புதிய ஜனநாயகம் இதழில் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை!
ஜேவிபி இந்திய- இலங்கை முதலாளிய ஆளும் வர்க்க நலன்களுக்கு விலை போவதாக சொல்வதில் ஒரு நியாயம் இருக்கலாம். அதே நேரத்தில், அதே ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல் ஊடகங்கள் ஜேவிபி தொடர்பாக செய்யும் பொய் பிரச்சாரங்களை ஒரு உழைக்கும் வர்க்க பிரதிநிதி நம்புவது அநியாயம்.
"ஜேவிபி, 1980 களில் நிகழ்த்திய இனப் படுகொலை வன்முறைகளுக்கு மன்னிப்பு தெரிவிக்குமா?" என்று சிங்கள பேரினவாத ஆளும் வர்க்க ஊடகங்கள் விவாதங்களை கட்டமைத்தால் அதை புதிய ஜனநாயகத்தில் அப்படியே போடுவீர்களா? 1988-89 இனப் படுகொலை பழியை ஜேவிபி மீது போடுவது அபத்தம் மாத்திரம் அல்ல, ஆளும் வர்க்கத்தின் பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே வாந்தி எடுப்பதும் ஆகும்.
"LTTE, 2009 ல் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்குமா?" என்று ஊடகங்கள் ஒரு விவாதத்தை கட்டமைப்பது சரியா? இது அரச படைகள் செய்த படுகொலைகளை மூடி மறைப்பது ஆகாதா? 2009 இனப் படுகொலைக்கு LTTE மட்டுமே காரணம் என்ற மாதிரி கட்டமைத்து ஒரு கேள்வி கேட்கப் பட்டால் அதற்கு தமிழர்களிடம் இருந்து எப்படியான எதிர்வினைகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். அது எப்படி இவர்களால் ஜேவிபி என்றால் மட்டும் உடனே அரச ஆதரவு நிலைப்பாடு எடுக்க முடிகிறது? எனக்கு புரியவில்லை.
இந்தக் கட்டுரையில் இன்னொரு இடத்தில் "1983 ஜூலையில் நடந்த ஈழ மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில் ஜேவிபி முன் நின்று செயற் பட்டது." என்று அவதூறு புனைந்து அபாண்டமான பழி சுமத்த படுகிறது. இது படு அபத்தம் மட்டுமல்ல. ஜூலை படுகொலைகளை முன் நின்று நடத்திய, உண்மையான குற்றவாளிகளான, அன்று ஆட்சியில் இருந்த வலதுசாரி- இனவாத UNP அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் வேலை. நிச்சயமாக, புதிய ஜனநாயகத்திடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை!
"1983 இனக் கலவரத்தை ஜேவிபி நடத்தியது!" என்று அன்றைய ஜே. ஆர். அரசாங்கம் செய்த பொய் பிரச்சாரத்தை இந்த கட்டுரையாளர் உண்மை என்று நம்பி இருக்கிறார். இலங்கையில் அன்று அதை யாரும் நம்பவில்லை. சிங்களவர் மட்டுமல்ல தமிழரும் நம்பவில்லை. அன்றிருந்த ஜே. ஆர். அரசாங்கம் இதை ஒரு சாட்டாக வைத்து, ஜேவிபி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் அது. இப்படிப் பார்ப்போம். இந்தியாவில் மோடி அரசாங்கம் குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டி புதிய ஜனநாயகம் மற்றும் பல இந்தியா கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தால் அதை நாங்கள் உண்மை என்று நம்ப வேண்டுமா?
ஆளும் வர்க்க நலன் சார்ந்த சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்கள் கூட இனவாத கண்ணோட்டத்தில் திரிபு படுத்தி செய்தி தெரிவிப்பது வழமையாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று ரணில் அரசாங்க சார்பு ஊடகங்கள் ஜேவிபி யை தமிழர்களுக்கு எதிரான கட்சியாக கட்டமைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதையே தமிழ் ஊடகங்களும் செய்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதை எல்லாம் நம்புவதாக கட்டுரையாளர் நினைத்துக் கொள்வது சுத்த அபத்தம். எல்லோரையும் மூளைச் சலவை செய்ய முடியாது. சுய புத்தியில் சிந்திக்கும் தமிழர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் யாரும் ஜேவிபி யை எதிரியாக கருதவில்லை.
1988-89 இனப்படுகொலயை ஒவ்வொரு வருடமும் ஜேவிபி நினைவு கூர்ந்து வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ஜேவிபி நடத்திய கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்த கிராம மக்களும் அரச படையினரால் படுகொலை செய்யப் பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் 18 வயதை அடையாத பாடசாலை மாணவர்கள் கூட ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பட்டுள்ளனர். இணையத்தில் சூரியகந்த புதை குழி என்று தேடிப் பாருங்கள். இது பிற்காலத்தில் தற்செயலாக கண்டுபிடிக்க பட்டது. இதை விட இன்னமும் தோண்டப் படாத மனித புதை குழிகள் ஏராளம் உள்ளன.
1988-89 இனப் படுகொலைக்கு நீதி கிடைத்து விட்டதா? அந்தப் படுகொலைகளுக்கு இதுவரை யார் பொறுப்பு ஏற்றார்கள்? எத்தனை பேர் தண்டிக்க பட்டனர்? ஒன்றுமே இல்லை. காரணம் என்ன? ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான ஏழைகள், உழைப்பாளிகள், தாழ்த்தப்பட்ட சாதியினர் கொன்று குவிக்கப் பட்டால் அது குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. அதனால் தான் இன்று வரையில் முதலாளித்துவ ஊடகங்கள் இதைப் பற்றி பேச மறுக்கின்றன. மேற்கத்திய, சர்வதேச நாடுகள் பாராமுகமாக உள்ளன. ஆனால் வர்க்க அரசியல் பேசும் புதிய ஜனநாயகம் இந்த உண்மைகளை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது கவலை அளிக்கிறது.
4 comments:
புதிய ஜனநாயகம் பெயரில் இரண்டு இதழ்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளி வருகின்றன. முகப்பு அட்டையை வெளியிட்டால் அது யாருடையது என தெரிந்து கொள்ள முடியும். வினவு தளம் சார்புடையதா அல்லது பாடகர் கோவன் சார்புடையதா?
அட்டைப் படம் பதிவில் சேர்த்து இருக்கிறேன். பார்க்கவும்.
இது வினவு தரப்பு இதழ்.
வணக்கம் தோழர், தோழர் தியாகு ஜேவிபி இனவாத கண்ணோட்டத்தோடு தான் செயல்படுகிறது என்று பல ஆதாரங்களை முன் வைக்கிறார் அதற்கும் சேர்த்து விளக்கம் சொன்னால் சரியாக இருக்கும்
Post a Comment