Sunday, December 07, 2008

கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது


Greece, நேற்றிரவு (6 டிசம்பர்), ஏதென்ஸ் நகரில், இடதுசாரிகளின் கோட்டை என கருதப்படும் எக்சர்கியா பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் பொலிஸாரால் சுடப்பட்டு மரணமடைந்ததை தொடர்ந்து, கிறீஸ் முழுவதும் கலவரம் வெடித்தது. தெற்கே ஏதென்ஸ் நகரம் முதல் வடக்கே தெஸ்ஸலொநிகி வரை காட்டுத்தீ போல பரவிய இந்த கலவரத்தில் பல போலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன, வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன. ஏதென்ஸ் நகரில் மட்டும் 16 வங்கிகள், 20 கடைகள், டசின் கணக்கான கார்கள் தீக்கிரையாக்கப்படன. "அவர்கள் தமது எதிர்ப்பை காட்ட உரிமை உண்டு, ஆனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது." எனக் கூறிய உள்துறை அமைச்சர், இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரியவருகின்றது. தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்பான இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிறீஸ் கலவரத்தின் பின்னணி என்ன? சம்பவம் நடந்த இடத்தில் வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது பெட்ரோல் குண்டை வீசியதாலேயே, அந்த 16 வயது சிறுவன் சுடப்பட்டான், என்பது அரசதரப்பு வாதம். ஆனால் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பிற இளைஞர்கள் வேறுவிதமாக கூறுகின்றனர். (அனார்க்கிச, கம்யூனிச) இடதுசாரிகளின் செல்வாக்கு மிக்க அந்த பகுதியில், அடிக்கடி காவல்துறையினர் அடாவடித்தனம் புரிந்துவருவது வழக்கம். அன்றைய தினம், சில இளைஞர்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், நிலைமை மோசமடைந்து, எங்கோ இருந்து வந்த கல் ஒன்று பொலிஸ் காரை பதம் பார்த்த வேளை, ஒரு பொலிஸ்காரர் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவி, ஒரு இளைஞனின் நெஞ்சுப் பகுதியை நோக்கி சுட்டதாகவும், அந்த இடத்திலேயே சூடு வாங்கிய இளைஞன் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து வீதியில் கூடிய வாலிபர்களையும், பொதுமக்களையும் நூற்றுக்கணக்கான கலவரத்தடுப்பு போலீசார் சுற்றிவளைத்தனர். இருப்பினும் ஏதென்ஸ் நகரம் பற்றி எரிவதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. இளைஞர்கள் பல இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸ் படையை எதிர்த்து சண்டை போட்டனர்.

அடுத்த நாள் பல வெகுஜன ஊடகங்கள் கலவர செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போதும், கடந்த பல நாட்களாகவே கிறீஸ் நாடாளாவிய, அதேநேரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர் எழுச்சிக்கு முகம் கொடுத்து வருவதை செய்தியாக கூட தெரிவிக்கவில்லை. கிரேக்க அரசு கொண்டு வந்த கல்வி சீர்திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த இரு நாட்களாகவே, மருத்துவ பீட மாணவர்களும், மருத்துவ தாதிகளும் சுகாதார அமைச்சை ஆக்கிரமித்து, தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, பதில் சுகாதார அமைச்சரை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். (பார்க்க:Medical students held Deputy Health Minister hostage) புதிய கல்வி சட்டத்தை எதிர்த்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசார் ஒரு மாணவனை கைது செய்ததாகவும் தெரியவருகின்றது. அப்போதும் இதை எதிர்த்த மாணவர்கள் போலீசுடன் சண்டையிட்டுள்ளனர். ஆனால் ஊடகங்களுக்கு இதெல்லாம் செய்திகளல்ல. வர்த்தக நிலையங்களை, வாகனங்களை கொளுத்தினால் மட்டுமே கவனமெடுத்து செய்தி வெளியிடுவார்கள். (இதுவன்றோ பத்திரிகாதர்மம்! )

சில நாட்களுக்கு முன்னர் தான், குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளரும், எந்த உரிமைகளுமற்ற அகதிகளும் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிகாரிகள் குறைந்தளவு தஞ்ச விண்ணப்பங்களை மட்டுமே எடுப்பதாலும், பொலிஸ் நெருக்குதலில் ஒரு அகதி படுகாயமுற்றதாலும், ஆத்திரமடைந்த கும்பல் கலவரத்தில் இறங்கியதாக தெரியவருகின்றது. கிறீசிற்கு வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் வருகை தருகின்ற போதும், மிக மிக குறைந்தளவு விண்ணப்பங்களே ஏற்றுக் கொல்லப்படுவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு:
- Greece: 16year old murdered by police, heavy riots
- Medical students held Deputy Health Minister hostage
- Asylum seekers riot in Athens

Video: Greece Riotsகிறீஸ் தொடர்பான முன்னைய பதிவு:
தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

5 comments:

வாசுகி said...

உங்களுடைய மற்றய பதிவுகள் போலவே இதையும் நன்றாகவே அலசி எழுதியுள்ளீர்கள்.

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Sathis Kumar said...

செறிவான அலசல், உங்கள் எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன..

வாழ்த்துகள்..

தொடரட்டும் உங்கள் பணி..

அர டிக்கெட்டு ! said...

//எங்கோ இருந்து வந்த கல் ஒன்று பொலிஸ் காரை பதம் பார்த்த வேளை//

தமிழகம் முதல் கிரேக்கம் வரை போலீஸ் அடாவடிக்குத் தேவை ஒரு கல் தான்! பாயின்ட் பிளாங் ரேஞ்சில் ஒருவனை சுடக்கூடிய அளவிற்கு அந்த துணிவு இருப்பதை பார்க்கும் பொழுது இது திட்டமிட்ட செயல் என்பதில் சந்தேகமில்லை. நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழர்.

சுட்டிஅருன் பல தளங்களில் பின்னூட்டங்களில வாயிலாக நீங்கள் மலிவான விளம்பரம் தேடிக்கொள்வது சரியா? நெஞ்சை உருக்கும் செய்தியை வாசித்தபின்னர் பின்னூட்டம் இடச்சென்றால் அந்த உணர்ச்சிக்கு சற்றும் பொருத்தமில்லாத உங்கள் விளம்பரத்தை பார்க்கும் பொழுது அறுவருப்பாக உள்ளது. உரிய தளத்திற்கு மின்னஞ்சல் செய்யுங்கள்
அதுதான் முறை.

Kalaiyarasan said...

வாசுகி, சதீஷ் குமார், அர டிக்கட்டு உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. பதிவை எமது நிலைமையில் ஒப்பிட்டு பார்க்கும் தன்மை,உங்களது ஆழமான வாசிப்பையும், பதிவின் நடைமுறை அவசியத்தையும் உணர்த்துகின்றது. மாற்று உலகிற்கான தேவையே, கலையகத்தின் பார்வை. நன்றி.