Tuesday, May 12, 2009

மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி


"இறைவனின் இல்லங்கள் யாவும் மனிதர்களாலேயே நடத்தப்படுகின்றன. அவர்கள் குர் ஆன் வாசகங்களை கொண்டு பயத்தை விதைக்கிறார்கள்... உலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு. ஒன்று, மதத்தை பின்பற்றும் அறிவில்லாதவர்கள். இரண்டு, எந்த மதத்தையும் பின்பற்றாத அறிவாளிகள்." - அபு அலா அல் மா அரி (11 ம் நூற்றாண்டில் பாக்தாத்தில் வாழ்ந்த அரபுதத்துவஞானி)

அண்மைக்காலமாக உலகில் அதிகமானோர் பாவிக்கும் சொற்பதங்களில் ஒன்று: "மத அடிப்படைவாதம்". பலருக்கு இதன் சரியான அர்த்தம் தெரிவதில்லை. அர்த்தம் தெரிந்தவர்கள் தமது அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் இது மதம் சார்ந்த மொழிப் பிரயோகமாகவன்றி, அரசியல் சார்ந்தமொழிப் பிரயோகமாக காணப்படுகின்றது. புதிய உலக ஒழுங்கின் புதிய எதிரிகளான இஸ்லாமியரை குறித்து, எதிர்மறையான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்ற சொற்பிரயோகம், இது இஸ்லாமியருக்கு மட்டுமே உரிய சிறப்படையாளம் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. உண்மையில் மத அடிப்படைவாதம் என்றால் என்ன? என்றதெளிவான புரிதல், யார் மத அடிப்படைவாதிகள் என முடிவு செய்யவும் உதவியாக இருக்கும். மேலும் மதத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஒற்றுமைகள் என்னென்ன என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.

உலகில் மத அடிப்படைவாத போக்குகள் 20 ம் நூற்றாண்டில் இருந்தே தெரியஆரம்பிக்கின்றன. அதற்கு முன்பு இருந்த மதங்களின் ஆட்சி அமைப்பும், நமதுகால மத அடிப்படைவாதத்தையும் ஒன்றோ என போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. மனித நாகரிக வளர்ச்சியில் மதங்கள் வகித்த பாத்திரம் முக்கியமானது. ஆரம்பத்தில் ஆன்மீக இயக்கமாக தொடங்கிய மதங்கள், பின்னர் அரசு நிறுவனமாக வளர்ந்து, தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டன. பிற்காலத்தில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய சித்தாந்தம் லிபரலிசம். அது வர்த்தகர்கள், மத்தியதர வர்க்கம் ஆகியோரது சித்தாந்தமாக செல்வாக்குப் பெற்றபோது, கிறிஸ்தவ மதத்தின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. சமூகத்தில் தேவாலயம் வகித்த பாத்திரத்தை பாராளுமன்றமும், மதகுருக்களின் பாத்திரத்தை அரச அதிகாரிகளும், பைபிளை அரசியல் நிர்ணய சட்டமும் மாற்றிக் கொண்டன. பிரபலமான பிரெஞ்சுப்புரட்சி இந்த மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது.

ஒரு காலத்தில் மேற்கு ஐரோப்பா முழுவதையும், ஆட்சி செய்த கத்தோலிக்க மதத்தின் தலைமைப்பீடமான வத்திக்கான் மாற்றங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. பாப்பரசர் "பைபிள் ஆய்வுக் குழு" வை நிறுவினார். இந்தக் குழு, பைபிளில் நடந்தவைகள் உண்மையாக நடந்த சம்பவங்கள் என அறிக்கை சமர்ப்பித்தது. அனைத்து கத்தோலிக்க மதகுருக்களும் இதை ஏற்றுக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்யும் படி பணிக்கப் பட்டனர். இவ்வியக்கமானது "
intégrisme"  என அழைக்கப்பட்டது. இன்றும் கூட மத அடிப்படைவாதிகளை குறிக்க பிரெஞ்சு மொழியில் இந்தச் சொல் (intégrisme) பயன்படுத்தப் படுகின்றது. ஐரோப்பா மீண்டும் கிரிஸ்தவ மயமாக்கப்பட வேண்டும் என்பதே இவ்வியக்கத்தின் குறிக்கோள்.

கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த, ஆனால் பைபிளை ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர், புரட்டஸ்தாந்துக்காரர் என அழைக்கப்படலாயினர். இவர்கள் பைபிளில் எழுதி உள்ளதின் படி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவனின் கடமை என நம்பினர். இவர்கள் பெருமளவில் புதிய கண்டமான அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கே தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். அவர்கள் பைபிள் நெறிகளின் படி அமைந்த வாழ்க்கை முறையை தமது குடியிருப்புகளில் நடைமுறைப்படுத்தினர். ஆனால் அவர்களின் எதிரி "நவீனமயமாக்கல்" வடிவில் வந்தது. நவீனமயமாக்கல் தமது மத நெறிகளை சீர்குலைத்து விடும் என அஞ்சியகடும்போக்காளர்கள், மத நம்பிக்கையை மீட்பதற்காக இயக்கம் ஆரம்பித்தனர். 1910 க்கும் 1915 க்கும் இடைப்பட்ட காலத்தில், "The Fundamentals" என்ற பெயரில் துண்டுபிரசுர பிரச்சாரம் செய்தனர். "ஒரு மத அடிப்படைவாதி, மத நம்பிக்கையின்அடிப்படைகளுக்காக போராடத் தயாராக இருக்க வேண்டும். பைபிளில் எழுதிஉள்ளதின் மூலம் வாழ்வதன் மூலமே நம்பிக்கையை மீட்க முடியும்." இவ்வாறு அந்தப் பிரசுரங்களில் இருந்தது.

இந்த புதிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் தம்மை "மத அடிப்படைவாதிகள்" எனஅழைத்துக் கொண்டனர். இதனால் புரட்டஸ்தாந்து கடும்போக்காளரை குறிக்கவே மத அடிப்படிவாதம் என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிலர் வாதாடுகின்றனர். இன்றும் கூட அமெரிக்காவில் பல பகுதிகளில் பைபிள் நெறிகளுக்கு அமைய வாழும் கிராமங்கள் பல உள்ளன. அவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி போன்ற நவீன பாவனைப் பொருட்களை காண முடியாது. இன்றும் போக்குவரத்திற்கு குதிரை வண்டிகளை பயன்படுத்துகின்றனர். சில சமூகங்களில் பல தார மணமுறை கூட நிலவுகின்றது. பெண்கள் பொதுவாக உடலை மூடும் ஆடை அணிய வேண்டும். கிராமத்தினுள் மதுபானம் கொண்டுவர முடியாது. சுருக்கமாக சொன்னால், ஆப்கானிஸ்தானில் தாலிபான் கொண்டுவந்த மதக் கட்டுபாடுகள் பல அந்த அமெரிக்க கிராமங்களில் நடைமுறையில் உள்ளன.

மத அடிப்படைவாதம் அமெரிக்காவில் தோன்றினாலும், அது ஐரோப்பாவில்ஏற்பட்ட நவீனமயமாக்கலின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று. பிரெஞ்சுப்புரட்சி முன்மொழிந்த பகுத்தறிவுவாதம், மற்றும் டார்வின், கார்ல் மார்க்ஸ்ஆகியோர் கடவுளை மறுத்து மனிதனை முன்னிறுத்தினர். இது கிறிஸ்தவ மதத்தை கடுமையாக பாதித்தது. மேலும் நவீன உலகில் லிபரலிசம் தோற்றுவித்தசுதந்திரவாதப் போக்கால் ஏற்படும் தீயவிளைவுகளை காட்டி; இவையெல்லாம் மத நம்பிக்கைக் குறைவால் ஏற்படுகின்றது என பிரச்சாரம் செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு உறுப்பினர்களை கொண்ட, கிறிஸ்தவ மதஅடிப்படைவாதக் கட்சிகள் இன்றும் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் சில மத அடிப்படைவாதக் குழுக்கள் இரகசியமாக ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஒருமுறை FBI இது போன்ற மத நிறுவனம் ஒன்றை முற்றுகை இட்டு, ஆயுதபாணிகளுடன் துப்பாக்கிச் சமருக்கு பின்னரே உள் நுழைய முடிந்தது. ஒக்லஹோமா நகரில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் கிறிஸ்தவ மத அடிப்படைவாத குழு ஒன்றே காரணம். "கூ கிளாஸ் கான்" போன்ற வெள்ளைநிறவாத அமைப்பை சேர்ந்தவர்களும் மத அடிப்படைவாதிகளாக உள்ளனர்.

தேசியவாதம், பாசிசம் போன்றன ஐரோப்பாவில் தோன்றி இருப்பினும், பின்னர்உலகில் பிற கண்டங்களில் காணப்பட்ட, இதே கொள்கைகளை கொண்ட அரசியல் இயக்கங்களையும் குறிக்க பயன்பட்டன. அதே போல மத அடிப்படைவாதம் என்ற சொல், கிறிஸ்தவ மதத்தில் தோன்றி இருந்த போதிலும், பின்னர் பிற மதங்களில் இதே கொள்கை கொண்டவர்களை குறிப்பிட பயன்பட்டது. பல ஐரோப்பிய கருத்தியல்கள் உலகம் முழுவதும் பரவியதற்கு, காலனிய காலகட்டமும் ஒரு காரணம். காலனிய ஆட்சியாளர்கள் தாம் ஆண்ட நாடுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு அரச மதம் என்ற ஸ்தானத்தை கொடுத்து வைத்திருந்தனர். உள்ளூர் மதங்கள் மறுமலர்ச்சி என்ற பெயரில் தம்மைமறுசீரமைத்துக் கொண்டன. இந்த மறுமலர்ச்சிக் காலத்தில், இலங்கையில் பௌத்த மதமும், இந்தியாவில் இந்து மதமும், எகிப்தில் இஸ்லாமிய மதமும்தம்மை மறுசீரமைத்துக் கொண்டன. அனைத்து மத அடிப்படைவாதிகளும் அவர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், சொல்லும் கருத்துகள் ஒன்றாக இருப்பதை உற்றுக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். அனைவரும் மதத்தின் பெயரால் கடவுளின் (ஜனநாயகமற்ற) ராஜ்யத்தை அமைக்க விரும்பிகின்றனர். அதற்காக வன்முறையை பின்பற்ற தயங்காதவர்களாகவும், வேறு மதங்களின் மீது வெறுப்பு காட்டுபவர்களாகவும் உள்ளனர். இனி இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.


(தொடரும்)

Thursday, May 07, 2009

வங்கத்தில் மையங்கொள்ளும் அரசியல் புயல்


பங்களாதேஷ்: முன்னர் கிழக்குப் பாகிஸ்தான், பின்னர் சுதந்திர பங்களாதேஷ். இப்போது நாம் காணும் வங்காளதேசம் முன்னர் எப்போதும் தற்போதைய எல்லைகளுடன் சுதந்திர நாடாக இருந்ததில்லை. பண்டையகால வரலாற்றின்படி பௌத்த வங்காளமாக, அசோகச் சக்கரவர்த்தியின் மௌரியச் சாம்ராஜ்ஜியமாக இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால், தற்கால எல்லைகள், எழுபதுகளில் ஏற்பட்ட இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்டன என்பதும் மறுக்கவியலாத உண்மை. இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்ட புதிய வங்காளம் பற்றி தற்போது புதிய தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. முப்பது வருடங்களுக்கு முந்தைய இரகசிய பிரித்தானிய ஆவணங்கள் இந்தப் புதிய தகவல்களைத் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி வங்க தேசத்தில்தான் ஆரம்பமாகியது. 19 ம் நூற்றாண்டின் இறுதியில், கல்கத்தாவிலிருந்து தமது காலனிய ஆட்சியைத் தொடங்கிய பிரிட்டிஷார், அங்கு ஏற்பட்ட இந்து முஸ்லீம் கலவரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். இதன் விளைவுதான் பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களின் தோற்றம்.

இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் மறு மூலையிலிருந்த வங்க தேசத்தைக் கிழக்குப் பாகிஸ்தான் என அழைத்தது. உருது (ஹிந்தி) மொழியைத் தேசிய மொழியாக்கிய போதுதான் வந்தது பிரச்சினை. கிழக்குப் பாகிஸ்தானில் யாரும் இம்மொழியைப் பேசுவதில்லை. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட மாணவர் கிளர்ச்சியை பாகிஸ்தானிய இராணுவம் வன்முறையைப் பிரயோகித்து அடக்கியது. தொடர்ந்து இனத்தால், மொழியால் வேறுபட்ட (மேற்குப்) பாகிஸ்தானிய இராணுவம் கட்டற்ற அடக்குமுறையை ஏவிவிட்டது. வங்காளப் புத்திஜீவிகள், இந்துக்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டனர். பெருமளவில் பெண்கள் பாலியற் பலாத்காரத்திற்குட்பட்டனர். இதுகூட வங்கத்தில் இனவிகிதாசாரத்தை மாற்ற முனைந்த செயலா எனச் சந்தேகிக்கப்பட்டது.

பெருமளவு அகதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும் , "முக்தி வாஹினி" (விடுதலைப் போராளிகள்) கெரில்லாப் போராளிகளுக்கு இந்திய அரசு ஆயுதப்பயிற்சியளித்து அனுப்பியதும் நிலைமையை மோசமாக்கியது. இதற்கிடையே தனிநாட்டுப் பிரிவினை கோரிய முஜிபுர் ரஹ்மானின் கட்சி பெருமளவு வாக்குகளைப் பெற்றமை, அந்நாட்டு மக்களின் தேசிய உணர்வை வெளிக்காட்டியது. இறுதியில் இந்திய இராணுவம் படையெடுத்துப் பாகிஸ்தானிய இராணுவத்துடன் சண்டையிட்டு பங்களாதேஷ் என்ற தேசத்தை உருவாக்கியது. இதன்போது நடந்த ஒரு சுவையான சம்பவம் போரின் முடிவாகக் கூறப்படுகிறது. கிழக்குப் பாகிஸ்தானில் பல இடங்களைக் கைப்பற்றிய இந்தியப் படையின் கொமாண்டர் தன்னோடு ஒரே பாடசாலையில் கல்விகற்ற பாகிஸ்தானிய கொமாண்டரிடம் அறிவித்ததாவது: "விளையாட்டு முடிந்துவிட்டது. உனது ஆட்களைச் சரணடையச் சொல்" .

அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் அறிக்கைகள், வங்கதேச விடுதலைக்கு அன்றைய சர்வதேச அரசியல் நிலைகளும் காரணம் எனக்கூறுகின்றன. பிரிட்டனுக்கு விஜயம் செய்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தான் சீனாவுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டதாலும், அமெரிக்கா சீனாவுடன் ராஜதந்திர உறவை ஏற்படுத்தியதாலும்தான் தான் சோவியத் யூனியனுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம், அன்று பாகிஸ்தானை ஆட்சி செய்த இராணுவத் தளபதி யாஹியா கான் கூட பிரிட்டிஷாரின் ஆதரவைத் தேடியுள்ளார். கிழக்குப் பாகிஸ்தான் எல்லையருகில் இந்தியா படைகளைக் குவித்தமை மோதல் நிலையைத் தோற்றுவித்ததாகக் கூறியுள்ளார்.

அமெரிக்கா அப்போது ஏற்பட்ட பதட்ட நிலையையிட்டு கவலையடைந்தது. இந்தியா வங்கதேச விடுதலையுடன் நிற்காது (மேற்கு) பாகிஸ்தான் மீதும் படையெடுத்துக் குழப்பத்தையுருவாக்குமென எதிர்பார்த்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் சோவியத் யூனியனுடன் தொடர்பு கொண்டு இந்தியா அவ்வாறு செய்யாதவாறு பார்த்துக் கொண்டனர். ஆயினும் நிலைமை கட்டுமீறிப் போகுமானால் நடவடிக்கை எடுக்க அமெரிக்கக் கடற்படை வங்காள விரிகுடாவிற்கு அனுப்பப்பட்டது (பாகிஸ்தான் இராணுவத்தை வெளியேற்றும் சாட்டில்). இருப்பினும் பங்களாதேஷ் சுதந்திர நாடாகியதுடன் பிரச்சினை தீர்ந்தது.

வங்காளிகள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தபோதும் மொழிப்பிரச்சினையின் அடிப்படையில்தான் பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஈரான் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த முஸ்லீம்களின் படையெடுப்புகளின் பின்னர்தான் பல இந்தியர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவினர். இருப்பினும் பாகிஸ்தானில் மதம் மாறிய உயர்சாதி இந்துக்களைப் போலல்லாது, பங்களாதேஷில் விவசாயிகளாகவிருந்த தலித் இந்துக்கள் முஸ்லீம்களாக மாறியமை குறிப்பிடத்தக்கது. புராதன இந்து மதமெனச் சொல்லக்கூடிய காளி, விஷ்ணு வழிபாட்டைப்பேணிய வங்காளிகள், (அசோகனின்) மௌரியர் காலத்தில் பௌத்தர்களாகவும், கடைசியில் முஸ்லீம்களாகவும் மாறியமை தனியான வரலாறு. இந்து வங்காளிகள் இந்தியாவின் ஒரு மாநிலமான மேற்கு வங்காளத்தில் வாழ்கின்றனர்.

சந்தேகத்திற்கிடமின்றி பங்களாதேஷ் மொழிவாரியான தேசியவாதிகளால்தான் உருவானது. இருப்பினும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் "தூய்மையான நாட்டிற்கு" (பாகிஸ்தான் எனும் பதத்தின் மொழிபெயர்ப்பு) எதிரான போராட்டம் இஸ்லாமிற்கு எதிரான போராட்டமாகக் கருதப்பட்டது. இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அன்று பாகிஸ்தானிய இராணுவத்துடன் ஒத்துழைத்தனர். இரத்தம் சிந்திப் போராடியதன் காரணமாக வங்காள தேசியவாதிகாக வாழும் பெரும்பான்மை பங்களாதேஷ் மக்கள் சுதந்திரப் போக்குடைய முஸ்லீம்களாகவே இன்றுவரையிருந்து வருகின்றனர். இதனால் மதவாத ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி (பாகிஸ்தானியக் கட்சியின் கிளை) அதிக ஆதரவாளர்களைத் திரட்டமுடியாமல் போனது. பங்களாதேஷ் உலகின் வறுமையான நாடுகளில் ஒன்று. ஏழைகளான பெரும்பான்மையான வங்காளிகள் மத்தியில் மாவோயிஸ்ட்டுகள் (அண்டைய இந்திய வங்காள மாநில நக்ஸலைட்டுகளின் போராட்டத்தால் உந்தப்பட்டவர்கள்) கடந்த காலத்தில் உருவானார்கள். இருப்பினும், அரச அடக்குமுறைகாரணமாக பெருமளவு உறுப்பினர்கள் கைது செய்யப்பட, மாவோயிஸ்ட்டுகள் தமது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டனர்.

இன்றைய மாறிவரும் சர்வதேச அரசியற் சூழ்நிலை பங்களாதேஷிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கெதிரான போர் பொதுவாக முஸ்லீம்களுக் கெதிரானதெனக் கருதப்படுவதால், ஜமாத்-ஏ-இஸ்லாமி போன்ற மத அடிப்படைவாதக் கட்சிகள் தமது ஆதரவுத் தளத்தை அதிகரித்துவருகின்றன. இந்தக் கட்சி கடந்த காலத்தில் பல வங்காளத் தொண்டர்களைத்திரட்டி ஆப்கானிஸ்தானில் தலிபானிடம் இராணுவப் பயிற்சி பெற அனுப்பியதாகவும், அவ்வாறு சென்ற போராளிகளுக்கு ஆளுக்கு 525 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்தைய நாடுகளைப் பொறுத்தவரை இந்தக் கட்சி பின்லாடனின் அல்-கைதாவுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றது.

ஆப்கானிஸ்தான் சென்ற சி.என்.என் நிருபர்கள் தேடி எடுத்த வீடியோப் பிரதிகளில் ஒன்று பங்களாதேஷில் ஆயுதப் பயிற்சிபெறும் பர்மிய விடுதலை இயக்கமொன்றைப் பற்றியிருந்தது. பர்மாவில் பங்களாதேஷ் எல்லையோர மாநிலமான ராகினில் வாழும் ரொஹிங்கியா முஸ்லீம்கள் தனிநாடு கோரிப்போராடி வருகின்றனர். இந்த ரொஹிங்கியா முஸ்லீம்கள் இனத்தால் மொழியால் வங்காளிகள். பர்மிய அரசின் அடக்குமறை காரணமாக ஆயிரக்கணக்கான அகதிகள் பங்களாதேஷினுள் தஞ்சம் புகுந்திருந்தனர். இந்த நாடற்ற மக்கள் மத்தியலிருந்து இஸ்லாமியத் தீவிரவாதக் கட்சிகள் ஆட்களைத்திரட்டி வருகின்றனர். கடந்த வருடம் பங்களாதேஷினுள் ஒரு இரகசியத் தளத்தில் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளின் மகாநாடு இடம்பெற்றது. தமது செயற்பாடுகளின் ஆரம்பக் கட்டமாக அயல்நாட்டு விடுதலை இயக்கங்களான ரொஹிங்கியா ஒருங்கிணைப்புக்குழு(பர்மா) அஸாமிய முஸ்லீம் விடுதலைப் புலிகள்( இந்தியா) ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இரகசியப் பயிற்சி முகாங்களில் முன்னாள் ஆப்கானிஸ்தான் போராளிகள் புதிய உறுப்பினர்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றனர்.

இந்திய எல்லைப் பாதுகாவற்படை அதிகாரிகள் பங்களாதேஷ் எல்லைப் பாதுகாவற்படை அதிகாரிகளைச் சந்தித்து கிழக்கு இந்திய மாநிலங்களில் தனிநாட்டுப் பிரிவினை கோரும் விடுதலை இயக்கங்களின் 99 பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும் அவற்றை அகற்றும்படியும் கோரியுள்ளனர். திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, நாகலாந்து சோஸலிசக் குழு, அஸாமிய விடுதலை முன்னணி, ஆகியன பங்களாதேஷினுள் தளமமைத்துள்ள குறிப்பிடத்தக்க இயக்கங்கள். பங்களாதேஷ் அரசு அப்படியெதுவும் தமது நாட்டினுள் இல்லையென மறுத்து வருகின்றது. அங்கே தற்போது ஆட்சியில் இருக்கும் பங்களாதேஷ் தேசியக் கட்சி இஸ்லாமியத் தேசியவாதிகளுடனும் சோஷலிச ஜனநாயகவாதிகளுடனும் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்துள்ளதாகவும், அவர்கள் தமக்குப் பாதகமற்ற தீவிரவாதக் குழுக்களைப் பொறுத்து வருவதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும், இந்திய அரசின் நெருக்குதல் காரணமாக எடுக்கப்பட்ட "குற்றத் தடுப்பு நடவடிக்கை" (கவனிக்கவும்: பயங்கரவாத எதிர்ப்பு என்ற பதம் பாவிக்கப்படவில்லை) யின்போது 3000 பேர் கைதுசெய்யப்பட்டு, 500 ற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பங்களாதேஷின் துறைமுகப்பட்டணமான கோக்ஸ் பஸார் தெற்கு ஆசியாவினுள் ஆயுதம் கடத்தப் பயன்படும் பிரதான மையமாக இருக்கின்றது. எண்பதுகளில் கம்போடியப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தற்போது தாய்லாந்து எல்லையிலுள்ள கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. அங்கு வாங்கப்படும் ஆயுதங்கள் கப்பல் மூலமாக கோக்ஸ் பஸாரை வந்தடைவதாக இந்தியப் புலனாய்வறிக்கை தெரிவிக்கின்றது. கிழக்கு இந்திய மாநில விடுதலையியக்கங்களிடம் RPG , AK-47 போன்ற நவீன ஆயுதங்கள் காணப்படுகின்றமை இந்திய அரசிற்குப் புதிய கவலையைத் தோற்றுவித்துள்ளது

Sunday, May 03, 2009

இலங்கை இனத்துவ அரசியலின் தொடக்கங்கள்

இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு குறித்த ஆய்வாக "புதிய பூமி" பத்திரிகையில் இமயரவரம்பன் எழுதிவரும் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதியை இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.

இனத்துவ அரசியலின் தொடக்கங்கள்

இமயவரம்பன்
அன்றைய தேசிய அரசியல் உருவாக்கத்திற் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழருஞ் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமுஞ் சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதைக் கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள் தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவு படுத்துகிற சூழ் நிலை ஏற்பட்ட போது அவ் விரிவாக்கத்திற் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன.

தொழிலாளி வர்க்க உணர்வு தானாகவே சமூக நீதிக்கும் சமூக மாற்றத்திற்குமான அரசியலாக வேண்டியதில்லை. அதை இயலுமாக்க வர்க்க உணர்வு வர்க்கச் சிந்தனையாக விருத்தி பெற வேண்டும். அதை விடத், தொழில் வளர்ச்சி பின்தங்கிய கொலனிய நாடுகளில் நவீன உற்பத்தியுடன் பழக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் சிறுபான்மையாகவே இருந்தது. இலங்கையின் தோட்டத் தொழிலாளர் போல மிகவும் பின்தங்கிய பொருளியல் நிலைக்கு உட்பட்ட உழைப்பாளிகள் சமூகத்தின் உற்பத்தி உறவுகள், பொருளியலில் முதலாளிய முறையில், அதாவது உழைப்பாற்றலுக்குரிய ஊதியம், என்று இருந்தாலும், பெருந்தோட்டத் துறையின் நிருவாக அதிகாரக் கட்டமைப்பில் நிலவுடைமைச் சமுதாயப் பண்புகள் கணிசமான பங்கு வகித்தன. தோட்டத் தொழிலாளர் தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கொத்தடிமைகளாகவே நடத்தப் பட்டனர். அதற்கமையக் கங்காணி முறை சாதி ஏற்றத் தாழ்வுகள், நிலவுடைமைச் சமூகத்திற்குரிய எசமான விசுவாசம் போன்ற பண்புகளும் சேர்ந்து மலையகத் தொழிலாளர் போராட்டச் சக்தியாக வளரத் தடையாய் இருந்தன.

எனவே தொழிலாளர் இயக்கம் விருத்தி பெற்று வந்த போதும் அதனாற் தொழிற் சங்க அரசியலின் வரையறைகட்கு அப்பால், வர்க்கப் போராட்ட அரசியலாக, அரசியல் அதிகாரத்திற்கான எழுச்சியை நோக்கி வளரக் கூடிய சூழல் உருவாகி இருக்கவில்லை. அதை இயலுமாக்கக் கூடிய அரசியற் சிந்தனை வேர் கொள்ளத் தொடங்கவும் இல்லை.

எழுச்சி பெற்று வந்த நிலவுடைமை முதலாளி வர்க்கம் தனது நலன்களைப் பேணுவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தது. தென்னாசிய நிலவுடைமைச் சமுதாயத்தின் ஒரு முக்கியமான கூறாக இருந்து வந்த சாதி, தேசிய உணர்வின் விருத்திக்கும் தடையாகவே இருந்தது. சாதிகளாகத் தனித்தனியே அடையாளப் பட்டிருந்த சிங்களச் சமூகத்தினரிடையே கொவிகம (வேளாளரை ஒத்த சாதியினர்) கராவே (கரையார் சமூகத்தை ஒத்த சாதியினர்) சாதிகளிடையே சட்டவாக்கற் சபையில் இடம் பிடிப்பதற்கான போட்டி உருவானதற்குக் காரணம், கராவே சமூகத்தினரிடையே வணிகத் துறையில் பணஞ் சம்பாதித்த ஒரு முதலாளி வர்க்கமும் தமக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பைப் பயன் படுத்திச் சட்டம், மருத்துவம் போன்ற துறைகளில் முன்னுக்கு வந்தவர்களின் உருவாக்கமும் எனலாம். எனவே அவர்கள் தங்களைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாகக் கொலனி ஆட்சி ஏற்க வேண்டும் என்பதில் மட்டும் இல்லாமல் தாங்கள் கொவிகம சாதியினரை விட உயர்வானவர்கள் என்று வற்புறுத்துவதிலும் முனைப்பாக இருந்தனர்.

இதைவிடக் கண்டிய அதாவது மலை நாட்டுச் சிங்களவர் இடையே இருந்த அதி உயர் வர்க்கத்தினர். கண்டி இராச்சியத்தின் மந்திரி பிரதானிகளதும் பிரதேச அதிகாரிகளதும் வம்சத்தினராகக் கருதப் பட்டவர்கள். அவர்கள் தம்மை 'ரதல" என்று அழைத்துக் கொண்டனர். அவர்களே பழைய கண்டி இராச்சியப் பகுதியின் பெரும் நிலவுடைமை யாளர்களாகவும் பெரிய பவுத்த கோவில்களின் அறங்காவலர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களது சிந்தனையின் பாதிப்பு கண்டிய உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே வலுவாக இருந்தது. ஒரு புறம் கரையோரப் பகுதிகளை விடப் பின்தங்கிய நிலையிலேயே கண்டியக் கிராமிய சமூகம் இருந்தது. மறுபுறம் கண்டிய மேட்டுக் குடியினர் தம்மை ஆங்கிலேயருக்கு அடுத்த படியில் இருந்தோராகக் கருதினர். எனவே கொவிகம சமூகத்தினர் இடையிலும் கண்டியச் சிங்களவர் - கரையோரச் சிங்களவர் என்ற பாகுபாடு வலுவாகவே இருந்தது.

சனத்தொகைக் கணிப்பீடுகளில் கண்டியச் சிங்களவரையும் கரையோரச் சிங்களவரையும் வௌ;வேறாகக் கணக்கிடும் வழமை இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரே, சிங்களத் தேசியவாதம் வலுப்பெற்ற நிலையிலேயே முற்றாகக் கைவிடப் பட்டது. எவ்வாறாயினும் கரையோரப் பகுதியிலும் கண்டி இராச்சியத்தை அண்டிய ஆனால் கொலனிய ஆட்சிக்கு உட்பட்ட மேல் மாகாணப் பகுதிகளிலும் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் நல்லுறவு பூண்டதன் மூலம் பட்டம் பதவிகளும் காணி பூமியும் வீடுவளவுகளும் பெற்றுத் தம்மை மேம்படுத்திக் கொண்ட கொவிகம குடும்பங்கள் இருந்தன. இவர்களிற் கணிசமான பகுதியினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள். கண்டிய உயர் சாதிக் குடும்பங்கள் இவர்களது பொருளாதார மேம்பாடு கருதித் தேவையான போது மதம் என்ற அடையாள வேறுபாட்டையும் புறக்கணித்துத் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்வாறு நடக்கத் தொடங்கியது. எனினுஞ் சாதி என்ற அடையாளம் வலுவாகவே இருந்தது.

கிறிஸ்துவ மதத்தைத் தழுவாத உயர் வகுப்பினர்கள் கூடத் தங்களுக்குக் கிறிஸ்துவ அடையாளத்தைத் தரக் கூடிய பேர்களைச் சூட்டிக் கொண்டனர். உதாரணமாக டொன் ஸ்ற்றீபன் சேனநாயக்க, பிலிப் குணவர்த்தன. ஆகியோர் கிறிஸ்த்துவர்கள் அல்லர். இந்த விதமான போக்கு சில பிரதேசங்களிற் குறைவாகக் காணப்பட்டதன் காரணம் அப் பிரதேசங்களில் கொலனிய நிருவாகமும் கிறிஸ்துவ நிறுவனங்களும் தீவிரமாகச் செயற் பட்டமை எனலாம்.

தமிழரிடையேயும் சாதி வேறுபாடுகளும் பிரதேச வேறுபாடுகளும் வலுவாக இருந்தன. யாழ்ப்பாணத்திற் தமது பாரம்பரியத்தையும் கொழும்பிற் தமது தொழில்களையும் கொண்டிருந்த வசதி படைத்த யாழ்ப்பாணச் சைவ வேளாளரே அரசியலிலும் வட புலத்துச் சொத்துடைமையிலும் கல்வி, உத்தியோகங்களிலும் ஆதிக்கஞ் செலுத்தினர். இடை நிலைச் சாதியினரிற் சிலர் தனிப்பட்ட முறையில் சமூக மேம்பாடு எய்தினாலும், வேளாள மேட்டுக் குடிகளது நிலஞ் சார்ந்த பொருளாதார ஆதிக்கத்தின் பின்னணியிலும் ஏற்கெனவே கல்வியிலும் உத்தியோகத்திலும் அவர்கள் பெற்றிருந்த முதனிலையின் காரணத்தாலும் அரசியலில் அவர்கட்குச் சவாலாக எழ வாய்ப்பு இருக்கவில்லை. கரையார் சமூகத்தினர் நேரடியான வேளாள ஆதிக்கத்திற்கு உட்படாதும் அவர்களை ஆதிக்கத்திற்கு உட்படுத்தத் தேவையற்றும் இருந்தாலும்; தென் இலங்கையின் கராவே சமூகத்தின் அளவுக்குச் சமூக மேம்பாடு பெற்றிருக்கவில்லை.

கிழக்கு மாகாணத்திலும் வடமேல் மாகாணத்தின் கரையோரப் பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ச் சமூகங்களது வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்துச் சூழலை விடக் கனிவான இயற்கை வளங்களின் காரணமாகக் ஆங்கிலக் கல்வி, உத்தியோகம் என்பனவற்றுக்கான தேவையைக் கொண்டிருக்கவில்லை. அதை விடவும் வட புலத்தில் மதமாற்ற நோக்கத்துடன் கிறிஸ்துவ மி~னரிகள் பெருமளவிற் பாடசாலைகளை நிறுவுதற்கு ஏதுவாக இருந்த வரலாற்றுப் பின்னணி இலங்கையில் வேறெங்கும் இருக்கவும் இல்லை. எனவே அரசியல் செயற்பாடு வடபுலத்தைப் பகைப்புலமாகவும் கொழும்பைத் தளமாகவுங் கொண்டு உருவான சமூக அரசியற் செல்வாக்குடைய குடும்பங்கள் இப் பகுதிகளில் உருவாக வாய்ப்புக் குறைவாகவே இருந்தது. இப் பகுதிகளிற,; குறிப்பாகக் கிழக்கிற், கல்வி, அரசாங்க உத்தியோகங்கள் என்பன கொலனி ஆட்சியின் பிற் பகுதியில் விரிவாக்கம் பெறத் தொடங்கிய போது அப் பணிகளைச் செய்ய வட புலத்திலிருந்தே ஆசிரியர்களும் அலுவலர்களும் வரவேண்டி இருந்ததைப் பலரும் அறிவோம்.

மலையகத் தமிழரைப் பொறுத்தவரை, பெருந்தோட்ட நிறுவனம் ஏகப் பெரும்பான்மையானோரைப் பொருளியல், கல்வி, அரசியல் விழிப்பு என்ற விடயங்களில் திட்டமிட்டே தாழ்நிலையில் வைத்திருந்தது. தோட்டப் பொருளாதாரத்தை அண்டி உருவான வணிகர்களும் தோட்ட முதலாளிமாரைச் சார்ந்து நின்று தம்மை மேம்படுத்திக் கொண்டவர்களும் மலையகத் தமிழ்ச் சமூக மேம்பாடு பற்றி அக்கறை காட்டியதாகக் கூறுவது கடினம். அவர்கட்காகக் குரல் கொடுத்த முக்கியமான பிரமுகர்களில் ஒருவர் பொன்னம்பலம் அருணாசலம். அடுத்தவரும் அதி முக்கியமானவரும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவரான நடேசய்யர். மலையகத்திற்கான ஒரு சமூக அடையாளத்துடன் கூடிய அரசியல் உருவாகக் கூடிய கால மெடுத்தது போக அது முழுமை பெறுவதற்குள் பேரினவாதக் குறுக்கீடுகளும் வந்து விட்டன.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, வடக்கில் அவர்கள் மிகச் சிறுபான்மையினரையும் தம்மைத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியினராகக் கொண்டும் வாழக் கூடிய ஒரு சூழல் இருந்தது. கிழக்கில் அவர்களது தனித்துவத்தை வலியுறுத்தக் கூடியளவு எண்ணிக்கையும் முஸ்லிம் சனத்தொகை அடர்வுடைய பகுதிகளும் இருந்தன. எனினும் கல்வி, உத்தியோகம் போன்ற துறைகளில் அவர்கள் கிழக்கு மாகாணத் தமிழரை விடவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தனர். தென் இலங்கையிலும், கொழும்பு தவிர்ந்த பகுதிகளில், கல்வி, உத்தி யோகம் போன்ற அக்கறைகள் குறைவாகவே இருந்தன. எவ்வாறாயினும் நகர் சார்ந்து, குறிப்பாகக் கொழும்பை அண்டிச், செல்வந்த முஸ்லிம் வணிகக் குடும்பங்கள் பல உத்தியோகம் போன்ற அக்கறைகள் குறைவாகவே இருந்தது. எவ்வாறாயினும் நகர் சார்ந்து, குறிப்பாகக் கொழும்பை அண்டிச் செல்வந்த முஸ்லீம் வணிகக் குடும்பங்கள் பல உருவாகி இருந்தன. சோனகர் எனப்பட்ட முஸ்லீம்கள் இலங்கை இந்தியச் சோனகர் என வகுக்கப் பட்டனர். இலங்கை முஸ்லீம் சமூகத்தினர் இடையிலிருந்து அனைத்து இலங்கை முஸ்லீம்களதும் பேரிற் பேசக் கூடிய தலைவர்கள் உருவானார்கள். அவர்களைவிட எண்ணிக்கையிற் குறைவாக இருந்த போதும், கணிசமான கல்வி, தொழில் ஈடுபாடுடைய மலாய்ச் சமூகத்தினர் மத்தியிலிருந்தும் முஸ்லிம்கட்காகவும் மலாய்ச் சமூகத்தினருக்காகவும் பேசக் கூடிய தலைவர்கள் தோன்றினர். எனினும் முஸ்லிம் சமூகம் மேற் கூறிய இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர், மலாயர் என்கிற மூன்று பிரிவுகட்கும் அப்பால் வேறு அடையாளங்களின் அடிப்படையிலும் வெவ்வேறு சமூகப் பிரிவுகளாகவே இயங்கியது. பறங்கியரிடையே இருந்து முக்கியமான சமூகப் பிரமுகர்கள் தோன்றினாலும் அச் சமூகத்தின் அடையாளத்தின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்த கூடிய தொகையில் அவர்கள் இருக்கவில்லை. அதை விட, அவர்களது ஐரோப்பியப் பின்புலம் காரணமாக, சிறப்பான சில விதி விலக்குக்கள் போக, அவர்களது தலைவவர்கள் கொலனிய நிருவாகத்திற்கு நெருக்கமாகவே இருந்தனர்;.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் இன அடையாளத்தை வற்புறுத்துகிற போக்குகளும் இனத்தோடு மதத்தைச் சேர்த்து வற்புறுத்துகிற போக்குக்களும் நிலை கொண்டு விட்டாலும் அன்றைய தேசிய அரசியல் உருவாக்கத்தின் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழருஞ் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமும், அதே அளவு அல்லது அதைவிட முக்கியமாகச், சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதைக் கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள் தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவு படுத்துகிற சூழ் நிலை ஏற்பட்ட போது அவ் விரிவாக்கத்திற் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன.



(நன்றி: "புதிய பூமி", டிசம்பர் 2007)

Puthiya Poomi
S-47, 3rd Floor
C.C.S.M.Complex
Colombo -11
SriLanka

E-mail: nfo@ndpsl.org

Saturday, May 02, 2009

ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !


ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 5

ஆபிரிக்கக் கண்டம் பல “அதிரடிச்” செய்திகளுக்குப் புகழ் பெற்றது. அங்கே ஏதோ ஓரு நாட்டில் திடீரெனச் சதிப்புரட்சி நடக்கும், திடீரென ஆட்சி கவிளும், திடீர் திடீரெனக் கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயுதங்களுடன் தோன்றுவார்கள். மேற்கு ஆபிரிக்காவில் ஒருகாலத்தில் யானைத்தந்தம், தங்கம் ஏற்றுமதி செய்ததால் “ஐவரி கோஸ்ட்” என நாமம் சூட்டப்பட்ட நாட்டிலும் திடீர் கிளர்ச்சியாளர்கள் தோன்றியதால், இன்நாடும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. வழமைபோல், இத்தடவையும் சர்வதேசப் பார்வை பாரபட்சம் நிறைந்ததாகவேயுள்ளது. உதாரணமாகக் கூறினால், இன்னொரு மேற்காபிரிக்க நாடான நைஜீரியாவில் எண்ணைவளப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் எழச்சி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் “ஷெல்” எண்ணை அலுவலகங்களை முற்றுகையிட்டு கீழ் மட்ட அதிகாரிகளைப் பணயம் வைத்ததை எந்தவொரு செய்தி நிறுவனமும் தெரிவிக்கவில்லை. இந்தப் பிரச்சினை பல வருடங்களாக தொடர்கின்றது.

அப்படியிருக்கையில் ஐவரி கோஸ்டின் திடீர்க்கிளர்சியாளரின் கலகம் பற்றிய செய்திகள் சர்வதேசத் தொடர்பூடகங்களில் முக்கியத்துவம் பெறுவதைப்பற்றிச் சந்தேகப்படாமல் இருக்க முடியாது. மேலும், எமக்குச் சொல்லப்பட்டது போல சாதாரண “சிப்பாய்களின் கலகமாக” மட்டுமிருப்பின், அவர்களின் இராணுவ, அரசியல் பின்ணணி என்ன ? கிளர்ச்சியாளருக்கு ஆதரவளித்த எதிர்க் கட்சித் தலைவர் ஏன் பிரஞ்சுத் தூதுவராலயத்தில் சரணடையவேண்டும் ?

ஐவரி கோஸ்ட் குடியரசு 40 வருடங்களாக சர்வாதிகரிகளினால் ஆளப்பட்டு வந்தாலும், நிலையான அரசு மற்றும் பொருளாதார வளர்ச்சியைக்கண்ட நாடு. மரப்பலகை, கொக்கோ, கோப்பி போன்றவற்றின் ஏற்றுமதி வருமானம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திவிட, அயல் நாட்டவர்கள் இங்கு வேலை தேடிவந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் உலகம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. நீண்ட காலத்திற்கு பின்பு நடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயக பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி லோரன்ட் குபாக்போ பதவியேற்ற பின்னர்தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின.

முன்னாள் பிரஞ்சுக்காலனியான ஐவரி கோஸ்ட் சுதந்திரமடைந்த பின்னரும் பிரான்சுடனான வர்த்தகத்தொடர்புகள் வழக்கம் போல தொடர்ந்தன. நவகாலனித்துவக் கொள்கைகளின்படி கொக்கோ, கோப்பி போன்றவற்றை பதனிடப்படாத மூலப்பொருட்களாகவே ஐவரி கோஸ்ட் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. இதற்கென்று தனியான அமைச்சு கூட இயங்கியது. புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் “இந்த மூலப்பொருள் ஏற்றுமதிக்கான அமைச்சின்” தேவைபற்றிக் கேள்வியெழுப்பியுள்ளார். மூலப்பொருட்களை முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை நிறுவவேண்டுமெனவும் கூறியுள்ளார். இவற்றைவிட பிரான்ஸை “தாய்நாடாக” ப் பார்க்கும் அரசியலிலிருந்து விலகி உள்நாட்டுப் பொருளாதார கட்டுமானங்களைச் சீர்திருத்தும் சமுகப் பொருளாதாரத் திட்டங்களை வகுத்திருந்தார்.

ஆபிரிக்காவில் காலனித்துவப் பொருளாதார நலன்களைக் கொண்டிருந்ததை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ளும் பிரான்ஸ் ஐவரி கோஸ்டில் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தயாராகவில்லை. புதிய ஜனாதிபதி குபாக்கோ எல்லாவற்றிற்கும் பிரான்ஸிலேயே தங்கியிருக்காமல் சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் நட்புறவுகளை வளர்த்தமையானது, பாரிஸில் எச்சரிக்கைச் சமிக்கையாக எடுக்கப்பட்டது. “ஆபிரிக்கத் தலைவர்களுக்கு ஜனநாயகம் என்பது ஆடம்பரமானது” எனக்கூறிய பிரான்ஸ் மாஜி ஜனாதிபதி ஷிராக்கின் பேச்சில் வெறுப்புத் தெரிந்தது.

ஐவரி கோஸ்ட்டின் ஜனாதிபதி பதவி விலகி புதிய தேர்தல்கள் நடாத்தப்படவேண்டுமென்பது கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை. பிரான்ஸினது விருப்பமும் அதுதான். போர் நெருக்கடியால் ஆட்சி கவிழும் நிலையில், எதிர்க்கட்சித்தலைவரும் தமது நெருங்கிய நண்பருமான உவாத்தராவை வேண்டிய பணம் செலவழித்து ஆட்சிபீடம் ஏற்ற விரும்பியது பிரான்ஸ். தலைநகர் அபிஜானில் சண்டை நெருங்கியவுடனேயே உவாத்தரா ஓடிப்போய் பிரஞ்சுத் தூதுவராலயத்தில் சரணடைந்த மர்மமும் இதுதான்.

புதிதாக ஆரம்பித்துள்ள உள்நாட்டு யுத்தம் நாட்டை இன-மத ரீதியாகப்பிரித்துள்ளதுடன், வெளிநாட்டவர் மீதான வெறுப்பையும் தூண்டிவிட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த செனூபோ, பம்பரா, மலின்கே இனமக்கள் அயல்நாடுகளான பூர்க்கினா ஃபாசோ, மாலி, கிணி ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்வதுடன் இஸ்லாமிய மதத்தையும் சேர்ந்தவர்கள். உத்தியோக பூர்வ அறிக்கைகளின்படி ஐவரி கோஸ்ட்டின் மொத்தச் சனத்தொகையில் முஸ்லிம்கள் 20 வீதமானவர்கள். தெற்கு மாகாணங்களில் வாழும் குறு, பவுலே (முன்னாள் சர்வாதிகாரியின் இனம்) இனங்களில் 20 வீதமானோர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். பிரான்சுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் சர்வாதிகாரி புவாஞி தான் பிறந்த இடத்தில் கோடிக்கணக்கான டொலர்கள் செலவிட்டு மிகப்பிரமாண்டமான (வத்திக்கான் சென்ட் பீட்டர்ஸ் பாணியில்) கத்தோலிக்கத் தேவாலயத்தைக்கட்டிப் பெருமை தேடிக்கொண்டவர். அச்சு அசலாக வாத்திக்கானில் உள்ளத்தைப் போல காட்சியளிக்கும் அந்த தேவாலயத்தின், கோபுரத்தின் உயரத்தை குறைத்துக் கட்டும் படி பாப்பரசர் உத்தரவிட்டாராம்.

இன்றைய ஐவரி கோஸ்ட் பிரச்சினையில் வந்தேறுகுடிகளின் பங்கும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. காலனித்துவக் காலத்திலேயே பிரஞ்சுக்காரர் தமது பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் வேலைக்கமர்த்த அயல்நாடுகளிலிருந்த (பூர்க்கினா ஃபாசோ, மாலி) பெருமளவு கூலித்தொழிலாளர்களை வருவித்தனர். சுதந்திரமடைந்த பின்பும் இவர்களின் குடியேற்றம் தொடர்ந்தது. இதிலே பூர்க்கினாபே என அழைக்கப்படும் பூர்க்கினா ஃபாசோ குடியேறிகளைத் தம்மைவிடத் தாழ்ந்தவர்களாக ஐவரியர்கள் (மரபு வழி ஐவரி கோஸ்ட் பிரஜைகள்) கருதுவது வழக்கம். எதிர்க்கட்சித்தலைவர் உவாத்தரா உணமையில் பூர்க்கினா ஃபாசோவைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சைக்கும் உள்ளானவர். பூர்க்கினாபேக்கள் வாழும் வட மாகாணங்களில்தான் இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தமை கவனிக்கத்தக்கது. கிளர்ச்சியாளர்கள் வடக்கு மாகாணங்களையே தமது கட்டுப்பாட்டில் விட்டிருந்ததால், அவர்களும் பூர்க்கினாபேக்கள்தான் என பரவலாக நம்பப்பட்டது. மரபுவழி ஐவரிகோஸ்ட் பிரஜைகளின் மூதாதையர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாலி, பூர்க்கினா ஃபாசோ போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் என்பது உதிரிச்செய்தி.

பூர்க்கினா ஃபாசோவை முன்பு ஆட்சிசெய்த, பலராலும் மதிக்கப்பட்ட சோஷலிஸ ஜனாதிபதி தோமஸ் சங்கரா படுகொலைசெய்யப்பட்டபின் ஆட்சியைப்பிடித்த தற்போதைய ஜனாதிபதி கம்பாரே தீவிர மேற்குலகச் சார்பாளர். அங்கேயிருந்துதான் கிளர்ச்சியாளருக்கான ஆயுதத் தளபாடங்கள் அனுப்பப்படுவதாக நம்பப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட சந்தேகங்கள் எல்லாம் ஒன்றுகூடி இப்போது நடப்பது சிப்பாய்க்கலகமல்ல, ஒரு அந்நிய நாட்டுப் ( பூர்க்கினா ஃபாசோ) படையெடுப்பு என உள்ளூர் மக்களைச் சொல்ல வைத்துள்ளது. சர்வதேசச் செய்தி ஸ்தாபனங்கள் கூறியபடி “நீண்டகாலத்திட்டங்களுடன் நிறுவனமயமாகிய” கிளர்ச்சியாளரின் பிரதிநிதி “தமது இயக்கம் பற்றித் தெளிவுபடுத்த” பாரிஸிற்குச் சென்றிருந்தார். இதேவேளை பிரான்ஸில் தங்கியிருந்த முன்னாள் சர்வாதிகாரி புவாஞியின் வாரிசும் (உண்மையிலேயே புவாஞியின் வைப்பாட்டி மகன் என்று கதை அடிபடுகின்றது) உலக வங்கியில் பதவி வகித்த பொருளாதார நிபுணருமான கோனன்பெடி திடீரென நாடு திரும்பியுள்ளார்.

கேனன் பெடி ஒரு வலதுசாரி அரசியற் தலைவரென்பதும், முன்பு இவரின் ஆட்சிக்காலத்தில், நிறவாத தென்னாபிரிக்காவுடன் கூட இவர் உறவுகளை மேற்கொண்டிருந்தார் என்பதும், தெரிந்தவிடயங்களே. பிரான்ஸைப் பொறுத்தவரை தம்மோடு ஒத்துழைக்கும் வலதுசாரிக்கட்சிகளின் தலைவர்களான கேனன் பெடி அல்லது உவாத்தராவை பதவியில் அமர்த்த எத்தனித்தது. ஆபிரிக்காவில் பிரான்ஸின் மறைமுகமான அரசியல்-இராணுவத் தலையீடுகள் ஒன்றும் புதியவையல்ல. சுதந்திரம் வந்த பின்பும் அபிட்ஜான் நகரில் நிரந்தரமாக இருக்கும் பிரஞ்சு இராணுவ முகாமும், உயரதிகாரிகளாகவும் வர்த்தகர்களாகவும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட பிரஞ்சுக்காரரும் இந்நாட்டில் இன்னமும் நடப்பது நவ-காலனித்துவ ஆட்சி என்பதைத் தெளிவு படுத்தும். இதற்குத் தடையாக உள்ளூர் மக்களின் நலன்பேணவரும் அப்பாவி அரசியல்வாதிகளான தற்போதைய இடதுசாரி ஜனாதிபதி குபாக்போ போன்றவர்களை வெளியேற்ற எந்த வழிமுறையையும் பின்பற்ற காலனித்துவ வாதிகள் தயாராயுள்ளனர். அதை அவர்கள் நேரடியாகச் செய்யாமல் உள்நாட்டு எதிரிகளை வைத்து செய்துமுடிப்பது தான் நடக்கும் கதை.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஏற்றுமதியாகும் நெஸ்லே சொக்லேட்களை சுவைப்பவர்கள் பலருக்கு, அதன் மூலப்பொருளான கொக்கோ அந்நாட்டில் உற்பத்தியாவதில்லை என்பதும், ஐவரி கோஸ்டில் இருந்து இறக்குமதியாகின்றது என்பதும் தெரியாது. ஐவரி கோஸ்ட்டின் 1.4 பில்லியன் டாலர் பெறுமதியான கொக்கோ தொழிற்துறை, வருடத்திற்கு 4 வீதம் வளர்ந்து வருகின்றது. ஆனால் லாபத்தில் பெரும்பகுதி சுவிட்சர்லாந்திற்கு செல்கின்றது.செல்வந்த நாடுகளின் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட்டின் உற்பத்தியில், ஐவரி கோஸ்ட்டின் ஏழைக் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படும் வேடிக்கையான உலகமிது. எந்த வித இயற்கைவளமும் இல்லாத ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்காவில் இருந்து தருவித்த வளங்களை வைத்து தான், உலக சந்தையை தமது விற்பனைப் பண்டங்களால் நிரப்பி வருகின்றன. உண்மையில் ஐரோப்பா தான் ஆப்பிரிக்காவில் தங்கி இருக்கின்றது. ஆப்பிரிக்காவில் வாங்கப்படும் மலிவு விலை மூலப் பொருளுக்கும், சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த முடிவுப் பொருளுக்கும் இடையில் கிடைக்கும் நிகர லாபம் தான் ஐரோப்பாவில் செல்வத்தை குவித்து வருகின்றது. ஆப்பிரிக்கா மட்டும் இல்லையென்றால், ஐரோப்பியர்கள் வறுமையில் வாட வேண்டி இருக்கும். இதனால் மூலப்பொருளின் விலையை முடிந்த அளவு மிகக் குறைவாக வைத்திருப்பது ஐரோப்பாவிற்கு நன்மை பயக்கும். அதற்காக இராணுவத் தலையீட்டை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

லைபீரியாவிலும், சியாரா லியோனிலும் வைரக் கற்களுக்காக, கொங்கோவில் கணிப்பொறி ”சிப்”களுக்காக… இந்த வரிசையில் சாக்லெட்டுக்காக ஐவரி கோஸ்ட். இப்படியே போனால், மீனுக்கும், மரக்கறிக்கும், பழங்களுக்குமாக எந்த நாட்டின் மீது படையெடுப்பார்களோ தெரியாது. ஏனென்றால் ஐரோப்பிய சந்தைகளை நிரப்பும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் இருந்து தான் வருகின்றது. நாளாந்தம் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் உணவை விழுங்கும் ஐரோப்பியர்கள், அங்கே பட்டினியால் வருந்தும் மக்களுக்கு உதவி செய்கிறார்களாம்.

– (தொடரும்) –

முன்னைய பதிவுகள்:
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

Friday, May 01, 2009

பன்றிக் காய்ச்சல் ஒரு உயிரியல் ஆயுதமா? தடுப்பு முகாம்கள் தயார்

மெக்சிகோவில் பலரை பலி வாங்கிய பன்றிக் காய்ச்சல் நோய், தற்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகின்றது. மருத்துவர்கள் சிலர், பன்றிக் காய்ச்சல் உயிரியல் ஆயுதம் ஒன்றால் உருவாகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.Is Swine Flu A Biological Weapon? அமெரிக்க அரசும், உலக சுகாதார நிறுவனமும் இதனை மறுத்துள்ளன. இதே நேரம் அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சு (U.S. Department of Homeland Security) நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, இரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிக்கையின் படி, "... தேவையேற்படின் தடுப்பு முகாம்கள் (quarantine) அமைக்குமாறும்... முகாமிற்கு செல்ல மறுக்கும் நபருக்கு 250000 டாலர் குற்றப்பணமும், ஒரு வருட சிறைத் தண்டனையும் வழங்குமாறு..." அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. CBS செய்தி சேவையின் பார்வைக்கு வந்த சுற்றறிக்கை மூலம் இந்த தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

Swine Flu is a man made virus?


Mexican Flu Outbreak 2009: SPECIAL REPORT by Dr Leonard Horowitz


Avian/Swine flu epidemic:Who is behind it??