இருபதுகளில் யாழ் குடாநாட்டில் தோன்றிய இடதுசாரி அரசியல் இயக்கமான இளைஞர் காங்கிரஸ், இன்றைய வலதுசாரி தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு காலத்தால் முந்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் சமத்துவம், உள்நாட்டு உற்பத்தி போன்ற பல முற்போக்கு அம்சங்களை கொண்டிருந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த, யாழ்ப்பாணத் தமிழரின் இடதுசாரி பாரம்பரியம் பற்றிய வரலாறு, தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்யப் பட்டு வருகின்றது. அதை முறியடிக்கும் வகையில், சாந்தசீலன் கதிர்காமர் எழுதிய "யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்" என்ற நூலை இங்கே அறிமுகம் செய்து வைக்கிறேன்.
இன்றைக்கும் "தமிழர்களுக்கு இடதுசாரிகளைக் கண்டால் பிடிக்காது" என்று வலதுசாரிகள் விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தக் காலத்திலேயே யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸை உடைப்பதற்கு இனவாதிகள் முயற்சி செய்துள்ளனர். வட இலங்கையில் தமிழினவாதம் பேசிய ஜி.ஜி. பொன்னம்பலம், தென்னிலங்கையில் சிங்கள இனவாதம் பேசிய SWRD பண்டாரநாயக்கே ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். இவர்கள் ஒரு பக்கம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு; இனவாதம் பேசி சிங்கள, தமிழ் மக்களை பிரித்து வைக்க முயற்சித்தனர். அதன் விளைவுகளை, இலங்கையின் மூவின மக்கள் இன்று வரைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் பல முற்போக்கான தீர்மானங்களை எடுத்த யாழ் இளைஞர் காங்கிரஸ் ஒரு மார்க்ஸிய இயக்கம் அல்ல. அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மார்க்ஸிய சமூக விஞ்ஞானம் பற்றியும் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் கல்விகற்ற படியால், உலகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தனர். அயர்லாந்து விடுதலைப் போராட்டம் உட்பட உலகில் நடந்த காலனிய எதிர்ப்புப் போராட்டங்களை அறிந்து வைத்திருந்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்டம், இருபதுகளில் வாழ்ந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. வட்டுக்கோட்டையில் இருந்த யாழ்ப்பாணக் கல்லூரி, அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரியால் நடத்தப் பட்டாலும், மாணவர்களுக்கு சிந்தனைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் தாராளமாக வழங்கப் பட்டிருந்தது. கூட்டங்கள் நடைபெறும் நேரம் தலைமை தாங்கும் மாணவரின் சொல்லுக்கு பாடசாலை அதிபரும் கட்டுப்படும் அளவிற்கு ஜனநாயகம் இருந்தது.
அப்போது இலக்கியக் கூட்டங்களில் நடந்த விவாதங்கள் தான், பிற்காலத்தில் இளைஞர் காங்கிரஸ் தோன்றக் காரணமாக இருந்தது. இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு சுதந்திரம் வழங்கப் பட வேண்டும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை வேண்டும், என்பன போன்ற முற்போக்கான விடயங்கள் விவாதிக்கப் பட்டன. ஐரோப்பிய மையவாத கல்விக்கு பதிலாக, இலங்கை, இந்திய வரலாறுகள் போதிக்கப் பட வேண்டும் என்று வாதிட்டனர்.
அன்றிருந்த மாணவர்கள் இலட்சியவாதிகளாக நீதியான சமுதாயத்திற்காக கனவு கண்டனர். காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதுடன், இறுக்கமான சாதியமைப்பு கொண்ட நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை தம்மால் மாற்ற முடியும் என்று நம்பினார்கள். இருப்பினும், அவர்களது தத்துவார்த்த வழிகாட்டிகளாக காந்தி, நேரு போன்றோரே இருந்தனர். 1927 ம் ஆண்டு, இளைஞர் காங்கிரஸ் அழைப்பின் பேரில் மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அந்தக் காலத்து யாழ்ப்பாணத்தில் சாதித் தீண்டாமை தலைவிரித்தாடியது. பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள் சரிசமமாக உட்கார முடியாது. ஒரே இடத்தில் உணவருந்த முடியாது. இந்தத் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் முடிவெடுக்கப் பட்டது. அன்றைய ஆங்கிலேய காலனிய அரசும் பாடசாலைகளில் சரியாசன முறையை அமுல்படுத்த தீர்மானித்தது.
சரியாசன முறை அமுல்படுத்துவதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த உயர்த்தப்பட்ட சாதியினர், அது "யாழ்ப்பாண சமூக ஒழுங்கை பாதிக்கும்" என்று வாதிட்டனர். சரியாசனத்தை நடைமுறைப் படுத்திய பாடசாலைகளை கொளுத்தினார்கள். இரு மாதங்களில் யாழ்ப்பாணம் முழுவதும் ஒரு டசின் பாடசாலைகள் எரிக்கப் பட்டன. அதற்கு எதிர்வினையாக, தீண்டாமையை கடைப்பிடித்த பாடசாலைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் எரித்தனர். இதனால் சில பாடசாலைகள் "நடுநிலையான" முடிவெடுத்தன. தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு தனியான வாங்குகள் ஒதுக்க முன்வந்தன.
சுதந்திரத்திற்கு முந்திய இலங்கைக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வதற்காக டொனமூர் ஆணைக்குழு வந்திருந்தது. அப்போது அது முன்மொழிந்த திட்டங்கள் சுயாட்சி அமைக்கும் அளவிற்கு போதுமானதல்ல என்று இளைஞர் காங்கிரஸ் நினைத்தது. அதனால் 1930ம் ஆண்டு நடந்த அரச சபை தேர்தலை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்தது. இது "சிங்களவர்களுக்கு எதிரான தமிழரின் இனவாத நடவடிக்கை" என்று SWRD பண்டாரநாயக்கே விமர்சித்தார். அதேநேரம், ஜி.ஜி. பொன்னம்பலமும் காரசாரமாக கண்டித்திருந்தார்.
இதன் விளைவாக, இளைஞர் காங்கிரசின் நிலைப்பாட்டைக் கூறும் "இனவாதமா? தேசியவாதமா?" என்ற நூல் வெளியிடப் பட்டது. அதில் அவர்கள் சிங்கள இனவாதத்தையும், தமிழ் இனவாதத்தையும் நிராகரித்து, இலங்கைத் தேசியத்தை வலியுறுத்தி இருந்தனர். அந்தக் காலத்தில் வெளியான ஈழகேசரி வாரப் பத்திரிகையும் இளைஞர் காங்கிரஸ் நிலைப்பாட்டை ஆதரித்து வந்தது.
1931 ம் ஆண்டு நடந்த, இளைஞர் காங்கிரஸின் ஏழாவது வருடாந்த அமர்வு கமலாதேவி என்ற ஒரு பெண்ணால் தலைமை தாங்கப் பட்டமை ஒரு சிறப்பம்சம் ஆகும். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற சரோஜினி நாயுடுவின் மைத்துனி. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான கமலாதேவி தனது நாவன்மையால் பலரைக் கவர்ந்தார். அத்துடன், முதலாளித்துவ சுரண்டல் பற்றிய மார்க்ஸிய விளக்கங்களால், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் புதிய திசையில் செல்ல வைத்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் இருவகையான குணாம்சங்கள் இருப்பதை கமலாதேவி சுட்டிக் காட்டினார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்களோடு போராடும் குடியேற்ற நாடுகள், தமக்கான ஆட்சியதிகாரத்திற்காக போராடும் சிறிய நாடுகள். பெரும்பான்மையினரின் அட்டகாசத்தை எதிர்த்துப் போராடும் சிறுபான்மையினர். இவற்றுடன் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான போராட்டத்தையும் சுட்டிக் காட்டினார். முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் குடியேற்ற நாடுகளில் உள்ள மக்கள் மீது நடத்தி வரும் சுரண்டல் எத்தகையது என்பதையும் எடுத்துக் காட்டினார்.
முப்பதுகளின் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் சீர்குலைந்து வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. அது காந்தீய வழியில் இயங்கிய இயக்கமாக இருந்தாலும் இடதுசாரித் தன்மை கொண்டிருந்தது. அதனால், பிற்காலத்தில் பல காங்கிரஸ் உறுப்பினர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்து கொண்டனர். இருப்பினும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் சேர்ந்தனர். அன்று அது ஒரு இலங்கைத் தேசியக் கட்சி என்ற மாயை பலரிடம் இருந்தது.
லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்ப காலங்களில் ஒரு சமூக ஜனநாயக சோஷலிசக் கட்சியாக இருந்தது. தெற்கில் இயங்கிய சூரியமல் இயக்கமும், வடக்கில் இயங்கிய இளைஞர் காங்கிரஸும், இலங்கையில் ஒரு காத்திரமான இடதுசாரிக் கட்சி உருவாகக் காரணமாக இருந்தன. இருப்பினும் அது ட்ராஸ்கிச பாதையில் சென்றதால், பிற்காலத்தில் அதிலிருந்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது. ஐம்பதுகளுக்குப் பின்னர் நாட்டில் கூர்மையடைந்த இன முரண்பாடுகள் இடதுசாரி அரசியலை பின்தங்க வைத்தன. அதனால், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இலட்சியவாதிகள் கனவு கண்ட சமநீதி காக்கும் சமுதாயம் இன்னும் உருவாகவில்லை.
நூலின் பெயர் : யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்
எழுதியவர் : சாந்தசீலன் கதிர்காமர்
வெளியீடு : குமரன் புத்தக இல்லம்
விலை : 400 இலங்கை ரூபாய்கள்
Kumaran Book House
39, 36th Lane,
Colombo - 6
Tel. 0112364550
E mail: kumbhlk@gmail.com
Kumaran Book House
39, 36th Lane,
Colombo - 6
Tel. 0112364550
E mail: kumbhlk@gmail.com
No comments:
Post a Comment