Wednesday, September 16, 2020

பூர்ஷுவாசி - முதலாளிகளின் பட்டப் பெயர் வந்தது எப்படி?

-    ஐரோப்பிய வணிகர்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாக் கண்டங்களில் வணிக மையங்களை நிறுவி, அங்கிருந்த மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கொள்ளை இலாபம் சம்பாதித்தனர். உதாரணத்திற்கு இலங்கை, இந்தியாவில் கேரளா, இந்தோனேசியாவில் மொலுக்கு தீவுகள் ஆகிய இடங்களில் கிடைத்த கடுகு, கராம்பு, போன்ற வாசனைத் திரவியங்களுக்கு ஐரோப்பாவில் அதிக கேள்வி இருந்தது. அதனால் அந்தப் பொருட்களை பத்து மடங்கு இலாபம் வைத்தும் விற்க முடிந்தது. அத்துடன் அடிமை வாணிபத்தில் கிடைத்த இலாபப் பணத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

-   காலனிகளில் தங்கியிருந்து தேசங்கடந்த வர்த்தம் செய்ததன் மூலம் கிடைத்த அளவுகடந்த இலாபப் பணமானது மூலதனத்தை திரட்ட உதவியது. அவர்கள் அந்தப் பணத்தை தமது ஐரோப்பிய தாய்நாட்டில் பெரும் தொழிற்துறைகளில் முதலீடு செய்தனர். அதன் மூலம் மென்மேலும் இலாபம் சம்பாதித்தார்கள்.

 இந்த காலனிய வணிகர்கள் தமது தாயகத்தில் பெருமளவு பணம் படைத்த கோடீஸ்வரர்களாக இருந்தனர். இந்தப் புதுப் பணக்காரர்கள் பிரபுக்கள் குடும்பங்களில் திருமண சம்பந்தம் செய்து கொண்டதன் மூலம் நாட்டில் சக்திவாய்ந்த மனிதர்களாக உருவானார்கள். அரசியலில் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. இதைப் பயன்படுத்தி வணிக முதலாளித்துவம் வளர்வதற்கான திட்டங்கள் தீட்ட முடிந்தது.

 ஒரு காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளால் ஐரோப்பாவில் வட்டி அறவிடுவது பாவ காரியமாக தடைசெய்யப் பட்டிருந்தது. அதனை இந்த முதலாளிகள் தமது அரசியல் செல்வாக்கின் மூலம் மாற்றி அமைத்தனர். இதனால் வங்கிகள் வட்டிக்கு கடன் கொடுக்க முடிந்தது. முதலாளிகளின் நலன்கருதி ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. சமாதானம் கொண்டு வரப் பட்டது. சர்வதேச கடற்பரப்பில் வணிகக் கப்பல்களை பாதுகாப்பதற்கான ஏற்பட்டுகள் முன்னெடுக்கப் பட்டன.

முதலாளித்துவம் வளர்வதற்கு இன்னொரு காரணியும் இருந்தது. காலனிய வணிகர்களில் ஒரு சிலர் வங்கிகளை அமைத்து, பிற நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து வந்தனர். இதன் மூலம் புதிய வர்த்தக முயற்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும் நிதி வழங்கப் பட்டது. இந்த நடைமுறையானது இன்றுள்ளது போன்ற நவீன முதலாளித்துவத்திற்கு வித்திட்டது.

 ஆரம்பத்தில் இத்தாலி, ஜெர்மனியில் சிறிய அளவில் தோன்றிய வங்கித்துறையானது இங்கிலாந்தில் சிறப்பாக வளர்த்தெடுக்கப் பட்டது. 1800 ம் ஆண்டளவில் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிய வங்கிகள் மாவட்டங்கள் தோறும் கிளைகளை திறந்தன.  அவை வணிகர்கள், தொழிலதிபர்களுக்கு குறுகிய கால கடன் வழங்கின. இருப்பினும் வெளிநாட்டு வர்த்தகத்தில் முதலிடுவது தான் அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது. அதற்குக் காரணம், காலனிய நாடுகளை சுரண்டியதால் கிடைத்த இலாபப் பணம், உள்நாட்டு உற்பத்தியில் கிடைத்த இலாபத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. இன்றைக்கும் இந்த நிலைமையில் பெருமளவு மாற்றம் எதுவும் வந்து விடவில்லை.

 மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அளவுகடந்த தங்கமும், வெள்ளியும் வந்து குவிந்த படியால், அது நாட்டின் சமூக பொருளாதாரத்திலும் மாற்றத்தை கொண்டு வந்தது. குறிப்பாக நிலத்தின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் பெரும் நிலவுடமையாளர்கள் வருமான இழப்பு காரணமாக தமது காணிகளை, புதுப் பணக்காரர்களான முதலாளிகளுக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நிலங்களை வாங்கிய முதலாளிகள் அவற்றை தமது தொழிற்துறைக்கு பயன்படுத்தினார்கள். அதே நேரம் பண வீக்கம் காரணமாக உழைப்பாளிகளின் கூலியும் குறைந்து விட்ட படியால், முதலாளிகளுக்கு இரட்டிப்பு இலாபம் கிடைத்தது.

 ஐரோப்பிய நாட்டவருக்கு யுத்தம் ஒரு புதிய விடயம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் தமக்குள்ள ஒற்றுமை இன்றி போரிட்டுக் கொண்டிருந்தன. இதனால் மனிதப் பேரவலம் மட்டுமல்லாது பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டு வந்தன. ஆனால், முதலாளித்துவம் நடைமுறைக்கு வந்த பின்னர், பேரழிவு தரும் போர்களுக்குப் பின்னரும் இலாபம் சம்பாதிக்கலாம் என்ற நிலைமை உருவானது.

 குறிப்பாக நெப்போலியனின் ஐரோப்பியப் படையெடுப்புகளினால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னர், புதிய நகரக் கட்டுமானப் பணிகள் முதலாளிகள் விரும்பிய படி நடந்தன.

அது மட்டுமல்ல, நெப்போலியன் படையெடுத்து ஆக்கிரமித்த நாடுகளில் எல்லாம் புதிதாக அரசமைப்பு சட்டங்கள் உருவாக்கப் பட்டன. அதற்கு முன்னர் எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் எழுதப் படவில்லை. உண்மையில் நெப்போலியனால் தான் சட்ட நூல்கள் அறிமுகப் படுத்தப் பட்டன. இந்த சட்டங்கள் தனியுடைமையை பாதுகாப்பதாகவும், முதலாளித்துவத்திற்கு ஆதரவாகவும் எழுதப் பட்டன. சுருக்கமாக, நெப்போலியன் வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப் பட்டாலும் அவன் கொண்டு வந்த சட்டங்கள் இன்னமும் உயிர் வாழ்கின்றன!

 மத்திய காலத்தில் தனி நாடாக இருந்த வெனிஸ் வணிகர்களால் ஆளப்பட்டது. சில நூறாண்டுகளுக்கு பின்னர் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், பிரான்ஸ் முழுவதும் வணிகர்கள் அல்லது முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. குறிப்ப்பிட்ட காலம்  மன்னராட்சி, குறிப்பிட்ட காலம் குடியரசு என்று ஆட்சிகள் மாறினாலும், முதலாளித்துவ வர்க்கத்தினரின் நலன்கள் பாதுகாக்கப் பட்டன. அதே மாதிரி இங்கிலாந்தில் மன்னராட்சிக்கு எதிராக குரோம்வெல் நடத்திய புரட்சியின் போது மேலெழுந்து வந்த வணிகர்கள், பின்னர் வந்த மன்னராட்சிக் காலத்திலும் தமது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டனர். குறிப்பாக லண்டன் நகரில் வணிகர்கள், முதலாளிகளின் செல்வாக்கு அதிகரித்தது.

 இந்த இடத்தில், முதலாளித்துவ வர்க்கம் என்ன? அது எப்படித் தோன்றியது? என்பதையும் பார்க்க வேண்டும்.

 தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், சிறிய அல்லது பெரிய வணிகர்கள், மற்றும் பணக்கார விவசாயிகளும் இந்த வர்க்கத்தில் சேர்ந்து கொண்டனர். முன்பு அவர்களுக்கு எதிரானவர்களாக இருந்து வந்த நிலவுடைமை வர்க்கத்தினர், தற்போது திருமண உறவுகள் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தில் சேர்ந்து கொண்டனர்.

 இந்தப் புதிய வர்க்கத்தினர் வணிகம் செய்வது மூலம் பணம் சம்பாதித்து வந்தனர். வணிகம் செய்வது என்றால், பொருட்களை விற்பது, வாங்குவது என்று புரிந்து கொள்ளலாம். இருப்பினும் ஆரம்ப காலங்களில் வணிகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கலை தான், முதலாளித்துவ வர்க்கத்தினரை நிலவுடைமை வர்க்கத்தில் இருந்து தனியாக பிரித்துக் காட்டியது. அதே நேரம் முதலாளித்துவ வர்க்கத்தினர் மூலதனத்தின் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கீழே வேலை செய்த தொழிலாளர்கள் தமது உடல் உழைப்பை மட்டுமே செலுத்த வேண்டும். அவர்கள் மூலதனத்திற்கு உரிமை கோர முடியாது. இன்று வரையில் இந்த சமுதாய அமைப்பில் எந்த மாற்றமும் வரவில்லை.

 முதலாளித்துவ வர்க்கத்தினர் பெரும்பாலும் தலைநகரத்தில் வாழ்ந்து வந்தனர். ஏனென்றால் அங்கிருந்து வணிகத்தை நடத்துவதும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் இலகுவாக இருந்தது. பிரான்சில் இவர்கள் மக்களால் “பூர்ஷுவாசி” என அழைக்கப் பட்டனர். அதன் அர்த்தம் “நகரத்தில் ஆதிக்கம் செலுத்துவோர்”! அன்றைய ஜெர்மனியில் நகர மாந்தர் குறித்து சொல்லப்பட்ட பூர்கர் என்ற சொல் பிரான்சில் பூர்ஷுவாசி என்று திரிபடைந்தது. எது எப்படியோ சமூகத்தில் அந்தச் சொல் நிலைத்து விட்டது. இன்று உலகம் முழுவதும் முதலாளிய வர்த்தினர் பூர்ஷுவாசி என்று அழைக்கப் படுகின்றனர். பல ஐரோப்பிய மொழிகள் அந்தச் சொல்லை தமது அகராதிகளில் உள்வாங்கி விட்டன. 

 

 (பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை காணொளிப் பதிவாக YouTube இல் உள்ளது.)

 

 

 

No comments: