Monday, April 24, 2017

பிரித்தானியா தோற்கடித்த மலேசிய கம்யூனிசப் புரட்சி - சில குறிப்புகள்


மலேசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சின் பெங் (Chin Peng), கடந்த 16 செப்டம்பர் 2013 அன்று, தாய்லாந்தில், பாங்காக் மருத்துவமனை ஒன்றில் காலமானார். இவர் ஆசிய நாடொன்றில் நடந்த மிக நீண்ட விடுதலைப் போரை நடத்தியவர். ஜப்பான், பிரிட்டன், அவுஸ்திரேலியா, மலேயா போன்ற பன்னாட்டுப் படைகளை எதிர்த்துப் போராடி இருக்கிறார்.

ஒரு காலத்தில் தேசிய நாயகன் விருது கொடுத்து கௌரவித்த பிரிட்டிஷ் அரசு, பின்னர் "மிகத் தீவிரமான பயங்கரவாதி" பட்டம் சூட்டி வேட்டையாடியது. ஏனென்றால் இவர் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்டுகள் எந்தவொரு அரசு அதிகாரத்திற்கும் அடிபணிவதில்லை.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த மலேயாவில், 1924 ம் ஆண்டு, Ong Boon Hua எனுமிடத்தில் சின் பெங் பிறந்தார். அவர் மலேயாவில் சிறுபான்மையினரான சீன இனத்தை சேர்ந்தவர். சீனாவில் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்த காலத்தில், கம்யூனிச கொள்கை மலேயாவிலும் பரவியது. ஆரம்பத்தில், சீன வம்சாவளியினரே மலேயா கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர். கட்சியில் சீனர்களே பெரும்பான்மையாக இருந்தாலும், மலேயர்களும், தமிழர்களும் கணிசமான அளவில் சேர்ந்திருந்தனர்.

சின் பெங் தனது 15 ஆவது வயதில் மலேயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சில வருடங்களிலேயே கட்சியின் தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டார். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. மலேயாவை ஆக்கிரமித்த ஜப்பானிய படைகளுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சி கெரில்லாப் போர் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தது. இன்றைக்கு மலேசியாவை ஆளும் வர்க்கம், அன்று ஜப்பானியர்களுடன் ஒத்துழைத்தனர்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடியதற்காக, இரண்டாம் உலகப்போர் முடிவில் சின் பெங் பிரிட்டிஷ் அரசினால் கௌரவிக்கப் பட்டார். ஆனால், மிக விரைவிலேயே மீண்டும் மலேயாவை ஆள வந்த ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளுடன் முரண்பாடுகள் தோன்றின. கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடங்கியது. ஜப்பானியருக்கு எதிராக போராடிய சின் பெங் இற்கு, தேசிய வீரர் விருது கொடுத்து கௌரவித்த பிரிட்டன், தற்போது அவரை பயங்கரவாதி என்றது.

ஈழப்போரின் இறுதியில், பல நாடுகள் சேர்ந்து ஒடுக்கியதால் தான், புலிகள் தோற்கடிக்கப் பட்டார்கள் என்று, (புலி ஆதரவு) தமிழ் தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு மலேசிய வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. மலேசிய கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான போரில், பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, இந்தியா (கூர்க்கா படையினர்) ஆகிய நாடுகளை சேர்ந்த பன்னாட்டுப் படைகள் பங்குபற்றின. "மலேயா அவசரகால சட்டம்" என்ற பெயரில், 1948 - 1960 வரையில் பல்லாயிரம் மக்களை பலி கொண்ட நீண்ட போர் நடந்தது.

மலேயா போரில் பன்னாட்டுப் படைகள் புரிந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக இன்று வரையில் யாரும் தண்டிக்கப் படவில்லை. 1957 ம் ஆண்டு, மலேசியா சுதந்திர நாடான பின்னரும், கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் போர் தொடர்ந்தது. புதிய மலேசிய இராணுவத்திற்கு, பிரிட்டன் தேவையான ஆயுதங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்தது. பிரிட்டன் வழங்கிய "அருமையான யோசனையான" தடுப்பு முகாம்கள் அமைக்கப் பட்ட பின்னரே, கம்யூனிஸ்ட் போராட்டத்தை ஒடுக்க முடிந்தது.(பார்க்க: தடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு )

மக்கள் எனும் கடலில் இருந்து, போராளிகள் எனும் மீன்கள் பிரித்தெடுக்கப் பட்டனர். இதனால், அடர்ந்த காடுகளுக்குள் இருந்த கம்யூனிஸ்டுகளின் முகாம்களை, இராணுவம் சுற்றிவளைக்க முடிந்தது. போராட்டம் முடிவுக்கு வந்ததை உணர்ந்த சின் பெங்கும், எஞ்சிய போராளிகளும், தாய்லாந்திற்கு தப்பி ஓடினார்கள். தாய்லாந்து அரசுடனான சமாதான ஒப்பந்தம் மூலம், அந்த நாட்டிலேயே தங்கி விட்டார்கள். தாய்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த சின் பெங், போர் முடிந்த பின்னரும் மலேசியாவுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. மலேசிய அரசு இன்றைக்கும் அவரை, "முதலாவது எதிரியாக" கருதுகின்றது.

மலேசியாவில் இருந்து பிரிந்த சிங்கப்பூரிலும் சின் பெங் வரவேற்கப் படவில்லை. சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான் யூவின் PAP கட்சி, ஒரு காலத்தில் தன்னை ஒரு "இடதுசாரிக் கட்சி" போன்று காண்பித்துக் கொண்டது. ஆங்கிலேய காலனியாதிக்க காலத்தில், சிறிது காலம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஐக்கிய முன்னணி அமைத்திருந்தது. 

ஆனால், சிங்கப்பூர் பிரிந்த பின்னர், லீகுவான்யூ தனது சுயரூபத்தை காட்டினார். PAP கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள், மற்றும் சந்தேகப்பட்ட சிங்கப்பூர் கம்யூனிஸ்டுகளை கைது செய்து சிறையில் அடைத்தார். இத்தனைக்கும் லீகுவான்யூ, சின் பெங் மாதிரி சீன சிறுபான்மையினத்தை சேர்ந்தவர். இன்றைக்கும் சிங்கப்பூரின் அரசியல் அதிகாரம், அந்த நாட்டில் பெரும்பான்மை இனமான சீனர்கள் கைகளில் இருக்கின்றது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

1 comment:

parithi said...

மிகச் சிறந்த பதிவு. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாற்று 'முத்து'களில் ஒன்று.