Thursday, August 09, 2018

"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்" கலைஞருக்கு அஞ்சலி


தமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். "ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக" பார்ப்பன அடிமைகள் செய்து வரும் விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் முகமாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அகண்ட பாரதக் கனவு காணும் இந்துத்துவா- சமஸ்கிருத பேரினவாதிகளின் தீய நோக்கம் நிறைவேறுவதற்கு தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இன்று கலைஞரது சாவிலும் வன்மம் கொண்டு தூற்றும் விஷமிகள், அதை ஈழத்தமிழர் பெயரில் செய்வது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இவர்களில் பலர் புலி ஆதரவு வேடம் போடும் போலித் தமிழ்த்தேசியவாதிகள் என்பது குறிப்பிடத் தக்கது. "ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி." - இவ்வாறு சொன்னவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். வன்னிக் காடுகளுக்குள் இந்திய இராணுவத்துடன் உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், தலைவர் பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர் கருணாநிதி ஈழம் வாங்கித் தருவார் என்று நம்பி, ஈழத் தமிழர்கள் போராட்டத்தை தொடங்கவில்லை. அவரது அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டு எல்லைகளுக்குட்பட்டது என்பது அவர்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது. ஆனால், பாராளுமன்ற ஜனநாயக மாயையில் திளைத்திருந்த நடுத்தர வர்க்க ஈழத் தமிழர்கள், ஒரு இந்திய மாநில முதலமைச்சரின் அதிகார வரம்பு பற்றி அறியாதிருந்தனர். சிலர் அந்த அறியாமையை மூலதனமாக்கி கலைஞர் மீது வசைபாடுகின்றனர்.

எண்பதுகளில், எம்ஜிஆர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தான், பெருமளவு ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றனர். அந்தக் காலத்தில் ஈழ அகதிகளுக்கு பல உரிமைகள் மறுக்கப் பட்டிருந்தன. அவர்கள் படிக்க முடியாது, வேலை செய்ய முடியாது என்று பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர்களை அங்கு தற்காலிகமாக தங்க வைத்திருப்பதாகக் கூறி, 1987 இல் இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டவுடன் திருப்பி அனுப்பினார்கள்.

அதே வருடம் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தப் போர் அடுத்து வந்த இரண்டாண்டுகள் நீடித்தது. அப்போது மீண்டும் பலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடினார்கள். ஒப்பந்தக் காலத்தில் திருப்பி அனுப்பப் படாமல் தமிழ்நாட்டில் தங்கி விட்ட அகதிகளும் இருந்தனர். அந்த நேரத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். ஈழத்தமிழ் அகதிகளை வரவேற்று அரவணைத்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்.

"கலைஞரின் காலம் பொற்காலம்" என்று இன்றும் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் நன்றியுடன் நினைவுகூருகின்றனர். இது மிகைப்படுத்தல் அல்ல. முன்பு என்றும் இல்லாதவாறு ஈழ அகதிகள் படிக்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கப் பட்டனர். அத்துடன் பணக் கொடுப்பனவுகளும் கூட்டிக் கொடுக்கப் பட்டன. அதற்கு முன்னர், (எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்) மிகவும் சொற்பமான தொகையே கிடைத்து வந்தது. அது கால் வயிற்றுக்கு கஞ்சி ஊத்தவும் போதாது என்று சொல்லியும் அதிகாரிகள் பாராமுகமாக இருந்தனர்.

"எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் புலிகளுக்கு நிதியுதவி வழங்கினார்" என்ற காரணத்தால், கருணாநிதி வெறுப்பாளர்கள் எம்ஜிஆரை வானளாவ புகழ்கின்றனர். அந்தக் காலகட்டம் முற்றிலும் மாறுபட்டது. எத்தனை ஈழ விடுதலை இயக்கங்கள் இருந்தாலும், அத்தனைக்கும் தமிழ்நாட்டில் அடைக்கலம் வழங்கப் பட்டது. அவர்கள் அங்கு பயிற்சி முகாம்கள் அமைக்கவும் அனுமதிக்கப் பட்டது. இதெல்லாம் இந்திய மத்திய அரசின் ஒப்புதல் இன்றி நடக்கவில்லை.

அப்போது இரண்டு பெரிய வலதுசாரிய இயக்கங்கள் இந்திய அதிகார வர்க்கத்தினரால் இனங் காணப்பட்டன. ஒன்று, தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றது, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ). முன்னையதற்கு எம்ஜிஆரும், பின்னையதற்கு கருணாநிதியும் புரவலர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் இந்திய மத்திய அரசுக்கு தொடர்பாளர்களாக இருந்தனர். புலிகளுக்கு எம்ஜிஆரும், டெலோவுக்கு கருணாநிதியும் அள்ளிக் கொடுப்பதாக, ஏனைய இயக்கங்களை சேர்ந்தவர்கள் சொல்லிப் பொறாமைப் பட்டனர்.

புலிகளால் டெலோ அழிக்கப் பட்ட சகோதர யுத்தம் காரணமாக தான் ஆதரவை விலக்கிக் கொண்டதாக கலைஞர் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அதுவே உண்மையான காரணம் அல்ல. ஏனெனில், சகோதர யுத்தத்தில் சிந்தப் பட்ட இரத்தம் காய்வதற்கு முன்னரே, கலைஞர் டெலோவை கைவிட்டு விட்டு, புலிகளை ஆதரித்து வந்தார். தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை நியாயப் படுத்துவதற்காக, புலிகளால் கொல்லப் பட்ட ஒரு டெலோ போராளியின் சகோதரி எழுதிய கடிதம் ஒன்றை முரசொலி பத்திரிகையில் பிரசுரிக்க வைத்தார். "இன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழரின் நன்மை கருதி புலிகளை ஆதரிக்க வேண்டும்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுப்பதாக அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. அது பின்னர் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் மீள்பிரசுரம் செய்யப் பட்டது.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளை, ஒரு இந்திய மாநில முதல்வர் ஆதரிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். யுத்தம் முடிந்து திரும்பி வந்த இந்தியப் படையினருக்கு வரவேற்பளிக்க மறுக்கும் அளவிற்கு கலைஞருக்கு துணிச்சல் இருந்தது. இப்படியான நிலைப்பாடு, இந்தியப் பெருந்தேசியக் கண்ணோட்டத்தில் தேசத் துரோகமாக கருதப் படும் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை.

1991 ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தான், கலைஞர் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். அன்று கொண்டு வரப்பட்ட தடா சட்டத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் திமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தான். இந்திய மத்திய அரசின் பாசிச அடக்குமுறை காரணமாக, தீவிர புலி ஆதரவாளர்களாக இருந்த திமுகவினர், தீவிர புலி எதிர்ப்பாளர்களாக மாற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பிற்காலத்தில் இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி, மதிமுக, பாமக, விசிக போன்ற சிறிய கட்சிகள் புலி ஆதரவு அரசியலை கையில் எடுத்தன. ஆனால், அவர்கள் எல்லோரும் புலனாய்வுத்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருந்தனர்.

எந்தக் கட்டத்திலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இல்லாத ஒரு மிதவாதக் கட்சியான திமுக இடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது. முந்திய காலங்களில் கலைஞர் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நேரம், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தொண்டர்கள் பலர் இருந்தனர். இருப்பினும் உயிரையும் கொடுக்கத் தயாரான தொண்டர்கள் தலைமை வழிபாட்டுக்கு பயன்படுத்தப் பட்டனரே அன்றி, தமிழ் நாட்டை தனி நாடாக்கும் போராட்டத்திற்காக வழிநடத்தப் படவில்லை.

1963 ல் பிரிவினை பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், இந்திய அரசு “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா” வை அறிவித்தது. அப்போதே திராவிட நாடு எனும் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டவர் கலைஞர். அது நடந்து ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு தான், இலங்கையில் தமிழீழக் கோரிக்கை வட்டுக்கோட்டை தீர்மானமாக அறிவிக்கப் பட்டது. அதற்குப் பிறகு ஆயுதப் போராட்டம் நடந்ததும், அது பேரழிவில் முடிந்ததும் வரலாறு.

அறுபதுகளில் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு விட்டு, இந்திய பெருந்தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட கலைஞர், 2009 ம் ஆண்டு "ஈழம் வாங்கித் தரவில்லை" என்ற மாதிரி பேசுவது பேதைமை. அன்று நடந்த இறுதிப்போரை நிறுத்தும் வல்லமையும் கலைஞரிடம் இருக்கவில்லை. இது போன்ற அர்த்தமற்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் கலைஞர் சாதித்தது என்ன என்பதைப் பார்க்க வேண்டும். 

கலைஞர் குடும்பத்தினரின் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான வணிக நிறுவனங்கள், சொத்துக்கள் பற்றிய விபரம், கருணாநிதிக்கு மட்டுமே உரிய  விசேட குணம் அல்ல. அது இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு அரசியல்வாதிகளுக்கு வழங்கும் "சலுகை".  முதலாளித்துவ கட்டமைப்பினுள் நடக்கும் "ஜனநாயக" பொதுத் தேர்தல்கள், மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவு செய்த பிரதிநிதிகளை பணத்தாசை காட்டி வளைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்குப் பலியானவர் கலைஞர் மட்டுமல்ல.

இலட்சிய தாகம் கொண்ட ஆரம்ப காலங்களில், தன்னை ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாக காட்டிக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், பதவியில் அமர்ந்ததும் ஊழல்களில் மாட்டிக் கொண்டு சீரழிந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி, ஒரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக மாறியது. இதுவும் திமுக வுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம் அல்ல. பிரிட்டனில் தொழிற்கட்சி, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி எதுவும் இந்த சீரழிவில் இருந்து தப்பவில்லை.

சிலநேரம் முதலாளித்துவக் கட்சிகளும் மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதுண்டு. அவற்றையும் நாம் நன்றியுடன் குறிப்பிட வேண்டும். கலைஞரின் திமுக ஆட்சிக் காலத்தில், சேரிகளில் வாழ்ந்தவர்கள் அரசு கட்டிக் கொடுத்த அடுக்குமாடிக் கட்டிடங்களில் குடியமர்த்தப் பட்டனர். குறிப்பிட்ட சமூக மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீடு கொண்டுவரப் பட்டது. அதே நேரம், தமிழ்த் தேசியம் பேசியவர்களின் ஆட்சியில், பாடசாலைகளில் தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப் படவில்லை என்ற குறையும் உள்ளது.

தேர்தலில் போட்டியிடாத சமூக நீதி இயக்கமான பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து, அண்ணாதுரை தலைமையில் பிரிந்து சென்றவர்கள் உருவாக்கிய கட்சி தான் திமுக. அதாவது, தேர்தலில் போட்டியிட்டு சமூக மாற்றத்தை கொண்டு வரலாம் என்று நம்பினார்கள். அரசியலில் இதை சமூக ஜனநாயகப் பாதை என்று அழைக்கலாம்.

அன்றைய காலத்தில் இருந்த திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் இடதுசாரிகள் என்றால், திமுகவினர் மத்திய இடது அரசியலை பின்பற்றினார்கள். அந்தக் கொள்கை அடிப்படையில், திமுக தனது நட்பு சக்திகளை தெரிவு செய்தது. அது உண்மையில் வாக்கு வங்கிகளை குறிவைத்த சுயநல அரசியல் என்பதையும் மறுக்க முடியாது.

கலைஞர் கருணாநிதி என்றொருவர் இருந்திரா விட்டால், தமிழ்த் தேசியம் ஒரு விருட்சமாக வளர்ந்திருக்குமா என்பது கேள்விக்குறி. திராவிட நாடு கேட்பதாக சொன்னாலும், அதன் அடிநாதமாக தமிழ்த் தேசியமே இருந்தது. (பெயரில் என்ன இருக்கிறது?) அதனால் தான், பிற மொழிகளை பேசும் அயல் மாநில மக்கள் அதில் இணைந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். அன்றைய காலத்து கலைஞரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் தமிழ் உணர்வை தட்டியெழுப்புவதாக இருந்தன.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாத்துறையில் புராண காலக் கதைகளும், பாடல்களும் மலிந்திருந்தன. பார்ப்பன- சம்ஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீட்டவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. திமுக வினர், தமது கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கான ஊடகமாக சினிமாவை பயன்படுத்தினார்கள். அவற்றில் கலைஞரின் வசனங்கள் தவறாமல் இடம்பெறும். சமூக விழிப்புணர்வு ஊட்டும் கதையம்சம் கொண்டதாக, பாத்திரங்கள் அழகான அடுக்குமொழி தமிழ் வசனங்கள் பேசுவதாக அமைக்கப் பட்டிருக்கும்.

கலைஞர் எழுதிய அடுக்குமொழி வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் பரவின. சிறுவர் முதல் பெரியோர் வரை அவற்றை விரும்பி இரசித்தனர். சாதாரண மக்கள் அவற்றை நினைவில் வைத்திருந்து பேசி மகிழ்ந்தனர். இதன் மூலம் தமிழ் வளர்ந்தது. தமிழ் இலக்கிய உலகில் தன்னிகரில்லாத இடம் பிடித்தவர் கலைஞர் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தம்மை தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலைஞருக்கு கடமைப் பட்டுள்ளனர்.

இலக்கியவாதியான கருணாநிதிக்கும், அரசியல்வாதியான கருணாநிதிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் கலைஞரின் குடும்பமும் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. பிற்காலத்தில் அரசியல் வாரிசு தொடர்பான சர்ச்சை உருவான நேரம், எமெர்ஜென்சி காலகட்டம் தான் தனது மகன் ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தது என்று வாதிட்டு வந்தார். இந்திரா காந்தியால் பாதிக்கப் பட்ட கலைஞர், பிற்காலத்தில் அதே இந்திரா காந்தியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டார். அதற்கும் ஒரு நியாயம் கற்பித்தார்.

"கலைஞர் கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து விட்டார்" என்று புலம்புவோர், அவர் ஏற்கனவே தனது கட்சித் தொண்டர்களுக்கும் "துரோகம்" செய்தவர் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. "அரசியல் என்பது எத்தகைய திருகுதாளம் செய்தேனும் அதிகாரத்தை தக்க வைப்பது" என்ற மாக்கியவல்லியின் கூற்றுக்கு ஏற்றவாறு, கலைஞர் ஒரு சந்தர்ப்பவாதியாக நடந்து கொண்டார். தேர்தல் ஜனநாயக அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லி நாம் இதைக் கடந்து சென்று விடலாம்.

அதை விட நாஸ்திகம் பேசிக் கொண்டிருந்த கலைஞர், பதவிக்கு வந்ததும் ஆஸ்திகவாதிகளை அரவணைத்துக் கொண்ட "துரோகத்தையும்" இங்கே குறிப்பிடலாம். தாழ்த்தப் பட்ட சாதியினரை முன்னேற்றுவதற்காக சமநீதி பேசிய கலைஞரின் ஆட்சியில் தான் தாமிரபரணி படுகொலை நடந்தது. இது போன்று கலைஞர் தான் வரித்துக் கொண்ட கொள்கைக்கே செய்த "துரோகங்கள்" ஏராளம். இருப்பினும், ஒரு மிதவாத தேர்தல் அரசியல்வாதியிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த முதலாளித்துவ - ஜனநாயக அமைப்பு எப்படி இயங்குகின்றதோ, அதற்கு ஏற்றவாறு தான் ஒரு மாநில முதலைமைச்சரும் நடந்து கொள்வார்.

இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு தான், 2009 ம் ஆண்டு ஈழத்திற்காக நடந்த இறுதிப்போர் காலத்தில் கலைஞர் எடுத்த முடிவுகளையும் கணிப்பிட வேண்டும். அன்று பதவியிலிருந்த கலைஞரும், திமுக உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து சட்டசபையை கலைத்திருக்கலாம் என்றெல்லாம் "அறிவுரை" கூறியோர் பலருண்டு. அது அரசுக்கும், அரசாங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களின் எதிர்பார்ப்பு.

இறுதிப்போர் காலத்தில், வெளிவிவகார கொள்கையை கையில் வைத்திருந்த இந்திய மத்திய அரசு(அரசாங்கம் அல்ல) தான் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசு, இலங்கை அரசுக்கு பூரண ஆதரவு வழங்கி வந்தது. இந்திய இராணுவ ஆலோசகர்கள் கூட வன்னிப் போர்க்களத்தில் நின்றனர் என்பது பகிரங்கமாக தெரிந்த விடயம். அந்த நேரத்தில் கலைஞரின் "உண்ணாவிரத நாடகம்" அழுத்தம் கொடுப்பதற்கு போதாது என்பது உண்மை தான். ஆனால், அன்று சர்வதேச பின்புலத்தில் நடந்து கொண்டிருந்த அரசியல் - இராணுவ நகர்வுகளை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

இந்திய மத்திய அரசுக்கு கலைஞர் கொடுத்த அழுத்தத்தை விட, பல மடங்கு அதிக அழுத்தங்கள் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் மீது பிரயோகிக்கப் பட்டன. கனடாவில், டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கில் கூடிய ஈழத்தமிழர்கள், நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதை விட ஒவ்வொரு மேலைத்தேய தலைநகரத்திலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களை, அந்நாட்டு காவல்துறையினர் தலையிட்டு அடக்குமளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தன.

இந்த அழுத்தங்கள் எல்லாம் இராஜதந்திர அரசியலில் தோல்வியுற்றதற்கு ஒரு பிரதானமான காரணம் இருந்தது. இந்தியாவும், மேற்கத்திய நாடுகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த பொது மக்களை விடுவித்தால் மட்டுமே மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அறிவித்திருந்தன. ஆனால், மக்களை செல்ல விடுவது தற்கொலைக்கு சமமானது என்று கருதிய புலிகள் அந்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க மறுத்தனர்.

இதற்கிடையில் அப்போது நடக்கவிருந்த இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று வைகோ புலிகளுக்கு தகவல் அனுப்பினார். அன்று புலிகள் தமக்கு நெருக்கமாக இருந்த வைகோ சொன்னதை நம்பி ஏமாந்தனர். புலிகளின் நம்பிக்கைக்குரிய முகவரான கேபி அனுப்பிக் கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் பிடிபட்டுக் கொண்டிருந்த மர்மமும் துலங்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலிகளின் சர்வதேச கிளைகளை சேர்ந்தவர்களும், "அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும்" என்று சொல்லி நம்ப வைத்து ஏமாற்றினார்கள். இவர்களுடன் பிலிப்பைன்ஸில் வெரித்தாஸ் வானொலி நடத்திய காஸ்பர் அடிகளார் போன்றவர்களின் காட்டிக் கொடுப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதுபோன்ற துரோகங்களை மறைப்பதற்காகவே இன்று பலர் கலைஞரை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாக் குற்றங்களையும் ஒருவர் மீது பழி சுமத்துவதற்கு ஒரு பாவி தேவைப் பட்டது. அவர் தான் கலைஞர் கருணாநிதி. "அனைவரது பாவங்களையும் தனது சிலுவையில் சுமந்து மரித்த இயேசு பிரான் போன்று கலைஞர் மறைந்தார். அவருடன் கூடவே தமிழ்த்தேசியமும் மறைந்தது." என்று பார்ப்பன அடிமைகள் குதூகலிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டை காவிமயமாக்கும் இந்துத்துவா அடிவருடிகளின் நோக்கம் என்றைக்குமே பலிக்கப் போவதில்லை.

1 comment:

Unknown said...

நீங்கள் திமுக சார்பாளர் போல் உள்ளது . உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உங்களுடைய பார்வையில் ஈழ தமிழர் பிரச்சனை போர்கள் மற்றும் பிரபாகரன் பற்றிய உங்கள் பார்வை அவரிடம் தவறு என்ன சரி என்ன என்பது பற்றி கூற வேண்டும் ...