Friday, February 27, 2015

தொல்பொருட்களை நாசமாக்கிய ஐ.எஸ். மத அடிப்படைவாதிகளின் பண்பாட்டு அழிப்பு


ஈராக்கில் மொசுல் நகரில், 2500 வருடங்கள் பழமையான தொல்பொருட்கள், ISIS மத அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. மொசுல் மியூசியத்தில் நடந்த அராஜகத்தை தாங்களே வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அது தொடர்பான சில குறிப்புகள்.

ஈராக் நாட்டை ஆண்ட சதாம் ஹுசைன் எந்தளவு கொடுங்கோலனாக இருந்தாலும், தனது தாய்நாட்டின் பழம் பெருமை வாய்ந்த தொல்பொருட்களை பேணிப் பாதுகாத்து வந்தார். ஆனால், ஈராக்கிற்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்ய விரும்பிய அமெரிக்கா, சதாமை பதவியில் இருந்து அகற்றி விட்டு, தனது படைகளை அனுப்பி ஆக்கிரமித்தது.

அப்போதே ஈராக்கின் தொல்பொருட்களை நாசமாக்கும் அராஜக செயல்கள் தொடங்கி விட்டன. பாக்தாத், மற்றும் பல நகரங்களில் இருந்த மியூசியங்கள் சூறையாடப் பட்டன. திருடர்கள் தாம் கொண்டு செல்ல முடியாதவற்றை அடித்து நொறுக்கினார்கள். ஈராக்கில் திருடப் பட்ட பொக்கிஷங்கள், மேற்கத்திய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப் பட்டன.

ஈராக் மட்டுமல்ல, சிரியாவும் பல்லாயிரம் வருட காலம் பழமையான, அரும் பெரும் தொல்பொருட்களை கொண்ட நாடு தான். அங்கேயும் அமெரிக்கா வெறுத்த ஆசாத்தின் சர்வாதிகார அரசு தான், அந்தப் பொக்கிஷங்களை பாதுகாத்து வந்தது.

அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஆசாத் அரசுக்கு எதிரான "விடுதலைப் போராளிகளை" ஆதரித்தார்கள். அந்த "விடுதலைப் போராளிகள்" வேறு யாருமல்ல. சன்னி இஸ்லாம் மத அடிப்படைவாதக் குழுக்கள் தான். மேற்குலகம் "மிதவாத" சாயம் பூசிய FSA கூட, ஒரு மத அடிப்படைவாத அமைப்பு தான். சிரியாவில் பல பகுதிகள் தீவிரவாத இயக்கங்களின் கட்டுப்பாட்டில் வந்த போதே, பழம் பெருமை வாய்ந்த கலைப் பொக்கிஷங்களை அடித்து நொறுக்கி நாசமாக்கும் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.

சன்னி இஸ்லாம் மத அடிப்படைவாதக் குழுக்கள், இஸ்லாத்திற்கு முந்திய நாகரிகங்களை காட்டும் சிலைகள், சிற்பங்கள், தொல்பொருட்களை மட்டும் அழிக்கவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இஸ்லாமிய தத்துவ அறிஞர்கள், கவிஞர்களின் சிலைகள், சமாதிகளையும் உடைத்தார்கள்.

சிரியா உள்நாட்டுப் போரில் ஆதிக்கம் பெறத் தொடங்கிய, ISIS, அல் நுஸ்ரா ஆகிய இரண்டும் ஏட்டிக்குப் போட்டியாக சிலை உடைப்புகளில் ஈடுபட்டன. உண்மையில், பாரம்பரிய தொல்பொருட்களை அழிக்கும் மரபு இஸ்லாம் எனும் மதத்திற்கு மட்டுமே உரிய விசேட அம்சம் அல்ல. 

17 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. குறிப்பாக புரட்டஸ்தாந்து மதப் பிரிவை ஸ்தாபித்த லூதரை பின்பற்றிய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், ஏசு, மரியாள் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். குறிப்பாக, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில், நிறைய சிலை உடைப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு காலத்தில், பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யம், மத்திய கிழக்கில் மிகப் பெரிய பிரதேசத்தை ஆண்டது. இஸ்லாமிய கலீபாக்களின் காலத்தில் கூட, பண்டைய நாகரிகத்தை காட்டும் பொக்கிஷங்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை. இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கான படையெடுப்பு நடந்த காலத்தில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. 

மதம் பரப்பும் போரில், சில பழம் பெருமை வாய்ந்த நகரங்கள் அழிந்துள்ளன. ஆனால், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இஸ்லாம் ஆதிக்க மதமான பின்னர், அப்படி எதுவும் நடக்கவில்லை. குடிமக்களுக்கும், தேசத்தின் வளங்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கும் பொறுப்பு மன்னருடையது. அந்தக் கடமையை இஸ்லாமிய கலீபாக்கள் நிறைவேற்றி வந்தனர்.

ஆகையினால், கண்டிக்கப் பட வேண்டிய ஐ.எஸ். மத வெறியர்களின் செயலை, ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கும் எதிரானதாக திசை திருப்புவது உள்நோக்கம் கொண்டது. முஸ்லிம்கள் எல்லோரும் சிலை உடைப்பாளர்கள், அல்லது அதை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது அரசியல் பிரச்சாரமே தவிர, உண்மை அல்ல. 

எல்லா மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் இருப்பார்கள். அவர்கள் மத நூல்கள் கூறும் போதனைகளை தமது அரசியலுக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்துக் கொள்வார்கள். இன்றைக்கும் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் குழுக்களுக்கும், ஐ.எஸ்., அல்கைதா போன்ற இஸ்லாமிய அடிபப்டைவாத குழுக்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளில், நடைமுறையில் உள்ள அரசு அதிகாரம் மிகவும் பலமானது. அதனால், மத அடிப்படைவாதிகளினால் எதுவும் செய்ய முடியாதுள்ளது. ஆனால், சிரியா, ஈராக்கில் நிலைமை அப்படி அல்ல. அங்கேயுள்ள அரசு அதிகாரம் மிகவும் பலவீனமானது. தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை மீட்க முடியாமல் வருடக் கணக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த குழப்பகரமான சூழ்நிலையில், ஐ.எஸ். என்ற மிகவும் பலமான மத அடிப்படைவாத இயக்கம், தனது அராஜகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

ISIS இயக்கம், ஏற்கனவே பல தொல்பொருட்களை சூறையாடியுள்ளது. சிரியாவில் உள்ள மியூசியங்களில் திருடப் பட்ட தொல்பொருட்கள், பிரிட்டனில் கள்ளச் சந்தையில் விற்கப் பட்டுள்ளன. இதன் மூலம், ஐ.எஸ். இயக்கம் தனது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொண்டது. (Islamic State is selling looted Syrian art in London to fund its fight)

மேலும், மொசுல் அருங்காட்சியகத்தில் அடித்து நொறுக்கப் பட்ட பொக்கிஷங்கள் அசலானவை அல்ல! அவை காலனிய காலத்தில் பிளாஸ்டர் சீமெந்து கலந்து செய்யப் பட்ட போலிகள். ஒரிஜினல் பொக்கிஷங்கள் சில பாக்தாத்தில் உள்ளன. பெரும்பாலான தொல்பொருட்கள் காலனிய காலத்தில் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப் பட்டன. அவை இன்றைக்கும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. (Islamic State fighters smash historic statues in Iraq)

எது எப்படியிருப்பினும், ISIS போன்ற மத அடிப்படைவாத அல்லது பயங்கரவாத அமைப்புகளின் செயல்கள், மத்திய கிழக்கில் வாழும் பெரும்பான்மையான அரபு- இஸ்லாமியருக்கும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளன. ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களில் குறைந்தது ஐந்து அல்லது பத்து சதவீதம் அவர்களை ஆதரிக்கலாம். மற்றவர்கள் எதிர்த்துப் பேசினால் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு பக்கம் ஈராக் அரசும், ஷியா ஆயுதபாணிக் குழுக்களும், ஈராக்கில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம், ஆசாத் அரசும், ஹிஸ்புல்லாவும் சிரியாவில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன. மேற்குலகில் இருப்பவர்கள், உண்மையிலேயே சிரியா, ஈராக்கில் உள்ள தொல்பொருட்களை பாதுகாக்க விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் அரச படைகளை ஆதரிப்பது தான். 

ஆனால், அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் நேரங்களில், மேற்குலகம் மெத்தனப் போக்கை காட்டி வருகின்றது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ளும் ISIS, ஈராக், சிரியா மக்களுக்கு எதிரான பண்பாட்டு அழிப்புப் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

No comments: