Tuesday, March 01, 2016

வட கொரியாவில் யாரும் வரி கட்டுவதில்லை! வீட்டு வாடகை இல்லை!!

வட  கொரியாவில் வீடு இலவசம் 
"எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கட்டாத காரணத்திற்காக, யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றி தெருவில் விடுவதில்லை." இவ்வாறு ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவர் Kim Hyok-Chol, தன்னை சந்திக்க வந்த ஸ்பானிஷ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.

 தூதுவரின் பேட்டியில் இருந்து சில குறிப்புகள்:
- என்ன மாதிரியான அரசமைப்பு சிறந்தது என்று தெரிவு செய்வது அந்தந்த நாடுகளின் உரிமை. உங்களுடைய நாட்டில் உள்ள அமைப்பிற்கும், எமது நாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஊடகவியலாளர்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை வழங்கி எம்மை வில்லத்தனமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

- ஸ்பெயின் நாட்டில் வாடகை கட்டாத காரணத்திற்காக, பல வருடங்களாக வசித்த வீட்டில் இருந்து வெளியேற்றுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தனி மனிதன் வசிப்பதற்கான வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. எமது நாட்டில் வரி கட்டாத அல்லது வாடகை கட்டாத காரணத்திற்காக ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

- வட கொரியாவில் அரசியல் கைதிகள் கிடையாது. அவர்களுக்கான தனிப்பட்ட சிறைச் சாலைகளும் கிடையாது. நாட்டை விட்டோடும் அகதிகள், தமது சுயநலத்திற்காக, பலவிதமான கதைகளை புனைந்து சொல்கிறார்கள். பண வருவாயை எதிர்பார்த்து தம்மை முக்கியமான பிரமுகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். மேற்குலகில் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.

ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவரின் முழுமையான பேட்டி:

******

தென் கொரியாவில் தஞ்சம் கோரிய வட கொரிய அகதிகளின் அவலக் கதை 

தென் கொரியாவில், தஞ்சம் கோரும் வட கொரிய அகதிகள், கம்யூனிசத்தை வெறுப்பதாக ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்! எக்காரணம் கொண்டும் அவர்கள் தாயகம் திரும்ப முடியாது! அப்படி திரும்பிச் செல்வது சட்டவிரோதம்!

தனிப்பட்ட காரணங்களுக்காக தென் கொரியாவில் தஞ்சம் கோரும் வட கொரிய அகதிகள், பின்னர் ஒரு நேரம் தமது தவறை உணர்ந்து தாயகம் திரும்ப விரும்ப முடியாது. தென் கொரியாவில் வசிக்கும் நூற்றுக் கணக்கான வட கொரிய அகதிகள் தாமாகவே திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தென் கொரிய அரசு அவர்களை தடுத்து வைத்துள்ளது!

Kim Ryon Hui பியாங்கியாங் நகரில் ஆடை தயாரிப்பாளராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஒரு மருத்துவர். வட கொரியாவைப் பொறுத்தவரையில், வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். அரசு அவர்களுக்கு பெரியதொரு வீட்டைக் கொடுத்திருந்தது. வட கொரியாவில் கிடைப்பது போல, இலவச வீடு, இலவச மருத்துவம் போன்ற சலுகைகள் பிற நாடுகளிலும் நடைமுறையில் இருப்பதாக அப்பாவித் தனமாக நம்பினார்.

கிம் ஒரு தடவை கடும் நோய்வாய்ப் பட்டதால், சிகிச்சைக்காக சீனாவுக்கு சென்றார். அப்போது தான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் சீனாவில், மருத்துவ சிகிச்சைக்கு நிறையப் பணம் செலவாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் பணத்தை எதிர்பார்த்த படியால், ஒரு உணவு விடுதியில் வேலை செய்தார். ஆனால், அடிமட்ட தொழில் செய்து, மருத்துவ செலவைக் கட்ட முடியவில்லை.

அப்போது, வட கொரிய அகதிகளை தென் கொரியாவுக்கு அழைத்துச் செல்லும், பயண முகவர் ஒருவர் சந்தித்தார். தென் கொரியா சென்று நிறையப் பணம் சம்பாதித்து விட்டு நாடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். அதை நம்பி தென் கொரியா சென்றவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

இவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் பட்டது மட்டுமல்லாது, இனிமேல் எந்தக் காலத்திலும் வட கொரியாவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன் என்று கையெழுத்திட வற்புறுத்தப் பட்டார். அது மட்டுமல்லாது, கம்யூனிசத்தை மறுப்பதாக ஒப்புக் கொண்டு ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

கிம் தென் கொரியா சென்றவுடனேயே திரும்பிச் செல்ல விரும்பினாலும், அது முடியாத காரியமாக இருந்தது. வட கொரிய அகதிகள் தென் கொரியா வருவதற்கு மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது! அவர்கள் திரும்பிச் செல்வது சட்டவிரோதம்!

மேலதிக தகவல்களுக்கு: 
Defector wants to return to North Korea


******
வட கொரிய எதிர்ப்பு  பிரச்சாரத்திற்கு பணம் கிடைக்கும் 

வட கொரியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் நிறையப் பணம் கிடைக்கும்! வட கொரியாவில் என்ன நடக்கிறது என்ற செய்திகள் வெளியுலகை அடைவதில்லை. அதனால், அங்கிருந்து வெளியேறி தென் கொரியாவில் அடைக்கலம் கோரும் அகதிகளிடம் இருந்தே தகவல்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், வட கொரியாவில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்று எதிர்மறையான தகவல்களை கூறுவோருக்கு நிறையப் பணம் சன்மானமாக வழங்கப் படும். இதனால் பணத்திற்கு ஆசைப் பட்டு பலர் பொய்யான கதைகளை புனைந்து சொல்கிறார்கள்.

வட கொரியாவில் நடந்தாக சொல்லப்படும், சித்திரவதைகள், கொலைகள், அட்டூழியங்கள் எந்தளவுக்கு கொடூரமாக விவரிக்கப் படுகின்றதோ, அந்தளவு அதிக பணம் கிடைக்கும். கதைக்கு ஏற்றவாறு 500 அமெரிக்க டாலர்கள் வரையில் கொடுக்கிறார்கள். பின்னர் அந்தக் கதைகளை சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு விற்று பெருமளவு இலாபம் சம்பாதிக்க முடியும். 

Why do North Korean defector testimonies so often fall apart?

1 comment:

SaraK said...

இன்று கூட தமிழ் தொலைக்காட்சியில் வட கொரியா, அணு ஆயூதத்தை விட கொடிய ஹைட்ரொஜன் வெடி குண்டுகளை பரிசோதனை செய்தாக தகவல்கள் வந்தள்ளது. இது மற்ற நாடுகளை அச்சுருத்துவதான் இருக்கிறது என கூடுதல்.