Sunday, November 22, 2015

ISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல!


ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம்.

விவிலிய நூலின் இறுதி அத்தியாயமான வெளிப்பாடு, இறுதிக் காலத்தில் ஆண்டவரின் தீர்ப்பு வழங்கும் செயல்களை குறிப்பிடுகின்றது. பைபிளுக்கும், குரானுக்கும் இடையிலான ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. 

இஸ்லாத்தின் இறைதூதரான முகமது நபி வார்த்தைகளை குறிப்பிடும் ஹதீஸ் நூலின் ஒரு பகுதி உள்ளது. அந்த தீர்க்கதரிசனத்தை நாம் நம்புவதும், நம்பாததும் வேறு விடயம். ஆனால், அதிலிருக்கும் சில வாசகங்கள், நமது காலத்தில் இயங்கும் ISIS என்ற தீய சக்தியை இனங் காட்டுவதாக எழுதப் பட்டுள்ளன என்பது சுவாரஸ்யமானது.

//அல்லாவின் தூதுவர் சொல்வதைக் கேட்டேன்: இறுதிக் காலத்தில் பக்குவப்படாத சிந்தனை கொண்ட, இளைஞர்கள் தோன்றுவார்கள். ஆனால், படைப்புகளில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிக் கொள்வார்கள். அவர்கள் குரானை ஓதினாலும், அது அவர்களது தொண்டைக் குழிக்குள் இறங்காது. நீங்கள் அவர்களை சந்தித்தால் கொன்று விடுங்கள். இந்தக் கொலைக்காக, தீர்ப்பு வழங்கும் நாளன்று அல்லா உங்களுக்கு பரிசளிப்பார். // (The Book of Zakat, Chapter 48: Exhortation to kill the Khawarij. http://sunnah.com/muslim/12/206http://sunnah.com/bukhari/61/118)   

அதே நூலில் Kitaab Al Fitan இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் தெரிவிக்கின்றது. ISIS தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை "இஸ்லாமிய தேசம்" என்று பிரகடனம் செய்துள்ளனர். அதை அரபியில் "டாவ்லா" (Dawla) என்கிறார்கள்.

Kitaab Al Fitan நூல், இரும்பு மனம் படைத்த, "டாவ்லாவின் (தேசத்தின்) கையாட்கள்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. அவர்கள் நீண்ட முடி வளர்த்திருப்பார்கள். கருப்புக் கொடி ஏந்தி இருப்பார்கள் என்று கூறும் வாசகங்கள், இன்றைய ISIS அமைப்பினருக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அது மட்டுமல்லாது ஒப்பந்தங்களை மீறுவார்கள் என்றும், ஊரின் பெயரை வைத்திருப்பார்கள் என்றும் கூறுகின்றது. ISIS தலைவர் அபுபக்கர் அல் "பாக்தாதி", பாக்தாத் என்ற ஊர்ப் பெயரை வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. (ISIS and the End of Times;  http://splendidpearls.org/2014/07/04/isis-and-the-end-of-times/)

ISIS, ஓர் இஸ்லாமிய விரோத சக்தி என்பதை, ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும், இன்னமும் ISIS "இஸ்லாத்தின் பெயரால்" போராடுவதாக, அதன் உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் மட்டுமே நம்புகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களான தீவிர வலதுசாரிகளும், ISIS இன் இருப்பை நியாயப் படுத்துவதற்காக, அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இருப்பது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.


லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியின் கெரில்லா இராணுவம், ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னர், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி (LCP) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை நடத்தி இருந்தது. கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், தற்போது சிரியா நாட்டு எல்லையோரம் உள்ள பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லாவும், கடந்த சில வருடங்களாக ISIS எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. (https://www.youtube.com/watch?v=UD_IbVi9eyo)

இருப்பினும், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு மதச் சார்பற்ற அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சுன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம், கிறிஸ்தவர்கள், டுரூசியர்கள் போன்ற அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும், கட்சி உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக உள்ளனர். (http://www.aljazeera.com/news/2015/09/lebanese-communist-fighters-gear-battle-isil-150919100740425.htmlஇஸ்லாமிய மதத்தின் பெயரில் இயங்கும், ISIS போன்ற தீவிரவாதக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கு, "உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று என்று அறிவுரை கூறும் மேதாவிகளுக்கு ஒரு விண்ணப்பம்.

உலகில் உள்ள எல்லா மதத்தவரையும் போன்று, முஸ்லிம்கள் எல்லோரும் மதவாதிகள் அல்லர். மேற்கத்திய பண்பாட்டை பின்பற்றும் மதச் சார்பற்ற முஸ்லிம்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். சோஷலிசத்தில், கம்யூனிசத்தில் அல்லது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதைத் தாங்கள் அறிவீர்களா? நீங்கள் அப்படியான முஸ்லிம்களை ஆதரிக்கலாமே?

உதாரணத்திற்கு, கடந்த மூன்று வருடங்களாக, சிரியாவின் வடக்கில் உள்ள குர்திய படையணிகள் ISIS தீவிரவாதிகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை காலமும் நடந்த யுத்தத்தில், ஆயிரக் கணக்கான ISIS தீவிரவாதிகளை கொன்றுள்ளனர்.

பெரும்பான்மையான குர்தியர்கள், மதத்தால் முஸ்லிம்கள் தான். ஆனால், மதச்சார்பற்ற, சமதர்ம கொள்கையை நம்பும் முஸ்லிம்கள். ஆகவே, அப்படியான முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு உங்களுக்கேன் தயக்கம்?

"முஸ்லிம்கள் எல்லாம் மதவெறியர்கள்" என்று ஒரு பக்கச் சார்பான கதைகளை கூறி புலம்புவதை விட்டு விட்டு, மதச் சார்பற்ற முஸ்லிம்களை ஆதரிக்கும் ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கலாமே?

9 comments:

இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே said...

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை. மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் கூறும் இந்த முஸ்லிம்களோ பெயரால் மட்டுமே முஸ்லிம்கள். இங்கு பிரச்சினை என்னவெனில் எப்போது அவர்கள் இஸ்லாத்தை குறித்து அதிகம் தெரிந்து கொள்கிறார்களோ அன்று அவர்களுக்கு ISIS ன் செயல் சரியாகப் படுகிறது. இன்று இஸ்லாம் குறித்து படித்த பல அறிஞ்சர்களும் ISIS எதிராக பேசுகிறார்கள் என்றால் அது உண்மையில் இஸ்லாம் குறித்த உலக மக்களின் பார்வையை மற்றுவதர்க்காகத்தான். ஆனால் உண்மையில் இஸ்லாம் என்ற கருத்தியல் முகம்மது வாழ்ந்து காட்டிய வழி முறை என்பது இன்று ISIS செய்யும் செயல்தான். ஆம் எல்லா மதங்களையும் போல இஸ்லாமிலும் சில நல் உபதேசங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இது எல்லாம் மதத்தின் விளிம்புநிலை மக்களையும் மற்ற மதத்தினரையும் கவர்வதற்காகவே பயன்படுத்தபடுகிறது. ஆனால் இஸ்லாமின், முகம்மதின் வாழ்க்கையை முழுமையாக வரலாற்று அறிவுடன் அறியும் அவர் செய்த வன்முறைகளை நியாயப்படுத்தும் எவருக்கும் இந்த ISIS ன் செயல் நியாயமானதே. அதனால் இஸ்லாம் என்கிற கருத்தியல் மாற்றப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். இல்லையேல் இது மீண்டும் மீண்டும் இந்த பரிணாமம் எடுக்கும் என்பதே உண்மை. Althaf X

இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே said...

"//அல்லாவின் தூதுவர் சொல்வதைக் கேட்டேன்: இறுதிக் காலத்தில் பக்குவப்படாத சிந்தனை கொண்ட, இளைஞர்கள் தோன்றுவார்கள். ஆனால், படைப்புகளில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிக் கொள்வார்கள். அவர்கள் குரானை ஓதினாலும், அது அவர்களது தொண்டைக் குழிக்குள் இறங்காது. நீங்கள் அவர்களை சந்தித்தால் கொன்று விடுங்கள். இந்தக் கொலைக்காக, தீர்ப்பு வழங்கும் நாளன்று அல்லா உங்களுக்கு பரிசளிப்பார். // (The Book of Zakat, Chapter 48: Exhortation to kill the Khawarij. http://sunnah.com/muslim/12/206, http://sunnah.com/bukhari/61/118"

மிகவும் என்னை வருத்தப்பட வைக்கும் பதிவாக நான் பார்க்கிறேன். உங்களை போன்ற சிந்தனை உடையவர்களிடம் இருந்து நான் ஒருபோதும் எதிர்பாராத ஓன்று இந்த வரிகள். நான் தமிழ் நாட்டில் பிரபல்யமான அடிப்படைவாத இயக்கத்தின் தீவிர ஆதரவு அளிப்பவனாக இருந்த பொழுது எங்களுக்கு அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தொழுவதற்கு அனுமதி கிடையாது. அப்படியே தொழுகை செய்தாலும் அவர்களின் கொள்கைப்படி தொப்பி அணியவேண்டும், விரல் அசைக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள். அப்போது அந்த பள்ளிகளில் எங்களை எதிர்க்கும் விதமாக இந்த வாசங்களை சுவரில் எழுதி வைத்தனர். நீங்கள் இன்று ISIS குறிக்க பயன்படுத்திய இந்த ஹதீஸ் அன்று எங்களை போல தவ்ஹீத் வாதிகளை குறிக்க பழைய ஜமாத்துக்காரர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆகையால் இதுபோன்ற வாசகங்கள் எல்லாக் காலங்களிலும் யாரையேனும் குறிக்க பயன்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இது கைரேகை பார்ப்பவன் கூறும் செய்தி போல் கிட்டத்தட்ட அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கும் விஷயங்களை பொதுவாக குறிப்பிட்ட ஒரு செய்தியே.

ஆனால் தற்காலங்களில் உங்களுடைய எழுத்து ISIS க்கு எதிராக காட்ட அடிப்படை வாத முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிப்பது போல் உள்ளது. இந்த பதிவுகளை முஸ்லிம்கள் அவர்களின் முகநூலில் அவர்களுக்கு ஆதரவான பதிவாக பகிரவே இது உதவுமே தவிர வேறு ஒன்றும் அல்ல. இதுவரை இந்தியாவில் உள்ள உலமாக்களால் கண்டு பிடிக்க முடியாத விஷயமல்ல இது. ஆனால் அவர்களின் ஆதரவு இதுபோன்ற அமைப்புகளுக்கு எப்போதும் உண்டு. வெளியில் பிரகடனப்படுத்த முடியாவிட்டாலும் மனதளவில் அவர்கள் அதரவு அளிப்பவர்கள்தான். நான் குறிப்பிடுவது இஸ்லாமை நன்கு படித்தறிந்த முஸ்லிம்களை அல்லாமல் சாதாரண பெயரால் மட்டும் இஸ்லாமியனாக உள்ளவனை அல்ல. ஆகையால் இது போன்ற பதிவுகள் மூலம் அவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டாம்.

kumar said...

யோவ் நீ நெசமாவே முஸ்லீமா இல்ல நீயும் பெயர்தாங்கி தானா?
** மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.**
வார்த்தைய பார்த்தா பாய்ங்கல்ல 2% நல்லவங்க தேறினாலே யதேஷ்டம்
அப்படீங்கிற மாதிரி தோணுது.

** எப்போது அவர்கள் இஸ்லாத்தை குறித்து அதிகம் தெரிந்து கொள்கிறார்களோ
அன்று அவர்களுக்கு ISIS ன் செயல் சரியாகப் படுகிறது **

இது இன்னும் மோசம்.ஆக கூடி இஸ்லாத்த முழுசா புரிஞ்சிகிட்ட எல்லா
முஸ்லீமும் தீவிரவாதின்னு முத்திரையே குத்திட்ட.

** ஆனால் உண்மையில் இஸ்லாம் என்ற கருத்தியல் முகம்மது வாழ்ந்து
காட்டிய வழி முறை என்பது இன்று ISIS செய்யும் செயல்தான்.**

நாசமா போறவனே! RSS காக்கி டவுசர் கும்பலுக்கே தோணாத
கோணத்தில எல்லாம் சிந்திக்கிறியே? எப்படிப்பா?

Unknown said...

ஒருவன் இறுதி நபியை மரியாதையில்லாமல் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்பவன் முஸ்லிம்கிடையாது,முதலில் தெரிந்து கொள்வேண்டிய விசயம் இறைதூதர் போல வேற யாரும் போரின் போதும் மனிதாபிமானத்தை வெளிபடுத்தியதுக்கிடையாது,ஒருதலைபட்சமாக பேசக்கூடாது பைபிளில் எண்ணாகமம்:31 ல் குறிப்பிடும் மோசேவின் போர் நடத்தையைவிட மோசமானது கிடையாது அதைப்பற்றிக் கேட்டால் மழுப்பலாக பதில் கிடைக்கும்.எப்படி பார்த்தாலும் அடிமகளைபற்றிதான் பேச்சைத்திருப்புவீர்கள்,அடிமைப் பெண்களை வலுக்கட்டாயமாக உறவு கொள்வது தடுக்கப்பட்டுள்ளது அதற்கு தண்டனை இம்மையிலும் மறுமையிலும் மோசமானது.

Unknown said...

முதலில் அந்த திவிரவாதிகளுக்கு ஆதரவு தருவது முதலாளித்துவ நாடுகள்,அரேபிய நாடுகளை வீழ்த்த தீவிரவாதிகள் துடுப்புகளாக பயப்படுகின்றனர்,அங்குள்ள கச்சா எண்ணெய் திருடி விற்பதால் பிபாய் 39டாலர்களுக்கு கீழே வந்துவிட்டது மேலும் அமெரிக்காவில் இருக்கும் கச்சா எண்ணை சந்தைக்கு வந்தால் அரேபிய நாடுகளின் பொருளாதாரரீதியாக ஆட்டம் கண்டு அவர்கள் இப்போது செய்யும் எதிர்தாக்குதலி்ல் பின்னடைவு ஏற்படும்.

Unknown said...

இந்த திவிரவாதிகள் அரேபியர்களை வலுயிழக்கச்செய்து அதன் மூலம் சியோனிச ஐரோப்பிய யூதர்கள் எதிர்ப்பில்லாமல் நாட்டை விரிவடைய செய்யும் யுக்தி.

Unknown said...

althaf muslim peyar thanki

Unknown said...

althaf first nenga muslim patri arindulirgala rss kaikooli

Unknown said...

நபியவர்கள் ஒருபோதும் வன்முறையை வரவேற்காத பட்சத்தில் இந்த தீவிரவாதிகள் செய்யும் அநியாயங்களை நபியவர்களின் செயலுக்கு ஒப்பிட்டுக் கூறுவது வியப்படைய செய்கிறது. நபியவர்களின் யுத்தக் கொள்கைகளை சற்று ஞாபகப்படுத்த வேண்டும்.
* மதஸ்தலங்களை, கட்டிடங்களை சேதப்படுத்தக்கூடாது.
* அப்பாவியான பெண்களை, சிறுவர்களை, வயோதிபர்களை, நோயாளிகளை கொலை செய்யக் கூடாது. அவர்களைத் துன்புறுத்தக்கூடாது
* உணவுக்காகவன்றி பிராணிகளைக் கொல்லக் கூடாது
* கனி தரும் மரங்களை வெட்டக் கூடாது
இது போன்ற பல சட்டதிட்டங்களை கவனத்தில் கொண்டு தான் யுத்தங்களை மேற்கொண்டார்கள். அதுவும் அல்லாஹ்வின் பெயரால் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் தோல்வி நேரும் என்ற பட்சத்தி்ல் தான் யுத்தத்தை ஆதரித்தார்கள். இன்றைய இந்ந கருநாகங்களிடம் அத்தகைய ஒரு பண்பாவது உள்ளதா சொல்லுங்கள். இதில் ஒன்றையாவது பின்பற்றியுள்ளார்களா? எப்படியென்றாலும் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை விட அதனை கண்டிக்கிறது என்பதே உண்மை. இறைவனுக்கு சொந்தமான உயிரை எடுக்கும் உரிமை ஒரு சில விதி விலக்குகளைத் தவிர்த்து யாருக்கும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.