Sunday, May 15, 2011

வலைப்பூவில் வரும் தகவல்களை நம்ப முடியுமா?

(கடந்த வருடம், "பூச்சரம்" இணையத்தளத்தில் வாசகர்கள் தொடுத்த வினாக் கணைகளுக்கு எனது பதில்கள்.)

1. கேள்வி: உங்கள் வலைப்பூவில் வரும் தகவல்கள் பெரும்பாலும் நாம் இதுவரை அறிந்த தகவல்கட்கு எதிராகவே இருக்கின்றன. உங்கள் கருத்துக்களை திடீரென நம்பமுடியவில்லை. குழப்பமாக இருக்கிறது. எவ்வாறு உண்மையை உறுதிப்படுத்துவது? (யோகா)

பதில்: நான் வலைப்பூ ஆரம்பித்த நோக்கமே தமிழ் ஊடகங்களின் வறுமை தான். அதாவது உள்ளூர் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சர்வதேச செய்திகளில் காட்டுவதில்லை. நமது ஊடகங்கள் யாவும் குறிப்பிட்ட நிறுவனங்களில் தங்கியுள்ளன. தமிழ் ஊடகங்கள், Reuters , AFP , AP , CNN , BBC வழங்கும் தகவல்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றன. இவை எல்லாம் செய்தி வழங்கலை லாபம் கொழிக்கும் வர்த்தகமாக மாற்றியுள்ள நிறுவனங்கள். அவற்றிற்கென்று பொதுவான அரசியல் அபிலாஷைகள் உள்ளன. அதனால் செய்திகளும் அந்த வரையறைக்குள்ளேயே அடங்கி விடுகின்றன. நிறுவனமயப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு மாற்றாக, மறு தரப்பு செய்திகளைக் கூறும் மாற்று ஊடகத்தின் தேவை பல காலமாக எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் அவர்களோடு போட்டி போடுமளவு பலமோ, பணமோ இருக்கவில்லை. இன்டர்நெட் யுகம் ஆரம்பமாகிய போது, குறைந்தளவு செலவில் ஊடகத்தை பயன்படுத்தக் கூடிய வசதி தோன்றியது. அப்போது சில ஆர்வலர்களால் "Indymedia Group " (சுதந்திர ஊடகம்) என்ற வலைப்பின்னல் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுடனான அனுபவம், என்னையும் தனியாக வலைப்பூ தொடங்க ஊக்குவித்தது. உண்மையை உறுதிப் படுத்துவதற்கு, உங்களுக்கு நீடித்த தேடுதல் அவசியம்.

*
2. கேள்வி: உங்கள் கருத்துக்களின் படி இதுவரை ஊடகங்கள் எம்மை ஏமாற்றி வருகின்றன. சரியான தகவல்களை எவ்வாறு அறிந்துகொள்வது? (பெரோஸ்)

பதில்: ஊடகவியலில் " வரிகளுக்கு இடையில் வாசிப்பது" என்று சொல்வார்கள். அதாவது வெகுஜன ஊடகங்களிலேயே நிறைய தகவல்கள் மறைக்கப்பட்டு, வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகின்றன. சொல்லாமல் விட்ட சேதிகளை கண்டுபிடிக்க சிறிது பயிற்சி தேவை. மேலும் எத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அந்த ஊடகங்களே தீர்மானிக்கின்றன. தமது நலன்களுக்கு மாறானது எனக் கருதும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் அவை மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. நான் அப்படி மறைக்கப்பட்ட செய்திகளை கண்டுபிடித்து சொல்கிறேன். அவ்வளவே. மக்களின் கருத்தை தீர்மானிக்கும் சக்தியை ஊடகங்கள் பெற்றுள்ளன. ஊடகங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அவை பின்னர் மக்களின் கருத்துகளாகின்றன. அந்த ஊடகம் எத்தகைய அரசியல் சக்தியின் ஆதிக்கத்தில் இருக்கின்றதோ, அவர்களின் கருத்து மட்டுமே கூறப்படும். சரியான தகவல்களை அறிவது நமது கையில் தான் உள்ளது. அதாவது மாற்று ஊடகம் ஒன்றை தொடங்கவோ, ஊக்குவிக்கவோ பழக வேண்டும். ஊடகம் என்பது மக்களுக்கானது.

*
3. கேள்வி: வித்தியாசமான கருத்துக்களை எழுதுகிறீர்கள். பிரபலமடைவது நோக்கமா? (சந்திரகாந்தன்)

பதில்: வித்தியாசமாக எழுதினால் பிரபலமடையலாம் என்பது எனது நோக்கமாக இருக்கவில்லை. நான் எனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான். நான் எழுதும் விடயங்கள் உலகில் பலர் அறிந்திருக்கவில்லை என்பதை, வாசிப்பவர்களின் எதிர்வினையைப் பார்த்து புரிந்து கொண்டேன்.

*
4. கேள்வி: உங்கள் கருத்துக்கள் எவ்வளவு தூரம் மக்களை சென்றடைகின்றன? (நஸீர்)


பதில்: அதை மக்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும். எனது கருத்துகள் குறைந்தது பத்து பேரின் மனதில் சென்று பதிந்துள்ளன என்றால் அதுவே எனக்கு பெருமை தான். அந்தப் பத்து பேரும் அடுத்து நூறு பேருக்காவது கொண்டு போய் சேர்க்க மாட்டார்களா? சிறு பொறியில் இருந்து தான் பெரு நெருப்பு தோன்றுகின்றது.

*
5. கேள்வி: வலைப்பூக்கள் மொக்கைகட்கே களமமைக்கிறது. இதனிடையே காத்திரமான கருத்துக்களை தரும் உங்கள் வலைப்பூ வாசகர்களிடையே போதிய வரவேற்புப்பெற்றுள்ளதா? (என்ன கொடும சார்)

பதில்: அப்படி வரவேற்பு கிடைத்திரா விட்டால் எப்போதோ எழுதுவதை நிறுத்தியிருப்பேன். பலதரப்பட்ட நண்பர்களின், வாசகப் பெருமக்களின் ஆதரவு என்னை மேலும் எழுதத் தூண்டியது. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான வாசகர்கள், என்னிடம் பல தகவல்களை கிடைக்கும் என எதிர்பாக்கிறார்கள்.

*
6. கேள்வி: இன்று நியாயம் பேசுவோர்கள் எல்லாரும் "ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்றே ஒதுக்கப்படுகிறார்கள். அரசியலில் பெரும் தோல்வியடைகிறார்கள். நியாயத்தின் பக்கம் மக்கள் அணிதிரளாதது ஏன்? (ரமீஸ்)

பதில்: ஏனெனில் பொதுவான நியாயம் என்ற ஒன்று இன்றைய உலகில் இல்லை. ஒவ்வொருவரும் தங்களின் நலன் சார்ந்தே நியாயம் பேசுகிறார்கள். தனி மனிதன் மட்டுமல்ல, அரசியல் அமைப்பு, மத அமைப்பு எல்லாமே ஒரு பக்க நியாயம் மட்டுமே பேசுகின்றன.

*
7. கேள்வி: ஊடகங்கள் வர்த்தக நோக்கம் கொண்டவை. மக்களிடம் செய்திகளை சரியாக சேர்க்கும்போது அவை பிரபலமடந்து வர்த்தக ரீதியில் வெற்றி பெறுகின்றன. யதார்த்தம் அவ்வாறு இருக்கையில் ஊடகங்கள் ஏன் செய்திகளை திரிக்க முற்படுகின்றன? (ரவி)

பதில்: "செய்திகளை சரியாக சேர்க்கும் போது", இது ஊடகம் பற்றி ஏட்டில் மட்டுமே காணப்படும் வாசகம். நடைமுறையில் அப்படியல்ல. செய்தியை அப்படியே கூறுவதால் சிலரின் நலன்கள் பாதிக்கப்படும் என நம்பினால், அதனை செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்தன என்று ஒரு காலத்தில் அனைத்து ஊடகங்களும் ஒரு பொய்யை கூறிக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு சில நேர்மையான மாற்று ஊடகங்கள் மட்டுமே, அதை மறுத்து வந்தன. அன்று வெகுஜன ஊடகங்கள் தைரியமாக பொய் சொன்னதன் மூலம், பொது மக்களின் ஆதரவை ஈராக் மீதான படையெடுப்புக்கு ஆதரவாக திரட்டி விட்டிருந்தன.

*
8. கேள்வி: நீங்கள் எழுதும் கருத்துக்கள் வித்தியாசமானவை. அவை எங்கிருந்து கிடைத்தன என்று ஏன் நீங்கள் சொல்வதில்லை? (மதிவதனி)

பதில்: நான் போடும் பதிவுகள் இரண்டு வகையானவை. ஒன்று: செய்திக் குறிப்புகள். இவற்றிற்கான மூலங்களை உடனேயே தந்து விடுகிறேன். ஏனெனில் அவை பெரும்பாலும், வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்த்ததாக இருக்கும். முடிந்த அளவு ஆங்கில மூலத்தையும், அது முடியாத பட்சத்தில் வேறு அந்நிய மொழி மூலங்களையும் குறிப்பிடுகிறேன். இரண்டு: ஆய்வுக் கட்டுரைகள். விவாதத்திற்குரிய கட்டுரை என்றால், இவற்றிற்கான உசாத்துணை கொடுக்கிறேன். எப்போதும் அது சாத்தியமாவதில்லை. சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில், ஏற்கனவே வருடக்கணக்காக சேர்த்து வைத்துள்ள அறிவைக் கொண்டு தான் கட்டுரைகளை எழுதுகின்றேன். அவை எல்லாம் நீண்ட கால கடின உழைப்பின் பின்னர் கிடைத்த பெறுபேறுகள். ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன்னர், அது பற்றி பலருடன் விவாதித்திருப்பேன். ஏற்கனவே அந்த விடயம் குறித்து குறைந்தது பத்து நூல்கள் வாசித்திருப்பேன். எங்காவது ஒரு பத்திரிகையில், இணையத்தில் வாசித்திருப்பேன். அவை எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளாதது எனது குறை தான். வருங்காலத்தில் அந்தக் குறையை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

*
9. கேள்வி: வலைப்பூவை வித்தியாசமான கருப்பொருளின் கீழ் எழுதுவதற்கான காரணம் என்ன? (ஜயகிருஷ்ணன்)

பதில்: அவையெல்லாம் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. நான் எப்போதும் இரு வேறு உலகங்களில் சஞ்சரித்திருக்கிறேன். புறக்கணிக்கப்படும் சமூகங்கள், விளிம்புநிலை மனிதர்கள், இவை தான் எனது கருப்பொருட்கள். அதிகமானோரின் கண்களுக்கு அவர்கள் தெரிவதில்லை. அவர்கள் தமது பிரச்சனைகளை வெளிக் கொண்டுவரும் வசதியோ, எழுத்துத் திறமையோ இல்லாதவர்களாக இருக்கலாம். சுருக்கமாக சொன்னால், குரல் இல்லாதவர்களின் குரலாக இருப்பதில் பெருமையடைகிறேன்.

*
10. கேள்வி: இலங்கை இந்திய அரசியலில் வரலாறில் ஒரு கருத்தியலை உருவாக்குவதில் இராமாயணம் பெரும் பங்கு வகிக்கின்றது. கம்பராமாயணத்தை தவிர்த்து தமிழ் இல்லை என்ற நிலமை இருக்கிறது. சேது சமுத்திர திட்டத்தை கூட அது சீர்குலைக்கிறது. இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சிறுத்தலாகவும் இருக்கிறது. ஏன் இதுவரை இராமாயணம் பிழை என நிரூபிக்க யாரும் முயற்சிக்கவில்லை? (ரகீப்)

பதில்: ஒரு காலத்தில் பெரியார் இராமாயணத்தின் பிற்போக்கு கருத்துகளை அம்பலப் படுத்தி ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார். எம்.ஆர். ராதா என்ற சினிமா கலைஞன், இராமாயணத்தை கிண்டல் செய்து கீமாயணம் என்ற நாடகத்தை அரங்கேற்றி வந்தார். இப்போது தான் யாரும் பகுத்தறிவு பேசுவதில்லையே? ஆனால் மேலை நாட்டில் நிலைமை வேறாக இருக்கின்றது. இங்கே பெரும்பான்மை மக்கள் பகுத்தறிவு பேசுகின்றனர். ஒரு வேளை, மக்களின் வாழ்க்கை வசதி உயர்ந்தால் தானாகவே பகுத்தறிவு வரும் போலும்.

