Sunday, December 30, 2018

ரோமப் பேரரசில் நடந்த வர்க்கப் போராட்டம்


"இதுவரை இருந்து வரும் சமுதாயத்தின் சரித்திரமெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமே." - கார்ல் மார்க்ஸ்

கி.மு. 509 ம் ஆண்டிலிருந்து ரோமாபுரியில், மன்னராட்சிக்கு பதிலாக குடியரசு ஆட்சி முறை வந்தது. உண்மையில் அது ஒரு மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. செனட் சபை எனப்படும் ரோம நாடாளுமன்றத்தில், செனட்டர்கள் எனப்படும் பிரதிநிதிகள் ஆயுட்கால உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் ஒன்று கூடி கொன்சுல் (Consul) எனப்படும் இரண்டு ஆட்சித் தலைவர்களை தெரிவு செய்தனர். இவர்கள் அரசனுக்கு பதிலீடாக இருந்தமை மட்டுமல்லாது, யுத்தப் பிரகடனம் செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர்.

ரோமா நகரில் வாழ்ந்த வசதிபடைத்த பணக்கார குடும்பங்களில் இருந்து தான் செனட்டர்கள் உருவானார்கள். இதே மேட்டுக்குடியினர், தமக்கு கீழே இருந்த நடுத்தர வர்க்க, அடித்தட்டு மக்களுடன் குறிப்பிடத்தக்க தொடர்பைப் பேணி வந்தனர். இது கிலியேன்தலா(Clientela) சமுதாய அமைப்பு என அழைக்கப் பட்டது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக ஒரு மேட்டுக்குடி எஜமானுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, கஷ்ட காலத்தில் நிதியுதவி செய்வது, பிரச்சினைகளில் சட்ட உதவி செய்வது போன்ற பொறுப்புகளை அந்த எஜமான் ஏற்றிருப்பார்.

மேட்டுக்குடி எஜமான் பத்ரோனஸ்(Patrones) என்றும், அவருக்கு கீழ்ப்படிவான குடியானவர்கள் கிலியேன்டேஸ் (Clientes) என்றும் அழைக்கப் பட்டனர். கிலியன்ட்களின் அன்றாட பிரச்சனைகளை கேட்டறிவதற்காக பத்ரோன் அடிக்கடி கூட்டம் கூடுவார். சிலநேரம் அந்தப் பத்ரோன் செனேட் சபை தேர்தலுக்கு போட்டியிட்டால், கிளியன்ட்கள் அவரை ஆதரிக்க வேண்டும். இது நமது காலத்தில், அரை நிலப்பிரபுத்துவ சமுதாயங்களை கொண்ட நாடுகளில் இன்றைக்கும் நடக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நிலவுடைமையாளர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு விசுவாசமான குடியானவர்கள் அவருக்கே ஆதரிக்க வேண்டும். அதே மாதிரித் தான், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதும் நடக்கிறது.

ரோமர்களின் பத்ரோன் - கிலியன்ட் உறவு முறை, சிலநேரம் சாதி அமைப்பை ஒத்துள்ளது. சமூகத்தில் ஓரளவு வசதி படைத்த நடுத்தர வர்க்க கிலியன்ட், தனக்கு கீழே உள்ள அடித்தட்டு மக்களுக்கு பத்ரோனாக செயற்படலாம். இந்த கட்டுக்கோப்பான அமைப்பின் மூலம், ஏற்றத்தாழ்வான வர்க்கங்களை சேர்ந்த மக்கள் ஒருவரை ஒருவர் தங்கியிருக்க வேண்டி இருந்தது. இது ஓரளவு இறுக்கமான சாதிய சமூகத்தை பிரதிபலித்த போதிலும், ஒரு கட்டத்தில் வர்க்க முரண்பாடுகள் கொந்தளித்து கொதி நிலைக்கு வந்தது.

