Tuesday, April 14, 2009

காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்


(ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 2)

ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடத்தை ஒருமுறை பார்த்தீர்களானால், தேச எல்லைகள் பென்சிலால் கோடு கீறியது போல இருக்கும். உண்மையில் அப்படித்தான் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள்! 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தேசிய அரசுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. அப்போதெல்லாம் காலனிகள் வைத்துக் கொள்வது ஒரு கௌரவம். இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசை மீது வைத்து, தமக்கு தேவையான துண்டுகளை பென்சிலால் கீறி பெற்றுக் கொண்டார்கள். இந்த எல்லைக் கோடுகள் வகுக்கும் போது ஆப்பிரிக்க மக்களின் விருப்பம் புறக்கணிக்கப்பட்டது. அவர்களது தலைவிதியை, வடக்கே இருந்த ஐரோப்பிய கடவுளர் தீர்மானித்தார்கள். ஒரே மொழி பேசும் இனங்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளில் சிக்கிக் கொண்டார்கள்.

கண்டத்தின் மத்திய பகுதியில் இருந்த கொங்கோ பிரதேசத்திற்கு பலர் போட்டியிட்டார்கள். இறுதியில் சிறிய துண்டான கொங்கோ-பிராசவீல் பிரான்சிற்கும், பெரிய துண்டான கொங்கோ-கின்ஷாசா பெல்ஜியத்திற்கும் கிடைத்தது. பெல்ஜிய மன்னன் லெயோபோல்ட், கிட்டத்தட்ட ஐரோப்பிய கண்டத்திற்கு நிகரான கொங்கோவை தனது தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்டார். ஒரு சர்வதேச நிறுவனத்தை தொடங்கி நிர்வகித்து வந்தார். இருப்பினும் ஒப்பந்தத்தின் படி பிற ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களையும் கொங்கோவில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டி இருந்தது.

பெல்ஜிய நாட்டிலிருந்து சென்ற பெருந்தோட்ட பயிர்செய்கையாளர்கள், ரப்பர் தோட்டங்களை ஆரம்பித்து, அதில் கொங்கோ நாட்டு மக்களை அடிமை வேலை செய்யப்பணித்தனர். ஒவ்வொரு தொழிலாளியும் குறிப்பிட்ட அளவு ரப்பர் பால் எடுத்துக் கொடுக்க வேண்டும். அந்த அளவு குறைந்தால், சித்திரவதை செய்யப்பட்டனர், அல்லது அவர்களது குடும்பத்தினர் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டனர், அல்லது கைகள் வெட்டப்பட்டன. பெருந்தோட்ட நிறுவனங்களின் லாபவெறிக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெல்ஜிய மன்னனின் என்பது ஆண்டு கால காலனிய ஆதிக்க காலத்தில், கொல்லப்பட்ட மக்களின் தொகை பத்து மில்லியன்! அதாவது பெல்ஜிய நாட்டின் இன்றைய மொத்த சனத்தொகை!! "ஸ்டாலின், மாவோ இத்தனை கோடிப்பேரை கொலை செய்தார்கள், அதனால் அவர்கள் மனிதர்களல்ல, பூதகணங்கள்" என்று, இன்று வரை ஓதிக் கொண்டிருப்பவர்கள், பெல்ஜிய பூதம் லெயோபோல்ட்டின் படுகொலைகளை பற்றி வாய் திறப்பதில்லை.

இன்றைக்கும் சில படித்தவர்கள் கூட நினைப்பது போல கொங்கோ ஒரு பண்டைய வரலாற்றைக் கொண்டிராத தேசமல்ல. 15 ம் நூற்றாண்டிலேயே, இன்றைய அங்கோலாவின் பகுதிகளை சேர்த்துக் கொண்ட மாபெரும் கொங்கோ இராசதானி இருந்தது. அந்நிய படையெடுப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு பலமிக்க இராச்சியமாக இருந்தது. மாகாணங்கள் பிரிக்கப்பட்டு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அங்கே ஒரு விவசாய சமூகம் இருந்தது. இரும்பு போன்ற சில கனிம தாது பொருட்களை பயன்படுத்தும் அறிவைப் பெற்றிருந்தனர். தான்சான்யா வழியாக அரேபியருடன் வர்த்தக தொடர்புகளைப் பேணி வந்தனர். 16 ம் நூற்றாண்டில் உலகைக் கண்டுபிடிக்க கிளம்பிய போர்த்துகீசிய கடலோடிகளால் தான், ஐரோப்பிய காலனிய காலகட்டம் ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் கொங்கோ இராசதானிக்கு தரங்குறைந்த துப்பாக்கிகளையும், பல்வேறு மதுவகைகளையும் கொண்டு சென்று விற்று, அடிமைகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். இதற்கிடையே போர்த்துகீசியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி கொங்கோ மன்னன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, "ஜோவோ" (ஆங்கிலத்தில்: ஜோன்) என்ற நாமத்தை சூட்டிக் கொண்டான். தனது குடிமக்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றினான். முதல் முறையாக ஒரு கறுப்பின பிஷப் வத்திக்கானிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நான் முன்பு கூறியது போல ஆப்பிரிக்காவில் அடிமைகளை பிடித்து விற்பது சாதாரண விடயமாக இருந்த போதும், காலனியாதிக்கவாதிகளுக்கு லட்சக்கணக்கில் தேவைப்பட்டதும், அதற்காக நடந்த மனிதத்தன்மையற்ற வேட்டையும், ஆப்பிரிக்கா அறியாத ஒன்று. ஐரோப்பிய முதலாளிகளின் அமெரிக்க பெருந்தோட்டத்தில் வேலை செய்ய பல்லாயிரக்கணக்கான அடிமைகள் தேவைப்பட்டனர். சந்தையில் அந்த சரக்கிற்கு கிராக்கி அதிகமாகியதும், போர்த்துக்கேயர்கள் கொங்கோவில் அடிமை வேட்டையை அதிகரித்தமை, கொங்கோ மன்னன் மனதில் சந்தேகத்தை கிளப்பியது. "ஒரு கிறிஸ்தவன் தனது சகோதர கிறிஸ்தவர்களை எப்படி அடிமையாக வைத்திருக்கலாம்?" என்று மன்னன் வெகுளித்தனமாக கேள்வி எழுப்பவும், இது தான் தருணம் என்று போர்த்துக்கேயர்கள் கொங்கோவில் பலாத்காரமாக மன்னர் ஆட்சியை அகற்றி, தமது காலனி ஆட்சியை நிறுவினார்கள்.

ஒரு காலத்தில் பிராந்திய பேரரசாக சிறப்புடன் இருந்த கொங்கோ இராசதானி, பிற்காலத்தில் "போர்த்துகீசிய அங்கோலா", "பெல்ஜிய கொங்கோ", "பிரெஞ்சு கொங்கோ" என்று பிரிக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறைத்து, "இருண்ட கண்டத்தை நாகரீகப்படுத்த ஐரோப்பிய வெள்ளையர்கள் வந்ததாக" இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் பெல்ஜியம் கொங்கோவை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஒரு போதும் இறங்கியதில்லை. பெரும்பாலான பெல்ஜிய காலனிய அதிகாரிகள் டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிளாம்ஸ் என்றழைப்பர்) பேசுபவர்களாக இருந்த போதிலும், கொங்கோ மக்களுடன் பிரெஞ்சு மொழியில்(பெல்ஜியத்தின் இரண்டாவது மொழி) பேசினர். டச்சு மொழியை தமது சமூகத்திற்குள் மட்டுமே பயன்படுத்தும் இரகசிய மொழியாக வைத்துக் கொண்டனர்.

பெல்ஜிய மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் யாவும், கனிம வளங்களை அகழும் சுரங்கங்கள் தோண்டியது மட்டுமே ஒரேயொரு "அபிவிருத்தி". தங்கம், வெள்ளி, வைரம், நிக்கல், குரோமியம் என்று நிலத்தில் இருந்து தோண்டியெடுத்த விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கொங்கோ அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட செல்வந்த நாடு. உலகில் உள்ள வெப்ப/குளிர் காலநிலைக்கேற்ற, அத்தனை பயிர்களும் வளரக்கூடிய தரைகளைக் கொண்ட கொங்கோ, விவசாயத்தில் தன்னிறைவு கண்டால், 50 மில்லியன் சனத்தொகைக்கு உணவு கொடுப்பது பெரிய விடயமல்ல. அங்கே பெட்ரோல், எரிவாயு போன்ற எரிபொருட்கள் கூட கிடைக்கின்றன. காலனிய காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய கொள்ளை, அனைத்து வளங்களையும் கொண்ட இன்று கொங்கோ வறுமையான நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கு காரணம். கொங்கோவின் பொருளாதாரம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்காகவே காலனிய எஜமானர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதைவிட இன்றைய காலகட்டத்தில் வருடக்கணக்காக நிலவும் ஆராஜக சூழ்நிலையும், ஆட்சியாளர்களின் தவறானான நிர்வாகமும் பிற காரணங்கள்.

30 ஜூன் 1960 ம் ஆண்டு, கொங்கோவின் சுதந்திர தின விழாவிற்கு சமூகமளித்திருந்த பெல்ஜிய அரசர், லெயோபோல்ட்டின் மகன் போதுவ, தனது "புத்திக்கூர்மையான தந்தை கொங்கோ மக்களை நாகரீகப் படுத்தும் சீரிய பணிக்காக, பெல்ஜியத்தின் சிறந்த பிரசைகளை அனுப்பி வைத்ததாக" மேடையில் புளுகிக் கொண்டிருந்தார். மேடையில் வீடிருந்த வருங்கால பிரதமர் லுமும்பாவிற்கு, அந்த பொய்களை கேட்டுக் கொண்டிருந்த முடியவில்லை. அரசரிடமிருந்த 'மைக்'கை பிடுங்கி, பெல்ஜியம் செய்த அயோக்கியத்தனங்களை நார் நாராக கிழித்தார். "மாட்சிமை தங்கிய மன்னர் பெருந்தகைக்கு" மரியாதை எதுவும் கொடுக்கவில்லை, "சகோதர, சகோதரிகளே" என்று விளித்து தனது உரையை ஆரம்பித்து, "எம்மை கறுப்பர்கள் என்பதால் சக மனிதர்களாக மதிக்காத, அடிமைகளாக வேலை வாங்கிய பெல்ஜிய காலனியாதிக்கவாதிகளிடமிருந்து, நாம் இரத்தம் சிந்தி போராடி சுதந்திரம் பெற்றோம்." என்று பலத்த கரகோஷத்திற்கிடையில் ஆற்றிய உரை பெல்ஜிய மன்னரை சினக்க வைத்தது. லுமும்பாவை பழிவாங்க வேண்டுமென்று மனதிற்குள் கருவிக் கொண்டார்.

சுதந்திரமடைந்த பின்னரும், கொங்கோ இராணுவத்தின் இடைத்தர, மேல்நிலை அதிகாரிகள் யாவரும் பெல்ஜிய வெள்ளையர்களாக இருந்தனர். அவர்கள் புதிய அரசிற்கெதிராக கலகம் செய்தனர். இதற்கிடையே இயற்கை வளம் நிறைந்த கதங்கா மாகாணம், பெல்ஜிய தூண்டுதலால், தனிநாடாக பிரிவதாக அறிவித்தது. வெள்ளையின பெல்ஜிய படைகள் அதற்கு பாதுகாப்பு கொடுத்தனர். சுதந்திரமடைந்து ஐந்து நாட்களில் இந்த கலகம் ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது. லுமும்பா அமெரிக்க தூதுவரை சந்தித்து, அமெரிக்க படைகளை அனுப்பி உதவுமாறு கோரினார். தூதுவர் மறுக்கவே லுமும்பா ரஷ்யர்களிடம் உதவி கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உடனே இது தான் சாட்டென்று, "லுமும்பா ஒரு கம்யூனிஸ்ட்" என்று அமெரிக்கா முத்திரை குத்தி விட்டது.

இறுதியில் ஐ.நா. மன்றத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ.நா. சமாதானப்படை வருவதற்கு ஒத்துக் கொண்டது. ஆனால் அதுவே லுமும்பாவின் மரணத்திற்கு இட்டுச் சென்ற தவறான முடிவாக இருந்தது. ஐ.நா.சமாதானப்படை இன்று மட்டுமல்ல, அன்றும் ஏகாதிபத்திய நலன்களுக்காக தான் செயற்பட்டது. சி.ஐ.ஏ. தூண்டுதலின் பேரில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத் தளபதி மொபுட்டுவின் படையினர் ஸ்டான்லிவீல் (கிசன்கானி) என்ற நகரிற்கு போகும் வழியில் லுமும்பாவை கைது செய்தனர். நடந்த சம்பவத்தை கானவை சேர்ந்த ஐ.நா.சமாதானப்படையினர் கண்ட போதும், அவர்களைத் தலையிட வேண்டாம் என்று மேலிடத்து உத்தரவு வந்தது. மொபுட்டு லுமும்பாவை கைது செய்து கதங்கா பிரிவினைவாதிகளின் கைகளில் ஒப்படைத்தார். அங்கே வைத்து பெல்ஜிய அதிகாரிகளின் முன்னால் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் நஞ்சு கொடுத்து கொலை செய்யப்பட்ட லுமும்பாவின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு திராவகத்திற்குள் கரைக்கப்பட்டது. அமெரிக்காவும், பெல்ஜியமும் சேர்ந்து தமது எதிரியை இப்படித்தான் தீர்த்துக் கட்டினார்கள். ஏகாதிபத்தியத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய லுமும்பாவின் மரணம் உலகெங்கும் அமெரிக்க எதிர்ப்பு அலையை தோற்றுவித்தது. ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் ஐ.நா.மன்றத்தில் தமது கண்டனங்களை கொட்டினர். சோவியத் யூனியன் மொஸ்கோவில் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு லுமும்பாவின் பெயரிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரால், பெல்ஜிய மன்னன் போதுவாவினால் வெறுக்கப்பட்ட லுமும்பாவை, கொலை செய்வதற்கான காரணம் என்ன? கொங்கோவில் கொலைக்கான சதித்திட்டங்களை நிறைவேற்றிய சி.ஐ.ஏ. அதிகாரி டெவ்லின் "Congo - Fighting the Cold War in a Hot Zone" என்ற நூலில் வாக்குமூலம் கொடுக்கிறார். அதில் அவர், லுமும்பா கம்யூனிஸ்ட் இல்லை என்பது ஏற்கனவே தெரியும் என்றும், கம்யூனிசத்தை எதிர்த்து போரிடுவது என்பது ஒரு சாட்டு, என ஒப்புக் கொள்கிறார். அப்படியானால்? "அன்றைக்கு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டிற்குள் கொங்கோ வந்திருக்குமேயானால், 'கோபால்ட்' சுரங்கங்களும் அவர்களது கைகளுக்கு போயிருக்கும். ஏவுகணை, பிற ஆயுதங்கள் தயாரிப்பதற்கு கோபால்ட் அத்தியாவசியமான பொருள். அது உலகில் சோவியத் யூனியனிலும், கொங்கோவிலும் மட்டுமே இருந்தது. ஆகவே அமெரிக்கா கொங்கோவை கைப்பற்றியிரா விட்டால், சர்வதேச ஆயுதப்போட்டியில் பின்தள்ளப் பட்டிருக்கும்."
உண்மை தான். ஆனால், ஆப்பிரிக்காவின் வளாங்களை அதற்கு முன்னரே உலக மேலாதிக்க நோக்கத்திற்காக ஏகாதிபத்தியம் பயன்படுத்த தொடங்கி விட்டது. கொங்கோவில் இருந்து எடுக்கப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு செய்த அணுகுண்டு தான் ஹிரோஷிமா, நாகசாகி மீது போடப்பட்டது. கொங்கோவின் வைரங்களை வைத்து தான் ஆங்கிலேய-அமெரிக்க கூட்டணி இரண்டாம் உலகப்போரில் வெற்றியீட்டின. இன்றும் கூட, கணணி, மொபைல் தொலைபேசி 'சிப்' பிற்கு பயன்படும் மூலப்பொருளான கொல்த்தான் கொங்கோவில் மட்டுமே அதிகமாக காணப்படுகின்றது.

இன்றைய ஆப்பிரிக்காவில் வளங்களை, பன்னாட்டு நிறுவனங்கள் கேள்வி கேட்க யாருமின்றி கொள்ளையடிக்கின்றன. ஆயுதமேந்தி இருப்பது, அரசபடையாக இருந்தாலும், ஆயுதக் குழுவாக இருந்தாலும், இந்த வளங்களை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதிலே தான் போட்டியிடுகின்றன. "ஆப்பிரிக்கா இப்படியே இருந்தால் அங்கே புரட்சி ஏற்பட இன்னும் நூறு வருடங்களாகும்." என்று தனது டைரிக் குறிப்பில் எழுதிவைத்தார் சே குவேரா. அவர் கொங்கோவில் தங்கியிருந்து புரட்சியை ஏற்படுத்த முயன்று தோற்றுப்போய் திரும்பியவர். இப்போது ஒரு புதிய திருப்பம். இஸ்லாமிய மீட்பிற்காக போராடுவதாக சொல்லும் குழுக்கள் வளர்ந்து வருகின்றன. அதைக் காட்டி பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவதாக சொல்கிறது அமெரிக்கா. உண்மையில் கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் "இருண்ட கண்டத்தை" கண்டு பிடிப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னமே, இஸ்லாமிய அரேபியா அதனை கண்டுபிடித்திருந்தது.

"ஆப்பிரிக்க கண்டத்தில் கிறிஸ்தவ மதம் நுழையும் வரை, அங்கே காட்டுமிராண்டி கால இயற்கை வழிபாடு மட்டுமே பரவலாக இருந்ததாக," வெள்ளையர்கள் இன்னொரு கட்டுக்கதையை பரப்பி வந்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்து கத்தோலிக்க/ புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மதம் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, எத்தியோப்பியர்கள் ஆதி கால கிறிஸ்தவத்தை பின்பற்றி வருகின்றனர். இஸ்லாம் செனகல் முதல் தான்சானியா வரை பரவி இருந்தது. வளர்ச்சியடைந்த ஆப்பிரிக்க- இஸ்லாமிய அரசுகள் தோன்றியிருந்தன. ஒரு காலத்தில் மாலி நாட்டில் இருந்த, திம்புக்டு இஸ்லாமிய இராச்சியத்தின் மன்னன், மெக்கா நோக்கி புனிதப்பயணம் சென்ற போது, எகிப்திய சந்தையில் தங்கத்தில் விலை வேகமாக சரியும் அளவிற்கு, செல்வம் படைத்திருந்ததாக வரலாற்றுக் கதை ஒன்றுண்டு.

---(தொடரும்)---
முன்னைய பதிவு:
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1
(பிற்குறிப்பு: ஏற்கனவே என்னால் எழுதப்பட்டு வினவு தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையை வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.)

2 comments:

Unknown said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//இறுதியில் நஞ்சு கொடுத்து கொலை செய்யப்பட்ட லுமும்பாவின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு திராவகத்திற்குள் கரைக்கப்பட்டது.//

நான் லுமும்பா பற்றி படம் பார்க்கையில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.