Friday, May 06, 2016

புலிகளால் வன்னியில் "புனிதர்கள்" ஆக்கப் பட்ட "இனவாத" ஜேவிபி கட்சிமாறிகள்


தென் இலங்கையில் ஜேவிபி இன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் (1989) நடந்து சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு, வட இலங்கையில் புலிகளின் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் (2009) நடந்துள்ளன. சிறிலங்கா அரசு, ஜேவிபியையும், புலிகளையும், ஒரே மாதிரியான எதிரிகளாக கருதி அழித்தொழித்தது. ஒன்று வர்க்க எதிரிகள், மற்றது இன எதிரிகள். அது மட்டுமே வித்தியாசம்.

"அடக்குபவனையும்,அடக்கப்படுபவனையும் ஒரே தட்டில் போட முடியுமா?" என்று புலிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர், அடக்கப்பட்ட ஜேவிபி யை ஒரே தட்டில் போடும் முரண்நகையை பார்க்கக் கூடியதாக இருக்கிறது. (பார்க்க: சாதிவெறி- வர்க்கத் துவேஷிகள் அரசுடன் கைகோர்க்கும் இடதுசாரி எதிர்ப்பரசியல்) அது மட்டுமல்லாது, ஜேவிபி தலைமையை விமர்சித்து அதிருப்தியுற்று வெளியேறிய பிரிவினரை பற்றியும், "இனவாதம் பேசியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?" என்று விஷமத்தனமாக விதண்டாவாதம் செய்கின்றனர்.

இன்றைய ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) ஆனது, 1989 தென்னிலங்கையில் நடந்த "முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப்" பின்னர், முற்றிலும் புதிதாக மறுசீரமைக்கப் பட்ட புதிய கட்சி ஆகும். அதனை புலிகளில் இருந்து பிரிந்து சென்று இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கும் TMVP (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) உடன் ஒப்பிடலாம், அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பிடலாம்.

பாராளுமன்ற அரசியல் சாக்கடைக்குள் விழுந்து வலதுசாரிப் பாதையில் சென்ற புதிய ஜேவிபி, தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதம் பேசியதும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு முண்டு கொடுத்ததும் தெரிந்ததே. வலதுசாரிப் பாதையில் சீரழிந்த கட்சி வேறெதைச் செய்யும்?

வலதுசாரி பாராளுமன்ற கட்சியான ஜேவிபி, புலிகளுக்கு இனவாத முத்திரை குத்தி புலிகளை அழிக்கும் மகிந்தவின் போருக்கு ஆதரவு தெரிவித்து வந்தமை உண்மை தான். தேர்தல் காலத்தில் சில தலைவர்களின் இனவாத மேடைப் பேச்சுகளுக்கு அப்பால், ஜேவிபி ஒரு தமிழருக்கும் தீங்கு இழைக்கவில்லை. அன்றும், இன்றும் ஜேவிபியில் நிறைய தமிழர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 

தனிப்பட்ட வாழ்க்கையில் இனவாதிகளாக இருப்பவர்கள், ஒரு இடதுசாரி கட்சியில் உறுப்பினராவது நடக்க முடியாத நிகழ்வல்ல. ஜெர்மனியில் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெளிநாட்டு குடியேறிகளுக்கு ஆதரவானதாக கருதப் பட்டது. ஆனால், அந்தக் கட்சியில் கூட இனவாதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதனை ஜெர்மனியில் எடுத்த ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

ஜேவிபி யை இயங்கியல் ரீதியாக பார்க்காமல், அல்லது பகுப்பாய்வு செய்யாமல், சில தமிழ் இன அரசியல் ஆர்வலர்கள் அதற்கு ஒரேயடியாக இனவாத முத்திரை குத்தும் வேலையை செய்கிறார்கள். இது உள்நோக்கம் கொண்டது. 

சிறிலங்கா அரசிடம் இருக்கும் அதே வர்க்க வெறுப்புணர்வு தான், ஜேவிபியை எதிர்க்கும் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மனதிலும் உள்ளது. புதிய ஜேவிபி கட்சியை வலதுசாரிப் பாதையில் செல்ல வைத்து இனவாதம் பேச வைத்தது சிறிலங்கா அரசுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி. 

மக்களை இன அடிப்படையில் பிரித்தாள்வது தான் ஒரு பேரினவாத அரசின் நோக்கமாக உள்ளது. சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். அதனால் தான், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோஷலிசக் கட்சியையும் இனவாதிகளாக காட்டிப் பிரச்சாரம் செய்கிறார்கள். சிறிலங்கா அரசின் ஏற்பாட்டில் தான் அந்தப் பிரச்சாரமும் நடக்கிறது.


//இனவாதம் பேசிய ஜேவிபி, கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?// என்று சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியான தமிழர் ஒருவர் கேட்கிறார்.

இலங்கையில் தென்னிலங்கையிலும், வட இலங்கையிலும் ஆயுதப் போராட்டங்கள் நடந்த காலத்தில் ஜேவிபிக்கும், புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு விடுமோ என்று அரசு அஞ்சியிருந்தது. அதனால் இரண்டு இயக்கங்களையும் முடிந்த அளவிற்கு பிரித்து வைப்பதற்கு முயற்சித்தது.

இந்திய இராணுவம் இருந்த காலத்தில், எந்தக் காரணமும் இல்லாமல், பிரேமதாச புலிகளுக்கு உதவவில்லை! சோழியன் குடுமி சும்மா ஆடாது. சந்தர்ப்பம் பார்த்து புலிகளை நண்பர்களாக்கிக் கொண்டதால், ஜேவிபியை இலகுவாக அழிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அரசால் இரண்டு பகைவர்களை ஒரே நேரத்தில் சமாளிக்க முடிந்திருக்காது.

இறுதிக் காலங்களில் புலிகள் தமது தவறை உணர்ந்து திருத்திக் கொண்டார்கள். ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற, சிங்கள இளைஞர்களைக் கொண்ட குழுவொன்றுக்கு, வன்னியில் ஆயுதப்பயிற்சி கொடுத்து திருப்பி அனுப்பினார்கள்.

ஆனால் அது மிகவும் காலதமாதமாக வந்த பட்டறிவாக இருந்தது. அப்போது காலம் மாறிவிட்டிருந்தது. தென்னிலங்கையில் புலிகளுக்கு ஆதரவாக பேசினாலே தேசத்துரோகி முத்திரை குத்தப் பட்ட காலத்தில், அந்த சிறிய குழுவால் எதையும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

அதற்குள் அரசு விழித்துக் கொண்டு, அவர்களை இனங்கண்டு அடக்கி விட்டது. "சிங்களப் புலிகள்" என்று முத்திரை குத்தி, அவர்களது உறவினர்கள், நண்பர்களைக் கூட சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தது. இந்தத் தகவல்கள் எல்லாம் அந்தக் காலங்களில் தென்னிலங்கை ஊடகங்களில் வந்திருந்தன.

புலிகளால் "புனிதர்கள் ஆக்கப் பட்ட, இனவாதம் பேசிய ஜேவிபி காரர்கள்" பலர், யுத்தம் முடிந்த பின்னரும் சிறையில் வாடினார்கள். ஊர் மக்களால் ஒதுக்கப் பட்ட அவர்களது உறவினர்கள் வறுமையில் வாடினார்கள். முக்கியமான ஒரு சிலரை, புலிகளே தமது செலவில் வெளிநாட்டுக்கு அனுப்பினார்கள். போர்க்குற்றங்களை ஆவணப் படுத்தியதில், அவர்களது பங்களிப்பும் கணிசமான அளவு இருந்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த "இலங்கையின் கொலைக் களங்கள்" ஆவணப் படத்திலும் அவர்கள் வழங்கிய போர்க்குற்ற ஆவணங்கள் காட்டப் பட்டன. அந்த ஆவணப் படத்தில் பேட்டி வழங்கும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர், சிங்களப் புலியாக குற்றம் சாட்டப் பட்டதால் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றி அகதியாக வாழ்ந்து வருகிறார்.

நோர்வேயின் அனுசரணையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்தில் அந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. 2007 -2008 காலப் பகுதியில் தென்னிலங்கை முழுவதும் 25 சிங்கள அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். மூன்று பத்திரிகையாளர்கள் புலனாய்வுத் துறையினரால் கடத்தப் பட்டிருந்தனர். அவர்கள் தம்மால் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை பின்னர் அறிவித்திருந்தது.

கைது செய்து தடுத்து வைக்கப் பட்டவர்கள், "சிங்களப் புலிகள்" என்று முத்திரை குத்தப் பட்டனர். அவர்கள் "புரட்சிகர விடுதலை முன்னணி" என்ற இரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், கிளிநொச்சி, முல்லைத்தீவில், புலிகளால் ஆயுதப் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டது. புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் கபில் அம்மான் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தென்னிலங்கையில் நடந்த தாக்குதலில் அவர்களது பங்கிருந்ததாகவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கொல தெரிவித்திருந்தார்.

ஜேவிபி யில் இருந்து முன்னிலை சோஷலிசக் கட்சியினர் பிரிந்தது மட்டுமே பலருக்குத் தெரிந்த விடயம். ஆனால், அவ்வப்போது சிறிய குழுக்களும் பிரிந்து சென்றுள்ளன. ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழு, "ஹிரு" என்ற பெயரில் சஞ்சிகை வெளியிட்டு வந்தது. அது புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வந்தது. புலனாய்வுத் துறையால் கடத்தப் பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் ஹிரு குழுவை சேர்ந்தவர்கள்.

ஜேவிபி இல் இருந்து பிரிந்த இன்னொரு குழுவினர் தான் "புரட்சிகர விடுதலை முன்னணி" (மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபி இன் பெயரை ஒத்திருப்பதை கவனிக்கவும்.) என்ற பெயரில் இயங்கி உள்ளனர். அவர்கள் தென்னிலங்கையில் ஒரு ஆயுதப் புரட்சிக்கு தயார் படுத்தி வந்ததாகவும், அதற்கு புலிகள் உதவியதாகவும் அரசு குற்றஞ் சாட்டுகின்றது.

"புரட்சிகர விடுதலை முன்னணி" உறுப்பினர்கள் எல்லோரும் ஆயுதமேந்திய போராளிகள் என்று அரசு குற்றஞ் சாட்டுவதில் உண்மையில்லை. ஏனெனில், தொழிற்சங்க ஆர்வலர்களும் கைது செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள். குறிப்பாக ரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள். தொழிற்சங்க பத்திரிகையான அக்குன ஆசிரியரும் கைது செய்யப் பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசின் "சிங்களப் புலிகள்" முத்திரை குத்தல், வழமையான பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உட்பட்டது. சிறுபான்மை இனமான தமிழர்களையும், சிங்கள அடித்தட்டு மக்களையும் ஒன்று சேர விடாமல் தடுக்கும் நோக்கம் கொண்டது. அப்போது கைது செய்யப் பட்டவர்கள், பெரும்பாலும் ஊடகவியலாளர்கள் அல்லது தொழிற்சங்கவாதிகள். 

ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற, சிங்கள இடதுசாரி பத்திரிகையாளர்களும், இடதுசாரி தொழிற்சங்கவாதிகளும், புலிகளுடன் ஒன்று சேர்ந்து இயங்குவது, அரசின் கெட்ட கனவாக இருக்கும். தமிழ் இன உணர்வாளர்கள் என்று காட்டிக் கொள்ளும் சிலர், "ஜேவிபி மட்டுமல்லாது, அதிலிருந்து பிரிந்த சிங்களவர்கள் கூட இனவாதிகள்" என்று விஷமத்தனமான பிரச்சாரம் செய்வதும், சிறிலங்கா பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டே நடக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: