Tuesday, March 16, 2010

சுவிட்சர்லாந்து ஈழத்தமிழரின் காலனியாகிறதா?


(1994 , தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் சுவிட்சர்லாந்தின் செயலை விமர்சித்து "தமிழ் ஏடு" பத்திரிகையில் எழுதிய கட்டுரை.)

"ஒரு சிறிய நாடான சுவிட்சர்லாந்து இலங்கை அகதிகளின் மிகப்பெரிய குடியேற்ற நாடாக இருக்க முடியாது." சுவிஸ் அகதிகளுக்கான அமைச்சுக் காரியாலய முன்னாள் நிர்வாகி "தமிழ் ஏடு" வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்த கருத்துகளே இவை. இதனை இன்னும் அழுத்தமாக, இன்று சுவிஸ் அரசு தமிழர்களுக்கு புரிய வைத்து வருகின்றது. தற்பொழுது சுவிட்சர்லாந்தில் வாழும் அகதிகளின் எண்ணிக்கை 25000 க்கும் மேல் (1994 கணக்கெடுப்பு) என BFF (அகதிகளுக்கான சமஷ்டி அலுவலகம்) தெரிவிக்கின்றது. சுவிஸ் அகதிகள் தொகையில் இரண்டாவது பெரும்பான்மையினராக இலங்கைத் தமிழர்கள் திகழ்கின்றனர்.

எது எப்படியிருப்பினும், இலங்கை அகதிகளை திருப்பியனுப்பும் திட்டத்தை பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் கண்டித்துள்ளன. பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை, என நிரூபிக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு, அப்பாவி அகதிகளை அனுப்பி வைப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பது தெளிவு. இவற்றினால் சுவிட்சர்லாந்தை " ஒரு மனிதாபிமானம் மறந்த நாடாகவே" பலர் பார்க்கும் நிலையை தோற்றுவிக்கின்றது. இரண்டாவது உலகப்போர் காலகட்டத்தில், ஜெர்மனியில் இருந்து நாசிகளின் இன அழிப்புக்கு அஞ்சி, தப்பியோடி வந்து அடைக்கலம் கோரிய யூத அகதிகளை வெளியேற்றிய கறை படிந்த வரலாறு ஒன்றும் சுவிட்சர்லாந்திற்கு உண்டு. அதை இன்று பலர் நினைவுபடுத்தல் தவிர்க்கவியலாதது.

செல்வந்த மேற்கைரோப்பிய நாடுகள் தமது மனிதாபிமானத்தை பறை சாற்றிக் கொள்வதற்காக, போரால் பாதிக்கப்பட்ட அகதிகளை அழைத்து, அரவணைத்து, அடைக்கலம் கொடுத்தன. பின்னர் தம் தேசம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் போது, அதே அகதிகளை குற்றஞ்சாட்டி வெளியேற்றுவதும் இன்றைய ஐரோப்பிய அரசியல்!

சுவிட்சர்லாந்தும் இத்தகைய அரசியலுக்கு விதிவிலக்கானதல்ல. அத்தோடு பழமைவாதிகளின் வற்புறுத்தலும் சேர்ந்து கொள்கின்றது. ஐரோப்பாவிலேயே மிகக் குறைந்த வேலையற்றோர் எண்ணிக்கையை கொண்ட சுவிட்சர்லாந்து, அந் நிலைமைக்கும் (வேலையில்லாப் பிரச்சினை) அகதிகளை காரணமாகக் காட்டுவது முற்றுமுழுதாக ஏற்கக் கூடியதல்ல. மேலும் நடைபெற்ற ஐரோப்பிய சமூக இணைப்பிற்கான வாக்கெடுப்பில், பெரும்பான்மை சுவிஸ் குடி மக்களின் எதிர்ப்பும், அதற்கு காரணமாக வெளிநாட்டவர் பெருக்கத்தை சுட்டிக்காடியுள்ளமையும் அகதிகள் குறைப்புக்கு அஸ்திவாரமாக அமைந்து விட்டது. இனி அடுத்து வரும் காலங்களில் மீண்டும் ஒரு இணைப்பிற்கான வாக்கெடுப்பு நடைபெறும். அதற்கான தயார் படுத்தலாகவே அகதிகள் வெளியேற்றத்தை கருத வேண்டியுள்ளது.

காரண காரியங்கள் எவையாக இருப்பினும், சுவிஸ் அரசின் செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பேரினவாத அரசுக்கு சாதகமாகவே அமைந்து விடுகின்றன. இதேவேளை புலம்பெயர்ந்த நாடுகளில் தொடரும் தமிழரின் குற்றச் செயல்களும் நாடுகடத்தலை துரிதப்படுத்துவதாகவே உள்ளன. ஒரு சிலரின் தன்னலம் சார்ந்த செயல்களால் முழுத் தமிழினமும் பாதிக்கப்படுகின்றது.

(தமிழ் ஏடு, ஜூலை-ஆகஸ்ட் 1994 )

[குறிப்பு: "ஏடிட்டோர் பக்கம்" என்ற தலைப்பின் கீழ் தொடர்ச்சியாக வந்த எனது பத்தி எழுத்துகளின் ஒரு பகுதி இது.]


(பிற்குறிப்பு: சம்பந்தப்பட்ட சுவிஸ் அமைச்சு அதிகாரியின் கருத்து, தீவிர வலதுசாரிக் கட்சிப் பிரச்சாரத்திலும் எதிரொலிக்கின்றது. சுவிட்சர்லாந்து தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் குடியேற்ற நாடாகி வருவதாக, நீண்ட காலமாக தேர்தலில் பிரச்சாரம் செய்த SVP கட்சி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. வெளிநாட்டவர் குறித்த அச்சவுணர்வு சாதாரண பிரஜை முதல், அரச மட்டம் வரை காணப்படுகின்றது.)

2 comments:

sknachiya said...

what about kalki Baghwan,for a last few weeks we heard some bad news.but now only i saw u and this site as an follower of him

Kalaiyarasan said...

Dear Sknachiya, this site is NOT follower of kalki baghwan. Perhaps you misunderstood the video song.