Saturday, October 15, 2011

"ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!


[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பதினொன்று )


1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: "இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்." சிங்கள தேசிய பார்வையில்: "வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி".

Tarzie Vittachi எழுதிய “Emergency ’58" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.

1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன.

"சந்தையில் உள்ள ஓட்டை" என்று வணிகத்தில் கூறுவது போல, "பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.

மறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. "ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் "சமஷ்டிக் கட்சி" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக "சிங்களம் மட்டும்" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. "தமிழ் மட்டும்" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.

தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, "சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடும்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் "ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்" இறங்கியது. "செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்," என்று பிரச்சாரம் செய்தது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.

பக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, "தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள "ஸ்ரீ" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්‍රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் "ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன.

"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது!" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவு பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, "பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், "சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்." என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண்டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், "வேலை நிறுத்தம் தமிழரின் சதி!" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்டாரநாயக்க கொலையில் இவர்களின் பங்கிருந்தது கண்டறியப் பட்டது. பண்டாரநாயக்க அரசில் பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகளின் செல்வாக்கு உயர்ந்ததால், அதிருப்தியடைந்த வலதுசாரி சக்திகள், தமக்குள் ஒன்றிணைய ஆரம்பித்தன. இந்த சக்திகள், பல தரப்பட்ட பின்னணியை கொண்டவை. நில உச்சவரம்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலவுடமையாளர்கள் மற்றும் பௌத்த பிக்குகள். தேசியமயமாக்கல் கொள்கையால் நிறுவனங்களை பறிகொடுத்த முதலாளிகள். இவர்கள் எல்லோரும், எதிர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தனர்.

அநேகமாக, பேரூந்து வண்டி நிறுவன முதலாளிகளே, தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். காலனிய காலத்தில் அறிமுகப் படுத்திய, மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமான பேரூந்து வண்டிகள் யாவும், தனியார் வசம் இருந்தன. தரகு முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில், பேரூந்து வண்டி உரிமையாளர்கள் பல சலுகைகளை அனுபவித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, தேர்தல் காலத்தில் உழைக்கும் மக்களை இலவசமாக ஏற்றிக் கொண்டு வந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்க வைப்பார்கள். அந்தக் காலத்தில் அது சட்டவிரோதமாக கருதப் படவில்லை. பண்டாரநாயக்க அரசு, பேரூந்து வண்டிகளை தேசியமயமாக்கியதற்கு, ஐ.தே.கட்சியின் தேர்தல் மோசடி ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், உழைக்கும் மக்களுக்கு அதனால் பலன் கிடைத்தது. அரச மானியம் கொடுத்து, சீட்டுகளின் விலை குறைக்கப் பட்டது. மாணவர்களுக்கு சலுகை விலையில், பருவகால சீட்டுகள் விற்பனை செய்யப் பட்டன.

தனியார் பஸ் வண்டிகள் யாவும், "இலங்கை போக்குவரத்து சபை" (இபோச) என்ற அரச நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன. இபோச யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய புதிய பஸ் வண்டிகளில், சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" நடந்தது. இளைஞர்களின் கல்வீச்சுக்கு ஆளான பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி பொலிஸ் நிலையம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். அப்போது பொலிஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால், போலீசார் சுட்டதில் சிலர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் யாழ் குடாநாட்டில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. இந்தப் போராட்டம் ஓய்ந்து ஒரு மாதம் முடிவதற்குள், தெற்கில் இடதுசாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் நடந்தது.

தேசியமயமாக்கல் கொள்கையால் விழிப்புணர்வு பெற்ற இபோச ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகளான இலவச மருத்துவ காப்புறுதி, ஓய்விடம், ஊதிய உயர்வு போன்றன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் தோன்றிய குழப்ப நிலையை, முன்னை நாள் முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். தமது பிழைப்பைக் கெடுத்த அரசை கவிழ்க்க இதுவே தக்க தருணம் எனக் கண்டுகொண்டனர். 1958 இனக்கலவரத்தின் பின்னணியில், முன்னாள் பஸ் வண்டி முதலாளிகளின் கை மறைந்திருந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது. ஆனால், அதனை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. இனவெறியை வளர்த்து, சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு, வலதுசாரி முதலாளிய சக்திகள் திரைமறைவில் முயன்று வருகின்றன. அந்த சக்திகளுக்கு இடையிலான இரகசிய தொடர்பு, இன்று வரை துலங்காத மர்மமாகவே நீடிக்கின்றது.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

3 comments:

Mohamed Faaique said...

எப்போ இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததோ அப்போதே, மக்களின் சுதந்திரமும் போய் விட்டது போலும்... சுதந்திரம் பெற்று ஒவ்வொருவரும் சண்டையிட்டு கொள்வதை விட, எல்லோரும் ஒன்று பட்டு எதிர்த்த ஆங்கிலேய ஆட்சி நல்லது போலிருக்கு...

Pena said...

1958இல் எனக்கு 8வயது.அப்போது நாங்கள் அனுராதபுரம் பழையநகரில் அல்லைகட்டு வீதியில் குடியிருந்தோம்.சின்னயாழ்ப்பாணம் என்று அந்தப்பகுதி அப்போது பிரபல்யம் பெற்றிருந்தது.தமிழர் ஒருவர் நகரசபையின் தலைவராக இருந்தார்.இராணுவ வாகனத்தில் நாங்கள் வவுனியாவிற்கு பாதுகாப்பு(?)கருதி அனுப்பி வைக்கப்பட்டோம்.பின்பு அந்தப்பகுதி புனிதநகராகப் பிரகடனம்(?) செய்யப்பட்டது.இன்று எல்லாம் பொய்யாய் பெருங்கனவாய் போய் விட்டதே?

aotspr said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com