Saturday, August 18, 2012

ஐ.நா. அங்கீகரித்த, "நாடு கடந்த க்மெர் ரூஜ் அரசாங்கம்"

பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" -
 பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
 (பகுதி - 9)

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஐ.நா. மன்றம் அங்கீகரித்து, சபையில் ஒரு ஆசனத்தையும் ஒதுக்கிக் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சந்தர்ப்பத்தில், தமிழர்கள் பூமிக்கும் வானத்திற்கும் இடையில் துள்ளிக் குதித்து குதூகலிப்பார்கள். க்மெர் ரூஜ் இயக்கத்தின், "நாடுகடந்த கம்பூச்சிய அரசு", குறைந்தது பத்து வருடங்களாவது ஐ.நா. சபையில் அங்கம் வகித்தது. அதற்கு அமெரிக்காவும் பூரண ஆதரவு வழங்கியது. ஆனால், இன்று க்மெர் ரூஜின் நிலை என்ன? ஐ.நா. நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப் பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது, உலக மகா அயோக்கியர்களின் கூட்டணி என்பதை பலர் உணர்வதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பொம்மையாகவே ஐ.நா. செயற்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில், எப்படிப்பட்ட அரசையும் அங்கீகரிப்பார்கள். தேவை முடிந்து விட்டால், "இனப்படுகொலையாளர்கள்" முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்கள். ஈராக்கில் சதாம் ஹுசைன், யூகோஸ்லேவியாவில் மிலோசொவிச், லைபீரியாவில் சார்ல்ஸ் டெய்லர்... இந்தப் பட்டியல் மிக நீண்டது. இவர்கள் எல்லோரும், ஒரு காலத்தில் சர்வதேச சமூகத்தினால் ஆதரிக்கப் பட்டு, பின்னர் கைவிடப் பட்டவர்கள். அந்தப் பட்டியலில் தான், பொல் பொட்டும் அடங்குகின்றார். 

வியட்நாம் படைகளால் விரட்டப்பட்டு, தாய்லாந்தில் அடைக்கலம் கோரியிருந்த க்மெர் ரூஜ் இயக்கம், மெல்ல மெல்ல தன்னை மறுசீரமைத்துக் கொண்டது. உதிரிகளாக காடுகளுக்குள் அலைந்து கொண்டிருந்த போராளிகளும், ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப் பட்டனர். கம்போடியா முழுவதும் வியட்நாமிய படைகள் ஆக்கிரமித்திருந்தாலும், நகரங்கள் மட்டுமே அவர்களது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. சில கிராமங்களும், காடுகளும் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டில் இருந்தன. அவற்றை வைத்துக் கொண்டு, மீண்டும் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அமைக்க முயற்சிக்கப் பட்டது. 1975 க்கு முன்பிருந்த க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள், பெரும்பாலும் கிழக்குப் பகுதியில், வியட்நாமிய எல்லையோரம் அமைந்திருந்தன.

ஆனால், 1979 க்குப் பின்னரான கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள், வட பகுதியில், தாய்லாந்து எல்லையோரம் அமைந்திருந்தன. க்மெர் ரூஜ் இயக்கம், தாய்லாந்து மண்ணில் தளம் அமைப்பதற்கு, தாய்லாந்து அரசு அனுமதி அளித்தது. அது ஒரு விசித்திரமான புனிதக் கூட்டணி. தாய்லாந்து, ஆசியாக் கண்டத்திலேயே அதி தீவிர கம்யூனிச எதிர்ப்பு நாடாகும். வியட்நாம் கம்யூனிசத்தை பிற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பது அதன் இலட்சியமாக இருந்தது. ஏற்கனவே, க்மெர் ரூஜ் தாய்லாந்து அரசுடன் சமரசம் செய்து கொண்டது. தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டது. இதனால், தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. 

அமெரிக்கா, தாய்லாந்து போன்ற முதலாளித்துவ நாடுகளின் உதவி கிடைப்பதால், "கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியை" கலைத்து விடுவதைக் பொல் பொட் அறிவித்தார். ஏற்கனவே அந்தக் கட்சி, க்மெர் ரூஜ் இயக்கத்தின் அரசியல் பிரிவாக மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது க்மெர் ரூஜ் வெறும் இராணுவவாத இயக்கமாக மாறி விட்டது. போராளிகளின் சீருடையும் மாறியது. வழக்கமான கறுப்பு நிற உழவர் உடைக்கு பதிலாக, பச்சை நிற சீருடை வழங்கப் பட்டது. இராணுவ நடவடிக்கைகளை தீர்மானிக்கும் தலைமைத் தளபதியாக பொல் பொட் இருந்தார். அவருக்குக் கீழே, சொன் சென், டா மொக், கியூ சாம்பன், நுவான் ஷியா போன்ற, பொல் பொட்டுக்கு விசுவாசமான தலைவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர். (ஏற்கனவே களையெடுப்பு என்ற பெயரில் பல மத்திய குழு உறுப்பினர்களும், தளபதிகளும் கொல்லப் பட்டு விட்டனர்.)

இவர்கள் ஆளுக்கொரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நிர்வகித்தார்கள். தாய்லாந்து எல்லைக்கு அருகில், காடுகளால் சூழப்பட்ட, உயரமான மலைப் பகுதியில் பொல் பொட்டின் தலைமையகம் அமைந்திருந்தது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட வீட்டை சுற்றி, சிறப்புப் படையணி ஒன்று காவல் காத்தது. விமானக் குண்டுவீச்சுகளில் இருந்து தப்புவதற்காக, ஆழமான பங்கர் வசிப்பிடம் ஒன்றும் கட்டப்பட்டது. அவர்களுக்கு வேண்டிய பணத்தை, வெளிநாட்டு புரவலர்கள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக அமெரிக்க அரசு, இலட்சக் கணக்கான டாலர்களை அள்ளிக் கொடுத்தது. சீனா வேண்டிய ஆயுதங்களை அனுப்பி வைத்தது. தாய்லாந்து மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தது.  

க்மெர் ரூஜ் அரசாங்கத்தை, ஐ.நா. மன்றம் தொடர்ந்தும் அங்கீகரித்து வந்தமை, அவர்களுக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி எனலாம். சீனாவும், அமெரிக்காவும், ஐ.நா. சபைக்கு அழுத்தம் கொடுத்து, ஆசனம் பறிபோகாமல் பார்த்துக் கொண்டன. குறைந்தது பதினான்கு வருடங்களாவது, க்மெர் ரூஜின் நாடு கடந்த அரசாங்கத்தை, கம்போடியாவின் அரசாக ஐ.நா. அங்கீகரித்து வந்தது. வியட்நாமிய படையெடுப்பு, சர்வதேச சட்டத்திற்கு முரணானது.  புதிய கம்போடிய அரசானது, வியட்நாமிய ஆக்கிரமிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பொம்மை அரசு என்பது எல்லோருக்கும் தெரியும்.

சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் சந்தர்ப்பவாதத்தை, ஏற்கனவே வியட்நாம் உணர்ந்திருந்தது. கம்போடிய படையெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் தான், சீனா-வியட்நாமிய எல்லைப் போர் நடந்தது. இந்திய-சீன எல்லைப்போரில் நடந்ததைப் போன்று, வியட்நாம் அவமானகரமான தோல்வியை சந்தித்திருந்தது. சீனப் படைகள், வியட்நாமுக்குள் நுழைந்து, இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறி, பிரதேசங்களை கைப்பற்றி பின்வாங்கி இருந்தனர். அந்த போரில், சோவியத் யூனியன் வியட்நாமுக்கு உதவ முன்வரவில்லை.  அதே நேரம், சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்திருந்தான. அன்று, சோவியத் யூனியனுக்கு வேறு பிரச்சினைகள் இருந்ததால், கம்போடியா விடயத்தில் தலையிடவில்லை. 

சீனா, அமெரிக்கா, ஐ.நா. மன்றம் போன்ற, உலகின் சக்தி வாய்ந்த நண்பர்கள் வாய்க்கப் பெற்றதால், வெகு விரைவில் கம்போடிய ஆட்சியதிகாரத்தை கைப்பற்றலாம் என்று க்மெர் ரூஜ் கனவு கண்டது. அது வெறும் கனவு மட்டுமே என்பது சில வருடங்களில் தெளிவானது. வியட்நாம் படைகளை வெளியேற்றி, க்மெர் ரூஜ் ஆட்சியைப் பிடித்தால் போர் முடிந்து விடும். அமெரிக்காவினதும், சீனாவினதும் நோக்கம் அதுவல்ல. கம்போடியாவில் போர் தொடர்ந்து நடக்க வேண்டும். வியட்நாமிய படையினர் தினம் தினம் செத்துக் கொண்டிருக்க வேண்டும். இறுதியில் வியட்நாமுக்கு பெருமளவு பொருள் நஷ்டம் ஏற்பட வேண்டும். அது மட்டுமே வல்லரசுகளின் நோக்கமாக இருந்தது.

வியட்நாமில் தான் பட்ட அவமானகரமான தோல்விக்கு பழிவாங்குவது, அமெரிக்காவின் நோக்கம். தீராத எல்லைத் தகராறு காரணமாக எதிரியான வியட்நாமை பழிவாங்குவது சீனாவின் நோக்கம். இதனால், வியட்நாமுக்கு எதிரான கம்போடிய விடுதலைப் போர் பத்தாண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. "உலகிலேயே மிக நீண்ட போராட்டங்களில் ஒன்று" என்று ஊடகங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. க்மெர் ரூஜ் இயக்கம் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி பெருமளவு இராணுவ வெற்றிகளைக் குவித்தது.  "க்மெர் ரூஜ் இயக்கத்தை எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது", என்று சர்வதேச பார்வையாளர்கள் நம்பினார்கள். சர்வதேச ஊடகவியலாளர்கள், க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் சென்று செய்தி சேகரித்து வந்தனர். "இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விடுதலை வீரன்" பொல் பொட்டின் பேட்டிகள், அமெரிக்க பத்திரிகைகளை அலங்கரித்தன. 

பனிப்போரின் முடிவு, பல நாடுகளின் தலைவிதியை தலைகீழாக மாற்றிப் போட்டது. கம்போடியாவிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. வியட்நாமிய படைகள் விலக்கிக் கொள்ளப் பட்டன. க்மெர் ரூஜில் துரோகிப் பட்டம் கட்டப்பட்டு வெளியேறியவர்களை, புதிய கம்போடிய ஆட்சியாளர்களாக சர்வதேசம் ஏற்றுக் கொண்டது. கெரில்லாப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த க்மெர் ரூஜ் இயக்கம், கம்போடிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப் பட்டது. தனது நாட்டில் தளமமைக்க அனுமதித்த தாய்லாந்தும் அதனை வலியுறுத்தியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

வியட்நாமில் சோஷலிசம் மறைந்து, முதலாளித்துவ பொருளாதாரம் நடைமுறைக்கு வந்ததது. அவர்கள் ஆசியான் அமைப்பில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்திருந்தனர். அதனால் தாய்லாந்துக்கும், வியட்நாமுக்கும் இடையில் உறவு மலர்ந்தது. வியட்நாமுக்கு பின்னால் நின்று ஆதரித்துக் கொண்டிருந்த சோவியத் யூனியன் இப்போது இல்லை என்ற படியால், அமெரிக்காவும் க்மெர் ரூஜுக்கு உதவ வேண்டிய தேவையிருக்கவில்லை. அமெரிக்காவும், சோவியத் யூனியனும், கம்போடிய யுத்தத்தை தமது பதிலிப் போராக நடத்திக் கொண்டிருந்தன. ஆகவே, க்மெர் ரூஜ் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

"சர்வதேசம், புலிகளுக்கு எதிராக  வியூகம் வகுத்தது. அவர்களை மரணப் பொறிக்குள் தள்ளி விட்டது. உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்து விட்டன..." என்று இன்றைக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் அரசியல் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.  சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், இதெல்லாம் கம்போடியாவிலும் நடந்துள்ளன. சர்வதேச சமூகத்தின் அதே வியூகம், அதே மரணப் பொறி. ஆனால், முடிவு மட்டும் வித்தியாசமாக அமைந்தது. க்மெர் ரூஜின் அழிவில் பல்லாயிரம் மக்கள் பலியாகவில்லை. ஏனெனில், க்மெர் ரூஜ் அரசின் படைப்பிரிவுகளும், அவற்றின் தளபதிகளும் தாமாகவே அரச படையுடன் கூட்டுச் சேர்ந்து விட்டனர்.

எல்லோருக்கும் துரோகி முத்திரை  குத்திக் கொண்டிருந்த, கமர் ரூஜ் அரசியலும், அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் குறைந்து, துரோகிகள் அதிகமாகி விட்டனர். "க்மெர் ரூஜின் துரோகி அரசியல் எல்லை மீறிப் போய், கடைசியில் பொல் பொட்டையும் துரோகியாக்கி ஓய்ந்தது." நோர்வே மத்தியஸ்தத்துடன் கையெழுத்தான ரணில்-பிரபா ஒப்பந்தம், புலிகளின் வீழ்ச்சிக்கான ஆரம்பமாக கருதப் பட்டது. அதே போன்று, 1991 ம் ஆண்டு, பிரான்சின் மத்தியஸ்தத்துடன் பாரிஸில் கைச் சாத்திடப் பட்ட ஒப்பந்தம், க்மெர் ரூஜின் முடிவுக்கு கட்டியம் கூறியது. பாரிஸ் சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் நடந்த தேர்தலை, க்மெர் ரூஜ் பகிஷ்கரித்தது. இராணுவத் தயாரிப்புகளுடன், மீண்டும் போருக்கு செல்வதே பொல் பொட்டின் நோக்கம். அதனை, பொல் பொட்டின் தவறான முடிவாக பலர் இன்று விமர்சிக்கின்றனர். 

"யுத்தம் முடிவுக்கு வர வேண்டும், தேர்தலில் பங்குபற்றினால் நிரந்தர சமாதானம் ஏற்படும்," என்பது போராளிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.  பெரும்பான்மையான போராளிகள், 25 வருட காலமாக யுத்தம் செய்து களைத்துப் போயிருந்தனர். ஆனால், க்மெர் ரூஜ் தலைமை போராளிகளின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. போர்நிறுத்த ஒப்பந்தத்தை, மீண்டும் போருக்கு தயார்படுத்துவதற்கான கால அவகாசமாக கருதிக் கொண்டது. கம்போடிய அரச படைகளும், அவ்வாறான எண்ணத்தில் தான் இருந்தன. ஆனால், சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து விட்டது. "ஆயுதப் போராட்டம் கடந்த காலம். ஆகவே க்மெர் ரூஜ் ஜனநாயக வழிக்கு திரும்ப வேண்டும்," என்று சர்வதேசம் கூறியது. ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, ஜனநாயக வழிக்கு திரும்பினால், தங்களை கொன்று விடுவார்கள் என்று பொல் பொட் அஞ்சினார்.

மீண்டும் போர் வெடித்தால், யாரும் உதவ மாட்டார்கள் என்பதை க்மெர் ரூஜ் தலைமை கணிப்பிடத் தவறியிருந்தது. ஈழப் போராட்டத்தின் இறுதிக் காலங்களில், புலிகளும் அதே மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகினார்கள். முப்பதாண்டு கால போரினால் களைத்துப் போய், சமாதானப் பேச்சுவார்த்தையை  நிரந்தரமாக்க வேண்டும் என்ற போராளிகளின் விருப்பம் புறக்கணிக்கப் பட்டது. சமாதானத்திற்கு அதுவே கடைசி சந்தர்ப்பம் என்பதையும், மீண்டும் போர் தொடங்கினால், சர்வதேசம் சிறிலங்கா அரசின் பக்கம் சாய்ந்து விடும் என்பதையும், புலிகள் கணிப்பிடத் தவறியிருந்தனர். கம்போடியாவில் க்மெர் ரூஜின் அழிவுக்கு எது காரணமாக இருந்ததோ, அதுவே ஈழத்தில் புலிகளின் அழிவுக்கும் காரணமாக இருந்தது.

நண்பர்களாலும், எதிரிகளாலும் கடும்போக்காளர் என்று கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் தான், புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்கான வியூகம் வகுக்கப் பட்டது. அதே போன்று, கம்போடியாவில் ஹூன் சென் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த பின்னர் தான், க்மெர் ரூஜின் வீழ்ச்சி ஆரம்பமாகியது. அது வரைக்கும், கம்போடியாவில் ஓரளவு ஜனநாயகம் நிலவியது.  க்மெர் ரூஜ்ஜின் அரசியல் பிரிவினர், ப்னோம் பென்னில் அலுவலகம் திறக்குமளவிற்கு,  எதிர்க் கட்சிகளுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், ஹூன் சென் அனுப்பிய காடையர்கள், அலுவலகத்தை உடைத்து உள்ளே இருந்த க்மெர் ரூஜ் அரசியல் தலைவர்களை தாக்கினார்கள். மெல்ல மெல்ல, ஹூன் சென் சர்வாதிகாரியாக மாறிக் கொண்டிருந்தார். க்மெர் ரூஜுடன் சம்பந்தமற்ற, பிற எதிர்க் கட்சிகளுக்கும் நெருக்கடிகள் கொடுக்கப் பட்டன. பலர் கைது செய்யப் பட்டனர், அல்லது கடத்தப் பட்டனர். கம்போடிய மக்கள் தமது சுதந்திரத்தை, ஹூன் சென்னிடம் பறிகொடுத்து கொண்டிருந்தனர். இதற்கிடையே, யுத்தம் மீண்டும் தொடங்கி விட்டதால், க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான போர் நடந்து கொண்டிருந்தது. 

க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள், இயக்கத் தளபதிகளுக்குள் முரண்பாடுகள் தோன்றின. சட்டவிரோதமாக மரம் வெட்டி, தாய்லாந்துக்கு அனுப்பும் வணிகம் தொடர்பான இழுபறி காரணம் எனக் கருதப் படுகின்றது. தாய்லாந்துக்கு மரம் வெட்டி  அனுப்பும் தொழிலினால், க்மெர் ரூஜ் இயக்கத்தினருக்கு நிறைய வருமானம் கிடைத்து வந்தது. சில பொது மக்களும் இதனால் செல்வம் சேர்த்தார்கள்.  இது, க்மெர் ரூஜின் முந்திய கொள்கைக்கு,  முற்றிலும் முரணானது.  சில தளபதிகள், இன்னமும் பழைய சமுதாய அமைப்பை வைத்திருக்க விரும்பினார்கள். தமது ஆதரவாளர்களை திருப்திப் படுத்துவதற்காக, கூட்டுறவுப் பண்ணைகளை, கம்யூன் அமைப்பை செயல்படுத்தினார்கள். 

ஈழத் தமிழரில், ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களாவது, புலிகளின் சமூகக் கட்டமைப்பின் கீழ் வாழ விரும்புபவர்கள் இருக்க மாட்டார்களா? குறிப்பாக விவசாயக் குடிகளை கொண்ட வன்னியில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள், அவ்வாறு புலிகளின் கொள்கைகளை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் தான். (யாழ் குடாநாட்டு நிலவரம் வேறு)  அதே போன்று, கம்போடியாவிலும் விவசாயக் குடிமக்களில் பலர், க்மெர் ரூஜ் கொள்கைகளை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால், சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தனிநபர் சொத்து சேர்ப்பதும், பணக்காரராவதும் அனுமதிக்கப் பட்டன. அது பற்றி, க்மெர் ரூஜ் தலைமையிடத்திற்கு மக்கள் முறையிட்டனர். இதனால் சில பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வந்தது. அந்தப் பொறுப்பாளர்கள், தமது போராளிகளுடன் பிரிந்து சென்று, அரச படைகளுடன் சேர்ந்து விட்டனர். இதனால், க்மெர் ரூஜ் இயக்கம் பெரிதும் பலவீனப் பட்டது. 

ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த சொன் சென், பொல் பொட்டின் பால்ய கால நண்பன். பாரிஸில் உயர்கல்வி கற்க சென்ற காலத்தில் இருந்தே பழக்கம். நீண்ட காலமாக, பொல் பொட் விசுவாசியாக இருந்ததால், களையெடுப்புக்கு தப்பிப் பிழைத்தவர். இப்பொழுது, தனது நெருங்கிய சகாவை தீர்த்துக் கட்டுமாறு, பொல் பொட் உத்தரவிட்டார். காரணம்? சொன் சென் துரோகியாகி விட்டார். ஆதாரம்? அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் கிடைத்த சில ஆவணங்கள். பொல் பொட்டின் உத்தரவின் பேரில், சொன் சென், அவரது மனைவி, பிள்ளைகள், மெய்க்காப்பாளர்கள், ஆதரவாளர்கள், என்று பத்துக்கும் குறையாதோர் படுகொலை செய்யப் பட்டனர்.

