Friday, December 05, 2008

கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்


டிசம்பர் 5 ம் திகதி நெதர்லாந்து மொழி பேசும் நாடுகளில் (நெதர்லாந்து, பெல்ஜியம்) "சின்டர் கிளாஸ்" (st. Klaas) என்ற தேசிய தினம் கொண்டாடப்படுகின்றது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் "சாந்தா கிளவுஸ்" என்று அறியப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா தான் இந்த சின்டர் கிளாஸ். 

இவரைப் பற்றிய சுவையான கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. புனித க்ளாஸ்(st.Klaas)துருக்கியை சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு.( சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் துருக்கி கிறிஸ்தவ நாடாக இருந்தது). துருக்கியில் இருந்து ஸ்பெயின் வரை கப்பலில் வந்த இந்த தாத்தா, பின்னர் வெண்புரவி ஒன்றில் ஏறி நெதர்லாந்து வந்தாராம். அவர் கூடவே ஆப்பிரிக்காவில் இருந்து சில கறுப்பின அடிமைகளையும் கூட்டி வந்தாராம். 

நெதர்லாந்து நாட்டில் சிறு பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பரிசுப் பொருட்களை, தனது கறுப்பின அடிமைகளிடம் கொடுத்து விடுவாராம். வீடுகளின் சமையலறை புகை போக்கி ஊடாக குதிக்கும் அடிமைகள், இந்த பரிசுப் பொருட்களை சிறு பிள்ளைகளின் காலுறைகளினுள் வைத்து விட்டு மறைந்து விடுவார்களாம். எல்லா வீடுகளிலும் பெற்றோர் இந்த பரிசுப் பொருட்களை தமது பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தாலும், சிறு பிள்ளைகள் இப்போதும் சின்டர் கிளாஸ் என்று ஒருவர் வாழ்வதாக நம்புகின்றனர்.

மதச் சார்பின்மை கொள்கையை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் நெதர்லாந்து நாட்டில், "சின்டர் கிளாஸ் தினம்" கிறிஸ்தவ நாளாக அல்லாமல், தேசிய தினம் போல கொண்டாடப்படுகின்றது. டிசம்பர் 5 ம் திகதி, இந்நாட்டில் விடுமுறை தினமாக இல்லாத போதிலும், சிறுவர்க்கான விசேட தினமாக, பாடசாலைகளில் கொண்டாடப்படுகின்றது. 


வயதான சின்டர் கிளாஸ் போலவும், கருப்பு அடிமைகள் போலவும் மாறுவேடம் பூண்ட வயதுவந்தோர் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி விட்டு செல்கின்றனர். சின்டர் கிளாஸ் தினத்தில் தொக்கி நிற்கும் மத வாத, நிறவாத அம்சங்களை ஏற்றுகொள்ளாத நெதர்லாந்து வெள்ளையின பெற்றோர் கூட, இந்த தினம் வர்த்தகமயப்படுத்தப் பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றனர். அண்மையில் கைத்தொலைபேசி நிறுவனங்கள் இலவச தொலைபேசிகளை வழங்கி கடும் கண்டனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

முதலாவதாக நெதர்லாந்து/பெல்ஜிய அரசாங்கங்கள் சொல்வது போல சின்டர் கிளாஸ் தினம் மதச் சார்பற்றதா? அப்படியானால் சின்டர் கிளாஸ் அணியும் தொப்பியில் சிலுவை அடையாளம் காணப்படுவதேன்? ஆங்கிலேயர்கள் எதற்காக தமிழில் "கிறிஸ்துமஸ் தாத்தா" என்று மொழிபெயர்த்தார்கள்? சின்டர் கிளாஸ் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்று கர்ணபரம்பரைக்கதை சொல்கின்றதே? 


இரண்டாவதாக வருடந்தோறும் மாறுவேடம் பூணும் வெள்ளையின மக்கள், சின்டர் கிளாசும், அவரது சேவகர்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று நடித்துக் காட்டுகின்றனர். இங்கே தான் நிறவாதம் ஒளிந்திருக்கிறது. வெண்தாடியுடன் வரும் சின்டர் கிளாஸ், புத்திசாதுர்யம் மிக்க வயதான நபராக காட்சி தருகிறார். அதற்கு மாறாக அவரது சேவகர்களாக நடிக்கும் கறுப்பின அடிமைகள், முட்டாள்களாக குரங்குச் சேட்டைகள் செய்து குழந்தைகளை குஷிப் படுத்துபவர்களாக காட்சி தருகின்றனர்.

சின்டர் கிளாஸ் தினத்தின் வசீகரத்தால் கவரப்படும் வெள்ளையின குழந்தைகள் மனதில், கறுப்பின மக்களைப் பற்றிய தப்பபிப்பிராயம் பதிந்து விடுகின்றது. வெள்ளையினத்தவர்களை புத்திசாலிகளாகவும், கறுப்பினத்தவர்கள் விவேகமற்ற முட்டாள்களாகவும், மனிதக் குரங்குகளைப் போலவும் கற்பனை செய்கின்றனர். அந்தக் குழந்தைகள் தெருவில் கறுப்பின மக்களைப் பார்க்கும் போது, "கறுப்பு சேவகன்" அல்லது "மனிதக்குரங்கு" என்று அழைப்பதாக, பல வெள்ளையின நெதர்லாந்து பெற்றோர்கள் கூறுகின்றனர்.


இத்தகைய மறைமுகமான நிறவாத பிரச்சாரம் காரணமாக, சின்டர் கிளாஸ் தினத்தை தடை செய்ய வேண்டும் என்று நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் கறுப்பின மக்களும், இடதுசாரிகளும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.  ஆனால் பெரும்பான்மை வெள்ளையினத்தவர்கள் இதனை ஒரு "மக்கள் தினமாக" கருதுவதாலும், வர்த்தக நிறுவனங்களின் நன்மை கருதியும், இந்த தினத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.

சாந்தா கிளவுஸ் அல்லது கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கும் ஆங்கிலேயர்கள், இயேசு பிறந்த மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அந்நியமான வட துருவ மனிதனை அறிமுகப் படுத்துகின்றனர். பனி உறைந்த பாதையில், துருவ மான்கள் இழுத்து வரும் வண்டியில் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா, ஸ்கண்டிநேவிய நாடுகளின் வாழ்க்கைமுறையை கொண்டிருக்கிறார். இவருக்கும், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் கிறிஸ்துமஸ் தினத்தில் வீடுகளை அலங்கரிக்கும் "கிறிஸ்துமஸ் மரம்" கூட டென்மார்க் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் மட்டும் தான் காணப்படுகின்றது.

இவையெல்லாம் கிறிஸ்துமஸ் தாத்தா வட ஐரோப்பிய மக்களின் கலாச்சாரம் என்பதையும், இதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதையும் நிரூபிக்கின்றன. மேலும் டிசம்பர் 25 ம் திகதி தான் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் என்று பலர் இன்றும் நம்புகின்றனர். இது தவறு. பைபிளில் எங்கேயும் இது குறிப்பிடப்படவில்லை. 


இத்தாலியில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னர், ரோமர்கள் தமது "மித்திரா" கடவுளுக்கு, டிசம்பர் 25 ம் திகதி விழா எடுத்தனர். இது அனேகமாக சூரியக் கடவுளின் வணக்கமாக இருக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தில் குறைந்தளவு சூரிய ஒளி கிடைக்கின்றது. பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் அந்த தினத்தை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக மாற்றி விட்டனர்.
>

4 comments:

G.Ragavan said...

நானும் நெதர்லாந்தில் தற்போது வசிக்கிறேன். ஆனால் நான் கேள்விப்பட்டவிதம் சற்று வேறுமாதிரியாக இருந்தது.

சிண்டர்கிளாசுடன் வரும் உதவியாளர்கள் கருப்பினர்கள் என்று சொல்லவில்லை. அவர்களும் சிண்டர் கிளாசுடன் வரும் வெள்ளையர்கள்தான். ஆனால் பரிசுப் பொருட்களை புகைப்போக்கி வழியாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து குழந்தைகளின் காலணியுறைக்குள் (புகைக்கூண்டிற்கு அருகில் வைத்திருப்பார்களாம்) வைப்பதால் புகை படிந்து கருப்பாக ஆகியிருப்பார்களாம்.

இப்படித்தான் கேள்விப்பட்டேன்.

மதங்கள் வளரும் பொழுது இரண்டு விதமாக வளரும். அடிப்படையாக அந்த மண்ணில் இருப்பதையும் தனக்குள்ளே எடுத்துக் கொண்டு வளர்வது ஒன்று. அடிப்படையாக எது இருந்தாலும் அதை முற்றிலும் ஒழித்துக் கட்டிவிட்டு வளர்வது மற்றொன்று. கிருத்துவமதம் முதல்வகையில் வருவதாகவே நான் கருதுகிறேன்.

தொப்பியில் சிலுவை இருப்பது பெரிய விடயமே அல்ல. யேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குப் பாடம். ஆகையால் சிலுவை மதிப்பிற்குரியதாகக் கருதுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

உங்கள் பதிவுகளிலிருந்து புதிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி

Kalaiyarasan said...

ராகவன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நீங்கள் கேள்விப்பட்ட விதம் தான் இங்கே பொதுவாக கூறப்படும் கதை. சிண்டர்கிலாஸ் தினத்தில் இருக்கும் நிறவெறியை சுட்டிக் காட்டப் பட்ட பிறகு தான், அவரோடு வருபவர்கள் கறுப்பின அடிமைகள் அல்ல, ஆனால் வெள்ளையினத்தவர்கள் என்று நியாயப்படுத்த கிளம்பினார்கள். கருப்பு நிறம் எப்படி வந்தது என்பதற்கு, புகைபோக்கியால் குதிக்கும் போது கருமையடைந்திருக்கலாம் என்று காரணம் சொகிறார்கள். ஆனால் சின்டர் கிளாஸ் தொடர்பான கர்ணபரம்பரைக் கதை அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த கறுப்பின அடிமைகள் என்று தான் சொல்கின்றது. இன்றைய நாகரீகமடைந்த நெதர்லாந்தில் இந்தக் கதை ஏற்புடையதல்ல என்பதால் தான், உங்களுக்கு வேறு விதமாக சொல்கின்றனர். உலகம் மாறிவிட்டதையும் இது உணர்த்துகின்றது. நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சராசரி நெதர்லந்துகாரர் கறுப்பினத்தவர்களை வாழ்க்கையில் கண்டதில்லை. அதனால் பல்வேறு தப்பான கருத்துகளை கொண்டிருந்தனர். இன்றைய நிலை அப்படியல்ல. கறுப்பினத்தவர்கள் நெதர்லாந்து சமூகத்தில் ஒரு அங்கம். வெள்ளை நெதர்லாந்துகாரர்கள் அந்த யதார்த்தத்தை உணரும் அதேநேரம் தமது கலாச்சார விழுமியங்களை (அதிலே நிறவாத கூறுகள் இருந்தாலும்) விட்டு விட தயாராக இல்லை. "நீக்ரோவின் முத்தம்" (Negerzoen) என்ற பெயரிடப்பட்ட இனிப்பு பண்டம் நிறவாதத்தை கொண்டிருப்பதாக எதிர்ப்பு கிளம்பிய பின்னர் தான் "நீக்ரோ" என்ற பெயர் நீக்கப்பட்டது.

நெதர்லாந்து இந்த தினத்தின் மதப் பின்னணியை ஏற்றுக் கொண்டால், சிலுவை இருப்பது பெரியவிடயமல்ல. ஆனால் ஒரு பக்கம் நிறவாதத்தை மறைப்பது போல மறுபக்கம் மதவாதத்தை மறைக்கிறார்கள். நெதர்லாந்து அரசு தன்னை தூய்மையான மதச் சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்வதும், பெரும்பான்மையான நெதர்லாந்துக்காரர்கள் கிறிஸ்தவமதத்தை பின்பற்றாத, அல்லது அதிலே நம்பிக்கையற்றவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சிண்டர்கிலாஸ் தினத்தை நீங்கள் கூறுவது போல இயேசு கிறிஸ்துவுடன் அல்லது கிறிஸ்தவமதத்துடன் அடையாளம் காண்பது அவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

வாசுகி said...

உங்களுடைய தகவல்கள் எனக்கு புதியவை.
இதை விட கொடிய நிறவாதம், மதவாதம் உள்ள நாடுகள் நிறையவே உள்ளன.
எனவே நெதர்லாந் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தகவலுக்கு நன்றி.