Monday, February 07, 2011

எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை!

"ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு என்ன வேலை? அடுப்படிக்கு போங்கள்!" துனிசியா எழுச்சியில் கலந்து கொண்ட பெண் பதிவர் Destin கு நேர்ந்த அனுபவம்.
(அவரது வலைப்பூ முகவரி: http://massir.blogtraffic.com)

துனிசியா ஆர்ப்பாட்டங்களில் அரச கைக்கூலிகளும் கலந்து கொண்டு அவ்வாறான கருத்துகளைப் பரப்பினார்கள். மேற்கத்திய நாகரீகத்தைக் கொண்ட துனிசிய மக்கள் அரபுலகில் மதச்சார்பின்மைக்கு பேர் போனவர்கள். கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் குடும்பத்திற்குள்ளேயே அடக்கமாக இருக்க வேண்டியிருந்தது. அப்படியான சமூகத்தில் இஸ்லாமியவாத சக்திகள் தலையெடுப்பது கவலை தரும் அம்சமாகும். சர்வாதிகாரி பென் அலி ஆட்சியை விட்டு ஓடும் காலத்தில் இது போன்ற வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டன. "பென் அலி இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை எதிர்த்து நின்று மக்களை பாதுகாத்தார். தற்போது அந்த பாதுகாப்பு அரண் இல்லாத நிலையில் இஸ்லாமியவாதிகள் மக்களை அடக்கி ஆளப் போகிறார்கள்." இது போன்ற பல கதைகளை கேட்பவர்கள் உண்மை என்று நம்ப வைக்கப்பட்டார்கள். அதே போன்ற வதந்திகள் எகிப்தில் பரப்பப்படுகின்றன. எகிப்தில் "முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி" பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருப்பதால், எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படும் என்று செய்திகள் வெளியாகின்றன.

முதலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறித்து சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். காலனித்துவ காலத்தில் மேற்குலகிற்கு எதிராக தோன்றிய அரசியல் இயக்கம் தான் "முஸ்லிம் சகோதரத்துவம்". இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த வட ஆப்பிரிக்காவை பிரிட்டனும், பிரான்சும் காலனியாக்கின. மு.ச.கட்சியானது முஸ்லிம்கள் இழந்த இஸ்லாமிய ராஜ்யத்திற்காக போராடுவதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. இது ஒரு வகை தேசியவாதம். மு.ச. கட்சியின் சித்தாந்தம் ஐரோப்பாவின் பாசிசக் கொள்கைகளுக்கு நெருக்கமானது. நாசரின் சோஷலிச ஜெனரல்கள் திடீர் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியமை, மு.ச.கட்சிக்கு நேரிட்ட மிகப்பெரும் பின்னடைவு. பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டு, தலைவரும் கொல்லப்பட்டதால், கட்சி பலவீனப்பட்டது. அன்றிலிருந்து கட்சி ஜனநாயக வழிமுறைகளின் கீழ் செயற்பட முடிவெடுத்தது. அதிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சிறிய குழு தீவிரவாதப் பாதையை தேர்ந்தெடுத்தது. பத்து வருடங்களுக்கு முன்னர், லுக்சொர் நகரில் சுற்றுலாப்பயணிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த தீவிரவாதக் குழுவின் வெளிப்பாடாகும்.

நாசரின் காலத்தில் இஸ்லாமியவாத சக்திகள் தலையெடுக்க முடியாமைக்கு சோஷலிசப் பொருளாதாரமும் ஒரு காரணம். நிறுவனங்கள் யாவும் தேசியமயப் படுத்தப்பட்டிருந்ததால், சுதந்திரமான முதலீட்டுக்கு இடமிருக்கவில்லை. நாசருக்கு அடுத்து ஆட்சியைப் பிடித்த சதாத் சோவியத் யூனியனுடனான உறவை முறித்துக் கொண்டு, அமெரிக்கா பக்கம் சாய்ந்தார். இஸ்ரேலுடன் நட்புறவு ஒப்பந்தம் போட்டார். இதனால் இராணுவத்திற்குள்ளேயே அதிருப்தி நிலவியது. கனிஷ்ட தரத்திலான இராணுவ அதிகாரிகள் பலர் முஸ்லிம் சகோதரத்துவ அனுதாபிகள். ஒரு இராணுவ அணிவகுப்பில் சதாத் கொலை செய்யப்பட, சிம்மாசனம் முபாரக் வசம் சென்றது. தொடர்ந்து முப்பது ஆண்டுகள் எகிப்தை ஆண்ட முபாரக் காலத்தில் நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் முனைப்புடன் செயற்படுத்தப்பட்டன. நாடு ஐ.எம்.எப். ஆலோசனைப்படி ஆளப்பட்டது. முபாரக் காலத்தில் எகிப்து முற்றுமுழுதான முதலாளித்துவ நாடாகியது.

முபாரக் கால பொருளாதார சீர்திருத்தங்கள் பல எகிப்தியர்களுக்கு உவப்பானதாக இருந்துள்ளது. முபாரக் காலத்தில், கீழ் மத்தியதர, அல்லது உழைக்கும் வர்க்க எகிப்தியர்கள் கணிசமான அளவில் வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்றனர். இதே காலகட்டத்தில் இலங்கையிலும் அது போன்ற சமூக மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வளைகுடா அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா, கனடா என்று எங்கெல்லாம் மூலதனம் வரவேற்கின்றதோ, அங்கெல்லாம் எகிப்தியர்கள் சென்று பணம் சேர்த்து ஊருக்கு அனுப்பினார்கள். புலம்பெயர்ந்த எகிப்தியர்கள் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். முதலில் வயிற்றுக்காக போராட்டம். அது பூர்த்தி செய்யப்பட்டு விட்டால், இனவுரிமைப் போராட்டம். சாமானியர்களின் பிழைப்புவாத அரசியலை, முஸ்லிம் சகோதரத்துவம் சரியாக பயன்படுத்திக் கொண்டது. புலம்பெயர்ந்த மக்களின் நிதியில், எகிப்தில் இஸ்லாமிய வங்கிகள், இஸ்லாமிய பாடசாலைகள், இஸ்லாமிய மருத்துவமனை எல்லாம் தோன்றின. முதலாளித்துவ பொருளாதாரத்தில் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம் சகோதரத்துவம் அத்தகைய முதலீடுகள் மூலம் ஆதரவை பெருக்கிக் கொண்டது.

சிறு வியாபாரத்தில் ஈடுபடுபவர் கூட ஒட்டுமொத்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவுவதால், முஸ்லிம் சகோதரத்துவத்தின் முதலாளித்துவ அவதாரம் அமெரிக்காவுக்கோ, அன்றில் முபாரக்கிற்கோ ஆட்சேபிக்க வேண்டிய ஒன்றாக தெரியவில்லை. அதே நேரம், அவர்களின் அரசியல் பிரவேசம் மட்டும் தடுக்கப்பட்டது. முபாரக் தனது அதிகாரத்தை எவருடனும் பங்குபோட விரும்பாமை ஒரு காரணம். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இயல்பான இஸ்ரேலிய எதிர்ப்புணர்வு அரசியல் இன்னொரு காரணம். சில வாரங்களுக்கு முன்னர், முபாரக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எழும் வரையில், மு.ச.கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் அரச படைகளால் அடக்கப் பட்டனர். இன்று வரை சுதந்திரமான பொதுத்தேர்தல் நடைபெறாததால், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எவ்வளவு பேர் வாக்களிப்பார்கள் என்று அனுமானிப்பது கடினம். குறைந்த பட்சம் இருபது வீத மக்கள் அந்தக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று கருதப்படுகின்றது. பிற எதிர்க்கட்சிகள் மக்களை திரட்டும் சக்தியற்று இருப்பதாலும், பலவீனப்பட்டிருப்பதாலும் முஸ்லிம் சகோதரத்துவம் பெரிய கட்சி போலத் தோன்றுகிறது.

முபாரக்கின் அரசு மொத்த அரபுலகிலும் கொடுமையான சர்வாதிகார ஆட்சி நடத்தியது. அத்தகைய கொடுங்கோல் ஆட்சியையே மக்கள் எதிர்க்கத் துணிந்து விட்டனர் எனில், முபாரக் எத்தனை தூரம் பலவீனமடைந்து விட்டார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் எகிப்தில் ஆட்சிமாற்றம் என்பது அமெரிக்காவுக்கு தலையிடி கொடுக்கும் விஷயம். எகிப்து இஸ்ரேலுடன் பொதுவான எல்லையைக் கொண்டுள்ள, இஸ்ரேலுடன் இரண்டு யுத்தங்களில் ஈடுபட்ட, அரபு மக்கட்தொகை அதிகமாக கொண்ட நாடாகும். அத்தகைய நாடு இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதால், அமெரிக்க அரசு எகிப்துக்கு தாராளமாக இராணுவ தளபாடங்களை வழங்கி வந்தது. எகிப்து, இஸ்ரேலுக்கு அடுத்ததாக அதிகளவு அமெரிக்க இராணுவ உதவி பெரும் நாடாகும். முதலில் கடனுதவி, பின்னர் அந்தக் கடனைக் கொண்டு அமெரிக்க ஆயுதங்களை வாங்க வேண்டும். இதனால் வறிய நாடான எகிப்து அமெரிக்காவின் பெரிய இராணுவ சந்தையாக இருந்து வந்துள்ளது.

எகிப்தின் கேந்திர முக்கியத்துவம் கருதி, அங்கு நடக்கும் மக்கள் பேரெழுச்சிக்கு மேற்குலகம் ஆதரவு வழங்காமல் இழுத்தடிக்கின்றன. எகிப்தில் புரட்சி ஏற்பட்டு, அங்கே ஒரு மேற்குலக விரோத அரசு வருவதற்கிடையில், காய் நகர்த்த விரைகின்றன. அதற்காக எந்தப் பிசாசுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளன. "எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படும். அங்கே (மத அடிப்படைவாத) முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் ஆட்சி வந்து விடும்." என்று மேற்குலக ஊடகங்கள் ஒரு பக்கம் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. மறு பக்கம் அவர்களின் அரசுகள் அதே "இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுடன்" பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இது ஒருவகையில் பின்லாடனை ஆட்சியில் அமர்த்த அமெரிக்கா உதவுவதைப் போன்றது. ஏனெனில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சிப் பிரமுகர் தான் பின்லாடனின் அரசியல் ஆலோசகர் சவாஹிரி.

இதையெல்லாம் கவனிப்பதற்கு தற்போது யாருக்கும் நேரமில்லை. மக்கள் போராட்டம் இன்னும் சில நாட்கள் தொடர்ந்தால், அது கம்யூனிசப் பேய், சோஷலிசப் பூதம் எல்லாவற்றையும் கூட்டிக் கொண்டு வந்து விடும். ஏனெனில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் மட்டுமே மாற்று உண்டு. அதை விட, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை ஆட்சியில் அமர்த்தினால், குறைந்த பட்சம் முதலாளித்துவத்தையாவது காப்பாற்றி விடலாம். துருக்கியில் உள்ளது போல, பாராளுமன்றத்தில் ஒரு இஸ்லாமியக் கட்சி அரசாங்கம் நடத்தினால் என்ன குறைந்து விடும்? அப்படி திருப்திப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வந்து விட்டார்கள்.

மக்கள் வீதிக்கு வந்து போராடிய ஆரம்ப நாட்களில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் போராட்டத்தை எதிர்க்கவுமில்லை, ஆதரவு தெரிவிக்கவுமில்லை. ஆனால் மக்கள் சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பின்னர் அவர்களே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள். முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் அவர்களது பங்களிப்பு அவசியமாகப் பட்டது. ஆனால் தொடக்கத்தில் இருந்து போராட்டத்தை நெறிப்படுத்திய இடதுசாரி அமைப்புகளைப் பற்றி வெளியுலகம் அறியவில்லை. இன்று வரை செய்தி ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன. பாரம்பரிய இடதுசாரிகளான கம்யூனிஸ்டுகள், ட்ராஸ்கிச புரட்சிகர சோஷலிஸ்டுகள், ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.

இவர்களை விட "ஏப்ரல் 6 இயக்கம்" அதிகளவு முக்கியத்துவம் பெறுகின்றது. இளைய தலைமுறை இடதுசாரி ஆர்வலர்களைக் கொண்ட அந்த அமைப்பு சுதந்திரமான தனிநபர்களைக் கொண்டது. அமைப்பிற்கு கட்சிக் கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் எகிப்தில் உணவுக் கலவரங்களும், தன்னெழுச்சியான தொழிலாளர் போராட்டங்களும் இடம்பெற்றன. ஏப்ரல் 6 அன்று,El-Mahalla El-Kubra என்ற நகரில் இடம்பெற்ற தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் அரசு இயந்திரத்தை ஆட்டம் காண வைத்தது. தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டால் புரட்சியும் சாத்தியம் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. இரு வருடங்களுக்கு முன்னர் அரசால் ஒடுக்கப்பட்டாலும், ஏப்ரல் 6 மூட்டிய புரட்சிக்கனல் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது. எங்கோ ஒரு மூலையில் தோன்றிய ஆலைத் தொழிலாளர் போராட்டம், நாடளாவிய மக்கள் எழுச்சிக்கு வித்திடும் என்று நேற்று வரை யாரும் நினைக்கவில்லை.

முக்கிய குறிப்பு: 2008 ஏப்ரல் 6 ம் தேதி, எகிப்தில் நடந்த தொழிலாளர் போராட்டம் குறித்து நான் ஏற்கனவே எழுதிய பதிவை இங்கே வாசிக்கலாம்.
எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?

4 comments:

வலையுகம் said...

நண்பர் கலையரசன்

///"ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு என்ன வேலை? அடுப்படிக்கு போங்கள்!" துனிசியா எழுச்சியில் கலந்து கொண்ட பெண் பதிவர் Destin கு நேர்ந்த அனுபவம்.
(அவரது வலைப்பூ முகவரி: http://massir.blogtraffic.com)///

ஏன் என்னை அடுப்படிக்கு போக சொல்லுகிறாய்?
அரபுலகில் நடந்த இஸ்லாமிய போர்களில் கூட பெண்கள் கலந்துக் கொண்டீருக்கிறார்கள் இன்னும் சொல்லப் போனால் முஹம்மது நபியவர்களின் மனைவிகள் கூட போரில் களமாடியிருக்கிறார்கள் போருக்கே பெண்களை அழைத்துச் சென்று முஹம்மது நபி வழி காட்டியிருக்க போராட்டத்தில் ஏன் கலந்துக் கொள்கிறாய் என்று கேட்க நீ யார் என்று அந்த பெண் கேள்வி கேட்டார இல்லையா என்று எனக்கு தெரியவில்லை முடிந்தால் அவருடைய ப்ளாக்கில் நீங்கள் இந்த கேள்வ்பியை வையுங்கள் ஏனேன்றால் எனக்கு ஆங்கிலம் தெரியாது

Redmeera said...

தோழர் மிக சரியான மாக்சிய பார்வை தோழர்.நன்றி

Kalaiyarasan said...

ஹைதர் அலி, அந்தப் பென் பதிவர் உரிமைப் போராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வருகிறார். குறிப்பிட்ட வாசகம் இஸ்லாமிய- அரசியல்வாதிகளிடம் இருந்து எழவில்லை என்று தான் அவரும் நம்புகிறார். பென் அலி அனுப்பிய உளவாளிகள் ஆர்ப்பாட்டத்தினுள் ஊடுருவியதைத் தான் அவ்வாறு குறிப்பிட்டார். மக்களை இது போன்ற அச்ச நிலையில் வைத்திருந்து ஆட்சி நடத்தவே சர்வாதிகாரிகள் விரும்புவார்கள் என்பதையும் தனது வலைப்பூவில் எழுதியுள்ளார்.

Unknown said...

//அது கம்யூனிசப் பேய், சோஷலிசப் பூதம் எல்லாவற்றையும் கூட்டிக் கொண்டு வந்து விடும். ஏனெனில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் மட்டுமே மாற்று உண்டு.//
I am tottally disagree with you. If comunist system had soulution to problem of econmy look at Russia, founders them self failed in it.