Friday, January 18, 2013

மாலியில் கேலிக்குள்ளான பிரான்ஸின் நவ காலனிய ஆக்கிரமிப்பு

மீண்டும் ஒரு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". பின்லாடனின் மரணத்தோடு, "அல்கைதா அழிந்து விட்டது" என்று பெரு மூச்சு விட்டவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி. மாலி என்ற ஆப்பிரிக்க நாட்டில், பிரான்சின் வான் படைகள் "அல்கைதாவுக்கு எதிராக போரிடுவதாக" அறிவித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் மாலியில் என்ன நடக்கின்றது? இது ஒரு நவ -காலனித்துவ ஆக்கிரமிப்பாகுமா? அல்லது பிரான்ஸ் கூற விரும்புவது போல, "அல்கைதாவுக்கு எதிரான போர்" ஆக கருதலாமா? 

வடக்கு மாலியில், துவாரக் இன மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தகவல்களுக்கு, நான் முன்னர் எழுதிய கட்டுரையை வாசிக்கவும்.(சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை) இம்முறை வடக்கு மாலியினை ஆக்கிரமிக்க விரும்பும் ஏகாதிபத்திய தலையீடு பற்றி ஆராய்வோம். உலகம் முழுவதும் தனி நாடு கோரிப் போராடும் இயக்கங்களும், அதன் ஆதரவாளர்களும் மாலியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுள்ளது.  மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள், ஏற்கனவே தமது காலனிகளின் எல்லைகளை தமது நிர்வாக வசதிக்கேற்ப பிரித்துள்ளன. அவற்றை மாற்ற விரும்பும் சக்திகள் யாராக இருந்தாலும், ஐ.நா. தலைமையிலான ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்நோக்க வேண்டியிருக்கும். 

"இந்தியாவில் வாழும் தமிழர்களையும், இலங்கையில் வாழும் தமிழர்களையும், இடையிலே புகுந்த ஆங்கிலேயர்கள் இரண்டாக பிரித்து விட்டார்கள். ஈழத் தமிழர்களை சிங்களவன் கையிலும், தமிழ்நாட்டு தமிழர்களை ஹிந்திக்காரன் கையிலும் ஒப்படைத்து விட்டார்கள். அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்..." என்று பலர் அங்கலாய்ப்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள். மாலியில் வாழும் துவாரக் இன மக்களும் அதே மாதியான முறைப்பாடுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 1936 ம் ஆண்டு வரையில் கூட, பிரெஞ்சு காலனிகளான  மாலி, நைஜர், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகள், ஒரே நாடாக இருந்ததை அந்தக் கால வரைபடத்தை பார்ப்பவர் புரிந்து கொள்ளலாம். (பார்க்க: 1936 ல் பிரெஞ்சுக் காலனிகளின் வரைபடம், http://upload.wikimedia.org/wikipedia/commons/3/38/AOFMap1936.jpg) பிரெஞ்சுக் காரர்கள் தமது நிர்வாக வசதி கருதி இன்றுள்ள எல்லைகளை பிரித்து விட்டார்கள். அன்றிலிருந்து, "இது இராமன் கிழித்த கோடு. இதை தாண்டினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்..." என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு மாலியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், தங்களை மாலியின் பிற இனங்களிடமிருந்து, வேறுபடுத்திக் காட்டிக் கொள்கின்றனர். நிறவேற்றுமை ஒரு முக்கிய அடையாளம். மாலியின் தெற்குப் பகுதியில் வாழும் இனங்கள், பிற ஆப்பிக்கர்களைப் போல கருப்பாக இருக்கையில், துவாரக் மக்கள் சிவப்பாக இருக்கின்றனர். அதனால் தாம் வெள்ளையர் என்ற எண்ணமும் அவர்களிடம் உண்டு. (இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் ஆரியர் வருகை போன்று, ஆப்பிரிக்காவில் வெள்ளையினத்தவரின் குடியேற்றங்கள் இடம்பெற்ற வரலாற்றையும் மறுப்பதற்கில்லை.) துவாரக் மக்கள், ஒரு பாரம்பரிய நாடோடிக் குழுமம் ஆகும். இஸ்லாம் பரவிய தொடக்க காலத்தில் இருந்தே அரேபியருடன் வாணிபம் செய்து வருவதால், இன்று பெருமளவு அரபி மொழி பேசுகின்றனர். ஆனால், அவர்களுக்கென்றொரு தனியான மொழி உள்ளது. ஒரு காலத்தில் அதற்கு தனியான எழுத்து வடிவமும் இருந்தது. (பார்க்க: Berber languages, http://en.wikipedia.org/wiki/Berber_languages)

ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர் கால் பதிப்பதற்கு முன்னர், அதாவது 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, சஹாரா பாலைவனத்திற்கு ஊடான சர்வதேச வர்த்தகம், துவாரக் வியாபாரிகளின் கைகளில் இருந்தது. அவர்கள் ஒட்டகங்களில் பொதிகளை ஏற்றிக் கொண்டு, சஹாரா பாலைவனத்திற்கு ஊடாக பயணம் செய்து வந்தனர். அதனால் சஹாரா பாலைவனத்தில் எல்லா இடங்களும் அவர்களுக்கு பரிச்சயமானவை. அந்தக் காலங்களில், தங்கம், யானைத் தந்தம், அடிமைகள் போன்ற சர்வதேச சந்தைக்கு பிரதானமான பண்டங்களை, ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு விநியோகம் செய்து வந்தனர். சஹாரா பிரதேசத்தை காலனிப் படுத்திய பிரான்ஸ், இன்றைய தேசங்களின் எல்லைகளை பிரித்தது. அதனால், துவாரக் இன மக்கள், அல்ஜீரியா, மொரிட்டானியா, மொரோக்கோ, மாலி ஆகிய நவீன தேசிய எல்லைகளினால் துண்டாடப் பட்டனர். "துவாரக் இன மக்கள் பல நாடுகளில் வாழ்ந்த போதிலும், அவர்களுக்கென்றொரு நாடில்லை," என்ற தேசியவாத இயக்கமும் அப்போது தான் ஆரம்பமாகியது. குறிப்பாக, வடக்கு மாலியில் வாழ்ந்த துவாரக் இன மக்கள், மாலி அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி ஒன்றை ஆரம்பித்தனர்.

இருபது வருடங்களுக்கு முன்னர், தொன்னூறுகளில் வெடித்த துவாரக் தேசிய எழுச்சி கொடூரமாக அடக்கப் பட்டது. அந்தப் பிரதேசத்தில் வாழும், வேற்றின மக்களின் உதவியோடு, மாலியின் தேசிய இராணுவம் ஒரு இனவழிப்பு போரை நடத்தியது. அப்போது நடந்த இனப்படுகொலைகளை, ஐ.நா., அல்லது சர்வதேச சமூகம் நீண்ட காலமாக புறக்கணித்து வந்தது. போரில் தோற்கடிக்கப்பட்ட துவாரக் விடுதலைப் போராளிகள், லிபியாவில் தஞ்சம் கோரினார்கள். லிபியாவில் அன்றிருந்த கடாபி அரசு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு நில்லாது, லிபிய இராணுவத்திலும் சேர்த்துக் கொண்டது. கடாபியினால் வளர்க்கப்பட்ட துவாரக் போராளிகள், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கொள்கைகளை கற்றுக்  கொண்டனர். லிபியாவில் கடாபியின் வீழ்ச்சியின் பின்னர், புதிய உத்வேகத்துடன் தமது தாயகம் திரும்பினார்கள். போகும் பொழுது, லிபிய இராணுவ முகாம்களில் இருந்த நவீன ஆயுதங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். 

தமது தாயகத்தை வந்தடைந்த துவாரக் போராளிகள், அங்கிருந்த மாலி தேசிய இராணுவத்துடன் போரிட்டு வென்று, பல பிரதேசங்களை கைப்பற்றினார்கள். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், துவாரக் இன மக்களுக்கான "அசாவத்" என்ற தனி நாட்டை பிரகடனம் செய்தனர். ஆனால், உலக வரைபடத்தில் புதிதாக உதயமான நாட்டை சேர்த்துக் கொள்ள ஐ.நா. சபை முன்வரவில்லை. மாறாக, பிரிவினைவாதிகளை  ஒடுக்க விரும்பிய மாலி அரசுக்கு சார்பாக நடந்து கொண்டது. வல்லரசு நாடுகள் அந்த தனி நாட்டை அழிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது. உலகில் எந்த நாட்டிலும், குறிப்பிட்ட இனத்திற்கான தாயகம் அமைக்க விரும்பும் இயக்கம், தனது சொந்த பலத்தில் உரிமை கோரும் பிரதேசங்களை விடுதலை செய்தால், அவர்களுக்கும் இது தான் கதி, என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டது. ஏன் என்று கேட்டால், அது தான் நவ-காலனித்துவம். அதாவது ஐரோப்பிய காலனிய காலகட்டம், வரலாற்றில் இன்னும் முற்றுப் பெறவில்லை. அது வேறு வடிவில் தொடர்கின்றது. 

இது வரையும், முன் கதைச் சுருக்கத்தை பார்த்தோம். இனி, இன்றைய பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைக்கான காரணங்களை விரிவாக ஆராய்வோம்:

1. பிரான்ஸ் இதனை அல்கைதாவுக்கு எதிரான போர் என்று அறிவித்துள்ளது. உண்மையில் அங்கே அல்கைதா இருக்கின்றதா? 

அமெரிக்காவில் தாயாரிக்கப் பட்ட, பின்லாடன் நடித்த அல்கைதா என்ற சினிமாவுக்கும், மாலியில் இருப்பதாக கருதப்படும் அல்கைதாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. துவாரக் மக்கள் தீவிர இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். அங்கு ஏற்கனவே சவூதி அரேபியாவின் பணத்தில் வளர்ந்த மத அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் ஆப்கானிய தாலிபான்களைப் போன்று நடந்து கொள்கின்றனர். சவூதி அரேபியாவில் இருப்பதைப் போல, கடும்போக்கு ஷரியா  சட்டத்தை அமுல் படுத்தி இருக்கின்றனர். திருட்டுக் குற்றத்திற்கு கை வெட்டுதல், கள்ள உறவு வைத்த குற்றத்திற்கு கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளை நிறைவேற்றுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில், மாலி நாட்டு இசை உலகப்புகழ் பெற்றது. அப்படிப்பட்ட நாட்டில், இசை கேட்பதை தடை செய்துள்ளனர். மேலும் இஸ்லாமிய மத புனிதர்களுக்கு கட்டிய சமாதிகளை கூட விடாமல், புராதன சின்னங்களை உடைத்து நொறுக்கி உள்ளனர்.  

ஆரம்பத்தில் MNLA (பிரெஞ்சு மொழியில்:Mouvement National pour la Libération de l'Azawadhttp://en.wikipedia.org/wiki/National_Movement_for_the_Liberation_of_Azawad) என்ற மதச் சார்பற்ற இயக்கம் தான் தனி நாடு கேட்டு ஆயுதமேந்தி போராடியது. அது ஒரு தேசியவாத இயக்கமாக தொடங்கினாலும், காலப்போக்கில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. இதனால் மதச்சார்பற்ற தேசியவாதிகள் ஓரங்கட்டப் பட்டனர். அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற "அன்சார் தினே", இஸ்லாமியவாதத்தை இயக்க சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. முன்னொரு காலத்தில், அந்தப் பிரதேசத்தில் "இஸ்லாமிய மஹ்ரப் கோரும் அல்கைதா"  (AQMI) என்ற ஒன்று இயங்கியது. அவர்களில் சிலர், முன்பு ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக போராடிய அரேபியர்கள் என்பது உண்மை தான். இன்று அந்த இயக்கம் சிதைந்து, அன்சார் தினே யுடன் சேர்ந்து விட்டார்கள். இவற்றை விட இன்னும் இரண்டு சிறிய குழுக்கள் இயங்குகின்றன. 

2. வடக்கு மாலியில், அசாவத் என்ற தனி நாடு கிடைத்தவுடன் திருப்திப் படாது, மாலியின் பிற பகுதிகளையும் பிடிக்க வேண்டிய தேவை என்ன? 

வடக்கத்திய கிளர்ச்சியாளருக்கு எதிரான போரில், மாலி இராணுவம் வெல்ல முடியவில்லை. அதன் விளைவாக, தலைநகர் பமாக்கோ வில் ஒரு இராணுவ சதிப்புரட்சி நடந்தது. மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் இயலாமையை காரணம் காட்டி, இராணுவ அதிகாரிகள் அரசைப் பொறுப்பேற்றனர். இராணுவ ஆட்சியாளர்களின் தலைவர், அமெரிக்காவில் இராணுவ பயிற்சி பெற்ற, அமெரிக்க நலன்களுக்கு விசுவாசமான ஒருவர். இராணுவ ஆட்சி ஏற்பட்ட பின்னரும், போரில் வெற்றி கிட்டவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எதிர்பார்த்ததற்கு மாறாக, நிலைமை தலைகீழாக மாறியது. நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை உருவாகியதால், இராணுவத்திற்குள் ஒழுக்கம் சீர்குலைந்தது. அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட கிளர்ச்சிப் படையினர், ஆச்சரியப் படுமளவுக்கு விரைவாக பல இடங்களை கைப்பற்றினார்கள். சில நாட்களுக்குள், ஒவ்வொரு நகரமாக கிளர்ச்சிப் படையினரிடம் வீழ்ந்தன. 

மாலி நாட்டின் சனத்தொகையில் 90% மானோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். ஆகவே, இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், "அசாவத்" என்ற தனி நாட்டின் எல்லைகளை தாண்டி, பிற பிரதேசங்களையும் கைப்பற்ற போரிட்டு வருகின்றன. இதனால், மாலி நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் செல்வாக்குட்பட்ட பிரதேசமாகியது. குறிப்பாக வடக்குக்கும், தெற்குக்கும் நடுவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொன்னா என்ற நகரத்தை கைப்பற்றியதுடன், பிரான்ஸ் களத்தில் இறங்கியது. முன்பு அமெரிக்கா அறிவித்ததைப் போல, "அல்கைதாவுக்கு எதிரான அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்தது. பிரான்சுக்கு ஆதரவாக பெயர் குறிப்பிட விரும்பாத பிற ஐரோப்பிய நாடுகளும் தமது போர் விமானங்களை அனுப்பி வைத்தன. அமெரிக்கா ஆதரவு தெரிவித்த போதிலும், முழுப் பொறுப்பையும் பிரான்சிடம் விட்டு விட்டது. 

இதிலே வேடிக்கை என்னவென்றால், ஏற்கனவே மாலியின் தேசிய இராணுவத்திற்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி வழங்கப் பட்டிருந்தது. அன்று அமெரிக்கா, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" ஒரு கூட்டாளி நாட்டை தயார் படுத்துவதாக கூறியது. இன்று நடப்பதை வைத்துப் பார்த்தால், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போர் படுதோல்வியை தழுவியுள்ளது. வடக்கத்திய போராளிகளின் கை ஓங்கிக் கொண்டு வருகையில், மாலியின் தேசிய இராணுவத்தை சேர்ந்த வீரர்கள் பலர், இராணுவத்தை விட்டோடி போராளிகளுடன்  சேர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் சிறப்பு இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் பலர், அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள். குறைந்தது 1600 வீரர்கள், இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.  அதனால், இன்று மேற்கத்திய நாடுகள், தாம் வளர்த்து விட்ட பிள்ளைகளுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவும் பிரான்சும், பெரும் எதிர்பார்ப்புகளுடன் வழங்கிய ஆயுதங்கள், பயிற்சி, இராணுவ தந்திரோபாயங்கள் எல்லாம், இன்று அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகின்றன. 

3. பிரான்சின் படையெடுப்புக்கு பின்னணியில், அதன் நவ-காலனிய அபிலாஷைகள் உள்ளனவா?

நவ காலனியம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாவிட்டால், பிரான்சின் முன்னாள் காலனி ஒன்றை உதாரணத்திற்கு காட்டலாம். 19 ம் நூற்றாண்டின் காலனிய மேலாதிக்கம், 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை பிரான்ஸ் என்றைக்கும் மறைத்ததில்லை. பிரான்ஸ் தனது முன்னாள் ஆப்பிரிக்க காலனி நாடொன்றில் தலையிடுவது, இதுவே முதல் தடவை அல்ல. எந்தவொரு உள்நாட்டுப் பிரச்சினையும் இல்லாமல், அமைதியாக இருக்கும் முன்னாள் காலனி நாடுகளில் கூட பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப் பட்டுள்ளன. எங்காவது ஒரு நாட்டில், பிரான்சின் நலன்களுக்கு எதிரான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், அதனை கவிழ்ப்பதற்கு பின் நிற்பதில்லை. 

வடக்கு மாலியில், அதாவது கிளர்ச்சியாளர் வசம் உள்ள அசாவத் என்ற தனி நாட்டில், பெருமளவு யுரேனியம் காணப் படுகின்றது. மேலும் இன்னமும் அகழப் படாத எண்ணை வளமும் இருக்கின்றது. குறிப்பாக யுரேனியப் படிமங்கள் பற்றிய தகவல், பிரான்சுக்கு மிகவும் முக்கியமானது. பிரான்ஸ் நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் 70% மாகிலும், அணுசக்தி மூலம் உற்பத்தியாகின்றது. அதற்கான மூலப்பொருளான யுரேனியம் மாலியில் கிடைக்கின்றது என்றால் சும்மா விடுவார்களா? மாலியில் மட்டுமே அல்கைதா போன்ற இஸ்லாமிய தீவிரவாதம் தலை தூக்கியுள்ளதாக இருப்பதாக பசப்புவது உலகை ஏமாற்றுவதற்கு மட்டுமே. அந்தக் காரணம் உண்மையானால், சிரியாவில் அல்கைதா போன்ற தீவிரவாத இயக்கங்களை பிரான்ஸ் ஆதரிப்பது, முரண்நகையாக தோன்றவில்லையா? அங்கே ஆசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், கொடூரமான மதவாத சட்டங்கள் அமுல்படுத்தப் படுவதை அறியவில்லையா? சிரிய கிளர்ச்சிக் குழுக்களில், பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் இருப்பதைப் பற்றி எல்லாம் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளனவே? 

மாலியில் பிரான்சின் இராணுவ நடவடிக்கை, இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது தெரியாது. இன்னும் இரண்டு வாரங்களில் முடிந்து விடும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா புகுந்த கதையாகிப் போவதற்கு வாய்ப்புண்டு. அங்கே பத்தாண்டுகள் கடந்த பின்னரும் தாலிபான்களை அழிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாது, அயல் நாடான பாகிஸ்தானிலும் புதிதாக ஒரு தாலிபான் முளைத்தது. அந்த நிலைமை மாலியிலும் ஏற்படலாம். துவாரக் இன மக்கள், வடக்கு மாலியில் மட்டுமல்லாது, நைஜர், அல்ஜீரியா போன்ற அயல் நாடுகளிலும் உள்ளனர். தமிழகத் தமிழர்கள் ஈழப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்ததைப் போல, அயல் நாடுகளில் வாழும் துவாரக் மக்களும், மாலியின் அசாவத் என்ற தனி நாட்டுக்கான போராட்டத்தை ஆதரிக்கின்றனர். 

மாலி மீதான பிரான்சின் ஆக்கிரமிப்பு போருக்கு பதிலடியாக, அல்ஜீரியாவில் எரிவாயு தொழிலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப் பட்டமை, நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்த்துகின்றன. மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போல என்றொரு பழமொழி உண்டு. வடக்கு மாலியை பிரெஞ்சுப் படைகள் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாலும், சஹாரப் பாலைவனத்திற்குள் எலிகளைப் போன்று பதுங்கிக் கொள்ளும் போராளிகளைப் பிடிப்பது கடினமாக இருக்கலாம். சஹாரா பாலைவன மண்ணின் மைந்தர்களுக்கு, அங்கிருந்து கெரில்லாப் போரை நடத்துவது இலகுவாக இருக்கலாம். இறுதியாக ஒரு தகவல், அசாவத் என்ற வடக்கு மாலியின் நிலப்பரப்பு, கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு சமமானது. 

மேலதிக தகவல்களுக்கு:
French Strikes in Mali Supplant Caution of U.S.
Mali: France’s Neo-Colonial War for Uranium?
France Sends Reinforcements to Confront Islamist Forces in Mali
Mali conflict: France has opened gates of hell, say rebels


**************************************

மாலி பற்றிய முன்னைய பதிவுகள்:
சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை


4 comments:

Iynka said...

யுரேனியப் படிமங்கள் மற்றும் எண்ணெய் வளத்தை அபகரிப்பதற்கான அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகளின் ஆக்கிரமிப்பு போர்...
சிறந்த ஆய்வு ...
நன்றிகள் பல..

வலையுகம் said...

அன்பு நண்பரே பகிர்வுக்கு நன்றி

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணங்கள் கொண்ட பார்வைகள் இருப்பது இயல்புதான் அந்த வகையில் உங்களின் கம்யூனிஸ பார்வையில் வந்திருக்கிறது இக்கட்டுரை வாழ்த்துக்கள்

Kalaiyarasan said...

நன்றி Iynka & ஹைதர் அலி.

Nooruddin said...

அன்பிற்குரிய கலையரசன்.

தகவல்கள் பல அடங்கிய கட்டுரை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

ஒரு மாலியின் கதை என்ற தலைப்பில் சமநிலைச் சமுதாயம் இதழில் வெளியாகியுள்ள கீழ்காணும் கட்டுரையை சற்றுப் பாருங்கள். கட்டுரை ஆர்வத்தைத் தூண்டும் என நம்புகிறேன்.

http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/320-story-of-mali.html