Thursday, June 02, 2011

"சிங்கள- தமிழ் தொழிலாளர் வேற்றுமை ஓங்குக!" - யமுனா

[இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு] (பகுதி : 2)

 பத்தாம்பசலித்தனமான வைதீக மார்க்சியத்தை துறந்து, நவீன மார்க்சியராக ஞானஸ்நானம் பெற்ற யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்:
//ஏகாதிபத்தியம் போலவே மனித உரிமை எனும் பிரச்சினையும் மார்க்சியர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தையும் மனித உரிமையையும் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது என்பது அவர்களைப் பொறுத்து பெரும் சிக்கலாக இருக்கிறது.//

காலனியாதிக்க காலத்தில் இருந்து தொடரும் பிரிட்டிஷ், பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் குறித்த பாமரனின் புரிதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். பிரிட்டிஷார் தம்மை "ஏகாதிபத்தியம்" என்று பெருமிதத்துடன் கூறிக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. "தனி மனித சுதந்திரங்களின் தாயகமான" அமெரிக்க சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட பொழுது, ஏகாதிபத்தியம் என்ற சொல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நடைமுறையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.

எந்தவொரு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடும், மனித உரிமைகளை மதித்து நடந்ததாக வரலாற்றில் எங்கும் காண முடியாது. இருபதாம் நூற்றாண்டிலும் நிறவேற்றுமை நிலவியது. வெள்ளையர் தவிர்ந்த மற்றவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும், பாலியல் பலாத்காரம் செய்வதும், கொலை செய்வதும் தவறாக கருதாத காலம் ஒன்றிருந்தது. உலகம் காணாத அளவு இனப்படுகொலை நடத்தியிரா விட்டால், அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்கள் அவர்களுக்கு சொந்தமாகியிராது. இன்று மனித உரிமை பேசும் நாடுகள் தான், உலக வரலாற்றில் முதன் முதலாக இரசாயனக் குண்டுகள், அணு குண்டுகள் எல்லாம் போட்டார்கள். அத்தகைய ஏகாதிபத்தியங்கள் மனித உரிமை பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போலாகாதா?

பனிப்போர் காலத்தில், சோஷலிச நாடுகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு "மனித உரிமைகள் பிரச்சினை" பயன்படுத்தப் பட்டது. சோஷலிச நாடுகளில் பல கட்சி தேர்தல், கருத்துச் சுதந்திரம், சொத்து சேர்க்கும் சுதந்திரம் கிடையாது என்பன மனித உரிமைகள் பிரச்சினைகளாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதற்கு மாறாக, சோஷலிச நாடுகள் முன்வைத்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி, உணவு, வீடு போன்ற அடிப்படை மனித உரிமைகள் புறக்கணிக்கப் பட்டன.

மேற்கத்திய நாடுகள் வலியுறுத்திய மனித உரிமைகள், முதலாளிகளும், மேட்டுக்குடி வர்க்கத்தினரும் புவியின் வளங்களை அனுபவிக்கக் கோரும் உரிமையாகும். இதனை முன்னாள் சோஷலிச நாடுகளை சேர்ந்த மக்கள் காலந் தாழ்த்தித் தான் உணர்ந்து கொண்டனர். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். ஆகவே, தமிழ் மக்களும் ஏகாதிபத்தியம் பேசும் "மனித உரிமைகளின் தார்ப்பரியம் என்னவென்று", பட்டு அனுபவிக்க வேண்டுமென்பதே யமுனா ராஜேந்திரனின் பேரவா.

யமுனா: //தனிமனித உரிமை என்பதனை சொத்துரிமையுடன் வைத்து மட்டுமே புரிந்து கொள்வது வைதீக மார்க்சியர்களின் பார்வை. சொத்துரிமை என்பது அல்லாமல் தனி மனித உரிமை என்பதனை கலாச்சாரம், உயிர் வாழ்தலுக்கான உரிமை, மனிதன் எனும் சுயகண்ணியத்துக்கான உரிமை எனும் அடிப்படையில் பெரும்பாலுமான மார்க்சியர் காணத் தவறுகிறார்கள்.//

சொத்துரிமை மட்டுமே மனித உரிமை என்று எந்த மார்க்சியர்கள் கூறினார்கள்? முன்னர் கூறியது போன்ற, "உணவு, உறையுள், கல்வி, தொழில்" போன்ற உரிமைகள் உயிர் வாழ்தலுக்கான உரிமை இல்லையா? நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கையில், உலகின் முக்கால்வாசி வளங்களை பணக்காரர்கள் நுகர்வதை, எந்தவொரு மனித உரிமைவாதியும் தட்டிக் கேட்கவில்லை. உயிர்வாழ உரிமையற்று நாள் தோறும் மரித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக மார்க்சியர்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தேசியவாதிகள் அவர்களை திரும்பியும் பார்ப்பதில்லை. வயிற்றை விட மானம் முக்கியம் என்று அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.

யமுனா: //மனிதனது இருத்தல் சார்ந்த மனிதகண்ணியம் (human dignity) எனும் பிரச்சினை குறித்த, தலித்திய மீட்சி, இன மீட்சி எனும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளை இதனாலேயே இவர்களால் சரியாக அணுகமுடியாமலும் போகிறது.//

இலங்கையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காக மார்க்சியர்கள் தான் போராடினார்கள். சாதியொழிப்புப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக ஒழுங்கு படுத்தியதில், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. அந்தக் காலங்களில் தமிழ் தேசியவாதிகள் தலித் விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டனர். தலித் மக்களை ஒடுக்கிய சாதிவெறியர்களுக்கு தமிழ் தேசியவாதிகள் புகலிடம் வழங்கினார்கள். பேரினவாதிகளின் பாராளுமன்றத்திலும் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்கள். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட சம்பவமே, சிங்கள பேரினவாதம் முதலாவது தமிழின ஒடுக்குமுறை.

மலையகத் தமிழர்கள் தலித்துக்கள் என்ற காரணத்தால், தமிழ் தேசியவாதிகள் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை. மாறாக, சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து தமிழின ஒடுக்குமுறை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அதற்குப் பிறகு வட- கிழக்கு தமிழர் மீதான சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையை, தமிழ் இனவாதம் மூலம் எதிர்கொண்டார்கள். இரண்டு பக்கமும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இனவாதம் தீவிரமாக வளர்ந்தது. அத்தகைய சூழ்நிலையில் மார்க்சியர்கள் எவ்வாறு அணுக வேண்டும்? இப்போதும் கூட, தமிழர்களுக்கு எந்த இசங்களும் வேண்டாம், "நேஷனலிசம்" மட்டுமே வேண்டும் என்று நம்பும் தமிழ் தேசியர்கள், மார்க்சிய அணுகுமுறைகளை ஏற்றுக் கொள்வார்களா?

யமுனா: //தமிழ் மக்களுக்கான நீதி என்னும் பிரச்சினை என்ன ஆனது?//

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையினால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று, யமுனா எப்படி நம்புகிறார்? "போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டால், தமிழர்கள் மீதான சிங்களவர்களின் குரோதம் அதிகரிக்கும். தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்கள் நடக்கலாம்." இவ்வாறு ஈழத்தமிழர்கள் அச்சமடைந்திருப்பதாக அமெரிக்க தூதுவரின் கேபிளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் தெரிவித்தது.(விக்கிலீக்ஸ்: ராஜபக்ச குற்றவாளி, விசாரணைக்கு தமிழர் தயாரில்லை) அதை விட, போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல, புலிகளின் ஆதரவாளர்களும் விரும்பவில்லை. ஏனெனில் நிபுணர் குழு அறிக்கை இராணுவமும், புலிகளும் மனித குலத்திற்கு விரோதமான குற்றங்கள் புரிந்ததாக கூறுகின்றது. இதற்கான சாட்சியங்களை போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

ஆகவே நீதி கோரும் தமிழர்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. சிறிலங்கா அரச, இராணுவ அதிகாரிகள், சிறிலங்கா சார்பாக துணை நின்ற இந்திய, அமெரிக்க தலைவர்கள், புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப் படுவார்களா? //முன்னாள் ஆந்திர நக்சல் ஆதரவாளரும் பின்னாளில் முழுமையான மனித உரிமையாளராகவும் பரிமாணம் எய்திய அமரர் பாலகோபால் போன்றோருக்கு இந்தத் தரிசனம் இருந்தது. இந்தக் காரணத்தினாலேயே விடுதலைப் புலிகள் பற்றி, அவர்களது மனித உரிமைமீறல்கள் பற்றி கடுமையான விமர்சனங்களுடனேயே அவர் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்ப்பவராக இருந்தார். அவர் இன்று இருந்திருப்பின் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையையும் முதலாக அவர் வரவேற்றிருப்பார் எனவே நான் நம்புகிறேன். - யமுனா ராஜேந்திரன்//

யமுனா: //தமிழ் மக்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏதேனும் முனைப்புக்கள் இந்த இடதுசாரிகளிடம் உண்டா? இது ஏதும் இல்லாத நிலைமையில் தெற்கிலுள்ள இடதுசாரிகளுடன் தமிழர்கள் இணைந்து போராடுவது என்பதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை.//

கடந்த அறுபதாண்டுகளாக சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவர் எழுந்துள்ளது. சிங்கள இனவாதிகள் ஒரு புறம், தமிழ் இனவாதிகள் மறுபுறம் அந்த தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர். பெரும்பான்மை சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது. பெரும்பான்மை தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது. இரண்டு சமூகங்களும் தனிதனி தீவுகளாக வளர்ந்து வந்ததால், இடதுசாரிகளும் பிரிந்து விட்டனர். இரு துருவங்களாகிக் கிடக்கும் இவ்விரு இனங்களிற்கு மத்தியில், தொடர்பை ஏற்படுத்துவது எப்படி என்பதை, யமுனா ராஜேந்திரன் விளக்க வேண்டும். "சிங்களவனோடு பேசக்கூடாது, பார்த்து சிரிக்கக் கூடாது." என்று தமிழினவாதிகள் எங்களுக்கு தடையுத்தரவு போடுகின்றனர். அவர்களையும், சிங்கள இனவாதிகளையும் சமாளிக்கும் தந்திரோபாயங்களை யமுனா ராஜேந்திரன் எமக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

யமுனா: //தமிழீழப் பிரிவினையை ஒப்புவதுபோல எப்போதேனும் இந்தியாவோ அல்லது அமெரிக்க மேற்கத்திய அரசுகளோ செயல்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன? நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவான தோற்றப்பாட்டை அமெரிக்க மேற்கத்திய அரசுகள் காண்பிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் என்ன?//

தமிழீழப் பிரிவினையை இந்தியாவோ, மேற்கத்திய அரசுகளோ ஏற்கவில்லை. ஆனால், தமிழீழப் பிரிவினையை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புகளை பேணி வருகின்றன. அதே நேரம், சிறிலங்கா அரசுடனான உறவுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் நடந்து கொள்கின்றன. இலங்கையில் சிங்கள, தமிழ் இனங்களை நிரந்தரமாக பிரித்து வைக்க, இவ்விரு சக்திகளும் உதவுவார்கள் என்பது, ஏகாதிபத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

உலகம் முழுவதும் மனித உரிமைகளை போதிக்கும் நடுநிலையாளர்கள் அல்லவா? இரண்டு தரப்பிற்கும் பொதுவானவர்கள் என்று காட்ட வேண்டாமா? மகிந்த ராஜபக்சவின் அரசு, நாட்டை எந்தளவு விலை பேச தயாராக இருக்கிறது என்பது தான் அவர்களுக்கு தேவையானது. முன்னர் ஒரு தடவை இந்தியா, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரித்தது. அதே வேலையை அமெரிக்கா இன்று, நாடு கடந்த தமிழீழ அரசை வைத்துச் செய்கிறது.

யமுனா: //அனைத்து மக்களை ஒன்றிணையச் செய்ய வேண்டும். இலங்கை நிலைமையில் அனைத்து மக்கள் என்றால் யார்? மேலே கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, பெரமுனா, சம சமாஜக் கட்சி போன்ற இடதுசாரிகளா? அல்லது இவர்களால் தலைமை தாங்கப்படும் இனவாதம் பீடிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளி வர்க்கமா? ஓன்றிணைவு இவர்களுடன், எதன் அடிப்படையில், எவ்வாறு சாத்தியம்?//

யமுனா ராஜேந்திரன் சுற்றி வளைத்துச் சொல்வதை, தமிழினவாதிகள் ஒரே வாக்கியத்தில் சுருக்கமாக முடித்து விடுகின்றனர். "சிங்களவனுடன் சேர்ந்து வாழ முடியாது." இந்தியாவில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடும் இடதுசாரி கட்சிகள் சீரழிந்து கிடப்பதைப் போலத் தான் இலங்கையிலும் நடக்கிறது. ஜேவிபி யை தவிர பிற இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. உலகம் முழுவதும் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு இலங்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்துவதற்கென்றே இனவாதப் பூதம் கிளப்பி விடப்பட்டது.

சிங்களவர்களை மட்டுமல்ல, தமிழர்களையும் பிடித்தாட்டும் இனவாதப் பூதத்தை விரட்டாமல், அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பது எப்படி? "இனவாதம் பீடிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளி வர்க்கம்" என்று யமுனா எழுதுவது சுத்த அபத்தம். இலங்கைத் தொழிலாளி வர்க்கத்துடன் யமுனாவுக்கு எந்தப் பரிச்சயமும் கிடையாது. "இனவாதத்தால் பீடிக்கப்பட்ட தமிழ் தொழிலாளி வர்க்கம்..." என்று ஒரு சிங்கள எழுத்தாளர் எழுதியிருந்தால், யமுனாவும் அவரது வாசகர்களும் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். ஆனால், சிங்கள அல்லது தமிழ் இனவாதத்தை ஆதரிக்கும் எல்லோரும் இவ்வாறு தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஈழத்தில் வாழும் தமிழர்கள், மார்க்ஸியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். கடந்த முப்பதாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய தமிழ் தேசிய அரசியல், இடதுசாரி சிந்தனைகளை முற்றாக துடைத்தழித்து விட்டது. தமிழ்த் தேசியத்தை தவிர வேறெதுவும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. (யமுனாவின் மொழியில் கூறினால்: "இனவாதத்தால் பீடிக்கப்பட்ட தமிழ் தொழிலாளி வர்க்கம்.) சிங்களப் பகுதிகளிலும் அது தான் நிலைமை. மார்க்ஸியம், சோஷலிசம் போன்ற சொற்களைக் கூட கேள்விப்படாத மக்கள் தான் பெரும்பான்மையினர். தமிழ் தொழிலாளி வர்க்கத்துடன், சிங்கள தொழிலாளி வர்க்கம் சேரக் கூடாது என்பதில் சிறிலங்கா அரசு மிகக் கவனமாக உள்ளது. தமிழ் தேசியவாதிகளின் நோக்கமும் அது தான்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை எந்தவொரு இடதுசாரியும் இதுவரை மறுத்ததில்லை. யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் கூட்டிய சர்வகட்சி மகாநாட்டுத் தீர்மானங்களை கிடப்பில் போட்ட மகிந்த ராஜபக்சவின் செயல் கண்டிக்கத் தக்கது. அவரே உறுதிமொழி அளித்த 13 வது சீர்திருத்தத்தையும் அமுல்படுத்தவில்லை. இப்படியான தருணத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் மீது அந்நிய சக்தி அழுத்தம் கொடுப்பது வரவேற்கத் தக்கது. ஆனால், போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா. நிபுணர் குழு அப்படியான தீர்வைப் பெற்றுத் தருவதற்காக உருவானதல்ல.

இப்போதே நிபுணர் குழு அறிக்கைக்கு பின்னர், சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் கச்சை கட்டத் தொடங்கி விட்டனர். அறிக்கையில் சிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், "அந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. நாட்டைப் பாதுகாத்த வீரர்களுக்கு அபகீர்த்தி உண்டாக்குகின்றன.", இவ்வாறு சிங்கள இனவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழகத்தில் தமிழினவாதிகளும் அதே மாதிரியான அரசியலில் ஈடுபடுகின்றனர். அறிக்கையில் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், "விடுதலைக்கு போராடிய புலிகளுக்கு அபகீர்த்தி உண்டாக்கிய" அறிக்கையை நிராகரிக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் தற்போது ஐ.நா. மன்றத்தை மாசு படுத்தி ஒதுக்க கிளம்பியுள்ளமை, அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது.

(முற்றும்)

பகுதி 1:
இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு http://kalaiy.blogspot.nl/2011/06/blog-post.html

2 comments:

Tsri1 said...

இன்று தான் உங்களுடைய ஆக்கபுர்வமான பதிவை படிக்க முடிந்தது.

முன்னர் ஒரு தடவை இந்தியா சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரித்தது. அதே வேலையை அமெரிக்கா இன்று நாடு கடந்த தமிழீழ அரசை வைத்துச் செய்கிறது.

உண்மையை சொன்னீர்கள். வாழ்த்துக்கள்.
உண்மையை விட உணர்ச்சி மயமான கோமாளி தனங்கள் தான் எங்கள் ஆட்களுக்கும் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கும் மிகவும் பிடிக்கும். இதை வினவு உணர்ந்துள்ளார்கள்.ஆகவே இப்படியான கவர்ச்சியான விடயங்களை பின்பற்றி அரசியல் செய்வதே தமிழகத்தை சேர்ந்தோரின் அரசியல் தேவையாக உள்ளது

isai inbam said...

மரபு மார்க்சியர்கள் இன பிரச்சனைக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லும் நவீன மார்க்க்சியவாதி ஜமுனா போன்ற குழப்பவாதிகள் என்ன செய்தார்கள் என்று சொல்லலாம் அல்லவா ?
தமிழருக்கு இசங்கள் தேவையில்லை என்பதன் அர்த்தம் மார்க்க்சியம் தேவை இல்லை என்பது தானே தவிர வேறு இல்லை.கப்பிடலிசம் தான் அவர்களின் துன்பதிர்க்கு காரணம் என்பது இந்த மரமண்டைகளுக்கு ஒரு போதும் புரிய போவதில்லை.

கஞ்சிக்கில்லார் அதன்

காரணமும் தானறியார்

என்று பாரதி முட்டாள்தனத்தை பாடினான்.தேசிய பிரச்சனையிலும் இந்த முட்டாள் தனமே முந்திரிகொட்டை போல் நிற்கிறது.தமிழ் தேசியத்தின் நிலை மிக பரிதாப நிலையில் உள்ளதே பரிதாபம்.

யோகன்