Tuesday, February 12, 2013

கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"


கமல்ஹாசன் ஒரு தலைசிறந்த நடிகன் மட்டுமல்ல. ஒரு காலத்தில் உலக சினிமாக்களின் முதல் தர  இரசிகனாக இருந்தவர். சிறந்த கலைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற அவா கொண்டிருந்தார். அவரது குணா போன்ற படங்களை சாதாரண இரசிகர்கள் புரிந்து கொள்ள கஷ்டப் பட்டதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், சொந்தமாக படம் எடுக்க கிளம்பிய பின்னர், தொடர்ந்தும் வணிகப் படங்களாகவே எடுத்துத் தள்ளுகின்றார். தமிழகத்தின் முன்னணி நடிகனாக இருந்த போதும், தான் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை வித்தியாசமான கலைப் படங்களில் முதலீடு செய்யாமல், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட வியாபாரி போன்றே செயற்படுகின்றார்.

ஆகவே, அத்தகைய வியாபார நோக்கம் கொண்ட கலைஞனிடம் சமூகப் பொறுப்பு வாய்ந்த திரைப் படங்களை எதிர்பார்க்க  முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்க அரசுடன் மோதும் நிலையிலும், தான் சரியென்று நம்பிய கொள்கையை விட்டுக் கொடாத Oliver Stone போன்ற தயாரிப்பாளர்கள் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றனர். கமல்ஹாசன் கலைக்கு சேவை செய்யா விட்டாலும் பரவாயில்லை, இந்திய அரசுக்கு சேவை செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இந்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு அமையவே, தற்பொழுது விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சிக் காலத்தில் நடந்த கொடுமைகளை பேசும் திரைப் படங்கள் பல ஏற்கனவே வந்துள்ளன. Osama, The Kite Runner போன்ற சினிமாப் படங்கள், உலக அளவில் சிறந்த கலைப் படைப்புகளாக பேசப் பட்டன. தாலிபான் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ஆப்கானிய எழுத்தாளர்கள் தமது அனுபவங்களை நூல்களாக வெளியிட்டிருந்ததும், அவையே பின்னர் படமாக்கப் பட்டதும் அறிந்ததே. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இருக்கவே செய்வர். அது யதார்த்தம். ஈழத்தில் புலிகளை ஆதரித்த தமிழர்களும், எதிர்த்த தமிழர்களும் இருந்தனர். ஆப்கானிஸ்தானில், தாலிபானை ஆதரித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் ஊறிய மக்கள் ஆவர். 

மேற்கத்திய விழுமியங்களுடன் தம்மை அடையாளப்  படுத்திக் கொண்ட புத்திஜீவிகள் மட்டத்தில், தாலிபானுக்கு ஆதரவு இருக்கவில்லை. தாலிபானுக்கும் தம்மை விட அதிகமாகப் படித்தவர்களைக் கண்டால் பிடிக்கவில்லை. தாலிபானின் கற்கால ஆட்சியை சகிக்க முடியாமல் புலம்பெயர்ந்த, ஆப்கான் அறிவுஜீவிகள் எழுதிய நாவல்கள், தாலிபானை காட்டமாக விமர்சித்து வந்தன. அது அவர்களது படைப்புச் சுதந்திரம். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கீழ் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கப் பட்டது. அந்த நாவல்கள் படமாக்கப் பட்ட போது, அந்தக் கதைகள் உலகம் முழுவதும் பரந்து பட்ட மக்களிடம் போய்ச் சேர்ந்தது. அப்போதெல்லாம், படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை  அனைவரும் கவனத்தில் எடுத்திருந்தனர். நிச்சயமாக, தாலிபானுக்கும், அதனை ஆதரித்த சலாபி-இஸ்லாமிய கடும்போக்காளர்களுக்கும் அது உவப்பாக இருந்திராது. தாலிபான் எதிர்ப்பாளர்களை, "துரோகிகள்" என்று திட்டித் தீர்ப்பதை தவிர அவர்களுக்கும் வேறு வழி இருக்கவில்லை. 

விஸ்வரூபம் திரைப்படத்தை, ஒரு கருத்துச் சுதந்திர வெளிப்பாடாக கொள்ள முடியாததற்கு, நிறைய காரணங்கள் உள்ளன. முதலில் அது ஒரு கலைப் படைப்பல்ல. வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட, பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய, வழக்கமான மசாலா படம். மேலும் அது வெளிப்படையாகவே அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும்  படமாக தன்னை காட்டிக் கொள்கின்றது. சுருக்கமாக அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம். அமெரிக்கா, சில்வஸ்டர் ஸ்டெலோனை "ரம்போ"வாக நடிக்க வைத்து, வியட்நாமுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் அனுப்பி, தனது வெளியுறவுக் கொள்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரட்டியது. அதே பாணியில், தற்போது தமிழனான கமலஹாசன், இந்திய அரசு சார்பாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்திருக்கிறார். 

ஒசாமா, தி கைட் ரன்னர் படங்களைப் போன்று, தாலிபான் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றைப் பற்றி, விஸ்வரூபம் பேசவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. விஸ்வரூபம், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் "விடுதலை செய்யப்பட்ட" ஆப்கானிஸ்தானின் நிலைமையை விளக்கிக் கூறுகின்றது. ஒரு நாட்டின் மீதான எந்தவொரு படையெடுப்பும் மனிதப் பேரவலம் இன்றி நிறைவேறவில்லை. இந்து சமுத்திரத்தில் இருந்து ஏவப்பட்ட Tomahawk ஏவுகணைகள், தாலிபானை மட்டும் கொல்லவில்லை. அப்பாவி குடிமக்களும், பெண்களும் குழந்தைகளும் பலியானார்கள். குறைந்தது இருபதாயிரம் பேரை கொன்ற பின்னர் தான், ஆப்கானிஸ்தான் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆப்கான் போரை எதிர்த்து, ஆயிரக் கணக்கான மக்கள், மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விட்டு, இப்போது தான் எழுந்தவர் போல, மனிதப் பேரவலத்தை திரைப்படம் என்ற போர்வையால் மூடி மறைப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். 

ஒரு நாட்டின் மீது  அல்லது, சுயாட்சி கோரும் சிறுபான்மை இனத்தின் மீது படையெடுக்கும் ஆக்கிரமிப்பு இராணுவம் எத்தகைய நியாயங்களை முன்வைக்கும் என்பது தெரிந்ததே. 2009 ம் ஆண்டு, "புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்வதற்காக, வன்னி மீது படையெடுத்ததாக..." ஸ்ரீலங்கா இராணுவம் நியாயம் கற்பித்தது. ஆங்கிலத்தில் "déjà vu" என்று சொல்வார்கள். (ஒரு பிரெஞ்சு மொழி சொற்பதம். அதன் அர்த்தம், ஏற்கனவே பார்த்து விட்டோம்.)  2001 ம் ஆண்டு, "தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து ஆப்கான் மக்களை விடுதலை செய்வதற்காக, அப்கானிஸ்தான் மீது படையெடுத்ததாக..." அமெரிக்க இராணுவம் நியாயம் கற்பித்தது. 

கமல்ஹாசன், இலங்கை இராணுவத் தரப்பு நியாயங்களை மட்டும் காட்டும் திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தால், அதனை "கலைஞனின் உரிமை, படைப்புச் சுதந்திரம்" என்றெல்லாம் காரணம் கூறி அங்கீகரிக்க நாம் தயாராக இருக்கிறோமா? அதனை தடை செய்ய வேண்டுமென ஆக்ரோஷத்துடன் போராட மாட்டோமா? ஆகவே, விஸ்வரூபம் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு பக்க நியாயத்தை மட்டுமே பேசுவதால், இதனை ஒரு அரசியல் பிரச்சாரப் படமாகவே கருத வேண்டியுள்ளது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், வியட்நாம் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும், ஜேம்ஸ் பாண்ட் படங்களை திரையிட தடை விதித்திருந்தது. அரசியல் காரணங்களுக்காக திரைப்படங்களை தடை செய்வது, வியட்நாம் போன்ற "கம்யூனிச சர்வாதிகார" நாடுகளில் மட்டுமே நடக்கும் விடயமல்ல. மார்க்சியத்தை பரப்பி தொழிலாளர்களை எழுச்சி கொள்ள வைத்து விடும் என்ற காரணத்தை கூறி,  "பொதெம்கின் போர்க் கப்பல்" (The Battleship Potemkin) என்ற சோவியத் திரைப் படம், ஜெர்மனியிலும் (1933), பிரான்சிலும் (1925) தடை செய்யப் பட்டது. 

பல முஸ்லிம் அமைப்புகளைப் பொறுத்த வரையில், இஸ்லாம் என்பது அவர்களது தேசிய அடையாளமாக இருக்கிறது. "யூத (சர்வ)தேசியவாதம்" உருவாகக் காரணமாக இருந்த அடிப்படை கோட்பாட்டை, "இஸ்லாமிய (சர்வ)தேசியவாதம்" கொண்டுள்ளது. தேசியவாத அரசியல் எப்போதும் மொழி சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. "எங்கேயோ இருக்கும் தாலிபானை பற்றி படம் எடுத்தால், எதற்காக இங்கே துள்ளுகிறார்கள்...?" என்று கேட்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

2008 ம் ஆண்டு, விஸ்வரூபம் பாணியில் ஒரு சிங்களத் திரைப்படம் வெளியானது. சிங்கள இனவெறி இராணுவத்திற்கு நன்றி தெரிவித்து தயாரிக்கப்பட்ட, "பிரபாகரன்" என்ற அந்த திரைப்படம், புலிகளை கெட்டவர்களாகவும், ஸ்ரீலங்கா இராணுவவீரர்களை நல்லவர்களாகவும் சித்தரித்திருந்தது. விஸ்வரூபம் திரைப்படத்தில், "அமெரிக்க படைகள் பெண்களையும், குழந்தைகளையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்" என்று காட்டுகின்றனர். பிரபாகரன் படத்தில், "ஸ்ரீலங்கா படையினர், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பவர்கள்" போன்று சித்தரிக்கப் படுகின்றனர்.  இவ்விரண்டு திரைப்படங்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? 

சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரபாகரன் படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது, தமிழ் தேசியக் கட்சிகள் அதை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தன. பிரபாகரன் படத்தை தமிழில் டப் செய்து தமிழகத் திரையரங்குகளில் ஓட விட வேண்டுமென, தயாரிப்பாளர் துஷாரா பீரிஸ் நினைத்தது நடக்கவில்லை. சென்னையில் வைத்து இயக்குனருக்கு தர்ம அடி விழுந்தது. பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம்,  புலிகள் அல்லது தமிழர்களை தவறாக சித்தரித்து, அவர்கள் மீதான வெறுப்பை சிங்களவர் மனதில் விதைப்பதை குறியாக கொண்டிருந்தது. அதே போன்று, விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம், தாலிபான் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்துள்ளது. 

பிரபாகரன் திரைப்படத்திற்கு எதிரான தடையையும், போராட்டத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்றால், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தையும் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் அமைப்புகள் இதனை தமது மத நிந்தனை சம்பந்தமான பிரச்சினையாக காட்டும் பொழுது, மறு தரப்பினர் அதையே முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்த ஏதுவாகின்றது.  அமெரிக்காவின் மேலாதிக்க போர், ஆப்கான் இனப்படுகொலை, அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தாலிபானின் போராட்டம், இவற்றை விஸ்வரூபம் மூடி மறைக்கும் அயோக்கியத்தனம் போன்றன பேசப் பட வேண்டும். அதற்குப் பதிலாக, இதனை மதம் சம்பந்தமான  பிரச்சினையாக திசை திருப்பியதில், முஸ்லிம் அமைப்புகளுக்கும் பங்குண்டு. அவர்கள் இந்திய/தமிழக அரசுக்களின் மகுடி வாசிப்பிற்கு ஏற்ப ஆடுவதாக எழும் குற்றச் சாட்டுகளையும் மறுப்பதற்கில்லை 

இந்திய மக்களில் பெரும்பகுதியை சினிமா எனும் மாயை கட்டிப் போடுகின்றது. ஆகவே, மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் ஊடகமான சினிமாவை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு காலத்தில் குடும்பக் கதை சார்ந்த படங்களுக்கு பேர் போன இந்திய சினிமா தொழிற்துறை, தற்பொழுது நிறைய அரசியல் திரைப்படங்களையும் எடுக்கின்றது. வரவேற்கத் தக்கது தான். ஆனால், அந்தப் படங்கள் அமெரிக்க பாணியில், அரசின் பிரச்சாரப் படங்கள் போல எடுக்கப் படுகின்றன. மணிரத்தினம் ரோஜா படம் எடுத்த பின்னர், காஷ்மீர் போராளிகள் "கெட்டவர்கள்" என்று சாமானியனின் பொதுப் புத்தியில் உறைந்து போனது. அதே மாதிரியான, அல்லது அதிலும் பல மடங்கு தாக்கத்தை விஸ்வரூபம் ஏற்படுத்தலாம். விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை சுற்றி நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் இருந்தே, சமூகம் எந்தளவு பிளவு பட்டுள்ளது என்பது தெரிகின்றது. 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி போல, சமூகம் பிளவுபட்டால் பிரித்தாளுவது இலகுவாக இருக்கும். அந்த விடயத்தில் திரைப்படத்தை தயாரித்த கமல்ஹாசனும், தமிழக அரசும் திறமையாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். திரைப்படத்தை எதிர்த்து போராடும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் அதற்கு ஒத்துழைக்கலாம். அவர்களுக்கு பின்னணியில் சி.ஐ.ஏ. ஆலோசனை வழங்குகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.   ஐரோப்பாவில் அது நடந்ததை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். 

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத படம் தயாரித்த தெயொ வன் கோக், கெர்ட் வில்டர்ஸ் ஆகியோரின் நடவடிக்கைகள், நெதர்லாந்து சமூகத்தில் விரிசலை உண்டாக்கின. அதற்கு எதிர்வினையாக வன்முறைக்கு தூண்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையின் கரங்கள் இருந்தமை பின்னர் தெரிய வந்தது. தெயொ வன் கொக்கின் Submission, கெர்ட் வில்டர்சின் Fitna ஆகிய குறும்படங்கள், முஸ்லிம் வெறுப்பை கக்கும் கருத்துக்களை பரப்பி வந்தன. அவை நெதர்லாந்திலும், உலகிலும் ஏற்படுத்திய அதிர்வலைகள் காரணமாக தடை செய்யப் பட்டன. அதே மாதிரியான அதிர்வலைகளை, விஸ்வரூபம் தமிழக சூழலில் ஏற்படுத்த விரும்புகின்றது.  ஊடகங்களால் பரப்பப் பட்ட இஸ்லாம் குறித்த அச்சவுணர்வு, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பாரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. தற்போது தமிழகமும் அந்த அடிச்சுவட்டை பின்பற்றுகின்றது.  

முன்னர் ஒரு தடவை, காற்றுக்கென்ன வேலி என்ற திரைப் படத்திற்கு,  திரையிடுவதற்கு முன்னரே தணிக்கை சபை அனுமதி வழங்கவில்லை. அதனால் அந்தப் படம் இந்தளவு பிரச்சினையை கிளப்பவில்லை. மேலும் அண்மையில் வெளியான விஸ்வரூபம், துப்பாக்கி போன்று, வேற்றின மக்களை புண்படுத்தும் காட்சிகள் எதுவும் அந்தப் படத்தில் கிடையாது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கை சபை சான்றிதழ் கொடுத்த பின்னர், திரையரங்குகளில் வெளியிட நாள் குறிக்கப் பட்ட பின்னர் தான் தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது, "கலைஞனின் உரிமைக்காக" அவனது "இரசிகர்களும்" போராடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. அதாவது,  "இந்த தடைக்கு காரணம், இஸ்லாமிய மதவாத அமைப்புகள் என்று பழியை அவர்கள் மேல் போட்டதன் மூலம், இந்து மதவாதிகளை எதிர் அணியில் திரட்டவும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.  

ஒரு சராசரி தமிழ் மகன் அதிகமாக ஆர்வம் காட்டாத, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பற்றிய கதையை, எதற்காக கமல் தேர்ந்தெடுத்தார்? பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த காரணம், இது பொதுவாக முஸ்லிம்களை பற்றியது. புலிகளின் மனித உரிமை மீறல்களை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டி, தமிழர்கள் என்றாலே இரக்கமில்லாத கொடியவர்கள் என்று சித்தரித்த பிரபாகரன் படம், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. அது சராசரி சிங்கள மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது? 2009 ம் ஆண்டு, புலிகளுடன், நாற்பதாயிரம் தமிழ் மக்களும் அழிக்கப் பட்ட போரின் வெற்றியை, சாதாரண சிங்கள மக்களும் இனவெறிக் களிப்புடன் கொண்டாட வைத்தது. அது போன்ற நிலைமையை இந்தியாவில் உருவாக்குவதற்கு, விஸ்வரூபம் குறிப்பிட்டளவு பங்களிப்பை வழங்கலாம். விஸ்வரூபம் தயாரிப்பின் பின்னணியில், அமெரிக்க, இந்திய புலனாய்வுத் துறையினரின் பங்கு எந்தளவு உண்மையாக இருக்க முடியும்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, விஸ்வரூபம் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரதிபலிக்கின்றது. 

2014 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகுவதற்கு நாள் குறிக்கப் பட்டு விட்டது. அமெரிக்கப் படைகள் போனால், அதைத் தொடர்ந்து நேட்டோ படைகளும் விலக்கிக் கொள்ளப் படலாம். அப்போது ஏற்படும் வெற்றிடத்தில், பாகிஸ்தான் நுளைவதற்கு முன்னர், இந்தியா பொறுப்பேற்கத் துடிக்கின்றது. பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியன் ஆதரித்த நஜிபுல்லாவின் ஆப்கான் அரசை, இந்தியாவும் ஆதரித்தது. அது வீழ்ந்த பின்னர், முஜாஹிதீன் இயக்கங்களும், அவர்களை விரட்டி விட்டு தாலிபானும் ஆட்சியை பிடித்தவுடன், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர் உருவான கர்சாயின் பொம்மை அரசு, பாகிஸ்தானை உதறி விட்டு இந்தியாவுடன் சேர்ந்து கொண்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபானின் கை ஓங்கி வருகின்றது. அமெரிக்க படைகள் வெளியேற்றப் பட்டால், கர்சாய் அரசை கவிழ்த்து விட்டு, மீண்டும் தாலிபான் ஆட்சி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த தருணத்தில், இந்தியா விரைந்து செயற்படத் துடிக்கிறது. 

ஒரு காலத்தில், ஈழத்தில் இந்திய அமைதிப் படைகள் இறக்கப் பட்டதைப் போல, ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அமைதிப் படைகள் சென்றாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதை, தாலிபானும் உணர்ந்துள்ளது.  2009 ம் ஆண்டு, காபுலில் உள்ள இந்திய தூதரகம் தாலிபானின் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானது. ஆப்கானிஸ்தானில் இந்திய இலக்குகள் தாக்கப்பட்டது அதுவே முதல் தடவை அல்ல. அதுவே கடைசித் தடவையாகவும் இருக்கப் போவதில்லை. 2009 ம் ஆண்டு, தனது காலின் கீழ் மிதிபட்ட புலிகளை துடைத்தெறிந்த சந்தோஷத்தில் இந்தியா இருந்த நேரத்தில், காபுல் தூதரக குண்டுவெடிப்பு இடியென இறங்கியது. இந்தியாவின் தலையில் உள்ள ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள்வருகை, எதிர்காலத்தில் பெரும் தலையிடியைக் கொடுக்கும் என்பது நிச்சயம். ஆப்கானிஸ்தானில் இந்தியா நேரடியாக தலையிடுவதற்கு முன்னர், மக்களை தயார் படுத்த வேண்டியது அவசியம். அந்தக் கடமையை கமலஹாசனின் விஸ்வரூபம் செவ்வனே செய்யும்.

*****************************************

சினிமா தொடர்பான முன்னைய பதிவுகள்:

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

9 comments:

கவிதை வானம் said...

சரியான நல்ல நடுநிலை விமர்சனம்

சீனு said...

படத்துல தாலிபான்கள் பற்றி காட்டியதெல்லாம் நிஜம் இல்லைங்கறீங்களா? இல்லை, முஸ்லீம்கள் கேட்டது போல 'எதுக்கு தாலிபான் பத்தி படம் எடுக்கனும்?'னு கேக்குறீங்களா?

முஸ்லீம்களை பொருத்த அளவில் முஸ்லீம் என்றால் முஸ்லீம், அவன் எந்த தேசத்தை சேர்ந்தவனாக இருந்தாலும். அப்படி இருக்க எத்தனை இந்திய முஸ்லீம்கள் (அதாவது இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்கள்) தாலிபான்கள் செய்யும் கொடுமைகளை எதிர்த்திருக்கிறார்கள்?

ரிசைனா கொல்லப்பட்டது சரி என்று வாதிடுபவர்கள் தான் இந்திய முஸ்லீம்கள். ரிசைனா தவறு செய்திருந்தால் (அவள் சிறுமியாக இருந்தாலும்) சாகவேண்டியது தானாம். ஒருவேளை தவறு செய்யவில்லையென்றால் இன்னும் நல்லதாம். காரணம், definite-ஆ அவள் சொர்க்கத்துக்கு தான் செல்வாளாம்.

அவ்வளவு ஏன்? தன் 6 வயது மகளை கொன்ற மதபோதகரை திட்ட வக்கில்லை. ஆனால், அவன் மதபோதகன் இல்லை என்பதை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளவர்கள் தான் இந்த இந்திய முஸ்லீம்கள்.

kumar said...

இரண்டாவது கமெண்டே நேரிடையாக கமலை நோக்கி விரலை
காட்டி விட்டதால் பதிவின் நோக்கம் இலக்கை அடைந்து விட்டது.
கமலின் ஆஸ்கார் வெறி அதன் உச்சத்தை தொட்டு விட்டது.அதுவும்
நேற்று வந்த a.r.ரஹ்மான் அதை எட்டிய பிறகு வெறி ஸ்பீட் லிமிட்டை
தாண்டி போய் கொண்டிருக்கிறது.உன்னை போல் ஒருவனில்
நான்கு தீவிர முஸ்லிம் தீவிரவாதிகளையும் ஒரு காமெடி பீஸ்
ஹிந்து தீவிரவாதியையும் (முஜே நை பக்ரு ஹை ) காட்டியதில்
தெரிய ஆரம்பித்தது இந்த கபட வேடதாரியின் சுயரூபம்.

போற்றி பாடடி பொன்னே என்று தேவரினதுக்கு தேசிய கீதம்
எடுத்து கொடுத்தவர் தான் பிறந்த பரமக்குடியில் நடந்த தலித்துகளின்
துப்பாக்கி சூட்டை படமாக எடுத்திருக்கலாமே.நல்ல கதை களன்
ஆயிற்றே.எடுத்து பார்க்கட்டும்.வெட்டி போட்டு விடுவார்கள்.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது முதல் குரல் கொடுத்தவன்
என்பதெல்லாம் சும்மா பம்மாத்து வேலை.அந்த நேரத்தில் சு.சாமி
இவரை தாண்டி ருத்ர தாண்டவம் ஆடினார்.பார்க்க :இடிப்புக்கு பின்
வந்த இந்தியா டுடே தமிழ் பதிப்பு.

ரமணி சந்திரனின் அணைத்து நாவல்களிலும் வரும் ஒரு வரியை
நான் மேற்கோள் காட்டியே தீர வேண்டிய கட்டாயம்.
சிறுத்தை தன் புள்ளிகளை ஒரு போதும் மாற்றி கொள்வதில்லை.

shiva said...

When the americans landed in moon these muslims said it was a hollywood movie and the americans hasnt landed in the moon.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஆஹா..! அருமை..!

மிக ஆழமான ஆய்வும்
அறிவார்ந்த அலசலும்
அபாரம்... சகோ.கலை.

'ஈழம் பற்றி சிங்களம் இதுபோல ஒரு பக்க சார்பு பிரச்சார படம் எடுத்தால் சும்மா இருப்போமா' என்று கேட்டு இருக்கிறேன். ஆனால், அதுபோலவே தமிழர் வெறுப்பை விதைக்கும் 'பிரபாகரன்' என்ற சிங்கள பிரச்சார படமும் முன்பே எடுத்துள்ளார்கள் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.

அதையும் தமிழில் டப்பிங் பண்ண முயற்சியா...?! என்னா தெனாவட்டு...!? சாரி... சாரி... மன்னிக்கவும்.... இது, "சிங்கள பேரினவாதத்தின் கருத்துரிமையும் சிங்கள கலைஞனின் படைப்புரிமையும்" அல்லவா..?!?! இதைநாம் எப்படி எதிர்க்கலாம்..?! அவ்வ்வ்வவ்வ்வ்.....

அமெரிக்க விஸ்வாசரூபத்தை ஆதரித்த அறிவுசீவிகள், எதற்கு இந்த சிங்கள விசுவாசபிரபாகரனை ஆதரிக்கவில்லை..?!?! இதுதான் நடுநிலையா..?!

ஆக, மொத்தத்தில், ஒரு பக்க சார்பு கொண்ட பெரும்பாண்மை மனோபாவ ஆதிக்க சிந்தனையை நடுநிலை படுத்தக்கூடிய சிறப்பான முயற்சி இத்தெளிவான பதிவு.

எனது பலமான பாராட்டுக்கள். உங்களின் இக்கடும் முயற்சிக்கு ஒருவராவது மனம் மாறினால் அது போதும் எனக்கு.

மிக்க நன்றி சகோ.கலை.

kk said...

இப்படியும் ஒரு வியூ இருக்கின்றது என்பது தெரியாது...தகவலுக்கு மிக்க நன்றிகள்.

Barari said...

ஒவ்வொரு நாட்டின் உள் நோக்கத்தையும் அந்த மக்களின் பொது புத்தியையும் ஆழ்ந்த சிந்தனையுடன் மிக தெளிவாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.அமெரிக்க ஊடகங்கள் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகள் அவ்வளவும் அக் மார்க் உண்மை என்று நம்பும் அப்பாவியாக இருக்கிறார் நண்பர் சீனு.

jeevagiridharan said...

good work... best wishes to you...

jeevagiridharan said...

//சிறுத்தை தன் புள்ளிகளை ஒரு போதும் மாற்றி கொள்வதில்லை//
Well said...