Friday, October 16, 2020

மகாவம்சம் சொல்லாத "திராவிட விஜயன்" கதை!

Thor Heyderdahl ஒரு பிரபலமான நோர்வீஜிய அகழ்வாராய்ச்சியாளர். அவர் எழுதிய The Maldive Mystery என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. பண்டைய நாகரிகங்கள் பற்றிய தோர் ஹெய்டர்தாள் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, ஆதி கால மனிதர்கள் வைக்கோல் படகுகளில் அட்லாண்டிக், பசுபிக் சமுத்திரங்களை கடந்து பிரயாணம் செய்தனர் என்பதை நிரூபித்தவர். ஆதி கால கடலோடிகள் பயன்படுத்திய அதே புற்களால் கட்டப் பட்ட KON TIKI என்ற படகை தானே உருவாக்கி அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து சென்றவர். அந்தச் சம்பவம் திரைப்படமாகவும் வந்தது. 

தென் அமெரிக்கா மட்டுமல்ல, மாலைதீவும் ஏற்கனவே பண்டைய கால மனிதர்களால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கலாம் என்பது அவரது வாதம். அதை நிரூபிப்பதற்காக இரண்டு, மூன்று தடவைகள் மாலைதீவுக்கு பயணம் செய்து, அரசின் உதவியுடன் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் தயங்கிய மாலைதீவு அரசு பின்னர் வேண்டிய அளவு ஒத்துழைப்பு வழங்கியது.

இன்று நூறு சதவீதம் இஸ்லாமியர்களாக உள்ள மாலைதீவு பிரஜைகள், தமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமற்று உள்ளனர். அதற்கு அங்குள்ள மத அடிப்படைவாத சக்திகளின் எதிர்ப்பும் ஒரு காரணம். மாலைதீவுக்கு இஸ்லாம் வருவதற்கு முன்னர், அங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் போன்று வாழ்ந்து வந்ததாக நம்ப வைக்கப் பட்டுள்ளனர். ஆகையினால், மாலைதீவுவாசிகளின் இஸ்லாத்திற்கு முந்திய மத நம்பிக்கைகளை காட்டும் இடிபாடுகள் எதையும் விட்டு வைக்கவில்லை. அவை அடித்து நொறுக்கப் பட்டன.

தோர் ஹைடர்தாளின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் கடும் பிரயத்தனத்தின் பின்னரே, புராதன கோயில்கள் இருந்த இடங்களை கண்டுபிடித்தனர். அவர்களது ஆராய்ச்சியின் விளைவாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாலைதீவில் வாழ்ந்த மக்கள் இந்துக்களாகவும், பௌத்தர்களாகவும் இருந்த உண்மையை கண்டுபிடித்தனர். இது ஏற்கனவே மாலைதீவு அரசில் உள்ளவர்களுக்கு தெரிந்திருந்த போதிலும், அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை.

மாலைதீவு ஆயிரம் தீவுகளை கொண்ட தேசம். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அனேகமாக தொலைதூர தீவுகளில் பண்டைய மதச் சின்னங்கள் இன்னமும் காணப்படுகின்றன. இந்த அகழ்வாராய்ச்சி குழுவினரும் அந்தத் தீவுகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த எழுபது, எண்பது வயதுகளை கடந்த வயோதிபர்களை கண்டு கதைத்தனர். அதன் மூலம் ரேடின் என்ற பண்டைய இன மக்கள் பற்றி அறிந்து கொள்கின்றனர். அவர்கள் பிரமிட் மாதிரியான கட்டிடங்களை கட்டியுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ரேடின் இன மக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டனர்.

இலங்கையில் இருந்து பௌத்த- சிங்களவர்கள் படையெடுத்து வந்து மாலைதீவுகளை கைப்பற்றிய வரலாறு இன்று வரை பேசப் படுகின்றது. அதனால் மாலைதீவில் பல நூறாண்டுகள் பௌத்த மதம் இருந்துள்ளது. பண்டைய ரேடின் இனத்தவர்கள் கட்டிய பிரமிட்டின் இடிபாடுகளின் மீது புத்த ஸ்தூபா கட்டப் பட்டது. அவற்றின் இடிபாடுகளும் அங்கே உள்ளன. இன்றைய மாலைதீவு மக்கள், இலங்கையில் இருந்து வந்த சிங்களவர்களை அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதினாலும், அங்கு இனக்கலப்பு நடந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கும் மாலைதீவு மக்கள் பேசும் தீவேஹி மொழி கிட்டத்தட்ட சிங்களம் போன்றிருக்கும்.

