Tuesday, April 04, 2017

மாட்டுத் திருடனை நையப்புடைத்து தண்டித்த யாழ்- தாலிபான் நீதி!யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மாடு திருடச் சென்ற ஒருவனை, பொதுமக்கள் பிடித்து நையப் புடைத்தனர். (உதயன், 04-Apr-2017; http://onlineuthayan.com/news/25402) இந்தக் கும்பல் வன்முறைக்குப் பின்னர் குற்றுயிராகக் கிடந்தவனை, போலீஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர். சட்டத்தைக் கையில் எடுத்த குழுவினரின் வன்முறைத் தாக்குதலை பாராட்டும் கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிந்தன.

//அவர்களுக்கு ஒ௫ வ௫மானத்தை தந்து கொண்டு அவர்களோடையே வாழ்ந்து கொண்டு இ௫க்கும் ஒ௫ பசுமாட்டை திருடி ஏதோ ஒ௫ தேவைக்கு பயன்படுத்துவதனால். அந்த மாட்டை நம்பி இ௫க்கும் குடும்பங்களின் நிலை தான் என்ன?// என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

மாடு வளர்ப்பவர்களும் சிலநேரம் வசதியற்ற ஏழை மக்களாக இருப்பார்கள். அதே நேரம், திருடர்களும் ஏழைக் குடும்ப பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தத் திருடர்களால் பணக்காரனின் வீட்டில் களவெடுக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருக்கும். இதனால், பலவீனமான நிலையில் உள்ளவர்களிடம் தான் கைவரிசையை காட்டுவார்கள். மாடு களவு போவது மட்டுமே மிகப்பெரிய இழப்பு அல்ல. பிக்பாக்கட் திருட்டுக்களால் தமது சேமிப்புப் பணம் முழுவதையும் பறிகொடுத்த ஏழை உழைப்பாளிகள் பலருண்டு.

நாம் வாழும் உலகம் அப்படித் தான் இருக்கிறது. நாய் நாயைக் கடித்துண்ணும் காலம். முதலாளித்துவ பொருளாதாரமும், அது கொண்டு வந்த ஏற்றத்தாழ்வான சமுதாயமும், திருடர்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கும். இதே அமைப்பு தொடர்ந்தால், அடுத்த நூற்றாண்டிலும் இதே மாதிரி திருட்டுச் சம்பவங்களுக்கு குறைவிருக்காது.

சிறிய திருட்டுக் குற்றத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கி விட்டால், "இப்படியான திருட்டு சம்பவங்கள் முற்றாக ஒழிக்கப் பட்டு விடும்" என்று சிலர் கனவு காண்கிறார்கள். அதைத் தானே, ஆப்கானிஸ்தானில் தாலிபானும், சிரியாவில் ஐ.எஸ்.ஸும் செய்தன? சவூதி அரேபியாவில் நூறாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது. அவர்களால் திருட்டை முற்றாக ஒழித்து விட முடிந்ததா? மதவாதிகளும், இனவாதிகளும் ஒரு கற்பனை உலகில் வாழ்வதுடன், எம்மையும் அவ்வாறே நினைத்துக் கொள்ளுமாறு போதிக்கிறார்கள்.

தாலிபான் ஆட்சியின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் மாதிரி, யாழ்ப்பாணமும் கற்காலத்திற்கு திரும்பிக் கொண்டிருப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. நாகரிகத்திற்கு முந்திய பண்டைய கால சமூகத்தில் நிலவிய தண்டனை வழங்கும் முறைகளில் இதுவும் ஒன்று. தாலிபான், ஐ.எஸ். ஆட்சியின் கீழ், திருட்டு போன்ற சிறு குற்றம் புரிந்தவர்களுக்கும் பொதுமக்கள் கல்லெறிந்து தண்டனை வழங்கினார்கள். அப்போது அது சரியான தண்டனை தான் என்று நியாயம் கற்பித்தவர்களும் உண்டு.

யாழ்ப்பாணத்தில் மாடு களவெடுத்த பிரச்சினையில், ஒரு சிலர் "மாடு எங்கள் வீட்டில் சகோதரம் மாதிரி" என்று இந்துத்துவா நியாயம் பேசினார்கள். இன்னும் சிலர், ஒரு மாடு களவு போனால், அந்தக் குடும்பத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று பொருளாதார நியாயம் பேசினார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு திருடனை கல்லெறிந்து கொன்றாலும் திருட்டை ஒழிக்க முடியாது. அப்படிப் பார்த்தால், திருட்டுக் குற்றத்திற்காக கையை வெட்டும் சவூதி அரேபியாவில் திருட்டுக்களே நடக்கக் கூடாது.

மாட்டுத் திருடனை பிடித்து அடிப்பதற்குப் பெயர் வீரம் அல்ல. அது வீட்டில் திருடும் சுண்டெலியை பிடித்து அடிப்பதற்கு சமமானது. தினந்தோறும் எமது உழைப்பும், பணமும் எமக்குத் தெரியாமலே களவு போகின்றது. எத்தனையோ வியாபாரிகள் பகற்கொள்ளை அடிப்பதும், அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும் அனைவருக்கும் தெரிந்த விடயங்கள்.

உங்களுக்கு வீரம் இருந்தால் அவர்களைப் பிடித்து அடித்து நொறுக்குங்கள் பார்ப்போம்? யாழ்ப்பாணத்தில் சாதாரணமான மணல் கொள்ளைக்காரனாக இருந்தவர்கள், பிற்காலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அளவிருக்கு பெரிய ஆளாக வந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாளிகை போன்ற வீடு கட்டி வாழ்கிறார்கள். உங்களால் முடிந்தால் அந்த வீட்டை அடித்து நொறுக்குங்கள் பார்ப்போம்?

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், வன்னியில் லைக்கா நிறுவனம் கட்டிக் கொடுத்த 150 வீடுகளுக்கு ரஜனி வருகை தரவிருந்த பிரச்சினை நடந்தது. அப்போது பலர், குறிப்பாக மாட்டுத் திருடனுக்கு அடிக்க வேண்டும் என்று வாதிட்டவர்கள், லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்காரனுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கினார்கள்!

யார் இந்த அல்லிராஜா சுபாஸ்கரன்? டெலிபோர்ன் கார்ட் விற்பனையில், பாவனையாளர்களுக்கு தெரியாமல் பெருமளவு பணம் திருடிய கொள்ளைக்காரன். சந்தேகமிருந்தால், லைக்கா கார்ட் பாவித்தவர்களை கேட்டுப் பாருங்கள். விளம்பரத்தில் இருப்பதற்கு முரணாக பெருமளவு நிமிடங்கள் வெட்டப் படுவதைப் பற்றி குறைகூறுவார்கள். அதாவது டெலிபோன் கார்ட்டிற்கு பெறுமதியான சேவை தரப் படுவதில்லை. அதில் வெட்டப்படும் நிமிடங்கள் சட்டவிரோத கருப்புப் பணமாக மாறுகின்றது.

லைக்கா நிறுவனம் ஆண்டு தோறும் மில்லியன் கணக்கான பணத்திற்கு வரி கட்டாமல் ஏய்ப்புச் செய்து இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கப் படுகின்றன. இது சம்பந்தமான வழக்கு பிரான்ஸில் நடந்தது. பாரிஸ் லைக்கா அலுவலகத்தில் நடந்த பொலிஸ் சோதனையில், மூட்டை மூட்டையாக கருப்புப்பணம் சிக்கியது.

மாட்டுத் திருடனுக்கு அடித்ததன் மூலம் நீதி வழங்கியதாக பெருமைப்பட்ட நீதிமான்கள், கார்ட்டுத் திருடன் விடயத்தில் தலைகீழாக நடப்பது ஏன்? மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் வீடுகளை கட்டிக் கொடுத்ததற்காக, ஒரு திருடனை வள்ளல் என்று புகழ்வதற்கு வெட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கே யாருக்கும் வெட்கமில்லை. தங்கள் அறியாமையை இட்டு அக்கறையுமில்லை.

ஆங்கிலத்தில் Penny wise, pound foolish என்று சொல்வார்கள். சிறிய திருட்டுக்களை பற்றிக் கவலைப் படும் நாம் பெரிய திருட்டுக்களை கண்டுகொள்வதில்லை. உலகில் பெரிய திருடர்கள் இருக்கும் வரையில், மாடு களவெடுக்கும் சிறிய திருடர்களும் இருப்பார்கள் என்ற உண்மையை உணர மறுக்கிறோம்.

நீங்கள் திருட்டுக்கள் நடக்காத சமுதாயத்தில் வாழ விரும்பினால், அதற்கு ஒரு சமூகப் புரட்சி அவசியம். பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பெரிய திருடர்களைப் பிடித்து மக்கள் நீதிமன்றில் நிறுத்தி, குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்.


1 comment:

பொன்.பாரதிராஜா said...

கசக்கும் உண்மை...அல்லிராஜா சுபாஸ்கரன் மட்டும் அல்ல...கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், கனிமொழி, பன்னீர், தினகரன் என்று பெரிய கூட்டமே உள்ளது.. மக்கள் இவர்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்வார்கள்...100 ரூபாய் திருடும் ஒருவனை கட்டி வைத்து உதைப்பார்கள்...