Wednesday, February 02, 2011

எகிப்தின் எதிர்காலம் என்ன?

சமீப காலமாக, உலக ஊடகங்களின் கவனம் முழுவதும், கெய்ரோ மாநகரின் தாஹீர் சதுக்கத்தின் மீதே பதிந்துள்ளன. எகிப்தின் சர்வாதிகாரி முபாரக் வெளியேற வேண்டுமெனக் கோரும் ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் நாட்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சம்பவங்கள் நடைபெறுகின்றன. அரசை விமர்சித்தாலே சிறையில் போட்டு சித்திரவதை செய்யும் நாட்டில், சாமானியர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். சாலைகளை அலங்கரித்த முபாரக்கின் உருவப்படங்களை கிழித்து வீசுகின்றனர். பாதுகாப்புப் படைகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு இராணுவமே பாதுகாப்புக் கொடுக்கின்றது. முப்பது வருடங்களாக முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளித்த அமெரிக்கா, தற்போது முதுகில் குத்துகின்றது. ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு ஆதரவை தெரிக்கின்றது. முன்னாள் ஐ.நா. அதிகாரி எல் பரடையை அடுத்த ஜனாதிபதியாக்க பேச்சுவார்த்தை நடத்துகிறது. மிகக் குறுகிய காலத்திற்குள் அதிசயப்படத்தக்க மாற்றங்கள் நடக்கின்றன. எகிப்து மட்டுமல்ல, உலகமே மாறிக் கொண்டிருக்கும் அறிகுறிகள் இவை.


அரபுலகில் அதி கூடிய மக்கட்தொகையைக் கொண்ட எகிப்தில் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு குறைவில்லை. நீளமான நைல்நதியின் செழிப்பான மண்வளம் கொண்ட விவசாய நாடான எகிப்து, ஒருகாலத்தில் முழு ரோம சாம்ராஜ்யத்திற்கும் தானிய ஏற்றுமதி செய்தது. கிளியோபாட்ரா ஆண்ட காலத்திலும் எகிப்திய மக்கள் உணவுக்காக கலகம் செய்துள்ளனர். அப்போது கிளியோபாட்ரா தானியக் களஞ்சியத்தை திறந்து மக்களுக்கு உணவளித்தார். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்னர், எகிப்திய மக்கள் உணவுக்கலவரத்தில் ஈடுபடுகின்றனர். அன்றைய கிளியோபாட்ராவின் தாராள மனம், இன்றைய முபாரக்கிடம் இல்லை. ஒரு வல்லரசாக வரவேண்டிய எகிப்தை ஒட்டச் சுரண்டிய முபாரக்கும், ஆளும் கும்பலும், சேர்த்த சொத்துகளை பாதுகாப்பதில் குறியாக உள்ளனர்.

எகிப்தில் மக்கள் எழுச்சி திடீரென தோன்றி விடவில்லை. கடந்த சில வருடங்களாகவே உணவுப்பொருள் விலையேற்றம், அரச மானியக் குறைப்பு காரணமாக கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் தார்மீக கோபத்தை திசை திருப்பி விடுவதற்காக வகுப்புவாதக் கலவரங்களை அரசு தூண்டி விட்டது. எகிப்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் "இனந்தெரியாதோரின்" வெடி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காயின. இதைத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கலவரத்தில் இறங்கினர். அரசு தாக்குதல்களுக்கு "அல்கைதா" காரணம் எனக் கண்டுபிடித்து சிலரைக் கைது செய்தது. அரபுலகை குலுக்கிய துனிசியா புரட்சி மட்டும் இடம்பெற்றிரா விட்டால், எகிப்தில் மதக்கலவரங்கள் தொடர்ந்திருக்கும். மதவாதிகளும், இனவாதிகளும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரித்து வைத்திருக்கவே விரும்புவர். இறுதியில் பொருளாதாரப் பிரச்சினை அவர்களை ஒன்றிணைத்து விடும். எகிப்தின் மக்கள் எழுச்சியில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தோளோடு தோள் சேர்ந்து புரட்சியை நோக்கி வெற்றிநடை போடுகின்றனர்.

எகிப்தின் சினாய் பாலைவனப் பகுதியில் வாழும் பெதூயின் மக்கள், இன்னொரு ஒடுக்கப்பட்ட இனமாகும். உண்மையில் அரபுக்களின் முன்னோரான பெதூயின்கள் இப்போதும் நாடோடி வாழ்க்கை வாழ்வதால், கீழானவர்களாக கருதப்படுகின்றனர். சுயெஸ் கால்வாய்க்கும் இஸ்ரேலுக்கும் நடுவில் அமைந்திருப்பதால் சினாயின் கேந்திர முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சினாய் பாலைவனம் வெறும் மணல்மேடுகளை மட்டும் கொண்டதல்ல. கரடுமுரடான மலைக்குன்றுகளும் வாழ்வதற்கு ஏற்ற இடங்களல்ல. அரசும் பாராமுகமாக இருப்பதால், பெதூயின் மக்கள் வாழ்வாதாரம் தேடி கடத்தல் தொழிலில் ஈடுபட்டனர். சினாய்க்கு அருகில் தான் பாலஸ்தீன காசா பகுதி இருக்கிறது. இஸ்ரேலினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காசாவுக்கு பொருட்களை கடத்தி சென்று பணக்காரர் ஆனவர்கள் பலர். இஸ்ரேலின் நிர்ப்பந்தத்தால் காசா எல்லையை எகிப்திய படைகள் மூடி விட்டன. இருப்பினும் சுரங்கப்பாதை அமைத்து கடத்துகிறார்கள்.

IPS செய்தியாளர் முஹமட் ஒமார் வழங்கிய தகவல்களைக் கொண்டு பார்க்கும் பொழுது, புரட்சி எந்தளவு தூரம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. சினாய் பகுதி நகரங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெதூயின் இளைஞர்கள் போலிஸ் நிலையங்களை ஆக்கிரமித்துள்ளனர். காவல்துறையில் கடமையாற்றியவர்கள் சீருடை களைந்து ஆர்ப்பாட்டக்காரருடன் சேர்ந்து கொள்கின்றனர். பெதூயின் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. அந்த ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்பது யாருக்கும் தெரியாது. மலைப்பாறைகளை கொண்ட பாலைவனப் பிரதேசம் என்பதால், அரசு அங்கே சிறைச்சாலைகளை கட்டியிருந்தது. புரட்சியாளர்கள் சிறைகளை உடைத்து கைதிகளை விடுதலை செய்துள்ளனர். போலிஸ், சிறைக்காவலர்கள் சிறையுடைப்பை தடுக்கவில்லை. சிலநேரங்களில் அவர்களாகவே கதவுகளை திறந்து விட்டுள்ளனர். கடத்தல் குற்றங்களுக்காக சிறையில் இருந்த காசா பாலஸ்தீனர்கள் பலர் எந்தப் பிரச்சினையுமின்றி வீடு திரும்பியுள்ளனர். காசாவுடனான எல்லையும் திறந்து கிடக்கின்றது. எகிப்திய பாதுகாப்புப் படைகள் பின்வாங்கி விட்டனர். ஹமாஸ் தற்போது எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துள்ளது.


எகிப்தில் புரட்சியை வழிநடத்தும் சக்தியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின், சகோதர அமைப்பு தான் ஹமாஸ். தற்போதைய குழப்பகரமான சூழலில் இரண்டும் தம்மை பலப்படுத்தி வருகின்றன. எகிப்தில் விரைவில் இஸ்லாமிய புரட்சி ஏற்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கிட்ட நெருங்க முடியாத நிலைக்கு கொண்டு வந்தது. எகிப்தும் அந்தப் பாதையில் செல்கின்றது. எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி என்பது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கெட்ட சகுனமாகவே அமையும். முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கே அதிகளவு எகிப்தியர்கள் ஆதரவளிப்பதால், சுதந்திரத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அந்தக் கட்சியே வெல்லும். இதனால் ஆட்சி நடத்த முடியாமல் பலவீனப்பட்டுப் போயுள்ள முபாரக்கை கைவிடும் அமெரிக்கா வேறொரு தலையை தேடுகின்றது. இன்னொரு மேற்குலக சார்பு ஜனாதிபதி, அல்லது கூட்டரசாங்கம் என்பனவே அமெரிக்காவின் தெரிவாக உள்ளது. எகிப்தை அவ்வளவு இலகுவாக புறக்கணிக்க முடியாது. இஸ்ரேலுக்கு அடுத்ததாக எகிப்து அதிகளவு அமெரிக்க நிதி, இராணுவ உதவியைப் பெறுகின்றது. இதிலிருந்தே எகிப்து எந்தளவுக்கு அமெரிக்காவுக்கு முக்கியமானது என்பது தெளிவாகும்.

எகிப்தில் ஏற்படப்போகும் புரட்சி, பிற அரபு நாடுகளிலும் எதிரொலிக்கும். இப்போதே ஜோர்டான், ஏமன் போன்ற நாடுகளில் தன்னெழுச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஏமனில் சர்வாதிகாரி சலேயை அப்புறப்படுத்துவதற்கான போராட்டம். ஜோர்டானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம். (ஜோர்டானில் ஏற்கனவே ஜனநாயகப் பாராளுமன்றம் இயங்குகின்றது.) சவூதி அரேபியாவும் தளம்பல் நிலையில் உள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் மாற்றங்கள், அங்கே அமெரிக்காவின் மேலாதிக்கம் தளர்வதைக் காட்டுகின்றது. குறிப்பாக இஸ்ரேலுடன் சமாதானமாக விட்டுக் கொடுத்து வாழும் ஜோர்டான், எகிப்து போன்ற அயல் நாடுகளில், இஸ்ரேலிய எதிரிகள் ஆட்சிக்கு வரும் சாத்தியம் உண்டு. இதனால் இஸ்ரேல் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலைக் கைவிட்டு விடும். சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாறி வருகின்றது. எதிர்கால வல்லரசான சீனாவுடனும், பொருளாதார வளர்ச்சி காணும் இந்தியா போன்ற நாடுகளுடனும் நட்பை அதிகரிக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. மத்திய கிழக்கின் எண்ணெய் இருப்பு குறைந்து செல்லும் வேளை, மத்திய ஆசியாவில் உற்பத்தி பெருகியுள்ளது. இதனால் இஸ்ரேலைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டிய பொருளாதார தேவையும் இல்லை.


Egypt Revolution 2011 Demonstrators Vs police Fighting

11 comments:

Redmeera said...

தோழர் கலையரசன்//

ஈரானின் பாணியிலேயே இஸ்லாம் புரட்சி நடக்குமா?//

ஜனநாயகத்தின் தன்மைகள் வளர்ந்த நிலையில் உள்ள எகிப்து மக்கள் படுபிற்போக்கான இஸ்லாம் புரட்சியை ஏற்றுக்கொள்வார்களா?

போராட்டம் மீண்டும் மதகுருமார்களிடம் இருந்துதான் தொடங்கவேண்டுமா?

Kalaiyarasan said...

இஸ்லாமியப் புரட்சி பற்றி தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவும் புரட்சி தான். ஆனால் சமூகம் இஸ்லாமிய அரசியல் சித்தாந்தப் படி கட்டமைக்கப்படும். பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருப்பதால் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.

வலையுகம் said...

//எகிப்தில் மக்கள் எழுச்சி திடீரென தோன்றி விடவில்லை.//

சரியான வார்த்தைகள் மக்களின் 30 வருட கோபம் குட்ட குட்ட குனிந்த மக்கள் நிமிர்ந்து விட்டார்கள்

நடுநிலையான பதிவு

Redmeera said...

இஸ்லாமியப் புரட்சி பற்றி தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். //

கலையரசன்//

காரல் மார்க்ஸ் என்ன பாட்டாளிகளின் புரட்சி மத அல்லது இன அடிப்படையில் வரும் என்றா சொல்லி வைத்து இருக்கிறார்?

இன்று எகிப்து புரட்சிக்கு பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு வருவது பொருளாதார பிரச்சனைகள் தான் மிக முக்கிய காரணம். ஆனால் இஸ்லாம் பொருளாதார பிரச்சனைகளுக்கு என்ன அரசியல் சித்தாந்தத்தை துணைக்கு வைத்து இருக்கிறது.இது சமுகத்தை பின்னுக்கு இழுக்கிற முயற்சியாக தெரியவில்லையா?ஒரு பாட்டாளிகளின் புரட்சி மதவாதிகளிடம் சிக்கி தவிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
முதலாளித்துவம் பயங்கரமானது தான். ஆனால் அதை விட கொடுமையானது மதவாதம் தானே.அது மக்களை அடிமைப்படுத்துகிற பழைய சமுகங்களின் மிச்சசொச்சங்கள் தானே.
ஒன்று ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறது என்பதற்காக இனம்,மதவாதங்களை ஆதரிப்பது சரியா?

Kalaiyarasan said...

எல்லா வகை மக்கள் எழுச்சியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேடுவது வரட்டுத்தனமான மார்க்ஸியம். அப்படிப் பார்த்தால், வலதுசாரிகளின் ஈழப்போராட்டத்தை இந்திய மார்க்சிஸ்டுகள் ஆதரிக்கவே முடியாது. பாட்டாளிகள் தம்மை ஒரு மதத்தை, அல்லது இனத்தை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்துவது வழக்கமானது. தமது அத்தியாவசிய தேவைகளுக்காக போராடினாலும், மதவாத, இனவாத தலைமைகளுக்கு பின்னால் நிற்பார்கள். இடதுசாரிகள் பலம்பெற்று மக்கள் மனதில் வர்க்க உணர்வை ஏற்படுத்தும் வரை அது தவிர்க்க முடியாது.
எனக்குத் தெறித்த வரையில், ஈரானில் புரட்சி நடத்த போது, கணிசமான இடதுசாரிக் கட்சிகளும் பங்கெடுத்தன. ஆனால் பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்கள் என்பதால், மதத் தலைவர்களின் பக்கம் சாய்ந்தார்கள். புரட்சியின் பின்னர் மதத் தலைவர்கள் பெரும்பான்மை ஈரானியரின் ஆதரவோடு தான் ஆட்சி அமைத்தார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் புரட்சியில் சேர்ந்து நின்ற இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். வரலாற்றில் முதன்முறையாக ஈரானில் தான் இஸ்லாமியப் புரட்சி நடந்தது. அது ஒரு வகை தேசியவாதம். புரட்சியின் பின்னர் பன்னாட்டுக் கம்பனிகள் தேசியமயமாக்கப் பட்டன. இதனால் உள்நாட்டு முதலாளிகளின் வர்க்கம் எழுந்தது. இன்றைய ஈரானியர்கள் மதமும், முதலாளித்துவமும் தமக்கு விடுதலையைத் தர மாட்டாது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்தது. தேசிய விடுதலைப் போராட்டம் நடந்த நாடுகளிலும் இது தான் நிலைமை. இங்கே கவனிக்கப்பட வேண்டியது, எடுத்தவுடனேயே மக்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

Unknown said...

வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்

http://meenakam.com/topsites

http://meenagam.org

Redmeera said...

எல்லா வகை மக்கள் எழுச்சியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேடுவது வரட்டுத்தனமான மார்க்ஸியம்.//

உலகில் நடந்த எல்லாப்போராட்டங்களும்,வர்க்க போராட்டங்கள் என்று காரல் மார்க்ஸ் தான் சொன்னார் தோழர்.

மேலும் எகிப்தில் முதலாளித்துவம் வளரவில்லையா தோழர்.

Kalaiyarasan said...

தோழர் Redmeera ,
எல்லாப் போராட்டங்களிலும் வர்க்கப் போராட்டம் மறைந்திருப்பது உண்மை தான். உதாரணத்திற்கு எமக்கு நன்கு பரிச்சயமான ஈழப்போராட்டம் கூட தமிழ் பாட்டாளி வர்க்க இளைஞர்களின் பங்களிப்பு இன்றி இத்தனை வருட காலம் தொடர்ந்திருக்காது. ஆனால் அதைச் சொன்னால் தமிழ் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். அறிவுக்கூர்மையுடைய மத்தியதர வர்க்கம் போராட்டத்தின் வழியை, திசையை தீர்மானிக்கின்றது. மத்தியதர வர்க்க நலன் பேணும் அரசியல் என்றாலும், பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் இலகுவாக கையாள முடிகின்றது. எகிப்திலும் மக்கள் உணவுக்காக தான் கிளர்ச்சி செய்கிறார்கள். அதற்கு தீர்வு ஆட்சியாளரை மாற்றுவது தான் என்று எகிப்தின் மத்தியதர வர்க்கம் வழிகாட்டுகிறது. எகிப்தில் ஒரு காலத்தில் சோஷலிசக் கருத்துகள் பிரபலமாக இருந்தன. காலனியாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாசரின் ஆட்சிக் காலம் அது. இருப்பினும் முப்பதாண்டு கால முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி, அமெரிக்க சார்பு முதலாளித்துவத்தை நிலைநிறுத்தியது. எகிப்தில் முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது தான். ஆனால் எகிப்தின் சமூக அமைப்பை இந்தியாவுடன் ஒப்பிடலாம். அதாவது நாட்டுப்புறங்களில் நிலப்பிரபுத்துவ கால பழக்கவழக்கங்கள் இன்னும் மறையவில்லை. இன்றைய எகிப்தில் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடைவும் ஒரு காரணம். அதனால் இன்றைய எகிப்தின் இளைய தலைமுறைக்கு முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு மாற்றாக இஸ்லாமிய பொருளாதாரம் தீர்வாகத் தெரிகின்றது. இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளை மேற்கு ஐரோப்பாவின் நலன்புரி அரசுகளோடு ஒப்பிடலாம். அதாவது முதலாளித்துவமும் இருக்கும், அதே நேரம் மக்களின் அடிப்படைத் தேவைகளும் கவனிக்கப்படும். உதாரணத்திற்கு ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய அமைப்புகள் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இஸ்லாமியப்புரட்சி எவ்வாறு நடைமுறைக்கு வருகின்றது என்பது வேறு விடயம். ஆனால் அதை முன்மொழிபவர்கள் மக்களை கவரும் திட்டங்களை எடுத்துக் கூறுகிறார்கள். இன்று எகிப்தில் அரசு அதிகாரம் குலைந்துள்ள நிலையில், "முஸ்லிம் சகோதரத்துவ கட்சி" உறுப்பினர்கள் குடியிருப்புகளை பாதுகாக்கின்றனர். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.

Anonymous said...

இந்த நூற்றாண்டின் புரட்சிகள் துடங்கி விட்டதையே இது உணர்த்துகிறது

Anonymous said...

muttal manithargal iraq ilyennanadanthu !saddamukku pin annadu sudukadaga maarivittathey moolakaranam U S A sariya

Unknown said...

உலக போலி வல்லரசு அமெரிக்காவை வீழ்த்த சாமானியர்கள் தயாராகி விட்டார்கள்.மக்கள் சக்தி மகத்தானது.ஊழல் அரசியல் வாதிகளுக்கு உலை வைக்கப்புறப்பட்டு விட்டனர் எகிப்திய மக்கள் வெற்றி பெறட்டும் அவர்களின் லட்சிய போராட்டம்.