Wednesday, August 01, 2018

பாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்நாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச மூலதனத்தின் மேலாதிக்கம் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகான கடற்கரைப் பிரதேசமான பாசிக்குடா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. அங்கு நான் நேரில் சென்று திரட்டிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


ஈழப்போரின் இறுதியில், சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட, புலிகளின் வாகரை கட்டுப்பாட்டுப் பகுதியின் அருகில் உள்ளது "பாசிக் குடா". குறிப்பாக, வாழைச்சேனை நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது இன்று இலங்கையின் பிரபலமான சுற்றுலா மையம். சர்வதேச தரத்திற்கு நிகரான ஐந்து நட்சத்திரக் ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், அங்கிருந்து கடல் விமானம் பிடித்து நேரடியாக பாசிக்குடா கடற்கரையில் வந்திறங்கும் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது.

தூய்மையான நீல நிறக் கடற்கரை கொண்ட பாசிக் குடா ரிசோர்ட்டில் விடுமுறையை கழிக்க வருமாறு, மேற்கத்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளை கூவிக் கூவி அழைக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா நிறுவனங்களும், பாசிக்குடாவை வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கின்றன. அதை விட, இலங்கையில் உள்ள பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் குடும்பங்களும் அங்கு சென்று விடுமுறையை கழிக்கின்றனர்.

அந்தப் பகுதியில், ஒரு காலத்தில் கடுமையான போர் நடைபெற்றது என்பது, பாசிக்குடாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது. தமது விடுமுறையை ஆனந்தமாக கழிக்கும் உல்லாசப் பயணிகளுக்கு, அது பிணம் தின்ற பூமி என்பது தெரியாது. அப்படியே தெரிந்தாலும், "நல்ல வேளை, போர் முடிந்தது" என்று நிம்மதியாக விடுமுறையை கழிப்பார்கள்.

அது மட்டுமல்ல, இன்று ஆடம்பர நட்சத்திர விடுதிகள் கட்டப்பட்ட இடம், தமிழ்/முஸ்லிம் மக்களிடம் இருந்து பலாத்காரமாக பறித்தெடுக்கப் பட்டது என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. மெக்சிகோ, எகிப்து என்று பெருமளவு சுற்றுலாப்பயணிகள் செல்லும் நாடுகளில் எல்லாம் நில அபகரிப்புகள் நடந்துள்ளன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமல்ல, இன்று பல தமிழர்களுக்கே இந்த விபரங்கள் தெரியாது. தமிழ் தேசியவாதிகள் கூட, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நில அபகரிப்பில் கவனம் செலுத்துமளவிற்கு, கிழக்கு மாகாண நில அபகரிப்புகள் பற்றி அக்கறை இன்றி இருக்கின்றனர். ஏனென்றால், அது தான் வர்க்க உணர்வு. பாசிக்குடாவில் தமது பாரம்பரிய காணிகளை பறிகொடுத்தவர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்கள். அவர்களின் உரிமைகளுக்காக வாதாடுவதற்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் யாரும் இல்லை. 

பாசிக்குடாவை சுற்றுலா ஸ்தலமாக்கும் திட்டம், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொடங்கப் பட்டது. சிலநேரம், இயற்கைப் பேரழிவுகளும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. 2004 ம் ஆண்டு, இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதி சுனாமி பேரலைகளால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. அதில் பாசிக்குடாவும் ஒன்று. சுனாமியில் உயிர்தப்பியவர்கள் மீண்டும் வந்து குடிசைகள் கட்டி வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால், அரசாங்கம் வேறு திட்டம் வைத்திருந்தது.

பாசிக்குடாவில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் ஏழை மீனவக் குடும்பங்கள். காலங் காலமாக மீன்பிடியை தவிர வேறெந்த தொழிலும் தெரிந்திராதவர்கள். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்திய அரசாங்கம், அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்பகுதியில் நிலம் ஒதுக்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. தேர்ச்சி பெற்ற தொழிலான மீன்பிடியை விட்டு, அனுபவம் இல்லாத தொழிலான விவசாயம் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, ஆரம்பத்தில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு அதனை கவனத்தில் எடுக்காமல் மக்களை வெளியேற்றி விட்டது. 

சில குடும்பங்கள், காணி உறுதிப் பத்திரம் வைத்திருந்தன. அவர்களிடம் இருந்து நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். உண்மையில், அங்கு ஆடம்பர ஹோட்டேல்கள் வரப் போகின்றன என்ற விடயம் அந்த மக்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் விலையை கூட்டிக் கேட்டிருக்கலாம். தமது காணியை சில இலட்சம் ரூபாய்களுக்கு விற்ற ஒரு தம்பதியினர், கையில் இருந்த காசு முடிந்ததும் ஹோட்டேல் பணியாளர்களாக வேலை செய்யும் அவலமும் நடந்துள்ளது.

ஆடம்பர ஹோட்டேல்கள் கட்டி முடிந்து, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் வரத் தொடங்கிய பின்னர், உள்ளூர் மக்கள் பாசிக்குடா செல்வதற்கு பல விதமான தடைகள் விதிக்கப் பட்டன. ஒவ்வொரு ஹோட்டேலும் தனக்கென தனியான கடற்கரை வைத்துக் கொண்டது. சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் நீராடுவதற்காக தனிதனி கடற்கரைகள் ஒதுக்கப் பட்டன.  உள்ளூர் மக்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நீராடும் கடற்கரைக்கு செல்ல முடியாது. 

உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கடற்கரை

தென் ஆப்பிரிக்காவில் நிலவிய அப்பார்ட்ஹைட் இன இனப்பாகுபாடு காலத்தில் இருந்தது போன்று, பாசிக்குடா கடற்கரை கயிறு கட்டி பிரிக்கப் பட்டது. இது ஒரு வர்க்க அடிப்படையிலான பிரிவினை. ஏனெனில், வெளிநாட்டவர் மட்டுமல்லாது, பணக்கார இலங்கையர்களும் அங்குள்ள நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார்கள்.

பிற்காலத்தில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த படியால், அந்தக் கயிறு பிரிக்கும் எல்லைக் கோடுகள் அகற்றப் பட்டன. நான் அங்கு சென்றிருந்த நேரம் (ஜூலை 2018), கயிறு எதையும் காணவில்லை. ஹோட்டல்களுக்கு "சொந்தமான" கடற்கரையிலும், காலாற நடந்து சென்று வர முடிந்தது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் பாசிக்குடா சுற்றுலாத்துறை இன்னமும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. 

பாசிக்குடா ரிசோட்டின் சிறப்பம்சம், மாலைத்தீவில் உள்ளது போல பாரம்பரிய பாணியில் கட்டப் பட்ட நட்சத்திர ஹோட்டல்கள். அதாவது, இயற்கையோடு இணைந்த ஓலைக் குடிசைகள் மாதிரி அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர அறைகள். குறிப்பாக ஐரோப்பிய உல்லாசப் பயணிகளை கவரும் வண்ணம் கட்டப் பட்டுள்ளன. இவற்றைக் கட்டுவதற்கு இலங்கையில் உள்ள ஒப்பந்தக் காரர்கள் அதிக காலம் எடுத்ததாகவும், அதனால் சீன நிறுவனம் ஒன்றிடம் பொறுப்புக் கொடுத்து, குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகின்றது.


தரகு முதலாளித்துவம் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு பாசிக்குடாவை உதாரணம் காட்டலாம். இலங்கையில் எவ்வாறு அரசாங்கமும், முதலாளித்துவமும் கையோடு கைகோர்த்து நடக்கின்றன என்பதை அங்கு சென்றால் நேரில் காணலாம். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும், சொந்தமாக ஆளுக்கொரு ஹோட்டேல்  வைத்திருக்கிறார்கள். விடுமுறைக்கு பாசிக்குடா கடற்கரைக்கு வந்து ஓய்வெடுக்கிறார்கள். ராஜபக்சே குடும்பத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லோரும் ஹோட்டேல் முதலாளிகள் தான். அதைவிட சில அமைச்சர்களும் அங்கு முதலிட்டுள்ளனர். சுருங்கக் கூறின், அரசியல் தலைவர்கள் சேர்த்த ஊழல் பணத்தை சுற்றுலாத்துறையில் முதலிட்டு பெரும் முதலாளிகளாகி விட்டார்கள். பாசிக்குடா சுற்றுலா வணிகம் சூடு பிடிக்கும் காலத்தில், ஏதாவதொரு பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்வார்கள், அல்லது நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.

முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் தீட்டுவதில், மகிந்த அரசுக்கும்,மைத்திரி அரசுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. மகிந்த ஆட்சிக்காலத்தில், தெற்குக் கடற்கரையோரம், அம்பாந்தோட்டைக்கு அருகில் மத்தள விமான நிலையம் கட்டப் பட்டது. சீன நிதியில் கட்டப்பட்டு, "உலகில் வெறுமையான விமான நிலையம்" என்று எள்ளி நகையாடப் பட்டது. தற்போது மைத்திரி அரசு அதை இந்தியாவிடம் குத்தகைக்கு விட்டுள்ளது.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், மத்தள விமான நிலையம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து தங்கும் கடற்கரை ரிசோட்கள், காலியில் இருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரை பிரதேசத்தில் உள்ளன. அதே மாதிரி, மட்டக்களப்பு, அம்பாறை கடற்கரைப் பிரதேசத்தையும் சுற்றுலாத்துறையின் கீழ் கொண்டு வரலாம். தற்போதைய நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் இரண்டு திசைகளிலும் பயணம் செய்து தங்குமிடங்களை அடையலாம்.

No comments: