப்படி அணிபவர்கள் தொழில்சாலைக்குள் வந்ததும் பர்தாவை களட்டி விடுகிறார்கள்.வேலை முடிந்ததும் அப்பாவுக்கும் அண்ணைக்கும் பயந்து பர்த்தாவை போட்டு கொண்டு போகிறார்கள்.

Mohamed G said...

நல்ல பகிர்வு,
இறந்தது சீக்கியர்கள் அல்ல,
3 இஸ்லாமியர்கள்.

Jay Rajamanickam said...

தயவு செய்து இந்த பதிவை படியுங்கள்.

http://holyox.blogspot.com/2011/08/blog-post_10.html

இதில் லண்டன் கலவரத்தின் உண்மை பின்னணி கொடுக்கப்பட்டுள்ளது.

Unknown said...

நல்ல ஒரு பகிர்வு................உங்கள் பகிர்வுக்கு நன்றி....................