Wednesday, May 31, 2023

யாழ் நூலக எரிப்பும் வலதுசாரிகளின் நெருக்கமும்

யாழ் நூலகத்தை எரித்தது, காமினி திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் வந்திருந்த வலதுசாரி UNP கும்பல். மிக கவனமாக திட்டமிட்டு, தமிழர்களின் பொக்கிஷங்களை, தமிழில் இருந்த அரிய ஆவணங்களை, பழைய ஓலைச்சுவடிகளை அழிப்பதை நோக்கமாக கொண்டு நூலகத்தை எரித்துள்ளனர். முதல் நாள் ஆயுதபாணி இளைஞர்களின் துப்பாக்கி சூட்டில் இரண்டு பொலிஸ்காரர்கள் பலியானதை சாட்டாக வைத்து இந்த நாசகார செயலை பொலிஸ் உதவியுடன் நிறைவேற்றி இருந்தனர். 


இலங்கையில் இதுவரை காலமும் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் இதே வலதுசாரி UNP இனால் தான் தூண்டி விடப்பட்டன. 1958 ம் ஆண்டு மத்திய இடது சார்ந்த SLFP ஆட்சியில் இருந்தாலும் கலவரத்தை நடத்தியது UNP தான். இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தனர். சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உண்டாக்கியது மட்டுமல்லாது, பணக்கார வர்க்கத்தை பாதித்த சீர்திருத்த சட்டங்களை சீர்குலைத்தனர். 


இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் நூலக எரிப்பு, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான UNP கட்சியை, பிற்காலத்தில் புலிகளும் ஆதரித்தார்கள்! குறிப்பாக சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் புலிகளின் UNP ஆதரவு அலை உச்சக்கட்டத்தில் இருந்தது. (புலிகள் செய்தால் துரோகம் ஆகாது!) ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காலத்தில் UNP புலிகளுடன் இரகசிய தொடர்பை பேணியது. அதனால் தான் ஒரு கட்டத்தில் தான் கைப்பற்றிய இடங்களில் இருந்து இராணுவம் திடீரென பின்வாங்கியது. (UNP ஆதரவு இராணுவ அதிகாரிகளின் திடீர் முடிவு.) உண்மையில் அதன் விளைவாக நோர்வே மத்தியஸ்தம் வகித்த பேச்சுவார்த்தையும் வந்தது. மிகுதி வரலாறு. 


போர் முடிந்த பின்னர், புலிகளின் ஆதரவை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, UNP உடன் நெருக்கமான தொடர்புகளை பேணியது. அந்த நட்புறவு இப்போதும் தொடர்கிறது. ஏனென்றால் இவர்களுக்கு இடையில் பொதுவான கொள்கை உடன்பாடு உள்ளது. அது மேற்கத்திய நலன் சார்ந்த நவ தாராளவாத பொருளாதாரத்தை பாதுகாக்கும் கொள்கை. காரணம் இவர்கள் எல்லாம் வலதுசாரிகள் தான். மொழி மாறுவதால் அரசியல் கொள்கை மாறிவிடாது.

No comments: