Tuesday, July 30, 2019

புலம்பெயர்ந்த கியூப நாட்டவருடன் ஒரு கருத்தாடல்

நெதர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் கியூப நாட்டவர் ஒருவர், ஒரே தொழிலகத்தில் என்னுடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில்,  தனது நாட்டு நிலைமைகள் பற்றி நிறைய சுவையான கதைகளை கூறினார். எந்த வித அரசியல் சார்புமற்ற உள்நாட்டவரின் வாயால் கேள்விப்படும் தகவல்கள் உண்மைத்தன்மை வாய்ந்தவை. அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கருத்தாடலில், கியூபாவில் வாழும் சாதாரண மக்களின் பிரச்சினைகளான, தனி நபர் வருமானம், பொருளாதார பிரச்சினைகள், சுயதொழில் செய்வது, வீடு வாங்குவது, வெளிநாட்டுக்கு குடிபெயர்வது, போன்ற விடயங்களே அதிகம் அலசப் பட்டுள்ளன.

எனது நண்பர் பற்றி சுருக்கமாக: அவர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் ஆங்கில ஆசிரியராக பட்டம் பெற்றிருந்தார். ஒரு மத்தியதர வர்க்க தொழிலான ஆசிரியர் வேலை செய்தாலும் சம்பளம் குறைவு என்பதால், பிற்காலத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி உள்ளார். அந்த நேரம் கியூபாவுக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த ஒரு பிரித்தானிய பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களின் பின்னர் பிரிட்டிஷ் மனைவியின் பணியிட மாற்றம் காரணமாக நெதர்லாந்தில் குடியேறி வசிக்கின்றார். அவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 


கியூபாவில் சராசரி தனி நபர் வருமானம் பற்றி...

கியூபாவில் பொதுவாக சம்பளம் குறைவு தான். எனது சக தொழிலாளி அங்கு ஓர் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கும் அதிக சம்பளம் இல்லை. அதனால் தனது ஆங்கில மொழிப் புலமையை பயன்படுத்தி சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்தார். அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம் தான். அது வாழ்க்கைக்கு திருப்தியாகப் போதும். ஆனால் எல்லோருக்கும் சுற்றுலாத் துறையில் தொழில் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப் படுகின்றனர். கடை வியாபாரம், முடி திருத்துதல், போன்ற பல சேவைத் துறைகளில் திறமை உள்ளவர்கள் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம். அவர்கள் தமது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் அரசுக்கு வரியாக கட்ட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

எந்தக் காலத்திலும், சிறு தொழில் முனைவோர் பெருமளவு பணம் திரட்டி கோடீஸ்வரனாக வர முடியாது. உலகில் எந்த நாட்டிலும் இந்த அதிசயம் நடப்பதில்லை. ஆகவே இத்தகைய சிறு தொழில் முதலாளித்துவத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று வரையில் பெரிய நிறுவனங்களில் முதலிடும் ஏகபோக உரிமை கியூப அரசிடம் மட்டுமே உள்ளது.

இருப்பினும் சிறு தொழில் முனைவோர் தமக்கு வரும் இலாபப் பணத்தைக் கொண்டு கியூபாவில் வசதியாக வாழ முடியும். அதிக பட்சம்சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளலாம். அது சரி, சிலநேரம் யாராவது ஓர் அதிர்ஷ்டசாலி அதிக இலாபம் சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் என்ன செய்யலாம்? அப்படியானவர்கள் தமது வீட்டையும், வியாபாரத்தையும் வேறு யாருக்காவது விற்று விட்டு வெளிநாடொன்றுக்கு சென்று குடியேறி விடுவார்கள்.

அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஒருவர் எந்தளவு பணம் வைத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. கையில் உள்ள பணத்தைக் கொண்டு அதிக பட்சம் காணி, வீடு, நகை, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை வாங்கி வைத்திருக்கலாம். ஆனால், மாளிகை போன்ற வீடு கட்டி, ஊதாரித்தனமாக செலவளித்து பணக்காரத்திமிர் காட்டுவோர் கியூபாவில் வாழ முடியாது. அதாவது, சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வந்தாலும், அது எல்லை மீற விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கியூபப் பொருளாதாரம் பற்றி...

கியூபா முழுமையான சோஷலிச நாடு அல்ல. அந்நாட்டின் பொருளாதாரம் சில கட்டுப்பாடுகளுடன் முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கக் கூறின், முதலாளித்துவ உற்பத்தி சாதனங்கள் உருவாக்கும் செல்வம், அனைத்து மக்களுக்குமான சோஷலிச நலத் திட்டங்களில் முதலிடுவதற்கு உதவுகின்றது. கியூபாவுக்கு உலகவங்கி, IMF என்று யாருமே கடன் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடு தான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை. தெருவில் அல்லது குடிசையில் வசிப்பதில்லை. கியூபாத் தீவின் சனத்தொகை பத்து அல்லது பதினொரு மில்லியன்கள். இருப்பினும் அந்நாட்டில் ஒருவர் விடாது அனைவருக்குமான அத்தியாவசிய தேவைகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

அதாவது, எல்லோருக்கும் வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. தண்ணீர், மின்சாரக் கட்டணம் மிகவும் குறைவு. பிள்ளைகள் படிப்பதற்கு எந்த செலவும் இல்லை. பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம். மருத்துவம் இலவசம். அது மட்டுமல்ல, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசு உணவுப் பொருட்களுக்காக பெருமளவு மானியம் ஒதுக்குகின்றது.

அரிசி, சீனி, மாவு, எண்ணை, மரக்கறி, இறைச்சி எல்லாம், அரச கடைகளில் மிக மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முத்திரைகள் அல்லது கூப்பன்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த உணவுப் பொருட்கள் அதிக பட்சம் இரண்டு கிழமைகள் தாராளமாகப் போதும். மிகுதி நாட்களுக்கு தேவையென்பதை அறிந்து மிச்சம் பிடிக்க வேண்டி இருக்கும். அல்லது சில பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், அவற்றை அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்ளலாம்.

அயலவருக்கு இடையிலான பண்டமாற்று வணிகம் சட்டப்படி அனுமதிக்கப் பட்டுள்ளது. பண்டமாற்று செய்ய எதுவும் இல்லாவிட்டாலும், காசு கொடுத்தும் ஒரு பொருளை வாங்கலாம். உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தில் ஒருவர் கோழிப் பண்ணை வைத்திருந்தால், அவரிடம் கோழி, முட்டை வாங்கலாம். வீட்டுத் தோட்டத்தில் மாமரங்கள் வைத்திருப்பவரிடம், மாம்பழங்கள் வாங்கலாம். இப்படியான வணிகமும் அரசால் அங்கீகரிக்கப் பட்டது தான். ஆனால், பிரச்சினை என்னவென்றால் இவற்றை விற்பவர்கள் சந்தையை வைத்து பொருட்களின் விலையை தீர்மானிக்கிறார்கள். அதாவது அந்த ஊரில் மற்றவர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை விசாரித்து விட்டு, அயல்வீட்டுக் காரரும் தனது கோழியை அதே விலைக்கு விற்பார்.

அதை விட, கியூபாவில் சட்டவிரோதமான சந்தையும் (Black Market) உள்ளது. அங்கே எல்லா விதமான பொருட்களும், சேவைகளும் விற்கப் படுகின்றன. இந்த கறுப்புச் சந்தை இயங்குவது அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாத மாதிரி இருப்பார்கள். எங்காவது யாராவது நிறையப் பணம் வைத்திருப்பது கேள்விப் பட்டால் மட்டும் தலையிடுவார்கள். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று விசாரித்து கறுப்புச் சந்தை வணிகத்தில் சேர்ந்த இலாபம் என்று கண்டுபிடித்து விடுவார்கள். அதற்குப் பிறகு அது ஒரு குற்றமாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.

அண்மைக் காலத்தில் ரவுல் காஸ்ட்ரோ அரசாங்கம் கொண்டு வந்த முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தம் காரணமாக, சிறு தொழில் முனைவோர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கும் வழக்கமும் வந்து விட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் தனது வீட்டை திருத்தி, விரிவுபடுத்தி கட்டி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட முடியும். ஆனால், அது சர்வதேச தரத்துடன் கூடிய தங்குமிடமாக தயார்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த தரம் இல்லா விட்டால், அதிகாரிகள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். அதனால், சில இடங்களில் இலஞ்சம் கொடுப்பதும் நடக்கிறதாம்.

கியூபாவில் சோஷலிசம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் கூட சாதாரண வீடுகளில் தான் வசித்தார்கள். பணக்காரர் என்று யாரும் இருக்கவில்லை. இருந்தாலும், யாரும் தம்மிடம் பணம் இருப்பதாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒருவர் தன்னை மற்றவர்களை விட வசதிபடைத்தவராக காட்டிக் கொள்வது அவமானத்திற்குரிய செயலாக கருதப் பட்டது. அந்த நிலைமை இன்றைக்கும் நீடிக்கிறது.

ஆனால், தற்போதைய முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு பின்னரான சமூக நிலைமையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பல்வேறு முதலாளித்துவ உற்பத்தி நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க அல்லது இராணுவ அதிகாரிகள் சிலரிடம் தாராளமாக பணம் புழங்குகிறது. அவர்கள் அந்தப் பணத்தை வைத்து கியூபாவில் ஆடம்பரம் காட்டுவதில்லை. ஆனால், அவர்களது பிள்ளைகள் பாரிஸ், லண்டன் என்று ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று தம்மிடம் உள்ள பணத்தை செலவளிக்கிறார்கள்.

கியூபாவில் தற்போது இணையப் பாவனை உள்ளது. அங்கேயும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆமாம், அரசுக்கு எதிராக பேசுவோருக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், எல்லை மீறிப் போக விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

சில நேரம், பொலிஸ் அப்படியான நபர்களை ஏதாவதொரு குற்றச்சாட்டில் பிடித்துச் சென்று ஒரு சில மணி நேரங்கள் தடுத்து வைக்கிறார்கள். பின்னர் எந்தக் குற்றமும் பதியாமல் விட்டு விடுகிறார்கள். பொலிஸ் பதிவு கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். முக்கியமாக அரசுக்கு எதிரான கருத்துக்களை வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கப் படுகின்றனர். ஆனால் உள்நாட்டில் வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

கியூபாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதை "வெள்ளை அட்டை" என்று அழைக்கிறார்கள். அதில் அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை என்றும், அரசுக்கு எதிரான பிரச்சாரமும் செய்திருக்கவில்லை என்றும் உறுதிப் படுத்திருக்க வேண்டும்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, தாமாக கியூபாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறச் செல்வோர் திரும்பி வர அனுமதிப்பதில்லை. "எங்காவது போய்த் தொலையுங்கள்...." என்பது மாதிரி நடந்து கொள்வார்கள். தற்போது நிலைமை மாறி விட்டது. விடுமுறைக்கு தாயகம் சென்று வர அனுமதிக்கிறார்கள். அதுவும் அதிக பட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே தங்கி இருக்கலாம்.



கியூபாவில் மதச் சுதந்திரம் எப்படி உள்ளது?

கியூபாவில் பெரும்பான்மை மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். அதைவிட கணிசமான அளவினர் ஆப்பிரிக்க "வூடு" மதத்தை பின்பற்றுகின்றனர். ஆப்பிரிக்க மதத்திற்கென ஆலயம் எதுவுமில்லை. அம்மதப் பூசாரிகள் கோழி வெட்டிப் பலியிடுவது, குறி சொல்வது, சாமியாடுவது, சூனியம் வைப்பது என்பன போன்ற சிறுதெய்வ வழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர்.

பெரிய நகரங்களில் குறிப்பிட்ட அளவு யூதர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கென சினகொக் (யூத ஆலயம்) உண்டு. மிகக் குறைந்தளவு மத்திய கிழக்கை சேர்ந்த முஸ்லிம்களும் உள்ளனர். புத்த மதத்தை பின்பற்றும் சீனக் குடியேறிகளும் அங்கே உண்டு. இவர்கள் பெரும்பாலும் நூறு வருடங்களுக்கு முன்பே, கியூபா பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில் வந்து குடியேறியவர்கள். இன்று முழுமையான கியூபப் பிரஜைகள்.

சோஷலிசப் புரட்சிக்குப் பின்னர் எந்தவொரு வழிபாட்டு ஸ்தலமும் மூடப் படவில்லை. தினசரி மதகுருக்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கவில்லை. அதை விட கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற விசேடமான மதப் பண்டிகைகளும் வழமை போலவே பொது இடங்களில் கொண்டாடப் பட்டு வந்தன. ஒரு தடவை கரும்புச் செய்கையில் விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தை சொல்லி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கான அரச செலவினம் நிறுத்தப் பட்டது. அது தற்காலிகமானது என்று சொன்னாலும், அதற்குப் பிறகு அப்படியே கைவிட்டு விட்டார்கள்.

தொண்ணூறுகளுக்கு பிறகு, குறிப்பாக போப்பாண்டவர் ஜோன் போலின் விஜயத்திற்குப் பிறகு, பொது இடங்களில் மதப் பண்டிகை கொண்டாடுவதற்கு அனுமதிக்கப் பட்டது. இருப்பினும், ஒவ்வொரு வருடமும் மக்கள் தமது வீடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அது அவர்களது தனிப்பட்ட விடயம் என்பதால் அரசு தலையிடுவதில்லை.

ஒவ்வொரு கியூப பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது மாதிரி, எந்த மதத்தையும் சேராமல் நாத்திகனாக இருக்கவும் உரிமை உள்ளது. அதாவது, ஒரு மதத்தை நம்புவோருக்கு உள்ள சுதந்திரம், அதை நம்பாதவர்களுக்கும் உள்ளது. அந்த வகையில் அரசு நாத்திக இயக்கத்தை பின்னால் நின்று ஊக்குவித்தது. அவர்கள் மத நம்பிக்கையாளர்கள் தேவாலயம் செல்லும் வழியில் மறித்து நாத்திகப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது நடத்தைக்கு வெட்கப்பட வேண்டும் என்று பரிகசித்தனர்.

கியூபாவில் மத நம்பிக்கையாளர் எண்ணிக்கை குறைந்தமைக்கு அரசு பிரயோகித்த மறைமுகமான அழுத்தம் முக்கிய காரணம். ஒருவர் உயர் கல்வி கற்பதற்கு, உயர் பதவி வகிப்பதற்கு, சுருக்கமாக அவரது சுயமுன்னேற்றத்திற்கு தடையாக மதம் இருந்தது. தீவிர மத நம்பிக்கை கொண்ட ஒருவர் பல்கலைக்கழகம் செல்ல முடியாது, ஒரு நல்ல வேலை செய்ய முடியாது. சாதாரண அடிமட்ட தொழில்களை மட்டும் செய்யலாம்.

கியூபாவில் பொதுவாக "கத்தோலிக்கர்" என்று சொன்னால், அது தீவிர மதப்பற்று கொண்டவரை மட்டுமே குறிக்கும். மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பெயரளவில் மட்டுமே கத்தோலிக்கராக இருப்பவர்கள் ஏராளம். அவர்களை யாரும் கத்தோலிக்கர் என்று சொல்வதில்லை. அவர்களும் தம்மை அப்படி அழைத்துக் கொள்வதில்லை.

அரசின் மறைமுக அழுத்தம் காரணமாக, தீவிர மதப்பற்றாளர் ஒருவருக்கு எங்கேயும் வேலை கிடைக்கவில்லை என்றால், அவர் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் சேர்ந்து அங்குள்ள வேலைகளை செய்யலாம். அவருக்கான செலவுகள் அனைத்தையும் தேவாலயம் பொறுப்பெடுக்கும். கியூபாவில் புரட்சிக்குப் பின்னரும் கத்தோலிக்க தேவாலயங்கள் இயங்குவதற்கும், குறிப்பிட்டளவு சொத்துக்கள் வைத்திருப்பதற்கும் அனுமதிக்கப் பட்டது. அந்த சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தேவாலயமே வைத்துக் கொள்ளலாம். தம்மிடம் வேலை செய்வோருக்கு சம்பளம் கொடுப்பதும் தேவாலய குருமாரின் பொறுப்பு தான். அரசு எந்த உதவியும் செய்யாது.

தற்போது மதம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. கடந்த இருபது வருடங்களில் தேவாலயம் செல்வோரின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது. நாத்திகர்களின் தொந்தரவு இல்லாமல் போனதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் தீவிர மதப் பற்றாளர்களை தற்போதும் உயர் பதவிகளுக்கு வர அனுமதிப்பதில்லை. ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சாதாரணமான உறுப்பினராக சேர்வதற்கே ஒருவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டியது கட்டாயம்.


கியூபாவில் வீடு வாங்குவது, விற்பது பற்றி...

- கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களில் கூட, பெரும்பாலான மக்கள் தமது பெற்றோரிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைத்த வீடுகளில் இப்போதும் வசிக்கிறார்கள். அவை அவர்களது சொந்த வீடுகள். சில வருடங்களுக்கு முன்பு வரை அதை விற்பதற்கு தடை இருந்தது.

- சனத்தொகை வளர்ச்சிக்கேற்ற புதிதாக கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை பெருகுவதில்லை என்றொரு குறை இருக்கிறது தான். குறிப்பாக வேறொரு நகரத்திற்கு இடம்பெயர்வோர் பெரிதாகப் பாதிக்கப் படுகின்றனர். இதனால் வீடு மாற்றிக் கொள்ளும் முறையை பலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கான ஒப்பந்தங்கள் சட்டப்படி செய்து கொள்வதற்கு அரசு அனுமதிக்கிறது.

- வீடுகளை மாற்றிக் கொள்ளும் திட்டத்தை சிலர் இலாப நோக்கோடு பயன்படுத்தி வந்தனர். உதாரணத்திற்கு கிராமத்தில் வசிக்கும் ஒருவரும், நகரத்தில் வசிக்கும் இன்னொருவரும் வீடு மாற்றிக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நிச்சயமாக, நகரத்தில் இருக்கும் வீட்டின் பெறுமதி பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆகவே, நகரத்து வீட்டிற்கான மேலதிக பெறுமதியை, கிராமத்து வீட்டுக்காரர் பணமாக கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் இதிலொரு சிக்கல் உள்ளது. அரசு சட்டப் படி, ஒரு வீட்டுக்கு பதிலாக இன்னொரு வீடு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், பணம் கொடுக்கல் வாங்கல் இருக்கக் கூடாது. அதனால் மேலதிக பெறுமதிக்கான பணத்தை ஆவணத்தில் எழுதாமல் இரகசியமாக கையில் கொடுப்பார்கள்.

- இந்த பண்டமாற்று முறையை பயன்படுத்தி, நகரத்தில் உள்ள வீட்டை நல்ல விலைக்கு விற்று விட்டு வெளிநாட்டில் குடியேறியவர்களும் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் பின்னர், தற்போது வீடு வாங்கவோ, விற்கவோ எந்தத் தடையும் இல்லை. 


கியூபாவின் சர்வதேச தொடர்புகள் பற்றி...

சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அங்கிருந்து பெருமளவு உதவி கிடைத்துக் கொண்டிருந்தது. அப்போதிருந்த நிலைமை சிறப்பாக இருந்தபடியால் அது ஒரு பொற்காலம் எனலாம். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைத்தன. பிற்காலத்தில் வெனிசுவேலாவுடன் நெருங்கிய உறவு ஏற்பட்டவுடன் அங்கிருந்து மலிவு விலையில் எண்ணை பெற்றுக் கொண்டனர். "கியூபர்கள் ஒட்டுண்ணிகள் மாதிரி முன்பு ரஷ்யாவை சுரண்டினார்கள் இப்போது வெனிசுவேலாவை சுரண்டுகிறார்கள்" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார் எனது நண்பர்.

கியூபாவின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களான சுருட்டு, ரம் மதுபானம் என்பன உலகப் புகழ் பெற்றவை. இவற்றால் வருடந்தோறும் பில்லியன் டாலர் கணக்கான அந்நிய செலாவணி கிடைக்கிறது. இந்த நிறுவனங்கள் இப்போதும் அரச கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இதை விட மருத்துவர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் போன்ற பல் துறை சார்ந்த நிபுணர்களும் ஏற்றுமதி செய்யப் படுகின்றனர். வெனிசுவேலா, பிரேசில், கயானா, என்று பல உலக நாடுகளில் இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு கியூபாவில் கிடைப்பதை விட பல மடங்கு அதிகமான சம்பளம் கிடைத்தாலும், அதில் பெரும்பகுதி அரசாங்கத்திற்கு செல்கிறது. இந்த நிபந்தனை வேலைக்கு செல்ல முன்னரே ஒப்பந்தத்தில் எழுதப் படுகின்றது. சிலர் அதை நியாயம் என்று ஏற்றுக் கொள்கின்றனர். வேறு சிலர் அதை அநியாயம் என்று எதிர்க்கின்றனர். அதிகம் சம்பாதிக்க விரும்புவோர் ஒப்பந்த காலம் முடிந்தவுடன் தாயகம் திரும்பாமல் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் சென்று குடியேறி விடுகின்றனர். ஆனால், அப்படிச் சென்றவர்கள் வாழ்நாளில் கியூபாவுக்கு திரும்பிச் செல்ல முடியாது. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கியூபாவிலேயே தங்கி விடுவதால், அவர்களை மறுபடி பார்க்கவும் முடியாது. 


பொதுவாக அரசு தொடர்பாக சராசரி மக்களின் கருத்து என்ன?

மூன்று தொலைக்காட்சி அலைவரிசைகள் உட்பட, வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகள் எல்லாம் அரச ஊடகங்களாகவே உள்ளன. தினசரி தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் செய்தி அறிக்கைகளை பார்த்தால், யுத்தங்கள், கலவரங்கள், பேரழிவுகளால் கியூபாவைத் தவிர ஏனைய உலக நாடுகள் எல்லாம் அழிவை நோக்கி செல்வதாக எண்ணத் தோன்றும். உலகில் கியூபா மட்டுமே அமைதியான, பாதுகாப்பான நாடு போன்ற தோற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். கியூப அரசு தனது குடி மக்களை பிள்ளைகள் போன்று கவனித்துக் கொள்வதாகவும், அதற்காக மக்கள் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் உணரத் தோன்றும்.

2 comments:

பொன்.பாரதிராஜா said...

மற்ற கம்யூனிச நாடுகளுடன் ஒப்பிடும்போது கியூபா நல்ல நாடாகவே தோன்றுகிறது...உலக வங்கியின் கடன் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் பசி , பட்டினி , வறுமை இல்லாத நாடாக இருப்பது அதிசயம்தான்...

சுயநலம் இல்லாத தலைவர்கள் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.

கட்டுரைக்கு நன்றி கலை!!!

Unknown said...

கட்டுரை அருமை பயனுள்ளதாக இருந்தது.