Thursday, September 25, 2014

"ஐ.எஸ். அழிப்புப் போர்" : அமெரிக்காவின் நிரந்தரப் போருக்கான ஆரம்பம்



சிரியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியில் அமர்ந்துள்ள 6 வருடங்களுக்குள், 7 நாடுகள் மீது குண்டு போட்டுள்ளார். அவை முறையே, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, லிபியா, யேமன், ஈராக், சிரியா ஆகிய முஸ்லிம் நாடுகள். இந்த "உலக சாதனையை" நிலைநாட்டுவதற்குத் தான், ஒபாமாவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தார்கள் போலும்.

அமெரிக்காவின் "IS பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" உண்மையான நோக்கம் என்ன என்பது, இன்னும் யாருக்கும் புரியவில்லை. ஒபாமாவிடமே அது குறித்த தெளிவான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. அனேகமாக, இது மத்திய கிழக்கில் ஒரு நிரந்தரப் போருக்கான ஆரம்பமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் நோக்கம் இசிஸ் இயக்கத்தை அழிப்பதா, அல்லது வளர்த்து விடுவதா? சிரிய போர்க்களத்தில் இருந்து எழும் பல கேள்விகளுக்கான விடைகள், இன்னமும் புரியாத புதிராகவே உள்ளன. அதற்குக் காரணம், இசிஸ் இயக்கத்திற்கு நாலா பக்கங்களிலும் எதிரிகள் உண்டு. அந்த எதிரிகள் கூட, அமெரிக்காவின் தாக்குதல்களினால் பாதிக்கப் படுகின்றனர். எதிரிக்கு எதிரி, எல்லா சந்தர்ப்பத்திலும் நண்பனாக இருப்பதில்லை.

சிரியா போர்க் களத்தில் இருந்து கிடைத்த தகவல்களை  இங்கே தொகுத்துத் தருகிறேன். "அமெரிக்காவின்  நண்பன் யார்? பகைவன் யார்?" என்று ஆராய்ந்தால், இறுதியில் நமக்கு குழப்பமே மிஞ்சும். உண்மையில், அமெரிக்காவின் நலன்களே எந்தக் காலத்திலும் நிரந்தரமானவை.


 1. சிரிய குர்து மக்களின் பேரவலம் 


சிரியாவில் குர்து மக்கள் வாழும் பிரதேசம், கடந்த மூன்று வருடங்களாக, PKK அல்லது YPG போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. YPG சிரியா குர்து விடுதலை இயக்கம் என்று தான் காட்டப் படுகின்றது. ஆனால், உண்மையில் YPG என்பது, துருக்கி குர்துக்களின் இயக்கமான PKK யின் ஒரு பிரிவு என்பது பொதுவான அபிப்பிராயம். அதனால், ஆரம்பத்தில் இருந்தே, துருக்கி சிரியாவுடனான எல்லைகளை மூடி விட்டு, கடுமையாக கண்காணித்து வந்தது.

செப்டம்பர் 20 அன்று, மொசுல் நகரில் கடந்த மூன்று மாதங்களாக, இசிஸ் இயக்கத்தினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப் பட்டிருந்த, துருக்கி இராஜதந்திரிகளும், குடும்பத்தினரும் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களின் விடுதலைக்கு பிரதியுபகாரமாக, துருக்கி அரசு சில விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளது. குர்து மக்கள், துருக்கி தமது முதுகில் குத்தி விட்டதாக குற்றஞ் சாட்டுகின்றனர்.

அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். ஏனெனில், பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்ட அடுத்த நாளே, PKK/YPG கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்கள் பறிபோயின. பல குர்து கிராமங்களை கைப்பற்றிய இசிஸ் படையினர், இலட்சக் கணக்கான மக்கள் வாழும் கொபானி நகரை சுற்றி வளைத்துள்ளனர்.

இசிஸ் பயங்கரவாதத்திற்கு பயந்து இடம்பெயர்ந்த சிரிய குர்து அகதிகள், துருக்கிக்கு செல்ல முயன்றனர். ஆனால், எல்லையை பாதுகாக்கும் துருக்கிப் படையினர், அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர். இதனால், சிரியா - துருக்கி எல்லையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. போக்கிடமற்ற அகதிகள், துருக்கி படையினர் மீது கல் வீசினார்கள். அகதிகளில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களும் இருந்த போதிலும், குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை துருக்கிக்குள் அனுமதிக்கவில்லை.

துருக்கி ஜனாதிபதி எர்டோகன், "இசிஸ் பயங்கரவாதிகள் அல்ல, போராளிகள், ஆத்திரமுற்ற இளைஞர்கள்..." என்றெல்லாம் பேசியுள்ளமை, துருக்கியில் பலரால் கண்டிக்கப் பட்டது. அமெரிக்காவின் "இசிஸ் எதிர்ப்பு கூட்டணி நாடுகளில்" துருக்கி பங்குபற்றவில்லை. அது மட்டுமல்ல, துருக்கிக்குள் பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக, கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்த, 150 இசிஸ் உறுப்பினர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

கொபானி நகரை முற்றுகை இட்ட சம்பவம், இசிஸ் - துருக்கி அரசின் கூட்டுச் சதித் திட்டம் என்று PKK கூறுகின்றது. ஒரு பக்கம் இசிஸ், மறுபக்கம் துருக்கி இராணுவம், அந்த நகருக்கு வெளியில் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்து வருகின்றன.

அண்மையில், துருக்கி அரசு, இசிஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள், யுத்த தாங்கிகள் அனுப்பியுள்ளதாக, PKK குற்றஞ் சாட்டுகின்றது. இசிஸ் இற்கு துருக்கி ஆயுத விநியோகம் செய்தமைக்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, PKK கமாண்டர் கராலியன் தெரிவித்துள்ளார். இசிஸ் இற்கும், துருக்கிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்புகளும் உள்ளன. இசிஸ், சிரியா எண்ணையை திருடி, துருக்கிக்கு விற்று வருவது தெரிந்ததே.


2. அல் நுஸ்ரா மீதான தாக்குதல் ஒரு தவறல்ல



சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களில், இசிஸ் பெரிய இயக்கமாக உள்ளது. அதற்கு அடுத்த நிலையில், அல் நுஸ்ரா உள்ளது. சிரியாவில் அரச கட்டுப்பாட்டில் இல்லாத பெருமளவு பகுதிகள், இசிஸ் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அல் நுஸ்ரா இன்னமும் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இசிஸ் இயக்கத்திற்கும், அல் நுஸ்ராவுக்கும் இடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. இசிஸ் ஒரு "பன்னாட்டு இயக்கம்." அதாவது, பல நாடுகளை சேர்ந்த ஜிகாத் போராளிகளே அதில் பெரும்பான்மையாக உள்ளனர். இசிஸ் ஈராக்கில் ஸ்தாபிக்கப் பட்டது. சிரியா உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கையில் இடையில் நுளைந்தது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பிருந்து, சிரியாவிலும், ஈராக்கிலும் வாழும் சன்னி முஸ்லிம் சமூகத்தின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று, இசிஸ் அறிவித்துக் கொண்டது. அது சிரியாவில் இருந்த பிற போராளிக் குழுக்களை அழிக்கத் தொடங்கியது.

சிறிய இயக்கங்கள் இசிஸ் உடன் மோத முடியாமல் மறைந்து போயின. மேற்குலகில் "மிதவாத" இயக்கம் என்று போற்றப்படும் சுதந்திர சிரிய இராணுவத்தின் (FSA) தளபதிகளும், போராளிகளும் தாமாகவே விரும்பி, இசிஸ் உடன் ஐக்கியமாகி விட்டனர். அல் நுஸ்ரா கொஞ்சம் பலமான இயக்கம் என்பதால், இசிஸ் அறிவித்த "ஏக பிரதிநிதி கோட்பாட்டை" ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. அதனால், இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் அடிக்கடி சகோதர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

அல் நுஸ்ரா, சிரியாவில் ஸ்தாபிக்கப் பட்டது. சிரியாவின் சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களின், தீவிர மதவாத இயக்கம். மேற்குலகில் அதிகம் ஆதரிக்கப் பட்ட கிளர்ச்சி இயக்கமான FSA யுடன் கூட்டணி அமைத்துள்ளது. அல் நுஸ்ராவிலும் வெளிநாட்டு ஜிகாதிகள் சேர்ந்திருக்கிறார்கள். ஆயினும், அவர்களில் பலர் உண்மையிலேயே "இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வில்", சிரிய அரசுக்கு எதிராக போரிடுவதற்காக சென்றவர்கள்.

குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் அல் நுஸ்ராவுக்கு ஆதரவாக நடந்து கொண்டன. அதனால், தாங்கள் ஒரு நீதியான போரில் ஈடுபட்டிருப்பதாக அந்த இளைஞர்கள் நம்பினார்கள். தற்போது, மேற்குலக நாடுகள் தமக்கு துரோகம் இழைத்து விட்டதாக குமுறுகிறார்கள். மேற்குலக நாட்டவர்கள் "பொய்யர்கள், பித்தலாட்டக்காரர்கள்" என்று குறைப் படுகின்றனர்.

அதற்குக் காரணம், அல் நுஸ்ராவின் முகாம்கள், கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் அமெரிக்கா வான் வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது. குறைந்தது பத்து அல் நுஸ்ரா போராளிகள் கொல்லப் பட்டனர். அதில் இரண்டு பேர் நெதர்லாந்து பிரஜைகள். இந்தத் தகவலை, தற்போது சிரியாவில் இருக்கும் நெதர்லாந்து ஜிகாதி ஒருவர் அறிவித்துள்ளார். அவர் தன்னை அல் நுஸ்ரா உறுப்பினர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார். நெதர்லாந்தின் பிரபல தினசரியான de Volkskrant உடன் ஸ்கைப் மூலம் பேசி உள்ளார். மேலும், அமெரிக்க குண்டு வீச்சினால் சேதமடைந்த கட்டிடம் ஒன்றின் முன்னால் நின்று கொண்டு, டச்சு மொழியில் உரையாற்றும் வீடியோ இணையம் மூலம் பரப்பப் பட்டது.

அது நெதர்லாந்து தொலைக் காட்சியிலும் காண்பிக்கப் பட்டது. "இதோ பாருங்கள்! அமெரிக்கர்களும், அவர்களின் கூட்டாளிகளும் என்ன செய்திருக்கிறார்கள் என்று...." அந்த ஜிகாத் போராளியின் கூற்றின் படி, "அமெரிக்க குண்டுவீச்சுகள் பேரழிவை விளைவிக்கின்றன. அங்கு வாழும் மக்கள், மாவீரர்களாக தியாக மரணத்தை சந்திக்கக் காத்திருக்கிறார்கள்..." மேலும், அந்த வீடியோவில் ஜிகாதிப் போராளி கேட்கும் கேள்விகள் ஒரு வகையில் நியாயமானவை. 
  "அமெரிக்கா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்புப் போரின் நோக்கம் இசிஸ் இயக்கத்தை அழிப்பது என்றால், எதற்காக அல் நுஸ்ராவின் முகாம்கள் மீது குண்டு வீச வேண்டும்? அப்படியானால், உண்மையில் இது இசிஸ் எதிர்ப்புப் போர் அல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான போர்!"

அல் நுஸ்ரா முகாம் மீதான அமெரிக்க குண்டுவீச்சு, தற்செயலாக நடந்த விபத்து அல்ல. எது இசிஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசம், எது அல் நுஸ்ரா கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்ற துல்லியமான தகவல்கள் அமெரிக்காவிடம் உள்ளன. அல் நுஸ்ரா வெளிப்படையாகவே தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தனது இயக்கக் கொடிகளை பறக்க விட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு தெரிந்த ஒரு விடயம், அமெரிக்காவுக்கு தெரியாது என்று வாதிட முடியாது. அதனால், இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப் பட்ட தாக்குதல் தான்.

அமெரிக்காவின் இன்றைய பயங்கரவாத எதிர்ப்புப் போரின் முடிவுகள், நாங்கள் எதிர்பாராததாக அமையலாம். நேற்று வரையில், விரோதிகளாக மோதிக் கொண்டிருந்த இசிஸ் உம், அல் நுஸ்ராவும் ஒன்று சேரலாம். சிலநேரம், அது தான் அமெரிக்காவின் நோக்கமா என்பதும் தெரியவில்லை. மேலும், இத்தனை காலமும் மேற்குலகால் வெறுக்கப் பட்டு வந்த, சிரியாவின் ஆசாத் அரசின் எதிரிகள் தான், இன்று தாக்கப் படுகின்றனர். இது யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம். அமெரிக்காவின் நோக்கம், ஆசாத் அரசு நிலைத்திருக்க வேண்டும் என்பதா?

சிரியா பிரச்சினையை, இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலகுவாகப் புரியும். ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரையில், பெரும்பாலான தமிழ் தேசியவாதிகள், அமெரிக்கா சிறிலங்கா மீது குண்டு போடும் என்று நம்பிக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அமெரிக்க விமானங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குண்டு போட்டிருந்தால், அது எந்தளவு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கும்? அதை விட பல மடங்கு அதிர்ச்சி தான், தற்போது சிரியாவில் உண்டாகி உள்ளது.

ஏனெனில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட, ஆசாத் பதவி விலக வேண்டும் என்று, ஒபாமாவின் நிர்வாகம் வற்புறுத்தி வந்தது. சிரியாவிடம் இருந்த இரசாயன ஆயுதங்களை காரணமாகக் காட்டி, ஆசாத் அரசை கவிழ்க்கப் போவதாக சூளுரைத்து வந்தது. இது எல்லாவற்றையும் விட, இன்றைக்கும் சிரியா தான் இஸ்ரேலுடன் சமாதானமாகப் போகாத ஒரேயொரு அயல் நாடு. மேற்குலக எதிரி நாடாக கருதப் படும், சிரியாவில் ஆசாத் அரசு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது தான், அமெரிக்காவின் நோக்கமா? இருக்காது. கணக்கு எங்கேயோ பிழைக்கிறது.

3 comments:

Anonymous said...

இதற்கு முன் இட்ட பதிவுக்கு பின்னூட்டமிட்டு பதிவரைத் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டது: மேற்காசியாவில் சென்ற நூற்றாண்டு நிகழ்வுகள், துருக்கியில் ஆட்டோமான் மன்னர் துரோகம் என்றெல்லாம் சொல்லி திசை திருப்பாமல் ISIS செய்யும் கொடூரமான காரியங்களுக்கு கண்டனம் எழுப்ப வேண்டும். அவர்களை நேர்படையாக அல்லது சுற்றி வளைத்து ஆதரித்து, மேற்கு நாடுகளைக் குற்றம் சொல்லியே பதிவு இடவேண்டாம் என்பது. அதே புராணம் தொடர்கிறது.

2. சிரியாவிலிருந்து வெளியேறும் (ISIS-ஆல் துரத்தப்படும்)

//அகதிகளில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களும் இருந்த போதிலும், குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை துருக்கிக்குள் அனுமதிக்கவில்லை.//

இந்தியாவில் 1971 பங்களாதேஷ் சண்டையில் எவ்வளவு பேருக்கு இந்தியா இடம் கொடுத்தது? இலங்கையிலிருந்து வெளியேறிய அகதிகள் எவ்வளவு பேருக்கு அமெரிக்கா,கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது? நாம் மேற்கைத் தூற்றிக்கொண்டே இருத்தல் சரியா?
3. ஆளில்லாக் கடையிலே யாருக்காக டீ ஆற்றிக்கொண்டிருகிறோம்?

பாண்டியன் said...

நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் சென்று, தனக்கு முற்றிலும் சம்மந்தமில்லாத மக்களை கொன்று குவிக்கிற ஜிகாதிகளின் செயல் நியாயம்னா, அமெரிக்கா ஐஎஸ் ஸிலிருந்து எல்லா பயங்கரவாத இயக்கங்களின் முகாம்களை அழிப்பது எப்படி அநியாயம் ஆகும். முட்டாள்தனத்தை ஒதுக்கி வைச்சிட்டு சிந்திங்க.

siva said...

ஜிஹாத் என்று கூறி ஆதி காலத்தில் இருந்தே இஸ்லாம் ச்மூகத்தில் பல போர்கள் நடைபெற்றுள்ளது என்பது சரித்திரம் கூறும் உண்மை. இஸ்லாம் மதத்தில் உள்ள ஒரு பிரிவினர் எப்போதுமே ஒருவிதமான ரத்த வெறி பிடித்து அலைகின்றனர். அதற்கு எதிர்பாக பேசுகின்றவர்களை மத எதிர்பாளர்கள் என கூறி தண்டிக்கின்றனர். இவர்களுக்கு உலகின் மற்ற பாகங்களில் நடக்கும் அறிவியல் வளர்ச்சி பற்றி எவ்விதத்திலும் அக்கறை இல்லை. மனித உரிமை என்பதில் துளிகூட அக்கறை ஏன் நம்பிக்கை கூட இல்லை. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் நன்றாக பெரிய தாடி வளர்த்து கொண்டு ஐந்து வேளை தொழுகை செய்ய வேண்டும் பின்னர் ஷியா இனத்தவனை அந்த இனத்தவன் என்பதற்காகவே கொல்ல வேண்டும். இப்படியான் மன நிலையில் தான் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன. ஆதி காலத்தில் ஓட்டோமனில் ஆரம்பித்து இன்றைய ஐஎஸ்ஐஸ் வரை இதை தான் செய்து கொண்டிருக்கின்றனர். ஏன் நேற்று மதம் மாறிய நய்ஜீரிய காரன் கூட மதத்தின் பேரால் தானே கொலைகளையும் கொள்ளைகளையும் செய்து வருகிறான். கேட்டால் இஸ்லம் மதத்தால் மட்டுமே உலகம் மேன்மையடைய முடியும் என்கின்றனர். இதில் ஆமெரிக்காகாரன் எங்கிருந்து வந்தான். சொந்த அறிவில்லாமல் எடுப்பார் கைபிள்ளையாக இஸ்லாம் மதத்தினர் இருந்தால் அதற்குண்டான பலனை அனுபவித்துதான் தீர வேண்டும்.