Monday, May 16, 2016

மீண்டும் ஒரு பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி சாத்தியமா?


மாபெரும் பாட்டாளிவ‌ர்க்க‌ க‌லாச்சார‌ப் புர‌ட்சி பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ ஐம்ப‌தாண்டு நிறைவு தினம் (16-5-2016) இந்த வருடம் வந்துள்ளது. மாவோவின் வ‌ழிகாட்ட‌லின் கீழ் கிள‌ர்ந்தெழுந்த‌ மாண‌வ‌ர்க‌ள், இளைஞ‌ர்க‌ள் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் நாட்டின் அர‌சிய‌ல் த‌லை‌மையை அடியோடு மாற்றினார்க‌ள். ம‌க்க‌ள் அதிகார‌ம் நிலைநாட்ட‌ப் ப‌ட்ட‌து.

முதலாளிய ஊடகங்களில் சீனக் கலாச்சாரப் புரட்சி பற்றி எதிர்மறையான கதைகளே பிரச்சாரம் செய்யப் பட்டு வந்தன. "ஹிஸ்டீரியா நோய் கண்டவர்கள் போன்று வெறி கொண்டலைந்த இளைஞர்கள்... பைத்தியக்காரத் தனம்... படுகொலைகள்...சித்திரவதைகள்..." இப்படியாகப் போகும். ஒரு சில "நடுநிலை" ஊடகங்கள் இன்னும் கொஞ்சம் "விளக்கமாக" எழுதும். "ஆசிரியர்களை தண்டித்த மாணவர்கள்... நிர்வாகிகளை தண்டித்த ஊழியர்கள்..." அதாவது, "கட்டுப்படுத்த முடியாமல் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க விடப் பட்ட பக்குவப் படாத மக்கள் திரள்" தான், அப்போது நடந்த அட்டூழியங்களுக்கு மூலகாரணம் என்று எழுதுவார்கள்.

கலாச்சாரப் புரட்சி என்றால் என்ன? 
அது தோன்றுவதற்கு காரணமான அரசிய, சமூகக் காரணிகள் எவை?

ஒரு நாட்டில் சோஷலிசப் புரட்சி நடந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியமைத்தாலும், பலதரப் பட்ட சமூகப் பின்னணிகளை கொண்ட மக்களும் சேர்ந்திருப்பார்கள். பாட்டாளிவர்க்கப் புரட்சி என்று சொல்லப் பட்டாலும், அதில் பங்கெடுக்கும் அனைவரும் பாட்டாளிகள் அல்ல. பெருமளவு மத்தியதர வர்க்கத்தினர் இருப்பார்கள். 

பாட்டாளி வர்க்கத்தில் இருந்து வந்திருந்தாலும், மேட்டுக்குடி சிந்தனை கொண்டவர்கள் இருப்பார்கள். ஏதோவொரு சந்தர்ப்பம் சூழ்நிலையில், கம்யூனிஸ்டுகள் பலம் பெற்று வருகின்றனர் என்று தெரிந்து கொண்டு வந்து சேர்ந்திருப்பார்கள். தமது சுயநலத்திற்காக, பதவிகளுக்காக, புகழுக்காக சேர்ந்து கொள்பவர்களும் உண்டு. இது உலகம் முழுவதும் உள்ள கட்சிகள், விடுதலை அமைப்புகளில் நடப்பது தான். கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல.

தொழிற்துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், புரட்சிக்குப் பின்னரும் வழமை போல இயங்கிக் கொண்டிருக்கும். முன்பிருந்த அதே நிர்வாகிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால், எல்லோரும் எதிர்ப்புரட்சியாளராக மாறுவதில்லை. பெரும்பாலானோர் ஊரோடு ஒத்துப் போகிறவர்கள் தான். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தவுடன், "இலட்சக் கணக்கானவர்களை வகைதொகையின்றி கொன்று குவிப்பார்கள்" என்பது மேற்குலகினால் பரப்பப் படும் பிரச்சாரம் மட்டுமே. உண்மை நிலைமை அதற்கு நேரெதிரானது. எல்லா உள்நாட்டு யுத்தங்களிலும் நடப்பவை, சோஷலிசப் புரட்சிக் காலங்களிலும் நடக்கும். எதிர்த்துப் போரிடுவோரை தவிர, காட்டிக் கொடுப்பவர்கள், துரோகிகள் போன்றவர்களும் இருப்பார்கள். இப்படியானவர்களே யுத்தத்தில் கொல்லப் படுவார்கள். சிலநேரம், தனிநபர் பகைமை காரணமாக தவறுகளும் நடக்கலாம்.

இருப்பினும், கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் சில விடயங்களில் வித்தியாசப் படும். நிலப்பிரபுக்கள்,பண்ணையார்கள், நிலவுடமையாளர்கள், பெரும் முதலாளிகள், கந்துவட்டிக் காரர்கள் போன்றோர் சுட்டுக் கொல்லப் படுவார்கள். இது போன்ற நடவடிக்கைகள் அங்கு நடப்பது வர்க்கப் போர் என்பதை அறிவித்துக் கொண்டிருக்கும். ஆனால், வர்க்கப் போராட்டம் என்பது வேறு. 

கம்யூனிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், எல்லாம் ஒரே நாளில் மாறி விடுவதில்லை. பெரும்பாலான மாற்றங்கள், அரசுக் கட்டமைப்பினால் மேலே இருந்து கொண்டு வரப்படும். அப்போதும் வர்க்கப் போராட்டம் நடப்பதில்லை. அதை ஓர் அரசு செய்ய முடியாது. மக்களின் ஆதரவு அவசியம். அதற்கு நாட்டு மக்கள் அனைவரையும் பங்கெடுக்க வைக்க வேண்டும். அதை நடைமுறைப் படுத்துவது எப்படி?

உலக வரலாற்றில் முதல் தடவையாக, சோவியத் யூனியனில் முப்பதுகளிலும், சீனாவில் அறுபதுகளிலும் வர்க்கப் போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் காலத்தில் நடந்த வர்க்கப் போராட்டம் தனித்தன்மை கொண்டது. மேற்குலகில் அதனை "ஸ்டாலினின் பயங்கர ஆட்சி" என்று முத்திரை குத்தினார்கள். இன்றளவும் அவ்வாறே சொல்லப் படுகின்றது. 

அப்போது நடந்த வர்க்கப் போராட்டத்தில் சோவியத் மக்கள் பங்கெடுத்திருந்தனர். ஆனால், அந்தப் பங்களிப்பு மிகவும் அமைதியாக நடந்தது. மக்கள் இரகசியமாக உளவுத்துறைக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர். அதன் மூலம் பலர் களையெடுக்கப் பட்டனர். இறுதியில் உளவுத்துறை தலைமை அதிகாரி கூட தப்பவில்லை. நாட்டிலேயே அதிகளவு அதிகாரங்களை வைத்திருக்கும் கட்சி மத்திய குழு வரையில் களையெடுப்பு நடந்தது.

"பணக்கார வாழ்க்கை, பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, மேட்டுக்குடி குடும்பப் பின்னணி, முதலாளித்துவ நலன்களை நியாயப் படுத்துவது, வலதுசாரித் தன்மையுடன் அரசியல் பேசுவது..." இவ்வாறு பல காரணங்கள், ஒருவரை குற்றவாளியாக இனங்காட்ட போதுமானதாக இருந்தன. இதனால் யாருமே "வித்தியாசமாக" அல்லது ஆடம்பரமாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. வீட்டில் வெளிநாட்டு வாசனைத் திரவியம் வைத்திருந்தாலே, "பூர்ஷுவா கலாச்சாரத்தை பின்பற்றுவதாக" காட்டிக் கொடுக்கப் படலாம் என்று அஞ்சிய காலமது.

சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்திருந்த காலங்களில், அயல்நாடான சீனாவுடன் நல்லுறவு பேணப் பட்டது. ஸ்டாலினின் கொள்கைகளும், மாவோவின் கொள்கைகளும் பெருமளவு ஒத்துப் போனதால், எந்தப் பிரச்சினையும் வரவில்லை. ஆனால், சோவியத் யூனியனில் குருஷேவ் பதவிக்கு வந்ததும் பிரச்சினை எழுந்தது. 

குருஷேவ் ஸ்டாலினை கண்டித்து பேசியதை மாவோ ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒரு காலத்தில், சகோதரர்களாக இருந்தவர்கள் பகையாளிகள் ஆனார்கள். சோவியத் - சீன எல்லையில் இராணுவக் குவிப்புகளும், சில இடங்களில் ஆயுத மோதல்களும் இடம்பெற்றன.

அப்போது சீனா ஐக்கிய நாடுகள் சபையிலும் அங்கம் வகிக்கவில்லை. சீனாவின் உறுப்புரிமை தாய்வானுக்கு கொடுக்கப் பட்டிருந்தது. மேற்குலக நாடுகள் தாய்வானை ஆதரித்து வந்தன. கம்யூனிச சீனாவை அங்கீகரிக்க மறுத்தன. இதனால் அன்றைய சீனா, உலகில் எல்லா நாடுகளாலும் ஒதுக்கப் பட்ட நிலையில் இருந்தது. மேற்குறிப்பிட்ட பூகோள அரசியல் பின்னணியில் தான், கலாச்சாரப் புரட்சி நடந்தது. அப்போது மிகவும் முதுமையுற்றிருந்த மாவோ, தனது 72 வது வயதில், 16 மே 1966 ம் ஆண்டு, "பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியை" அறிவித்தார்.

ஸ்டாலின் மாதிரி, மாவோவும் தனது கட்சிக்குள்ளேயே கலாச்சாரப் புரட்சியை (வர்க்கப் போராட்டத்தை) நடத்தினார். பிரதமர் லியூ சொக்கி (Liu Shaoqi) மாவோவின் நன்மதிப்பை இழந்தார். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் கலாச்சாரப் புரட்சி தொடங்கிய பொழுது, கலகக் கார மாணவர்களை அடக்குவதற்காக, லியூ சொக்கி பாதுகாப்புப் படையினரை அனுப்பினார். மாவோ தலையிட்டு தடுத்து விட்டார்.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தை பின்பற்றி, சீனா முழுவதும் ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், தொழிலகத்திலும் செம் காவலர்கள் உருவானார்கள். அவர்கள் கட்சி சார்பற்ற துடிப்பான இளைஞர்களாக இருந்த படியால், கட்சியின் தலைமையை கூட துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர். 

1967 ம் ஆண்டு, செம்காவலர்கள் பிரதமர் லியூ சொக்கியையே கைது செய்யுமளவிற்கு பலமாக இருந்தனர். பிரதமர் லியூ சொக்கி இலட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில் நிறுத்தப் பட்டு, மணித்தியாலக் கணக்காக தலை குனிந்து நின்றார். அவர் மீது நூற்றுக் கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. பதவி அகற்றப் பட்டு, சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப் பட்ட லியூ சொக்கி, 1969 ம் ஆண்டு காலமானார்.

கலாச்சாரப் புரட்சி தொடங்கி இரண்டு வருடங்களுக்குள், சீனா முழுவதும் இருந்த நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ எச்ச சொச்சங்கள் அழிக்கப் பட்டு விட்டன. ஒவ்வொரு ஊரிலும் இருந்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மக்களால் அகற்றப் பட்டனர். மேயர் முதல் ஆளுநர் வரை, எத்தகைய உயர்பதவி வகித்தவரும் மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு தப்பவில்லை. சுருக்கமாக, கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்கனவே இருந்த பழைய தலைவர்கள், ஏறக்குறைய எல்லோரும் பதவி இறக்கப் பட்டு, அந்த இடங்களுக்கு புதியவர்கள் வந்தனர்.

31 ஜனவரி 1967 ம் ஆண்டு, ஹைலோன்ஜியாங் மாகாணத்தின் ஆட்சி அதிகாரம், கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து பறிபோனது. கட்சி சாராத மாணவர்கள், மக்களை அங்கத்தவர்களாக கொண்ட புரட்சிகர கமிட்டி ஆட்சிப் பொறுப்பேற்றது. பதவி இறக்கப் பட்ட கட்சித் தலைவர்கள், தொலைதூர நாட்டுப்புறங்களில் இருந்த கடின வேலை வாங்கும் முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர். சீனாவில் இருந்த இருபத்தொன்பது மாகாணங்களில் ஒன்றின் ஆட்சி நிர்வாகம் மக்களால் பொறுப்பெடுக்கப் பட்ட நிகழ்வு, வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்திருக்கவில்லை.

கட்சி சாராத மக்களைக் கொண்ட புரட்சிகர கமிட்டி ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும், மக்கள் விடுதலைப் படை சட்டம், ஒழுங்கு சீர்குலைய விடாமல் பார்த்துக் கொண்டது. ஏற்கனவே பதவியிறக்கப் பட்ட சீனப் பிரதமரின் இடத்தை லின் பியாவோ (Lin Biao) கைப்பற்றினார். சீன இராணுவம் அவரது பொறுப்பின் கீழ் இருந்த படியால், படையினரை புரட்சிகர செம்காவலர்களுக்கு உதவியாக அனுப்பி இருந்தார். படையினரின் பிரசன்னம் இருந்த போதிலும், அரசியல் முடிவுகள் அனைத்தையும் செம் காவலர்கள் எடுத்தனர்.

கலாச்சாரப் புரட்சியின் எதிர்மறையான விளைவுகள் எவை?

இரண்டு வருடங்களுக்குள் சீனாவின் அரசியல் தலைமைத்துவத்தை மாற்றியமைத்த செம் காவலர்கள் சாதாரண அடித்தட்டு மக்களின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தினார்கள். இருப்பினும், சில இடங்களில் தனி நபர் விரோதங்கள் காரணமாக சிலர் வர்க்க எதிரிகளாக்கப் பட்டதை மறுப்பதற்கில்லை. இதனை கலாச்சாரப் புரட்சியின் எதிர்மறையான விளைவாகப் பார்ப்பதை விட, மக்களிடம் நேரடியாக அரசியல் அதிகாரத்தை ஒப்படைப்பதால் ஏற்படும் எதிர்மறையான விளைவாகவே கருத வேண்டும்.

செம் காவலர்களின் புரட்சிகர கமிட்டிகள் அமைக்கப் பட்டதும், மாவோ ஒரு கட்டத்தில் கலாச்சாரப் புரட்சியை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவாக, செம் காவலர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தமக்குள் மோதிக் கொண்டனர். இறுதியில் இராணுவத்தை அனுப்பி அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது சில செம் காவலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் கூட, புதிய ஆட்சியாளர்களினால் அகற்றப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டனர்.

மாவோவிற்குப் பின்னர் சீனாவின் அதிபரான டெங் சியாபெங், ஒரு காலத்தில் திரிபுவாதியாக இனங் காணப் பட்டு, பதவியிறக்கப் பட்டிருந்தார். பின்னர் அவர் கலாச்சாரப் புரட்சியை ஏற்றுக் கொள்வதாக (பொய்) வாக்குறுதி அளித்ததன் பேரில் அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டார். கட்சிக்குள் இருந்த வலதுசாரிகள் டெங் சியபெங் பக்கம் இருந்தனர். அதே நேரம், கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் மாவோவின் மனைவியான ஜாங் கிங் பக்கம் இருந்தனர். மாவோவின் மனைவி கலாச்சாரப் புரட்சியை தொடரப் போவதாக சூளுரைத்திருந்தார்.

மாவோவின் மூன்றாவது மனைவியான ஜாங் கிங், ஒரு நடிகையாக தனது வாழ்வை தொடங்கியவர். அதனால், அவரது நேரடி பணிப்பின் பேரில் புரட்சிகர நாட்டிய நாடகங்கள் அரங்கேறின. "நான் மாவோவின் நாய். கடிக்க சொன்னால் கடிப்பேன்..." என்று ஜாங் கிங் கூறியிருந்தார். மாவோ தனது மரணப் படுக்கையில் இருக்கையில் ஜாங் கிங் "தீவிர இடதுசாரி" என்று கண்டித்ததாக சொல்லப் படுகின்றது.

1976 ம் ஆண்டு மாவோவின் மரணத்தின் பின்னர், ஜாங் கிங் நால்வர் குழு என்ற பெயரில் கலாச்சாரப் புரட்சியை தொடரப் போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும், பிரதமர் ஹுவா குவாபெங், டெங் சியாபெங்குடன் சேர்ந்து சதிப்புரட்சி செய்தார். ஜாங் கிங் தலைமையிலான "தீவிர இடதுசாரிகளான" நால்வர் குழுவை கைது செய்தார். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. மாவோவின் மாணவி மட்டும் மரண தண்டனையில் இருந்து தப்பினார். 1991 ம் ஆண்டு, நீண்ட சிறைவாசம் அனுபவித்து வந்த ஜாங் கிங் புற்றுநோயால் காலமானார். அதே நேரம், டெங் சியாபெங் தலைமையில், சீனா முதலாளித்துவ பாதையில் சென்று கொண்டிருந்தது.

க‌லாச்சார‌ப் புர‌ட்சி ந‌ட‌ந்து ஐம்ப‌தாண்டுக‌ள் க‌ட‌ந்து விட்டாலும், சீனாவில் இன்ன‌மும் மாவோயிஸ்டுக‌ள் ப‌ல‌மான‌ ச‌க்தியாக‌ திர‌ண்டுள்ள‌ன‌ர். அர‌ச‌ க‌ண்காணிப்புக‌ள், அட‌க்குமுறைக‌ளுக்கு ம‌த்தியில் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் இய‌ங்குகின்ற‌ன‌ர். மீண்டும் ஒரு க‌லாச்சார‌ப் புர‌ட்சி வ‌ருமானால், அத‌ற்கு த‌யாராக‌ இருப்ப‌தாக‌ கூறுகின்ற‌ன‌ர்.  ( Maoists still a force 50 years after the Cultural Revolution)

இது ஒரு வ‌ர்க்க‌ப் போராட்ட‌ம். அநியாய‌மான‌ வழிக‌ளில் செல்வ‌ம் சேர்த்துள்ள‌ ப‌ண‌க்கார‌ர்க‌ளை த‌ட்டிக் கேட்ப‌த‌ற்கு இன்னொரு க‌லாச்சார‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம் என்று ந‌ம்புகிறார்க‌ள். இந்தத் தகவல், உலகில் பல நாடுகளிலும் செல்வத்தில் மிதக்கும் பணக்கார்களுக்கு உவப்பான செய்தியாக இருக்கப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் கலாச்சாரப் புரட்சி பற்றிய எதிர்மறையான, பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பார்கள். நமது தமிழ் மக்களும் அப்படியான விஷமிகள் குறித்து விழிப்பாக இருக்க  வேண்டும். 
இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: