Tuesday, July 13, 2021

கியூபாவில் என்ன நடக்கிறது?

 


கியூபாவில் நடக்கும் குழப்பம் தொடர்பாக சில குறிப்புகள்: 
- 10-11 ஜூலை, வார இறுதி நாட்களில் கியூபாவின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அங்கு நிலவும் உணவு, எரிபொருள், மருத்துவ வசதிப் பற்றாக்குறைக்கு அரசை குற்றம் சாட்டினார்கள்.

- அதே நேரம் கியூப புரட்சிக்கு அல்லது அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. அவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு குறித்து கண்டனம் தெரிவித்தார்கள்.

- கியூபாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்குடன், அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே இருந்த பொருளாதாரத் தடை கடுமையாக்கப் பட்டது. ஜோ பைடன் ஆட்சிக் காலத்திலும் அதுவே தொடர்கிறது.

- கடந்த 29 வருடங்களாக கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. "ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக" பொருளாதாரத் தடை விதித்ததாக அமெரிக்கா நியாயப்படுத்தி வந்தது. இந்த வருடம் ஜூன் மாதம் ஐ.நா. சபையில் பொருளாதாரத் தடையை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப் பட்டது. அதற்கு ஆதரவாக 184 உலக நாடுகள் வாக்களித்தன. அமெரிக்காவும், இஸ்ரேலும் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறவில்லை.

- இதே நேரம் ஹைத்தியின் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான மொய்ஸ் ஒரு கூலிப்படையால் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இந்த அரசியல் படுகொலையை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்க இராணுவம் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளனர்.

- கியூபாவுக்கும் ஹைத்திக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். கியூபாவுக்கு மிக அருகில் உள்ள கரீபியன் தீவான ஹைத்தியில் அமெரிக்க படைகள் வந்திறங்கினால், அது எதிர்காலத்தில் கியூபா மீது படையெடுப்பதற்கான தயார்படுத்தலாக இருக்கலாம்.

No comments: