Tuesday, September 15, 2020

முதலாளித்துவ இந்தியா ஏழ்மையான இங்கிலாந்தை வளப்படுத்தியது எப்படி?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1900 ம் ஆண்டளவில் உலகம் முழுவதும் முதலாளித்துவம் நிலைநிறுத்தப் பட்டு விட்டது. அதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பியர்களே உலகம் முழுவதும் மேலாதிக்கம் செலுத்தினார்கள். ஐரோப்பியர்களின் சாம்ராஜ்யம் விரிந்த இடம் எல்லாம் முதலாளித்துவம் நிலை கொண்டது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஐரோப்பிய வம்சாவளியினர் ஆட்சி செய்தனர். அன்றைய மேற்கு ஐரோப்பியரின் மேலாண்மை காரணமாகத் தான் இன்று உலகம் முழுவதும் முதலாளித்துவ பொருளாதாரம் காணப்படுகின்றது.

ஐரோப்பா எவ்வாறு உலகம் முழுவதும் படையெடுத்து அடக்கி ஆள முடிந்தது? வணிக மேலாதிக்கம் மட்டுமல்ல, இனப்படுகொலைகளும், சூறையாடலும் இதற்குக் காரணம். போர்த்துக்கீசியர்கள், ஸ்பானிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஹோலன்ட்காரர்கள் உலகம் முழுவதும் தமது வர்த்தக மையங்களை அமைத்துக் கொண்டனர். 

இந்த வணிக மையங்களில் அந்தந்த நாடுகளில் இருந்த வணிகப் பெறுமதி வாய்ந்த பொருட்கள் சேகரிக்கப் பட்டு வியாபாரம் செய்யப்பட்டன. அது மட்டுமல்ல, ஐரோப்பிய வணிகர்களின் தாய்நாட்டில் இருந்த துறைமுகங்களும் வணிகப் பொருட்களை களஞ்சியப் படுத்தும் இடங்களாக பயன்படுத்தப் பட்டன. சிலநேரம் இந்த வணிக மையங்கள் குடியேற்ற நோக்கிலும் பயன்படுத்தப் பட்டது. தென் ஆப்பிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை உதாரணம் காட்டலாம். 

வெள்ளையர்கள் குடியேறிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள், ஒன்றில் படிப்படியாக இனப்படுகொலை செய்யப் பட்டனர், அல்லது வனாந்திரப் பகுதிகளை நோக்கி விரட்டப் பட்டனர். எஞ்சியவர்கள் ஐரோப்பியர் போன்று நடை, உடை, பாவனையை பின்பற்ற வேண்டும் என கட்டாயப் படுத்தப் பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்கள் அடிமைகளாக்கப் பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டனர். 

லத்தீன் அமெரிக்க கண்டம் தவிர்ந்த பிற உலக நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களால் காலனிப் படுத்தப் பட்டன. குறிப்பாக பதினெட்டம் நூற்றாண்டில் தோன்றிய கிழக்கிந்தியக் கம்பனி, ஹட்சன்பே (Hudson Bay) ஆகியன சாகசங்களில் நாட்டம் கொண்ட வணிகர்களால் உருவாக்கப் பட்டன.

கிழக்கிந்தியக் கம்பனி பற்றி பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் ஹட்சன் பே (Hudson's bay Company) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு காலத்தில் அந்தக் கம்பனி தான் கனடாவுக்கு சொந்தம் கொண்டாடியது! அந்தக் காலத்து பன்னாட்டுக் கம்பனிகளுக்கும், இந்தக் காலத்து பன்னாட்டு கம்பனிகளுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பனி, ஹட்சன் பே போன்றன தமக்கென தனியான இராணுவம் வைத்திருந்தன. அந்தக் கூலிப்படைகள் காலனியாக ஆக்கிரமித்த பகுதிகளில் வாழ்ந்த மக்களை இனப்படுகொலை செய்வதற்கும், இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதற்கும் எந்தத் தடையும் இருக்கவில்லை.

இனப்படுகொலைக் குற்றவாளிகளை அவர்களது தாய்நாட்டை சேர்ந்த அரசாங்கமும் ஆதரவளித்தது. அத்துடன் அங்கு நடந்த மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மன்றம் மாதிரி எந்த அமைப்பும் இருக்கவில்லை. மேற்கைரோப்பிய நாடுகளின் அரச நிதி உதவியில் இயங்கிய பன்னாட்டு நிறுவனங்கள், காலனிகளில் சுரண்டிய செல்வத்தில் பெரும் பகுதியை தமக்கே சொந்தமாக்கிக் கொண்டன. 

அதாவது காலனிகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் கிடைத்த இலாபப் பணமானது வணிகர்களின் பைகளை நிரப்பினவே அன்றி, அரச கஜானாவுக்கு செல்லவில்லை. ஏன் ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளும் காலனிய சுரண்டலில் ஈடுபட்டாலும், அங்கு முதலாளித்துவம் வளரவில்லை? ஏனெனில் ஸ்பானிஷ், போர்த்துகீய காலனிகளில் கொள்ளையடிக்கப் பட்ட செல்வங்களில் பெரும் பகுதி மன்னர் குடும்பங்களுக்கே சென்றன. மன்னர்கள் தம்மையும், கடவுளையும் மகிமைப் படுத்துவதற்காக அவற்றை செலவளித்தனர்.

உலகின் பிற பாகங்களில் இருந்த நாகரிக சமுதாயங்களை சீர்குலைத்து, அல்லது அழித்ததன் மூலம் தான் ஐரோப்பியரின் செல்வம் திரட்டப் பட்டது. அமெரிக்கக் கண்டத்தில் இருந்த அஸ்தேக், மாயா நாகரிகங்கள் எவ்வாறு அழித்தொழிக்கப் பட்டன என்பது யாவரும் அறிந்ததே. அதே நேரம், இந்தியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த நாகரிகங்கள் நொறுக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் விடப்பட்டன. இதனாலும் பெருமளவு செல்வத்தை திரட்ட முடிந்தது. 

உதாரணத்திற்கு இந்தியாவை காலனிப் படுத்திய ஆங்கிலேயர்கள், அமெரிக்காவில் நடந்ததைப் போன்று, அங்கு வாழ்ந்த மக்களை இனப்படுகொலை செய்து நிலங்களை அபகரிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இன்று தமிழ் நாடு நியூ இங்கிலாந்து என்று அழைக்கப் பட்டிருக்கும். அங்குள்ள பெரும்பான்மை இனம் ஆங்கிலேயர்களாக இருந்திருக்கும். தமிழர்கள் ஐம்பதாயிரம் பேரளவில் சில குறிப்பிட்ட இடங்களில் பழங்குடி இன மக்களாக வாழ்ந்திருப்பர்.

லத்தீன் அமெரிக்க கண்டத்தை கத்தோலிக்க கிறிஸ்தவ நாடுகளாக மாற்றிய மாதிரி, இந்தியாவை புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ நாடாக மாற்றியமைக்கவில்லை. அவ்வாறு நடக்காத காரணம், ஆங்கிலேயர்கள் கேட்கும் பொழுதெல்லாம் இந்தியா எனும் காராம் பசு வேண்டிய அளவு பாலை கொடுத்து வந்தது. அத்துடன் இந்தியர்களை ஐரோப்பியமயமாக்கும் பண்பாட்டு மாற்றமும் இலகுவாக நடந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ இந்தியர்களின் செல்வம் சுரண்டப் பட்டுக் கொண்டிருந்தது.

இந்தியாவில் கல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் தான் முதன்முதலாக முதலாளித்துவத்திற்கு மாறின. எஞ்சிய பிரதேசங்களில் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் நடக்கவில்லை. ஆயினும் இந்தியா முழுவதிலும் இருந்து வாசனைத் திரவியங்கள், தங்கம், அரிசி, பருத்தி ஆகிய வணிகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப் பட்டன. ஆரம்ப காலங்களில் வியாபாரங்களில் மட்டுமே ஈடுபட்ட ஐரோப்பிய வணிகர்கள், காலப்போக்கில் தாம் காலனிப் படுத்திய நாடுகளில் கிடைத்த மூலப்பொருட்களை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பருத்தி என்ற மூலப்பொருள் இங்கிலாந்து தொழிற்சாலைகளில் ஆடைகளாக உற்பத்தி செய்யப்பட்டு, அவை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டன.

சீனாவும், ஜப்பானும் ஐரோப்பியர்களால் நேரடியாக காலனிப் படுத்தப் படவில்லை. சீனாவின் பிரதானமான துறைமுக நகரங்களான ஹாங்காங், பீகிங் போன்றன ஐரோப்பிய வணிகர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் பட்டன. சீன மன்னர் ஐரோப்பியரின் பொம்மையாக ஆட்சி செய்தார். இதன் மூலம் சீனாவின் நாகரிகம், பொருளாதாரம் ஆகியன சீர்குலைக்கப் பட்டன. ஜப்பான் வேறொரு விதமாக மாற்றமடைந்தது. ஜப்பானியர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். ஐரோப்பியர்களை விட தீவிரமான முதலாளித்துவவாதிகளாக மாறினார்கள். இந்த சமூக- பொருளாதார மாற்றங்களின் விளைவாக ஜப்பான் ஆசியாவின் காலனியாதிக்கவாத நாடாகியது. 

 

(இந்தக் கட்டுரை காணொளிப் பதிவாக YouTube இல் பதிவேற்றப் பட்டுள்ளது.)

No comments: