Tuesday, May 12, 2009

மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி


"இறைவனின் இல்லங்கள் யாவும் மனிதர்களாலேயே நடத்தப்படுகின்றன. அவர்கள் குர் ஆன் வாசகங்களை கொண்டு பயத்தை விதைக்கிறார்கள்... உலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு. ஒன்று, மதத்தை பின்பற்றும் அறிவில்லாதவர்கள். இரண்டு, எந்த மதத்தையும் பின்பற்றாத அறிவாளிகள்." - அபு அலா அல் மா அரி (11 ம் நூற்றாண்டில் பாக்தாத்தில் வாழ்ந்த அரபுதத்துவஞானி)

அண்மைக்காலமாக உலகில் அதிகமானோர் பாவிக்கும் சொற்பதங்களில் ஒன்று: "மத அடிப்படைவாதம்". பலருக்கு இதன் சரியான அர்த்தம் தெரிவதில்லை. அர்த்தம் தெரிந்தவர்கள் தமது அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் இது மதம் சார்ந்த மொழிப் பிரயோகமாகவன்றி, அரசியல் சார்ந்தமொழிப் பிரயோகமாக காணப்படுகின்றது. புதிய உலக ஒழுங்கின் புதிய எதிரிகளான இஸ்லாமியரை குறித்து, எதிர்மறையான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்ற சொற்பிரயோகம், இது இஸ்லாமியருக்கு மட்டுமே உரிய சிறப்படையாளம் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. உண்மையில் மத அடிப்படைவாதம் என்றால் என்ன? என்றதெளிவான புரிதல், யார் மத அடிப்படைவாதிகள் என முடிவு செய்யவும் உதவியாக இருக்கும். மேலும் மதத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஒற்றுமைகள் என்னென்ன என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.

உலகில் மத அடிப்படைவாத போக்குகள் 20 ம் நூற்றாண்டில் இருந்தே தெரியஆரம்பிக்கின்றன. அதற்கு முன்பு இருந்த மதங்களின் ஆட்சி அமைப்பும், நமதுகால மத அடிப்படைவாதத்தையும் ஒன்றோ என போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. மனித நாகரிக வளர்ச்சியில் மதங்கள் வகித்த பாத்திரம் முக்கியமானது. ஆரம்பத்தில் ஆன்மீக இயக்கமாக தொடங்கிய மதங்கள், பின்னர் அரசு நிறுவனமாக வளர்ந்து, தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டன. பிற்காலத்தில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய சித்தாந்தம் லிபரலிசம். அது வர்த்தகர்கள், மத்தியதர வர்க்கம் ஆகியோரது சித்தாந்தமாக செல்வாக்குப் பெற்றபோது, கிறிஸ்தவ மதத்தின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. சமூகத்தில் தேவாலயம் வகித்த பாத்திரத்தை பாராளுமன்றமும், மதகுருக்களின் பாத்திரத்தை அரச அதிகாரிகளும், பைபிளை அரசியல் நிர்ணய சட்டமும் மாற்றிக் கொண்டன. பிரபலமான பிரெஞ்சுப்புரட்சி இந்த மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது.

ஒரு காலத்தில் மேற்கு ஐரோப்பா முழுவதையும், ஆட்சி செய்த கத்தோலிக்க மதத்தின் தலைமைப்பீடமான வத்திக்கான் மாற்றங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. பாப்பரசர் "பைபிள் ஆய்வுக் குழு" வை நிறுவினார். இந்தக் குழு, பைபிளில் நடந்தவைகள் உண்மையாக நடந்த சம்பவங்கள் என அறிக்கை சமர்ப்பித்தது. அனைத்து கத்தோலிக்க மதகுருக்களும் இதை ஏற்றுக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்யும் படி பணிக்கப் பட்டனர். இவ்வியக்கமானது "
intégrisme"  என அழைக்கப்பட்டது. இன்றும் கூட மத அடிப்படைவாதிகளை குறிக்க பிரெஞ்சு மொழியில் இந்தச் சொல் (intégrisme) பயன்படுத்தப் படுகின்றது. ஐரோப்பா மீண்டும் கிரிஸ்தவ மயமாக்கப்பட வேண்டும் என்பதே இவ்வியக்கத்தின் குறிக்கோள்.

கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த, ஆனால் பைபிளை ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர், புரட்டஸ்தாந்துக்காரர் என அழைக்கப்படலாயினர். இவர்கள் பைபிளில் எழுதி உள்ளதின் படி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவனின் கடமை என நம்பினர். இவர்கள் பெருமளவில் புதிய கண்டமான அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கே தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். அவர்கள் பைபிள் நெறிகளின் படி அமைந்த வாழ்க்கை முறையை தமது குடியிருப்புகளில் நடைமுறைப்படுத்தினர். ஆனால் அவர்களின் எதிரி "நவீனமயமாக்கல்" வடிவில் வந்தது. நவீனமயமாக்கல் தமது மத நெறிகளை சீர்குலைத்து விடும் என அஞ்சியகடும்போக்காளர்கள், மத நம்பிக்கையை மீட்பதற்காக இயக்கம் ஆரம்பித்தனர். 1910 க்கும் 1915 க்கும் இடைப்பட்ட காலத்தில், "The Fundamentals" என்ற பெயரில் துண்டுபிரசுர பிரச்சாரம் செய்தனர். "ஒரு மத அடிப்படைவாதி, மத நம்பிக்கையின்அடிப்படைகளுக்காக போராடத் தயாராக இருக்க வேண்டும். பைபிளில் எழுதிஉள்ளதின் மூலம் வாழ்வதன் மூலமே நம்பிக்கையை மீட்க முடியும்." இவ்வாறு அந்தப் பிரசுரங்களில் இருந்தது.

இந்த புதிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் தம்மை "மத அடிப்படைவாதிகள்" எனஅழைத்துக் கொண்டனர். இதனால் புரட்டஸ்தாந்து கடும்போக்காளரை குறிக்கவே மத அடிப்படிவாதம் என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிலர் வாதாடுகின்றனர். இன்றும் கூட அமெரிக்காவில் பல பகுதிகளில் பைபிள் நெறிகளுக்கு அமைய வாழும் கிராமங்கள் பல உள்ளன. அவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி போன்ற நவீன பாவனைப் பொருட்களை காண முடியாது. இன்றும் போக்குவரத்திற்கு குதிரை வண்டிகளை பயன்படுத்துகின்றனர். சில சமூகங்களில் பல தார மணமுறை கூட நிலவுகின்றது. பெண்கள் பொதுவாக உடலை மூடும் ஆடை அணிய வேண்டும். கிராமத்தினுள் மதுபானம் கொண்டுவர முடியாது. சுருக்கமாக சொன்னால், ஆப்கானிஸ்தானில் தாலிபான் கொண்டுவந்த மதக் கட்டுபாடுகள் பல அந்த அமெரிக்க கிராமங்களில் நடைமுறையில் உள்ளன.

மத அடிப்படைவாதம் அமெரிக்காவில் தோன்றினாலும், அது ஐரோப்பாவில்ஏற்பட்ட நவீனமயமாக்கலின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று. பிரெஞ்சுப்புரட்சி முன்மொழிந்த பகுத்தறிவுவாதம், மற்றும் டார்வின், கார்ல் மார்க்ஸ்ஆகியோர் கடவுளை மறுத்து மனிதனை முன்னிறுத்தினர். இது கிறிஸ்தவ மதத்தை கடுமையாக பாதித்தது. மேலும் நவீன உலகில் லிபரலிசம் தோற்றுவித்தசுதந்திரவாதப் போக்கால் ஏற்படும் தீயவிளைவுகளை காட்டி; இவையெல்லாம் மத நம்பிக்கைக் குறைவால் ஏற்படுகின்றது என பிரச்சாரம் செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு உறுப்பினர்களை கொண்ட, கிறிஸ்தவ மதஅடிப்படைவாதக் கட்சிகள் இன்றும் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் சில மத அடிப்படைவாதக் குழுக்கள் இரகசியமாக ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஒருமுறை FBI இது போன்ற மத நிறுவனம் ஒன்றை முற்றுகை இட்டு, ஆயுதபாணிகளுடன் துப்பாக்கிச் சமருக்கு பின்னரே உள் நுழைய முடிந்தது. ஒக்லஹோமா நகரில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் கிறிஸ்தவ மத அடிப்படைவாத குழு ஒன்றே காரணம். "கூ கிளாஸ் கான்" போன்ற வெள்ளைநிறவாத அமைப்பை சேர்ந்தவர்களும் மத அடிப்படைவாதிகளாக உள்ளனர்.

தேசியவாதம், பாசிசம் போன்றன ஐரோப்பாவில் தோன்றி இருப்பினும், பின்னர்உலகில் பிற கண்டங்களில் காணப்பட்ட, இதே கொள்கைகளை கொண்ட அரசியல் இயக்கங்களையும் குறிக்க பயன்பட்டன. அதே போல மத அடிப்படைவாதம் என்ற சொல், கிறிஸ்தவ மதத்தில் தோன்றி இருந்த போதிலும், பின்னர் பிற மதங்களில் இதே கொள்கை கொண்டவர்களை குறிப்பிட பயன்பட்டது. பல ஐரோப்பிய கருத்தியல்கள் உலகம் முழுவதும் பரவியதற்கு, காலனிய காலகட்டமும் ஒரு காரணம். காலனிய ஆட்சியாளர்கள் தாம் ஆண்ட நாடுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு அரச மதம் என்ற ஸ்தானத்தை கொடுத்து வைத்திருந்தனர். உள்ளூர் மதங்கள் மறுமலர்ச்சி என்ற பெயரில் தம்மைமறுசீரமைத்துக் கொண்டன. இந்த மறுமலர்ச்சிக் காலத்தில், இலங்கையில் பௌத்த மதமும், இந்தியாவில் இந்து மதமும், எகிப்தில் இஸ்லாமிய மதமும்தம்மை மறுசீரமைத்துக் கொண்டன. அனைத்து மத அடிப்படைவாதிகளும் அவர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், சொல்லும் கருத்துகள் ஒன்றாக இருப்பதை உற்றுக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். அனைவரும் மதத்தின் பெயரால் கடவுளின் (ஜனநாயகமற்ற) ராஜ்யத்தை அமைக்க விரும்பிகின்றனர். அதற்காக வன்முறையை பின்பற்ற தயங்காதவர்களாகவும், வேறு மதங்களின் மீது வெறுப்பு காட்டுபவர்களாகவும் உள்ளனர். இனி இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.


(தொடரும்)

3 comments:

jothi said...

nice article

காகிதப்பூ said...

நீண்ட நாட்களாக உங்கள்து கட்டுரைகளை படித்து வருகிறேன். மிகவும் சிறப்பாகவுள்ளன.
அமெரிகாவில் அமீஷ் என்றொரு மதம் சார்ந்த சமுதாயத்தினருள்ளனர் அவர்கள் நீங்கள் குறிப்பிட்டது போன்று எந்தவொரு நவீன வசதிகளையும் பாவிப்பதில்லை என்று எங்கோ படித்த நினைவு.

Kalaiyarasan said...

பாராட்டுதலுக்கு நன்றி, காகிதப்பூ.
நீங்கள் சொல்வது போன்ற மதக் குழுக்கள் அமெரிக்கா எங்கும் இருக்கின்றன. எப்போதாவது கொலை போன்ற குற்றங்கள் நடக்கும் போது ஊடக கவனம் திரும்புகின்றது. அப்போது தான் அவை பற்றிய தகவல்கள் வெளி உலகிற்கு தெரிய வருகின்றன.