1997 ம் ஆண்டு, க்மெர் ரூஜ் இயக்க மூத்த தலைவரான சொன் சென்னின் படுகொலை, இயக்கத்தினுள் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்தது. இரண்டு காரணங்களுக்காக, அந்தக் கொலைகள் விமர்சனத்திற்குள்ளாயின.  சொன் சென் துரோகி என்றால், நாளை இயக்கத்தின் பிற தலைவர்களும் துரோகிககளாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்படலாம். மேலும், சொன் சென் மட்டுமே துரோகி. சாக வேண்டியவர். ஆனால், அவரோடு தொடர்புடைய மற்றவர்கள், பிள்ளைகளும் துரோகிகளா? "சொன் சென்னையும், மனைவியையும் கொல்வதற்கு மாத்திரமே உத்தரவிட்டதாகவும், பிற கொலைகள் தவறான புரிதலால் தேவையற்று நடந்தவை," என்றும் பொல் பொட் பின்னர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.  உண்மையில் இன்னொரு தலைவரான டா மொக்கின் சதி அது என்று, இன்றைக்கு சில பொல் பொட் அபிமானிகள் தெரிவிக்கின்றனர். அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் இருந்தது. 

நாளைக்கு தானும் துரோகியாக கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், டா மொக் முந்திக் கொண்டார். அவருக்கு விசுவாசமான போராளிகளின் முன்னிலையில், "பொல் பொட் ஒரு துரோகி" என்று அறிவித்தார். பொல் பொட்டை கைது செய்து அழைத்து வருமாறு, படை அனுப்பினார். டா மொக்கிற்கு விசுவாசமான படைகள், பொல் பொட்டின் மறைவிடத்தை சுற்றி வளைத்தன. பொல் பொட்டின் பாதுகாப்புக்காக நின்றிருந்த சிறப்புப் படையணி எதிர்ப்புக் காட்டவில்லை. பொல் பொட்டும், மெய்க்காப்பாளர்களும் தாய்லாந்து எல்லைக்கு தப்பியோடினார்கள். தாய்லாந்து இராணுவம் அவர்களை எல்லை கடக்க விடவில்லை. அவர்கள் அனைவரும், டா மொக்கின் படைகளால், சிறைப்பிடிக்கப் பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். பொல் பொட்டை மட்டும் உயிரோடு வைத்துக் கொண்டு, மெய்க்காப்பாளர்களை சுட்டுக் கொன்றார்கள். பொல் பொட்டை கொல்லாமல் விட்டதற்கு சில காரணங்கள் இருக்கலாம். 
1. முதுமையும், பிணியும் வாட்டிய ஒரு வயோதிபர்  அதிக காலம் உயிரோடு இருக்கப் போவதில்லை.
2. சர்வதேச சமூகத்தின் முன்னிலையில், பொல் பொட்டை பிடித்து விட்டதாக காட்டி பெருமையடித்துக் கொள்ளலாம்.  
3. பொல் பொட் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த போராளிகளினதும், மக்களினதும் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லை. 

பொல் பொட்டை அழைத்து வரும் பொழுது, ஒரு பௌத்த மதகுருவை வணங்குவது போல, அங்கிருந்த போராளிகளும், மக்களும் வணங்கினார்கள். சர்வதேச  ஊடகங்களின் கமெராக்களுக்கு முன்னர், கடந்த கால படுகொலைகளுக்காக பொல் பொட் விசாரிக்கப் படுவதாக நீதிமன்ற நாடகம் நடந்தது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களில், படுக்கையில் வைத்து பொல் பொட் தனது இறுதி மூச்சை விட்டார். அவரது உடலை தகனம் செய்த இடத்திற்கு, இன்றைக்கும் மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு வரும் கிராமப்புற மக்கள், ஒரு புனிதரின் சமாதியை தரிசிப்பது போல, தமது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று நம்புகின்றனர். பொல் பொட்டின் மரணத்தின் பின்னர், டா மொக்கின் படைகள் அரசுடன் சேர்ந்து விட்டன. சில வருடங்களில் டா மொக்கும் இயற்கை மரணம் எய்தினார்.  டா மொக் இயக்கத்தை காட்டிக் கொடுத்து துரோகமிழைத்து விட்டதாகவே உள்ளூர் மக்கள் பேசிக் கொள்கின்றனர். 

க்மெர் ரூஜ் இயக்கம் இன்று அழிந்து விட்டது. முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப் பட்டு, சாதாரண வாழ்க்கை வாழ்கின்றனர். நகர்ப்புறங்களில் மட்டுமே க்மெர் ரூஜ் கால கொடுமைகளை மக்கள் வெளிப்படையாகப் பேசுகின்றனர்.  க்மெர் ரூஜ் ஆதரவுத் தளமாக கருதப்பட்ட, குறிப்பிட்ட சில நாட்டுப் புறங்களில், யாரும் கடந்த காலம் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், க்மெர் ரூஜ் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரே கிராமத்தில் அக்கம்பக்கம் வாழ்கின்றனர். கடந்த காலம் பற்றி பேசி, வீணான சச்சரவுக்குள் மாட்டிக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. ஈழத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரியான நிலைமை காணப்படுகின்றது. ஒரே கிராமத்தில் அக்கம்பக்கம் வாழும் மக்கள், புலி ஆதரவாளர்களும், புலி எதிர்ப்பாளர்களுமாக பிரிந்திருக்கின்றனர். கம்போடியாவிலும், ஈழத்திலும் இத்தகைய அரசியல் பிரிவினை, சில நேரம் சமூக அல்லது வர்க்க முரண்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றது.  

க்மெர் ரூஜ் அழிவுக்கு வித்திட்ட ஹூன்சென்னின் சர்வாதிகார ஆட்சி இன்றைக்கும் தொடர்கின்றது. கம்போடிய வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஊழல் மலிந்து காணப்படுகின்றது. தேசத்தின் இயற்கை வளங்கள் யாவும், அதிக விலை கொடுக்கும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விலை போகின்றன. கம்போடியா இன்றைக்கும் உலகில் மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்று. பதினாறும் நிறையாத கம்போடிய சிறுமிகள், வியட்நாமின் இரவு விடுதிகளில் பாலியல் அடிமைகளாக விற்கப் படுகின்றனர். அந்தப் பிரச்சினைகளை கவனிப்பதற்கு, சர்வதேச சமூகத்திற்கு நேரமில்லை. அவர்கள் க்மெர் ரூஜ்ஜினால் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களது மண்டையோடுகளை தேடி எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

(முற்றும்)

தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?
5."இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"
6. மெல்லப் பேசுங்கள், கொல்லப் போகிறார்கள்!
7. ஈழம், கம்போடியா: இரண்டு இயக்கங்கள், ஒரு வரலாறு
8.திருமணங்கள் இயக்கத்தினால் நிச்சயிக்கப் படுகின்றனஉசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle
6. First They Killed My Father, by Loung Ung
7. When Slaves Became Masters: A true-life story of a little boy before, during and after the unfathomable evil of Pol Pot's regime, Rattana Pok

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab
5. Khmer Rouge Prompts Generational Conversation, http://www.theworld.org/2011/06/khmer-rouge-prompts-generational-conversation/
6. What Went Wrong with the Pol Pot Regime, http://www.aworldtowin.org/back_issues/1999-25/PolPot_eng25.htm
7.Cambodia: POL POT THE INTERVIEW AND CONFESSION, http://www.youtube.com/watch?v=BQMyX80jCF8

5 comments:

வலையுகம் said...

மிக அருமையான தொடர் பதிவு
நிறைய விடயங்களை தெரிந்துக் கொண்டேன் ரொம்ப நன்றி

சில விடயங்கள் ஈழநிலமைகளோடு 100%பொருந்தி போவது ஆச்சரியமாக இருந்தது

நன்றி நண்பரே

Php Mute said...

சரியான தருணத்தில் கசப்பான உண்மை வராலாற்றை குறிப் பிட்டிருகிறீர்கள் !
"வரலாறு எனது ஆசிரியன்" எங்கோ கேட்ட நாபகம் !
தொடர் முற்றுவது கவலையாய் உள்ளது!
வேறு ஒரு வரலாற்று தொடரை தொடங்குங்களே

சீனிவாசன் said...

அருமையான கட்டுரைத் தொடர், வாழ்த்துக்களும் பாராட்டுகளும். கடந்த கால வரலாற்றை தற்கால அரசியல் நிகழ்ச்சிகளுடன் பொருத்தி விளக்கிய விதம் சிறப்பான ஒன்று. கட்டுரைத்தொடர் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படியாக இருந்தது. வரலாறு திரும்புகிறது என கட்டுரைத்தொடரின் நடுவில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது முற்றிலும் உண்மை. ஏகாதிபத்திய நாடுகளிடம் லாபியிங் செய்து பெறுவதல்ல விடுதலை என்பதை படித்த நபர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

Kalaiyarasan said...

ஹைதர் அலி, வியூகம், சீனிவாசன் பாராட்டுகளுக்கும், கட்டுரை பற்றிய அபிப்பிராயங்களுக்கும் நன்றிகள் பல.

J.P Josephine Baba said...

வரலாறு போராலும் நம்பிக்கை துரோகத்தாலும் தான் எழுதப்படுகின்றதோ?