Thursday, April 16, 2009

கம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்

"அங்கர் வட்" - கம்போடியாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்துக் கோவில். உலக அதிசயங்களில் ஒன்றான இந்தப் புராதன சின்னத்தைப் பார்ப்பவர்களுக்கு மறைந்து போன கம்போடிய பொற்காலம் நினைவிற்கு வரும். அன்றைய கிமேர் பேரரசான கம்போடியாவில் இந்துநாகரிகம் பரவியிருந்தபோது இந்த மாபெரும் கோவில் கட்டப்பட்டது. (சிலர் நினைப்பது போல, கம்போடியா இராஜராஜ சோழனின் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. தென்னிந்திய வணிகர்களால் பரப்பப்பட்ட இந்து மதத்தை தழுவிக்கொண்ட உள்ளூர் அரச வம்சத்தின் சுதந்திரத் தேசமாக இருந்தது.)
இப்போது அந்தக் கோவிலுக்கு என்ன வந்தது ?

ஒரு முறை, அயல்நாடான தாய்லாந்தின் பிரபல நடிகை சுவன்னா, அங்கர் வட் கோவில் தாய்லாந்திற்குச் சொந்தமாக்கப்படவேண்டும் என்று கூறியதாக வந்த செய்தி கலவரத்தைத் தூண்டிவிட்டது. சீற்றமுற்ற கம்போடியர்கள் வீதிகளில் தாய்லாந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாய்லாந்துத் தூதுவராலயம் முற்றுகையிடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டன அல்லது தீயிடப்பட்டன.

கலவரம் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்குமிடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தி விட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான எல்லை மூடப்பட்டது. விமானப்போக்குவரத்துகள் ரத்துச்செய்யப்பட்டன. தாய்லாந்துப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகை மன்னிப்புக் கோரினார். தான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை என வாதிட்டார். கம்போடிய ஜனாதிபதி ஹன் சென் நடந்த கலவரத்திற்காக மன்னிப்புக் கோரினார். கலவரத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமெனவும் அறிவித்தார். இவ்விரு நாடுகளிலும் உள்ள தேசியவாதிகள்தான் பிரச்சனைக்குக் காரணம் என யாரும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைவிட நீறு பூத்த நெருப்பாகவிருக்கும் பிற பிரச்சனைகள் என்ன?

இந்த இரு அயலவர்களும் கடந்த காலத்தில் அடிக்கடி எல்லைபற்றி தர்க்கித்தமை முன்பே தெரிந்த விடயம்தான். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்போடியாவை ஆண்ட பிரஞ்சுக் காலனிய அரசு, தாய்லாந்துடன் எல்லைகளை வகுத்து ஒப்பந்தம் போட்டது. இதன்படி சிலவிடயங்கள் பரிமாறப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது பிரஞ்சுக்காரரை விரட்டிவிட்டு கம்போடியாவை ஆக்கிரமித்த யப்பானியருடன் தாய்லாந்து இன்னொரு ஒப்பந்தம் போட்டது. இதன்படி, மேலும் சில கம்போடியப் பிரதேசங்கள் தாய்லாந்து வசமாகின. இதற்கு மாறாக ஜப்பானியர்கள் தாய்லாந்தூடாக, (பிரிட்டிஷ்) இந்தியாமீது படையெடுக்க அனுமதிக்கப்பட்டது. போர்முடிந்து யப்பானியர்கள் பின்வாங்கி ஓடிப்போக, திரும்பிவந்த பிரஞ்சுக்காரர்கள் இரண்டாவது ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு முன்னிருந்த எல்லைகளைக் கொண்டுவந்தனர். வியட்னாம் போரின்பின் பிரஞ்சுக்காரர்கள் வெளியேறவே ஆட்சிக்கு வந்த உள்ளூர் கம்போடியர்கள் தாய்லாந்துடன் எல்லை குறித்துப் பிரச்சனைப்பட்டனர். இது எல்லையில் இராணுவ மோதலில் போய்முடிந்தது. பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது. வழக்கில் கம்போடியாவிற்குச் சாதகமான தீர்ப்புக் கிடைத்தது. அப்போது எல்லைக்குச் சமீபமாகவிருந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த அங்கர் வட் கோயில் பிரதேசம் பற்றிப் பேசப்படவில்லை. அன்றைய தீர்வுகளால் திருப்தியடையாத தாய்லாந்துக் காரர்கள் இப்போது கோயிலை வைத்து எல்லைப்பிரச்சனையை மீண்டும் தொடக்க நினைத்திருக்கலாம். பெரும்பான்மையான தாய்லாந்துக்காரரும், கம்போடியர்களும் பொளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பனிப்போர்க்காலத்தில் தாய்லாந்து சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. வியட்னாமிலும் கம்போடியாவிலும் சண்டையிட்ட அமெரிக்கத் துருப்புகள் தாய்லாந்தைத் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். "ஆசியாவில் சோவியத் விஸ்தரிப்பை"த் தடுக்கும் புனிதக் கடமையில் கூட்டுச்சேர்வதாக தாய்லாந்து அறிவித்தது. கம்யூனிச கிமேர் றூஷ் இயக்கம் கம்போடியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு எதிர்க்கட்சிகளுக்கும், அகதிகளுக்கும் தாய்லாந்தில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. நீண்டகால உள்நாட்டப்போர் முடிவுற்றபின்பு வந்த ஜனநாயகக் கம்போடியாவில், மேற்குலகின் நம்பிக்கைக்குரிய ஆளாக தாய்லாந்து அரசியல் மத்தியஸ்தம் வகித்தது. தொன்னூறுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்களின் பின்புதான் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. கம்யூனிஸ்டுகளல்லாத கம்போடியக் கட்சிகள்கூட தாய்லாந்தின் அரசியல் மத்தியஸ்தத்தை அவநம்பிக்கையுடன் நோக்கின. அதற்குக் காரணம், போரால் அழிவுற்ற தமது நாட்டை மீளக்கட்டியமைக்க தாய்லாந்து போதியளவு உதவிகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. சமாதானம் வந்தவுடனேயே ஓடிவந்து முதலீடு செய்த தாய்லாந்து வர்த்தக நிறுவனங்கள் காடுகளை அழிக்கின்றன. மீள்முதலீடு செய்வது கிடையாது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிருப்தியற்ற கம்போடிய அரசாங்கம் மலேசியா, சிங்கப்பூருடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய நினைத்ததை தாய்லாந்து விரும்பவில்லை.

கம்போடியாவில் தாய்லாந்தின் பொருளாதார மேலாண்மை சாதாரண வர்த்தக முதலீடுகளுடன் நின்றுவிடவில்லை. கலாச்சார ஆதிக்கம் குறிப்பாக இளஞ்சமுதாயத்தை குறிவைக்கின்றது. தாய்லாந்துத் திரைப்படங்கள், பாடல்கள் என்பன இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. சாதாரண இளைஞர்கள் தாய்லாந்து நடிக-நடிகையரைப் பார்த்து பாவனை செய்யுமளவிற்கு, அவர்களின் உருவப்படங்களை ( தற்போது சர்ச்சயைக் கிளறியிருக்கும் சுவன்னா உட்பட) தமது படுக்கையறையில் மாட்டி அழகுபார்க்குமளவிற்கு சினிமா மோகம் இளைஞர்களை ஆக்கிரமித்துள்ளது. (அங்கேயுள்ள நிலையை நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் கலாச்சார ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சினிமாவோடு ஒப்பிடலாம்). அண்மையில் நடந்த தாய்லாந்து எதிர்ப்புக் கலவரத்திற்குப் பின்னர் தாம் ஒரு காலத்தில் ஆராதித்த மனங்கவர்ந்த நடிகை சுவன்ணாவின் படங்களை இளைஞர்கள் கிழித்தெறியத் தொடங்கியுள்ளனர். தாய்லாந்துத் திரைப்படங்கள் அளித்த மதிமயக்கத்தில் கிடந்த மக்களுக்கு, அவற்றை உற்பத்தி செய்து அனுப்பும் நாட்டின் பொருளாதார மேலாண்மை தெரிந்திருக்கவில்லை. தற்போது திடீரென விழித்துக்கொண்டவர்களாய் தாய்லாந்தின் பொருளாதாரப் புறக்கணிப்புகள் பற்றி பேசத்தொடங்கியுள்ளனர்.

கம்போடியாவில் பெரும்பான்மையான ஹொட்டேல்கள், உணவு விடுதிகள் ஆகியன தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமானவை. தொலைத்தொடர்புத் துறையையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்தப்பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்த அல்லது பெரும் முதலாளிகளைக் கொண்ட தாய்லாந்து தன்னைச் சற்றியிருக்கும் பின்தங்கிய வறிய நாடுகளான லாவோஸ், கம்போடியாவில் திறந்த சந்தைப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி முதலிட்டு வந்தது. அந்நாடுகளில் முதலிட்ட தாய்லாந்து வர்த்தகர்கள் பலனடைந்த அளவிற்கு உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை. "உள்ளூர் மக்களின் நலன்களைப்பற்றி எந்தச் சிந்தனையுமில்லாமல், நாம் பெருமளவில் முதலிட்டு இலாபமீட்டி வந்தோம். எம்மை பொருளாதாரக் காலனியவாதிகள் என்று குற்றஞ்சாட்டுமளவிற்கு வெற்றிகரமாகவும் அதேநேரம் தீவிரமாகவும் எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. மக்களின் அதிருப்தியை அந்நாட்டு அரசியல் வாதிகள் தேசிய உணர்வைத்தூண்டப் பயன்படுத்துகின்றனர். அதனைக் கண்டிக்கும் நாம் , எமது நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்காக மேலைநாடுகளுக்கெதிரான தேசியவாதம் வளர்ப்பது முரண்நகையாகவுள்ளது." என ஆசிரியர் தலையங்கம் தீட்டியது திடீரென விழித்துக்கொண்ட தாய்லாந்தின் பிரபல "பாங்கொக் போஸ்ட்" பத்திரிகை.

கம்போடிய அரசாங்கம் தனக்கும் கலவரத்திற்கும் சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டாலும், ஆளும் கட்சிகள் தாய்லாந்து எதிர்ப்புணர்வால் ஆதாயம் அடைகின்றன. தாய்லாந்தை எதிரியாகக் காட்டும் கம்போடியத் தேசியவாதம் வளர்த்துவிடப்பட்டிருக்கலாம். தாய்லாந்தினுள்ளும் சில புத்திஜீவிகள் தமது அரசின் தன்னலம் கருதும் மேலாண்மைப் போக்கை விமர்சிக்கின்றனர். பாங்கொக் போஸ்டும் இத்தகைய சுடலை ஞானத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தது. அயல் நாடுகளுடன் நட்பும், வெறுப்புமான உறவு தொடர்ந்த பதட்டநிலைக்கே வழிவகுக்கும். முதலீடுகளால் எமக்கு வரும் ஆதாயத்தை மட்டும் பார்க்காமல் நாம் கம்போடிய மக்களுக்கு என்ன திருப்பிச் செய்துள்ளோம் என்றும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள்.

Tuesday, April 14, 2009

காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்


(ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 2)

ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடத்தை ஒருமுறை பார்த்தீர்களானால், தேச எல்லைகள் பென்சிலால் கோடு கீறியது போல இருக்கும். உண்மையில் அப்படித்தான் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள்! 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தேசிய அரசுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. அப்போதெல்லாம் காலனிகள் வைத்துக் கொள்வது ஒரு கௌரவம். இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசை மீது வைத்து, தமக்கு தேவையான துண்டுகளை பென்சிலால் கீறி பெற்றுக் கொண்டார்கள். இந்த எல்லைக் கோடுகள் வகுக்கும் போது ஆப்பிரிக்க மக்களின் விருப்பம் புறக்கணிக்கப்பட்டது. அவர்களது தலைவிதியை, வடக்கே இருந்த ஐரோப்பிய கடவுளர் தீர்மானித்தார்கள். ஒரே மொழி பேசும் இனங்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளில் சிக்கிக் கொண்டார்கள்.

கண்டத்தின் மத்திய பகுதியில் இருந்த கொங்கோ பிரதேசத்திற்கு பலர் போட்டியிட்டார்கள். இறுதியில் சிறிய துண்டான கொங்கோ-பிராசவீல் பிரான்சிற்கும், பெரிய துண்டான கொங்கோ-கின்ஷாசா பெல்ஜியத்திற்கும் கிடைத்தது. பெல்ஜிய மன்னன் லெயோபோல்ட், கிட்டத்தட்ட ஐரோப்பிய கண்டத்திற்கு நிகரான கொங்கோவை தனது தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்டார். ஒரு சர்வதேச நிறுவனத்தை தொடங்கி நிர்வகித்து வந்தார். இருப்பினும் ஒப்பந்தத்தின் படி பிற ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களையும் கொங்கோவில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டி இருந்தது.

பெல்ஜிய நாட்டிலிருந்து சென்ற பெருந்தோட்ட பயிர்செய்கையாளர்கள், ரப்பர் தோட்டங்களை ஆரம்பித்து, அதில் கொங்கோ நாட்டு மக்களை அடிமை வேலை செய்யப்பணித்தனர். ஒவ்வொரு தொழிலாளியும் குறிப்பிட்ட அளவு ரப்பர் பால் எடுத்துக் கொடுக்க வேண்டும். அந்த அளவு குறைந்தால், சித்திரவதை செய்யப்பட்டனர், அல்லது அவர்களது குடும்பத்தினர் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டனர், அல்லது கைகள் வெட்டப்பட்டன. பெருந்தோட்ட நிறுவனங்களின் லாபவெறிக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெல்ஜிய மன்னனின் என்பது ஆண்டு கால காலனிய ஆதிக்க காலத்தில், கொல்லப்பட்ட மக்களின் தொகை பத்து மில்லியன்! அதாவது பெல்ஜிய நாட்டின் இன்றைய மொத்த சனத்தொகை!! "ஸ்டாலின், மாவோ இத்தனை கோடிப்பேரை கொலை செய்தார்கள், அதனால் அவர்கள் மனிதர்களல்ல, பூதகணங்கள்" என்று, இன்று வரை ஓதிக் கொண்டிருப்பவர்கள், பெல்ஜிய பூதம் லெயோபோல்ட்டின் படுகொலைகளை பற்றி வாய் திறப்பதில்லை.

இன்றைக்கும் சில படித்தவர்கள் கூட நினைப்பது போல கொங்கோ ஒரு பண்டைய வரலாற்றைக் கொண்டிராத தேசமல்ல. 15 ம் நூற்றாண்டிலேயே, இன்றைய அங்கோலாவின் பகுதிகளை சேர்த்துக் கொண்ட மாபெரும் கொங்கோ இராசதானி இருந்தது. அந்நிய படையெடுப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு பலமிக்க இராச்சியமாக இருந்தது. மாகாணங்கள் பிரிக்கப்பட்டு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அங்கே ஒரு விவசாய சமூகம் இருந்தது. இரும்பு போன்ற சில கனிம தாது பொருட்களை பயன்படுத்தும் அறிவைப் பெற்றிருந்தனர். தான்சான்யா வழியாக அரேபியருடன் வர்த்தக தொடர்புகளைப் பேணி வந்தனர். 16 ம் நூற்றாண்டில் உலகைக் கண்டுபிடிக்க கிளம்பிய போர்த்துகீசிய கடலோடிகளால் தான், ஐரோப்பிய காலனிய காலகட்டம் ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் கொங்கோ இராசதானிக்கு தரங்குறைந்த துப்பாக்கிகளையும், பல்வேறு மதுவகைகளையும் கொண்டு சென்று விற்று, அடிமைகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். இதற்கிடையே போர்த்துகீசியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி கொங்கோ மன்னன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, "ஜோவோ" (ஆங்கிலத்தில்: ஜோன்) என்ற நாமத்தை சூட்டிக் கொண்டான். தனது குடிமக்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றினான். முதல் முறையாக ஒரு கறுப்பின பிஷப் வத்திக்கானிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நான் முன்பு கூறியது போல ஆப்பிரிக்காவில் அடிமைகளை பிடித்து விற்பது சாதாரண விடயமாக இருந்த போதும், காலனியாதிக்கவாதிகளுக்கு லட்சக்கணக்கில் தேவைப்பட்டதும், அதற்காக நடந்த மனிதத்தன்மையற்ற வேட்டையும், ஆப்பிரிக்கா அறியாத ஒன்று. ஐரோப்பிய முதலாளிகளின் அமெரிக்க பெருந்தோட்டத்தில் வேலை செய்ய பல்லாயிரக்கணக்கான அடிமைகள் தேவைப்பட்டனர். சந்தையில் அந்த சரக்கிற்கு கிராக்கி அதிகமாகியதும், போர்த்துக்கேயர்கள் கொங்கோவில் அடிமை வேட்டையை அதிகரித்தமை, கொங்கோ மன்னன் மனதில் சந்தேகத்தை கிளப்பியது. "ஒரு கிறிஸ்தவன் தனது சகோதர கிறிஸ்தவர்களை எப்படி அடிமையாக வைத்திருக்கலாம்?" என்று மன்னன் வெகுளித்தனமாக கேள்வி எழுப்பவும், இது தான் தருணம் என்று போர்த்துக்கேயர்கள் கொங்கோவில் பலாத்காரமாக மன்னர் ஆட்சியை அகற்றி, தமது காலனி ஆட்சியை நிறுவினார்கள்.

ஒரு காலத்தில் பிராந்திய பேரரசாக சிறப்புடன் இருந்த கொங்கோ இராசதானி, பிற்காலத்தில் "போர்த்துகீசிய அங்கோலா", "பெல்ஜிய கொங்கோ", "பிரெஞ்சு கொங்கோ" என்று பிரிக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறைத்து, "இருண்ட கண்டத்தை நாகரீகப்படுத்த ஐரோப்பிய வெள்ளையர்கள் வந்ததாக" இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் பெல்ஜியம் கொங்கோவை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஒரு போதும் இறங்கியதில்லை. பெரும்பாலான பெல்ஜிய காலனிய அதிகாரிகள் டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிளாம்ஸ் என்றழைப்பர்) பேசுபவர்களாக இருந்த போதிலும், கொங்கோ மக்களுடன் பிரெஞ்சு மொழியில்(பெல்ஜியத்தின் இரண்டாவது மொழி) பேசினர். டச்சு மொழியை தமது சமூகத்திற்குள் மட்டுமே பயன்படுத்தும் இரகசிய மொழியாக வைத்துக் கொண்டனர்.

பெல்ஜிய மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் யாவும், கனிம வளங்களை அகழும் சுரங்கங்கள் தோண்டியது மட்டுமே ஒரேயொரு "அபிவிருத்தி". தங்கம், வெள்ளி, வைரம், நிக்கல், குரோமியம் என்று நிலத்தில் இருந்து தோண்டியெடுத்த விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கொங்கோ அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட செல்வந்த நாடு. உலகில் உள்ள வெப்ப/குளிர் காலநிலைக்கேற்ற, அத்தனை பயிர்களும் வளரக்கூடிய தரைகளைக் கொண்ட கொங்கோ, விவசாயத்தில் தன்னிறைவு கண்டால், 50 மில்லியன் சனத்தொகைக்கு உணவு கொடுப்பது பெரிய விடயமல்ல. அங்கே பெட்ரோல், எரிவாயு போன்ற எரிபொருட்கள் கூட கிடைக்கின்றன. காலனிய காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய கொள்ளை, அனைத்து வளங்களையும் கொண்ட இன்று கொங்கோ வறுமையான நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கு காரணம். கொங்கோவின் பொருளாதாரம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்காகவே காலனிய எஜமானர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதைவிட இன்றைய காலகட்டத்தில் வருடக்கணக்காக நிலவும் ஆராஜக சூழ்நிலையும், ஆட்சியாளர்களின் தவறானான நிர்வாகமும் பிற காரணங்கள்.

30 ஜூன் 1960 ம் ஆண்டு, கொங்கோவின் சுதந்திர தின விழாவிற்கு சமூகமளித்திருந்த பெல்ஜிய அரசர், லெயோபோல்ட்டின் மகன் போதுவ, தனது "புத்திக்கூர்மையான தந்தை கொங்கோ மக்களை நாகரீகப் படுத்தும் சீரிய பணிக்காக, பெல்ஜியத்தின் சிறந்த பிரசைகளை அனுப்பி வைத்ததாக" மேடையில் புளுகிக் கொண்டிருந்தார். மேடையில் வீடிருந்த வருங்கால பிரதமர் லுமும்பாவிற்கு, அந்த பொய்களை கேட்டுக் கொண்டிருந்த முடியவில்லை. அரசரிடமிருந்த 'மைக்'கை பிடுங்கி, பெல்ஜியம் செய்த அயோக்கியத்தனங்களை நார் நாராக கிழித்தார். "மாட்சிமை தங்கிய மன்னர் பெருந்தகைக்கு" மரியாதை எதுவும் கொடுக்கவில்லை, "சகோதர, சகோதரிகளே" என்று விளித்து தனது உரையை ஆரம்பித்து, "எம்மை கறுப்பர்கள் என்பதால் சக மனிதர்களாக மதிக்காத, அடிமைகளாக வேலை வாங்கிய பெல்ஜிய காலனியாதிக்கவாதிகளிடமிருந்து, நாம் இரத்தம் சிந்தி போராடி சுதந்திரம் பெற்றோம்." என்று பலத்த கரகோஷத்திற்கிடையில் ஆற்றிய உரை பெல்ஜிய மன்னரை சினக்க வைத்தது. லுமும்பாவை பழிவாங்க வேண்டுமென்று மனதிற்குள் கருவிக் கொண்டார்.

சுதந்திரமடைந்த பின்னரும், கொங்கோ இராணுவத்தின் இடைத்தர, மேல்நிலை அதிகாரிகள் யாவரும் பெல்ஜிய வெள்ளையர்களாக இருந்தனர். அவர்கள் புதிய அரசிற்கெதிராக கலகம் செய்தனர். இதற்கிடையே இயற்கை வளம் நிறைந்த கதங்கா மாகாணம், பெல்ஜிய தூண்டுதலால், தனிநாடாக பிரிவதாக அறிவித்தது. வெள்ளையின பெல்ஜிய படைகள் அதற்கு பாதுகாப்பு கொடுத்தனர். சுதந்திரமடைந்து ஐந்து நாட்களில் இந்த கலகம் ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது. லுமும்பா அமெரிக்க தூதுவரை சந்தித்து, அமெரிக்க படைகளை அனுப்பி உதவுமாறு கோரினார். தூதுவர் மறுக்கவே லுமும்பா ரஷ்யர்களிடம் உதவி கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உடனே இது தான் சாட்டென்று, "லுமும்பா ஒரு கம்யூனிஸ்ட்" என்று அமெரிக்கா முத்திரை குத்தி விட்டது.

இறுதியில் ஐ.நா. மன்றத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ.நா. சமாதானப்படை வருவதற்கு ஒத்துக் கொண்டது. ஆனால் அதுவே லுமும்பாவின் மரணத்திற்கு இட்டுச் சென்ற தவறான முடிவாக இருந்தது. ஐ.நா.சமாதானப்படை இன்று மட்டுமல்ல, அன்றும் ஏகாதிபத்திய நலன்களுக்காக தான் செயற்பட்டது. சி.ஐ.ஏ. தூண்டுதலின் பேரில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத் தளபதி மொபுட்டுவின் படையினர் ஸ்டான்லிவீல் (கிசன்கானி) என்ற நகரிற்கு போகும் வழியில் லுமும்பாவை கைது செய்தனர். நடந்த சம்பவத்தை கானவை சேர்ந்த ஐ.நா.சமாதானப்படையினர் கண்ட போதும், அவர்களைத் தலையிட வேண்டாம் என்று மேலிடத்து உத்தரவு வந்தது. மொபுட்டு லுமும்பாவை கைது செய்து கதங்கா பிரிவினைவாதிகளின் கைகளில் ஒப்படைத்தார். அங்கே வைத்து பெல்ஜிய அதிகாரிகளின் முன்னால் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் நஞ்சு கொடுத்து கொலை செய்யப்பட்ட லுமும்பாவின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு திராவகத்திற்குள் கரைக்கப்பட்டது. அமெரிக்காவும், பெல்ஜியமும் சேர்ந்து தமது எதிரியை இப்படித்தான் தீர்த்துக் கட்டினார்கள். ஏகாதிபத்தியத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய லுமும்பாவின் மரணம் உலகெங்கும் அமெரிக்க எதிர்ப்பு அலையை தோற்றுவித்தது. ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் ஐ.நா.மன்றத்தில் தமது கண்டனங்களை கொட்டினர். சோவியத் யூனியன் மொஸ்கோவில் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு லுமும்பாவின் பெயரிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரால், பெல்ஜிய மன்னன் போதுவாவினால் வெறுக்கப்பட்ட லுமும்பாவை, கொலை செய்வதற்கான காரணம் என்ன? கொங்கோவில் கொலைக்கான சதித்திட்டங்களை நிறைவேற்றிய சி.ஐ.ஏ. அதிகாரி டெவ்லின் "Congo - Fighting the Cold War in a Hot Zone" என்ற நூலில் வாக்குமூலம் கொடுக்கிறார். அதில் அவர், லுமும்பா கம்யூனிஸ்ட் இல்லை என்பது ஏற்கனவே தெரியும் என்றும், கம்யூனிசத்தை எதிர்த்து போரிடுவது என்பது ஒரு சாட்டு, என ஒப்புக் கொள்கிறார். அப்படியானால்? "அன்றைக்கு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டிற்குள் கொங்கோ வந்திருக்குமேயானால், 'கோபால்ட்' சுரங்கங்களும் அவர்களது கைகளுக்கு போயிருக்கும். ஏவுகணை, பிற ஆயுதங்கள் தயாரிப்பதற்கு கோபால்ட் அத்தியாவசியமான பொருள். அது உலகில் சோவியத் யூனியனிலும், கொங்கோவிலும் மட்டுமே இருந்தது. ஆகவே அமெரிக்கா கொங்கோவை கைப்பற்றியிரா விட்டால், சர்வதேச ஆயுதப்போட்டியில் பின்தள்ளப் பட்டிருக்கும்."
உண்மை தான். ஆனால், ஆப்பிரிக்காவின் வளாங்களை அதற்கு முன்னரே உலக மேலாதிக்க நோக்கத்திற்காக ஏகாதிபத்தியம் பயன்படுத்த தொடங்கி விட்டது. கொங்கோவில் இருந்து எடுக்கப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு செய்த அணுகுண்டு தான் ஹிரோஷிமா, நாகசாகி மீது போடப்பட்டது. கொங்கோவின் வைரங்களை வைத்து தான் ஆங்கிலேய-அமெரிக்க கூட்டணி இரண்டாம் உலகப்போரில் வெற்றியீட்டின. இன்றும் கூட, கணணி, மொபைல் தொலைபேசி 'சிப்' பிற்கு பயன்படும் மூலப்பொருளான கொல்த்தான் கொங்கோவில் மட்டுமே அதிகமாக காணப்படுகின்றது.

இன்றைய ஆப்பிரிக்காவில் வளங்களை, பன்னாட்டு நிறுவனங்கள் கேள்வி கேட்க யாருமின்றி கொள்ளையடிக்கின்றன. ஆயுதமேந்தி இருப்பது, அரசபடையாக இருந்தாலும், ஆயுதக் குழுவாக இருந்தாலும், இந்த வளங்களை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதிலே தான் போட்டியிடுகின்றன. "ஆப்பிரிக்கா இப்படியே இருந்தால் அங்கே புரட்சி ஏற்பட இன்னும் நூறு வருடங்களாகும்." என்று தனது டைரிக் குறிப்பில் எழுதிவைத்தார் சே குவேரா. அவர் கொங்கோவில் தங்கியிருந்து புரட்சியை ஏற்படுத்த முயன்று தோற்றுப்போய் திரும்பியவர். இப்போது ஒரு புதிய திருப்பம். இஸ்லாமிய மீட்பிற்காக போராடுவதாக சொல்லும் குழுக்கள் வளர்ந்து வருகின்றன. அதைக் காட்டி பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவதாக சொல்கிறது அமெரிக்கா. உண்மையில் கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் "இருண்ட கண்டத்தை" கண்டு பிடிப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னமே, இஸ்லாமிய அரேபியா அதனை கண்டுபிடித்திருந்தது.

"ஆப்பிரிக்க கண்டத்தில் கிறிஸ்தவ மதம் நுழையும் வரை, அங்கே காட்டுமிராண்டி கால இயற்கை வழிபாடு மட்டுமே பரவலாக இருந்ததாக," வெள்ளையர்கள் இன்னொரு கட்டுக்கதையை பரப்பி வந்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்து கத்தோலிக்க/ புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மதம் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, எத்தியோப்பியர்கள் ஆதி கால கிறிஸ்தவத்தை பின்பற்றி வருகின்றனர். இஸ்லாம் செனகல் முதல் தான்சானியா வரை பரவி இருந்தது. வளர்ச்சியடைந்த ஆப்பிரிக்க- இஸ்லாமிய அரசுகள் தோன்றியிருந்தன. ஒரு காலத்தில் மாலி நாட்டில் இருந்த, திம்புக்டு இஸ்லாமிய இராச்சியத்தின் மன்னன், மெக்கா நோக்கி புனிதப்பயணம் சென்ற போது, எகிப்திய சந்தையில் தங்கத்தில் விலை வேகமாக சரியும் அளவிற்கு, செல்வம் படைத்திருந்ததாக வரலாற்றுக் கதை ஒன்றுண்டு.

---(தொடரும்)---
முன்னைய பதிவு:
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1
(பிற்குறிப்பு: ஏற்கனவே என்னால் எழுதப்பட்டு வினவு தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையை வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.)

Sunday, April 12, 2009

கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

"மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்." ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றி எழுதி வைத்துப் போன தத்துவக் குறிப்புகள் இவை. அவர் மேலும் குறிப்பிடுகையில், "கிறிஸ்தவ போதனைகளை நம்புபவர்கள் ஆளுபவர்களின் அதிகாரத்திற்கெதிராக கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஆனால் (மத)நம்பிக்கை தமக்கு இரட்சிப்பை வழங்கும் என்று காத்திருப்பார்கள்." என்று ரோம ஆட்சியாளருக்கு ஆலோசனை கூறுகின்றார்.

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இயேசுவின் ("கிறிஸ்து" என்பது இரட்சகர் என்பதைக் குறிக்கும் கிரேக்க சொல்லாகும்) வரலாறு பற்றி எந்தவொரு ரோம சரித்திர ஆசிரியர்களும் எழுதி வைக்கவில்லை. இயேசுவின் சீடர்களும், நம்பிக்கையாளரும் பிற்காலத்தில் பரப்பிய சுவிசேஷ செய்திகளின் மூலமே இயேசுவின் கதை வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. நவீன உலகின் காலக் கணிப்பீடு தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் இயேசு வாழ்ந்திருக்கலாம். "கிறிஸ்துவுக்கு முன்/பின்" என்ற சொற்பதங்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை நிலை நாட்டும் யுக்தியாகவே கொண்டுவரப்பட்டன. ஐரோப்பிய மொழிகளில் கிறிஸ்துவுக்கு பின் என்பதைக் குறிக்க "Anno Domini (AD)" என்று சொல்வதன் அர்த்தம் "எமது கிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தில் வாழ்கிறோம்" என்பது தான்.

இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பால் யூதரான இயேசு வாழ்ந்த சுற்றாடலிலும், யூதர்களே காணப்பட்டனர். அவரது போதனைகள் அவரது சமூகத்தை சேர்ந்த யூதர்களுக்கானதாகவே இருந்தன. அந்தக் காலத்தில் பல யூத மதப் பிரிவுகள் இருந்தன. அதனால் இயேசுவை பின்பற்றியவர்களும் அப்படி ஒரு பிரிவை சேர்ந்தவர்களாகவே கருதப்பட்டனர். இது பின்னர் மாற்றமடைந்தது. அது பற்றி பிறகு பார்ப்போம். "யூதேயா இராச்சியம்" வீழ்ச்சியடைந்த பின்னர், பர்சியர்கள் (ஈரான்), கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோர் நிர்மாணித்த சாம்ராஜ்யத்தின் பகுதியாக மாறி மாறி இருந்து வந்துள்ளது. எந்த சக்கரவர்த்த்யின் கீழ் வாழ்ந்தாலும் யூதர்கள் தமக்கென குறிப்பிட்ட சுயாட்சிப் பிரதேசத்தை (பாலஸ்தீன மாகாணத்தில் ஜெருசலேமை அண்டிய பகுதிகள்) கேட்டுப் பெற்று வந்துள்ளனர்.

கிரேக்க ஆட்சியின் போது, மத அடிப்படைவாத யூதர்களுக்கும், கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றிய மிதவாத யூதர்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. (சிரியாவில் இருந்து வந்த) அசிரிய படைவீரர்கள் துணையுடன் மிதவாத யூதர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை அவ்வப்போது நிலைநாட்டி வந்துள்ளனர். இதன் காரணமாகவும் இயேசுவும், அவரது சீடர்களும் அரேமிய மொழியை பேசியிருக்கலாம். ஏனெனில் பண்டைய சிரியர்கள், (ஹீப்ரு, அரபு மொழிகளை ஒத்த௦) அரேமிய மொழி பேசி வந்துள்ளனர். இருப்பினும் வேதாகமத்தில் பல சுவிசேஷங்களை எழுதிய இயேசுவின் சீடரான பவுல், அரேமிய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியை பயன்படுத்தினார். இதனால் தான் பைபிளின் மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஒரு பாலஸ்தீன யூதரான பவுல், கிரேக்க நகரமொன்றில் பிறந்து வளர்ந்தவர். அத்தோடு ரோம குடியுரிமை பெற்றிருந்தார். இதனால் பவுலின் வருகைக்கு பிறகு கிறிஸ்தவ கருத்துகள் பிற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து கிறிஸ்தவம், யூத மதத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டது.

ஆரம்பத்தில் துருக்கியில் வாழ்ந்த யூதர்கள் பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டனர். அன்று துருக்கி முழுவதும் கிரேக்க மொழி பேசப்பட்டது. "Helenized Jews" என அழைக்கப்பட்ட கிரேக்கர்களைப் போல வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது வியப்பிற்குரியதல்ல. அவர்களின் செல்வாக்கு கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்தியையும் மதம் மாற்றும் வல்லமை பெற்றிருந்தது. அப்போது கிழக்கு ரோம சாம்ராஜ்யம், மேற்கு ரோம சாம்ராஜ்யத்துடன் போரில் ஈடுபட்டிருந்தது. இதனால் கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்திக்கு, போரில் வீரர்களை ஒருநிலைப் படுத்த புதிய மதம் பேருதவியாக இருந்தது. அதே நேரம் பல கடவுள் வழிபாட்டை கொண்டிருந்த ரோம மதத்தை விட, ஒரு கடவுட் கொள்கை கொண்ட கிறிஸ்தவ மதம் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த உதவும் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் கொன்ஸ்டான்டின் வெற்றி கொண்ட மேற்கு ரோம சாம்ராஜ்யத்தில் (இத்தாலி) புதிய மதம் கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளானது. இதனால் கிரேக்க வழிபாட்டு முறைகளுக்குள் மட்டுப்படுத்திக் கொண்ட கிறிஸ்தவம் இன்றும் "பழமைவாத கிறிஸ்தவம்" என அழைக்கப்படுகின்றது. பின்னாளில் ரோம கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் அதனை "பழமைவாத..." என்ற அடைமொழியுடன் அழைத்தனர். மற்றும்படி கிரேக்கத்தில் இன்றும் அது தான் "உண்மையான கிறிஸ்தவ மதம்."

நமது வருடக் கணிப்பீடு ஆரம்பித்த காலத்தில் இருந்து (கிறிஸ்துவுக்குப் பின்), இத்தாலியில் கிறிஸ்தவ மதம் மெல்ல மெல்ல பரவியது. ஆரம்பத்தில் அடிமைகளும், அடித்தட்டு மக்களும் கிறிஸ்தவ இரட்சிப்பில் நம்பிக்கை வைத்தனர். கிறிஸ்தவ மதம் அடிமை முறையை நிராகரித்து அந்தக் காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பிற்காலத்தில் கிறிஸ்தவ அரசர் காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தில் நிலவிய அடிமை முறை ஒழிக்கப்பட்டு நிலப்பிரபுத்துவ சமூகம் வந்தமை குறிப்பிடத்தக்கது. சில சரித்திர ஆசிரியர்கள் கிறிஸ்தவம் ஆரம்பத்தில் அடிமைகளின் மதமாக இருந்தது என குறிப்பிட்டாலும், வசதிபடைத்த குடும்பங்களை சேர்ந்த சிலரும் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். இருப்பினும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதற்காக தண்டனை வழங்கப் பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அடிமைகளாக இருந்தனர். இது அன்றைக்கும் நிலவிய வர்க்க நீதியை எடுத்துக் காட்டுகின்றது.

"ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்." என்ற கதையை பின்னாளில் பரப்பியவர்கள் கிறிஸ்தவர்கள். அதற்கு காரணம் நீரோ மன்னன் ஆட்சிக் காலத்தில் தான் அதிகளவான கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பில் இருந்த நீரோ மன்னன், ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தததற்கு கிறிஸ்தவர்கள் மீது பழி சுமத்தினான். தமக்கு நடந்த கொடுமைக்கு பழிவாங்கும் பிரச்சாரமாகவே, நீரோ மன்னன் ரோமை கொளுத்தி விட்டு பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக கதை கட்டினர். நீரோ மட்டுமல்ல, பிற ரோம ஆட்சியாளர்களும் கிறிஸ்தவர்களை தேடிப்பிடித்து கொலை செய்து வந்தனர். ரோம் நகரில் இருக்கும் கொலேசயும் என்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து கிறிஸ்தவர்களை சிங்கத்திற்கு இரையாக்கி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ ஆட்சி ஏற்பட்ட போது அந்த விளையாட்டு அரங்கத்தில் பெரியதொரு சிலுவை நாட்டப்பட்டது. அதனை இப்போதும் அங்கே செல்வபவர்கள் காணலாம்.

ஆரம்பத்தில் சிலுவை அடையாளம், ரோமர்கள் மத்தியில் அவமானப் படுத்தும் சின்னமாக கருதப்பட்டது. ரோமர்கள் தமது எதிரிகளை சிலுவையில் அறைந்து தண்டனை வழங்குவது வழக்கம். அந்தக் காலத்தில் யாராவது , கையால் சிலுவை அடையாளத்தை சைகை காட்டுவது, மற்றவர்களுக்கு கோபத்தை கிளறுவது போலாகும். ஏனெனில் "உன்னை சிலுவையில் அறைவேன்" என்று திட்டுவதாக பண்டைய ரோமர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டார்கள். ஒரு முறை ரோம இராணுவ முகாமில், கிறிஸ்தவ வீரர்கள் பிரார்த்தனை செய்யும் போது சிலுவை அடையாளம் இட்டமை, கைகலப்பில் முடிந்தது. ரோம மத அனுஷ்டானங்களில் கிறிஸ்தவர்கள் பங்குபற்றாமையும், கலவரங்களை ஏற்படுத்தியது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரத்தில் ரோம கடவுளருக்கு வழிபாடு நடந்த வேளை, கிறிஸ்தவர்கள் புறக்கணித்தமை மக்கள் மத்தியில் ஆட்சேபத்தை கிளப்பியது. அடுத்து நிகழ்ந்த மதக் கலவரத்தில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவில் நடந்த "பாலி குண்டுவெடிப்பில்" குற்றவாளியாக காணப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிக்கு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிய போது, அதனை அந்த குற்றவாளி அளவுகடந்த மகிழ்ச்சியோடு வரவேற்ற காட்சியை தொலைக்காட்சிகள் காட்டின. அந்த சம்பவம் மட்டுமல்ல, தியாக மரணத்தை விரும்பி ஏற்கும் இஸ்லாமிய தற்கொலைக் குண்டுதாரிகளை பற்றி விபரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், இந்த மனப்பான்மை (பின்தங்கிய) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சொந்தமானது என்பது போல சித்தரிக்கின்றன. மேலைத்தேய மக்களும் தம்மால் அந்த மன நிலையை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாக கூறுகின்றனர். இது போன்ற "தியாக மரணங்கள்" ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காணப்பட்டது. மரணத்தை ஏற்றுக் கொண்டு சிலுவையில் இறந்த இயேசுவின் வழியை பின்பற்றி வாழ விரும்பிய கிறிஸ்தவர்கள் பலர். அதனால் ரோம ஆட்சியாளர்கள் தண்டனை கொடுப்பதற்கு முன்னரே தாம் தியாகியாக மரணிக்க விரும்புவதாக ஒப்புக் கொடுத்தனர். "அவர்களாகவே முன்வந்து சாகிறார்கள்", என்று ரோம அதிகாரிகள் ஆரம்பத்தில் திருப்திப்பட்டாலும், கிறிஸ்தவர்கள் தற்கொடையின் மூலம் ரோம ஆட்சியாளர் மேல் குற்ற உணர்வை ஏற்படுத்த பார்க்கின்றனர் என அறிந்து கொண்டனர். (அனேகமாக ரோமர்களின் வற்புறுத்தலால்) இரண்டு கிறிஸ்தவ மத போதகர்ககள் தியாக மரணத்தை நிராகரித்தனர். "முதற்பரிசுக்காக போட்டி போட்டு செத்து தியாகியாவது, பிற கிறிஸ்தவர்களையும் தீவிரவாதிகளாக்கும்" என்று இவர்கள் கண்டித்தார்கள்.

ரோம அதிகாரிகள் கிறிஸ்தவர்களை பிடித்து சித்திரவதை செய்யும் போது, "அவர்களது பெயர், பிறப்பிடம், அடிமையா? சுதந்திரப் பிரசையா?" போன்ற விபரங்களை பதிவு செய்ய எத்தனித்தார்கள். அப்போதெல்லாம் சித்திரவதைக்கு உள்ளாகுபவர்கள் "நான் ஒரு கிறிஸ்தவன்" என்று மட்டுமே பதில் சொல்வார்கள். எந்தக் கேள்விக்கும் அது ஒன்றே பதிலாக வரும். இன்றைய காலத்தில் பொலிஸ் சித்திரவதைக்குள்ளாகும் புரட்சியாளரின் நிலையிலேயே அன்றைய கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை "கிறிஸ்தவன் ஒரு புது மனிதன். இன, தேசிய, சமூக அடையாளங்களைக் கடந்தவன்." "புது மனிதனை உருவாக்குவோம்" என்று சேகுவேரா முன் வைத்த சோஷலிச கோஷம் இங்கே நினைவுகூரத்தக்கது. ரோம சாம்ராஜ்யத்தில் அடிமை சமுதாயம் நிலவிய அன்றைய காலத்தில், கிறிஸ்தவ மதம் பல முற்போக்கான கூறுகளை கொண்டிருந்தது. இதனை கார்ல் மார்க்ஸும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மார்க்ஸியம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து சில கருத்துகளை உள்வாங்கியுள்ளது என கூறப்படுவதையும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு இன சமூகமும் தனக்கென சொந்தமான மதத்தை கொண்டிருந்த பண்டைய ரோம சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் மட்டும் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்களை கொண்டிருந்தமை ஆட்சியாளருக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

உண்மையில் கொன்ஸ்டான்டின் ஆட்சிக் காலத்தில், பிற ரோம மதங்களுடன் கிறிஸ்தவ மதத்திற்கும் சம உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கிறிஸ்தவ வழிக் கல்வி கற்ற கொன்ஸ்டாண்டினின் புதல்வனின் ஆட்சியில் கிறிஸ்தவ மதம் மட்டுமே அரச மதமாகியது. பிற மத வழிபாடுகள் அடக்குமுறைக்கு உள்ளாகின. கிறிஸ்தவம் அரசமதமாக அரியணை ஏறியதும் அதற்குள்ளே பல பிரிவுகள் தோன்றவாரம்பித்தன. உதாரணத்திற்கு பிதாவான கர்த்தரின் கீழ்ப்படிவான மகன் இயேசு என்று எகிப்தில் இருந்த குழுவும், இருவருமே சமமானவர்கள் என்று கிரேக்கத்தில் இருந்த குழுவும் வாதாடின. இறுதியில் (பழமைவாத)கிரேக்க மதப்பிரிவு சக்கரவர்த்தியை தமக்கு சாதகமாக இணங்க வைத்தது. தத்துவ விசாரங்கள், அதற்கான விளக்கங்கள் என்பன போட்டிக் குழுக்களை உருவாக்கின. இவை பின்னர் அதிகாரத்திற்காக வன்முறையையும் நாடத் தயங்கவில்லை. மன்னனின் காவலர்களும் மாற்றுக் குழுக்களை அடக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆட்பலமற்ற மாற்றுக் குழுக்கள் அரசுக்கெதிராக தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டும் தமது எதிர்ப்பைக் காட்டின. தம்மை கைது செய்யவரும் காவலர்களை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்துகொண்டனர்.

கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்திக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்திருந்த ஜூலியானுஸ் (கி.பி.360) காலத்தில் ரோம மதம் மறுபடியும் அரசமதமாகியது. இதனால் தாம் மீண்டும் அடக்கி ஒடுக்கப் படுவோம் என்று கிறிஸ்தவர்கள் அஞ்சினர். ஆனால் ஜூலியனுஸ் முன்பு போல கிறிஸ்தவர்களை தேடிப்பிடித்து மரண தண்டனை வழங்கவில்லை. அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்து மறைமுகமாக நெருக்குவாரங்கள் செய்தான். அரசால் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தீவிரவாதத்தை நாடினர். இரவு வேளைகளில் ரோம ஆலயங்களினுள் நுழைந்து கடவுட்சிலைகளை அடித்துடைத்த சம்பவத்துடன் அது ஆரம்பாகியது. கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்த சேதி கேள்விப்பட்டு, மேலும் பல கிறிஸ்தவ இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் இறங்கினர்.

மேற்கு ரோம சாம்ராஜ்ய பகுதியில், குறிப்பாக இத்தாலியில் ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் தலைமறைவாகவே இயங்கி வர வேண்டி இருந்தது. தனி நபர்களின் வீடுகளில் மட்டுமே வழிபாடு செய்யப்பட்டது. அதேநேரம் இரகசியமாக "கதகொம்ப்"(Catacombe) என அழைக்கப்படும் நிலக்கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி வழிபாடு செய்யும் இடமாகவும், அதே நேரம் இறந்தவர்களை புதைக்கும் இடுகாடாகவும் இந்த கதகொம்ப் சுரங்கங்கள் திகழ்ந்தன. அன்று ரோமர்கள் இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு அரச அங்கீகாரம் கிடைத்த பின்னர் அந்த தேவை மறைந்து விட்டது. அரச அங்கீகாரம் கிடைத்தாலும், கிறிஸ்தவ சபைகள் ஜெர்மனி, பிரான்ஸ் என்று பரவி இருந்தாலும், பெரும்பான்மை மக்கள் பிற மதங்களை பின்பற்றி வந்தனர். பிற மதத்தவர் வாழும் இடங்களுக்கு செல்லும் கிறிஸ்தவர்கள், அவர்களை பகிரங்க வாதத்திற்கு அழைப்பார்கள். நிலைமை மோசமாகி கைகலப்பில் முடியும் தருவாயில் அரச படைகளின் உதவியுடன் கிறிஸ்தவ ஆதிக்கம் நிலைநாட்டப்படும்.

ஒரு காலத்தில் அடக்கப்பட்டவர்கள், அதிகாரத்திற்கு வந்த பின்னர் அடக்குமுறையாளர்களாக மாறிய வரலாற்று முரண்நகை கிறிஸ்தவ மதத்திலும் காணக்கிடைக்கின்றது. "கடவுளருக்கு எதிரான கடவுளின் போர்" என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை குறிப்பிடுகின்றனர். ஒரு காலத்தில் ரோமர்கள், தமது ரோம மதத்தை மட்டுமே "மதம்" (Religio) என்று அழைத்தனர். மற்றைய மதங்களை மூட நம்பிக்கைகள் (Superstitio) என அழைத்தனர். அதன்படி அன்று கிறிஸ்தவமும் ரோமர்களால் "மூட நம்பிக்கை"யாக பார்க்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் கிரேக்கர்கள், கிறிஸ்தவர்களை கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் என்றும் அழைத்தனர். ஆனால் ஒரு முறை அதிகாரம் கிறிஸ்தவர்களின் கைகளில் வந்த பின்னர், எல்லாம் தலை கீழாக மாறியது. கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான ஒரேயொரு மதம் என்றாகியது. பிற மதங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக தடை செய்யப்பட்டன. அப்படி தடைசெய்யும் கடமையை அரச ஆதரவுடன் தீவிரவாத கிறிஸ்தவ ஆயுதக்குழுக்கள் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா நகரில் இந்த ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் எல்லை மீறியது. அங்கே கிடைத்தற்கரிய நூல்களை சேகரித்து வைத்திருந்த நூலகம் ஒன்று காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. கிறிஸ்தவத்திற்கு முந்திய இலக்கியங்கள் யாவும் அழிக்கப்பட வேண்டும் என்பது அந்த மத அடிப்படைவாதிகளின் கொள்கை. ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையை தகர்த்த தாலிபானின் செயலுடன் கொஞ்சமும் குறைந்ததல்ல, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாத வன்முறை.

பாலைவனம், காடு ஆகிய மனித நடமாட்டமற்ற பகுதிகளுக்கு சென்று தவம் செய்த கிறிஸ்தவ துறவிகளும், நகரங்களுக்கு திரும்பி வந்து மத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். லெபனானில் ரபுல்லா என்ற துறவியின் கதை பிரசித்தம். ரபுல்லாவும் இன்னொரு துறவியும் பால்பக் நகரில் உள்ள பிற மதத்தவரின் கோயிலினுள் புகுந்து, மூலஸ்தானத்தில் இருந்த கடவுள் சிலையை அடித்து நொறுக்கி விட்டு காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே அங்கே குழுமிய மத நம்பிக்கையாளர்கள், துறவிகள் இருவரையும் நையப்புடைத்தனர். மதத்திற்காக மரிப்பதை அந்த கிறிஸ்தவ துறவிகள் மேலானதாக கருதினர். இவர் போன்ற தற்கொலைப் போராளிகளைத் தவிர, சில துறவிகளின் ஸ்தாபித்த ஆயுதக்குழுக்கள், மாற்றுக் கருத்தாளரை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

கிரேக்க நாகரீகம் நிலவிய காலத்தில் இருந்து, பல்வேறு துறைகளை சேர்ந்த புத்திஜீவிகள், தமது ஆராய்ச்சியின் பெறுபேறுகளை சுதந்திரமாக வெளியிட முடிந்தது. ஆனால் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை கிறிஸ்தவமதம் சொல்வது தான் மெய்யான தத்துவம், விஞ்ஞானம் எல்லாம். மற்றவை எல்லாம் அழிக்கப்பட வேண்டும். பிற்காலத்தில் அவ்வாறான பாரம்பரியத்தில் வந்த கத்தோலிக்க திருச்சபை உலகம் உருண்டை என சொன்ன கலீலியோவை சிறையில் அடைத்து துன்புருத்தியமை எதிர்பார்க்கத்தக்கதே. ஐரோப்பியர்கள் ஆயிரம் வருட இருண்ட மதவாத ஆட்சியின் பின்னர், அரேபியரின் உதவியினால் தான் தொலைந்து போன கிரேக்க விஞ்ஞானக் குறிப்புகளை மீளக் கண்டுபிடித்தார்கள். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மாற்றுக் கருத்தாளரை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கினார்கள் என்பதை பின்வரும் சரித்திரக்கதை விளக்கும்.

எகிப்தில் அலெக்சாண்டிரியா நகர கிறிஸ்தவ தலைமை மதகுரு சிரிலுஸ் (கி.பி. 412) ஒரு காலத்தில் பாலைவனத்தில் ஏகாந்தியாக அலைந்து திரிந்த துறவி. நகரத்திற்கு திரும்பி வந்து தன்னைப் போல மதவெறி கொண்ட பிற துறவிகளையும் சேர்த்துக் கொண்டு "பரபலாணி" என்ற ஆயுதக் குழுவை அமைத்தார். பிற மதத்தை சேர்ந்தவர்களை கண்ட இடத்தில் அடித்து துன்புறுத்தி, சில சமயம் கொலையும் செய்து வந்த சிரிலுஸ் குழுவினரின் அடாவத்தனம், ஒரு கட்டத்தில் நகரபிதாவால் கூட பொறுக்க முடியாத அளவிற்கு எல்லை மீறியது. ஆயுதபாணிகள் 500 பேராக குறைக்கப்பட வேண்டும் என நகரபிதா உத்தரவு போட்டதால், பரபலாணிகள் அவரையும் தாக்கினர். அதிலிருந்து சிரிலுஸ் குழுவினர் அரச மட்டத்தில் இருந்த "துரோகிகளை" தீர்த்துக் கட்டும் நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

கொலைக் கலாச்சாரத்திற்கு பலியான ஹிபாதியா என்ற பெண் தத்துவ அறிஞரின் கதை பிரபலமானது. தனது மாணவர்களுக்கு தத்துவமும், கணிதமும் போதித்து வந்த அந்த ஆசிரியை, கிறிஸ்தவம் சொல்வது தான் முடிந்த முடிபு என்பதை எதிர்த்து வந்தார். "கண்ணை மூடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தில் குருட்டு நம்பிக்கை வைப்பதை, சுயமரியாதை உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என அவர் கூறி வந்தார். சிரிலுசிற்கு அந்தக் கருத்துகள் எரிச்சலை ஊட்டின. சிரிலுசின் கண்களுக்கு அழகும், அறிவும் இணைந்த ஹிபாதியா பிசாசின் உருவமாக தோன்றினார். ஒரு நாள் ஹிபாதியா வேலைக்குப் போகும் வழியில், ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார். உயிரற்ற அவரது சடலம் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டு தீயில் இடப்பட்டது. அந்த சம்பவத்துடன் சுதந்திரமான கருத்துக் கூறும் காலகட்டம் முடிவுக்கு வந்தது. கிறிஸ்தவ மதம் சொல்வதை மட்டுமே உண்மையென நம்பும் புதிய தலைமுறை உருவாகியது.

இதற்கிடையே, தலைநகர் ரோமில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த செனட் சபையில் இருந்த செனட்டர்கள்(பிரபுக்கள்) பலர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தனர். தமது மதமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக பழைய ரோம கோவில்களை பூட்டினார்கள். அங்கிருந்த தெய்வச் சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். ரோம சாம்ராஜ்யம் முழுவதும் ரோம கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்றப்பட்டன. (பண்டைய ரோம ஆலயம் எப்படி இருந்தது என்று பார்க்க விரும்புபவர்கள், மால்ட்டா தீவிலும், இத்தாலியின் சில இடங்களிலும் இப்போதும் சென்று பார்வையிடலாம்.) பல செனட்டர்கள் புதிய தேவாலயங்கள் கட்டுவதற்கு நன்கொடை வழங்கினர். இருப்பினும் பெரும்பான்மையான ரோம பிரசைகள் பெயரளவில் கிறிஸ்தவர்களாகவும், நடைமுறையில் ரோம மத சடங்குகளை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். பிற்காலத்தில் கத்தோலிக்க மதம் பல ரோம கலாச்சாரக் கூறுகளை, சடங்குகளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது. சில கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமரின் சடங்குகள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன. டிசம்பர் 25 ம திகதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினம் முதல், ஈஸ்டர் பண்டிகையில் வைக்கப்படும் முயல்,முட்டை வடிவ இனிப்புப் பண்டங்கள் வரை பல உதாரணங்களை கூறலாம்.

ரோம சாம்ராஜ்யம் அழிந்து, அதன் பிறகு கிறிஸ்தவ மத ராஜ்யம் தோன்றியதாக சொல்லப்படுவது உண்மையல்ல. ரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் அழியவில்லை. அதை கிறிஸ்தவ மத நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது. ரோமா புரியில் இருந்த அதிகார மையம், அதிலிருந்து சில மைல் தூரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாட்டிக்கான் நகருக்கு மாறியது. புதிதாக உருவாக்கப்பட்ட "பாப்பரசர்" என்ற பதவியில் இருத்தப்பட்டவர், (கத்தோலிக்க கிறிஸ்தவ) மதத்திற்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் தலைவராக வீற்றிருந்தார். பிராந்திய அரசர்கள் யாவரும் பாப்பரசரின் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்திற்கு அடிபணிந்து ஆட்சி செய்தனர். ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய புரட்டஸ்தாந்து பிரிவினரின் எழுச்சியானது, பாப்பரசரின் உலகளாவிய அரசியல் அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியது.

Friday, April 10, 2009

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

"ஆப்பிரிக்கா" என்றவுடன், அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துகள் வேண்டுமென்றே மேற்குலக ஊடகங்களால் பரப்படுகின்றன. "இருண்ட கண்டம்" என்று நிறவாதம் சூட்டிய பெயர், அன்றாட பேச்சு வழக்காகி விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்கா பற்றிய தவறான கருத்துகளை, தமிழ் மக்கள் மத்தியிலும் பொதுக்கருத்துகளாக போதித்தது. இதனால் ஒரு ஐரோப்பியரின் பார்வையிலேயே, நாமும் ஆப்பிரிக்காவை பார்க்க கற்றுக்கொண்டுள்ளோம்.

உலகம் முழுவதும் தமது காலனிகளாக்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய வல்லரசுகள், ஆப்பிரிக்காவை மிக தாமதமாகத் தான், அதாவது 19 ம் நூற்றாண்டில் "கண்டுபிடித்தன". ஐரோப்பியருக்கு தான் ஆப்பிரிக்காவை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. ஆப்பிரிக்க மக்கள் அதனை எப்போதோ கண்டுபிடித்து விட்டார்கள். அன்றைய ஐரோப்பியர்கள், அரபு மொழிபேசும் வட ஆப்பிரிக்க பகுதியை மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். பைபிளை எழுதிய ஆண்டவருக்கே எகிப்திற்கு அப்பால் இருந்த பிரமாண்டமான நிலப்பரப்பு பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமானது!

ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலான சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரேபியர்களுடன் போர் மூண்ட பிறகு தான், மாற்றுக் கடல்வழி பாதை தேடிய ஐரோப்பிய(போர்த்துகீசிய) மாலுமிகள் ஆப்பிரிக்காவை தற்செயலாக கண்டுபிடித்தார்கள். மேற்கு ஆப்பிரிக்க கரை நாடுகளான, செனெகல், கானா போன்ற நாடுகளில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட மக்களை, புதிதாக கண்டு பிடித்த அமெரிக்க கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் வாணிபம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் ஸ்பானிய, போர்த்துகீசிய அடிமை வியாபாரிகளின் ஏகபோகமாக இருந்த வர்த்தகத்தில், விரைவில் ஒல்லாந்து, ஆங்கிலேய வியாபாரிகளும் ஈடுபட்டனர்.

ஐரோப்பியருக்கு முன்னர் அரேபியர்கள் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டிருந்த வரலாறு உண்மை தான். ஆனால் அப்போது எல்லாம் பஞ்சம் அல்லது ஏழ்மை காரணமாக விற்கப்படும் அடிமைகளை, வீட்டு வேலைகளுக்காக வைத்துக் கொள்ளும் வழக்கமே நிலவியது. இனமுரண்பாடுகள் இருந்த ஆப்பிரிக்காவில், அடிமைகளை சக ஆப்பிரிக்கர்களே பிடித்துக் கொடுத்தனர். அதனால் அவர்களும் லாபமீட்டினர். இதனை ஐரோப்பியர்கள் வர்த்தக நலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர். இனக்குழுச் சமுதாயங்கள் பரவலாக காணப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்தில், ஒரு இனம் அயலில் உள்ள பிற இனங்கள் மீது போர் தொடுப்பதும், வென்றவர்கள் தோற்ற இனத்தை சேர்ந்தவர்களை அடிமைகளாக்குவதும் வழமையாக நடந்து வந்தது. போர் தொடுக்கும் இனத்திற்கு ஐரோப்பியர்கள் ஆயுதங்கள் வழங்கி, அடிமை வேட்டையை இலகுவாக்கினர். இவ்வாறு அன்று அடிமைகளை பிடித்து விற்ற பல இனங்கள், இன்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக உள்ளன. உதாரணத்திற்கு கானாவை சேர்ந்த "அஷாந்தி" அரச பரம்பரை. இவர்கள் தமது முன்னூறு ஆண்டு கால "பாரம்பரியத்தை" பேணுவதற்காக, இன்றுவரை ஒல்லாந்து அரச குடும்பத்துடன் நட்புறவை பேணி வருகின்றனர்.

அந்தக் காலத்தில் அட்லாண்டிக் சமுத்திரத்தில் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த கப்பல்கள், பல மடங்கு லாபம் சம்பாத்தித்தன. ஐரோப்பாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், அவற்றை ஆப்பிரிக்கர்களுக்கு விற்பனை செய்து, அடிமைகளை வாங்கிக் கொள்ளும். அமெரிக்க கண்டத்தில் உள்ள பெருந்தோட்டங்களுக்கு அடிமைகளை விற்பனை செய்து விட்டு, அங்கிருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றை ஏற்றிக் கொண்டு வந்து ஐரோப்பாவில் விற்பனை செய்வார்கள். இதிலே ஆங்கிலேயர்கள் மிக மலினமான உத்திகளை கையாண்டனர். நடுக்கடலில் வைத்து பிறநாட்டு வணிகக் கப்பலை கொள்ளையடித்தனர். இவ்வாறு கொள்ளையடித்த தங்கத்தை மூலதனமாகக் கொண்டு இங்கிலாந்தின் தொழிலகங்கள் பல தோன்றின.

ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பை சுரண்டி அமெரிக்கா பணக்கார நாடானது. அடிமை வியாபாரத்தினால் மேற்கு ஐரோப்பியர்கள் செல்வந்தர்களானார்கள் என்று சுருக்கமாக கூறலாம். இருப்பினும் தாம் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை எனினும் நஷ்டஈடாக ஆப்பிரிக்க வளர்முக நாடுகளுக்கு கொடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. அதற்கு மாறாக, அபிவிருத்திக்காக என்று சொல்லி, வட்டிக்கு கடன் கொடுத்து மேலும் மேலும் செல்வம் சேர்த்து வருகின்றனர். இதனால் மேற்குலகம் செய்வதையெல்லாம், மறுகாலனியாதிக்க சதிகளாக இன்று ஆப்பிரிக்க மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் நடந்த யூத இனப்படுகொலைக்கு நஷ்டஈடாக, வருடந்தோறும் ஒரு தொகைப் பணத்தை ஜெர்மனி இஸ்ரேலுக்கு கொடுத்து வருகின்றது. இஸ்ரேல் பணக்கார நாடாக இருப்பதற்கு இந்த நஷ்டஈடு ஒரு காரணம். அதைப்பார்த்து, முன்னாள் காலனியாதிக்க நாடுகள் நஷ்டஈடு வழங்கவேண்டுமென்று ஆப்பிரிக்க நாடுகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலத்தில், அண்மையில் இத்தாலி மட்டுமே லிபியாவிற்கு காலனிய கால நஷ்டஈடு வழங்க முன்வந்துள்ளது. லிபிய தலைவர் கடாபியின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டாலும், ஆப்பிரிக்க அகதிகளை வரவிடாமல் தடுப்பதில் இத்தாலிக்கு உள்ள கரிசனை இங்கே கவனிக்கத்தக்கது.

ஆப்பிரிக்க கண்டத்தை பட்டினிச்சாவு நிறைந்த வறண்ட பூமியாக ஒருபக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் ஐரோப்பா தனது உணவுத் தேவைகளுக்காக ஆப்பிரிக்காவில் தங்கி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மீன்பிடி வள்ளங்கள், மேற்கு ஆப்பிரிக்க கடல்களில் கேட்பாரற்று மீன்களை அள்ளிச் செல்கின்றன. தினசரி மரக்கறிகளையும், பழங்களையும் ஆப்பிரிக்கா ஏற்றுமதி செய்வதை நிறுத்தினால், ஐரோப்பியர்கள் உருளைக்கிழங்கையும், ஆப்பிளையும் தான் சாப்பிட வேண்டி இருக்கும். ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் முரண்பாடுகளின் பூமி தான். பாலைவன வளைகுடா நாடுகள், சூடானில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு, தமது மக்களுக்கு உணவிட்டு வருகின்றனர். அதேநேரம் சூடான் டார்பூர் பிராந்திய மக்கள், அன்றாட உணவுக்காக தொண்டு நிறுவனங்களிடம் கையேந்துகின்றனர்.

நைஜீரியாவும், அங்கோலாவும் பிரதான எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகள். ஆனால் அந்நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக அல்லலுறுகின்றனர். உலகில் விலை உயர்ந்த விற்பனைப் பண்டங்களில் ஒன்றான எண்ணை விற்று வரும் லாபம், அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தின் கைகளில் போய்ச் சேருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் எல்லாம் இந்த ஏற்றத்தாழ்வை காணலாம். "அதிகாரத்திற்கு வந்தால், எமது நாட்டு வளங்களை அந்நியநாடுகளுக்கு விற்று பணக்காரனாகலாம்." என்ற எளிய தத்துவமே பல ஆயுதக்குழுக்கள் உருவாக காரணமாக உள்ளன. போர்வீரனாக ஆயுதம் ஏந்த வருபவர்கள் கூட அதிக ஊதியம் எதிர்பார்ப்பதால் தான், யுத்தபிரபுக்கள் குழந்தைப் போராளிகளை சேர்க்கின்றனர்.

சூடானில் குழந்தைப்போராளிகளை சேர்த்து வைத்திருக்கும் SPLA இயக்கத்திற்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை, எனது நண்பர்களான முன்னாள் SPLA உறுப்பினர்கள் சிலர் ஒப்புக் கொண்டனர். அதே நேரம் அப்படி உதவி பெறுவதில் என்ன தவறு? என்றும் கேட்டனர். சில வருடங்களுக்கு முன்னர் எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட சாட் நாட்டை சேர்ந்த, தற்போது புகலிடத்தில் வாழும், எனது நண்பரொருவர், அரசுக்கெதிரான ஆயுதக்கிளர்ச்சி திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு அமெரிக்க பக்தரான அந்த நண்பர், எதிர்பார்த்த கிளர்ச்சி வெற்றி பெற்றிருந்தால், எண்ணைக் கிணறுகளை அமெரிக்க கம்பெனிகளுக்கு தாரை வார்த்திருப்பார் என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

மேற்குலகில் பிரச்சாரம் செய்யப்படுவதைப் போல, ஆப்பிரிக்காவின் பிரச்சினைகளை அங்கே காளான்கள் போல முளைத்துள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தீர்த்துவிடப் போவதில்லை. அல்லது மத நம்பிக்கையாளர்கள் நினைப்பது போல, இன்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் கிறிஸ்தவ மதம், மக்களை வறுமையில் இருந்து விடுதலை செய்யப்போவதில்லை. உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகள் எவை என்று பட்டியலிட்ட போது, ஏழைகளாக இருந்தாலும் மத நம்பிக்கை என்ற மாயைக்குள் வாழும் கானா, நைஜீரிய மக்கள் முன்னணியில் நின்றனர். ஆப்பிரிக்காவை வளம்படுத்த மக்களுக்கு தொழில்நுட்ப அறிவு தேவை. அதைக் கொடுக்க மேற்குலகம் மறுத்து வருகின்றது. இப்போதும் காலனிய காலத்தில் நடந்தது போல, மலிவு விலையில் மூலப்பொருட்களை வாங்கிக் கொண்டு, அதிக விலையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றன.

"நமது நாடு இயற்கை வளம் நிறைந்தது. அது தான் எமது சாபக்கேடு." என்று பல ஆப்பிரிக்கர்கள் குமுறுகின்றனர். வளங்களை சூறையாட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன. ஆப்பிரிக்க தலைவர்கள் உள்ளூர் தரகு முதலாளிகளாக செயற்படுகின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கும் இனவெறிப் போர்கள் (உ+ம்: ருவாண்டா), மதவெறிப் போர்கள் (உ+ம்: சூடான்), சித்தாந்தப் போர்கள் (உ+ம்: அங்கோலா); இவை எல்லாமே வளங்களை யார் கைப்பற்றுவது என்ற போட்டிக்கு மேல் போடப்பட்டிருக்கும் மாயத்திரைகள். இந்தப் போர்களினால் பாதிக்கப்படுவது, வழமை போல அப்பாவி மக்கள் தான். ஓரளவு வசதி உள்ளவர்கள், இன்னல்களில் இருந்து தப்புவதற்காக ஐரோப்பா செல்ல நினைத்தால், அங்கே ஐரோப்பிய ஒன்றியம் என்ற கடுமையாக பாதுகாக்கப்பட்ட கோட்டை மதில்கள் தடுக்கின்றன.

ஆப்பிரிக்காவின் பிரச்சினையை பிராந்திய ஒருமைப்பாட்டால் தீர்க்கலாம், அல்லது அந்த பாதையில் எடுத்து வைக்கப்படும் முதல் அடி என்று, பல சமூக ஆர்வலர்கள் நம்புகின்றனர். பலர் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பை ஒத்த ஆப்பிரிக்க ஒன்றியத்தை, தமது நீண்ட கால கனவாக காண்கின்றனர். இது குறித்த மகாநாடுகள் நடைபெறும் போதெல்லாம், "மேற்குலகில் கையேந்தும் பிச்சைக்கார நாடுகள் ஒன்று கூடி எதை சாதிக்கப் போகிறார்கள்?" என்று சில மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் ஏளனமாக குறிப்பிடுகின்றனர். ஐக்கிய ஆப்பிரிக்க கூட்டமைப்பிற்கு பாடுபடும் கடாபி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது: "பல ஆப்பிரிக்க நாடுகளும், இனங்களும் பரமவைரிகளாக தமக்குள் மோதிக் கொள்கின்றனர் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. நூறாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய கண்டமும் இதே நிலைமையில் தான் இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் அதிகரிக்கும் போது, மேற்குலகில் கையேந்த வேண்டிய தேவை இருக்காது."

ஆப்பிரிக்க ஒற்றுமை நடைமுறைச் சாத்தியமா? தனக்கு காலனிய மனோபாவம் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பிரான்ஸ் முதல், முன்பு பனிப்போர் இப்போது சுதந்திர வர்த்தகம் என்ற சாட்டுகளை கூறி தலையீடு செய்யும் அமெரிக்கா வரை, தொலை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அரசியலை இன்னும் கைவிடவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எதோ ஒரு வல்லரசின் கைப்பொம்மையாக இருப்பதை பார்க்கலாம். உலகம் முழுவதும் ஜனநாயகத்தை போதிக்கும் மேற்குலகம், ஆப்பிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளை ஆதரித்து வருகின்றது. மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் கூட பதவியில் இருந்து பலாத்காரமாக அகற்றப்பட்டனர். அந்த இடத்தில் கொடுங்கோல் சர்வாதிகாரிகளை நியமித்தனர்.

காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளில், ஜனநாயகத்தை கொன்று சர்வாதிகாரத்தை அரியணை ஏற்றிய மேற்குலக சதிகள், இயற்கை வளம் நிறைந்த கொங்கோவில் இருந்து ஆரம்பமாகியது. 1960 ல் பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற கொங்கோவின் மக்கள் மனங்கவர்ந்த தேசியவாதத் தலைவர் லுமும்பாவை நஞ்சு கொடுத்து கொலை செய்யுமாறு, அமெரிக்காவில் இருந்து உத்தரவு வந்தது. அந்த கொலை பாதகச் செயலை செய்யச் சொன்னது யார்? அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர்!

---- (தொடரும்) ----


(பிற்குறிப்பு: ஏற்கனவே என்னால் எழுதப்பட்டு வினவு தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையை வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.)

Wednesday, April 08, 2009

பிரிட்டிஷ் தொழிற்சாலையை கைப்பற்றிய தொழிலாளர்கள்

பிரிட்டனில் மூன்று கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டு, தொழிற்சாலையை மூடிவிட நிர்வாகம் முயன்ற வேளை, தொழிலாளர்கள் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பான காணொளி கீழே:
Hundreds of workers occupy three Visteon car manufacturing factories in Britain after the management closed them down, laying off the entire workforce with no notice, violating their contracts. This is reminiscent of the factory occupations of the 1970s.



On Monday 6th April 2009, seven days after occupying their factory in Basildon, Essex, the Visteon car plant workers decide to give their former boss, Steve Gawne, a visit at his country manor to hand-deliver a letter demanding justice be served.