*
11. கேள்வி: தலித்தியம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இவை சரியாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளனவா? (கார்த்திக்)

பதில்: இவையெல்லாம் குறிப்பிட்ட சமூக அரசியல், கலாச்சாரம் சம்பந்தப்பட்டது. எல்லோரும் மதம், ஆல்லது ஏதாவதொரு கொள்கை, கோட்பாட்டை தேடி ஓடுகின்றார்கள். ஜனநாயகமயப்படும் சமுதாயத்தில் தவிர்க்கவியலாத விளைவுகள்.

*
12. கேள்வி: உலக அரசியலில் ஒவ்வொரு நாட்டிலும் இருட்டடிக்கப்பட்ட வரலாறு ஒன்று நிச்சயாமாக இருக்கும். இவற்றை தேடி எழுதும் நீங்கள் ஒரு சில (குறிப்பாக ஆசிய அமெரிக்க) பிரதேச நிகழ்வுகளையே எழுதுகிறீர்கள். ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க அல்லது சீன / ஜப்பானிய வரலாறுகளை நீங்கள் எழுதுவதை தவிர்ப்பது ஏன்? (ப்ரியா)

பதில்: ஒரு காலத்தில், நான் குறிப்பாக மத்திய கிழக்கு பற்றி அதிகம் எழுதுவதாக, என் மீது விமர்சனம் இருந்தது. ஒரு கட்டத்தில் அது தவிர்க்க முடியாமல் இருந்தது. ஏனெனில் நான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தது, 2000 ஆண்டுக்குப் பின்னர் தான். உலகை அடியோடு மாற்றிய 11 செப்டம்பர் 2001 நிகழ்வு, பலரின் கவனத்தை மத்திய கிழக்கு, அரபுக்கள், இஸ்லாம், பக்கம் திரும்ப வைத்தது. அதையொட்டி ஆசியா, அமெரிக்கா என்று எனது பார்வை விரிந்தது. இருப்பினும் ஆப்பிரிக்க நாடுகள் பற்றி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவை தற்போது நூலாக வந்துள்ளன. இந்த வருடம் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பற்றிய தொடரை ஆரம்பிக்க இருக்கிறேன். சீனாவை பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஜப்பான் பற்றிய ஒரு கட்டுரை விரைவில் பதிவிட இருக்கிறேன்.

*
13. கேள்வி: கருத்துச்சுதந்திரம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது. மிகுந்த கட்டுப்பாடுகள் உள்ள சீனா வளர்ச்சியடைவதற்கு இதுவும் ஒரு காரணம். ஏன் பிளவுகளை உருவாக்குகிறீர்கள்? (கோபி)

பதில்: பிளவுகள் ஏற்கனவே சமுதாயத்தில் உள்ளவை தாம். இவைகளுக்கிடையிலான முரண்பாடுகளும், போராட்டங்களும் இயற்கையானவை. எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்கும் சமூகம் உலகில் எங்குமே இல்லை. ஒருவரின் கருத்து சுதந்திரம், இன்னொருவருவருக்கு மறுக்கப்படுகின்றது என்பதே யதார்த்தம்.

*
14. கேள்வி: நீங்கள் புலம்பெயர் இலங்கையர் என்று அறியக்கிடைத்தமை மகிழ்ச்சி. கடைசியாக எபோது இலங்கை வந்தீர்கள்? இலங்கை தொடர்பாக எதிர்கால கணிப்பு என்ன? (ஜஸீபா)

பதில்: கடந்த இரு தசாப்தங்களாக தொடரும் நாடோடி வாழ்க்கை காரணமாக இலங்கை திரும்ப முடியவில்லை. வெகு விரைவில் தாயகம் திரும்பி, எனது எழுத்துக்கு உறுதுணையாக நிற்கும் அன்புள்ளங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். இலங்கையில் இதுவரை நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பார்க்கையில், அங்கே மேற்கத்திய பாணி ஜனநாயகத்திற்கு இனி இடமில்லை என்று தோன்றுகிறது.

*
15. கேள்வி: வெளிநாடுகளில் இருக்கின்ற மணமகனுக்குத்தான் மிகப்பெரும் சீதனத்தை இலங்கை தமிழ் சமூகம் வழங்குகிறது. அவர்கள் ஆதரிக்கும் கருத்தே வெற்றி பெறச்செய்யப்படுகிறது. புலம்பெயர் இலங்கையர்கள் என்ற புதிய வர்க்க பேதம் இலங்கையில் உருவாகிறது என்று கொள்ளலாமா? அது இன்னும் சமூக சீரழிவுகளை கொண்டுவராதா? (லாவண்யன்)

பதில்: இலங்கையில் ஏற்கனவே இருந்த நடுத்தர வர்க்கம், அந்த வர்க்கம் சார்ந்த நலன்கள், அந்த நலன் சார்ந்த அரசியல், புலம்பெயர் தமிழரால் விரிவடைந்துள்ளது எனலாம். அதாவது நிரந்தர வருமானம், வசதியான வாழ்க்கை, சிறப்பான எதிர்காலம் இவற்றை கொண்ட வர்க்கம். அது தன்னை திருமண சந்தையில் நல்ல விலைக்கு விற்றுக் கொள்கின்றது. இலங்கையில் வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பற்ற சூழ்நிலை போன்ற காரணங்களால் வெளிநாட்டு மோகம் கொள்வதை ஓரளவு நியாயப்படுத்தலாம். ஆனால் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு? பணக்கார நாடுகள் இலங்கையரை வர விடாமல் தடுக்க கதவுகளை மூடிக் கொள்கின்றன.

*
16. கேள்வி: வெளிநாட்டு மோகம் இலங்கையில் தலைவிரித்தாடுகிறது. புலம்பெயர்தலின் இருண்ட பக்கங்களை ஏன் வெளிக்கொணரக்கூடாது? (தினுஷா)

பதில்: எனது துறை சார்ந்த நல்ல கேள்வி. அந்தக் கடமையைத் தான் நான் இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன். எனது கட்டுரைகளையும், பதிவுகளையும் படித்தால் புரியும். எல்லாமே செல்வந்த நாடுகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை தான். சொல்வதற்கு இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வாருங்கள்.

பூச்சரம் சார்பான கேள்விகள்
* கேள்வி: Sri Lankan President invited all migrated Sri Lankan Intelectuals to return. Will you return to Sri Lanka? (Murali)

பதில்: இலங்கை மக்கள் என்னை அழைக்கும் பட்சத்தில் நிச்சயம் வருவேன். அதிகாரத்தில் இருப்பவர்களை விட, அடித்தட்டு மக்களின் அன்பான அழைப்பை அதிகம் மதிக்கிறேன்.

* கேள்வி: இலங்கை வலைப்பூ எழுத்தாளர்களை வாசிப்பது உண்டா?

பதில்: நிச்சயமாக. சமுதாய அக்கறை கொண்ட பல இலங்கைப் பதிவர்களை காணும் போது மகிழ்ச்சி உண்டாகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் இணைய வசதி படைத்தோர் தொகை அதிகம். ஆனால் தமிழில் வலைப்பூ வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணலாம். இலங்கையில் இணையப் பாவனை அதிகரித்தால் தலைசிறந்த பதிவர்கள் உருவாகுவார்கள்.


* கேள்வி: புதிய வலைப்பதிவர்களுக்கான ஆலோசனை என்ன?

பதில்: உங்கள் சுற்றாடலிலேயே நிறைய தகவல்கள் உள்ளன. சமூகப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மோப்பம் பிடியுங்கள். காரண காரியங்களை ஆராயுங்கள். அவற்றை அனைவரதும் ஆர்வத்தை தூண்டத் தக்கதாக பதிவிடுங்கள். பதிவுலகம் ஒரு மக்கள் ஊடகம்.

* கேள்வி: உங்களை பாதித்த எழுத்தாளர்கள் யார்?

பதில்: ராகுல சாங்கிருத்தையர், மார்க்சிம் கோர்க்கி. இவர்கள் தாம் எனது எழுத்துகளுக்கு வழிகாட்டிகள்.

* கேள்வி: இதுவரையில் எழுதியதன்மூலம் சாத்தித்தது அல்லது அடைவு?

பதில்: குறிப்பிட்ட ஒரு சிக்கலான பிரச்சினையை, எளிய தமிழில் அழகுற விளக்கி கூற முடியும் என செய்து காட்டியுள்ளேன். இருபது முதல் என்பது வயது வரையான, பல தரப்பட்ட வாசகர்கள் எனக்கு கிடைத்துள்ளனர். எனது அனுபவத்தில் பார்த்த பல விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளேன். இந்த அனுபவங்களை தொகுப்பதற்குள் ஒரு தலைமுறை கடந்து விட்டது. இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் எனது எழுத்துகளை ஆர்வத்துடன் வாசிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

* கேள்வி: வலைப்பூக்கள் பதிவர்களின் எழுதும் ஆர்வத்துக்கு வடிகாலாக மட்டும் இருக்கிறதா அல்லது படிப்பவர்களின் சிந்தனையை தூண்டி பயன் உள்ளதாக இருக்கின்றனவா ?

பதில்: ஆரம்பத்தில் பதிவர்களின் ஆர்வத்திற்கு வடிகாலாகத் தான் வலைப்பூக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. பின்னர் அவர்களின் எழுத்துகளால் கவரப்பட்ட வாசகர்கள் அதிகரிக்கும் போது, பதிவரின் கருத்துகள் பலரின் சிந்தனையை தூண்டுகின்றன.


http://poosaram2.blogspot.com/2010/01/blog-post_12.html
http://www.poosaram.tk

4 comments:

mrheart said...

இவ்வளவு ஏங்க, உதாரணத்துக்கு உங்க ஊர்ல ஒரு சம்பவம் நடக்கிறது மறுநாள் காலையில் அந்த செய்தியை செய்தித்தாளில் பாருங்க எவ்வளவு திரிப்பு,பொய் என்று உங்களுக்கே புரியும்.நம்ம ஊரலையே இப்படின்னா?????????.........

mrheart said...

இவ்வளவு ஏங்க, உதாரணத்துக்கு உங்க ஊர்ல ஒரு சம்பவம் நடக்கிறது மறுநாள் காலையில் அந்த செய்தியை செய்தித்தாளில் பாருங்க எவ்வளவு திரிப்பு,பொய் என்று உங்களுக்கே புரியும்.நம்ம ஊரலையே இப்படின்னா?????????.........

Unknown said...

11 செப்டம்பர் 2001 நிகழ்வு/// இந்த நிகழ்வுக்குப் பின் வர்க்க சக்திகள் இடையே மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்களே சிலர் , இதை பற்றி உங்கள் கருத்து என்ன தோழர்?

Kalaiyarasan said...

//11 செப்டம்பர் 2001 நிகழ்வு/// இந்த நிகழ்வுக்குப் பின் வர்க்க சக்திகள் இடையே மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்களே சிலர் , இதை பற்றி உங்கள் கருத்து என்ன தோழர்?//

அவர்கள் மாற்றம் என்று குறிப்பிடுவது, தேசியவாத, மதவாத உணர்வுகளைத் தான். அதற்கு முன்னர், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தேசிய-மத உணர்வுகள் இன்றைக்கு இருக்கும் அளவிற்கு தீவிரமாக இருக்கவில்லை. பலருக்கு பொருளாதார உணர்வு தான் அதிகமாக இருந்தது. அந்த நிலைமை மாற்றப் பட்டுள்ளது. அரசாங்கமே வேண்டுமென்று, தேசியவாத, மதவாத சக்திகளை வளர்த்து வருகின்றது. ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.