Wednesday, March 28, 2018

அரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போராட்டம்


Secret of the Nile - எகிப்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றிய அரபு மொழி தொலைக்காட்சித் தொடர். இது Netflix இணைய வீடியோ சேவையில் வெளியாகியுள்ள டிவி நாடகம். ஒரு துப்பறியும் மர்மக் கதையாக விறுவிறுப்பாக செல்லும் இந்தத் தொடர், எகிப்திய சமூகத்தில் ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகளை மிக எளிமையாக விளக்குகிறது. படக் கதை ஐம்பதுகளில் நடக்கிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உடை, உடை, பாவனைகள் தத்ரூபமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

 எகிப்தின் தென் பகுதியில், நைல் நதியோரம் அமைந்துள்ள அஸ்வான் நகரில் உள்ள Grand Hotel தான் கதைக் களம். அங்கு பணிப்பெண்ணாக வேலை செய்யும் தங்கை டோஹாவை தேடி ரயிலில் வரும் கதாநாயகன் அண்ணன் அலியுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒழுங்காக கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்த தங்கையிடம் இருந்து மாதக் கணக்காக எந்தப் பதிலும் இல்லாத படியால் தேடி வருகிறான்.

அஸ்வான் நகரை வந்தடைந்த பின்னர், ஹோட்டல் நிர்வாகம் நகை திருடிய குற்றச்சாட்டில் தங்கையை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக அறிகிறான். தனது சகோதரி திருடி இருக்க மாட்டாள் என்று நம்பும் அண்ணன் அலி, ஹோட்டலில் வேலை செய்யும் அமீனின் நட்பைப் பெற்று, உணவு பரிமாறுபவர் வேலையில் சேர்ந்து கொள்கிறான்.

டோஹா எதையும் திருடவில்லை என்பதும், அவள் காணாமல் போனதிற்கு வேறு காரணம் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. அது பற்றி ஆராயும் அலி, ஹோட்டல் மனேஜருக்கும் டோஹாவுக்கும் இடையிலான காதல் உறவை கண்டறிகிறான். கதாநாயகியான நஸ்லி என்ற மைத்துனியை திருமணம் செய்யவிருக்கும், மனேஜர் மூராட், ஏற்கனவே ஹோட்டலில் வேலை செய்யும் இன்னொரு பணிப்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுகிறான்.

படத்தின் தொடக்கத்தில் காணாமல் போன டோஹா அப்போது கொலை செய்யப் படவில்லை. அவள் பின்னர் ஒரு கட்டத்தில் திரும்பி வந்து ஹோட்டேல் உரிமையாளர் பற்றிய இரகசியக் கடிதத்தை பகிரங்கப் படுத்த நினைக்கையில் தான் கொல்லப் படுகிறாள். இதற்கிடையே கதாநாயகன் அலியுடன் நட்பாகப் பழகும் கதாநாயகி நஸ்லியுடன் காதல் உண்டாகிறது. ஆனால், ஆழமான வர்க்க வேறுபாடு இருவரும் ஒன்று சேரத் தடுக்கிறது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது போன்ற கதை பல தமிழ் சினிமாக்களில் வந்துள்ளன. ஆனால், பணக்கார வீட்டுப் பெண்ணை ஏழைக் கதாநாயகன் காதலிப்பதாக வரும் தமிழ்ப் படங்களில், அதை "அதிர்ஷ்டமாக", அல்லது "காதலின் மகத்துவமாக" காட்டி திசைதிருப்புவார்கள். தப்பித் தவறிக் கூட வர்க்கம் என்ற சொல் படத்தில் இடம்பெறாது.

ஆனால், இந்த அரபி மொழி பேசும் படத்தில் வர்க்கப் பிரச்சினை பற்றிய உரையாடல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. கதாபாத்திரங்கள், சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் வர்க்க முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றார்கள். உதாரணத்திற்கு சீமாட்டி நஸ்லியை காதலிக்கும் ஏழை அண்ணனுக்கு தங்கை அறிவுறுத்துகிறாள். "இந்த மேட்டுக்குடி வர்க்கத்தில் அவள் ஒருத்தி மட்டும் நல்லவளாக இருக்கலாம்... ஆனால் அவள் பிறந்து வளர்ந்த வர்க்கம் எதுவென்பதையும், அதன் குணங்குறிகளையும் மறந்து விடாதே!"

ஆடம்பரமாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினுள், ஹோட்டேல் உரிமை சம்பந்தமாக நடக்கும் சூழ்ச்சிகள், கழுத்தறுப்புகள், காழ்ப்புணர்வுகள் வெளிப்படும் தருணங்களில் அவர்களது நாகரிக முகமூடி கிழிகிறது. மேட்டுக்குடியினர் தமது கௌரவத்தை காப்பாற்ற கொலை செய்வதற்கும் அஞ்சாதவர்கள். போலிஸ் சட்டப் படி கைது செய்தாலும் பணத்தை வீசியெறிந்து வழக்காடி வெல்கிறார்கள். அரசாங்கத்தை வளைத்துப் போடும் செல்வாக்கும் இருக்கிறது.

அதே நேரம், அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களிடையே நிலவும் தூய்மையான அன்பும், பாசமும், காதலும் அவர்களை உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்துகிறது. உதாரணத்திற்கு மனேஜருடனான உறவால் கர்ப்பம் உண்டாகி வஞ்சிக்கப் பட்ட பணிப்பெண்ணை, தனது மனைவியாக ஏற்றுக் கொள்ளும் சக தொழிலாளி அமீன். அதே மாதிரி, மனேஜர் அனுப்பிய கொலையாளியால் கத்தியால் குத்தப் பட்ட பணிப்பெண் டோஹாவை காப்பாற்றி, தனது வீட்டில் மறைத்து வைக்கும் சக தொழிலாளி மஹேர். இத்தகைய கதாபாத்திரங்கள், பணமில்லாத இடத்தில் தான் அன்பிருக்கும் என்பதை நிரூபிக்கின்றன.

வர்க்கப் போராட்டம் என்பது சமூக யதார்த்தம். அது ஒன்றும் "நடைமுறைக்கு உதவாத", "மார்க்சியத் தத்துவம்" அல்ல. வர்க்கப் போராட்டம், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் காண மறுக்கிறோம். உணர மறுக்கிறோம்.

தமிழ் சினிமாக்கள், தமிழ் சீரியல்கள் வேண்டுமென்றே வர்க்க முரண்பாடுகளை மூடி மறைத்து அல்லது திரிபுபடுத்தி தயாரிக்கப் படுகின்றன. அந்த வகையில், வர்க்க முரண்பாட்டு உண்மையை நேரடியாகக் கூறும் இந்த அரபிப் படம் யதார்த்தத்தை தொட்டு நிற்கிறது.

Secret of the Nile என்ற அரபி மொழி டிவி சீரியல் மிக நீளமாக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும் அவிழும் மர்ம முடிச்சுகளால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல், ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும் படம். அனைவரும் அவசியம் பாருங்கள். தமிழ் சமூகத்திற்கும், அரபு சமூகத்திற்கும் இடையில் அடிப்படையில் எந்த வித்தியாசம் இல்லை என்பதை கண்டுகொள்வீர்கள். உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மனிதர்களின் குணம் மாறுவதில்லை. வர்க்கக் குணாம்சமும் மாறுவதில்லை.

- கலையரசன்

1 comment:

senthilnath said...

மார்க்சிய தத்துவம் நடைமுறைக்கு உதவாததா? நீங்கள் கூறியுள்ள அன்றாட வாழ்க்கையில் வர்க்க போராட்டம் என்பதே "மார்க்சிய தத்துவம்" தான்.