Tuesday, July 20, 2021

ஹிஷாலினி மரணம் - சுரண்டப்படும் சிறார் தொழிலாளர்கள்

 


இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த பதினாறு வயது சிறுமி ஹிஷாலினி கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் கொல்லப் பட்டிருக்கிறார். அவரது உடலில் தீக்காயங்களும், வல்லுறவு செய்ததற்கான தடயங்களும் இருந்துள்ளன. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியான நாளில் இருந்து, ஹிஷாலினுக்கு நீதி கோரும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

வறுமை காரணமாக பணக்காரர்களின் வீடுகளில் பணிப்பெண் வேலைக்கு சேரும் மலையகத் தமிழ்ச் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், சிலநேரம் அது கொலையில் முடிவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சம்பவத்தில் ஓர் அமைச்சர் சம்பந்தப் பட்டிருப்பதால் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. குற்றவாளிகளின் பண பலம், அதிகார பலம் காரணமாக நீதியான விசாரணை நடப்பதற்கு தடைகள் போடப்படுகின்றன. இலங்கையில் இருப்பது வர்க்க நீதி. அது எப்போதும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயற்படும்.

இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனவாத சக்திகள் கொல்லப்பட்ட சிறுமிக்காக நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே மீண்டும் தமது இனவாத நிகழ்ச்சிநிரலை கொண்டுவரப் பார்க்கின்றன. பலியானவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழினவாதிகளும் இதைத் தமது அரசியல் இலாபம் கருதி பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை.

பல நூறாண்டுகளாக சமூகத்தில் மாறாமல் இருந்து வரும், ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு பற்றி இனவாதிகள் பேச மாட்டார்கள். அவர்களது கண்களுக்கு தெரிவதெல்லாம் இனம், இனம், இனம் மட்டுமே. இதற்கு முன்பு இலங்கையில் நடந்த வர்க்கப் பிரச்சனைகளை எல்லாம் இனவாதப் பிரச்சினைகளாக மடைமாற்றி ஆதாயம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள். வெறும் வாய் மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தால் விடுவார்களா?

மலையக நகரங்களில் நடந்த, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரும் போராட்டங்களில் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன: 
  • "பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்." 
  • "சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு சிறுவர் உரிமை மீறல்." 
இந்தப் பிரச்சினை இதற்கு முன்பும் இலங்கையில் இருந்தது. இனிமேலும் இருக்கப் போகிறது. ஆகவே பதினாறு வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாக தடுக்கப் பட வேண்டும். சட்டத்தை மீறி சிறார் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் இலவசக் கல்வி கொண்டு வந்ததன் நோக்கமே வறுமையில் வாழும் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பது தான். கல்வி இலவசமாகக் கிடைத்தாலும், புத்தகங்கள் வாங்குவது சுமையாக இருக்கிறது என்பதற்காக, பிற்காலத்தில் இலவசப் பாட நூல்கள் வழங்கப் பட்டன. அப்படி இருந்தும் இன்னமும் பல்லாயிரக் கணக்கான ஏழைச் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் வேலைக்கு செல்கிறார்கள். அப்படியானால் இந்த அமைப்பில் ஏதோ ஒரு தவறிருக்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் பிரதிநிதியே, அதாவது ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு மக்கள் விரோத செயலில் ஈடுபட்டிருகிறார். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுமி, ஒரு அமைச்சரின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார். அங்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, உடலும் பாலியல்ரீதியாக சுரண்டப் பட்டிருக்கிறது. இதைத்தவிர உடலை சிதைக்கும் சித்திரவதைகள் கூட நடந்துள்ளன.

இலங்கையில் ஓர் ஏழைக்கு அமைச்சர் வீட்டிலும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது இலங்கை அரசு இயந்திரம் எந்தளவு தூரம் ஊழல்மயமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அது எப்போதும் பணக்காரர்களின் பக்கம் நின்று ஏழைகளை ஒடுக்கி வந்துள்ளது. ஒரு வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இதற்கான தீர்வைக் காண முடியும்.

No comments: