Thursday, June 10, 2010

விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்


"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்! பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் இரண்டு லட்சம் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். ஒரு ஆய்வின் படி 45000 மாணவர்கள் வறுமையில் வாடுகிறார்கள்."

இந்த திடுக்கிடும் செய்தி Le Figaro என்ற பிரபல பிரெஞ்சு தினசரியில் வெளியானது. பல்கலைக்கழக மாணவிகள் படிப்புச் செலவுகளுக்காக விபச்சாரம் செய்வது செல்வந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது.

பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் தான் அரசு கல்விக் கட்டணத்தை அதிகரித்திருந்தது. அது அங்கே தற்போது வருடத்திற்கு 3000 பவுன்கள். பிரிட்டிஷ் கல்லூரிகளில் செய்யப்பட்ட ஆய்வின் பொழுது, பத்து சதவீத மாணவர்கள் தமக்கு தெரிந்தவர்கள் விபச்சாரம் செய்வதாக கூறினார்கள்.

பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்கள் பகுதி நேர வேலை பார்ப்பது வழக்கமாக நடப்பது தான். ஆனால் பகுதி நேர வேலை, படிக்கும் நேரத்தை ஆக்கிரமிக்கிறது. மேலும் வேலை செய்த களைப்பு காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. அத்தகைய காரணங்களால், பல மாணவிகள் ஒரு உணவு விடுதியில் வேலை செய்வதிலும் பார்க்க, விபச்சாரம் மேல் எனத் தேர்ந்தெடுக்கின்றனர். விபச்சாரம் செய்வதன் மூலம் பணம் இலகுவாக கிடைக்கின்றது. நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும். விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகள் அது குறித்து எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

இணைய இதழ்  ஒன்றுக்கு பேட்டியளித்த மாணவி ஒருவர் இவ்வாறு கூறினார். "இன்டர்நெட் மூலமாக வாடிக்கையாளர்களை பிடிப்பதாகவும், சில நாட்கள் பேசிப் பார்த்து நம்பிக்கை வந்த பின்னரே, ஹோட்டல்களில் சந்திப்பதாக" தெரிவித்தார். "கல்லூரியில் கூடப் படிக்கும் மாணவி ஒருவர் உணவு விடுதியில் வேலை செய்வதாக சொன்னார். மூன்று மாதங்களின் பின்னர் ஒரு கார் வாங்கினார். உணவு விடுதியில் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். மூன்று மாதங்களில் கார் வாங்குவதானால் வேறு தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். பல மாணவிகள் காதலன் என்ற பெயரில் பணத்துக்காக ஒருவனுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். "


ஐரோப்பிய நகரங்களில் சட்டபூர்வ விபச்சாரிகளுக்கு உதவும் அரச அல்லது தொண்டு நிறுவனங்கள், தம்மிடம் மாணவிகள் பற்றிய புள்ளி விபரம் எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரம் தம்மிடம் உதவி பெறும் விபச்சாரிகளில் மாணவிகளும் இருக்க வாய்ப்புண்டு என்றனர். மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமாக விளம்பரம் செய்ய தடை உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகங்கள் இந்தப் பிரச்சினை இருப்பதை மறுக்கின்றன. வறுமை காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கென அரசு மானியம் வழங்குவதாகவும், அதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர். அண்மைக் காலமாக மானியத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் தொகை அதிகரித்திருப்பதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் நாட்டு நிலைமை அவர்கள் சொல்வது போன்றில்லை.

மேற்கு ஐரோப்பா மாறி வருகின்றது. முன்பெல்லாம் கல்வி ஒன்றில் இலவசமாக கிடைத்தது, அல்லது வருமானம் குறைந்தவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு கட்டி வந்தது. அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது. அப்போதெல்லாம் அக்கரையில் சோஷலிச நாடுகள் இருந்தன. அங்கெல்லாம் கல்வி இலவசம். அவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்று காட்ட வேண்டாமா? இப்பொழுது தான் கம்யூனிச நாடுகள் காணாமல் போய் விட்டனவே. இனி என்ன பயம்? போர்த்தியிருந்த பசுத்தோலை கழற்றி விட்டு, முதலாளித்துவம் தைரியமாக தனது கோரப் பற்களை காட்டுகின்றது.


பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், ஐரோப்பிய அரசாங்கங்கள் வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வருகின்றன. கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது அவர்கள் நோக்கம். அதற்காக வருடாந்த பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கப்படும் அரச செலவினத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர். மக்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் வெட்டப்படுகின்றன.

முதலாளித்துவ ஆதரவாளர்கள், அரசு கல்வி முழுவதையும் தனியாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று சதா காலமும் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல் தற்போது அரங்கேறுகின்றது. நம் மத்தியிலும் தனியார்மயத்திற்கு ஆதரவளித்து சமூக சீரழிவுகளை வளர்க்கத் துடிக்கும் "முதலாளித்துவ ஆதரவாளர்கள்" இருக்கிறார்கள். "விபச்சாரம் செய்யினும் கற்கை நன்றே!" என்று எமக்கு புத்திமதி கூறலாம். அவர்கள் முதலில் தம் வீட்டுப் பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்ப முன்வருவார்களா?
________________________________________________

உசாத்துணை:
Tales of student prostitutes shock France
Female students turn to prostitution to pay fees

பெல்ஜியத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவிகள் பற்றிய அறிக்கை (நெதர்லாந்து மொழி)

Tuesday, June 08, 2010

கனவான்களின் ஜெர்மனியில் ஒரு கருப்பன் படும் பாடு


"-  ஏய்! கருப்பா தள்ளிப்போ!"
 -"
ஏய்! வெள்ளை!"
-"ஏய்... என்ன வெள்ளை? உனது எஜமானைப் பார்த்து அப்படி சொல்ல மாட்டாய்."
-"நான் வெள்ளை என்று மட்டுமே சொன்னேன்."
"-வெள்ளை என்றால் ஜெர்மன் என்று அர்த்தம், நண்பா"
"-அப்படி என்றால் என்ன? விளங்கப் படுத்து."
"எனது ..... "
(முதுகைத் திருப்பி வளைந்து பிட்டத்தைக் காட்டுகிறான்.)

நிலைமை மோசமடையும் போலத் தெரிகின்றது. சுற்றவிருக்கும் உதைபந்தாட்ட வெறியர்கள் குடித்து விட்டு சண்டைக்கு வருவார்கள் போல் தெரிகின்றது. அவர்களது சட்டையில் காணப்படும் ஹிட்லரையும், நாஜிகளையும் நினைவு கூறும் வாசகங்கள் வேறு பயமுறுத்துகின்றன.

ஜெர்மனியில் டிரெஸ்டென் நகர உதைபந்தாட்ட அரங்கத்திற்கு முன்னால் நடந்த சம்பவம். இருபது வயது மதிக்கத் தக்க வெள்ளையின உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு மத்தியில், தன்னந்ததனியாக ஒரு கருப்பன் நின்றிருந்த பொழுது இடம்பெற்ற வாக்குவாதம் அது. அந்த கருப்பன் உண்மையில் ஒரு வெள்ளையின ஜெர்மானியர்! பிரபல எழுத்தாளர் Günter Wallraff. "உன்னதமான நாகரீகத்தைக் கொண்ட" ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பவர். இம்முறை அவர் எடுத்துக் கொண்ட விஷயம் "நிறவாதம்". சாமானியர்களான "அப்பாவி" ஜெர்மனியர்களின் மனதில் ஒளிந்திருக்கும் நிறவாதத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இதற்காக தனது மேனியின் நிறத்தையே கருப்பாக மாற்றிக் கொண்டு, ஒரு ஆப்பிரிக்க கருப்பனாக வாழ்ந்து பார்த்திருக்கிறார்.

வெள்ளை நிறத் தோலை கறுப்பு நிறமாக்குவது நடைமுறைச் சாத்தியமல்ல. 1959 ம் ஆண்டு, John Howard Griffin என்ற எழுத்தாளர் அமெரிக்காவில் "ஒரு கருப்பனாக" பயணம் செய்து கறுப்பினத்தவர்களின் அவலங்களை Black Like Me என்ற நூலில் பதிவு செய்தார். தனது தோலை கறுக்க வைக்க அவர் பாவித்த மாத்திரைகள் இறுதியில் அவருக்கு எமனாக மாறின. குய்ந்தர் வல்ராப் அது போன்ற ஆபத்தான பரிசோதனையை செய்யவில்லை. பெண்களுக்கு மேக்கப் போடும் ஒரு நிபுணரை அணுகியுள்ளார். விசேஷ ஸ்ப்ரே மூலம் அவரது தோலை கறுக்க வைத்துள்ளார். தலையில் சுருட்டைமுடி விக் அணிந்து கொண்டார். பார்ப்பதற்கு அசல் ஆப்பிரிக்க கருப்பன் போல இருந்த அவரை யாரும் அடையாளம் காண முடியவில்லை.

வால்ராப் தன்னோடு சில நடிகர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு கறுப்பனைப் பற்றி சாதாரண வெள்ளையர்கள் தமக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அறியும் ஒற்றர்கள். தேவைப்பட்டால் சம்பாஷணைகளை கமெராவில் அல்லது ஒலிவாங்கி மூலம் பதிவு செய்து கொண்டு வருவார்கள். வால்ராப் "கருப்பனாக" வாழ்ந்து பார்த்த அனுபவங்களை, "அற்புதமான புது உலகம்" (Aus der schönen neuen Welt) என்ற நூலில் எழுதியுள்ளார். அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறேன். வால்ராபின் பயணம் கிழக்கு ஜெர்மனியில் அரசர் காலத்து மாளிகைகளையும், பூந் தோட்டங்களையும் கொண்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற வெர்லிட்ஸ் எனுமிடத்தில் ஆரம்பிக்கின்றது.

ஜெர்மன் உல்லாசப்பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஆற்றில் மிதந்து சென்று கொண்டிருக்கிறது. வழிகாட்டி ஜெர்மன் சரித்திரக் கதைகளை சொல்லிக் கொண்டு வருகிறார். "..... அன்று இளவரசர் Franz விரும்பிய பெண்ணை மணம் முடிக்க, பிரசிய நாட்டு அரசனான அவரது தந்தை விடவில்லை. பிரன்ஸ் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் வாழ விரும்பினார். ஆனால் அரசன் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இறுதியில் இளவரசர் மாமன் மகளை கலியாணம் செய்து கொண்டு ஜெர்மனியிலேயே தங்கி விட்டார்." கேட்டுக் கொண்டிருந்த வால்ராபினால் சும்மா இருக்க முடியவில்லை. "(முறைப் பெண்ணை மணம் முடிப்பது) தடை செய்யப் பட்டுள்ளது அல்லவா? இதையெல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட (பெற்றோர் நிச்சயித்த) திருமணங்கள் என்றல்லவா சொல்வார்கள்?"

ஜெர்மனியில் வாழும் இஸ்லாமிய, இந்து சமூகங்கள் மத்தியில் உறவுக்குள் திருமண ஒப்பந்தங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த "காட்டுமிராண்டி கால" வழக்கத்தை ஜெர்மன் அரசாங்கமும், ஊடகங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. "ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணங்கள்" பிற்போக்கு கலாச்சாரம் கொண்ட சமூகங்களில் மட்டுமே சாத்தியம் எனக் கூறி வருகின்றன. (தமிழ் வாசகர்களுக்கு ஜெர்மன் சமூக கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தும் எனது சிறு விளக்கம். தமிழ்க் கலாச்சாரத்தில் "பெற்றோர் நிச்சயித்ததாக" கூறுவதை, அவர்கள் "நிறுவனமயப் படுத்தலாக" புரிந்து கொள்கின்றனர். நூலில் இல்லை.) இன்றைய ஜெர்மானியர்கள் கருதுவதைப்போல "ஆதி காலம் தொட்டு நாகரீகமடைந்த சமூகமாக" இருக்கவில்லை. ஜேர்மனிய சமூகமும் பல "பிற்போக்கு அம்சங்களை" கொண்டிருந்தது. இதைத் தான் அன்று அந்தப் படகுப் பயணத்தில், சக ஜெர்மானியர்களுக்கு வல்ராப் தெளிவு படுத்தியுள்ளார்.

வல்ராபின் விமர்சனம் பலரை புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. படகுப் பயணம் முடிவடையும் தருணம் இவரருகில் வந்த ஜெர்மன்காரர் கேட்கிறார்:
 - " நீ எப்படி இவ்வளவு சரளமாக ஜெர்மன் பேசுகிறாய்? "
- " தான்சானியாவில் கோதே (ஜெர்மன் மொழிக்) கல்லூரியில் கற்றேன்."
ஒருவருக்கொருவர் தெரியாத மற்ற பயணிகள் "நீங்கள்" என்று பன்மை விகுதியில் அழைக்கின்றனர். இவர் மட்டும் "நீ" என்கிறார். பொதுவாகவே மேற்கு ஜெர்மானியர்களை விட கிழக்கு ஜெர்மானியர்கள் "நீங்கள்" பாவிப்பது குறிப்பிடத் தக்கது.
-" வேலை செய்கிறாயா?" 
"- இல்லை"
-"இங்கே படகு வலிக்கும் வேலை கிடைக்கலாம்" (சைகை செய்து காட்டுகிறார்.)
நான் ஒரு கருப்பன் என்பதால் கூலி வேலைக்கு தான் லாயக்கு என்று அவர் கருதுவது புரிகின்றது.

வேறு பல சந்தர்ப்பங்களிலும், தனக்கு ஜெர்மன் புரியாது என நினைத்துக் கொண்டு தன் முன்னிலையில் ஜெர்மன் மொழியில் பேசி சிரித்தவர்கள், பற்றி வல்ராப் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டவரை கேலிப்பொருளாக கருதுவது நவீன நிறவாதம். ஜெர்மனியில் மட்டுமல்ல, வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற சிறுமைப்படுத்தும் ஏளனப் பேச்சுகள் சகஜம். இந்தியர்கள், ஆபிரிக்கர்கள் போல தோற்றமளிப்பவர்களிடம் எடுத்தவுடன் ஆங்கிலத்தில் பேசுவது கூட அதற்குள் அடக்கம்! (அதாவது உங்களுக்கு "ஆங்கிலம் போன்ற இலகுவான மொழிகளை" மட்டுமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் உண்டு.) மொழியறிவு குறைந்த வெள்ளையின ஐரோப்பியர்களுடன், அப்படி (ஆங்கிலத்தில் பேசுவது) நடந்து கொள்ள மாட்டார்கள்.

மேற்கு ஜெர்மனியில் கெல்ன் நகரத்தில், வல்ராப் பத்திரிகையில் வீடு வாடகைக்கு விளம்பரத்தை பார்த்து விட்டு தொலைபேசியில் அழைக்கிறார். வீட்டைப் பார்வையிட நேரம் கணித்து விட்டு அங்கே செல்கிறார். வீட்டை சுற்றிக் காட்டும் வயதான ஜெர்மன் மாது, "படிகளை சுத்தப் படுத்த மாதம் 26 யூரோ" மேலதிகமாக கேட்கிறார். வல்ராப் சென்று மறைய, அவர் அனுப்பிய நடிகர்கள் தோன்றுகிறார்கள். என்ன அதிசயம்! அவர்கள் 26 யூரோ கொடுப்பதற்கு பதிலாக, படிகளை தாமே சுத்தப் படுத்திக் கொள்வதாக கூற அதற்கு அந்த மூதாட்டி சம்மதிக்கிறார். மேலும் சற்று முன்னர் வந்து விட்டுப் போன கறுப்பனைப் பற்றி முறைப்பாடு செய்கிறார். "அவன் இங்கிருக்க வேண்டிய ஆள் இல்லை. வீடு வாடகைக்கு எடுக்க வந்தான். தொலைபேசியில் பேசிய பொழுது சரளமாக ஜெர்மன் பேசினான். வருபவன் கருப்பா, வெள்ளையா என்று தொலைபேசியில் மணந்து பார்க்க முடியுமா?"

காட்டில் வேட்டையாடும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் வெள்ளை ஜெர்மானியர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். வல்ராப் அதையும் ஒரு கை பார்த்து விடுவது என்று களத்தில் இறங்குகிறார். தென் ஜெர்மன் மாநிலமான Beieren இல், தனது ஆப்பிரிக்க நண்பனையும் சேர்த்துக் கொண்டு, "வேட்டை அனுமதிப் பத்திரம்" பெறுவதற்காக அரசாங்க அலுவலகம் செல்கிறார். அலுவலக வரவேற்பறையில் நின்றிருந்த பெண் "இரண்டு கறுப்பன்கள் வருவதைக் கண்டவுடன்" தனது மேலதிகாரியை கூப்பிடுகிறார். மேலதிகாரி இருவரையும் மேலும் கீழும் பார்த்து விட்டு: "இதற்கெல்லாம் அடையாள அட்டை வேண்டும்." என்கிறார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் அரச அலுவலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்வார்களா? என்ற யோசனையே இல்லாமல் பேசுகிறார். தாம் இருவரும் ஜெர்மன் பிரஜைகள் என்றும், விண்ணப் பத்திரத்தை கொடுக்குமாறும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கூறுமாறும், வல்ராப் கேட்கிறார். உடனே பொறுமையிழந்த மேலதிகாரி சத்தம் போடுகின்றார்: " இடத்தைக் காலி பண்ணுங்கள். இல்லாவிட்டால் போலீசைக் கூப்பிடுவேன்."

ஜெர்மனியில் வாழும் கருநிற மேனியர்கள் தினசரி அனுபவிக்கும் நிறவாதம் இது போன்றது. அவர்களின் தோலின் நிறத்திற்காக அரசாங்கம் அவர்களை சந்தேகிக்கின்றது. பொது இடங்களில் போலிஸ் அவர்களிடம் மட்டும் தான் அடையாள அட்டை கேட்கின்றது. Charles Friedek ஒரு பிரபலமான கறுப்பின ஜெர்மன்காரர். உலகக் கிண்ணத்தை கைப்பற்றி ஜெர்மனிக்கு பெருமை தேடித்தந்த தடகள விளையாட்டு வீரர். அவர் ஒரு முறை பத்திரிகை பேட்டியில் அரச நிறவாதம் குறித்து முறைப்பாடு செய்தார். "நான் தற்போது ஒரு வயதான நபர். அண்மையில் கூட விமான நிலையத்தில் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டார்கள். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் பாஸ்போர்ட் சோதனை இன்றி செல்ல முடிந்தது. என்னை மட்டும் மறித்து வைத்திருந்தார்கள். ஏன்? நான் தான் ஒரேயொரு கருப்பன்!" (இந்த குற்றச் சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கும் வேறு பலருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் அத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.)

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரிந்திருந்த ஜெர்மன் ஜனநாயக குடியரசும் (கிழக்கு ஜெர்மனி), ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும் (மேற்கு ஜெர்மனி) "கருப்பர்களை" வெள்ளையின சமூகத்துடன் சேர விடாமல் தனிமைப் படுத்தி வைத்திருந்தன. கிழக்கு ஜெர்மனி ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஷலிச நாடுகளில் இருந்து மாணவர்களையும், தொழில் பயிலுனர்களையும் அழைத்து வைத்திருந்தது. ஆனால் விருந்தாளிகள் என்ற அந்தஸ்தில் ஜெர்மன் சமூகத்துடன் சேர விடாமல் முகாம்களில் வைத்திருந்தனர். மேற்கு ஜெர்மனி துருக்கியில் இருந்து தருவிக்கப்பட்ட தொழிலாளிகளை அவ்வாறு முகாம்களில் வைத்திருந்தது. பிற்காலத்தில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்கவே கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது.

இன்று கிழக்கு ஜெர்மனியில் நிறவாதம் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்கின்றது. ஆனால் மேற்கு ஜெர்மனியில் அது மறைபொருளாக வேறு வழிகளில் காண்பிக்கப் படுகின்றது. அது இன்று நவீன நிறவாதமாக பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது. "நான் அவர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர்கள் இங்கே இருக்க வேண்டியவர்கள் அல்ல!" புராதன நிறவாதம் வெள்ளயினத்தவர்களின் நாட்டினுள் வாழத் துணியும் அந்நியர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. ஆனால் நவீன நிறவாதம் அப்படியல்ல. அந்நியர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, அவர்களை எட்டத்தில் வைத்திருக்க விரும்புகிறது.

பெர்லினைச் சேர்ந்த "நிற வெறிக்கு எதிரான அமைப்பு" தொண்ணூறுகளின் பின்னர் இனவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஆவணப்படுத்தியுள்ளது. 1993 இல் இருந்து 761 அகதிகள் தாக்கப் பட்டுள்ளனர். முகாம்களுக்கு நெருப்பு வைத்த அசம்பாவிதத்தில் அகப்பட்டு மரணமுற்றவர்கள் 67 பேர். தெருவில் அகப்பட்டு கும்பல் வன்முறைக்கு இலக்காகி 15 அகதிகள் இறந்துள்ளனர்.

"மொட்டைத் தலையர்கள்"(ஸ்கின் ஹெட்ஸ்), ஹிட்லரையும், நாஜிசத்தையும் ஆராதிக்கும் நிறவெறிக் காடையர்களே வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். சாதாரண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடக்கும் இடங்களில் அவர்களைக் காணலாம். 88 அல்லது 18 போன்ற இலக்கங்களைக் கொண்ட சட்டை போட்டிருப்பார்கள். அந்த இலக்கத்தில் என்ன இருக்கிறது? "Heil Hitler" - இந்த ஜெர்மன் சொற்களில் வரும் முதல் எழுத்தான "H" அரிச்சுவடியில் எட்டாவது இடத்தில் வருகின்றது! அதே போன்றது தான் Adolf Hitler (18). அதற்கடுத்ததாக ஒரு பிரிட்டிஷ் பாஷன் கம்பெனி தயாரிக்கும் "Lonsdale" பிராண்ட் ஆடைகளும் நாஜி ஆதரவாளர்களிடையே பிரபலம். நாஜிக் கட்சியின் பெயரின் சுருக்கமான NSDA அதற்குள் மறைந்துள்ளது! ஜெர்மனியில் மேற்குறிப்பிட்ட சொற்களை நேரடியாக பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனிக்குள் கருப்பனாக சுற்றிக் கொண்டிருந்த வல்ராப், ஒரே ஒரு இடத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டார். கிழக்கு ஜெர்மனியில் மாக்டபூர்க் என்ற நகரில் ஒரு வாகன வர்த்தகர் இவரை சரியாக இனங்கண்டு கொண்டார். ஆயினும் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை. இருந்தாலும் "பொதுவாகவே கிழக்கு ஜெர்மானியர்கள் நிறவெறியர்கள் என்பதைப் போல (மேற்கு) ஜெர்மன் ஊடகங்கள் ஒரு பக்க சார்பான கருத்துகளை பரப்பி வருவதாக" விசனமுற்றார். அதற்கு பதிலளித்த வல்ராப், தான் இரண்டு பக்க ஜெர்மனியிலும் நிலவும் நிறவாதம் பற்றியே ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். பின்னர் ஒரு நேரம் வல்ராபை நேர்காணல் செய்த மாக்டபூர்க் பத்திரிகையாளர், இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். "உங்களது அரிய செயல், எமது நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை இல்லாதொழிப்பதில் பங்காற்றுமாகில், அதற்கு நான் துணை நிற்கிறேன்." என்று வாழ்த்தி அனுப்பினார்.

______________________________________________________

Günter Wallraff

Günter Wallraff
Aus der schönen neuen Welt
Expeditionen ins Landesinnere
ISBN: 978-3-462-04049-4

Erscheinungsdatum: 14. Oktober 2009
336 Seiten, Taschenbuch
KiWi 1069
Lieferbar
Euro (D) 13.95 sFr 25.20 Euro (A) 14.40

Monday, June 07, 2010

தெருக்களில் வாழும் ஜெர்மன் ஏழைகளின் கதை

ஜெர்மனியில் பிரான்க்பூர்ட் (ஆங்கிலத்தில்: பிராங்க்பெர்ட்) நகரம். வானத்தை தொட்டு விடத் துடிக்கும் கட்டிடங்களை இங்கே மட்டும் தான் அதிகம் காணலாம். அமெரிக்காவின் நவீன நகரமான மான்ஹாட்டனுடன் ஒப்பிட்டு பேசுவதில் பிரான்க்பூர்ட் வாசிகளுக்கு அலாதிப் பிரியம். பணம் ஆகாயத்தை நோக்கி பாய்கின்றது. ஜெர்மனி ஒரு பணக்கார நாடு என்பதற்கு நாம் வேறு சாட்சியம் தேடத் தேவையில்லை. அதே பிரான்க்பூர்ட் என்ற பணம் கொழிக்கும் சொர்க்கபுரியின் அடியில் இன்னொரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒஸ்ட்பார்க் எனுமிடத்தில் மிகப் பெரிய "கெண்டேய்னர் முகாம்" உள்ளது. அங்கே வசிப்பவர்களும் ஜேர்மனிய குடிமக்கள் தாம். ஆனால் அவர்கள் எல்லோரும் "வசதியற்ற ஏழை எளியவர்கள்".
"வீடிழந்தவர்கள்" என்று சமூகம் அவர்களை அழைக்கின்றது.

ஜெர்மன் நிர்வாக கட்டுப்பாடுகள் "வீடற்றவர்கள்", "கூரை அற்றவர்கள்" என இரண்டாகப் பிரித்து வைத்துள்ளன. வீடற்றவர்களுக்கு இரவு ஒதுங்குவதற்கு என்றாலும் முகாம்கள் உள்ளன. ஆனால் கூரையற்றவர்களுக்கு அதுவும் இல்லை. எங்காவது பூங்காவில், தெருவோரமாக நடைபாதையில், அல்லது ஒரு கட்டிட மறைவில் படுத்து உறங்க வேண்டியது தான். வெயில், மழை, குளிர், உறைபனி, எத்தகைய காலநிலையிலும் சமாளித்து தப்பிப் பிழைக்க வேண்டும். பலவீனமானவர்கள் 'மைனஸ்' குளிரில் விறைத்து இறந்தும் போவார்கள். வீடற்றவர் முகாமில் தங்குவதற்கு அரசு சில நடைமுறைகளை பின்பற்றுகின்றது. நிலையத்தில் குறிப்பிட்ட அளவு இடம் மட்டுமே உண்டு. அதுவும் சில நாட்களுக்கு நாள். தினசரி அல்கஹோல் பாவனையால் உடல் தளர்ந்தவர்களுக்கு முதலிடம். அதனால் சிலர் வேண்டுமென்றே குடிக்கு அடிமையாகிறார்கள். அரச உபகாரம் வேண்டி பதிய வரும் ஒருவர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் தனது உடமைகளை திருடனிடம் பறி கொடுத்து விட்டு வீதிக்கு வந்த ஒருவர் அவ்வாறு பதிய முடியாது. புதிய அடையாள அட்டை வேண்டுமானால் நீண்ட பரிசோதனைக்கு பிறகு பணம் கட்டிப் பெற வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் இழந்த ஒருவர் பணத்திற்கு எங்கே போவார்? அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அப்படியான தருணங்களில் தெருவோர நடைபாதையே புகலிடம்.

நமது நாடுகளில், வேலையிழந்த, வீடிழந்த, உறவினர்களால் கைவிடப்பட்ட பலருக்கு பிச்சை எடுத்து வாழ்வது மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பொறுப்பெடுக்க வேண்டுமென்ற கடமை உணர்ச்சி அரசாங்கத்திற்கு கிடையாது. தனது பிரஜைகள் இரந்துண்டு வாழ்வதைக் கண்ட பிறகும், தனது சமூகக் கடமையை தட்டிக் கழிக்கும் அரசுகள் இருப்பதற்கு நாமும் ஒரு காரணம். "அரசாங்கத்திற்கு அந்தப் பொறுப்பு கிடையாது" என்று நாமும் தான் சேர்ந்து கொண்டு அநீதிக்கு வக்காலத்து வாங்குகிறோம். பிச்சைக்காரர்கள் இருப்பது தவிர்க்கவியலாத சமுதாய அமைப்பு, என்று ஒதுங்கிக் கொள்கிறோம். மத நம்பிக்கையாளர் என்றால், "இது எல்லாம் முற்பிறவியில் பாவம் தேடியதால் வந்த வினை", என்று விளக்கம் கொடுப்பார். ஜெர்மனியிலும் பிச்சைக்காரர்கள் உள்ளனரா? பிச்சைக்காரகள் என அழைக்கக் கூடிய பிரிவு, "வளர்ந்த நாடுகள்", "பணக்கார நாடுகள்" எங்குமே காணப்படும் தோற்றப்பாடு தான். ஆனால் அங்கெல்லாம் அரசு வெட்கத்துடன் தனது பொறுப்புணர்வை ஏற்றுக் கொள்கின்றது. இருப்பினும் பொருளாதாரப் பிரச்சினைகள், அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, நிர்வாக சீர்கேடுகள் என்பன பலரை தெருக்களிலும், பூங்காக்களிலும் படுக்க நிர்ப்பந்திக்கின்றது. மேற்குலக சமூகத்தில் அவர்களை "Drop Outs " என்று அழைப்பார்கள். அல்லது வீடற்றவர்கள் என பொதுவாக சொல்வார்கள். அரச நிர்வாகம் அவர்களை "நிரந்தர வதிவிடம் அற்றவர்கள்" என்று குறிப்பிடுகின்றது. மக்களை கட்டுப்படுத்தும் ஆட்சிமுறைக்குள் அடங்கவில்லை என்பதால் அப்படி ஒரு பெயர். ஜெர்மனியில் மட்டும் முப்பதாயிரம் வீடற்றவர்கள் வாழ்கின்றனர்.

குய்ந்தர் வல்ராப் (Günter Wallraff ) என்ற ஜெர்மன் எழுத்தாளர், ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறு பக்கத்தை கண்டு, உணர்ந்து எழுதி வருகிறார். இதற்கென தனது பெயரை, வேண்டுமானால் உருவத்தை கூட மாற்றிக் கொண்டு ஊடுருவியுள்ளார். ஜெர்மனியில் துருக்கிய தொழிலாளர்கள் படும் அவலங்களை வெளிக் கொணர்ந்தவர். அந்த நூல் நெதர்லாந்து மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது. (அவரது நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக அறியவில்லை.) தற்போது "அற்புதமான புது உலகம்" (Aus der schönen neuen Welt) என்ற பெயரில் ஒரு நூல் வெளியாகி உள்ளது. இந்த நூலில் அவர் ஒரு வீடற்றவர் போல வேடமிட்டு வாழ்ந்த அனுபவங்களை பதிவு செய்துள்ளார். அந்த விபரங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (ஆப்பிரிக்க அகதி போல, "கால் சென்டர்" பணியாளராக, தொழிற்சாலையில் சுரண்டப்படும் தொழிலாளியாக எல்லாம் கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அவை குறித்து அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.)

ஜெர்மனியில் வீடற்றவர்களாக, தெருவில் பிச்சைக்காரர் போல வாழ்பவர்கள் யாரும், "பிறவிப்பயனை அனுபவிக்கும் பாவிகள்" அல்லர். இன்னும் சொல்லப் போனால், அவர்கள் "பரம்பரை ஏழைகள்" கிடையாது. ஒரு காலத்தில் ராஜா மாதிரி வாழ்ந்தவர்கள். பணத்தில் புரண்டவர்கள். ஆடம்பர பங்களாவில் சொகுசாக வாழ்ந்தவர்கள். கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்த தொழிலதிபர்கள். தமது கல்வித் தகமையை காட்டி அதிக சம்பளம் பெற்ற நடுத்தர வர்க்க புத்திஜீவிகள். அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி. ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களை ஏளனத்துடன் பார்த்தவர்கள், தாங்களும் அந்த நிலைக்கு வருவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். என்ன செய்வது? இரக்கமற்ற முதலாளித்துவ பொருளாதாரம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை. "வல்லவன் பிழைப்பான். பலவீனமானவன் வீழ்வான்.", என்ற அடிப்படை முதலாளித்துவ சூத்திரத்தை அவர்கள் வாழ்க்கையிலும் உணர்த்திக் காட்டியது. "வியாபாரத்தில் வெற்றி பெறுவதே இலட்சியம். வேண்டிய அளவு பணம் சேர்ப்பதே கொள்கை." என்று முழங்கினார்கள். வெற்றி என்பது இன்னொருவனின் தோல்வி என்பதையும், சேகரிக்கப்பட்ட பணம் இன்னொருவன் இழந்த செல்வம் என்பதையும் மிகத் தாமதமாகத் தான் புரிந்து கொண்டார்கள்.

57 வயது விக்டர் தற்போது நோய் வாய்ப்பட்டு மெலிந்து போயுள்ளார். அவரது கண்கள் எப்போதும் அச்சத்துடன் பார்க்கின்றன. ஒரு காலத்தில் அவர் ஒரு "போக்குவரத்து நிறுவனத்தின்" முதலாளி. நன்றாக ஓடிக் கொண்டிருந்த கம்பெனி ஒரு நாள் படுத்து விட்டது. காரணம், மிகப் பெரிய வாடிக்கையாளர் ஒருவரின் இழப்பு. அதன் அர்த்தம் வருமான இழப்பு. வங்கிக் கடன்களை திருப்பி செலுத்த முடியவில்லை. வீடு பறி போனது. குடும்பம் குலைந்தது. உறவினர்கள் காணாமல் போனார்கள். போக்குவரத்து கழகம் நடத்திய முதலாளி காசில்லாததால் சீட்டில்லாமல் பயணங்கள் செய்து பிடிபட்டார். தண்டப்பணம் கட்ட முடியாமல் சிறை சென்றார். இப்பொழுது வானமே கூரையாக தெருவில் படுக்கிறார்.

ஹென்னிங் இன்னும் நடுத்தர வயதைக் கூட எட்டிப் பிடிக்கவில்லை. பங்குச்சந்தை ஆலோசகராக வர வேண்டிய வங்கி ஒன்றின் திறமையான பணியாளர். ஒரு நாள் "டிஸ்கோதேக்" கில் மனைவிக்கு தொந்தரவு கொடுத்த ஒருவனை பிடித்து அடித்ததில் அவன் இறந்து விட்டான். பிறகென்ன? நாலரை வருடங்கள் சிறைவாசம். "தன்னால் தானே சிறைக்கு சென்றார்," என்று குற்ற உணர்ச்சி கொண்ட மனைவி விடுதலை அடையும் வரை காத்திருந்தார். அதற்குப் பிறகு விவாகரத்து பெற்று சென்று விட்டார். விடுதலையான பின்னர் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. சிறை சென்று வந்த வங்கிப் பணியாளருக்கு வேலை கொடுக்க யாரும் விரும்பவில்லை. தற்போது வீடற்றவர் முகாமில் காலம் தள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மன்பிரெட் திறமையான மென்பொருள் பொறியியலாளர். சாப்ட்வெயர் கம்பெனி முதலாளி. ஒரு காலத்தில் இவரின் கீழே பத்து "புரோகிராமர்கள்" வேலை செய்தார்கள். பெரிய நிறுவனங்களுக்கு மென்பொருள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளரான கம்பெனி ஒன்று மோசடி செய்த பணத்தின் ஒரு பகுதிக்கு (1 .2 மில்லியன்) இவரது நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு இவரையும் குற்றவாளியாக கருதியதால் ஐந்து மாதங்கள் சிறை செல்ல
நேர்ந்தது. விடுதலை ஆன பிற்பாடு ஜெர்மனி முழுவதும் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் யாருமே அவருக்கு வேலை கொடுக்கவில்லை. "தண்டிக்கப்பட்டு சிறை சென்ற சாப்ட்வெயர் என்ஜினியரை நம்ப முடியாது, ஆபத்தான பேர்வழி ..." என்பது அவர்களது அச்சம்.

விவாகரத்தின் பின்னர் மனநோயாளியான வங்கி நிர்வாகி, குடியால் நினைவாற்றலை இழந்த டாக்டர், இவ்வாறு பலதரப் பட்ட நபர்களை Günter Wallraff சந்தித்துள்ளார். முன்னொருகாலத்தில் "யார் சிறப்பாக செயல்படவில்லையோ, அவர் வெளியேற்றப் படுவார்..." என்று சமூகம் குறித்த தவறான கோட்பாடுகளை நம்பியதாகவும், வீடிழந்து தெருவில் வாழும் வாழ்க்கை எவ்வளவு விரைவில் நடக்கக்கூடியது என்பதை அனுபவத்தில் கண்டு உணர்ந்துள்ளதாக கூறியுள்ளார். தெருவில் கட்டிட நிழலில் படுக்கும் சிறு இடத்திற்கு கூட சண்டை போட்ட இரு ஜெர்மன் ஜோடியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், தனது வசதியான படுக்கையை கொடுத்து உணவையும் பகிர்ந்து கொண்ட போலந்து நாட்டை சேர்ந்த கூலித் தொழிலாளிகளின் சகோதரத்துவத்தை கண்டு கண் கலங்கியதாக எழுதுகிறார்.

ஜெர்மன் தெருக்களில் வாழ்பவர்களில் சில ஜாலியான பேர்வழிகளும் உண்டு. முய்ன்ஷேன் (ஆங்கிலத்தில் : மியூனிச்) நகரில் அன்றைய மாநில முதலமைச்சர் Edmund Stoiber மீது முட்டை வீசிய வீரச் செயலை சொல்லி பெருமைப் பட்டார் மதியாஸ். அன்று கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், " எற்றுக்கொள்ள முடியாத இனக்கலப்பு" பற்றியும், வெளிநாட்டவருக்கு எதிராகவும் அர்த்தமற்ற கதைகளை கூறிக் கொண்டிருந்தார். முட்டை வீசிய குற்றத்திற்காக பொலிஸ் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்தது. இன்னொரு மறக்க முடியாத நபர் தோமஸ். வீடுகளுக்கு வண்ணம் பூசும் வேலையில் நன்றாக சம்பாதித்தவர். ஆனால் திடீரென வேலையை விட்டு விட்டு நாடோடியாக அலைகின்றார். எத்தனை காலத்திற்கு தான் வேலை வேலை என்று அலைவது? ஓய்வு வேண்டாமா? அவரது நீண்ட விடுமுறைக் காலமான 27 வருடங்களை ஐரோப்பிய தெருக்களில் கழித்துள்ளார். தென் இத்தாலி வரை ஆண்டியாக அலைந்து விட்டு வந்துள்ளார். அவர் தனது முடிவையிட்டு ஒரு நாளும் வருந்தியது கிடையாது. "ஊரைத் தெரிந்து கொண்டேன். உலகம் புரிந்து கொண்டேன்." என்று ஜாலியாக வாழ்கிறார்.
_______________________________
மேலதிக விபரங்களுக்கு :
Günter Wallraff
Günter Wallraff: Undercover Journalist

Friday, June 04, 2010

அமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்

"எவராலும் வெல்ல முடியாத நாடு!" என்ற பெயரெடுத்த இஸ்ரேல் வரலாற்றில் முதன் முறையாக தோல்வியை சுவைக்கத் தொடங்கியிருக்கிறது. பி.எல்.ஒ.வின் தேசியவாதமும், ஹமாசின் இஸ்லாமியவாதமும் அடைய முடியாத இலக்கை சர்வதேசிய சித்தாந்தம் சாதித்துக் காட்டியுள்ளது. ஆயுதத்தால் அசைக்க முடியாத இஸ்ரேலை அஹிம்சை மிரட்டுகிறது. மே 31 இரவு நடுக்கடலில் காசா நோக்கி சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பல் (Mavi Marmara) இஸ்ரேலிய படையினரின் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது. சர்வதேச கடற்பரப்பில் கடற்கொள்ளையர்கள் போல நடந்து கொண்ட இஸ்ரேலின் அத்துமீறல் சர்வதேச கண்டனங்களை எழுப்பியுள்ளது. இஸ்ரேலிய படையினரின் திடீர் தாக்குதலில் 20 ஆர்வலர்கள் மரணமடைந்துள்ளனர். பலியானவர்களில் பலர் துருக்கிய பிரஜைகள், ஒருவர் அமெரிக்கர்.

தனது படையினரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியதால், "தற்பாதுகாப்பு கருதியே" நிவாரணக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. மேலும் ஹமாசுக்கு கொடுப்பதற்காக கப்பலில் ஆயுதங்கள் கடத்தப் பட்டதாகவும் தெரிவித்தது. துருக்கி தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான "மாவி மர்மரா" என்ற பயணிகள் கப்பலே தாக்குதலுக்கு உள்ளானது.(காசாவில் இருந்து 65 கி.மி. தொலைவில்) தாக்குதல் நடந்த நேரம் மாவி மர்மரா உட்பட பல கப்பல்கள் காசா நோக்கி சென்றுள்ளன. 700 தொண்டர்களும், 10000 தொன்கள் நிவாரணப் பொருட்களும் இருந்துள்ளன. கப்பல்களில் சென்ற அனைவரும் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்தேசத்தவர்கள் அடங்குவர். பெரும்பான்மையானோர் விடுவிக்கப்பட்டு துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டனர். கப்பல்களையும், நிவாரணப் பொருட்களையும், அதனோடு தொண்டர்களின் உடமைகளையும் இஸ்ரேலிய படையினர் அபகரித்து வைத்துள்ளனர். செல்லிடத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் எதையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

நாடு கடத்தப் பட்ட தொண்டர்கள் வழங்கிய நேர் காணல்கள், இஸ்ரேல் அறிவித்ததற்கு முரணாக உள்ளன. இஸ்ரேலிய படையினர் ஹெலிகாப்டரிலும், கடற்படைக் கப்பல்கள் கொண்டும் சுற்றி வளைத்து சுட்டுள்ளனர். அப்போதே முதல் பலிகள் விழுந்து விட்டன.(
Israelis opened fire before boarding Gaza flotilla, say released activists) மாவி மர்மரா கப்பலை கைப்பற்றும் நோக்குடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த படையினர் இறங்கிய உடனே சுடத் தொடங்கினார்கள். அதன் பிறகே தற்பாதுகாப்புக்காக சில ஆர்வலர்கள் இஸ்ரேலிய படையினரை தாக்கி உள்ளனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் திருடனை தாக்குவது போன்ற நடவடிக்கை அது. அந்த சம்பவத்தை மட்டும் வீடியோ பண்ணி, இஸ்ரேல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது. "இதோ பாருங்கள். எமது படையினரை தாக்குகிறார்கள். அதனால் தற்பாதுகாப்புக்காக சுட்டோம்." என்றார்கள். ஆனால் நடந்த சம்பவத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களின் கமெராவில் இவ்வாறு பதிவாகி உள்ளது. "அவர்கள் எம்மை நோக்கி சுடுகிறார்கள்... வெள்ளைக்கொடி உயர்த்திய போதிலும் சுடுகிறார்கள்... கிரனேட்கள்,நிஜமான துப்பாக்கி குண்டுகளை பாவிக்கிறார்கள்... சிலர் காயமடைந்துள்ளனர்...." அரபி, ஆங்கிலம், துருக்கி மொழி செய்தியாளர்கள் மாறி மாறி அறிவிக்கிறார்கள். (RAW FOOTAGE: Israel navy massacres on one of Gaza Freedom Flotilla) அந்த வீடியோ தான் கடைசியாக செய்மதி தொடர்பை பயன்படுத்தி அனுப்பப் பட்டது. அதன் பிறகு இஸ்ரேலிய படையினர் செய்மதி தொடர்பை துண்டித்து விட்டார்கள். அல் ஜசீராவுக்கு கிடைத்த அந்த எடிட் செய்யப்படாத வீடியோ ஏனோ ஒளிபரப்பப்படவில்லை. ஈரான் தொலைக்காட்சி Press TV யில் மட்டுமே காண்பிக்கப் பட்டது.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள், அல் ஜசீரா இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரை நேர்கண்டது. அதில் அவர் "நிவாரணக் கப்பலில் ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கண்டுபிடிக்கப் பட்டதாக" தெரிவித்தார். இஸ்ரேல் ஆர்வலர்கள் அனைவரையும் கைது செய்து, கப்பலையும் தடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதே அமைச்சரை பேட்டி கண்டது அல்ஜசீரா. "கைப்பற்றிய ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் ஆதாரஙகளுடன் காட்டுமாறு" கேட்டது. அதற்கு அந்த அமைச்சர் "ஆயுதங்களை கண்டெடுத்ததாக அன்று நான் சொல்லவே இல்லை!" என்று மழுப்பினார். இதற்கிடையே கப்பலில் தொண்டராக சென்று நாடுகடத்தப் பட்ட சுவீடிஷ் எழுத்தாளர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதிலே அவர் கூறியதாவது: "இஸ்ரேலிய படையினர் என்னை கைது செய்து விட்டு, எனது உடமைகளை பரிசோதித்தார்கள். பயங்கர ஆயுதம் ஒன்றை வைத்திருந்ததாக என் மீது குற்றம் சுமத்தினார்கள். அவர்கள் காட்டிய பயங்கர ஆயுதம் என்ன தெரியுமா? எனது ஷேவிங் ரேசர்!"

இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் துருக்கியர்கள். இதனால் துருக்கியில் இஸ்ரேலுக்கு எதிரான அலை எழுந்துள்ளது. இஸ்தான்புல் நகரில் இஸ்ரேலிய துணைத் தூதுவராலயத்தை முற்றுகையிட்ட மக்கள் திரள், தூதுவராலயத்தினுள் நுளைய விடாது துருக்கி பொலிஸ் தடுத்தது. துருக்கி பிரதமர் இஸ்ரேலுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இஸ்ரேலுடன் நட்புறவைப் பேணி வந்த மிகக் குறைந்த முஸ்லிம் நாடுகளில் ஒன்று துருக்கி. இரண்டு நாட்டு இராணுவங்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தன. இது வரை காலமும் இருந்து வந்த உறவு இறுதிக் கட்டத்தை அடந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் முக்கியமான நண்பனை, இஸ்ரேல் இழக்கின்றது. மேலும் துருக்கி நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிலும் உறுப்பினர். "நேட்டோ உறுப்பினர் ஒருவர் தாக்கப் பட்டால் அனைவரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற சட்டம் இப்போது பரீட்சித்துப் பார்க்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம். துருக்கி நட்பு பாராட்டிய அமெரிக்கா இஸ்ரேலின் குற்றத்தை கண்டிக்கவில்லை. இது அமெரிக்க - துருக்கி உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

Free Gaza என்ற அரசு சாரா சர்வதேச தொண்டு நிறுவனம் நிவாரணக் கப்பல்களை காசாவுக்கு அனுப்பி வைத்தது. ஆகஸ்ட் 2008 இவர்களது கப்பல்கள் காசா போய் சேர்ந்தன. அப்போது காசா பகுதியில் இஸ்ரேலிய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. அதையும் மீறி அந்தக் கப்பல்கள் நிவாரணப் பொருட்களை பசியால் வாடும் காசா மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்தன. கடந்த இரண்டு வருடங்களாக காசா பிரதேசம் இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பும் பொருட்களைக் கூட, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே போக அனுமதிக்கப் படுகின்றது. சுருக்கமாக சொன்னால், ஒரு பெரிய தடுப்பு முகாமினுள் காசா மக்கள் கைதிகளாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். (பார்க்க: காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்)

Free Gaza அமைப்பில் பல சர்வதேச பிரபலங்கள் அங்கம் வகிக்கின்றனர். ஹாலிவூட் நடிகர்கள், கிரேக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், ஐரோப்பிய மத்திய வங்கி தலைமை நிர்வாகியின் மனைவி, எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பல்துறை சார்ந்தவர்கள். அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பிரிட்டன், நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், கிறீஸ், பிறெசில், மலேசியா என்று பல்வேறு தேசங்களின் பிரஜைகள். இந்த சர்வதேச அமைதிப்படை இஸ்ரேலின் அரச பயங்கரவாததை கண்டு பயந்து ஓடி விடவில்லை. இன்னும் நூறு கப்பல்களில் வந்து கொண்டே இருப்போம் என்று சூளுரைத்துள்ளனர். "Mavi Marmara துன்பியல் சம்பவம்" நடந்து கொண்டிருந்த தருணத்தில் கூட அயர்லாந்தில் இருந்து புறப்பட்ட நிவாரணக் கப்பல் ஒன்று காசா நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு தினங்களில் அது காசா கரையை தொட்டு விடும். அந்தக் கப்பலின் பெயர் "Rachel Corrie". யார் இவர்? 2003 ம் ஆண்டு காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட, அமெரிக்காவை சேர்ந்த சமூக ஆர்வலர். இஸ்ரேலிய படைகள் மக்களின் வீடுகளை இடித்த பொழுது தன்னந்தனியாக எதிர்த்து நின்று போராடினார். அதற்காக அந்த இளம் யுவதி மீது புல்டோசரை ஏற்றி கொன்றார்கள். மக்களுக்காக மரித்த தியாகி Rachel லின் ஆவி இஸ்ரேலை பிடித்தாட்ட வந்து கொண்டிருக்கிறது.
_______________________________________
RAW FOOTAGE: Israel navy massacres on one of Gaza Freedom Flotilla


உசாத்துணை:
The Free Gaza Movement
'Israel Feels More and More Isolated'
Israelis opened fire before boarding Gaza flotilla, say released activists

Thursday, June 03, 2010

"ஹலால் செக்ஸ்" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்

சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது "Online இஸ்லாமிய செக்ஸ் கடை", இன்டர்நெட்டில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனர் நெதர்லாந்தில் வாழும் மரோக்கோ வம்சாவழி முஸ்லிம். நிறுவனர் தான் இது குறித்து ஒரு இமாமிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் " இதிலே இஸ்லாமுக்கு மாறான எந்த அம்சமும் இல்லை." திருப்தி தெரிவித்ததாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறும் பொழுது: "நான் கூட மத நம்பிக்கையுள்ள முஸ்லிம் தான். எனது (ஹலால்) செக்ஸ் கடையில் ஆபாசப் படங்கள் இருக்காது. திருமணமான தம்பதிகளுக்கு தேவையான தாம்பத்திய வாழ்வை திருப்தி செய்யும் பொருட்களையே விற்கிறேன்." என்றார். இதிலே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், பாலியல் வக்கிரங்களை சந்தைப் படுத்தும் சாதாரண மேற்கத்திய செக்ஸ் கடையைப் போல இதனைக் கருத முடியாது. இருப்பினும் நெதர்லாந்து ஊடகங்கள், இதை ஏதோ இஸ்லாமிய மதத்தினரிடையே ஏற்பட்டுள்ள கலாச்சாரப் புரட்சி என்பதைப் போல சித்தரித்திருந்தன.

பாலியல் கேளிக்கைப் பொருட்களை விற்கும் செக்ஸ் கடைகள், முதலாளித்துவம் கோலோச்சும் சர்வதேச நகரங்களில் சாதாரணமாக காணப்படும். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், ஆசியாவில் இந்து /பௌத்த/கிறிஸ்தவ பழமைவாதம் பேணும் நாடுகள், ஆகிய இடங்களில் மட்டும் இவை காணப்படுவதில்லை. தனி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என்ற சூத்திரம் முதலாளித்துவத்தின் அடிப்படை. அதன் பிரகாரம் எதோ ஒரு வகையில் செக்ஸ் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. "இன்டர்நெட்" என்ற மகத்தான கண்டுபிடிப்பு அதற்கு உதவுகின்றது. ஏதாவது நாடு அதை தடை செய்யும் பட்சத்தில், "தனி மனித சுதந்திரத்தை தடுக்கிறார்கள்" என்று அந்த நாடு மீது குற்றம் சாட்ட முடியும்.

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பகிரங்கமாக செக்ஸ் கேளிக்கைப் பொருட்கள் விற்கும் கடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் அவை கிடைப்பதில்லை எனக் கூற முடியாது. அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ரகசியமாக கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அல்லது சில சட்டவிரோத வியாபாரிகள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள். தனி மனித பாலியல் இச்சைகளை மூடி மறைத்துக் கொண்டு, வெளியே ஒழுக்கசீலர்களாக காட்டிக் கொள்ளும் சமூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்துக்கள்,பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இத்தகைய பழமைவாத சமூகங்களை உடைக்கும் பணியில் முதலாளித்துவம் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு "கலாச்சார மோதல்", "அல்கைதா அபாயம்", "மத அடிப்படைவாதத்தை அடக்குதல்" என்றெல்லாம் தத்துவ விளக்கம் அளிக்கப்படுகின்றது.

கம்யூனிசத்திடம் இருந்து விடுதலையான ரஷ்யா முதல், இஸ்லாமிய அடிப்படைவாதத்திடம் இருந்து விடுதலையான ஆப்கானிஸ்தான் வரை பரவி வரும் சமூகச் சீரழிவுகளுக்கு தனி மனித சுதந்திரம் என்று பெயர் சூட்டப்படுகின்றது. இத்தகைய "விடுவிக்கப் பட்ட பகுதிகளில்" பாலியல் தொழில் அமர்க்களமாக நடக்கின்றது. பருவ வயதை எட்டாத சிறுவர்கள் கூட குடும்ப வறுமையைப் போக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். சமுதாய சீர்குலைவுக்கு காரணமான வறுமையை முதலில் ஒழிக்க வேண்டும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அதனால் "கம்யூனிசமும், இஸ்லாமும் தனி மனித சுதந்திரங்களை அடக்கி வைத்திருந்தார்கள்." என்று நாமும் விளக்கம் கூறக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்குலக பல்கலைக்கழகங்கள் இதை "கலாச்சாரங்களின் மோதல்" என்று வரைவிலக்கணம் கொடுக்கின்றன. தாலிபானும், அல்கைதாவும் அதையே "ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரத்திற்கு எதிரான மத நம்பிக்கையாளர்களின் போராட்டம்" என்று
திருப்பிப் போடுகிறார்கள். யாழ்ப்பாண தமிழர்களிடையே கலாச்சார சீர்குலைவு காணப்பட்டால், அதனை "தமிழர்கள் மீதான சிங்களவர்களின் சதி" என்பார்கள் தமிழ் தேசியவாதிகள். தென்னிலங்கை கடற்கரைகளில் வெள்ளையின உல்லாச பயணிகளின் காமவெறிக்கு இரையாகும் (சிங்கள) சிறுவர்கள் பற்றி இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மதவாதிகள், தேசியவாதிகள் எல்லோரும் இதனை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்கின்றார்கள். இவர்களுக்கிடையிலான அடிப்படைப் பிரச்சினை ஒன்று தான். சமூக சீரழிவுகளுக்கு காரணம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பதை நம்ப முடிவதில்லை.

மேற்கத்திய முதலாளிகள் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக "ஹலால்" பொருட்களை சந்தைப் படுத்துகிறார்கள். இத்தனை காலமும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பல்வேறு முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த வர்த்தகர்கள், "ஹலால் சந்தையில்" ஏகபோக ஆதிக்கம் செலுத்தினார்கள். "இவ்வளவு காலமும் மில்லியன் யூரோ வருமானம் வரும் ஹலால் சந்தையை கவனிக்காமல் விட்டு விட்டோமே" என்று அங்கலாய்க்கிறார்கள் ஐரோப்பிய முதலாளிகள். நெதர்லாந்தின் மிகப் பெரிய சூபர் மார்க்கட் நிறுவனம் (Albertheijn) தனது கடைகளில் ஹலால் முத்திரை இடப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றது. இந்த ஹலால் வியாபாரத்தில் புதிய வரவு "சைக்கிள் கம்பனி".

நெதர்லாந்து ஒரு சைக்கிள்களின் நாடு என அழைக்கலாம். ஐரோப்பாவில் இந்த நாட்டில் தான் சைக்கிள் பாவனையாளர்கள் அதிகம். ஆனால் புதிதாக வரும் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சைக்கிள் பாவிப்பது குறைவு. அவர்கள் அநேகமாக கார், அல்லது மோட்டார் சைக்கிளையே நாடுகின்றனர். வெளிநாட்டு குடிவரவாளர்கள் என்றால் முஸ்லிம்கள் என்று கருதிக் கொள்வது பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. அதனால் சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கேற்ற "ஹலால் சைக்கிள்" தயாரிக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், " இஸ்லாமிய மத நம்பிக்கையின் பிரகாரம் பெண்கள் சைக்கிள் ஓடுவது விரும்பத்தக்கதல்ல என்று எமது ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறோம்." என்பது தான். இறைதூதர் முகமது நபி வாழ்ந்த காலத்தில் சைக்கிள் இருந்ததாக நாம் அறியவில்லை. பெண்கள் சைக்கிள் ஓடக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு, பெருமளவு சைவத் தமிழர்கள் வாழும் யாழ் குடாநாட்டிலும் இருந்துள்ளது. (கடந்த 30 வருடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன.)

முஸ்லிம்கள் சைக்கிளை விரும்பாததற்கு மதக் கட்டுப்பாடு தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செய்தியை அறிவித்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே மேலதிக விளக்கமும் கிடைக்கிறது. காரில் வீதிவலம் வருவது, வயதுக்கு வராவிட்டால் ஸ்கூட்டரில் ஸ்டன்ட் காட்டுவது, என்பது இளைய தலைமுறையின் நாகரீக மோகம். முஸ்லிம் இளைஞர்களும் உலகை ஆட்டிப்படைக்கும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகள் தான். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட "டூவீலரில்" போவது மத்திய தர வர்க்க "ஸ்டேடஸ்". சைக்கிளில் போனால் சமூகத் தாழ்வாக கருதிக் கொள்வார்கள். ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள் தாம். ஜாலியாக காரில் பறக்கும் நாகரீக இளைஞர்களிடம் "வாகனங்கள் வெளிவிடும் கரியமில வாயுவினால் சுற்றுச் சூழல் மாசடைவது" பற்றி போதிக்க முடியாது. சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

மத நம்பிக்கையாளர்களை விட பண நம்பிக்கையாளர்கள் பெருகி வரும் காலம் இது. முதலாளித்துவ கலாச்சாரம் இன்று அனைத்து மதங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் கலாச்சாரமும், அதற்குள் துணைக் கலாச்சாரங்களும் இருப்பதாக வணிகத்துறை பாடநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. துணைக் கலாச்சாரங்களின் "தேவைகளை" பூர்த்தி செய்வதற்காக மூலதனம் ஹலால் சந்தையைக் கைப்பற்ற துடிக்கின்றது. அது முஸ்லிம்களின் வழிபாட்டு ஸ்தலங்களையும் விட்டு வைக்கவில்லை. சவூதி அரேபியா உலகம் முழுவதும் மசூதி கட்டிக் கொடுக்கும் "ரியல் எஸ்டேட்" வியாபாரத்தில் இறங்கி இருப்பது இரகசியமல்ல. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சவூதி அரேபியாவின் மூலதனம் பாய்வதைத் தடுப்பதற்காக, அரசாங்கமே மசூதி கட்ட நிதி வழங்குகின்றது. சவூதியின் (கடும்போக்கு) "வஹாபிஸ" இஸ்லாமுக்கு போட்டியாக, (தாராளவாத) "ஐரோப்பிய" இஸ்லாம் உருவாக்கப்படுகின்றது. சபாஷ்! சரியான போட்டி!!


________________________________________

உசாத்துணை :
Online Islamic sex-shop opens for business
"ஹலால் சைக்கிள்" பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தி அறிக்கை