Wednesday, March 16, 2022

எனது பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுள்ளது!

 நண்பர்கள் அனைவருக்கும்அறியத்தருவது,

 

எனது பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுள்ளது. புதிய கணக்கையும் திறக்க முடியாது. அதை Artificial Intelligence (AI) தொழில்நுட்பம் உடனே கண்டுபிடித்து விடுகிறது. 

ஆகவே இதுவரை காலமும் என்னை பேஸ்புக்கில் பின்தொடர்ந்தவர்கள் பின்வரும் தளங்களுக்கு வர வேண்டுகிறேன்:

Twitter

@kalaiy https://twitter.com/kalaiy

vk.com (இது "ரஷ்ய பேஸ்புக்". இலவசம். ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம்.) 

VK இல் எனது ID: https://vk.com/kalaiyarasan

 You Tube

கலையகம்: https://www.youtube.com/channel/UCJHMD0ISt5Laqu8mP1U_fxA

 odysee.com (இது யூடியூப் பாணியிலான வீடியோ தளம்.)

கலையகம்: https://odysee.com/@KalaiMarx:7


உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நன்றி, 

வணக்கம்.


Thursday, March 03, 2022

உக்ரைன் போர் Special Report - காணொளிப் பதிவுகள்

 உக்ரைன் போர் Special Report 



ரஷ்யா- உக்ரைன் போர் பின்னணி | அரண் செய் நேர்காணல்



ரஷ்யாவின் புதிய உலக ஒழுங்கு: "உக்ரைன் நாஸி எதிர்ப்பு போர்"

 


உக்ரைனில் தலைதூக்கும் நிறவெறித் தாக்குதல்கள் 



Saturday, February 19, 2022

தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்!


தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்! ஆம், நீங்கள் சரியாகத் தான் வாசித்தீர்கள். வட கொரியா அல்ல,தென் கொரியா தான். இது பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் தென்கொரியர்கள் பற்றிய தகவல் அல்ல. (அதுவும் நடக்கிறது தான்.) ஆனால், கிம்மின் "சர்வாதிகார" ஆட்சி நடக்கும் வடகொரியாவில் இருந்து தப்பியோடி, சுதந்திரமாக வாழ்வதற்காக "ஜனநாயக" ஆட்சி நடக்கும் தென் கொரியாவில் தஞ்சம் கோரிய அகதிகள் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள்.

தென் கொரியாவில் தஞ்சம் கோரி வாழ்ந்து வந்த வடகொரிய அகதியான Han Sung-ok எனும்  42 வயது தாயும், அவளது ஆறு வயது மகனும் வீட்டில் சாப்பிட எதுவுமில்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். ஆமாம், முதலாளித்துவ சொர்க்கபுரியான ஒரு "செல்வந்த" நாட்டில், ஒரு குடும்பம்  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தது செத்த அவலம் நடந்திருக்கிறது! (ஆதாரம்: She fled North Korea for a better life. She died with her young son in an apartment in Seoul

இந்த சம்பவம் நடந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன. இருப்பினும்,  இந்தக் கொடுமை தென் கொரியாவில் நடந்த படியால்பெருமளவில் ஊடகக் கவனத்தை பெறவில்லை. இதுவே வடகொரியாவில் நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஊடகங்கள் எல்லாம் மாறி மாறி ஒப்பாரி வைத்து கதறி அழுதிருப்பார்கள். என்ன செய்வது? அவர்கள் இறந்தது முதலாளித்துவ சொர்க்கபுரியான தென் கொரியாவில் அல்லவா? அதனால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள். 

அந்தத் தாயும் மகனும் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு தண்ணீர் மீட்டர் அளக்க வந்த பரிசோதகர், ஒரு வீட்டிலிருந்து வித்தியாசமான மணம், பிண வாடை வந்த படியால், உடனடியாக பொலிசிற்கு அறிவித்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்த நேரம், அந்த வீட்டிற்குள் இரண்டு அழுகிய பிணங்களும் வெறுமையான குளிர்சாதனப் பெட்டியும் இருந்தன. அவர்கள் மாதக் கணக்காக சாப்பாடு எதுவும் இல்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். 

ஏற்கனவே அந்தக் குடும்பத்தினர் பல மாதங்களாக வீட்டு வாடகை, எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியாமல் அவதிப் பட்டிருக்கிறார்கள். பில்லுக்கு மேல் பில் என, கடனுக்கு மேல் கடன் சேர்த்து வைத்திருந்திருக்கிறார்கள். வேலையுமின்றி, அரச உதவியுமின்றி, தெருவில் உணவுக்காக பிச்சை கேட்டு கையேந்த வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளே பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள். 

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் வட கொரியாவில் இருந்திருந்தால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்கள். வட கொரியாவில் யாரும் வீட்டு வாடகை கட்டுவதில்லை. எல்லோரும் சொந்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். எரிபொருள் கட்டணம் மிக மிகக் குறைவு. தண்ணீருக்கு செலவே இல்லை. எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதனால் வருமானம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானியத்தில் கிடைக்கின்றன. அதனால் யாரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால், நமது தமிழ் ஊடகங்கள் என்ன சொல்கின்றன? வட கொரியாவில் மக்கள் எல்லோரும் பட்டினி கிடப்பதாக புளுகுகின்றன. சாப்பாடு இல்லாமல் புல்லைத் திண்கிறார்கள் என்று ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவார்கள். அதையும் நம்புவதற்கு நாட்டில் ஏராளமான முட்டாள்கள் இருக்கிறார்கள். 

அது சரி, தென் கொரியாவுக்கு வருவோம். பனிப்போர் காலத்தில் தென் கொரியாவுக்கு வந்த வட கொரிய அகதிகளுக்கு, அரசு தாராளமாக நிதியுதவி செய்தது. அகதிகள் வந்தவுடன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து, வீட்டு வசதிகளையும் செய்து கொடுத்து வந்தது. உண்மையில் வடகொரியாவில் வாழ்பவர்களுக்கு வசதி, வாய்ப்புகள், பணம் மீதான ஆசை காட்டி அவர்களை தென் கொரியாவுக்கு வரவழைக்கும் வகையில் கவர்வது தான் அதன் நோக்கம். 

ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு தென் கொரிய அரசு வட கொரிய அகதிகளுக்கு நிதி ஒதுக்குவது படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பனிப்போர் முடிந்த பின்னர், உலக ஒழுங்கு மாறி விட்டது. மேலும், அந்தக் காலகட்டத்தில் வட கொரியாவில் வரட்சி, வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சம் ஏற்பட்ட படியால் பெருமளவு அகதிகள் வந்து விடுவார்கள் என்று அஞ்சி இருக்கலாம். தொண்ணூறுகளுக்கு பின்னர், வட கொரிய பொருளாதாரம் மாற்றமடைந்து, தென் கொரிய நிறுவனங்களும் முதலிடும் வகையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் வந்து விட்டது. அதனால் தற்போது எந்தவிதமான சித்தாந்த முரண்பாடுகளும் கிடையாது. 

வட கொரியாவில் வறுமை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதனால், வடகொரியாவில் இருந்து செல்லும் அகதிகள், தென் கொரியாவுக்கு பிழைப்பு தேடிச் செல்கிறார்கள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆனால், அவர்கள் அறியாத உண்மை ஒன்றுள்ளது. தென் கொரியாவிலும் வறுமை இருக்கிறது. அது வட கொரிய வறுமையை விட பல மடங்கு கொடுமையானது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். 

உண்மையில் தொண்ணூறு சதவீதமான வட கொரிய அகதிகள், அவர்களது தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தென் கொரியா பற்றிய கற்பனைகளை வளர்த்து வந்ததாக தெரிவிக்கிறார்கள். பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை காட்டும் தென் கொரிய படங்கள், டிராமா சீரியல் பார்த்து விட்டு, இப்படித் தான் சாதாரண தென் கொரிய மக்கள் வாழ்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தாங்களும் அங்கே சென்றால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என கனவு கண்டிருக்கிறார்கள். ஆனால், தென் கொரியாவுக்கு வந்த பின்னர் தான் யதார்த்தம் அவர்களது முகத்தில் அறையும். 

வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் அனைவரும் இனத்தால் கொரியர்கள் தான். ஒரே கொரிய மொழி தான் பேசுகிறார்கள். ஆனால், வட கொரியர்களின் வட்டார பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும். அதுவே அவர்களை காட்டிக் கொடுத்து விடும். வட கொரிய பேச்சு மொழியை கேட்டால் வேலை தர மாட்டார்கள். தனியார் முதலாளிகள் வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டுவார்கள். தொழிற்துறையில் பெரும்பாலும் தனியார்மயம் கோலோச்சும் நாட்டில் அரச உதவியை எதிர்பார்க்க முடியுமா? ஏமாற்றம். மிகப் பெரிய ஏமாற்றம். 

தென் கொரிய பாடசாலைகளில் படிக்கும் வட கொரிய பிள்ளைகள் பேசும் வட்டார வழக்கு காரணமாக பிற மாணவர்களின் கேலிக்கு உள்ளாகிறார்கள். இதனால் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வேலைக்கு செல்பவர்கள் பலர். இந்தக் காலத்தில் எவனாவது டிப்ளோமா இல்லாமல் வேலை கொடுப்பானா? அதனால், அதிக உடல் உழைப்பை கோரும் அடி மட்ட வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமை. 

ஏன், வட கொரியாவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், மேல் மட்ட பதவிகளில் இருந்தவர்களுக்கும் அது தான் நிலைமை. தென் கொரியாவில் அவர்களது தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது. அவர்களும் சாதாரண கூலித்தொழில் செய்து பிழைக்க வேண்டிய அவல நிலை. முன்பு வட கொரிய இராணுவத்தில் நல்ல பதவியில் இருந்த ஒருவர், இன்று தென் கொரியாவில் குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்வதை விட வட கொரியாவில் இருந்து செத்திருக்கலாம் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். 

வட கொரிய அகதிகள் வரும் பொழுதே கடன் சுமையுடன் தான் வருகிறார்கள்.  சட்டவிரோத எல்லை கடத்தல் மூலம் சீனா ஊடாக அழைத்து வரும் "பயண முகவர்களுக்கு" ஆயிரக்கணக்கான டாலர்கள் கடன் கொடுக்க வேண்டி இருக்கும். அந்தக் கடனை அடைப்பதற்காகவே தென் கொரியாவில் வருடக் கணக்காக வேலை செய்ய வேண்டி இருக்கும். அரச உதவித் தொகையும் மிச்சம் பிடித்து கடனை அடைப்பதற்கு செலவாகி விடுகிறது. அதனால் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. தென் கொரியாவில் தஞ்சமடைந்த வட கொரிய அகதிகள் பட்டினி கிடந்தது சாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

பெரும்பாலும் வட கொரிய அகதிகளுக்கு இலகுவாக தென்கொரிய நண்பர்கள் கிடைப்பதில்லை. அவர்கள் இவர்களை தாழ்வாக பார்ப்பார்கள். அதைவிட தென்கொரிய தேசியவாதிகளின் துன்புறுத்தல்கள் வேறு. வடகொரியா எப்போதாவது ஏவுகணை சோதனை செய்து விட்டால், தேசியவாதிகளின் உணர்வுகள் உச்சத்திற்கு சென்று விடும். அந்நேரம் கண்ணில் அகப்படும் வடகொரியர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். 

சரி, தஞ்சம் புகுந்த நாட்டில் தான் வரவேற்பில்லை. தாயகத்தில் இருக்கும் உறவுகளோடு பேசி துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றால், அதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். அதாவது, தென்கொரியாவில் வாழும் யாரும் வடகொரியாவில் இருப்பவர்களுடன் தொடர்பு வைக்க முடியாது.  தொலைபேசி, கடிதப் போக்குவரத்து எதுவுமே இருக்கக் கூடாது. ஆமாம், தென் கொரிய அரசு தான் இந்தளவு கடுமையான தடைகளை போட்டிருக்கிறது. 

தென்கொரியாவுக்கு வந்த அகதிகளில் குறிப்பிட்ட அளவில் சிலர் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள். ஏனையோர் வாழ்க்கையை நடத்த  முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். தென் கொரியாவில் தொட்டதெற்கெல்லாம் பணம். கையில் காசு இல்லையா? யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தெருவில் படுத்தால் என்ன, செத்துத் தொலைந்தால் என்ன கண்ணை மூடிக் கொண்டு சென்று விடுவார்கள். 

இப்படியான நரகத்தில் வாழப் பிடிக்காமல், பலர் வடகொரியாவுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அதுவும் சட்டவிரோதமாகத் தான்.  தென் கொரியாவில் வாழும் அகதிகளில் குறைந்தது சில ஆயிரம் பேராவது வடகொரியாவுக்கு திரும்பிச் சென்று விட்டார்கள். உண்மையில் தென் கொரிய அரசு அனுமதித்தால் இன்னும் பல ஆயிரம் அகதிகள் தாமாக திரும்பிச் சென்று விடுவார்கள். ஆனால், அதற்கான எல்லா வழிகளையும் தென் கொரிய அரசு அடைத்து வைத்திருக்கிறது.

Sunday, January 30, 2022

நாம் நரிகள் (NTK) கட்சியின் மண்டியிட்ட மானம்!



அன்பான "நாம் நரிகள்" (NTK) கட்சி உறுப்பினர்களுக்கு,

இதுவரையில் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த 400 நாம் தமிழர் கட்சி செயற்பாட்டாளர்களை, அந்நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது. அங்கு அந்த கட்சி கூட்டம் நடத்தவும் தடைவிதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட புலிகளின் தலைவர் படம் வைத்திருந்தமை காரணமாக சொல்லப் படுகிறது. அதை விட நாம் தமிழர் கட்சியினரின் வழமையான இனவாதப் பிரச்சாரங்கள், "வந்தேறி" கதையாடல்களும் காரணமாக இருக்கலாம்.

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று என்றால், அதன் அர்த்தம் தமிழ் மொழியில் நடக்கும் அரசியல் கூட்டங்களையும் புலனாய்வுத்துறை கண்காணித்த படி இருக்கும். இது தெரியாமல் சிங்கப்பூரில் "தமிழன்டா!" "சீனன் வந்தேறிடா!!" என்றெல்லாம் மடத்தனமான கெத்து காட்டினால் மூக்குடை பட வேண்டி இருக்கும். அது தான் அங்கே நடந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாட்டிலிலுள்ள நாம் தமிழர் கட்சி சார்பாக எந்தவொரு கண்டன அறிக்கையும் வரவில்லை. ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய் மூடி மௌனியாகி விட்டார். அந்தளவு பயம்! ஏற்கனவே கனடாவில், சிங்களவர்களுக்கு எதிராக இனவாதம் பேசி நாடுகடத்தப் பட்ட கசப்பான அனுபவம் அவரது வாயை மூட வைத்திருக்கும்.

இவ்வளவு நடந்தும், இதுவரையில் நாம் தமிழர் கட்சியினர் யாரும், சிங்கப்பூர் அரசுக்கு எதிராக சென்னையில் உள்ள துணைத் தூதரகம் முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஆக மொத்தம் இப்படி நடந்து விட்டதே என்று சொல்லி ஒரு நாயும் குலைக்கவில்லை.

இந்தளவு தான் இவர்களது வீரம். இவர்கள் தமது வீரத்தை பலவீனமான அப்பாவி மக்களிடம் தான் காட்டுவார்கள். அந்தளவு கோழைகள். ஒரு தடவை சிங்கள பிக்குகளை அடித்து விரட்டிய மாதிரி, சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளிடம் உங்கள் கைவரிசையை காட்டுங்கள் பார்ப்போம்?

இந்த இலட்சணத்தில் இலங்கை மீது படையெடுத்து ஈழம் வாங்கித் தந்து விடுவார்களாம். இதற்குப் பிறகும் "மானத் தமிழர்... வீரத் தமிழர்..." என்று வெட்டிப் பெருமை பேச உங்களுக்கு வெட்கமாகவில்லை? இனிமேல் உங்கள் கட்சியின் பெயரை "நாம் நரிகள்" என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! அது தான் பொருத்தமான பெயராக இருக்கும். 

மண்டியிட்ட மானம்!

Thursday, January 27, 2022

ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவதை தடுத்தது எப்படி?

ARTE டிவியில் ரஷ்யாவின் அதிபராக போரிஸ் எல்ட்சின் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் காலம் பற்றிய ஆவணப்படம் காண்பித்தார்கள். (Crime in the Kremlin I ARTE.tv Documentary) அதில் அவர்கள் சொல்ல வரும் சேதி முக்கியமானது. எல்ட்சின் ஜனாதிபதியாக வந்திரா விட்டால், கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள்! அதை தடுப்பதற்காக முதலாளித்துவ சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேலை செய்துள்ளன.

சோவியத் யூனியன் வீழ்ந்து சில வருடங்களின் பின்னர் 1996 ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபாதித் தேர்தல் நடைபெறவிருந்தது. ஏற்கனவே ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அரசு அதிகாரத்தை கையில் எடுக்க முனைந்த பொழுது, எல்சினின் உத்தரவின் பேரில் பாராளுமன்றக் கட்டிடம் பீரங்கிக் குண்டுகளால் தகர்க்கப் பட்டது. 1993 ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

அதற்குப் பிறகு, 1996 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப் பட்டது. ஆனால் இம்முறை போரிஸ் எல்சின் நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியானவராக இருக்கவில்லை. முதுமை, கடும் சுகயீனம் காரணமாக தளர்வடைந்து இருந்தார். அப்படியான ஒருவர் நிலையான ஆட்சி நடத்துவார் என்று யாருமே நம்பவில்லை.

இதற்கிடையே ஒரே நாளில் சோஷலிச பொருளாதாரத்தை இல்லாதொழித்து முதலாளித்துவத்தை கொண்டு வந்த படியால் நாடு மிக மோசமான நிலையில் இருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. எங்கு பார்த்தாலும் பொருளாதாரப் பிரச்சினை. வேலையில்லாதவர்களின் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே சென்றது. வேலை செய்தவர்களின் வருமானம் குறைந்து கொண்டே சென்றது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் கொடுக்கப் படவில்லை.

இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, ஒரு பக்கம் செச்னிய யுத்தம் வேறு நடந்து கொண்டிருந்தது. ஒரு வெல்ல முடியாத, பெருஞ்செலவு பிடித்த, யுத்தத்திற்குள் சிக்கிக் கொண்ட ரஷ்ய இராணுவம் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அது ஏற்கனவே பலவீனமான நிலையில் இருந்த பொருளாதாரத்தையும் பாதித்தது. அத்தகைய சூழலில் பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை (CPRF) ஆதரித்ததில் வியப்பில்லை. ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுகானோவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. பெரும்பான்மை மக்கள் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதை விரும்பினார்கள்.

நடைபெறவிருந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் வென்று விட்டால், ரஷ்ய தேசம் மீண்டும் சோவியத் காலத்திற்கு சென்று விடும் என்று முதலாளித்துவவாதிகள் அஞ்சினார்கள். அவ்வாறு நடந்தால் உள்நாட்டுப் போர் மூளலாம் என்ற அச்சம் எழுந்தது. (அதாவது, கம்யூனிஸ்டுகள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால், அந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முதலாளித்துவவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்த தயாராக இருந்தனர்.) ஆகவே, முதலாளித்துவத்தை ஆதரித்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள், எப்பாடு பட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வர விடாமல் தடுக்க விரும்பினார்கள்.

அதுவரை காலமும் ஒருவரோடொருவர் போட்டியும், பொறாமையும் கொண்டிருந்த வங்கியாளர்கள் ஒன்று சேர்ந்தனர். அரச ஊழியர்களின் ஓய்வூதியங்களை கொடுப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்கவும் கடன் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அரசு கடன்பத்திரங்கள் பெறுமதி குறைத்து கொடுக்க வேண்டும். தனியார்மயமாக்கலை விரைவுபடுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு எல்சின் அரசு சம்மதித்தது.

அத்துடன் அமெரிக்காவும் தலையிட்டு எல்சினின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுத்தது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவர்வதற்காக பிரபல பாடகர்கள், இசைக் கலைஞர்களை வருவித்து எல்சினுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தினார்கள். எல்சின் தோல்வியடைந்தால், அனைத்து மக்களினதும் தோல்வியாகும் என்று பிரச்சாரம் செய்தனர். கம்யூனிஸ்ட் கடந்த காலத்திற்கு திரும்பினால், மக்கள் சிறைகளில் வாட வேண்டியிருக்கும் என்றும் பரப்புரை செய்யப் பட்டது.

அப்படி இருந்தும், முதலாளித்துவ எல்சினுக்கும், கம்யூனிச சுகானோவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. தேர்தலில் வென்ற எல்சின் செய்த முதல் வேலை பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்தது மட்டும் தான். அதற்குப் பிறகு நிரந்தர மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் சென்று ஒரேயடியாக படுத்து விட்டார். 

1999 ம் ஆண்டு, அரசு அதிகாரம் எல்சினிடம் இருந்து, புட்டினிடம் கைமாறப் பட்டது. அதற்குப் பிறகு நடந்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. எல்சினுக்கு பிறகு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்ட புட்டின், ரஷ்யாவை உலகில் பெரிய முதலாளித்துவ வல்லரசுகளில் ஒன்றாக இன்றைக்கும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.