Showing posts with label வீட்டு மனை. Show all posts
Showing posts with label வீட்டு மனை. Show all posts

Sunday, March 26, 2017

லைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த "150 வீடுகள்" - உண்மைக் கதை

அல்லிராஜா சுபாஸ்கரன்


லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம் இருபது மில்லியன் பவுன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கை செல்வதாக வெளிவந்த தகவல், பலதரப் பட்ட வாதப் பிரதிவாதங்களையும், எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியதால், அந்தப் பயணத்தை இரத்து செய்வதாக ரஜனி அறிவித்திருந்தார்.

ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது: 
//லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.//

வீடுக‌ள் க‌ட்டிக் கொடுப்ப‌து என்ப‌து ஒரு வியாபார‌ "போட்டி" அல்ல‌. அது முத‌லீட்டுக்கான அருமையான‌‌ வாய்ப்பு. ஒரு நாட்டில் போர் முடிந்த‌ பின்ன‌ர், அழிவில் இருந்து மீள‌க் க‌ட்டியெழுப்ப‌ முத‌லாளிக‌ளுக்கு கிடைக்கும் வாய்ப்புக‌ள். ஏற்க‌ன‌வே ஆப்கானிஸ்தான், ஈராக்கில் பெரிய‌ அள‌வில் ந‌ட‌ந்த‌து. அமெரிக்க‌ அர‌சே டென்ட‌ர் போட்டு யார் யாரெல்லாம் முத‌லிட‌லாம் என்று தெரிவு செய்த‌து. 

அங்கெல்லாம் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் மூலதன பலம் கிடையாது. அது அந்தளவு பெரிய நிறுவனம் அல்ல. ஆனால், இலங்கையில் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் பண பலம் உள்ளது. "இலவச" வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் பின்னணியில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு தொழிற்துறையில் முதலீடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.

லைக்கா நிறுவனம், ஐரோப்பாவில் வரி கட்டாமல் ஏமாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தான், வவுனியாவில் 150 வீடுகள் கட்டப் பட்டன. உண்மையில் அந்த "தான தர்மம்" கூட, லைக்கா பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணத்தை விடக் குறைவு! 

முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அல்லது கன்சவேர்ட்டிவ் கட்சிக்கான நிதியாக, £2.2 மில்லியன் பவுன்ஸ் "தானம்" செய்திருந்த விடயம் ஏற்கனவே அம்பலமானது. முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சனின் தேர்தல் செலவையும் லைக்கா பொறுப்பேற்றிருந்தது.

லைக்காவின் மொத்த வருடாந்த வருமானம் சுமார் 1.5 பில்லியன் பவுன்கள். பிரித்தானியாவில் வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், போர்த்துக்கலுக்கு சொந்தமான மாடேயிரா தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கில் வைப்பிலிடப் படுகின்றது. வருமான வரி மட்டுமல்ல, மதிப்புக் கூட்டு வரியும் (VAT) கட்டாமல் பெருந்தொகைப் பணம் பதுக்கப் படுகின்றது. இதற்கென இருபதுக்கும் குறையாத போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. சட்டவிரோத கருப்புப் பணத்தை தூய்மைப் படுத்துவதும், அதை இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்குவது மட்டுமே இந்தப் போலி நிறுவனங்களின் வேலை.

லண்டன் தபால் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் கட்டுக் கட்டாக பண நோட்டுக்கள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப் படுவது கண்டுபிடிக்கப் பட்டது. அதை அடுத்து, பாரிஸ் நகரில் உள்ள லைக்கா கிளை அலுவலகம் கடந்த வருடம் பொலிஸ் சோதனைக்கு உள்ளானது. அங்கு 130,000 யூரோ தாள்களும், மேலதிகமாக வங்கியில் இருந்த 850,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப் பட்டன. பிரான்ஸில் பதினேழு மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் பிரெஞ்சுக் கிளை நிர்வாகி Alain Jochimek உட்பட ஒன்பது பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது.
(முழுமையான விபரங்களுக்கு இந்த இணைப்பில் வாசிக்கவும்:The French Connection: How Paris Police Closed In On Cameron’s Biggest Donor)

மேலும் இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன், ஐரோப்பிய தீவிர வலதுசாரி அரசியல்வாதிளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார். பாரிஸ் பொலிஸ் சோதனையில் பிடிபட்டு கம்பி எண்ணிய அலென் ஜோகிமிக் இஸ்ரேலிய அரசுடன் தொடர்புடைய யூத வலதுசாரி நிறுவனம் ஒன்றை  நடத்துகிறார். பிரிட்டனில், முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூன், முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் போன்றோர் கன்சவேர்ட்டிவ் கட்சியை சேர்ந்த வலதுசாரிகள். கன்சர்வேட்டிவ் கட்சி, ஈழப்போர் நடந்த காலத்தில் வெளிப்படையாகவே சிறிலங்கா அரசை ஆதரித்திருந்தது. 

தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் அகராதிப் படி, "லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு இனத் துரோகி!" இருப்பினும், ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் யாரும் லைக்காவின் கிரிமினல் வேலைகளை கண்டுகொள்வதில்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். அவர்கள் யாரும் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்ல, மாறாக முதலாளித்துவ ஆதரவு வலதுசாரிகள். 

//"லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு "ஈழத் தமிழர்". "தனது செலவில்(?)" தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்..."// என்று போலித் தமிழ்த்தேசியவாதிகள் லைக்காவின் கிரிமினல் குற்றங்களுக்கு துணைபோகின்றனர். இனம் இனத்தோடு தான் சேரும். வர்க்கம் வர்க்கத்தோடு தான் சேரும். பணம் பணத்தோடு சேரும்.

எதிர்பார்த்த‌ மாதிரியே அர‌சிய‌ல் நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ர‌ஜ‌னிகாந்துக்கு எதிராக‌வே க‌ம்பு சுற்றுகிறார்கள். "லைக்கா மாமா ந‌ல்ல‌வ‌ராம், ர‌ஜ‌னி மாமா கெட்ட‌வ‌ராம்!" என்று குழ‌ந்தை - ஊட‌க‌விய‌லாள‌ர் ஒருவ‌ர் சிணுங்குகிறார். இவர் கஜேந்திரகுமார் - விக்னேஸ்வரன் தலைமையில் நம்பிக்கை வைத்திருப்பவர். அவரைப் போன்றே தீவிர வலதுசாரிகளான த.தே.ம.மு. கட்சி ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் பிரபல நடிகரான ரஜனிகாந்திற்கு எதிராக கம்பு சுற்றுவதன் மூலம், லைக்காவின் குற்றங்களை மறைப்பதற்கு உதவுகிறார்கள்.

திரைப்ப‌ட‌ த‌யாரிப்பாள‌ரான‌ லைக்கா நிறுவ‌ன‌ம் நினைத்தால் ர‌ஜ‌னியை ம‌ட்டும‌ல்ல‌, ந‌மீதாவையும் கூட்டி வ‌ந்து விள‌ம்ப‌ர‌ம் தேட‌ முடியும். எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து மாதிரி, முத‌லீட்டாள‌ர் இருக்க‌ கூத்தாடிக‌ளை எதிர்க்கிறார்க‌ள். இது அவ‌ர்க‌ள‌து முத‌லாளிக‌ளுக்கு ஆத‌ர‌வான‌ வ‌ர்க்க‌க் குணாம்ச‌த்தின் வெளிப்பாடு.

இந்த விடயத்தில் ரஜனிகாந்த் நல்லவர் என்று சொல்ல வரவில்லை. அவருக்கும் சில அரசியல் ஆதாயங்கள் இருக்கலாம். தனக்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே தனது இலங்கைப் பயணம் தொடர்பான தகவலை வெளிவிட்டிருக்கலாம். ஒரு காலமும் அரசியல் பேசாத ரஜனி, பயணத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கமளித்த கடிதத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே, ரஜனிகாந்த் தன்னை இந்துத்துவா சார்பானவராக காட்டி வந்துள்ளார். இந்தக் கடிதத்திலும் புலிகளின் ஈழ விடுதலைப் போரை "புனிதப் போர்" என்று குறிப்பிடுள்ளார். இவ்வளவு காலமும் ஒன்றில் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமே புனிதப் போர் என்ற கருதுகோளை கொண்டிருந்தனர். தற்போது இந்து மத அடிப்படைவாதிகள் அதைப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். புலிகளின் ஈழ விடுதலைப் போர், இந்துத்துவா வாதிகளின் கண்களுக்கு புனிதப் போராகத் தெரிகின்றது.

லைக்கா இல‌ங்கைக்கு அழைப்ப‌தாக சொன்ன‌தும், அத‌ற்கு எழுந்த‌ எதிர்ப்பும், அத‌ன் விளைவாக‌ ப‌ய‌ண‌த்தை இர‌த்து செய்த‌தும் முன்கூட்டியே திட்ட‌மிட‌ப் ப‌ட்ட‌ நாட‌க‌மாக‌ இருக்க‌லாம். இவ‌ர்க‌ள் எல்லோரையும் பாஜ‌க‌ பின்னால் இருந்து ஆட்டுவித்திருக்கிற‌து.

ர‌ஜ‌னிகாந்தின் க‌டித‌த்தில் பாஜ‌க‌ அர‌சிய‌லே தொக்கி நிற்கிறது. அத்துட‌ன் ர‌ஜ‌னியின் வ‌ருகையை எதிர்ப்ப‌தாக‌ காட்டிக் கொண்ட‌ ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும், ம‌றைமுக‌மான‌ இந்திய‌ அடிவ‌ருடிக‌ள் தான். அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே, இந்து ம‌த‌வெறி அமைப்பான‌, சிவ‌சேனையின் வ‌ருகையை வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

Friday, October 09, 2009

பாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை


நெதர்லாந்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. காலியாக இருக்கும் வீட்டை உடைத்து குடிபுகுவது சட்டவிரோதம். அந்தக் குற்றத்திற்கு அதிகபட்சம் இரு வருட சிறைத்தண்டனை கிடைக்கும். இப்படியான சட்டம் இப்போது தான் அமுலுக்கு வருகிறதென்றால், அதற்கு முன்னர் வீடு உடைத்து குடி புகுவது சட்டப்படி செல்லுபடியாகுமா? ஆமாம். ஒரு வருடத்திற்கு அதிகமாக பாவிக்கப்படாத கட்டிடத்தில், யாரும் வசிப்பதற்கான சுவடே இல்லாத பட்சத்தில் குடி புகுதல் சாத்தியமே.

இந்தக் கட்டுரைக்கு "வீடு உடைப்பாளர் சங்கம்" என தலைப்பிட நினைத்திருந்தேன். சரியான சொற்பதம் தமிழில் கிடைக்கவில்லை. அதனை ஆங்கிலத்தில் சொன்னால் கூட அர்த்தம் பிழையாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புண்டு. நெதர்லாந்து மொழியில் "Krakers " என்பது ஒரு சமூக அரசியல் அமைப்பு. குறிப்பாக எழுபதுகளின் இறுதிப்பகுதியில், அதாவது பணக்கார வாழ்க்கை வசதிகளுடன் கூடவே ஆரம்பித்தது அந்த இயக்கம். எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கம், கிராக்கர்ஸ் இயக்கத்திற்கு சமூக அந்தஸ்தை தேடிக் கொடுத்தது.

அவர்கள் ஏன் யாரோ ஒருவரின் சொத்தான, காலியாக இருந்த வீட்டை உடைத்து குடி புக வேண்டும்? நாட்டில் வீடற்றவர்கள் வசிப்பதற்கு இடம் தேடுகிறார்கள். அரசினால் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. தனது குடிமக்கள் வசிப்பதற்கு வீடு ஒழுங்கு பண்ணுவது அரசின் பொறுப்பு என்று, அரசியல் நிர்ணயச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. (இலங்கை, இந்திய சட்டங்களிலும் அவ்வாறு உள்ளது. அங்கே மர நிழலின் கீழ் வசிக்கும் மக்களுக்கு யார் எடுத்துச் சொல்வார்கள்?) இருப்பினும் அரசு அந்த அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவில்லை என்று வழக்கு போட முடியாது.

பணக்கார மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள், குடி மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் கடமையை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்தன. அவை ஐரோப்பிய வரலாற்றில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை. ஒரு காலத்தில் இருந்த குடிசைகள் நிறைந்த கிராமங்களை இன்றைய மேற்கு ஐரோப்பாவில் காண முடியாது. எல்லாமே வசதியான குடியிருப்புக்களை கொண்ட கிராமங்களாக மாறி விட்டன. நகரங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் எழும்பின. கிராமவாசிகள் பலர் நகரங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். ஆயிரம் இருந்தாலும், நெதர்லாந்து "வளர்ச்சியடைந்த நாடுகள்" வரிசையில் இடம்பிடித்தாலும், அங்கே அனைவருக்கும் இன்னும் வீடு கிடைக்கவில்லை. சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப வீடுகள் கட்டப்படவில்லை. அல்லது இப்படியும் கூறலாம். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் அதிக வாடகைப் பணத்தை கொடுக்கும் வல்லமை எல்லோரிடமும் இல்லை. இதனால் சமூக நலன் வீட்டுத்திட்டம் ஒன்று உருவானது. வீடுகளை, கட்டிடங்களை கட்டும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மலிவான வீடுகளையும் கட்டிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. வருமானம் குறைந்தவர்களுக்கு அது வரப்பிரசாதமாக அமைந்தது. நெதர்லாந்தில் மட்டுமல்ல, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் உங்களுடைய உறவினர்கள் வசிப்பது பெரும்பாலும் இந்த சமூக நல வீடுகளில் தான்.

தற்போது பிரச்சினை என்னவென்றால், பொதுவாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆடம்பர குடியிருப்புக்களை கட்டுவதில் நாட்டம் காட்டும் அளவிற்கு, மலிவு விலை வீடுகளை கட்டுவதில் அக்கறைப்படுவதில்லை. இதனால் வருமானம் குறைந்தவர்கள் வருடக்கணக்காக வீட்டிற்கு காத்திருக்க வேண்டிய நிலைமை. உதாரணத்திற்கு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பதினைந்து வருடங்களாக வீட்டிற்கு காத்திருப்பவர்கள் அநேகம். இந்த லட்சணத்தில் முன்னாள் சோஷலிச நாடுகளில் மக்கள் வீடுகளுக்காக காத்திருந்ததை கிண்டலடித்தார்கள். மலிவு விலை வீட்டு மனைகளை கட்டும் நிறுவனங்களுக்கு அரசு மானியம் கிடைத்து வந்தது. தற்போது அது நின்று விட்டது போலும்.

உயர்கல்வி, தொழில் காரணமாக பலர் நகரங்களுக்கு வந்து வாழ விரும்புகிறார்கள். நகரங்களில் வாழ்பவர்களிலும், புதிதாக திருமணம் செய்தவர்கள் தனிக்குடித்தனம் போக விரும்புகின்றனர். இன்னோரன்ன காரணங்களால் வீடுகளுக்கான கேள்வி உயருமளவிற்கு, வீடுகள் கிடைப்பதில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர், குறிப்பாக மாணவர்கள் அதிக வாடகை கொடுத்து வீடுகளில் தங்க வேண்டிய நிலை. மற்றவர்கள் பிறர் வீடுகளில் ஒதுங்கி வாழ்ந்து கொண்டே வருடக்கணக்காக காத்திருக்கிறார்கள்.

வீடற்றோர் அவலத்தை அரசுக்கு உணர்த்துவதற்காக இடதுசாரி இளைஞர்கள் சிலர் ஆரம்பித்தது தான் கிராக்கர்ஸ் இயக்கம். அதற்கு ஒரு தலைவர், செயலாளர் கிடையாது. அமைப்பில் உள்ளவர்கள் எந்தக் கட்டுப்பாடும் அற்று சுய விருப்புடன் இயங்குபவர்கள். ஒரு பொதுவான கொள்கை அவர்களை இணைக்கின்றது. கிராக்கர்ஸ் முதலில் நகரில் எங்காவது யாராலும் உரிமை கோரப்படாத, ஒரு பாழடைந்த கட்டிடம் கண்ணில் தென்படுகிறதா என்று பார்ப்பார்கள். அதில் யாராவது வசிக்கிறார்களா என்று அவதானிப்பார்கள். வருடக்கணக்காக அது பூட்டிக் கிடக்கிறது எனக்கண்டால், கதவை உடைத்து உட்புகுவார்கள். முதலில் அந்தக் கட்டிடத்தை துப்பரவாக்கி, திருத்தி, கதவுக்கு புதிய பூட்டைப் போட்டு தமது சொந்தமாக்குவார்கள். புதுப் பொலிவுடன் தோன்றும் கட்டிடத்திற்கு தேவையான மின்சாரம், தண்ணீர் என்பனவற்றிற்கு தமது பெயரில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்வார்கள். கவனிக்கவும்: இதனை சட்டம் தவறாக கருதவில்லை. உண்மையில் யாரும் வசிக்காத, உரிமை கோரப்படாத கட்டிடங்களில் குடியிருப்பது சட்டவிரோதமாகாது.

ஆனால் இந்த சமூக இயக்கத்தை அரசு எதிரியாக கருதுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில வேளை, அவ்வாறு உடைக்கப்பட்டது அடுக்கு மாடிக் கட்டிடமாக இருந்தால், அதன் பகுதிகளை தனித்தனி வீடுகளாக்கி பிறருக்கு குறைந்த வாடகைக்கு கொடுப்பார்கள். அனேகமாக முதலாளித்துவ அரசுக்கு எதிரான இடதுசாரிக் குழுக்கள், இத்தகைய கட்டிடங்களில் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். முதலாளித்துவத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அங்கிருந்து தான் திட்டமிடப்படுகின்றன. தலைமறைவாக இயங்க விரும்புவோரின் நிரந்தர வாசஸ்தலம் அதுவாக இருக்கும். ஏனெனில் அரச பதிவுகளை செயற்படுத்தும் பிரதிநிதிகளுக்கு அங்கே வரவேற்பில்லை. பொதுவாக ஒரு வீட்டை வாங்கியவர் யார், வாடகைக்கு இருப்பவர் யார் என்ற விபரமெல்லாம் அரசாங்கத்தால் பதியப்பட்டிருக்கும். இதனால் பொது மக்களை கட்டுப்படுத்துவது இலகு. ஆனால் உடைக்கப்பட்ட கட்டிடங்களில் வசிப்பவர் விபரம் அரசிற்கு தெரியாது. இதனால் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப் பட்ட அகதிகள், விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கூட அங்கே புகலிடம் தேடுகின்றனர். அவர்களுக்கு தாராளமாகவே புகலிடம் வழங்குவதுடன் இலவசமாக தங்க வைக்கப்படுகின்றனர்.

தீவிர இடதுசாரி ஆர்வலர்கள், நாடுகடத்தப்பட இருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், இவர்களுக்கெல்லாம் புகலிடம் வழங்கும் கட்டிடங்கள் சில நேரம் பொலிஸ் படைகளினால் தாக்கப்படும். பொதுவாக நகரில் இவ்வாறான கட்டிடங்கள் இருப்பது பொலிசிற்கு நீண்ட காலமாக தெரிந்திருக்கும். கண்டும் காணாத மாதிரி இருப்பார்கள். ஆனால் எப்போதாவது ஒரு ரியல் எஸ்டேட் முதலாளியின் கண்ணில் பட்டால், அவ்வளவு தான். நகர மத்தியில் இருக்கும் குறிப்பிட்ட இடத்தில் ஒரு வர்த்தக ஸ்தாபனம் திறக்கலாமே என்று அவர் மனதில் ஐடியா தோன்றும். உடனே பொலிஸ் நிலையம் சென்று அந்தக் கட்டிடம் தனக்கு சொந்தமானது என முறைப்பாடு செய்வார். அந்த முறைப்பாடை வாங்கிக் கொள்ளும் பொலிஸ் உடனே நடவடிக்கை எடுக்கும். தண்ணீரை பீச்சியடிக்கும் பீரங்கி, கண்ணீர்ப் புகை குண்டுகள் சகிதம், "Robocop" பாணி உடையணிந்த கலகத் தடுப்பு பொலிசார் களத்தில் இறங்கி விடுவார்கள். வன்முறை பிரயோகித்து கட்டிடத்தை மீட்டெடுப்பார்கள். குடியிருந்தவர்கள் பொலிஸ் நடவடிக்கையை எதிர்த்தால் கைது செய்து கொண்டு செல்வார்கள். சில நேரம் வீடு உடைப்போர் அமைப்பை சேர்ந்தவர்கள், அந்த தருணத்தில் பொலிசாருடன் "உரிமைப்போரில்" இறங்குவார்கள்.

மேற்படி சம்பவங்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது இடம்பெறும். இதெல்லாம் அவர்களுக்கு பழகிப் போன சமாச்சாரம். பொலிஸ் நடவடிக்கைக்கு ஒரு நாள் முன்னர் கூட வீட்டை உடைத்தவரும், பொலிஸ்காரரும் தெருவில் நின்று சிநேக பாவத்துடன் உரையாடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். கிராக்கர்ஸ் அமைப்பிற்கு பசுமைக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு வழங்கினார்கள். அவர்கள் சார்பு நியாயத்தை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தார்கள். தற்போது அந்தக் காலம் மலையேறி விட்டது. கடந்த பொதுத்தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகள் பெருமளவு வாக்குகளைப் பெற்றுள்ளன. இவற்றுடன் கிறிஸ்தவ மத அடிப்படைவாத கட்சிகளும் சேர்ந்து காலியான கட்டடங்களை உடைத்து குடிபுகுவதை சட்டவிரோதமாக்கியுள்ளன. கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயகக் கட்சியும் ஒத்துழைத்துள்ளது. புதிய சட்டத்தின் படி ஒரு வருட தண்டனையும், பொலிஸ் நடவடிக்கையை வன்முறை கொண்டு எதிர்த்தால் இரண்டு வருட தண்டனையும் வழங்கப்படும்.

கிராக்கர்ஸ் அமைப்பை சட்டம் கொண்டு தடுத்து விடலாம். ஆனால் சமூகத்தில் நிலவும் வீட்டுப் பிரச்சினைக்கு என்ன தீர்வு? அனைவருக்கும் அரசாங்கம் வீடு வழங்கி விட்டதா? அதிக வருமானம் பெரும் வசதி படைத்தவர்களுக்கும், வருமானம் குறைந்த வசதியற்றவர்களுக்குமான இடைவெளி அதிகரித்து செல்கின்றது. அரச மட்டத்தில் பணம் படைத்தவர்களின் செல்வாக்கு அதிகரிக்கின்றது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வற்புறுத்தலால் மேற்படி தடைச் சட்டம் கொண்டு வந்திருக்க வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட் முதலாளிகளின் மகுடிக்கு அரசு ஆடினால், பணக்கார நாட்டில் வசதியற்ற மக்கள் தெருவோரம் மர நிழலின் கீழ் படுக்கும் காலம் வரும்.