Saturday, August 05, 2017

சாதிக்கொரு மயானம் ஈழத்தமிழரின் சாபம்!

படத்திற்கு நன்றி: புத்தூா் கலைமதி மக்கள் ஒன்றியம் 

புத்தூரில் போராடும் மக்களுக்கு தோழமையுள்ள வணக்கம்,

யாழ்ப்பாணம், புத்தூர் மக்களின் மயானம் அகற்றக் கோரும் போராட்டம் இன்றுடன் 25 வது நாட்களாக (05.08.2017) தொடர்கின்றது. தீர்வு வரும் வரையில் போராட்டத்தை கைவிடாத புத்தூர் மக்களின் தளராத மனவுறுதிக்கு தலை வணங்குகிறேன்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எமது போராட்டம் ஒன்று தான். பாட்டாளிமக்களுக்கு தேசம் கிடையாது. சர்வதேச ஒருமைப்பாட்டுடன், ஒருமுனைப்பான போராட்டங்களின் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

யாழ்ப்பாணத்தில், இதுவரையில் பல விதமான கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவை பெரும்பாலும் மத்தியதர வர்க்க உத்தியோகஸ்தர்களின் நன்மை கருதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். ஆனால், புத்தூர் மக்களின் போராட்டம் 25 வது நாட்களாக தொடர்வது குறிப்பிடத் தக்கது.

உழைக்கும் வர்க்க மக்களுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். அதனால் தான் அவர்கள் நாட்கணக்காக அல்லாது மாதக் கணக்காக போராட முன்வருகிறார்கள். அவர்களும் வேலைப் பளு காரணமாக ஒரு நாள் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு சென்றிருக்கலாம். அத்தகைய ஒரு நாள் போராட்டம் எந்தத் தீர்வையும் தராது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.

கேப்பாபிலவு மக்களின் போராட்டம் போன்று, புத்தூர் மக்களின் போராட்டமும் உழைக்கும் மக்களின் போராட்டம் தான். அதனால் தான் வீரியத்துடன் முன்னெடுக்கப் படுகின்றது. அதனை முன்னின்று ஏற்பாடு செய்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் அர்ப்பணிப்புடன் கூடிய தலைமைத்துவமும் முக்கியமானது.

உலக வரலாறு முழுவதும், போராடுவதன் மூலமே மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து போன்ற பணக்கார நாடாக இருந்தாலும், இலங்கை போன்ற ஏழை நாடாக இருந்தாலும், உழைக்கும் மக்கள் ஒருமுனைப்பான வர்க்க உணர்வுடன் போராடி வருகின்றனர். அந்த வகையில் புத்தூர் மக்களின் போராட்டமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இது வெறும் மயானப் பிரச்சினை தானே என்று நாம் கடந்து சென்று விட முடியாது. மக்கள் விரோதிகள் பலவிதமான அவதூறுகளை பரப்பிக் கொண்டிருப்பார்கள். இது போன்ற போராட்ட அனுபவங்களில் இருந்து தான், மக்கள் தமது நண்பர்களையும், எதிரிகளையும் இனங்கண்டு கொள்கின்றனர்.

ஒரு தெற்காசிய நாடான இலங்கையில் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டம் மட்டுமே சாதிப் பாகுபாடுகளையும் ஒழித்துக் கட்டும். மயானத்தை அண்டிய குடியிருப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருடையவை என்பதால், உயர்த்தப் பட்ட சாதியினர் ஒதுங்கிக் கொள்கிறார்கள். படித்தவர்கள் கூட விதண்டாவாதம் செய்கிறார்கள்.

"இது ஒரு அரசியல் பிரமுகரின் தனிப்பட்ட பிரச்சினை" என்று அவதூறு பரப்பியவர்களையும் எமக்குத் தெரியும். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் இருப்பதை வேண்டுமென்றே மறைக்கிறார்கள். எதற்காக புத்தூர் மக்கள் மட்டுமே போராட வேண்டும்?

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாடுகள் புத்தூரை மையப் படுத்தியதாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த அமைப்பு மலையகத்திலும் நடத்திய போராட்டங்களுடன் ஒப்பிட்டால், இது இலங்கை முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் உன்னதமான போராட்டத்தின் ஓர் அங்கம் என்ற உண்மை துலக்கமாகும்.

"முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?" என்று கேட்பதைப் போன்று தான், மயானப் பிரச்சினையை மறுப்பவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. "மக்கள் குடியிருப்புகளுக்குள் மயானம் வந்ததா? மயானத்திற்குள் மக்கள் குடியிருப்புகள் வந்தனவா?" என்று கேட்கிறார்கள்.

மக்கட்தொகைப் பெருக்கம் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்படுவதொன்றும் புதினம் அல்ல. அபிவிருத்தி காரணமாக பல கிராமங்கள் நகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. காணிகளின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய காலத்தில், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோருவதும் நியாயமானது தான்.

பிணங்கள் எரிக்கப் படும் இந்து மயானங்களில் இருந்து வரும் புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன், உடல் உபாதைகளையும் உண்டாக்க வல்லது. இது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். தனது பிரஜைகளின், ஆரோக்கியமான வாழ்வை உறுதிப் படுத்துவது அரசின் கடமை. அது மத்திய அரசாக இருந்தாலும், மாகாண அரசாக இருந்தாலும் கடமையை தட்டிக் கழிக்க முடியாது.

கொழும்புக்கு அருகில் மீதொட்டமுல்லையில் குவிக்கப் பட்ட குப்பை மேடு சரிந்து விழுந்து, அருகில் குடியிருந்தவர்களை வீட்டுக்குள் சமாதியாக்கியது. இந்த துயர சம்பவம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்கு முன்னரே குப்பைகளை அங்கிருந்து அகற்றுமாறு குடியிருப்புகளில் இருந்த மக்கள் போராடி வந்திருக்கின்றனர். அதையெல்லாம் அரசும், ஊடகங்களும் புறக்கணித்து வந்தன. அதன் விளைவு தான் அந்த துயர சம்பவம்.

இலங்கை அரசியல்வாதிகள் யாரும் தவறுகளில் இருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை. புத்தூர் மக்களும், மீதொட்டமுல்லை மக்களைப் போன்று சுற்றுச்சூழல் மாசடையும் காரணத்தை சுட்டிக் காட்டித் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது மயானம் அகற்றும் கோரிக்கைக்கு நியாயமான காரணங்களை குறிப்பிட்டு, எழுத்து வடிவில் மகஜர்களை அனுப்பியுள்ளனர். வட மாகாண சபை உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துள்ளனர். ஆனால், இன்று வரையில் யாரிடம் இருந்தும் பதில் இல்லை.

புத்தூர் மக்களின் போராட்டம் வெற்றி அடைவதற்கு உறுதுணையாக இருப்போம். அரசியல்வாதிகள் மக்களின் சேவகர்கள் என்ற உண்மையை உணர வைப்போம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை, வாக்களித்த மக்கள் திருப்பி அழைக்கும் அதிகாரம் கைவர வேண்டும். புத்தூர் மக்களின் போராட்டமும், மக்கள் ஜனநாயக கட்டமைப்பிற்கான போராட்டமும் வேறு வேறல்ல.

தோழமையுடன், 
 கலையரசன் 
 நெதர்லாந்து 
 5-8-2017


புத்தூர் மயானப் பிரச்சினை தொடர்பாக முன்னர் எழுதிய பதிவு:

சாதிக்கொரு மயானம் ஈழத்தமிழரின் சாபம்! 

விடுதலைப் புலிகளை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் தூய தமிழ்தேசியவாதிகளே!! 
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற வாருங்கள்!!!

விடுதலைப் புலிகளில் பெரும்பான்மையான போராளிகள் இந்துக்களாக இருந்த போதிலும், இறந்த பின் அவர்களது உடல்களை எரிக்காமல் புதைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் பலர், சாதியம் காப்பாற்றும் இந்து மயானங்கள் இருப்பதை அங்கீகரிக்கும் முரண்நகையை காணக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில், மக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ள இந்து மயானத்தை அகற்றுமாறு போராட்டம் நடக்கிறது. பிணங்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழல் மாசடைவைதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் காரணத்தைக் காட்டியே, மேற்கு ஐரோப்பாவில் மின் தகன முறை கொண்டு வந்தார்கள். அதை இந்துக்கள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மத நம்பிக்கையற்ற பூர்வீக மக்களும் பயன்படுத்துகிறார்கள்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதிக்கொரு மயானம் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

இது ஒரு சாபக்கேடு. "தமிழ்த்தேசியத்தில் சாதி இல்லை" என்று சொல்லித் திரிவோர், சாதிக்கொரு மயானம் இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி? புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இருந்த காலத்திலேயே அகற்றி இருக்க வேண்டாமா?

அது மட்டுமல்லாது, மயானத்தை அகற்றுமாறு பொது மக்கள் நடத்தும் போராட்டங்களை கொச்சைப் படுத்தியும் வருகின்றனர். ஆதிக்க சாதிப் பத்திரிகையான யாழ் உதயன், "ஒரு கட்சி பின்னால் இருந்து வன்முறையை தூண்டி விடுகின்றது" என்று விஷமத்தனமாக எழுதியது. அத்துடன் மக்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்களப் பொலிஸ் எடுத்த வன்முறை நடவடிக்கையை பாராட்டி எழுதியது. வெளிப்படையாகவே சிங்கள அரசின் அடக்குமுறையை ஆதரித்தது. இது தானா உதயனின் தமிழ்த் தேசியம்?

"மக்கள் குடியிருப்புக்குள் மயானம் இருக்கவில்லை. மயானத்தின் அருகில் மக்கள் குடியிருக்கிறார்கள்." என்று வாதாடுவோர் பலருண்டு. உலகில் எந்த நாடாக இருந்தாலும் மக்கட்தொகைப் பெருக்கம் இயற்கையானது. அதற்கு ஈடுகொடுக்க முடியாதவாறு இடநெருக்கடி ஏற்படுவதும் வழமை. ஆனால், அதற்காக மயானத்தை அகற்றக் கூடாது என்று வாதாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மயானம் சம்பந்தமான விடயத்தில் சாதியம் இல்லையென்றால், அதை அகற்றுவதில் ஏனிந்த தயக்கம்? அது மட்டுமல்ல, இன்றைக்கும் ஈழத் தமிழர்கள் எல்லோரும், கவனிக்கவும் "எல்லோரும்", விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களாகவும், பின்பற்றுவோராகவும் உள்ளனர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

அப்படியானால், புலிகளை பின்பற்றி இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டு வந்தால் சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கலாமே? புலிகளின் "மாவீரர் துயிலும் இல்லம்" மாதிரி, "மாண்டவர் துயிலும் இல்லம்" என்று சில இடங்களை ஒதுக்கி, அங்கு இறந்தவர்களை கொண்டு சென்று புதைக்கலாம். இதனால் சுற்றுச் சூழலை பாதுகாப்பதுடன், மயானத்தை சாதிப் பாகுபாடற்ற சமரசம் நிலாவும் இடமாகவும் காட்டிக் கொள்ளலாம். செய்வீர்களா தமிழ்த் தேசியவாதிகளே?
 (12-7-2017)

(பிற்குறிப்பு: இவ்விரண்டு கட்டுரைகளும் புத்தூரில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு முன்னிலையில் வாசிக்கப் பட்டன.)

No comments: