Monday, February 27, 2012

ஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்

இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, பொது நாணயமான யூரோவின் மதிப்பிறக்கம் என்பன, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. யூரோ நாணயத்தின் வீழ்ச்சியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சியாக கருதிக் கொள்கின்றனர். அது போன்ற செய்திகளும் வெளி வருகின்றன. இந்த நெருக்கடியான சூழலில், ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றுப் பின்னணியை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியமானது வெறும் பொருளாதாரக் கூட்டமைப்பு என்ற விம்பமே இது வரை காலமும் பரப்பப் பட்டு வந்துள்ளது. இதனால் எல்லோரும், ஐரோப்பாவின் நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியாக மட்டுமே கருதிக் கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு, ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதை ஒரு புறம் வைத்து விட்டு, ஐரோப்பியக் கூட்டமைப்பின் தோற்றம், அமைப்பு, இலக்கு என்பனவற்றை ஆராய்ந்த பின்னர் தான், அதன் பொருளாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கப் பட வேண்டும். ஏனெனில், பொருளாதாரம் என்றுமே தனியாக இயங்கவில்லை. அதற்கென்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருந்து வருகின்றது.

முதலாம் உலகப்போரின் முடிவில், ஜெர்மனியின் கடன்களை அறவிடுவதற்காக, BIS எனப்படும் தனியார் வர்த்தக வங்கி ஸ்தாபிக்கப் பட்டது. ஐரோப்பிய, அமெரிக்க வங்கியாளர்கள் அதில் தலைமை வகித்தனர். இன்றைய IMF வங்கியின் முன்னோடி என்று கருதப்படும், BIS சுவிட்சர்லாந்து, பாசல் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கியது. பிற்காலத்தில், ஹிட்லரின் நாஜி அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது. நாஜி ஜெர்மனியர்களும் வங்கியின் தலைமைப் பதவியில் நியமிக்கப் பட்டனர். Bank of England , பெருமளவு பங்குகளை வைத்திருந்தது. BIS தலைவராக ஒரு அமெரிக்கர் நியமிக்கப் பட்டார். நாஜி அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு, BIS நிதியுதவி வழங்கியது. அது மட்டுமல்லாது, தவறான வழியில் பெறப்பட்ட கறுப்புப் பணத்தை சலவை செய்யப் பயன்பட்டது. நாஜிகள் கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த தங்கக் கட்டிகள் எல்லாம், BIS சிடம் ஒப்படைக்கப் பட்டன.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஹிட்லரின் நாசிஸ அரசு மட்டுமே தோற்கடிக்கப் பட்டது. ஜெர்மனியின் பொருளாதார பலத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. வெகு விரைவிலேயே, மேற்கு ஜெர்மனியின் தொழிற்துறை இழந்த பெருமையை மீளப் பெற்றுக் கொண்டது. ஐரோப்பாக் கண்டத்திலேயே மிகப் பெரும் பொருளாதாரப் பலசாலியாக மேற்கு ஜெர்மனி (தொண்ணூறுகளுக்கு பிறகு, ஐக்கிய ஜெர்மனி) திகழ்ந்தது. உண்மையில், ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவும் உதவியாகவிருந்துள்ளது. மார்ஷல் திட்டம் என்ற பெயரில் பெருமளவு பணம் பாய்ந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்றது போல, போருக்கு காரணமான ஜெர்மனியை தண்டித்து இருக்கலாம். அதே நேரம், தனக்குப் போட்டியாக, ஐரோப்பிய பொருளாதார வல்லரசு உருவாவதை அமெரிக்காவும் விரும்பப் போவதில்லை. இருப்பினும், (மேற்கு) ஜெர்மனியின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, அன்றைய பனிப்போர் கால கட்டத்தில் இன்றியமையாததாக இருந்தது.

போருக்குப் பின்னர் ஞானம் வந்தது போன்று, முந்திய ஐரோப்பிய வல்லரசுகள் நடந்து கொண்டன. ஜென்மப் பகைவர்களாக காணப்பட்ட, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டன. 1945 வரையில், ஐரோப்பியர்கள் தமக்குள் சண்டையிட்ட காலம் மாறியது. அதற்குப் பதிலாக, முன்னாள் காலனிய நாடுகளில் இனங்களுக்கு இடையிலான யுத்தங்களை தூண்டி விட்டார்கள். குறிப்பாக, ஜெர்மனி, பிரான்சுக்கு இடையிலான பகைமை உணர்வு குறிப்பிடத் தக்க உச்சத்தில் இருந்தது. இரண்டு நாடுகளும் நூறாண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டன. ஒரு காலத்தில் ஜெர்மனியின் அல்சாஸ் மாநிலத்தை பிரான்ஸ் கைப்பற்றியது. ஹிட்லரின் அரசு, மீண்டும் அல்சாசை கைப்பற்றி ஜெர்மனியுடன் இணைத்தது. போரின் முடிவில் அது திரும்பவும், பிரான்சுக்கு சொந்தமானது. நாஜிப் படைகள், பிரான்சை அடிபணிய வைத்தன. அதற்குப் பதிலடியாக, நேச நாடுகளின் அணியுடன் சேர்ந்த பிரெஞ்சுப் படைகள், ஜெர்மனியில் பேரழிவை ஏற்படுத்தின. சாதாரண ஜெர்மானியர்களையும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைத்தன. இத்தனை வன்மம் கொண்ட எதிரிகளான, ஜெர்மனியும், பிரான்சும் ஒன்று சேர்ந்து செயற்படுவது அதிசயமல்லவா? ஐரோப்பிய ஒன்றியம் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை பிரான்சும், ஜெர்மனியும் உணர்ந்து கொண்டு செயற்படுகின்றன. அதனால் தான், தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல், "பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக, ஐரோப்பிய ஒன்றியத்தை இன்னும் வலுப் படுத்த வேண்டும்." எனத் தெரிவித்தார். உலக சந்தையை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் பொருளாதார பலம், ஐரோப்பிய வல்லரசுகளின் கண்களில் முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. வல்லரசுகளுக்கு இடையிலான பொருளாதார ஆதிக்கத்திற்கான போட்டியே, உலகப் போர்களுக்கு காரணமாக அமைந்தது. ஒரு காலத்தில், தனித் தனி நாடுகளாக போட்டியிட்ட ஐரோப்பிய நாடுகள், இன்று ஒரு கூட்டமைப்பாக செயற்படுகின்றன. தம்மை விட வளர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்துடன் போட்டியிட ஐரோப்பிய ஒன்றியம் என்ற கட்டமைப்பு உதவும்.

ஒரு காலத்தில், நாஜி ஜெர்மனிக்கு உறுதுணையாக இருந்த BIS என்ற வங்கியைப் போன்று, இன்றைய ஐரோப்பிய மத்திய வங்கியின் செயற்பாடு அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, பொதுவான ஐரோப்பிய சட்டம், உறுப்பு நாடுகளின் சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது, உறுப்பு நாடு ஒன்றைச் சேர்ந்த சட்டப் பிரிவு, ஐரோப்பிய சட்டத்துடன் முரண்பட முடியாது. அத்தகைய தருணத்தில், ஐரோப்பிய சட்டமே செல்லுபடியாகும். இது முன்னர் சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சட்டவாக்கத்தை நினைவு படுத்துகின்றது. அன்று, ஒவ்வொரு சோவியத் குடியரசும் தனக்கென தனியான சட்டங்களை கொண்டிருந்தன. ஆனால், பொதுவான சோவியத் சட்டம் அனைத்திற்கும் மேற்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமும், எதிர்காலத்தில் அமெரிக்க மாநிலங்கள் போன்று ஐரோப்பிய நாடுகளை மாற்றுவது தான். ஆனால், ஹிட்லரின் காலத்தில் இராணுவ பலத்தை பிரயோகித்து, அடாவடித் தனமாக நாடுகளை பிடித்து இணைத்தது போல நடந்து கொள்ள விரும்பவில்லை. அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை வரலாறு அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமானது பல எதிர்பார்ப்புகளுடனே உருவானது. ஆரம்பத்தில், பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த நாடுகள் மட்டுமே இணைத்துக் கொள்ளப் பட்டன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நாடுகளுக்கு தாராளமான நிதி உதவி வழங்கப் பட்டது. குறிப்பாக அபிவிருத்தி இன்றி வறுமையில் வாடிய, கிறீஸ், மற்றும் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தெற்குப் பகுதிகளில் இடம்பெற்ற மாற்றம் குறிப்பிடத் தக்கது. அங்கெல்லாம் உல்லாசப் பிரயாணத்துறை வளர்ச்சி அடைந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அந்தப் பகுதிகள் பணக்கார ஐரோப்பிய நாடுகளையே தங்கியிருந்தன. அதே போன்று, அயர்லாந்து பொருளாதாரமும் வரிச்சலுகை காரணமாக பிற நாட்டு நிறுவனங்களை கவர்ந்திழுத்தது. இவை எல்லாம் போலியான பொருளாதார வளர்ச்சி என்பதை அன்று யாரும் உணரவில்லை. பணக்கார ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி தோன்றினால், தாமே முதலில் பாதிக்க்கப் படுவோம் என்பதையும் அறிந்திருக்கவில்லை. இன்னொரு பக்கத்தில், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட "பொருளாதார அதிசயத்தை" கண்டு வியந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர போட்டி போட்டன. ஆனால், ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுக் கொண்ட பிற்பாடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கு ஐரோப்பாவின் காலனியாக மாறி விட்டன. குறிப்பாக, ஜேர்மனிய பன்னாட்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளரின் உழைப்பை சுரண்டி அதிக இலாபம் அடைந்தன.

சமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, பணக்கார ஐரோப்பிய நாடுகளிற்கு உள்ளேயும் உணரப் படுகின்றது. குறிப்பாக தீவிர வலதுசாரிக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், பொது நாணயமான யூரோவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன. தேசியவாதம் பேசும் இத்தகைய கட்சிகளின் நோக்கம் வேறு. உண்மையில், அவை ஜனநாயக ஐரோப்பிய ஒன்றியத்தை மட்டுமே எதிர்க்கின்றன. பாஸிச ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கவில்லை. நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட கிரேக்க நாட்டில், இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில் இருந்தே இவர்களின் நோக்கம் புலனாகும். வெளிப்படையாக காட்டிக் கொள்ளா விட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையின் குறிக்கோளும் அதுவாக உள்ளது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்காக, அவர்களது "இலட்சியத்தை" பலி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

1 comment:

aotspr said...

தகவல் நன்று.........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"