மாலைதீவு மக்கள் பேசும் மொழியில் நிறைய தமிழ்ச் சொற்கள் உள்ளன. குறிப்பாக உறவுமுறைகளை தமிழில் அழைக்கிறார்கள். இதன் மூலம் தென்னிந்தியாவில் இருந்து சென்ற தமிழர்களும் மாலைதீவில் குடியேறி இருக்கலாம் என அறிய முடிகிறது. அத்துடன் மாலைதீவில் கண்டெடுக்கப் பட்ட இந்து மதச் சின்னங்களும், கோயில் இடிபாடுகளும் தமிழர்களுடையவையாக இருக்கலாம். அதே நேரம், வட இந்தியாவில், குறிப்பாக குஜராத்தில் இருந்து வந்து மாலைதீவில் குடியேறியவர்களும் இந்துக்களாக இருக்கலாம். அதற்கு ஆதாரமாக நல்லது என்பதற்காக பயன்படுத்தும் அதே சொல் குஜராத்தில் பேசப் படுவதை சுட்டிக் காட்டுகிறார்.

மாலைதீவின் வட இந்தியக் குடியேறிகளுடனான தொடர்பானது, அந்நாட்டின் பண்டைய வரலாற்றைக் கூறும் செப்புத்தகடுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாலே அருங்காட்சியகத்தில் உள்ள இந்த செப்புத் தகட்டில் எழுதப் பட்டுள்ள ஒரு புராணக் கதை, இலங்கையில் மகாவசத்தில் எழுதப் பட்ட விஜயன் கதையை ஒத்திருப்பது ஆச்சரியத்திற்கு உரியது.

மகாவம்சத்தில் வரும் விஜயன் கதை இவ்வாறு கூறுகின்றது: வட இந்தியாவில் ஒரு நாட்டை ஆண்ட சிங்கத்திற்கு பிறந்த மன்னன், தனது மகனான விஜயனையும், அவனது எழுநூறு தோழர்களையும் இரண்டு கப்பல்களில் ஏற்றி நாடுகடத்தி விட்டான். ஒரு கப்பல் நாகதீபத்தை (இலங்கை) வந்தடைந்தது. இன்னொரு கப்பல் மகிழதீவை அடைந்தது. மகாவம்சம் மகிழதீவு எனக் குறிப்பிடுவது மாலைதீவாக இருக்கலாம்.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயம் உள்ளது. ஒரு கப்பலில் ஆண்களும், இன்னொரு கப்பலில் பெண்களும், பிள்ளைகளுமாக இரண்டு கப்பல்கள் சென்றுள்ளன. ஆண்களின் கப்பல் இலங்கையை சென்றடைந்தது. பெண்களின் கப்பல் மாலைதீவை சென்றடைந்தது. அண்மைய வரலாற்றுக் காலகட்டத்திலும் மாலைதீவு "பெண்களின் ஆட்சி" நடக்கும் நாடாக கருதப்பட்டு வந்தது. இஸ்லாம் பரவிய காலத்தில் மாலைதீவை ஓர் அரசி ஆண்டு வந்தாள். அதை அரேபிய யாத்ரீகர்களும் தமது பயணக் குறிப்புகளில் எழுதி உள்ளனர். இன்றைக்கும் மாலைதீவு சமூகத்தில் பெண்களுக்கு அதிக உரிமைகள் உள்ளன.

மாலைதீவின் பண்டைய வரலாற்றைக் கூறும் செப்புத்தகடுகளில் எழுதப்பட்ட புராணக் கதையில் விஜயன் என்ற பெயர் மட்டுமே இல்லை. மற்றும்படி பல தகவல்கள் ஒத்துப் போகின்றன. அதிலும் வட இந்தியாவில் இருந்து எழுநூறு பேர் இரண்டு கப்பல்களில் வந்ததாக எழுதப் பட்டுள்ளது. இருப்பினும் ஒரு இடத்தில் மாறுபடுகிறது.

மாலைதீவு வரலாற்றின் படி, வட இந்திய நாட்டை ஆண்ட மன்னன் சிங்கத்திற்கு பிறக்கவில்லை. ஆனால், அவன் ஒரு காட்டு மனிதனை அரண்மனையில் வளர்த்து வந்ததாக கூறுகின்றது. அதாவது, காட்டுக்கு வேட்டையாட சென்ற மன்னன் இந்த காட்டு மனிதனை கண்டு அழைத்து வந்திருக்கிறான். மிருகம் போன்று நான்கு கால்களில் நடந்த அந்த மனிதனுக்கு எந்த மொழியும் பேசத் தெரிந்திருக்கவில்லை. அரண்மனையில் வளர்க்கப் பட்ட காட்டு மனிதன் மன்னனின் மொழியை பேசக் கற்றுக் கொண்டதுடன், அவனுக்கு காட்டுக்குள் உள்ள திரவியங்களையும் அடையாளம் காட்டியுள்ளான்.

ஒரு கட்டத்தில் பட்டத்து இளவரசியான தனது மகள் காட்டு மனிதன் மீது காதல் கொண்ட படியால், ஆத்திரமடைந்த மன்னன் இரண்டு போரையும் நாடுகடத்தி விடுகிறான். அந்தக் காட்டு மனிதனும், இளவரசியும் மாலைதீவில் வந்திறங்கி அரச வம்சத்தை தொடங்கியதாக கதை நகர்ந்து செல்கிறது. அநேகமாக இந்தக் காட்டு மனிதன், இலங்கை மகாவம்சக் கதையில் சிங்கமாக திரிபு பட்டிருக்கலாம். காட்டுக்குள் தவற விடப் பட்ட குழந்தை, காட்டு விலங்குகளால் வளர்க்கப் பட்ட கதைகளை கேள்விப் பட்டிருப்போம். இதுவும் அதே போன்று நடந்திருக்கலாம். அநேகமாக இந்த காட்டு மனிதன் சிங்கமாக திரிபடைந்து இருக்கலாம்.

விஜயனும் தோழர்களும் கிழக்கிந்திய பிரதேசமான வங்காளம் அல்லது ஒரிசாவில் இருந்து வந்திருக்கலாம் என சிங்களவர்களால் நீண்ட காலமாக நம்பப் பட்டு வந்தது. மகாவம்சத்தில் அப்படி எழுதப் பட்டிருந்தது. நாம் இங்கே ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விஜயன் கதை நடந்ததாக மகாவம்சம் கூறும் காலகட்டத்தில் எழுதப்பட்ட வரலாறு எதுவும் இருக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதற்கு இருநூறு வருடங்களுக்குப் பின்னர் தான் பௌத்த மதம் இலங்கைக்கு வந்தது.

இலங்கைக்கு பௌத்த மதம் வந்து முன்னூறு வருடங்களுக்கு பிறகு தான் மகாவம்சம் எழுதப் பட்டது. ஆகவே மகாவம்சம் எழுதிய காலத்திலேயே விஜயனின் கதை ஒரு புராணக் கதையாகி விட்டது. அது நடந்தமைக்கான எந்த ஆதாரமும் கிடையாது. நாட்டார் கதைகள் போன்று ஒரு செவி வழிக் கதையாக மக்களால் பேசப் பட்டு வந்த விஜயன் கதையை தான் மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. ஆகவே அதை எழுதியவர்களுக்கும் அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது.

மேலும் மகாவம்சம் பௌத்த மதத்தை மேன்மைப் படுத்தும் நூல் ஆகும். சிங்களவரின் பூர்வீகம் என்னவாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் என்ன மொழி பேசினாலும், இலங்கையில் பௌத்த மதத்தின் வரலாற்றைக் கூறுவது தான் அதன் நோக்கம். அதற்கு பொருத்தமாக ஒரு ஜாதகக் கதையை தெரிவு செய்துள்ளது. அதாவது, வட இந்தியாவில் புத்த மதம் சார்ந்து பரப்பப் பட்ட ஜாதகக் கதைகளில் விஜயன் கதையும் ஒன்று. அதைத் தான் மகாவம்சம் சில மாற்றங்களுடன் பிரதி எடுத்துள்ளது. ஒரு வேளை, சிங்களவர்கள் இந்துக்களாக இருந்திருந்தால், மகாவம்சமும் இந்து மதத்தை உயர்த்திப் பிடித்திருக்கும். அது இராமனின் கதையில் இருந்து இலங்கையின் வரலாற்றை சொல்லத் தொடங்கி இருக்கும்.

இந்த உண்மையை, தோர் ஹைடர்தாள் தனது குஜராத் பயணத்தின் மூலம் இந்த நூலில் நிரூபிக்கிறார். அவர் குஜராத்தில் பாரூஷ் என்ற பண்டைய நாகரிகம் நிலவிய இடத்தை சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு காணப்பட்ட இந்து சின்னங்கள் மாலைதீவு இடிபாடுகளில் கண்டெடுக்கப் பட்டன. அந்தப் பிரதேசம் ஒரு காலத்தில் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்பு பட்டிருந்தது. அதாவது, குஜராத்தின் பாரூஷ் பிரதேசமும் ஹரப்பா நாகரிகம் நிலவிய இடம் தான். இலங்கைக்கு கடற்பயணம் செய்த விஜயனும், தோழர்களும் குஜராத்தில் இருந்தே சென்றிருக்க வேண்டும். The Maldive Mystery நூலில் எழுதப்பட்டுள்ள இந்த உண்மையை, தற்கால வரலாற்று ஆசிரியர்கள் கூட உறுதிப் படுத்தி உள்ளனர்.

மேற்படி தரவுகளில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம்:

  • இலங்கையில் சிங்களவர்கள் முன்னொரு காலத்தில் இந்து மதத்தை பின்பற்றிய தமிழர்களாக இருந்தவர்கள். வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய குழுவினரின் ஆதிக்கம் காரணமாகத் தான் சிங்களம் என்ற புதிய மொழி தோன்றியது. அதைப் பேசியவர்கள் சிங்களவர்கள் ஆனார்கள். சிங்களம் இந்தோ- ஆரிய மொழியாக வகைப் படுத்தப் படுகின்றது. வட இந்திய குடியேறிகள் கொண்டு வந்த சமஸ்கிருதம், பாளி மொழிகள், தமிழுடன் கலந்து சிங்களம் உருவாகியது.
  • குஜராத்தியர்கள் பேசும் மொழியும் இந்தோ- ஆரிய மொழி தான். அது மட்டுமல்ல, ஹரப்பா நாகரிகம் நிலவிய பாகிஸ்தான் பகுதியில் வாழும் மக்கள் சிந்தி என்ற இன்னொரு இந்தோ- ஆரிய மொழியை பேசுகிறார்கள். இன்றைக்கும் சிந்தி மக்கள் தமது முன்னோர்கள் தான் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியதாக சொல்லிக் கொள்கிறார்கள்.

  • ஹரப்பா நாகரிகம் தமிழர்களுடையது என்று நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் பேசினார்கள், அல்லது அது போன்ற திராவிட மொழியை பேசினார்கள் என்கிறோம். அது உண்மையாயின், அங்கு வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் தாம் பேசிய திராவிட (அல்லது தமிழ்) மொழியை கைவிட்டு விட்டு இந்தோ- ஆரிய மொழியை பேசத் தொடங்கி இருக்கலாம். அவர்கள் இனத்தால் திராவிடர்களாகவும், மொழியால் ஆரியர்களாகவும் இருந்திருக்கலாம். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் காட்டலாம். அந்தப் பிரதேசத்தில் பேசப்படும் பிராஹுய் ஒரு திராவிட மொழி. பலுச்சி ஒரு இந்தோ ஆரிய மொழி. ஆனால், முன்னொரு காலத்தில் பிராஹுய் மொழி பேசிய மக்கள் தான் பிற்காலத்தில் பலுச்சி மொழி பேசுவோராக மாறினார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
  • இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த நாகரிக சமுதாயம், கொலம்பஸ் போன்ற கடலோடிகளாக பிற நாடுகளை கண்டுபிடிக்கும் கடற்பயணங்களை மேற்கொண்டிருக்கலாம். அவ்வாறு கிளம்பிய குழுக்களில் ஒன்று இலங்கையை வந்தடைந்து, அங்கேயே குடியேறி இருக்கலாம். அவர்கள் அங்கு வாழ்ந்த இயக்கர், நாகர் போன்ற பழங்குடி இன மக்களை படுகொலை செய்து, எஞ்சியவர்களுடன் இனக்கலப்பு செய்துள்ளனர். இதே மாதிரியான வரலாறு, உலகின் பிற பாகங்களிலும் நடந்துள்ளது. உதாரணத்திற்கு, கொலம்பஸின் கடற்பயணங்களின் போது கண்டுபிடிக்கப் பட்ட மத்திய அமெரிக்கப் பகுதிகளில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், அங்கு வாழ்ந்த மாயா, அஸ்தேக் பழங்குடி இன மக்களை படுகொலை செய்து எஞ்சியவர்களுடன் இனக்கலப்பு செய்தனர். இன்று மெக்சிக்கோவில் இந்தக் கலப்பினத்தவர் தான பெரும்பான்மையாக உள்ளனர். 

 

இது குறித்து நான் வெளியிட்ட காணொளிப் பதிவு:

1 comment:

சுரேஷ் பாபு said...

இந்த நூலைப் பற்றிய அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி