Friday, August 23, 2019

தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்


பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் யோகரட்ணம் எழுதிய "தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்" என்ற நூலை இப்போது தான் வாசித்து முடித்தேன். இந்த நூல் 2011 ம் ஆண்டு "இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி" ஆல் வெளியிடப் பட்டு இருந்தாலும் எனக்கு இப்போது தான் வாசிக்க நேரம் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை பதிவு செய்துள்ள நூல்கள் கிடைப்பது மிக அரிது. குறிப்பாக இன்றைய ஈழத் தலைமுறையினரும், தமிழகத் தமிழர்களும் இது குறித்து மிக மிகக் குறைந்த அறிவையே கொண்டிருக்கிறார்கள். சிலநேரம் சுத்தமாக இல்லை என்றும் சொல்லலாம். அந்த வகையில், இது போன்ற பதிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தோழர் யோகரட்ணம் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் எனும் கிராமத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே சமூக விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். அறுபதுகளில் அல்லது எழுபதுகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகள் எத்தகைய போராட்டங்களின் ஊடாக பெறப் பட்டது என்பதை தனது நேரடி அனுபவங்கள் ஊடாக எழுதி இருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி பதிவுகளாக ஒன்றுக்கொன்று கோர்வையற்று உள்ளன. அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுயசரிதை போன்று எழுதி இருக்கிறார். சாதியப் போராட்டங்களில் பங்கெடுத்த பிற தனிநபர்கள் பற்றி விரிவான குறிப்புகள் சிறிதும் பெரிதுமாக தனித்தனி அத்தியாயங்களில் வருகின்றன. அதே நேரம் உரிமை போராட்டம் தொடர்பான ஒவ்வொரு சம்பவமும் தனித் தனியாக விளக்கப் பட்டுள்ளது.

தோழர் யோகரட்ணம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வேலை செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் யாழ்ப்பாணத்தில் பெருமளவு ஆதரவாளர்கள் இருந்தனர். ஆகவே இது அவரது தனிப்பட்ட அரசியல் தெரிவு. எழுபதுகளில் இருந்த சிறிமாவோ அரசாங்கம் பல முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளை கொண்டிருந்த படியால் தான் அவர்களது அரசியலால் ஈர்க்கப் பட்டதாக சொல்கிறார்.

குறிப்பாக விவசாயம் செய்தவர்கள், கள் இறக்கும் தொழில் செய்தோர், சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் தான் வசதியை பெருக்கிக் கொண்டனர் என்பதை ஆதாரங்களோடு நிரூபிக்கிறார். உதாரணத்திற்கு தவறணை முறை வந்த படியால், காலையில் கள் இறக்கும் தொழிலாளி, மாலையில் விவசாயம் செய்து, கல் வீடு கட்டி வசதியாக வாழும் நிலை உருவானது.

யாழ்ப்பாணத்தில் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில், நூறு தலித் இளைஞர்கள் புத்த மதத்தை தழுவுவதற்கு முன்வந்தனர். அவர்களில் இந்த நூலாசிரியரும் ஒருவர். அவர் தான் தென்னிலங்கைக்கு சென்று மடாலயத்தில் தங்கி இருந்து, சிங்கள மொழியையும், பௌத்த மத பாடங்களையும், கற்றுக்கொண்ட கதையை விலாவாரியாக விபரிக்கிறார். இது போன்ற சுயசரிதைக் கதைகள் வாசிப்பதற்கு சுவையாக எழுதப் பட்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் முன்பு தனியார் பாடசாலைகள் மட்டுமே இருந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது பாடசாலைகளை நிர்வகித்து வந்த உயர்த்தப்பட்ட சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்களை அனுமதிக்க மறுத்து வந்தனர். அதனால் தென்னிலங்கை புத்த பிக்குகள் சிலரது முயற்சியால், யாழ்ப்பாணத்தில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு கல்வி போதிக்கப் பட்டது.

மேற்குறிப்பிட்ட காரணங்களினால் தான், சட்டத்தரணிகளை கொண்ட தமிழரசுக் கட்சியினர் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தனர் என்று நூலாசிரியர் வாதிடுகிறார். அது அவரது கருத்து. அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அது மட்டுமே காரணம் என்று வாதிட முடியாது. அன்றைய காலகட்டத்தில் தீவிரமடைந்து வந்த இன முரண்பாடுகளுக்கு நூலாசிரியர் அதிக கவனம் செலுத்தவில்லை என்ற குறைபாடும் இந்த நூலில் உள்ளது.

தோழர் யோகரட்ணம் தனது நண்பனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளருமான வினோதன் பற்றி கூறுவதற்கு கிட்டத்தட்ட பதினைந்து பக்கங்கள் ஒதுக்கி இருக்கிறார். உயர்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளுக்காக பாடுபட்ட, தனிப்பட்ட வாழ்விலும் சமத்துவம் பாராட்டிய ஒருவர் என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார்.

இந்த நூலில் பாராட்டத்தக்க விடயம் என்னவெனில், தோழர் யோகரட்ணம் தலித்தியம் பேசினாலும் இதை வெறுமனே தலித் போராட்டமாக மட்டும் சித்தரிக்கவில்லை. உயர்த்தப்பட்ட சாதியினரிலும் எத்தனையோ நல்லுள்ளம் படைத்த மனிதர்கள் இருந்தார்கள். தமது சாதியை சேர்ந்த சாதிவெறியர்களை எதிர்த்து நின்று, தலித் மக்களுக்கு ஆதரவாக போராடி உள்ளனர் என்ற உண்மையை அழுத்தமாக குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் பங்களிப்பு பற்றி எழுதுவது தவிர்க்க முடியாதது. தனி நபர்கள் பற்றிய குறிப்புகளை கொண்ட அத்தியாயங்களில் பலவற்றின் நாயகர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தை பலவீனப் படுத்தின என்பதையும் குறிப்பிடுகிறார்.

இந்த நூல் முழுவதும் வரும் தலித் என்ற சொல் சிலநேரம் வலிந்து திணிக்கப் படுவதாக தெரிகிறது. இது சிலநேரம் தலித் என்ற சொல்லுடன் அதிகப் பரிச்சயம் இல்லாத ஈழத்தமிழ் வாசகர்களுக்கு அயர்ச்சியை கொடுக்கலாம். பிரான்ஸ் தலித் மேம்பாட்டு முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவர் என்ற வகையில், தோழர் யோகரட்ணம் இந்த நூலில் தலித் என்ற வார்த்தைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக எனக்குப் படுகின்றது.

ஒருவர் எழுதும் அனுபவப் பதிவுகளில் உள்ள குறைபாடுகள் விமர்சனத்திற்கு உரியவையாக இருந்த போதிலும், இது போன்ற நூல்கள் தமிழ்ச் சமூகத்திற்கு தேவை என்பதை மறுக்க முடியாது. அவரது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், இதை ஒரு வரலாற்று ஆவணப் பதிவாக வைத்திருப்பது அவசியம்.

தொடர்பு முகவரி:
F.D.S.D.F.
70 Squzre des bauves
95140 Garges les Gonesse
France 


No comments: