Friday, March 28, 2008

வெள்ளை ரஷ்யா, கடைசி சோவியத் குடியரசு


மேற்கு ஐரோப்பாவில் இருந்து ரஷ்யாவிற்கு ரயில் வண்டியில் செல்லும் பயணிகளுக்கு அது ஒரு புதிய அனுபவம் . போலந்து எல்லையை கடந்து, வெள்ளை ரஷ்ய சுங்க அதிகாரிகள் எமது கடவுச்சீட்டில் விசா முத்திரை இட்ட பின்பு, அந்த தொழில்நுட்ப அதிசயம் நடந்தது. ஜெர்மனியில் இருந்து மொஸ்கோ நோக்கி சென்ற எமது ரயில் வண்டி எல்லையை விட்டு சிறிது தூரம் வந்து ரயில்துறையின் தொழிலகம் ஒன்றினுள் நுழைந்தது. பயணிகள் அப்படியே இருக்க கூடியதாக, வண்டி மேலே தூக்கப் பட்டு அதன் சில்லுகள் அனைத்தும் கழற்றி, வேறு சில்லுகள் பூட்டப் பட்டன. ஓரிரு மனித்தியாலமே எடுத்த வேலை அது. புதிய சில்லுகளுடன் ரயில் வண்டி தொடர்ந்து தனது பயணத்தை தொடர்ந்தது. முன்னால் சோவியத் யூனியன் நாடுகள் முழுவதும், அகலமான ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் இருந்து வரும், ஒடுக்கமான ரயில் பாதையில் ஓடிய ரயில்கள், இந்த சில்லு மாற்றத்தின் பின்னர் சோவியத் பாதைகளில் ஓடலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு, அன்னிய நாட்டு படையெடுப்புகளை தாமதப் படுத்தும் நோக்கோடு தான் இவ்வாறு ரயில் பாதைகள் மாற்றப்பட்டதாக பின்னர் அறிந்தேன்.

நான் போன நேரம் குளிர்காலம் தொடங்கி விட்டிருந்தது. ரயில் போகும் பாதை எங்கும், பனிபடர்ந்த வீடுகள், மரங்கள், நிலங்கள், வெள்ளை வெளேர் என்று காட்சியளித்தன. போலந்திற்கும், ரஷ்யவிற்கும் இடையில் அமைந்திருக்கும் வெள்ளை ரஷ்ய குடியரசு, பெருமளவு நிலங்களை காடுகள் ஆக்கிரமித்திருந்தன. அந்தக் காடுகள் அந்த நாட்டின் இயற்கை காப்பரண்கள். இரண்டாம் உலகயுத்தத்தின் போது, வெள்ளை ரஷ்யா நாஸி படைகளால் வருடக் கணக்காக ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அப்போது செம்படையின் தலைமையின் கீழ் இயங்கிய கெரில்லா குழுக்கள், காடுகளில் மறைந்திருந்து, நாஸி ஜேர்மனிய படைகளின் மீது தாக்குதல் தொடுத்தனர். அவ்வாறு வீரம்செறிந்த வரலாற்றை கொண்ட வெள்ளை ரஷ்யா, இன்றைக்கும் ரஷ்யாவின் முன்னரங்க பாதுகாப்பு அரணாகவே உள்ளது. இன்று முன்னால் சோவியத் குடியரசுகள் பல, சுதந்திரமாக தமது போக்கில் நடக்கும் போது, வெள்ளை ரஷ்யாவும், ரஷ்யாவும், நெருக்கமான இராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றன. ஜனாதிபதி லூகஷேங்கோ, இந்த ஒப்பந்தத்தால் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் மிகவும் வெறுக்கப்படும் தலைவர்களில் ஒருவரகினார். தன்னை எதிர்க்கும் எதிர்கட்சிகளுக்கு தடை விதித்து, அதன் உறுப்பினர்களை சிறையில் போட்டுள்ளதால், லுகஷேங்கோ "ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி" என்றும் வர்ணிக்கப் படுகிறார். வெள்ளை ரஷ்யாவில் லுகஷேங்கோவின் சர்வாதிகாரம் இருப்பதென்னவோ உண்மை தான். ஆனால் நீங்கள் யாரோடு கதைக்கிறீர்கள் என்பதை பொறுத்து, கருத்துகள் மாறுபடுகின்றன. என்னை வரவேற்ற நண்பர்கள் குடும்பமும், தம் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாகவே கூறினார்.


மின்ஸ்க், வெள்ளை ரஷ்யாவின் தலை நகரம், நாட்டின் மத்தியில் அமைந்துள்ளது. மில்லியன் மக்கள் தொகையை கொண்ட மிகப் பெரிய நகரமும் அது தான். மின்ஸ்க் நகரம் ரயில் நிலையத்தில் என்னை வரவேற்ற நண்பர்கள், தொடர்ந்து சுரங்க ரயில் மூலம், நான் தங்கவிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். சுரங்க ரயில் நிலையத்தை பார்த்த நான் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் நின்றேன். அது போன்ற அழகான ரயில் நிலையத்தை "பணக்கார" மேற்கு ஐரோப்பிய நகரமொன்றில் காணவே முடியாது. அதனை ரயில் நிலையம் என்று சொல்ல முடியாது. அது ஒரு அழகிய சுவரோவியங்களால், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர மாளிகை. மின்ஸ்க் நகரத்தின் முக்கிய சுரங்க ரயில் நிலையங்கள் அனைத்தும் இவ்வாறு கலை நயத்துடன் கட்டப் பட்ட மாளிகைகள் தான். அன்றாடம் போக்குவரத்து செய்யும் சாதரண மக்களை மன்னர்களாக கருதி முன்னால் சோவியத் யூனியன் கட்டிக் கொடுத்திருக்கிறது. இது மட்டுமல்ல மின்ஸ்க் நகரம் தலைமை தபால் அலுவலகமும் மக்களுக்காக கட்டப்பட்ட மாளிகை தான்.

நகர எல்லையில், அடுக்குமாடி குடியிருப்புகள் தொடங்கும் புற நகர் பகுதியில் அமைந்திருந்தது, "இன்டூரிஸ்ட்" ஹோட்டல். வழக்கமான ஹோடேலுக்கு தேவையான அனைத்து அம்சங்களுடன் இருந்தாலும், மேற்கத்திய பாணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றை எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் அறை வாடகை, மேற்கத்திய விலையுடன் ஒப்பிடும் போது, அதிகமில்லை. அங்கேயே ஒரு உணவு விடுதியும் உள்ளதால், வசதியாக போய் விட்டது. இல்லாவிட்டால் தினசரி உணவுக்காக வெளியே போக வேண்டியிருந்திருக்கும். தினசரி மாலை வேளைகளில் அந்த ஹோடேலில், இன்னிசை நிகழ்ச்சியும், நடனமும் நடைபெறும். அங்கு வரும் இளைஞர், யுவதிகளுடன் தொடர்பு கொள்ள தடையாக இருப்பது, மொழிப் பிரச்சினை. "pa ruski?"(ரஸ்யன் மொழி தெரியுமா?) எனக்கு தெரிந்ததெல்லாம் : "ya nie poni mayoo!"( எனக்கு தெரியாது) அமாம், வெள்ளை ரஷ்ய மக்கள் பெரும்பாலும் ரஷ்ய மொழி மட்டுமே பேசுவார்கள். இந்த மொழிப் பிரச்சினை, நான் அந்த நாட்டில் பயணம் செய்த எல்லா இடத்திலும் இருந்தது.
அடுத்த நாள் புறநகர் பகுதியில் இருக்கும் நண்பர்களின் குடும்பத்தின் வீட்டிற்கு விருந்தினராக அழைத்திருந்தனர். அவர்கள் வசித்து வந்தது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. திரும்பும் இடம் எங்கும் ஒரே மாதிரி காட்சியளித்த அந்த காங்க்ரீட் கட்டிடங்களை பற்றி மேற்கு ஐரோப்பாவில் பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதாக கேலி பண்ணுவார்கள். அனால் அன்றைய சோவியத் சோஷலிச பொருளாதார திட்டத்தின் படி, சேரிக் குடிசைகளில் வாழும் மக்களுக்கு கூட, அனைத்து வசதிகளுடன் கூடி வீடுகளை, குறுகிய காலத்தில் கட்டிக் கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப் பட்ட வீட்டுத் திட்டங்கள் அவை. அன்றைய சோவியத் அரசாங்கம், அழகை விட அவசியத்தை கருத்தில் எடுத்து செயற்பட்டது. அதே நேரம், மேற்கு ஐரோப்பாவில் அழகை காட்டி அதிக வாடகை அறவிடுகின்றன, ரியல் எஸ்டேட் கம்பெனிகள்.

நான் சென்ற நண்பர்களின் வீடு மிக சிறியது . அந்த பத்து மாடி கட்டிட வீடுகள் அனைத்துக்கும் பாரம்தூக்கி, வெப்பமூட்டும் சாதனங்கள் ஆகிய அனைத்து நவீன வசதிகளையும் கொண்டது. ஒரு வரவேற்பறை, சமையலறை, குளியலறை, இரண்டு படுக்கை அறைகள் கொண்ட மாடி வீட்டில்; ஒரு தொழிற்சாலையில் பொறியியலாளராக கடமையாற்றும் வயதான அப்பா, வீட்டை பராமரிக்கும் அம்மா, விற்பனைப்பணிப்பெண்களாக வேலை செய்யும் இரண்டு மகள் மார், என்று ஒரு சிறிய குடும்பம், அந்த சிறிய வீட்டில் வசதியாக வாழ்ந்து வருகின்றது. சோஷலிசம் இருந்த காலத்தில், அந்த குடும்பத்தலைவர் பெற்ற சம்பளம் அதிகம் (குறைந்தது 800 டாலர்கள்), வீட்டு வாடகை மிக மிக குறைவு. தற்போது முதலாளித்துவ சீர்திருத்தம் வந்த பின்பு, எடுக்கும் சம்பளமும் வாடகையும் ஒரே அளவாகி விட்டது. அதாவது மாத வருமானம் 60 டாலராக குறைய, வாடகை 50 டாலராக உயர்ந்து விட்டது. பெண்பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டு கம்பெனி ஒன்றின் விற்பனை நிலையத்தில் எடுக்கும் சம்பளம் அதிகம் என்பதால் அவர்களின் வாழ்க்கை வளமாக உள்ளது. கோடை காலத்தில் விடுமுறையை கழிக்க மின்ஸ்க் வாசிகள், கிராமப்புறத்தில் "டாஷா" எனப்படும் இன்னொரு வீடு வைத்திருக்கின்றனர். அமைதியான சூழலில் பொழுதை கழிப்பதுடன், தோட்டம் செய்து, அதில் விளையும் காய்கனிகளை சமைத்து சாப்பிடுவதில் இருக்கும் திருப்தி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரம். ரஷ்ய மக்கள் விருந்தோம்பலில் சளைத்தவர்கள் இல்லை. நான் போன போது விதம் விதமான உணவுகளை ஆக்கி வைத்திருந்தனர். ரஷ்யர்கள் யாரையும் இலகுவில் நண்பர்ளாக்கி கொள்வார்கள் என்பதை ரயில் பயணத்தின் போதே பார்த்தேன். பயணத்தின் போது மட்டுமே சந்தித்த நபர்களுடன் சேர்ந்து உணவுண்ண , மது அருந்த அழைப்பார்கள்.

மின்ஸ்க் நகர தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த நேரம் போலிஸ் மட்டும் இருந்திட்டு வந்து பாஸ்போர்ட் வாங்கி பார்த்து விட்டு தந்தனர். வித்தியாசமான தோல் நிறத்தில் ஒன்று போவது அவர்களின் கண்களில் பட்டிருக்கலாம். இருந்தாலும் பொது மக்கள் யாரும் அதிசயமாக வேற்று கிரகத்து பிராணி போல உற்று பார்க்கவில்லை. மின்ஸ்க் நகரத்தின் அரசாங்க கட்டிடங்கள் யாவும் பிரமாண்டமாக, ரோமானிய கட்டிடக் கலையின் சாயல் தெரிந்தது. மக்கள் பொழுதை உல்லாசமாக கழிக்க வரும் "கோர்க்கி பூங்கா" நகர மத்தியில், பெரும் விஸ்தீரணத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் நடுவில், உலகப்புகழ் பெற்ற கவிஞர் கோர்கியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. அதன் ஒரு பக்கத்தில் பாராளுமன்றம், மற்றும் அமைச்சு அலுவலகங்கள் உள்ளன. வீதிகள் அனைத்தும் மிக அகலமானவை. ஆனால் வாகன நெரிசல் இல்லை. அங்கே நகரின் முக்கிய இடங்களை தவிர பிற இடங்களில் வாகனம் நிறுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. நிறுத்துமிட வரி கூட அறவிடப்படுவதில்லை. நிச்சயமாக மேற்கு ஐரோப்பிய நகர காரோட்டிகள், இந்த வசதிகளைப் பார்த்து பொறாமைப் படுவார்கள். பொது போக்குவரத்து பற்றி குறிப்பிட நிறைய உண்டு. அதி வேகம் கொண்ட சுரங்க ரயில்கள் சரியான நேரத்திற்கு, ஐந்து நிமிடத்திற்கு ஒன்று வந்து கொண்டே இருக்கும். பிரயாண சீட்டு நம்ப முடியாத அளவிற்கு மலிவு. பத்து சதம் (டாலர்) மட்டுமே! வீதிகளில் ஓடும் பேருந்து வண்டிகள், நவீனமாக இல்லது விட்டாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
மின்ஸ்க் நகரத்தில் "போல்ஷோய்" தியேட்டர், அந்நகர மக்களின் வாழ்வோடு பின்னிப் பினைந்தது. ரஷ்ய மக்களுக்கு நடன நாடகங்கள் என்றால் உயிர். நாட்டிய நடகங்களுக்காக கட்டப்பட்ட பிரமாண்டமான கலைக்கூடம் தன் போல்ஷோய் தியேட்டர். அங்கே நடக்கும் "ஸ்பர்டகஸ்" நாட்டிய நாடகம் மிகப் பிரபலமானது. மின்ஸ்க் நகரில் நிறைய அருங்காட்சியகங்கள் இருந்தாலும், "மாபெரும் தேசாபிமான போர்" என்று அழைக்கப்படும் , இரண்டாம் உலகப் போர் பற்றியது பார்க்க தவிர்க்க முடியாதது. போரின் போது இறந்த வெள்ளை ரஷ்ய மக்களின் தொகை மாற்ற நாடுகளை விட அதிகம். அதனை மறக்காமல் அடுத்த சந்ததிக்கும் சொல்லும் விதத்தில் அந்த அருங்காட்சியகம் உள்ளது. நாஸி ஜேர்மனிய படைகள் படையெடுத்த காலத்தில் இருந்து தொடங்குகிறது. நாஸி படைகளின் கொடூரங்கள், அவர்களை எதிர்த்த விடுதலைப் போராளிகளின் தாக்குதல் முறைகள், பாவித்த ஆயுதங்கள், ஆகியன நேரே பார்ப்பது போல காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. எதிரிப்படைகள் மீது போர்விமானம் கொண்டு போய் மோதிய, தற்கொலை விமானமோட்டியும் அங்கே நினைவு கூறப் பட்டுள்ளார். இரண்டாவது உலக யுத்தத்தின் போது, வெள்ளை ரஷ்ய மக்கள் ஜேர்மனிய படைகளிடம் அனுபவித்த இன்னல்கள், பின்னர் அவர்கள் தாமாகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து செம்படைக்கு பின்னால் அணிதிரள வைத்தது. இதனால் சோவியத் யூனியனில் நம்பிக்கைக்குரிய, விசுவாசமான குடியரசாக வெள்ளை ரஷ்யா திகழ்ந்தது. அதற்கு வெகுமதியாக ஐக்கிய நாடுகள் சபையில், வெள்ளை ரஷ்யா தனியான குடியரசாக பதிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
சோவியத் யூனியன் மீதான விசுவாசம் இன்று வரை நீடிக்கிறது. சோஷலிச பொருளாதார கட்டுமானங்களான "கொள்கோஸ்" எனப்படும் கூட்டுறவு பண்ணைகள் இன்றும் வெள்ளை ரஷ்யா முழுவதும் உள்ளன. இன்றைய ஜனாதிபதி லுகஷேங்கோ கூட முன்பு கூட்டுறவு பண்ணை நிர்வாகியாக இருந்தவர் தான். அவருக்கு கிடைக்கும் வாக்குகள், அல்லது மக்கள் ஆதரவு பெரும்பாலும் கிராமம் சார்ந்தது. அது மட்டுமல்ல, கடந்த தசாப்தங்களாக முன்னால் சோவியத் குடியரசுகள் அனைத்தும், பொருளாதார பின்னடைவு காரணமாக வயதானவர்களின் ஓய்வூதியத்தை வழங்க மறுத்த அல்லது தவறிய காலகட்டத்தில், வெள்ளை ரஷ்ய மாதம் தவறாமல் அதை கொடுத்து வந்தது. என்னதான் தற்போது சம்பளம், ஓய்வூதிய தொகை என்பன முன்னை விட பல மடங்கு குறைந்திருந்தாலும், அது எல்லோருக்கும் மாதம் தவறாமல் கிடைத்து வருகின்றது. அனைத்து தொழிலகங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஒரு காலத்தில் சிறந்த சோவியத் உழவு இயந்திரங்கள் யாவும் வெள்ளை ரஷ்ய தொழிற்சாலைகளில் தான் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது கணணி மென்பொருள் தயாரிப்பில் முன்னணி வகிக்கின்றது.
"அதோ பார், சர்வாதிகாரம்" என்று வசை பாடுபவர்கள் யாரும், இது போன்ற நன்மைகளை கண்டு கொள்வதில்லை. அங்கே சோவியத் கால நினைவு சின்னங்கள் , லெனின் சிலைகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. தேசியக்கொடி கூட பழைய சோவியத் கொடியை நினைவு படுத்துகின்றது. சோவியத் கால உளவுத்துறையான கே.ஜி.பி. இன்றும் இயங்கி வருகின்றது. சோஷலிச பொருளாதாரம் பெருமளவு மாற்றாமல், அப்படியே இருக்க விட்டு, ஒரு சில முதலாளித்துவ சீர்திருத்தங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளன. மேற்குலகத்தை பொறுத்த வரை, இந்த சீர்திருத்தங்கள் போதாது. லுகஷேங்கோவை விரட்டி விட்டு, தமது ஆளைப் போட்டு னைத்தையும் தனியார்மயமாக்க ஆசைப்படுகின்றனர். ரஷ்யாவிற்கும், வெள்ளை ரஷ்யாவிற்கும், இடையிலான நெருங்கிய உறவு, இந்த ஆசை நிறைவேறுவதை தடுக்கின்றது. கடந்த பதினேழு ஆண்டுகளாக இழவு காத்த கிளிகளாக காத்திருந்த மேற்குலக நாடுகள், தமது எண்ணம் நிறைவேறாததால், "சர்வாதிகாரம், அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள்..." என்று கத்தி கூப்பாடு போட்டு ஊரை கூட்டுகின்றன.


_________________________________________________________

கலையகம்

No comments: