Saturday, December 20, 2025

1986 டிசம்பர், EPRLF தடை செய்யப்பட்ட அ‌ந்த 7 நாட்கள்...


1986, டிசம்பர், TELO, PLOTE இந்த வரிசையில் இறுதியாக EPRLF இயக்கமும் புலிகளால் தடை செய்யப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு:

புலிகள் TELO வை அழித்த பின்னர் EPRLF மீது கைவைக்க மாட்டார்கள் என்று அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நம்பினார்கள். அதற்கு காரணம் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏனைய இயக்கங்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. (ஆனால் அந்தளவுக்கு ஆயுத பலம் இருக்கவில்லை.)

குறிப்பாக, 1986 ம் ஆண்டு TELO அழிக்கப்பட்ட பின்னரான காலங்களில், டிசம்பர் மாதம் தடை செய்யப்படும் வரையில் EPRLF புலிகளை விமர்சிக்கும் பொது கூட்டங்களை நடத்தி இருந்தது. இருப்பினும் அந்த எதிர்ப்பு அஹிம்சா வழியில் இருந்ததே தவிர, எந்தக் கட்டத்திலும் வன்முறை பிரயோகிக்கப் படவில்லை. அதை விட EPRLF க்கு கீழே பல வெகுஜன அமைப்புகள் இயங்கின. இது போன்ற காரணங்களினால் புலிகளால் தம்மை அழிக்க முடியாது என்று EPRLF காரர்கள் நினைத்து இருக்கலாம்.

திடீரென ஒரு நாள் EPRLF தடை செய்யப்பட்டுள்ளது என புலிகள் அறிவித்தனர். அப்போது கூட எந்த இடத்திலும் ஆயுதமேந்திய எதிர்ப்பு இருக்கவில்லை. அதற்கு காரணம் EPRLF ஒரு சகோதர யுத்தத்திற்கு தயாராக இருக்கவில்லை. ஒருவேளை இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்த படியால், ஏற்கனவே EPRLF மேல் மட்ட தலைவர்கள் இந்தியாவுக்கு சென்று விட்டனர். ஒன்றுமறியாத இடை மட்ட தலைவர்களும் சாதாரண உறுப்பினர்களும் அகப்பட்டுக் கொண்டனர்.

இராணுவ சுற்றிவளைப்பு மாதிரி புலிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று EPRLF உறுப்பினர்கள், ஆதரவாளர்களை கைது செய்து சிறைப் பிடித்துச் சென்றனர். பெற்றோர் தமது பிள்ளைகளை கையளிக்க வேண்டுமென நிர்ப்பந்திக்க பட்டனர். "சிங்கள இராணுவத்திடமிருந்து கூட தப்பலாம். ஆனால் புலிகளிடமிருந்து தப்ப முடியாது. முன்பு இராணுவத்துக்கு பயந்து ஒளிந்த மாதிரி புலிகளுக்கு பயந்து எங்கேயும் ஒளிய முடியாது..." என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

உண்மையில், இராணுவ சுற்றிவளைப்புகளில் இளைஞர்களை கைது செய்து முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மாதிரி தான், மாற்று இயக்கங்களை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் புலிகளின் இராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். EPRLF உறுப்பினர்களில் முக்கியமானவர்கள், அதாவது தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களை மாத்திரம் தெரிந்தெடுத்து தனியாக கொண்டு சென்றனர். அவர்களை விடுவிக்கவில்லை. ஏனையவர்கள், அதாவது சாதாரண உறுப்பினர்களை, பச்சை மட்டை அடி போட்டு இனிமேல் EPRLF உடன் சேரக் கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்க பட்டனர்.

ஈழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக "பச்சை மட்டை அடி" என்ற சொல் வழக்கு அப்போது தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அதன் அர்த்தம் வேறு. பொதுவாக இராணுவம் சாதாரண இளைஞர்களை பிடித்து சில நாட்கள் தடுத்து வைத்திருந்து (பச்சை மட்டை) அடி போட்ட பின்னர் விடுதலை செய்யும். தமிழ் மக்களின் பார்வையில், அன்று புலிகளின் நடவடிக்கையும் அவ்வாறு தான் அமைந்திருந்தது. 

மேலதிக தகவல்: புலிகள் EPRLF இயக்கத்தை தடை செய்த அதே காலகட்டத்தில் சிங்கள இராணுவம் முகாம்களை விட்டு வெளியேறவில்லை. இத்தனைக்கும் இராணுவ முகாம்களை சுற்றி இருந்த இடங்களில் காவலரண்கள் வெறுமையாக இருந்தன. காரணம் அங்கு காவல் கடமையில் இருந்த EPRLF உறுப்பினர்களும் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதே நேரம் EPRLF எதிர் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சி காவல் கடமையில் இருந்த LTTE உறுப்பினர்களும் விலக்கப்பட்டு இருந்தனர். 

உண்மையில் சிங்கள இராணுவம் நினைத்திருந்தால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவ நடவடிக்கை எடுத்து முன்னேறி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஒருவேளை இந்த தமிழ் ஆயுதபாணி இயக்கங்கள் தமக்குள் சண்டையிட்டு அழிந்து போவார்கள், அதனால் தமக்கு வேலை மிச்சம் என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.

Saturday, December 13, 2025

"மா(வெள்ளாள)மனிதர்" குமார் பொன்னம்பலத்தின் சாதிவெறி சிந்தனை!

 


ஆதிக்க சாதி வெள்ளாள மேலாதிக்க மனப்பான்மையுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமையை கோரிக்கையை மறுத்த குமார் பொன்னம்பலம் என்ற ஒரு கபட வேடதாரியை "மாமனிதர்" என்று கொண்டாட வெட்கமாக இல்லையா? 

"சாதி என்ற சிந்தனை இருக்க கூடாது..." என்று யாரை நோக்கி அறிவுரை கூறுகிறார்? 

அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட, மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுக்க "சிறுபான்மை தமிழர் மகாசபை" மற்றும் "தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்" ஆகிய சமநீதி அமைப்புகளில் அணிதிரண்டு, விகிதாசார அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவம் கோரி போராட்டம் நடத்திய சிறுபான்மை சமூகங்களை (ஒடுக்கப்பட்ட பஞ்சம சாதியினர்) பார்த்து "சாதி அடிப்படையில் சிந்திக்காதீர்கள்!" என்று அந்த மக்களின் உரிமைப் போரா‌ட்ட‌த்தை கொச்சைப் படுத்துகிறார். 

ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் அன்று "சிறுபான்மைத் தமிழர்" அடையாளத்துடன் தான் அரசியலில் ஈடுபட்டனர்.  ஏனென்றால் தமிழ்த் தேசியம் பேசிய வெள்ளாள கட்சிகளில் அவர்களுக்கு இடமில்லை. ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் உரிமைகளை பற்றி அந்த கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பேசியதே இல்லை. அத்தகைய சூழ்நிலையில் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒரு அரசியல் இயக்கமாக அணி திரள்வது  தானே முறை? 

அதை இந்த "மா(ங்காய்) மனிதர்" குமார் பொன்னம்பலம்  எப்படி திரிக்கிறார் என்று பாருங்கள்: "சாதி அடிப்படையில் கூட்டம் நடத்த கூடாது!" அந்தக் காலகட்டத்தில் குமாரின் தமிழ்க் காங்கிரஸ் முழுக்க முழுக்க வெள்ளாள சாதிக் கட்சியாக தான் இயங்கியது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், தேர்தல்  வேட்பாளர்கள் மட்டுமல்ல, வாக்காளர்கள் கூட வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் தான். அத்தகைய பின்னணியில் இருந்து கொண்டு "சாதி அடிப்படையில் கூட்டம் நடத்தக் கூடாது..." என்று அறிவுரை கூறுவது முரண்நகை இல்லையா? ஊருக்கு தான் உபதேசம். 

தொடர்ந்து அந்த மாமனிதர், மன்னிக்கவும் மண்ணாங்கட்டி மனிதர், இவ்வாறு சாதிய வன்மம் கக்கி இருக்கிறார்: "சாதி என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகள் மனதில் சாதிப் பாகுபாட்டை புகு‌த்துகிறார்களாம்!" 

இதை எந்தக் காலகட்டத்தில் சொல்கிறார்? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்த அறிவுரையை கூறுகிறார்.  வெள்ளாள சாதிவெறி காடையர்கள் உரிமைப் போராட்டம் நடத்திய இளைஞர்களை வெட்டிக் கொலை செய்தது மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசை வீடுகளுக்கு நெருப்பு வைத்து வெறியாட்டம் ஆடிய காலத்தில்  குமார் பொன்னம்பலம் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி இந்த அறிவுரையை கூறி இருக்கிறார்.அத்தகைய மனிதன் எப்பேர்ப்பட்ட அயோக்கியனாக இருப்பான்? 

இவர்கள் தான், குமார் பொன்னம்பலத்தின் பாணியில் சொன்னால், "இன அடிப்படையில் கூட்டங்கள் நடத்தி, குழந்தைகள் உள்ளத்தில் இனப் பாகுபாட்டை புகுத்தியவர்கள்." 

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். வெள்ளாளர் தமிழர்களுக்கு அடித்தால் நல்லிணக்கம் பேசுவார்கள். ஆனால் சிங்களவர் வெள்ளாளருக்கு அடித்தால் தனி ஈழம் கேட்பார்கள். இது தான் இவர்களது கபட நாடகம். 

Saturday, August 16, 2025

அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா?

அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா? 

எழுதியவர்: MLM Mansoor 


கடந்த வெள்ளிக்கிழமை 'சிரச' தொலைக்காட்சியின் 'சட்டன' அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது.

எவ்விதமான பதற்றமோ சங்கட உணர்வுகளோ இல்லாமல் உச்ச மட்ட தன்னம்பிக்கையுடன் அவர் கேள்விகளை எதிர்கொண்ட லாகவம், வலிந்து வரவழைத்துக் கொள்ளாத இயல்பான நிதானம், எவரையும் ஆகர்ஷிக்கக் கூடிய மெல்லிய சந்தோசத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி ஆகிய அனைத்தும் அவருக்கேயுரிய தனித்துவமான பண்புகள்.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரப் போக்குகள் (Macro Economy) குறித்து புள்ளி விபரங்களுடன் கூடிய தெளிவான ஒரு சித்திரத்தை முன்வைத்த அவர், அதனுடன் நின்றுவிடவில்லை. வெவ்வேறு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் ஆகியோர் வழங்க வேண்டிய விரிவான தகவல்களை (துல்லியமான தரவுகளுடனும், பொருத்தமான உதாரணங்களுடனும்) முன்வைத்தார். மூன்றரை மணி நேரம் நெடுகிலும் எவ்வித தொய்வோ, தடுமாற்றங்களோ சொற்களைத் தேடுவதற்கான கால தாமதங்களோ எவையுமில்லாமல் ஒரே சீராக ஒலித்தது அவருடைய குரல்.

1978 - 2024 காலப் பிரிவில் ஜனாதிபதி பதவியை வகித்த எண்மரில் எவரும் இந்த அளவுக்கு ' Homework' உடன் வந்து ஊடகவியலாளர்களை சந்தித்த வரலாறு கிடையாது. அதேபோல தனது அரசாங்கம் முன்னெடுக்கப் போகும் ஒட்டுமொத்த சீர்த்திருத்த நிகழ்ச்சிநிரலை (Comprehensive Reform Agenda) இவ்வளவு தெளிவாக, ஆணித்தரமாக எடுத்து விளக்கும் திறனையோ அல்லது தமது சிந்தனைகளை கோர்வையாக தொகுத்து சரளமான மொழியில் வெளிப்படுத்தும் ஆற்றலையோ அந்த முன்னைய எண்மரில் எவரும் கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மை.

அந்த வகையில், அநுர குமாரவின் வசீகர ஆளுமைக்கும் (Charismatic Personality), தனித்துவமான தலைமைத்துவப் பண்புகளுக்கும், தொடர்பாடல் திறனுக்கும் சவால் விடுப்பதற்கு இன்று எதிர்க்கட்சியிலோ அல்லது ஆளும் கட்சியிலோ எவரும் இருந்து வரவில்லை என்பது நிதர்சனம். 

ஜனாதிபதியை நோக்கி 'அண்டப் புளுகன்' மற்றும் 'அந்தரே' (அரசவை கோமாளி) போன்ற வசைச் சொற்களை வீசுவதைத் தவிர, ஆக்கபூர்வமான திட்டங்கள் எவற்றையும் முன்வைக்கும் திராணியை இன்றைய எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை. கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இந்த அளவுக்குப் பலவீனமான, மக்களிடமிருந்து வெகு தூரம் விலகிப்போயிருக்கும் ஓர் எதிர்க்கட்சி இருந்து வரவில்லை என்றே சொல்ல வேண்டும். இவ்வருடம் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதம் ஓர் அரசியல் சக்தியாக NPP விசுவரூபமெடுத்து வருவதையும், SJB, SLFP மற்றும் SLPP போன்ற கட்சிகள் வீழ்ச்சியையும், சீரழிவையும் நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருப்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டியது.

ஜனாதிபதி கனவில் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க மற்றும் திலித் ஜயவீர போன்றவர்கள், முன்னர் எடுத்து விளக்கப்பட்ட அநுர குமாரவின் சிறப்புத் தகுதிகளை எட்டும் விடயத்தில் இன்னமும் வெகு தூரம் பின்தங்கியவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

பொருளாதாரத்தில் உடனடியாக ஒரு மீட்சி நிலையை எடுத்து வந்து, விலைவாசிக் குறைப்பு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் என்பவற்றின் வடிவில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்ற யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கும் அரசாங்கம் வேறு சில துறைகளில் முழுக்க முழுக்க கவனஞ் செலுத்தும் ஓர் உத்தியை பின்பற்றி வருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. 

அந்தப் பின்புலத்திலயே, 'அரசியலிலும், அரச நிர்வாக யந்திரத்திலும் வேரூன்றியிருக்கும் இலஞ்சம், ஊழல், வீண் விரயம் மற்றும் முறைகேடுகள் என்பவற்றை இல்லாதொழிப்போம்' என்ற சுலோகத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். அது மறைமுகமாக பொருளாதார மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் வழிகோல முடியுமென்பது அரசாங்கத்தின் கணிப்பு.

கூட்டாக கொள்ளையடிக்கும் ஓர் உத்தியாக அரசியல்வாதிகளுக்கும். அரசு அதிகாரிகளுக்குமிடையில் இதுவரையில் நிலவு வந்திருக்கும் கள்ளக் கூட்டை (Politician - Bureaucracy Nexus) முடிவுக்கு கொண்டு வருவது இதற்கான முதற்படி. ஜனாதிபதி சுட்டிக் காட்டியதைப் போல அது இப்பொழுது நிகழ்ந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அரச அதிகாரிகள் மட்டத்தில் மேலோங்கியிருக்கும் இலஞ்ச / ஊழல் கலாசாரத்தை முற்றாக ஒழிப்பதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

ராஜபக்ச எதிர்ப்பை மையப் புள்ளியில் வைத்து இனவாத / மதவாத சக்திகளை பலவீனப்படுத்தி, முறியடிப்பதே அரசாங்கத்தின் அடுத்த முன்னுரிமை. ஒரு சில அரச சார்பு சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் இதற்கென இப்பொழுது களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், NPP அரசாங்கத்துக்கும் நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவளித்து வரும் யூடியூபர்களில் முதன்மையானவரும் முக்கியமானவரும் 'Sudaa' எனப் பிரபல்யமடைந்திருக்கும் சுதத்த திலகசிரி. அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களின் மறைமுக ஆசீர்வாதத்துடனும், அனுசரணையுடனும் அவர் செயல்பட்டு வருவதாக பரவலாக நம்பப்படுகிறது. (அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட பொலீஸ் பாதுகாப்பு தொடர்பாகவும் பலர் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.) 

தனியாகவும், இன்னொருவருடன் இணைந்தும் அவர் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு காணொளிகளை அவருடைய யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். 

சிங்கள யூடியூப் உலகில் சுதாவின் எதிர்த்தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் முன்னணி நபர் இராஜ் வீரரத்ன; ராஜபக்சகளின் - குறிப்பாக இப்பொழுது நாமல் ராஜபக்சவின் - அடியாள் என்று சொன்னால் தப்பில்லை. இவ்விருவருக்குமிடையில் இடம்பெற்று வரும் உக்கிரமான சண்டைகள் - அவை பொருட்படுத்தக்கூடிய அரசியல் அலசல்களையோ அல்லது தர்க்கரீதியான வாதங்களையோ கொண்டிராவிட்டாலும் கூட - அவற்றின் வசைகள். இரட்டை அர்த்தம் தொனிக்கும் பகடிகள் மற்றும் இதுவரையில் எவரும் பொது வெளியில் பேசத் துணியாத சிங்கள தூஷண வார்த்தைகள் என்பவற்றுக்காக பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.

"நாட்டின் பொதுசன அபிப்பிராயத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு சக்தியாக சுதத்த திலகசிரி போன்றவர்கள் எழுச்சியடைந்திருப்பது பெரும் துரதிர்ஷ்டம். ஆனால், இன்றைய சமூக ஊடக உலகில் அது ஒரு விதத்தில் தவிர்க்க முடியாதது" என்கிறார் மூத்த இடதுசாரி சிந்தனையாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான தீப்தி குமார குணரத்ன.

NPP அரசாங்கம் குறித்து எதிர்க்கட்சிகளாலும், அரச எதிர்ப்பு யூடியூப் தளங்களாலும் முன்வைக்கப்பட்டு வரும் கடுமையான விமர்சனங்களை அரசாங்க அமைச்சர்களோ அல்லது புதுமுகங்களான நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ தனித்து நின்று எதிர்கொள்ள முடியாது என்பதனை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. காட்சி ஊடகங்களில் தோன்றி, எதிரிகளை வாயடைக்கச் செய்யக்கூடிய அளவுக்கு எதிர்வாதங்களை முன்வைக்கும் திறனோ அல்லது முறையான தொடர்பாடல் பயிற்சியோ அரசாங்கத்திலிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்று சொல்லலாம்.

ஒரு விதத்தில் அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு பாத்திரத்தையே (அரசாங்கத்தின் சார்பில்) சுதத்த திலகசிரி வகித்து வருகிறார். 

கலரியை இலக்கு வைத்து அவர் வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் இந்த வேலைக்கு பிறதொரு தளத்தில் நின்று குறைநிரப்புச் செய்கிறார் 'History with Nirmal' என்ற யூடியூப் தளத்தை நடத்தி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி (அரசு ஆதரவு நிலைப்பாட்டில் நின்று) இலங்கையின் சமகால அரசியல், சமூகப் பிரச்சினைகளை அவர் இந்த யூடியூப் தளத்தில் அலசுகிறார். ஜனாதிபதி அநுர குமாரவின் நகர்வுகளுக்கான கோட்பாட்டு மற்றும் நடைமுறைசார் பின்புலத்தை வழங்குவதற்கும் முயற்சித்து வருகிறார்.

சுதத்த திலகசிரியின் யூடியூப் தளத்தில் தீவிர சிங்கள இனவாத தர்ப்புக்களை இலக்கு வைத்து முன்னெப்பொழுதும் இருந்திராத அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் தலையசைப்பு இருந்து வருவதாகவே தெரிகிறது. தலதா கண்காட்சியின் போது கண்டி நகரப் பள்ளிவாசல்களை திறந்து வைத்து, முஸ்லிம் சமூகம் காட்டிய சமய நல்லிணக்கத்திற்கான முன்மாதிரியை பெரிதும் சிலாகித்து அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதனுடன் இணைந்த விதத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது முன்வைத்த துணிச்சலான வசைச் சொற்கள்; டாக்டர் ஷாபியின் மகளின் A/L பெறுபேறுகளை குறிப்பிட்டு அத்துரலியே ரதன தேரர், விமல் வீரசன்ச, உதய கம்மன்பில மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோருக்கு சாபமிடும் விதத்தில் வெளியிட்ட காணொளி ஆகிய அனைத்தும் இனவாதிகளின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தி, அதன் மூலம் அவர்களை பலவீனப்படுத்தும் நோக்குடன் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சிநிரலின் அங்கங்களாகவே தென்படுகின்றன.

டாண் பிரியசாத் அஞ்சலி உரையில் பலங்கொட கஸப்ப தேரர் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் ஜிஹாத் தீவிரவாதிகள் டாண் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்த கருத்தும் சிங்கள சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது.

இவை அனைத்தும் தீவிர சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வரும் தரப்புக்களுக்கும், NPP அரசாங்கத்துக்குமிடையில் ஒரு மோதல் நிலை (Confrontation) தோன்றியிருப்பதையே காட்டுகின்றன. அவை அடுத்து வரும் மாதங்களில் மேலும் தீவிரமடைய முடியும்.

"திசைகாட்டியின் வெற்றி சிங்கள பௌத்தர்களின் தோல்வி" என்ற தலைப்பில் யூடியூப் தளமொன்றில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் முன்னணி பிக்கு ஒருவர் - 

''புத்தசாசனம் மற்றும் சமய விவகாரங்கள் என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சராக கிறிஸ்தவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; திட்டமிட்டே செய்யப்பட்டிருக்கும் காரியம் இவர்கள் 'நிராகமிக' (எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள்) அல்ல; இலங்கையிலுள்ள ஏனைய மதங்களை மதிக்கும் அதே வேளையில், பௌத்த மதத்தை மட்டும் இழிவுபடுத்துபவர்கள்."

"கல்துவ ஆரண்ய புண்ணியஸ்தலத்தின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு வேலைகளை தொடர்ந்து கடற்படையினரே செய்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்தத் தடவை அதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது 'ஒரு மணித்தியாலத்துக்கு 93,000 ரூபா வீதம் செலுத்தினால் மட்டுமே அந்த வேலைகளை பொறுப்பேற்க முடியும்' என்று ஒரு கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது."

கடந்த மார்ச் மாதம் இறுதிப் பகுதியில் அமரபுர பீடத்துக்கு சொந்தமானது எனக் கூறப்படும் யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் ஒரு புதிய மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதனையொட்டி இடம்பெற்ற சமயக் கிரியைகளின் போது பாதுகாப்புப் பணியிலும், அதேபோல அன்னதானங்களை விநியோகிக்கும் வேலையிலும் பெருந்தொகையான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இராணுவ பாண்ட் வாத்தியக் குழுவொன்றும் அங்கு பிரசன்னமாகியிருந்தது. ஆனால். இராணுவத் தளபதியிடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பையடுத்து அங்கிருந்து உடனடியாக இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. .

இதனைக் கண்டித்து விமல் வீரவன்ச கொழும்பில் நடத்திய ஒரு ஊடக மாநாட்டில் ஜனாதிபதி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அப்பொழுது அவர் சொன்ன ஒரு விடயம் இது:

"அரசாங்கத்தின் முக்கியமான தலைவர் ஒருவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை அழைத்து மிகவும் கண்டிப்பான ஒரு பணிப்புரையை வழங்கியிருக்கிறார். 'வடக்கு கிழக்கில் இருக்கும் தொல்லியல் அமைவிடங்களை இனிமேல் பௌத்த தொல்லியல் அமைவிடங்கள் என்றோ அல்லது இந்து தொல்லியல் அமைவிடங்கள் என்றோ அழைக்கக் கூடாது' என்பதே அப்பணிப்புரை. இது பௌத்த தொல்லியல் அமைவிடங்களுக்கு பிற்காலத்தில் இந்துக்கள் உரிமை கோரும் ஒரு நிலைமையை நிச்சயமாக எடுத்து வரும்".

இது தொடர்பாக அமரபுர பீடத்தைச் சேர்ந்த கலாநிதி புஸ்ஸல்லாவே சோமவிசுத்தி மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் உள்ள பின்வரும் வ்ரிகளை வீரவன்ச வலியுறுத்திக் கூறி, மேற்கோள் காட்டியிருந்தார்:

''வேற்று மதத்தவரான இராணுவத் தளபதி இதிலும் பார்க்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே எமது கருத்தாகும்."

எளிதில் உணர்வுகளைத் தூண்டக் கூடிய பிரச்சினைகளை (Sensitive Issues) அரசாங்கம் மிகவும் நிதானமாக கையாண்டு வரும் அதே வேளையில், ஏற்கனவே ஸ்தாபிதமாகியிருக்கும் 'தவறான முன்னுதாரணங்களை' படிப்படியாக களைவதற்கு தேவையான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பதனையும் மேற்படி இரு சம்பவங்களும் காட்டுகின்றன.

'கடந்த காலத்தில் நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நோக்கியிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் நாங்கள் அதிகமும் சிங்கள மக்கள் தொடர்பாக தான் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம்.' என 'சட்டன' நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒரு மெல்லிய குற்ற உணர்வுடன் சொன்னதையும் ஜேவிபி தரப்பில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சிந்தனை மாற்றமாக இருந்து வருகிறது எனக் கருதலாம்.

அது தவிர, தந்ததாது கண்காட்சி தொடர்பாக நேர்ந்த ஒரு சில குளறுபடிகளையடுத்து, தியவடன நிலமே நிலந்த தள பண்டாரவை இலக்கு வைத்து சுதா யூடியூப் தளம் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தாக்குதல்கள் இப்பொழுது உச்ச கட்டத்தை எட்டியிருக்கின்றன. தலதா மாளிகை நிதிகளை தியவடன நிலமே துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்று வருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் சுதா. அதற்கான ஆதாரங்களை அடுத்து வரும் நாட்களில் முன்வைக்கப் போவதாகவும் அவர் தள பண்டாரவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

தியவடன நிலமே தெரிவுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களின் இடம்பெறவிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இஸ்லாமோபோபியாவை மூலதனமாகக் கொண்டு கடந்த 13 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்திருக்கும் ஞானசார தேரர் இப்பொழுது முதல் தடவையாக தான் எதிரியாக கருதும் ஓர் அரசாங்கத்தை (Hostile Government) எதிர்கொள்கிறார். அண்மையில் அவர் நடத்திய ஊடகச் சந்திப்புகளில் ஒரு வித பதற்றமும், அச்சமும் சூழ்ந்த உடல்மொழியை அவர் வெளிப்படுத்திக் காட்டியதை உன்னிப்பாக பார்க்கும் பொழுது அவதானிக்க முடிந்தது. 

2010 - 2015 மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும், 2015 - 2019 நல்லாட்சி அரசாங்கத்திலும், அதே போல 2019 கோட்டாபய அரசாங்கத்திலும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருந்து வந்தார்கள். ஆனால் இப்போழுது நிலைமை மாறியிருக்கிறது. ஞானசார தேரரின் அந்தரங்க வாழ்க்கை தொடர்பான ஒரு சில காணொளிகளை வெளியிட வேண்டி நேரிடலாம் என்ற விதத்தில் சுதா அவருக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையும் ஒரு வேளை அவருடைய எதிர்கால செயல்பாடுகள் மீது தாக்கம் செலுத்த முடியும். எத்தகைய ஆதாரங்களையும் முன்வைக்காமல் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த கட்டுக் கதைகளை பரப்பி, சிங்கள மக்களுக்கு மத்தியில் ஒரு இனம் புரியாது அச்சத்தையும், மறுபுறம் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பதற்ற உணர்வையும் தோற்றுவிக்கும் அவருடைய வழமையான நடைமுறையை இனிமேலும் தொடர முடியுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி, குமார குணரத்னத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 'அந்தரே' என்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு செயற்பாடுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றை கையாள்வது அநுர குமார திசாநாயக்க எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான ஒரு சவாலாக இருந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கதாநாயகனாக பார்க்கப்படுவாரா அல்லது வில்லனாக பார்க்கப்படுவாரா என்பது மீண்டும் நாட்டில் தலைத்தூக்க தொடங்கியிருக்கும் இனவாதிகளையும், மத வெறியர்களையும் அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அமையும்!


நன்றி:

(பேஸ்புக்கில் MLM Mansoor எழுதிய பதிவு, மே 5, 2025)

Saturday, August 02, 2025

JVP இன் சிங்கப்பூர் பாணி "சகோதரத்துவ தினம்" - கறுப்பு ஜூலைக்கு வெள்ளை அடிக்கிறதா?


ஜூலை 21-23; சிங்கப்பூர், இலங்கையில் நடக்கும் "இன சகோதரத்துவ தினம்" கறுப்பு ஜூலைக்கு வெள்ளையடிக்கும் செயலா?  

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவுகூரும் அதே காலகட்டத்தில் ஆளும் NPP(JVP) அரசாங்கம் "சகோதரத்துவ நாள்" என்ற பெயரில் பேரணி நடத்தியதை பலர் கண்டித்தனர் அல்லது கடுமையாக விமர்சித்தனர். இது "ஜூலை படுகொலைக்கு வெள்ளை அடிக்கும் செயல்" என்றும், "ஜேவிபி யின் பேரினவாத மனநிலை" என்றும், தமிழ்த் தேசிய வாதிகள் மட்டுமல்லாமல் சில தமிழ் அறிவுஜீவிகள் கூட குற்றஞ்சாட்டினார்கள். வேறு சிலர் இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதை நடத்த தேர்ந்தெடுத்த காலகட்டம் தவறு என்றார்கள். அதை விட "தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டார்கள்" என்பன போன்ற எதிர்ப்புக் குரல்களும் கேட்டன.

உண்மையில் இலங்கையில் சிறுபான்மை இனமான தமிழர்கள் இந்த "இன சகோதரத்துவ பேரணியை" முன்னெடுத்து இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சிங்கப்பூர் உதாரணம் காட்டுவது தமிழ்த் தேசியவாதிகளின் வாடிக்கை. உண்மையில் இவர்கள் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிந்திக்கிறார்களே தவிர சிங்கப்பூர் எவ்வாறு இன முரண்பாடுகளை தீர்த்து கொண்டு முன்னேறியது என்பதை கவனிக்க தவறுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த செல்வநாயகம் ஒரு மலேசிய பிரஜை. அவராவது இந்த வரலாற்றை கூறி இருக்கலாம். சரி, அதை விடுவோம். 

ஒரு காலத்தில் சிங்கப்பூர் இனப்பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு. 1964 ம் ஆண்டு மிகப்பெரிய இனக் கலவரம் நடந்தது. அது வரை காலமும் நட்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த சீனர்களும், மலேயர்களும் ஜென்ம பகைவர்களாக நடந்து கொண்டனர். சீனர்களின் பிரதேசத்தில் மலேயர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மலே பிரதேசத்தில் சீனர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அன்றைய கலவரத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள், சொத்து அழிவுகள் நடந்துள்ளன. 

1964 இனக்கலவரத்தின் பின்னர் சிங்கப்பூர் ஆட்சியில் இருந்த பிரதமர் லீ குவான் யூ பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஒவ்வொரு இனமும் தனித் தனியாக தமக்கான பிரதேசங்களில் வாழ்ந்த நிலையை மாற்றியமைக்க புதிய நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப் பட்டன. அங்கு எல்லா இன மக்களும் கலந்து வாழும் வகையில் குடியமர்த்த பட்டனர். புதிய அரசமைப்புச் சட்டம் இன அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருப்பதை தடுக்கிறது. இதன் மூலம் சீன பெரும்பான்மை இன கட்சியாக இருந்தாலும், மலே அல்லது தமிழ் சிறுபான்மை இனங்களை "பிரதிநிதித்துவ படுத்தும்" கட்சிகளாக இருந்தாலும் ஏனைய இனங்களை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். 

சிங்கப்பூரில் ஜூலை 21 இன நல்லிணக்க தினம் என அறிவிக்கப் பட்டது. அந்த நாளில் தான் 1964 ம் ஆண்டு இனக் கலவரம் நடந்தது. அதனை "மலே சிறுபான்மையினர் மீது சீன பெரும்பான்மையினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் அல்லது இனவழிப்பு" என்று தான் மலே தேசியவாதிகள் கூறி வந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் "ஜூலை 21 இன நல்லிணக்க நாள்" என்பது "கறுப்பு ஜூலைக்கு வெள்ளை அடிக்கும் செயல்!" தான். ஆனால் காலப் போக்கில் சிங்கப்பூரில் வாழும் மூவின மக்களாலும் இன நல்லிணக்க தினம் ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது. 

சிங்கப்பூரில் சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட PAP, இலங்கையில் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட JVP ஆகிய இரண்டு கட்சிகளும் சிறுபான்மையின தேசியவாதிகள் பார்வையில் "பேரினவாத கட்சிகள்" என அழைக்கப் படலாம். ஆனால் அது தவறு. சிங்கப்பூர் PAP, இலங்கை JVP இரண்டுமே இடதுசாரிய கண்ணோட்டத்தில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை உண்டாக்கும் நோக்கம் கொண்ட கட்சிகள். இன முரண்பாடுகளை கடந்த பொருளாதார முன்னேற்றம் சிங்கப்பூரில் சாத்தியம் என்றால் ஏன் இலங்கையில் சாத்தியம் இல்லை?

Saturday, April 12, 2025

மலேசியாவின் "ஈழப் பிரச்சனை"! பலர் அறியாத மலே பேரினவாத ஒடுக்குமுறை!!

 
இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இடையில் சில அதிசயப் படத் தக்க ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு நாடுகளிலும் இனப்பிரச்சனைக்கான மூல காரணம், தேர்தலில் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்திய ஆட்சியாளர்களின் பேரினவாத கொள்கை, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் எல்லாமே ஒரே மாதிரி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

👇👇👇


1. தேசிய இனங்கள்:

இலங்கை/மலேசியா

72% பௌத்த சிங்களவர்/ இஸ்லாமிய மலேயர்.

12% இந்து தமிழர்/ பௌத்த சீனர் 

7% முஸ்லிம்கள்/ இந்துக்கள் (தமிழர்கள்). 

இரண்டு நாடுகளிலும் இரண்டாவது பெரும்பான்மை இனம் தான் பெரும்பான்மை இனத்தின் பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப் பட்டது. அதாவது இலங்கையில் தமிழர்கள் மாதிரி மலேசியாவில் சீனர்கள். பெரும் நகரங்களில் அரசுத் துறைகளில், வணிகத்தில் சிறந்து விளங்கியதால் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவரின் பொறாமைக்கும், வெறுப்புக்கும் ஆளாகினர். எங்கேயும் இனப் பிரச்சினைக்கு பின்னால் இருப்பது பொருளாதார பிரச்சினை தான்.

2. ஆட்சி மொழி:

இலங்கையிலும்,  மலேசியாவிலும் ஆரம்பத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. 

இலங்கையில் 1956 தேர்தலில் பெருமளவு சிங்கள வாக்குகளை வென்ற SLFP சிங்களத்தை ஆட்சி மொழி ஆக்கியது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலில் பெருமளவு மலேயா வாக்குகளைப் வென்ற Pan- Malayan Islamic Party மலே மொழியை ஆட்சி மொழி ஆக்கியது. 

3. இனக் கலவரம்:

இலங்கையில் 1956 தேர்தலுக்கு பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலுக்கு  பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கோலாலம்பூர் நகரில் சீனர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. நூற்றுக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். அது மலே- சீன இனங்களுக்கு இடையில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியது. 

உண்மையில் இலங்கையை விட மலேசியாவில் தான் சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறை மிகக் கடுமையாக உள்ளது. 

குறிப்பாக, மலேசிய பிரஜைகள் அனைவரும் அரசமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். (பெரும்பான்மை இனத்தவருக்கு சிறப்புரிமை வழங்குகிறது என்றெல்லாம் விமர்சிக்க முடியாது.) பிற மதத்தவர்களும் 

இஸ்லாமிய மதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். (முன்னுரிமை அல்ல, அதற்கும் மேலே!) 

அதை விட, "சர்ச்சைக்குரிய" விஷயங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப் பட்டுள்ளது. அதாவது மலே இனத்தவரின் உரிமைகள் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மொழிப் பிரச்சினை பற்றி பேச முடியாது. 


பிற்குறிப்பு:

இவ்வளவு அடக்குமுறை இருந்திருந்தால் ஏன் மலேசியாவில் சீனர்கள் தனி நாடு கேட்டு ஆயுத போராட்டம் நடத்தவில்லை என்று யாராவது கேட்கலாம். 2 ம் உலகப் போர் காலத்தில் இருந்து ஒரு தசாப்த காலமாக கம்யூனிஸ்டுகளின் ஆயுத போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் சீனர்கள். கணிசமான அளவில் மலேயர், தமிழர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இன வேற்றுமை கடந்த வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதில் மலேசிய அரசும், முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களும் உறுதியாக இருந்தனர். அயல் நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த மாதிரி மலேசியாவில் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. 

சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு காணப் பட்டதால் தான் சிங்கப்பூரை தனி நாடாக பிரித்து கம்யூனிச எதிர்ப்பாளர் லீ குவான் யூவிடம் கொடுத்தனர். மலேசிய அரசும் அதை தனக்கு சாதகமான விஷயமாக பார்த்தது. அப்போது தானே இஸ்லாமிய- மலே பேரினவாத கொள்கையை முழு வீச்சில் செயற்படுத்த முடியும்?