Saturday, July 08, 2023

ஈழ வரலாற்றில் எழுதப்படாத தற்கொலைத் தாக்குதலின் தொடக்கம்

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில், கரும்புலி அல்லது தற்கொலைத் தாக்குதல் என்பதை யாரும் நினைத்து கூட பார்க்காத ஒரு காலம் இருந்தது. 1985 ம் ஆண்டளவில், யாழ் குடாநாட்டில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த நாவற்குழி முகாம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர். 

நாவற்குழி முகாமுக்கான தண்ணீர் விநியோகம் அருகில் உள்ள கைதடி, சாவகச்சேரி போன்ற ஊர்களில் இருந்து ஒரு பவுசரில் கொண்டு சென்று கொடுப்பார்கள். அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் சாரதிகளும் அதே ஊரைச் சேர்ந்த தமிழர்கள் தான். ஒரு தடவை அல்கஹோலுக்கு அடிமையான ஒரு மினி பஸ் வாகன சாரதியை புலிகள் அணுகினார்கள். அவரும் ஒரு புலி ஆதரவாளர் தான். அவரிடம் குண்டு வைத்த தண்ணீர் பவுசர் ஓட்டிச் சென்று முகாமில் வெடிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக் கொண்டனர். 

குண்டுவெடிப்பில் அவரும் இறக்க வேண்டி நேரிடும் என்பதால் அவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் வாக்குறுதி அழித்தனர். ஆனால் ஆரம்பத்தில் ஒத்துக் கொண்ட வாகன சாரதி கடைசி நேரத்தில் மறுத்து விட்டார். அதனால் அந்த திட்டம் கைவிடப் பட்டது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட நபரே சில மினிபஸ் சாரதிகளிடம் தெரிவித்து இருந்தார். 

பின்னர் சில மாதங்கள் கழித்து, அதே பாணியில் நாவற்குழி முகாமை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனர். இந்த தடவை நடைமுறைப் படுத்தும் கட்டத்திற்கு வந்து விட்டது. இது மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதால் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களும் இந்த திட்டத்தை நேரில் பார்வையிட வந்திருந்தனர். 

இந்த தடவை எல்லாம் தயார். தண்ணீர் பவுசரில் வெடி குண்டும் பொருத்தப் பட்டு விட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தண்ணீர் ஒழுகத் தொடங்கி விட்டது. அதனால் முகாமுக்கு அருகில் உள்ள கைதடி எனும் கிராமத்தில் வைத்து வெல்டிங் வேலை செய்திருக்கிறார்கள். தண்ணீர் ஊடாக மின்சாரம் கடத்தப்பட்டு அந்த இடத்திலேயே குண்டு வெடித்து விட்டது. அதை பார்வையிட்டுக் கொண்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் பலியானார்கள். அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் கேடில்ஸ் அந்த வெடிகுண்டு விபத்தில் கொல்லப் பட்டார். 

அப்போது யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  தமிழ் மக்கள் அந்த வெடி விபத்து சம்பவம் ஒரு "உடனடி கர்மா" என்று பேசிக் கொண்டனர். அதாவது என்ன தான் எதிரியாக இருந்தாலும் குடி நீரில் குண்டு வைப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

 

Monday, July 03, 2023

தமிழீழத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்

 "ஈழத்தில் சாதி இல்லை" என்று பூசி மெழுகிய பாசிச பன்னாடைகள் அனைவரும் வரிசையில் வரவும். 

இது என்ன? 

வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊர்களின் பெயர்கள்: 

1. பறையனாலங் குளம் 

2. முதலியார் குளம் 

இன்றைக்கும் அதே சாதிப் பெயர்களுடன் புழக்கத்தில் உள்ளன. இவை முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் இருந்த காலத்தில் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. புலிகளின் ஊடகங்களில் எந்த விதக் கூச்சமும் இல்லாமல் இந்த இடப்பெயர்கள் உச்சரிக்கப் பட்டன. அது சரி, சாதியம் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? 

 

தமிழீழ அரசு ஆட்சியதிகாரம் செலுத்திய வன்னிப் பிரதேசத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்: 

  • 1. "குருக்கள்" புதுக்குளம் 
  • 2. "செட்டி"குளம் 
  • 3. "பண்டாரி" குளம் 
  • 4. "வெள்ளாம்"குளம் 
  • 5. "செட்டியார்" குளம் 
  • 6. காசி "உடையார்" கட்டைக்காடு 
  • 7. "பள்ளன்" கோட்டை 
  • 8. "நளவன்" குளம் 
  • 9. "தச்சன்" மருதமடு 
  • 10. "உடையார்"கட்டு 
  • 11. "விஸ்வ"மடு 
  • 12. "பள்ள"மடு 
  • 13. "கரையாம்"முள்ளிவாய்க்கால் 
  • 14. "வெள்ளாம்"முள்ளிவாய்க்கால் 

 (இவற்றை விட இன்னும் நிறைய உள்ளன....) 

உலகப் புகழ் பெற்ற உருட்டுகள்: 

"ஈழத்தில் சாதிகள் இல்லை... யாரும் சாதி பார்ப்பதும் இல்லை..." "புலிகள் எப்போதோ சாதியத்தை அழித்து விட்டார்கள்...." 

"ஐயயோ... புதிதாக சாதியத்தை புகுத்த சிங்கள அரசு சூழ்ச்சி செய்கிறது..." 

ஆகவே ஆண்டவரே இந்த பிசாசு தமிழர்களை பிடிக்காமல் பார்த்துக் கொள்வீராக... 

அல்லேலூயா! 

ஆமென்!

Sunday, July 02, 2023

பிரான்ஸ் எரிகிறது! இனவெறிப் பொலிஸ் அத்துமீறலின் எதிர்விளைவுகள்!!

 

பிரான்சில் மக்கள் எழுச்சி! 

பாரிஸ் புறநகர் பகுதியான Nanterre நகரத்தில் Nahel என்ற 17 வயது அல்ஜீரிய இளைஞன் பொலிஸ் வீதி சோதனையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் கலவரம் வெடித்தது. பல வாகனங்கள், பேருந்து வண்டிகள், ஒரு டிராம் தீக்கிரையாக்கப் பட்டன.  பஸ் பாதையில்  காரோட்டிய குற்றத்திற்காக வீதிசோதனை இடும் போலீசார் மறித்துள்ளனர்.

போலிஸ் ஓரிடத்தில் நிறுத்தி வைத்து பிஸ்டல் காட்டி மிரட்டியதாகவும், துப்பாக்கியால் தலையில்தாக்கியதாகவும் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். அந்த தாக்குதல் காரணமாக பிரேக்கில் இருந்து காலை எடுத்த படியால் வண்டி தானாக ஓடிச் சென்று மின்கம்பத்துடன் மோதியுள்ளது. அந்த அல்ஜீரிய இளைஞன் அந்த இடத்திலேயே பலியானான்.

அடுத்த நாள் பாரிஸ் நகரில் Nahel இன் தாயார் தலைமையில் சுமார் 6000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. "பொலிஸ் கொலைகாரர்கள்!" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்த பேரணிக்கு பொலிஸ் "பாதுகாப்பு" கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டது. பிரான்சின் பல நகரங்களில் பொலிசை நோக்கி கற்கள் வீசப்பட்டன. பொலிசாருடன் மோதல்கள் இடம்பெற்றன. 

பல நகரங்களில் கலவரம் நடந்தது. ஒரு வங்கி உட்பட பல அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. சூப்பர் மார்க்கெட்டுகள் கொள்ளையடிக்கப் பட்டன. பாரிஸ் நகரில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் Louis Vuitton எனும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை பொது மக்களால் உடைத்து சூறையாடப் பட்டது. Aldi, Action போன்ற பல சூப்பர் மார்க்கெட்டுகள் தீக்கிரையாக்கப் பட்டன. பாரிஸ் வடக்கில் உள்ள ஓபர்வில்லியே ( Aubervilliers) புற நகரில் ஒரு பஸ் டிப்போ எரிக்கப் பட்டது. 

பிரான்ஸ், மார்செய் நகரில் ஒரு பெரிய நூலகம் எரிக்கப் பட்டதாக ஒரு பொய்யான செய்தி பரவியது. ஐரோப்பிய தீவிர வலதுசாரி நாஸிகள், இந்திய ஆர்எஸ்எஸ் காவி சங்கிகள் பரப்பிய இந்த பொய்ச் செய்தியை, ஒரு சில ஈழத்து வலதுசாரி சங்கிகளும் பகிர்ந்திருந்தனர். இந்திய சங்கிகள் இதை நாளந்தா நூலக எரிப்புடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்தனர். ஈழத்து சங்கிகள் இதை யாழ் நூலக எரிப்புடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்தனர். 

இது உண்மையில் வெள்ளையின நிறவெறியினரின் சமூக வலைத்தளங்களில் மட்டுமே பரப்பப்பட்ட ஒரு fake news. ஐரோப்பாவில் எந்தவொரு உத்தியோகபூர்வ ஊடகமும் இதை தெரிவிக்கவில்லை. நவ- நாஸி இனவெறியர்கள் மார்செய் நூலகம் எரிப்பு என்ற பொய் செய்தியின் மூலம் வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிராக பரப்புரை செய்கின்றனர். இதனால் பாதிக்கப் படுவது புலம்பெயர்ந்த தமிழர்களும் தான். இதை உணர்ந்து நடக்க வேண்டும். தீவிர வலதுசாரிகள் சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. 

சர்வதேச சமூகம், ஐ.நா. சபை எல்லாம் பிரெஞ்சு காவல்துறையின் கொடுமைகளை, அரச மட்டத்தில் நிலவும் இனவெறியை வன்மையாக கண்டித்துள்ளன. ஆனால் இங்கே சில புலியின் நெளிஞ்ச செம்புகள் இனவெறி அரசுக்கு வக்காலத்து வாங்கும் ஒட்டுக்குழு வேலை செய்து கொண்டிருக்கின்றன.

Sunday, June 11, 2023

ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!

 

அதிசயம் ஆனால் உண்மை! ENDLF ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!! 

ENDLF என்ற இயக்கம் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் உருவாக்கப் பட்டது. அதில் இணைக்கப் பட்ட இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டு முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்தவர்கள். 

1986 ஆம் ஆண்டு ஈழத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்ட TELO, PLOTE, EPRLF ஆகிய இயக்கங்களை சேர்ந்தவர்கள்; இந்தியாவில் இருந்தவர்களும், இலங்கையில் இருந்து சென்றவர்களும் மண்டபம் முகாமில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இந்திய அரசு அகதி முகாம்களில் இருந்த இளைஞர்களை அணி திரட்டி இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் அல்ல. இதற்கு முன்னர் எந்த இயக்கத்திலும் இருந்திராத அகதி இளைஞர்களும் சேர்க்கப் பட்டனர். அவ்வாறு உருவானது தான் ENDLF. 

இந்திய இராணுவம் இலங்கை செல்லும் நேரம் இவர்கள் துணைப் படையாக இயங்க வேண்டும். நிலைமை சீரானவுடன் ஈழப் பிரதேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் கையளிக்கப் படும். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்த அகதிகள் அத்தனை பேரும் மீள்குடியேற்றம் செய்யப் படுவார்கள். அன்று இது தான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது. 

ஆனால் வரலாறு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. போரின் முடிவில் இந்திய இராணுவத்துடன் ENDLF உம் வெளியேறியது. ஆயுதபாணிகள் மீண்டும் அகதிகள் ஆனார்கள். இந்திய- இலங்கை ஒப்பந்தம் முறிந்த படியால் ஒட்டுமொத்த அகதிகளும் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.

Friday, June 09, 2023

கஜேந்திரகுமார் கைது தொடர்பாக...

7 June 2023, அன்று கொழும்பில் TNPF தலைவர் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கும் அப்பால், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் அவரது கருத்து சுதந்திரம் பறிக்க படுவது கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக கஜேந்திரகுமாருடன் துணை நிற்போம். 

 அதே நேரம் கஜேந்திரகுமாரின் கட்சியினரும் தமது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். தமிழ்த்தேசிய அரசியலில் தாங்கள் மட்டுமே புனிதர்கள் என்ற மிதப்பில், இன உயர்வுச் சிக்கல் மனப்பான்மை காரணமாகவும் மற்றவர்களிடமிருந்து தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டவர்கள். 

இவர்களே ஒரு நாளும் சொந்த இன மக்களின் கருத்து சுதந்திரத்தை மதிக்கவில்லை. அதையே அரசு இவர்களுக்கு செய்யும் பொழுது மட்டுமே புரிகிறது. சொந்த இனத்தில் மாற்றுக் கருத்து வைப்பவர்களை எல்லாம் "துரோகிகள், ஒட்டுக்குழுக்கள்" என்று முத்திரை குத்தி, தாமும் சிங்கள பேரினவாத அரசுக்கு சளைக்காத தமிழ்ப் பேரினவாத கருத்தியல் அடக்குமுறையாளர்கள் என்பதை நிரூபித்தவர்கள். அரசும் அதே "துரோகி" முத்திரையை தான் இவர்களுக்கும் குத்துகின்றது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். 

ஒரு வருடத்திற்கு முன்னர் தெற்கில் நடந்த "அரகலய" என்ற மக்கள் எழுச்சியில் தமிழ் மக்கள் பங்குகொள்ள கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அது "சிங்களவர் போராட்டம்" என்று இனவாத அடிப்படையில் நிராகரித்தார்கள். போராட்டத்தை தொடர்ந்து தெற்கில் பல மாணவர் அமைப்பினரும், தொழிற்சங்கவாதிகளும் கைது செய்யப்பட்ட நேரம் இவர்கள் அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தார்கள். (வழமை போல "அது சிங்களவர் பிரச்சினை" என்ற புறக்கணிப்பு). 

பொலிசார் கைது செய்ய வந்த நேரம் கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு சிங்களத்தில் பேட்டியளித்தார். அதில் அவர் அரச அடக்குமுறை குறித்து சிங்கள மக்களுக்கும் அறிவுறுத்தினார். நல்ல விடயம். இப்போதாவது இன ஐக்கியத்தின் மூலம் தான் அரச ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராட முடியும் என்ற ஞானம் பிறந்திருக்கிறது. 

இனிமேலும் "இரு தேசம், புலிப் பாசம்" என்று கற்பனாவாத கதைகளை பேசிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் உருவப்பட்டு விடும். ஒடுக்கப்படும் சிங்கள, முஸ்லிம் உழைக்கும் வர்க்க மக்களுடன் தமிழர்களையும் ஒன்றுசேர்த்து, IMF ஆணைப் படி நடக்கும் ஸ்ரீலங்கா அரச இயந்திரத்திற்கு எதிராக போராட முன்வருவீர்கள் என நம்புகிறேன்.