பண்டைய ரோம சமுதாயத்தில் பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்தினர் "பட்ரீசியர்கள்"(Patricier) என அழைக்கப் பட்டனர். ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் "பிலேபியர்கள்" (Plebis) என அழைக்கப் பட்டனர். பிற்காலத்தில் ரோம- கத்தோலிக்க கிறிஸ்தவ மத பரம்பல் காரணமாக, பட்ரீசியா (பணக்காரி) என்ற பெயரை பலர் தமது பெண் பிள்ளைகளுக்கு சூட்டிக் கொள்கிறார்கள். ஆனால், யாரும் பிலேபியா(ஏழை) என்று பெயர் வைப்பதில்லை.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் ரோம நகரம் பெரும் செல்வத்தில் திளைத்தது. ஆனால், சுமார் ஐம்பது பணக்கார குடும்பங்கள் மட்டுமே செல்வத்திற்கு அதிபதிகளாக இருந்தனர். இதனால் வசதியற்ற பிலேபியர்கள் அதிருப்தி அடைந்தனர். இது பணக்கார வர்க்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு, அதாவது வர்க்கப் போராட்டத்திற்கு தூண்டுதலாக அமைந்தது.

ரோமாபுரியில் பணக்கார பட்ரீசியர்கள் செல்வச் செழிப்பில் மிதந்த நேரம், ஏழை பிலேபியர்கள் பணக் கஷ்டத்தில் வாடினார்கள். பண்டைய ரோமப் பேரரசில், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் தான் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். சுருக்கமாக, போர்வீரர்களும், விவசாயிகளும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். நீண்ட காலம் இராணுவ சேவையில் இருந்தவர்களால், விவசாயத்தை கவனிக்க முடியவில்லை. விவசாய நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் குறைந்த படியால், அளவுக்கு மீறி கடன் வாங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதே நேரம், ஏதென்ஸ் நகரில் இருந்த கிரேக்க ஜனநாயகம் பற்றிய கதைகளையும் பிலேபியர்கள் கேள்விப் பட்டிருந்தனர். ஏதென்ஸ் நகர ஜனநாயகத்தில் அனைத்து சுதந்திரப் பிரஜைகளும் வாக்குரிமை பெற்றிருந்தனர். (அடிமைகளுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. ஆனால், அந்தக் காலத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.) அதற்கு மாறாக, ரோமாபுரி பிலேபியர்கள் சுதந்திரமான ரோமப் பிரஜைகளாக இருந்த போதிலும் வாக்குரிமை இருக்கவில்லை. செனட்டர் பதவி பரம்பரை பரம்பரையாக கிடைக்கும் உரிமையான படியால், ரோமாபுரியில் யாரும் வாக்குப் போட்டு தெரிவு செய்யப் படவில்லை.

கி.மு. 494 ம் ஆண்டு, ரோமாபுரியில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ரோம அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த பிலேபியர்கள், ஆயுதமேந்திப் போராடவில்லை. ஒற்றுமையாக சேர்ந்து வேலைநிறுத்தம் செய்து எதிர்ப்பைக் காட்டினார்கள். அத்துடன் தமது குடும்பங்களை கூட்டிக் கொண்டு ரோம நகரை விட்டு வெளியேறினார்கள். அவர்களது போராட்டம் வெற்றி பெற்றது. ரோமப் பேரரசு நிலைகுலைந்தது. இறுதியில் பணக்கார மேட்டுக்குடி வர்க்கம், ஏழை பிலேபியர்களின் கோரிக்கைக்கு செவி மடுத்தது.

இந்த வர்க்கப் போராட்டம் எப்படி வெற்றி பெற்றது? போராட்டம் தொடங்க முன்னர், அனைத்து பிலேபியர்களும் ஒன்று கூடி கொன்சுலியும் பிலேபிஸ் (Consilium Plebis) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதனை இருபதாம் நூற்றாண்டில் உருவான சோவியத் அமைப்புடன் அல்லது தொழிற்சங்கத்துடன் ஒப்பிடலாம். அதாவது, உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகளை கொண்ட சபையானது போராட்டத்தில் ஈடுபடுவோரின் நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப் பட்டது. அரசால் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் பிலேபியர்களின் வழக்கு செலவுகளை பொறுப்பெடுத்தது. அவ்வாறு குற்றம் சாட்டப் பட்டவர் நீதிவிசாரணை இன்றி மரணதண்டனை நிறைவேற்றப் பட்டால், அதைத் தடுத்து நிறுத்தி வழக்கில் நீதியான தீர்ப்பை வழங்குவதற்கு பாடுபட்டது.

(பிற்குறிப்பு:"Rome, Supermacht van de oudheid" நூலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

No comments: