Wednesday, January 21, 2009

அல் கைதா என்ற ஆவி


அல்-கைதா இயக்கம் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவாக சர்வதேசத் தொடர்பு ஊடகங்களின் மகிமையால் காட்சி தருகின்றது. உண்மையில் அல்-கைதா இயக்கம் எவ்வளவு பெரியது? அதன் பலம் என்ன ? எநதெந்த நாடுகளில் செயற்படுகின்றது ? அதன் அரசியல் நோக்கம் என்ன ?

அமெரிக்காவில் ஸோல்ட் லேக் சிற்றி என்ற இடத்தில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நேரமது. ஸோல்ட் லேக் சிற்றிக்கு பின்லாடன் வந்துவிட்டதாக செய்தி அடிபட்டது. உடனேயே ஸோல்ட் லேக் சிற்றி வாழ் மக்களுக்கு "பின்லாடன் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிட்டது. பின்லாடன் காரில் போனதைப் பார்த்ததாக, உணவு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக... இப்படிப் பல தகவல்களைப் பொதுமக்கள் பொலிசுக்கு அறிவித்தனர். இப்படி வந்த நூற்றுக்கணக்கான தகவல்களைக் கேட்டு அசந்து போய்விட்டது பொலிஸ்.

11 செப்டம்பர் 2001 தாக்குதல் சம்பவத்திற்குப்பிறகு உள்நாட்டு உளவுத்துறையான FBI மாதத்திற்கொரு தாக்குதல் திட்டத்தைக் கண்டுபிடித்து அறிவித்துக்கொண்டிருந்தது. ஒருமுறை பாலங்களைத் தகர்க்கும் திட்டத்தைப் பற்றி அறிவித்தல் வரும், மறுமுறை இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தவிருப்பதாக அறிவித்தல் வரும். இந்த அறிவித்தல்களைத் தொலைக்காட்சியில் பார்த்தறியும் சாதாரண பொதுமக்கள் பயப்பீதியுடன் காலத்தைக் கடத்துவார்கள். அமெரிக்காவில்தான் அப்படியென்றால் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம் பங்கிற்கு அல்-கைதா இயக்க சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக அறிவித்துக் கொண்டிருப்பார்கள். ஐரோப்பா மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் அல்-கைதா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்தாக வந்த செய்திகளைத் தொகுத்துப்பார்த்தால், உலகில் அல்-கைதா உறுப்பினர்கள் போகாத நாடே இல்லையா என்ற எண்ணமும் வரும்.

விஷ்ணு புராணத்தில் வரும் பிரகலாதன் என்ற சிறுவன் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வான். அல்-கைதா இயக்கமும் அவ்வாறே காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவாக சர்வதேசத் தொடர்பு ஊடகங்களின் மகிமையால் காட்சி தருகின்றது. உண்மையில் அல்-கைதா இயக்கம் எவ்வளவு பெரியது? அதன் பலம் என்ன ? எநதெந்த நாடுகளில் செயற்படுகின்றது ? அதன் அரசியல் நோக்கம் என்ன ? போன்ற கேள்விகளுக்கு பலரிடம் சரியான பதில்கள் இல்லை. நியூ யோர்க் இரட்டைக்கோபுரத் தகர்ப்பு அல்-கைதாவின் வேலையா ? அப்படியானால் இன்றுவரை ஏன் எந்தவொரு ஆதாரமும் காட்டப்படவில்லை ? கண்டுபிடித்ததாக அறிவிக்கப்பட்ட தாக்குதல் திட்டங்கள் உண்மையிலேயெ நடைபெறவிருந்ததா ? பல நாடுகளிலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உண்மையிலேயே அல்-கைதா உறுப்பினர்கள் தானா ? இப்படியான கேள்விகளைக் கூட பலர் நினைத்தப் பார்ப்பதில்லை. உலகில் பத்திரிகா சுதந்திரம் பேணப்படும் இலட்சணம் இது.

றொஹான் குணரட்ண, ஒரு இலங்கையர், முன்பு இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுகையில் விடுதலைப் புலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர். இப்போது பதவியுயர்வு பெற்று ஸ்கொட்லாந்து பயங்கரவாத ஆய்வுமையத்தில் அல்-கைதா பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது "அல்-கைதாவின் உள்ளே" என்ற பெயரில் அல்-கைதாவின் ஆதியாகமம் என்று சொல்லக்கூடிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். பரபரப்பாக விற்பனையாகும் இந்தப்புத்தகத்தை ஏதாவது புதிதாக அறியவிரும்பி வாங்கி வாசிப்பவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. ஏனெனில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்த பல செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களைத் தொகுத்திருப்பதைத் தவிர வேறெந்த ஆய்வும் அதில் இல்லை. நாலாபக்கமும் இருந்து விமரிசனங்கள் வந்துள்ளன. மலேசிய அரசு வேறு இந்த நூல் தம்மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கூடிய விரைவிலேயே இந்தநூல் அமெரிக்க அரசினால் சிபாரிசு செய்யப்பட்டு பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தமாக வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்ற பேரில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட பலர், எந்தக்குற்றச்சாட்டும், விசாரணையுமின்றி சிறையிலிடப்பட்டள்ளனர். அரபு அல்லது முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுவது அதிகரித்துள்ளது. கனடா தனது நாட்டுப்பிரஜைகளை அமெரிக்காவிற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி கேட்டிருப்பது நிலைமை எவ்வளவு தூரம் மோசமாயுள்ளதென்பதைக் காட்டுகிறது. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் காணப்பட்ட நிலைமை அமெரிக்கா போன்ற முதலாம் உலக நாட்டிற்கு வந்துவிட்டதை மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஐரோப்பா அவ்வளவு மோசமாக இல்லாவிட்டாலும் கைது செய்யப்பட்ட ஒருசிலர் தான் அல்-கைதா இயக்கத்துடன் சம்பந்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. கணிசமான பிரிவினர் அல்ஜீரிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான இலக்கு பிரான்ஸ் என்பதும், அவர்களை விசாரிப்பதில் அமெரிக்கா அக்கறை காட்டவில்லையென்பதும் வேறுகதை.

குறிப்பிடத்தக்க நபராக செப்டம்பர் 11 விமானக்கடத்தற் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்தேகநபர் முக்கியமானவர்களை விட்டுவிட்டு, தன்னைப்பிடித்து விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட வேறுசிலர்மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளே இருந்தனவென்பதும், பலர் பின்னர் விடுவிக்கப்பட்டதும் பத்திரிகைகளுக்குத் "தேவையற்ற" செய்திகள். மேலும் இந்தக் குற்றவாளிகளில் பெரும்பான்மையானோர் பலநாட்டுத் தீவிரவாத அல்லது விடுதலை இயக்கங்களின் பிரதிநிதிகள் என்பதும் அவர்களது முக்கிய நோக்கம் வசதி படைத்த ஐரோப்பிய அரபுக்கள் (அல்லது முஸ்லீம்கள்) மத்தியில் வர்த்தக-சமுக நிறுவனங்கள் மூலம் பணம் வசூல் செய்வதும், ஆர்வமுடைய இளைஞர்களை சேர்த்துக் களத்திற்கு அனுப்புவதும்தான். இதைத்தவிர "ஐரோப்பிய நகரங்களைக் குறிவைக்கும் அல்-கைதாவின் திட்டங்கள்" இன்றும் நிரூபிக்கப்படவில்லை. அமெரிக்காவில் உள்ளது போன்ற "முஸ்லீம்களிற்கெதிரான அடக்குமுறை" ஐரோப்பாவில் எதிர்பார்க்க முடியாது. அதற்குக் காரணம் பூகோள அரசியல் ரீதியாக ஐரோப்பிய நலன்கள் மத்தியகிழக்குடன் பிரிக்கவியலாது பின்னிப் பிணைந்துள்ளது.

ஐரோப்பாவில் ஜிகாத்திற்கு எனச் சேர்க்கப்படும் இளைஞர்களில் பலர் வெறும் ஊர் சுற்றும் பையன்கள் அல்ல, படித்த வாலிபர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம். பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்த் போன்ற நாடுகளில் இரகசியமாக சேரும் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ அல்லது (ரஸ்ய) செச்சனியாவிற்கோ அனுப்பப்படுகின்றனர். தீவிரவாத இஸ்லாமிய இளைஞர்கள் ஜிகாத் எனப்படும் விடுதலைப்போரிற்கு தம்மை அர்ப்பணிப்பது உண்மைதான். ஆனால், வெகுஜனச் செய்தி ஊடகங்கள் காட்டும் படத்திற்கு மாறாக ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அல்ல, மத்திய ஆசியாவிலேயே மையங்கொள்கிறதென்பது பலரறியாத செய்தி. (இது குறித்து அடுத்த கட்டுரை மேலும் விபரிக்கும்) . இந்த ஜிகாத்திற்கு தயாராவது அல்-கைதா மட்டும்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அல்-கைதாவைத்தவிர பிற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளைப் பற்றி "சர்வதேசச் சமுகம்" அக்கறைப்படவில்லை.

பின்லாடனின் மீது அல்லது அல்-கைதா பற்றி மேலும் அறிய முயன்ற பத்திரிகைகளின் முயற்சிகள் அதிக வெற்றியளிக்கவில்லை, அல்லது எதிர்பாராத தடைகள் ஏற்பட்டுள்ளன. அல்-கைதாவின் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு பிரிட்டனில் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டள்ளது. லிபியாவில் இயங்கிய அல்-கைதாவின் பிரிவிற்கு பிரிட்டிஷ் உளவுத்துறை பெருமளவு பணம் வழங்கியுள்ளது. 1996 ல் லிபிய அதிபர் கடாபியை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அந்த முயற்சியில் ஈடுபட்ட அல்-கைதா உறுப்பினர்களுக்கு பிரிட்டிஷ் உளவுத்துறையுடன் தொடர்பிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை பிரஞ்சுத் தனியார் புலனாய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அதே தகவலை தற்போது பிரிட்டனில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரிட்டிஷ் உளவாளியும் கூறியுள்ளார். இந்த உளவாளியின் வழக்கு விசாரணை விபரங்கள் எந்தவொரு பத்திரிகைக்கும் கிடைக்கவிடாது தடுக்கப்பட்டன.

உண்மையில் முதன்முதல் பின்லாடனைக் கைது செய்து தருமாறு சர்வதேசப் பொலிசான ஸ்கொட்லாண்டைக் கேட்டது லிபியா, பலர் நினைப்பது போல் அமெரிக்கா அல்ல. கடாபி மீதான கொலைமுயற்சி, சதிப்புரட்சி போன்றவற்றிற்காக 1998 லேயே லிபியா இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது. ஆனால், இவையெல்லாம் இன்றுவரை உலகிற்குத் தெரியவிடாதபடி கவனமாக மூடிமறைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இப்போது பல கேள்விகள் தோன்றலாம். யார் இந்த பின்லாடன் ? அல்-கைதா ? அவர்களின் போராட்ட வழிமுறையென்ன ? இலக்கு என்ன ? எவ்வளவு தூரம் வெற்றி பெறுவார்கள்? இவற்றிற்கான விடைகாண அல்-கைதாவின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிதல் அவசியம்.

(விரைவில் இதன் இரண்டாம் பகுதி: ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம். )


முன்னைய பதிவு:
"அல்கைதா இல்லை!" ஆதாரங்களுடன் ஓர் ஆவணப்படம்

3 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

மிக அருமையான கட்டுரை நண்பரே... பா.ராகவனின் மாய வலைகள் கட்டுரையை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் உங்கள் பார்வை முற்றினும் மாறுபாட்டுடன் அமைகிறது... மேலும் ஆவளுடன் எதிர்பார்க்கிறேன்.

//மலேசிய அரசு வேறு இந்த நூல் தம்மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. //

கே.எல்.ஐ.ஏ எனப்படும் அனைத்துலக விமான நிலையம் அந்த முக்கிய நபருடைய பங்கினால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. உண்மை தெரியவில்லை.

VIKNESHWARAN ADAKKALAM said...

இது தொடர் என்பதால் தலைப்பில் எண் குறிப்பிட்டு எழுதுங்கள்... பின்னாட்களில் தேடி படிக்க சுலபமாக இருக்கும்...

Kalaiyarasan said...

ஆமாம், எனது பார்வைக் கோணம் வித்தியாசமாக இருப்பது தான், எனது கட்டுரைகளின் சிறப்பம்சம். தகவலுக்கும், ஆலோசனைக்கும் நன்றி, விக்னேஷ். இனி வரும் கட்டுரைகளில் தொடராக வருமாகில் இலக்கமிடுகிறேன். இந்தக் கட்டுரையும், இதன் இரண்டாம் பகுதியும் என்னால் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன. இருப்பினும் அது வழங்கும் தகவல்களின் அவசியம் இப்போதும் உணரப் படுகின்றது.