Monday, December 12, 2016

"கருப்புப்பண ஒழிப்பு" போர்வையில் இந்திய வங்கிகளின் ஆக்கிரமிப்பு


இந்தியாவில் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பானது, கறுப்புப் பண ஒழிப்பை விட வேறு நோக்கங்களை கொண்டிருந்தது. உண்மையில் அது ஓர் அதிர்ச்சி வைத்தியமாக நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி நாணயப் பரிமாற்றமாக நடைபெறுகின்றது. அதை முழுவதும் "பிளாஸ்டிக் பணம்" என்று சொல்லப் படும், டெபிட் கார்ட் பரிவர்த்தனையாக மாற்றும் திட்டம் அரசிடம் இருக்கலாம். இதன் மூலம் பணத்தை யாரும் கண்ணால் காண முடியாது. ஆனால் அது பரிவர்த்தனையில் இருக்கும்.

மேலைத்தேய நாடுகளில் நாணய நோட்டுக்களின் பாவனை மிகவும் குறைவு. ஒருவர் நாள் கணக்கில், சிலநேரம் மாதக் கணக்கில் கூட காசை கண்ணால் காணாமல் வாழ முடியும். பையில் பணம் இல்லாமல் வெளியே நடமாட முடியும். அதாவது, வங்கி அட்டை மட்டுமே போதுமானது. மேற்கு ஐரோப்பாவில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களில் பலர், ஐம்பது யூரோவுக்கு மேற்பட்ட நோட்டுக்களை கண்ணால் காணவில்லை என்பது புதினமல்ல.

இந்தியாவிலும் அது போன்றதொரு நிலைமையை கொண்டு வருவதற்காக, அரசு ஒரு அதிர்ச்சி வைத்தியம் நடத்தி உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையான மக்கள் வங்கிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். இனிமேல் அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் வங்கிகள் ஊடாகவே நடைபெறும். அதற்காக ஊக்குவிக்கப் படும். சிறிய பெட்டிக் கடைகள், சந்தை வியாபாரிகள் கூட டெபிட் கார்ட் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

வேடிக்கை என்னவென்றால், இதன் மூலம் கறுப்புப் பணம் அதிகரிக்குமே தவிரக் குறையாது. சிறிய பணக்காரர்கள், சிறிய முதலாளிகள் மட்டும் பாதிக்கப் படுவார்கள். அவர்களது முதலீடுகள் குறையும். வர்த்தகம் நலிவடையும். அதே நேரத்தில், மறுபக்கத்தில் பெரிய பணக்காரர்களும், பெரிய முதலாளிகளும் வளர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் தேங்கும் கறுப்புப் பணத்தை, இலகுவாக வரி இல்லா சொர்க்கத் தீவுகளுக்கு அனுப்பி விடுவார்கள்.

ஆதார் அட்டைக்கும் "கறுப்புப் பண ஒழிப்பு" க்கும் சம்பந்தம் இருக்கிறதா? இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதன் மூலம், சிறிய நிறுவனங்களுக்கு அல்லது சிறிய முதலாளிகளின் அழிவுக் காலம் ஆரம்பமாகியுள்ளது!

இந்திய அரசு 500, 1000 ரூபா நோட்டுக்களை செல்லாதாக்கிய அறிவித்தலுக்கு முன்னரே ஆதார் அட்டை திட்டம் வந்து விட்டது. இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலகட்டத்தில் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஆதார் அட்டை திட்டம் ஏற்கனவே மேற்குலக நாடுகளில் நடைமுறையில் உள்ளது தான். அங்கு புதிதாக வேலைக்கு சேரும் ஒருவர், முக்கியமாக மூன்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 1.அடையாள அட்டை 2.ஆள் அடையாள இலக்கம் 3.வங்கிக் கணக்கிலக்கம்

இவை இல்லாமல் ஒருவர் வேலை செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, எந்த நிறுவனமும் யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது. ஆதார் அட்டை என்ற ஆள் அடையாள இலக்கம் அரச வரித் திணைக்களத்தில் பதிவில் இருக்கும். அதன் மூலம் யார் எங்கே வேலை செய்தார்? எவ்வளவு பணம் சம்பளமாகப் பெற்றுக் கொண்டார்? இது போன்ற விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கலாம்.

ஒவ்வொரு நிறுவனமும் வேலைக்கு அமர்த்தும் தொழிலாளியின் ஆள் அடையாள இலக்கத்தை வாங்கி பதிவு செய்வதன் மூலம் சம்பளத் தொகை பற்றிய விபரங்களையும் அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த வழமைக்கு மாறாக, ஒரு நிறுவனம் தனது வேலையாளுக்கு "கையில் பணம் கொடுத்தது" தெரிய வந்தால், அது பெரும் மோசடிக் குற்றமாகக் கருதப் படும். அந்தக் குற்றத்திற்காக, அரசுக்கு பெருமளவு தண்டப் பணம் கட்ட வேண்டி இருக்கும்.

சிலநேரம், தனி நபர்கள் தமது வீட்டு திருத்த வேலைகளுக்காக வேலையாட்களை நாட்கூலிக்கு அமர்த்துவார்கள். அவர்கள் எந்தக் கணக்கு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் பண நோட்டுக்களாக கையில் கொடுப்பார்கள். இது மேற்கத்திய நாடுகளிலும் நடக்கிறது. இது சிலநேரம், "சட்டத்தின் படி தவறாக இருந்தாலும்" கண்காணிப்பதில் உள்ள சிரமம் காரணமாக அரசு கண்டுகொள்வதில்லை.

ஆனால், சிறிய நிறுவனங்களின் பாடு திண்டாட்டமாகி விடும். ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட நிறுவனங்கள் என்பதால், ஊழியர்களின் சம்பளத்தையும் வங்கி மூலமாகத் தான் செலுத்த வேண்டும். ஒரு தொழிலாளி சில மணிநேரங்கள் வேலை செய்திருந்தாலும், கணக்கு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், பின்னர் நடக்கும் பரிசோதனையில் குறிப்பிட்ட நிறுவனம் நிதி மோசடி செய்ததாக கருதப் படும்.

தமது ஊழியர்களின் சம்பளம் ஒழுங்காக கணக்கு பார்த்து வங்கியில் போடுவது, பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால், சிறிய நிறுவனங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தில் தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கப் பார்ப்பது வழமை. குறைந்த பட்சம், கையில் பணம் கொடுப்பதால் அரசுக்கு கட்டும் வரியை ஆவது மிச்சம் பிடிக்கலாம்.

வேலையாட்கள் கட்ட வேண்டிய வருமான வரி தவிர, அவர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக கம்பனி கட்ட வேண்டிய வரி தனியானது. இதைத் தவிர காப்புறுதிகளும் கட்டப் படுவதில்லை. கையில் சம்பளம் கொடுப்பதால், அரசுக்கு வரி இழப்பும், காப்புறுதி நிறுவனங்களுக்கு வருமான இழப்பும் ஏற்படுகின்றது. எல்லோருடைய சம்பளப் பணமும் வங்கி மூலமே செலுத்தப் பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் அந்த நிலையில் மாற்றம் வரும்.

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதன் மூலம், சிறிய நிறுவனங்களுக்கு அல்லது சிறிய முதலாளிகளின் அழிவுக் காலம் ஆரம்பமாகியுள்ளது என்று சொல்லலாம்! அன்றாட கூலித் தொழிலாளர்கள் தம்மிடமுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அல்லலுற்றதை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். கையில் காசிருந்தும் எதையும் வாங்க முடியாத கஷ்டத்தில் இருந்தனர்.

பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சிறிய நிறுவனங்கள் தான். அவர்கள் எப்போதும் சம்பளம் கொடுப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கைவசம் வைத்திருப்பார்கள். காசு செல்லாத பிரச்சினையால் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களது நம்பகத் தன்மையும் அடி பட்டுப் போனது.

எதிர்காலத்தில், மிகச் சிறிய பொருளாதாரத் துறைகளிலும் பெரிய நிறுவனங்கள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சிறிய நிறுவனங்களை தரகர்களாக அல்லது தமக்கு கீழ்ப்பட்ட கிளை நிறுவனமாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வளவு காலமும் சுதந்திரமாக இயங்கிய சிறிய முதலாளிகள் இனிமேல் தரகர்களாக மாறுவார்கள்.

இந்தத் திட்டத்தினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விழுத்தலாம்.

1. சிறிய நிறுவனங்களை புதைகுழிக்குள் அனுப்பலாம். இதனால், "தாராள சுதந்திர சந்தையில்" போட்டி குறைக்கப் படும்.

2. அடித்தட்டு கூலித் தொழிலாளர்களும் தாமாகவே பெரிய நிறுவனங்களுக்குள் உள்வாங்கப் படுவார்கள். அவர்களுக்கான சம்பளப் பணம் வங்கிகளில் செலுத்தப் படும். இதனால் வங்கிகளுக்கு பெருந்தொகைப் பணம் இருப்பில் வந்து சேரும்.

500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதால் பாதிப்படையாத ஒரு பிரிவும் இருந்தது. பெரிய நிறுவனங்களும் அவற்றில் வேலை செய்பவர்களும் தான் அந்த அதிர்ஷ்டசாலிகள். நாளாந்தம் வங்கிப் பரிவர்த்தனை செய்வதில் உள்ள அனுகூலங்களை அனுபவிப்பவர்கள்.

ஒரு சிலர், "நாம் டெபிட் கார்ட் பாவிக்கிறோம்" என்று மிதப்பாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு திரிந்தார்கள். அப்படி அவர்களை சொல்ல வைத்தது எதுவென்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இதற்குப் பின்னால் உள்ள சிக்கலான பொருளாதார சூட்சுமங்களையும் அறிந்திருக்க மாட்டார்கள்.

நாங்கள் நூறு ரூபாயை இன்னொருவருக்கு பரிவர்த்தனை செய்யும் பொழுது அதன் மதிப்பு குறையாமல் நூறு ரூபாயாகவே இருக்கும். ஆனால், "கேஷ் லெஸ் பொருளாதாரம்" எனப்படும், வங்கி அட்டைகளின் மூலம் நடக்கும் பரிவர்த்தனையில் எமக்கு சிறியளவில் பண இழப்பு ஏற்படும்.

பணப் பரிவர்த்தனை முழுவதும் வங்கிகள் ஊடாக நடக்குமானால் அதற்கான சேவைக் கட்டணமும் அறவிடப் படும். ஏனென்றால் வங்கி ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல. பணத்தை வைத்து தொழில் நடத்தும் ஒரு வர்த்தக ஸ்தாபனம். இதனால் நாம் எல்லோரும், எமது வருமானத்தில் ஒரு குறிப்பிட்டளவு பகுதி வங்கிகளுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்தியாவில் தற்போது நடைபெறும் மாற்றங்கள், மேற்கத்திய நாடுகளில் குறைந்தது நாற்பது வருடங்களுக்கு முன்னரே வந்து விட்டன. ஒரு கூலித் தொழிலாளியாக இருந்தாலும், அனைத்து உழைப்பாளிகளும் தமது சம்பளத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்கின்றனர்.

எமது சம்பளம் அப்படியே ஒரு சதம் மாற்றம் இல்லாமல் எமது கைக்கு வருகிறது என்று சொல்ல முடியாது. வங்கியின் இடைத் தரகர் வேலைக்கு நாம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்த பட்சம் வங்கி அட்டையை பயன்படுத்துவதற்காக வாடகை கட்ட வேண்டும்.

ATM மூலமாக வங்கியில் இருந்து பணம் எடுத்தால், அதற்கும் சேவைக் கட்டணம் கட்ட வேண்டும். அதாவது எமது பணத்தை நாம் எடுப்பதற்கு காசு கொடுக்க வேண்டும்! அதை நாம் தவிர்க்க முடியாது. இதை விட வங்கி ஊடாக இன்னொரு கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யவும் காசு கொடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு இது சாதாரணமான விடயமாகத் தெரியலாம். ஆனால், வருடந்தோறும் வங்கிகள் எம்மிடம் இருந்து எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றன என்பதை ஆராய்வதில்லை.

நான் ஐரோப்பாவுக்கு வந்த புதிதில், அதாவது 25 வருடங்களுக்கு முன்பு, ஒவ்வொரு தடவையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் கட்டணம் அறவிடப் பட்டது. சொந்த வங்கியை தவிர்த்து, வேறொரு வங்கியில் பணம் எடுத்தால் அதற்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், டெபிட் கார்ட் அல்லது வங்கி அட்டை மூலமாக பணம் செலுத்தினாலும் கமிஷன் கொடுக்க வேண்டி இருந்தது.

அனேகமாக, பத்து வருடங்களுக்கு முன்னர் தான் அந்த நிலைமை மாறியது. அதுவும் அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக மாற்றிக் கொண்டார்கள். மேலும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது. இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் வங்கிகள் எந்தக் கவலையும் இல்லாமல் வாடிக்கையாளரின் பணத்தை சுரண்டலாம். அரசாங்கத்திற்கும் அக்கறை இல்லை. மக்களிடமும் விழிப்புணர்வு இல்லை.

இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் கூட வங்கிகள் வருடாந்த சேவைக் கட்டணம் அறவிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதாவது, வங்கியை பயன்படுத்துவதற்கு அல்லது வங்கி அட்டையை பாவிப்பதற்கான கட்டணம். அதே நேரம், வங்கிகள் முன்பு நேரடியாக அறவிட்ட பரிவர்த்தனைக் கட்டணத்தை, தற்போது மறைமுகமாக எடுக்கிறார்கள்.

நாம் ஒரு கடையில் டெபிட் கார்ட் பாவித்து பொருட்களை வாங்கினால், அந்தப் பரிவர்த்தனைக்கு ஒரு கட்டணம் உண்டு. நாங்கள் அதைக் கட்டுவதில்லை என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் பொருட்கள் வாங்கிய கடை வங்கிக்கு கட்டிக் கொண்டிருக்கும். அவர்கள் அந்தத் தொகையை பொருட்களின் விலைகளுடன் சேர்த்து விடுவார்கள். ஆகவே, இறுதியில் நாம் தான் அந்தக் கட்டணத்தை கட்டுகிறோம்.

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நாணய நோட்டுக்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனை பல மடங்கு அதிகம். எண்பது சதவீத பொருளாதாரம் வங்கிகளை தவிர்த்து விட்டு நடப்பதாக கருதப் படுகின்றது. இது வங்கித் துறைக்கும், நிதி மூலதன முதலாளிகளுக்கும் "மிகப் பெரிய இழப்பு"!

"டிஜிட்டல் இந்தியாவில்", அனைத்து மக்களையும் வங்கிகளில் தங்கியிருக்க வைத்தால், பில்லியன் கணக்கான ரூபாய்கள் வங்கி முதலாளிகளின் கையிருப்பில் குவியும். அவர்கள் அந்தப் பணத்தை பேரழிவு யுத்தங்களிலும் முதலிட்டு மேலதிக இலாபம் சம்பாதிக்கலாம்.

1 comment:

Unknown said...இன்னும் விளக்கமா மக்கள் கலை இலக்கிய கழகத்தோட அய்யா மருதையனோட vianu.com பதிவுகள பாருங்க
+ எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை - பாகம் 1 : https://www.youtube.com/watch?v=C72dlY0wM3s
+ மோடியின் நோக்கம் 2 - தோழர் மருதையன் : https://www.youtube.com/watch?v=FwROuEi0Kg0
+ கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா! - தோழர் மருதையன் உரை ! : https://www.youtube.com/watch?v=FGzNSRm_Mmw
+ வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் : https://www.youtube.com/watch?v=hDyVEosnkKY


அய்யா ஜெ.ஜெயரஞ்சன் , பொருளாதார வல்லுநரோட பதிவ படிங்க
+ ஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் – சிறப்புக் கட்டுரை : http://www.vinavu.com/2016/11/25/india-black-money-quantity-and-how-it-transferred-into-investments/
+ கள்ளப் பணம் வெள்ளைப் பணமாக எவ்வாறு மாறுகிறது? பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தரும் விளக்கம் : https://www.youtube.com/watch?v=GzLDh2PnMck


- இள.செயக்குமரன் , சேலம்